டாக்டருடைய யோசனை ராஜத்தைத் தவிர மற்ற எல்லாருக்கும் பிடித்தமாயிருந்தது. கிட்டாவய்யர் ராஜத்தைத் தம்முடன் ஊருக்கு வரும்படி அடிக்கடி வற்புறுத்தினார். அவருடன் சேர்ந்து துரைசாமியும் சொன்னார். இந்த இருவரையும் விட அதிகமாகச் சீதா தன் தாயாரிடம் மன்றாடினாள். "ஊருக்குப் போய் வரலாம் அம்மா! எனக்கு லலிதாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!" என்பதாக நிமிஷத்துக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், ராஜம்மாள் இதற்கெல்லாம் இணங்குவதாக இல்லை. இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு துரைசாமியின் சுபாவத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. கிட்டாவய்யர் வந்த புதிதில் சாந்தமாகவும் எல்லாரிடமும் பிரியமாகவும் இருந்தவர் திடீரென்று வெறி கொண்டவர் போல் காணப்பட்டார். வீட்டில் அதிகமாகத் தங்குவதில்லை, யாருடனும் பேசுவதில்லை. ராஜத்தின் உடம்பைப் பற்றிக் கவனிப்பதில்லை; சீதாவின் பேரிலும் எரிந்து விழுந்தார். பாத்திரங்களையும் சாமான்களையும் தடார் படார் என்று வீசி எறிந்தார்.
ஒரு நாள் இரவு ராஜம் படுத்திருந்த அறைக்குள்ளே பெரிய ரகளை நடந்தது. துரைசாமியும் ராஜமும் முதலில் சாவதானமாகப் பேசத் தொடங்கினார்கள். கிட்டாவய்யரும் சீதாவும் இன்னொரு அறையில் படுத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால், அவர்கள் தூங்கவில்லை. துரைசாமிக்கும் ராஜத்துக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக அவர்களுடைய காதில் விழுந்து கொண்டிருந்தது. சற்று நேரத்துக்குள் சம்பாஷணையின் ஸ்வரம் ஏறியது. வார்த்தைகள் வரவரக் கடுமையாயின. "நான் செத்துப் போனால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும்!" "ஒரு வழியாகச் செத்துத் தொலைந்து போய் விடேன்! உயிரோடிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்?" இப்படிப்பட்ட கொடூரமான பேச்சுக்கள் கேட்டன.
கிட்டாவய்யருக்குத் தன் மனைவியின் சுபாவத்தில் சில நாளாக ஏற்பட்டிருந்த மாறுதல் ஞாபகம் வந்தது. அதைப் பற்றி அவர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவர் இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையைக் காட்டிலும் தம்முடைய இல்வாழ்க்கை எவ்வளவோ மேலானதல்லவா என்று எண்ணித் திருப்தி அடைந்தார். திடீரென்று ராஜத்தின் அறையில் 'பட், பட், பட்' என்று சத்தம் கேட்டது. "ஐயோ! வேண்டாமே ஐயோ! வேண்டாமே!" என்று ராஜம் அலறினாள். ராஜத்தைத் துரைசாமி அடித்துக் கொல்லுகின்றார் என்று நினைத்துக் கொண்டார் கிட்டாவய்யர். நிலைமை மிஞ்சிவிட்டது இனித் தாம் சும்மா படுத்துக் கொண்டிருக்கக் கூடாதென்று ஒரு நொடியில் தீர்மானித்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். அறைக் கதவு வெறுமனே சாத்தியிருந்தபடியால் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தார்.
அறைக்குள் அவர் கண்டது அவர் நினைத்ததற்கு மாறாக இருந்தது. துரைசாமி ராஜத்தை அடிக்கவில்லை; அவர் தம்முடைய தலையிலேதான் 'பட், பட், பட்' என்று போட்டுக் கொண்டிருந்தார். அதை நிறுத்துவதற்குத்தான் ராஜம், "வேண்டாமே! வேண்டாமே!" என்று கத்தினாள். அந்த ஒரு கண நேரத்தில் கிட்டாவய்யருக்கு ஒரு பெரிய உண்மை புலனாயிற்று வீட்டின் ஒரு சிறிய பலகணியின் வழியாக வெளியே பார்த்தால் விஸ்தாரமான மைதானமும் தொலை தூரத்திலுள்ள மரங்களும் மலைத் தொடர்களும் மலைச் சிகரத்துக்கு மேலே வானில் உலாவும் மேகங்களும் தெரிவது போலக் கிட்டாவய்யருக்கு இந்த ஒரு சம்பவத்திலிருந்து அந்தத் தம்பதிகளின் இருபது வருஷத்து இல்வாழ்க்கையின் இயல்பு தெரிய வந்தது. இதுவரையில் மாப்பிள்ளை துரைசாமி தன் சகோதரியைக் கொடுமைப்படுத்துவதாக அவர் நினைத்து ராஜத்தினிடம் இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது கொடுங் கோன்மை செலுத்துவது உண்மையில் ராஜம்தான் என்பதை அறிந்து துரைசாமியிடம் இரக்கம் கொண்டார்.
கிட்டாவய்யரைக் கண்டதும் துரைசாமி தம் தலையில் அடித்துக் கொள்வதைச் சட்டென்று நிறுத்தினார்; ராஜமும் அலறுவதை நிறுத்தினாள். துரைசாமியின் அருகில் சென்று கிட்டாவய்யர் உட்கார்ந்து "மாப்பிள்ளை! இப்படிச் செய்யலாமா!" என்று சாந்தமான குரலில் கூறினார். இதற்குப் பதிலாகத் துரைசாமி சத்தம் போட்டுக் கத்தினார். "ஆமாம், ஸார்! 'இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா?' என்று என்னிடந்தான் சொல்லுவீர்கள். இவளுடைய மூடப் பிடிவாதத்தை மாற்ற உங்களால் முடியவில்லை யல்லவா! 'ஊர் மாறினால்தான் இவள் பிழைப்பாள்' என்று, டாக்டர் கண்டிப்பாகச் சொல்கிறார். இவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? என் காலடியிலேயே கிடந்து செத்துப் போக வேண்டுமாம்! அப்போதுதான் இவளுக்கு நல்ல கதி கிடைக்குமாம்! இவளுடைய எண்ணம் எப்படி இருக்கிறது, பாருங்கள்! குழந்தை சீதாவுக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டுமே என்ற ஆசைகூட இவளுக்குக் கிடையாது! 'செத்துப் போகிறேன்' 'செத்துப் போகிறேன்' என்று இருபத்து நாலு மணி நேரமும் இதுவே ஜபம்!- உண்மையாகவே இவள் செத்துத் தொலைந்து போய்விட்டால் தாயில்லாப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்ன செய்கிறது? சீதாவுக்குக் கல்யாணம் செய்து வைத்து இவள் போய்த் தொலைந்தாலும் பாதகமில்லை?"
இந்தச் சண்டமாருதப் பேச்சுக்கு முன்னால் என்ன பதில் சொல்வது என்று கிட்டாவய்யர் திகைத்து நிற்கையில் ராஜம்மாள் அவருடைய உதவிக்கு வந்தாள். மூச்சு வாங்கிக் கொண்டே அவள் பேசினாள்: "நான் உன்னுடன் ஊருக்கு வருகிறேன், அண்ணா! நாளைக்கே புறப்படத் தயார். நான் இந்த வீட்டில் இருந்து இவர் காலடியில் நிம்மதியாகச் சாவது இவருக்குப் பிடிக்கவில்லை. அங்கே மன்னியிடம் இடிபட்டுப் பேச்சுக் கேட்டுத்தான் சாகவேண்டுமாம். அகண்ட காவேரிக் கரையிலேதான் என்னை வைத்துக் கொளுத்த வேண்டுமாம்!..." "ராஜம்! என்ன இப்படி உளறுகிறாய்? உனக்கு மூளை அடியோடு பிசகிவிட்டதா! ராஜம்பேட்டையில் இருக்க உனக்கு இஷ்டமில்லாவிட்டால் உன் தமக்கை வீடு பக்கத்து ஊரில் இருக்கிறதே. அங்கே இருக்கலாமே? உன் பேரில் எங்களுக் கெல்லாம் என்ன விரோதமா? டாக்டர் சொன்னபடியினால் தானே எல்லோரும் வற்புறுத்து கிறோம்? கொஞ்சம் மனசைச் சாந்தப்படுத்திக் கொண்டு யோசித்துப் பேசு அம்மா!" என்றார் கிட்டாவய்யர்.
"சாந்தமாக யோசித்துத்தான் சொல்லுகிறேன், அண்ணா! ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்! நான் உன்னோடு புறப்பட்டு வருகிறேன்! நிச்சயமாகத்தான் சொல்லுகிறேன்!" என்றாள் ராஜம். "இவளுடைய பிடிவாதத்துக்கு என்ன காரணம் தெரியுமா, ஸார்! இவள் இங்கே இருந்துதான் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாளாம்! இல்லாவிட்டால் நான் குடித்துக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விடுவேனாம்! அப்படி இவள் மனத்திற்குள்ளே எண்ணம்! அவ்விதமெல்லாம் நான் கெட்டுப் போகிறவனாயிருந்தால் இவளால் என்னைத் தடுத்துவிட முடியுமா?..." "நான் தான் ஊருக்குப் புறப்படுகிறேன் என்று சொல்லி விட்டேனே! இன்னும் என்னத்துக்காக இந்தப் பேச்செல்லாம்? அண்ணா நீ போய்ப் படுத்துக்கொள்!... சீதா! சீதா!" என்று ராஜம் கூவினாள்.
"ஏன் அம்மா!" என்று வெளியிலிருந்தே சீதா கேட்டாள். "இன்னும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாயா? இங்கே வா, அம்மா!" என்றாள் ராஜம். சீதா குதித்துக் கொண்டே உள்ளேவந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது. அப்பாவும், அம்மாவும் இந்த மாதிரிச் சண்டை போடுவது வெகு சகஜமாகையால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. சண்டையின் முடிவாக ஊருக்குப் போகிற விஷயம் முடிவானது அவளுக்கு அளவில்லாத குதூகலத்தை அளித்திருந்தது! "சீதா உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறி விட்டது. ஊருக்குப் போகவேண்டும், லலிதாவைப் பார்க்க வேண்டும் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாயே? கடைசியாக நாம் ஊருக்குப் போகிறதென்றே தீர்மானமாகிவிட்டது சந்தோஷந்தானே?"என்றாள் ராஜம்."ரொம்ப சந்தோஷம், அம்மா!"என்றாள் சீதா.
அன்று இரவிலிருந்து ராஜத்தின் உடம்பு விரைவாகத் தேறி வந்தது. கிட்டாவய்யர் பம்பாய்க்கு வந்த எட்டாவது நாள் அவரும் ராஜம்மாளும் சீதாவும் விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷனில் மதராஸ் மெயிலில் ஏறினார்கள். துரைசாமி ஸ்டேஷனுக்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொடுத்து அவர்களை ரயில் ஏற்றி விட்டார். விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷன் அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டு பிளாட்பாரங்களில் ஏக காலத்தில் ரயில் வண்டிகள் வரும் சத்தமும், புறப்படும் சத்தமும், வண்டிகள் கோக்கப்படும் சத்தமும், ஆயிரக்கணக்கான பிரயாணிகள் பல பாஷைகளில் சம்பாஷிக்கும் சத்தமும் 'சாவாலா'க்களின் கூவலும், 'பாணி வாலா'க்களின் கூக்குரலும், போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமும், பத்திரிகைச் சிறுவர்களின் ஆரவாரமும் சேர்ந்து காது செவிடுபடும்படியான பெரும் கோஷமாக எழுந்து கொண்டிருந்தன. வெள்ளைக்காரர்களும், வெள்ளைக் காரிச்சிகளும், குஜராத்திகளும், மராட்டிகளும், பார்ஸிகளும், மதராஸிகளும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், கிழவர்களும் ஒருவரோடொருவர் மோதி இடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றிலும் ராஜத்தின் கவனம் செல்லவில்லை. அவ்வளவு சத்தங்களிலே எதுவும் அவளுடைய காதில் விழவும் இல்லை. அவளுடைய இரு கண்களும் துரைசாமியின்மீது ஏகாக்கிரக பாவத்துடன் படிந்திருந்தன. துரைசாமி சொன்ன வார்த்தைகளையே அவளுடைய காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன. ரயில் புறப்படும் சமயத்தில் கிட்டாவய்யர் ரயில் வண்டியின் கதவு அருகில் நின்று துரைசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பேசிக் கொண்டிருந்தபோதே அவருடைய கவனம் வேறு பல விஷயங்களின் மீதும் சென்று கொண்டிருந்தது. முக்கியமாகப் பத்திரிகை விற்ற பையன்கள் கூக்குரல் போட்டுக் கத்திய ஒரு விஷயம் அவர் காதில் விழுந்து மனத்திலும் பதிந்தது.
"ரஜனிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சி" "ஒரு பெண் பிள்ளையின் சாகசம்" "கையில் கத்தியுடன் கைது செய்யப்பட்டாள்" என்று அந்தப் பத்திரிகை விற்ற பிள்ளைகள் ஆங்கிலத்திலும் ஹிந்துஸ்தானியிலும் கூச்ச லிட்டார்கள். கிட்டாவய்யர் தமக்குத் தெரிந்த இங்கிலீஷ் ஞானத்தைக் கொண்டு விஷயத்தை ஒருவாறு அறிந்து கொண்டார். துரைசாமியுடன் பேசிக்கொண்டிருந்த போதே, "இது என்ன மகாராஜா கொலை விஷயம்?" என்று கேட்டார்."பம்பாயில் இந்த மாதிரி எவ்வளவோ நடக்கும்! நமக்கென்ன அதைப் பற்றி?" என்று துரைசாமி கூறியபோது அவருடைய முகம் கறுத்துச் சுருங்குவதைக் கிட்டாவய்யர் கவனிக்கும்படி நேர்ந்தது.
இதற்குள்ளே வண்டி புறப்படும் நேரம் வந்துவிட்டது. ரயில் நகரத் தொடங்கிய பிறகு துரைசாமி உணர்ச்சி மிகுந்த குரலில் உரத்த சத்தம் போட்டுக் கூறியதாவது: "ராஜம்! கூடிய சீக்கிரம் நான் அங்கே வந்து உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறேன். வீண் கவலைப்படாதே! நான் சரியாக இருப்பேன்! சீதா! அம்மாவைச் சரியாகப் பார்த்து கொள்! நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும் கிட்டாவய்யர்! போய் வருகிறீர்களா? ஜாக்கிரதை! இரயில் வண்டியின் உட்புறம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள்! ராஜம்! உடம்பு ஜாக்கிரதை!" துரைசாமி உண்மையாகவேதான் அவ்விதமெல்லாம் சொன்னார். "சீக்கிரத்தில் ஊருக்கு வந்து உங்களை அழைத்து வருகிறேன்" என்று அவர் கூறியதும் மனப்பூர்வமாகத்தான். ஆனால் மனிதன் ஒருவிதத் திட்டம் போட்டிருக்க விதி வேறு விதமாகத் திட்டம் போடுகிறதை உலகில் பார்க்கிறோமல்லவா!