மோட்டார் வண்டியின் சத்தம் கேட்டதும், சூரியா, "மதராஸ்காரர்கள் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது அத்தை! ஐந்து மணிக்குத்தான் வருவதாக இருந்தது, நாலரைக்கே வந்து விட்டார்களே!" என்றான். "ஆமாம், அப்பா! வேளை நெருங்கி வரும்போது எல்லாம் சீக்கிரமாகவே நடந்துவிடும். வேளை வராவிட்டால் ஒன்றும் நடவாது! வா, போகலாம்!" என்றாள் ராஜம்மாள். "நாம் அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்? அவர்கள் ஏதாவது செய்துகொள்ளட்டும். எனக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை!" என்று சூரியா அலுத்துக்கொண்டான். "நன்றாயிருக்கிறது! குடும்பத்தில் இருபது வருஷத்துக்குப் பிறகு கலியாணம் நடக்கப்போகிறது. பெண்ணுக்குத் தமையன் நீ! எல்லாவற்றையும் நீயல்லவா நடத்தி வைக்க வேண்டும்? நான் இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லையென்றாலும், சமயத்தில் இல்லாமற் போனால் யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் புறப்படு, போகலாம்!" என்றாள் ராஜம்.
போகும் வழியில் சூரியா, "அத்தை! பம்பாயிலிருந்து கடிதம் வந்ததே! ஏதாவது விசேஷம் உண்டா? அத்திம்பேர் தானே கடிதம் எழுதியிருக்கிறார்? அவர் இந்தப் பக்கம் இப்போது வரமாட்டாரா?" என்று கேட்டான். "விசேஷம் ஒன்றுமில்லை, வடக்கே பாட்னா என்று ஒரு பட்டணம் இருக்கிறதாமே? ஒரு வேளை உத்தியோக காரியமாக அங்கே போக வேண்டி யிருக்கும் என்று எழுதியிருக்கிறார். திரும்பப் போகும்போது இங்கே வந்தாலும் வருவாராம். அதற்குள்ளே சீதாவுக்கு ஒரு வேளை கலியாணம் நிச்சயமாகிவிட்டால்....." "அத்தை! நீ கூடப் பட்டிக்காட்டு ஸ்திரீகளைப் போல் ஓயாமல் 'கலியாணம்' 'கலியாணம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே? எதற்காக இவ்வளவு கவலை?" "கவலைப்பட வேண்டிய காரியம், சூரியா! அதனால்தான் கவலைப்படுகிறேன்!" என்றாள் ராஜம்மாள். இருவரும் அக்கிரகாரத்தின் வீதியை அடைந்த போது மோட்டார் வண்டி சீமாச்சுவய்யரின் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டார்கள்.
கிட்டாவய்யரின் வீட்டில் லலிதாவினுடைய அலங்காரத்தின் கடைசிக் கட்டம் நடந்து கொண்டிருந்தது. சீதாவின் பரபரப்பைச் சொல்லி முடியாது லலிதாவின் ஒரு கை வளையைக் கழற்றி இன்னொரு கையில் போடுவதும் ஒரு விரலில் உள்ள மோதிரத்தைக் கழற்றி இன்னொரு விரலில் போடுவதும் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து எடுத்துச் சரிப்படுத்தி வைப்பதும் முன் தலையையும் வகிட்டையும் சீப்பினால் இலேசாக அப்படியும் இப்படியும் வாரி அழகு பண்ணுவதும் நெற்றிப் பொட்டைப் பத்துத் தடவை மாற்றி மாற்றி வைப்பதுமாயிருந்தாள். சூரியாவைக் கண்டதும் சரஸ்வதி அம்மாள், "ஏண்டா! இத்தனை நேரமும் எங்கேடா போனாய்? அத்தையோடு அரட்டையடிப்பதற்கு இதுதானா சமயம்? அவர்கள் சொன்ன நேரத்துக்கு அரைமணி முன்னதாகவே வந்துவிட்டார்கள். டிபன் கொண்டு கொடுப்பதற்காக உன்னைப் பார்த்தால் ஆளைக் காணோம். சீமாச்சு மாமாவோ 'நேரமாச்சு!' என்று குதிக்கிறார். கடைசியில் பரிசாரகனிடம் கொடுத்தனுப்பிச் சுண்டுவையும் கூடப் போகச் சொன்னேன். இப்போதுதான் போகிறார்கள் நீயும் போ! மாப்பிள்ளைக்கு நீயே கவனித்து டிபன், காப்பி எல்லாம் கொடு! ரவா கேசரி செய்து அனுப்பியிருக்கிறேன், பரிமாற மறந்துவிடப் போகிறான். நீ போய்க் கவனித்துக்கொள்! போ சீக்கிரம் போ!" என்று விரட்டி அடித்தாள்.
"நான் ஒன்றும் போகவில்லை; எத்தனை பேர் போக வேண்டுமாம்? இதற்குள்ளே இவ்வளவு தடபுடல் எதற்காகப் பண்ணுகிறாய் என்று தெரியவில்லை!" என்றான் சூரியா. "கேட்டாயல்லவா பிள்ளையின் சமர்த்தை? அப்பாவைப் போலத்தான் பிள்ளையும் இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான் எப்படித்தான் நாளைக்குக் கலியாணம் பண்ணிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை!" இதற்குள் சீதா, "சூர்யா! அம்மா சொன்னதைக் கேட்டால் என்ன? மாப்பிள்ளையை நீ கவனியாமல் பின்னே யார் கவனிப்பார்கள்?" என்றாள். "எல்லோருமாகச் சேர்ந்து அதற்குள் 'மாப்பிள்ளை' என்று ஸ்திரப்படுத்தி விடுகிறீர்களே! இன்னும் அந்த மேதாவி வந்து லலிதாவைப் பார்த்தாகவில்லை!" என்றான் சூரியா. "அதுதான் நானும் சொல்கிறேன்!" என்றாள் லலிதா. "நீ பேசாமலிரு லலிதா!" என்றாள் அவள் தாயார் சரஸ்வதி அம்மாள். "அம்மாஞ்சி! நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிற பட்சத்தில் நான் போய் வந்தவர்களுக்கு டிபன் பரிமாறி விட்டு வருகிறேன்! நீ போகிறாயா, நான் போகட்டுமா? ஆண் பிள்ளையா இலட்சணமா ஜம்மென்று போக; 'மாப்பிள்ளை, ஸார்! வாருங்கோ!' என்று கையைப் பிடித்துக் குலுக்க! அதை விட்டு இங்கே என்னத்தைச் செய்கிறாய்?" என்றாள் சீதா. "அப்படிச் சொல், சீதா! இந்த வீட்டிலேயே நீ ஒருத்திதான் சமர்த்து. நீ மட்டும் இன்றைக்கு இல்லாவிட்டால் இந்தப் பெண்ணின் தலையை வாரிப் பின்னி விடுகிறதற்குள்ளே என்னை என்ன பாடுபடுத்தியிருப்பாள், தெரியுமா? உனக்கும் ஒரு வரனைப் பார்த்துக் கலியாணம் நிச்சயம் பண்ணிவிட்டால் தான் எனக்கு மனது நிம்மதியாகும்?"
"அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு, மாமி! இன்றைக்கு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். உங்கள் பிள்ளை போகிற வழியாகக் காணவில்லையே?" "எல்லோரும் இன்றைக்குப் புதிதாக வந்தவர்களைப்பற்றி இவ்வளவு கரிசனம் காட்டுகிறீர்களே தவிர வீட்டு மனுஷனை யார் கவனிக்கிறீர்கள்? எனக்குக் கூடத்தான் பசியாயிருக்கிறது. யாராவது என்னை 'டிபன் சாப்பிடு' என்று சொல்லுகிறீர்களா? இந்த உலகமே இப்படித்தான்? மகா மோசம்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா வெளியேறினான். சீமாச்சுவய்யரின் வீட்டுக்குச் சூரியா போய்ச் சேர்ந்த போது மதராஸிலிருந்து வந்தவர்கள் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளைப் பையன், அவனுடைய தகப்பனார், தாயார், சுப்பய்யர் ஆக நாலு பேர் வந்திருந்தார்கள் என்பதைச் சூரியா கவனித்துக் கொண்டான். அவர்களோடு உட்கார்ந்து சுண்டுவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சீமாச்சுவய்யர் அவர்களையெல்லாம் உபசரிப்பதில் ஈடுபட்டிருந்தார். சூரியா தாழ்வாரத்தின் தூணைப் பிடித்துக்கொண்டு மௌனமாய் நின்றான். அவனைக் கவனித்த மாஜி ஸப் ஜட்ஜ் சாஸ்திரியார், "இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டார். "இவன்தான் பெண்ணின் தமையன் சூரியநாராயணன்; எஸ்.எஸ்.எல்.சி படிக்கிறான்!" என்றார் சீமாச்சுவய்யர்.
சௌந்தரராகவன் எம்.ஏ. தலைநிமிர்ந்து பார்த்துவிட்டு, "எஸ்.எஸ்.எல்.சி தாராளமாய்ப் படிக்கட்டும்; அதற்காக ஏன் இவ்வளவு கோபமாயிருக்க வேண்டும்!" என்றான். சௌந்தரராகவன் ஹாஸ்யமாகச் சொன்னதை சூரியா, ரஸிக்கவில்லை. "எனக்கு என்ன கோபம்? நீங்கள் தான் வருகிற போதே கோபமாய் வந்திருப்பது போலத் தோன்றுகிறது. அதனால், நான் பரிமாற வருகிறதையெல்லாம் 'வேண்டாம் வேண்டாம்' என்கிறீர்கள். கலியாணம் ஆன பிற்பாடல்லவா கோபதாபமெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும்? இப்போது எதற்கு?" என்றான் சூரியா. "பலே அப்பா, பலே!" என்றார் ஸ்ரீ பத்மலோசன சாஸ்திரியார். "காமாட்சி! பார்த்தாயல்லவா பையனுடைய பேச்சை? இந்தக் காவேரித் தண்ணீரில் ஏதோ மகிமை இருக்கிறது என்று நான் சொன்னது இப்போதாவது உண்மையென்று உனக்குப் படுகிறதா?" என்று கேட்டார். "இந்தக் காலத்திலேயே பிள்ளைக் குழந்தைகள் எல்லோரும் சமர்த்தாகத்தானிருக்கிறார்கள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "பெண் குழந்தைகள் மட்டும் இலேசா இருக்கிறார்களா, என்ன? இவன் தங்கையோடு நீங்கள் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் தெரியும்! என்ன ஓய்! சுப்பய்யரே! நான் சொல்கிறது என்ன?" என்று சீமாச்சுவய்யர் இன்ஷூரன்ஸ் சுப்பய்யரை சாட்சிக் கூண்டுக்கு அழைத்தார். "எல்லாம் இன்னும் கால்மணியில் தெரிந்து விடுகிறது!" என்று பட்டுக் கொள்ளாமல் சொன்னார் சுப்பய்யர்.
லலிதாவின் அலங்காரம் ஒரு விதமாக முடிவடைந்தது. "சீதா! இனிமேலாவது நீ போய் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்ளேன்!" என்றாள். "எனக்கென்னடி இப்போது வந்திருக்கிறது! இதோ பார்! காதண்டை இந்தச் சுருட்டை மயிர் இப்படித் தொங்கினால் நன்றாயிருக்கும்!" என்று சீதா மறுபடியும் லலிதாவின் முகத்தை அழகுப்படுத்தத் தொடங்கினாள். "எல்லாம் இவ்வளவு போதும்! நீ போகிறாயா, மாட்டாயா? நீ மட்டும் முகம் அலம்பிப் பொட்டு வைத்துக் கொண்டு நல்ல புடவையும் கட்டிக் கொள்ளாவிட்டால் நான் காமரா உள்ளுக்குப்போய்க் கதவை இழுத்துத் தாள் போட்டுக்கொண்டு விடுவேன். யார் கதவை இடித்தாலும் திறக்க மாட்டேன். பெண் பார்க்க வந்தவர்கள் பார்க்காமலே திரும்பிப் போக வேண்டியதுதான்?" "சீதா! அவள் சொல்லுகிறதைத்தான் கேளேன்! இவ்வளவு பிடிவாதம் எதற்கு? நீயும் தோழிப் பெண்ணாகப் பக்கத்தில் நிற்கவேண்டுமென்று லலிதா ஆசைப்படுகிறாள் போலிருக்கிறது. முகத்தில் எண்ணெய் வழியக் கந்தலைக் கட்டிக்கொண்டு நின்றால் சரியாயிருக்குமா?" என்றாள் சீதாவின் பெரியம்மா. "ஆமாம், சீதா! உன் பெரியம்மா சொல்கிறதைக்கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி! இப்படி எல்லோரும் சேர்ந்து சொன்னால் நான் என்ன செய்கிறது?" என்று சொல்லிக்கொண்டு சீதா தன்னுடைய அலங்காரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாளின் தாயார் அவளைக் கூப்பிட்டுக் கொல்லைக்கட்டுக்குத் தனியாக அழைத்துக் கொண்டு போனாள்.
ஏதோ ரகசியமாகச் சொன்னாள்; அதற்குச் சரஸ்வதி அம்மாள், "உனக்கு அலாதியாக ஏதேனும் தோன்றும்! பேசாமல் இரு! கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடாது!" என்று பதில் சொன்னது எல்லாருடைய காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்தது. சீதா தன் புடவையை மாற்றிக்கொண்டு முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு வந்தாளோ, இல்லையோ, சரஸ்வதி அம்மாள் அவளைப் பார்த்து, "சீதா! சீதா! உன் மாமா வாசலிலேயே நிற்கிறார் பார்! அவரைக் கொஞ்சம் உள்ளே கூப்பிடு! அவர்கள் வருகிற போது குழந்தை என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் சொல்லாமல் இவர் பாட்டுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாரே!" என்றாள். அப்போது அபயாம்பாள், "அவன் சொல்கிறது என்ன? நமக்குத் தெரியாதா? அவர்கள் வந்து உட்கார்ந்ததும் குழந்தை கையில் வெற்றிலை பாக்குத் தட்டோ டு வரவேண்டியது. தட்டை வைத்துவிட்டு எல்லோருக்கும் சேர்ந்து ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டியது. பிறகு கூடத்துக்கு வந்து நிற்க வேண்டியது. யாராவது ஏதாவது கேட்டால் கணீரென்று பதில் சொல்ல வேண்டியது!" என்று சொன்னாள். "எல்லாவற்றுக்கும் நீ மாமாவைக் கொஞ்சம் கூப்பிடு சீதா!" என்றாள் சரஸ்வதி அம்மாள். சீதா வாசற்பக்கம் சென்று பார்த்தாள். மாமாவும் இன்னும் ஊரார் சிலரும் தெருவில் போட்டிருந்த கோடைப் பந்தலில் நின்று கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் மாமாவைக் கூப்பிடலாமா, கூடாதா என்று யோசித்துக்கொண்டு சீதா வாசற்படியருகில் சிறிது தயங்கி நின்றாள். இதற்குள் மோட்டார் வண்டி வந்து வீட்டு வாசலில் நின்றது. லலிதாவைப் பார்க்க வருகிற மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று தெரிந்துகொள்ளச் சீதாவின் மனத்தில் எழுந்த ஆவல் அவளை அப்படியே நிற்கும்படிச் செய்தது.
மோட்டாரிலிருந்து முதலில் ஒரு பெரியவர் இறங்கினார். அடுத்தாற்போல் ஒரு யௌவன புருஷன் இறங்கினான். அவன் தான் மாப்பிள்ளையாயிருக்க வேண்டும். அடடா! எவ்வளவு களையாயிருக்கிறான்! லலிதா அதிர்ஷ்டசாலிதான்; சந்தேகமில்லை. சீதாவின் நெஞ்சு விம்மித் தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் வரும் போலிருந்தது. தலை சுழன்றது; சட்டென்று சமாளித்துக் கொண்டாள். சமாளித்துக் கொண்டு பார்த்தபோது அந்த யௌவன புருஷன் தன்னை நோக்குவதைக் கண்டாள். 'என்னைக் கல்யாணப் பெண் என்று நினைத்துக் கொள்ளப் போகிறாரே!' என்ற எண்ணம் உண்டானதும் வெட்கம் பிடுங்கித் தின்றது. இரண்டே பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, "அவர்கள் வந்தாச்சு!" என்றாள் சீதா. பிறகு லலிதாவின் அருகில் சென்று அவளைக் கட்டிக் கொண்டு காதோடு, "அடியே! உனக்கு வந்திருக்கும் அகமுடையானைப் பார்த்துவிட்டேன்; ரொம்ப அழகாயிருக்கிறார். மாமா சொன்னபடி மன்மதன்தான்!" என்றாள். "சீ!போடி!" என்றாள் லலிதா.