3

மேலும் சில மாதங்களுக்குப் பிறகு நான் புஷ்பாவைச் சந்திக்க சந்தர்ப்பம் துணை பிரிந்தது. எதிபாராத நிகழ்ச்சி தான் இதுவும்.

நான் திருநெல்வேலி போவதற்காக திருவனந்தபுரம் எக்பிரஸில் இடம் பிடித்து வசதியாக உட்கார்ந்த பிறகு சூழ்நிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். மங்களான வெளிச்சம் அழுது வழிந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு முகம் எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. கவனித்தேன். அவளும் கவனித்தாள், உடனேயே தலை குனிந்து கொண்டாள்.

அவள் தான், அந்த எக்ஸ்ட்ரா நடிகை புஷ்பா 'சொந்த ஊருக்குப் போகிறாள் போலிருக்கிறது. வந்து நாளாயிற்று அல்லவா? இரண்டு வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் முதன் முதலாக வீடு திரும்புகிறாள் என்று நினைக்கிறேன். அங்கு வரவேற்பு எப்படியிருக்குமோ? பாவம்' என்று நெஞ்சோடு புலம்பிக் கொண்டேன்.

அவள் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்று நினைத்தேன். அவள் முகம் அவ்விதமே கூறியது. என்ன காரணமோ? எதாக இருந்தால் தான் என்ன! எப்படியும் போகிறாள். அவள் யார் ? ஏதோ ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவ்வவவு தானே என்று எண்ணினேன்.

நான் நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டாள் அவள். ரயில் புறப்பட்டு ஓடத் தொடங்கியதும், அவள் ஜன்னல் அருகில் வருபவள் போல வந்து நின்றாள். 'அங்கே செளகரியமான இடமிருக்கு. நான் மதுரைக்குப் போகிறேன். உங்களிடம் எவ்வளவோ விஷயங்கள் சொல்ல வேண்டும். தயவு செய்து அந்த இடத்துக்கு வாருங்களேன்' என்று கெஞ்சுதலாகக் கூறினாள் அவள்.

அவளை கவனித்தேன். அவள் மிகவும் மாறிப்போயிருந்தாள். முன்பிருந்த அழகு இல்லை, இளமை இல்லை, மிடுக்கும் மினுமினுப்புமிமில்லை, கவர்ச்சி இல்லை. கசங்கிப்போன மலர் போல் காட்சியளித்தாள். முகத்திலே சோகம் நிரந்தரமாகக் குடியேறி வாழ்ந்தது. கன்னங்கள் வறண்டு, காமத்தின் மிகுதியான வடுக்கள் ஏற்று காண அருவருப்பு அளிப்பனவாக மாறியிருந்தன. அவளது அழகான கண்களிலே ஒளியில்லை. அவள் செயற்கை அலங்காரத்திலும் சிரத்தை காட்டவில்லை. அவளைப் பார்க்கும் போது எனக்கு அவளிடம் அனுதாபமே மிகுந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக வேறொரு மாறுதல் கண்களை உறுத்தியது. ஒல்லியாய், துவண்டு விழும் கொடி போலிருந்த அவளுடைய வயிறு பருமனாக வளர்ந்திருந்தது விகாரமாக்த் தான் தோன்றியது. அவள் கர்ப்பவதி.

உலகத்தின் உண்மைத் தன்மையை ஒருவாறு புரிந்துவரும் எனக்கு அவளின் கதி பளிச்செனப் புரிந்தது. அவள் கருவுற்றதும், அவளைக் கொஞ்சிக்குலாவிய கயவன் அவளைக் கைவிட்டிருப்பான். அவளுக்கு பிழைக்கும் வழி கூடக் கிட்டியிராது? அவளுடைய முழுக்கதையையும் அறிய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவள் உதவியால் சினமாக் கலையுலக 'எக்ஸ்ட்ரா' க்களின் வாழ்க்கையையே உணர முடியுமே என்ற எண்ணம் தான் காரணம். அதனால் அவள் காட்டிய இடம் சேர்ந்தேன்.

'நான் திருநெல்வேலிக்குப் போகிறேன். ஆகவே, நீங்கள் மதுரை போகும் வரை, சொல்ல வேண்டியதை எல்லம் சொல்லி முடிக்கலாம். ஏராளாமான நேரம் இருக்கிறது' என்றேன்.

அவள் துயரம் தளும்பிய குரலில் பேசினாள்; 'நான் கெட்டுப்போனவள். உங்கள் மதிப்புக்கும் அனுதாபத்துக்கும் அருகதையற்றவள், எனக்கு நீங்கள் மைரியாதை காட்ட வேண்டியதில்லை.'

அவள் ஆப்படி பேச ஆரம்பித்தது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேதனையையே தந்தது. தாழ்ந்து போன அவள் மேலும் தன்னைத் தானே தழ்த்திக் கொள்ள விரும்பியது. அதனால் சொன்னேன்: சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் மனிதர்களை எப்படி எப்படியெல்லாமோ ஆட்டி வைக்கின்றன. இவற்றின் காரணத்தால் மனிதத்தன்மை பறிக்கப்பட்டோ, நசுக்கப்பட்டோ போய்விடலாம். அதற்காக என்றுமே 'தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து' போக வேண்டியதுதன் ஒரு முறை தவறிவிட்டவர்கள் என்பதை நான் ஆதரிக்கவில்லை. தவறுவது மனித இயல்பு. பிறகு திருந்தி, இழந்த மனிதத் தன்மையை மறுபடியும் பெற முயற்சிப்பதுதான் மனிதருக்கு அழகு. உங்கள் வாழ்க்கை உங்களை மிகவும் சோதித்திருக்கலாம் சோர்வுற்றுச் சாம்பிக் குவிந்துள்ள நீங்கள் எல்லோரிடமும் அவமதிப்புற வேண்டும் என்று எண்ணுவானேன்?...'

அநாவசியமாக நான் பிரசங்கம் பண்ணத் தொடங்கிவிட்டேனா என்ற சந்தேகம் எழவே, எனது பேச்சு நின்றுவிட்டது.

'நீங்கள் முதலிலேயே சொன்னீர்கள், சினிமாவில் சேருவது சுலபமல்ல என்று. பிறகு, சினிமாக்கலை இன்றைய நிலையிலே எப்படி உருப்படும் என்று கேட்டீர்கள். நீங்கள் சொன்னது சரிதான்..... உங்களைப் பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களிடம் என் வாழ்க்கையை - எக்ஸ்ட்ரா நடிகையின் கேவலமான பிழைப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை, நீண்ட கடிதம் எழுதலாம் என்று எண்ணினேன் துணிவு வரவில்லை. முதலில் உங்களுக்குக் கடிதம் எழுதவே எனக்கு பயம். ஆமாம். பயம் என்றுதான் சொல்லவேண்டும். இரண்டாவதாக, சில விஷயங்களை எப்படி எழுத்திலே வெட்கமின்றிக் கூறுவது என்ற தயக்கம். மூன்றாவதாக, என்னால் தொடர்பாக மனசில் எழுதுவதை எழுதமுடியாது என்ற காரணம். இப்படிக் காலம் ஓடிவிட்டது. நல்லவேளை. இன்று சந்தர்ப்பம் துணை புரிந்தது. இதுதான் உங்களைப் பார்க்கும் கடைசி முறையாக இருக்குமென நினைக்கிறேன், எனது எதிகாலத்தை எண்ணிப் பார்க்கும் மனத்தெம்பு கூட எனக்கில்லை, எதிகாலம் பேய் மாதிரி இருள் படிந்து பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது. சிலசமயம் நான் செத்துப் போவேன் என்ற எண்ணம் எழுகிறது. நானே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைப்பது உண்டு. அதற்குக் கூட துணிச்சல் இல்லை. சாகவும் பயமாக இருக்கிறது. வாழவும் பயமாக இருக்கிறது. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை, ஒன்றுமே ஓடவில்லை, நான் மதுரைக்குப் போகிறேனே அங்கு போய் என்ன செய்ய போகிறேன்? எனக்கே தெரியாது. ஆனால் எங்காவது போயாக வேண்டுமே. பட்டணத்திலிருந்துதான் என்ன செய்வது? செலவுக்கு வழி? மதுரையில்தான் அம்மா இருக்கிறாள். அவளிடம் எப்படிப் போய் முகத்தைக் காட்டுவது என்று இதுவரை இருந்தேன். வேறு வழி எதுவுமில்லை என்று நெருக்கடி ஏற்பட்டவுடன் வருவது வரட்டும் என்று கிளம்பிவிட்டேன். கெட்டுப்போன சிறுக்கி; தட்டுவாணி என்று எல்லோரும் ஏசுவார்கள் என்ன செய்வது?...'

அவள் தன் அனுபவத்தை விரிவாகவே சொன்னாள் . நான் அனுதாபத்துடன் கேட்டிருந்தது அவளுக்கு சிறு ஆறுதல்.

தான் எண்ணியபடி எதுவும் நடக்காது என்பதை உணர புஷ்பாவுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஆரம்பத்திலேயே கசப்பு தட்டி விட்டது. அவள் கம்பெனி கம்பெனியாகத் திரிந்தாள். முதளிகளைப் பார்க்க முடியவில்லை. ஸ்டுடியோ வாசிலில் காத்துக் கிடந்தாள். பயனில்லை கொண்டு வந்திருந்த பணம் கரைந்துவிட்டது; சாப்பாட்டுக்கும் தங்கவும் இடமில்லையே என்று எண்ணும்போது அவளுக்கு அழிகை வந்தது. அந்த சமயத்தில்தான் ஸ்டுடியோவைச் சுற்றிக் கொண்டிருந்த கறுப்பசாமி அவள் பாக்கம் வலை வீசி அவளை பிடிக்க முடிந்தது. அவன் பரிவாக விசாரித்து ஆறுதல் கூறியது வறண்ட வெயிலுக்குப்பின் குளிரக் குளிர மழை பெய்தது போலிருந்தது. புதிதாகத் தானாகவே போய் செந்துவிட முடியாது; அனுபவமுள்ளவர்களின் உதவி வேணும்; தனக்கு பலரைத் தெரியும்; தான் எத்தனையோ பேர்களை சினிமாவில் சேர்த்து விட்டது உண்டு என்று அவளுக்குச் சொன்னான். வீடுக்கு வந்து தங்கலாம்; அம்மா இருக்கிறாள். கவனித்துக் கொள்வாள் என்றும் தெரிவித்தான். புஷ்பாவுக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை. ஆகவே அவனுடன் சென்றாள்.

அவன் அவளை ஒரு முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அவர் மறுபடி வரச் சொன்னார். வேறு இரண்டு மூன்று படக் கம்பெனிகளுக்கும் கூட்டிச் சென்றான். ஒருவரிடம் தனியாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திரும்பி வந்ததும், அங்கு சான்ஸ் கிடைக்கலாம் என்று அறிவித்தான். தினம் அவரிடம் சொல்லியிருக்கிறேன் என்று உறுதி கூற அவன் தவறுவதில்லை. சான்ஸ் கிடக்க்குமா என்ற சந்தேகம் பிறந்தது அவளுக்கு. மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் சந்தோஷமாக வந்து, அவளை அழைத்துப் போனான். அம்முறை ஏமாற்றமில்லை.

அவள் கனவு கண்டாள், முதல் படத்திலேயே நல்ல சான்ஸ் கிடைக்கும் ஏதோ நாலைந்து ரீல்களில் தோன்றிப் பேசி, படம் பார்க்கிறவர்கள் நினைவில் நிற்கும்படி ஒளிர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என எண்ணினாள். பிறகு தானாக சான்ஸ்கள் வரும் இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு முக்கிய பாத்திரமாகத் தோன்றலாம். பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கலாம். வசதியாக வாழலாம், இபபொழுது பட்ட... கஷ்டங்களை யெல்லாம் மறந்து விடலாம் என்று நம்பினாள்.

முதல் நாள் -- அவளைப் படக் கம்பெனியில் சேர்த்து விட்ட அன்று----இரவில், கறுப்பசாமி சிரித்துச் சிரித்து பேசி அவளை வளைய வந்தான், அவன் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை இருந்தாலும் என்ன செய்வது ? உதவி செய்தவன், அவன் வீட்டில் தங்கியிருக்கிறாள், சீறி விழ முடியுமா? சிரிக்கத்தான் வேண்டும். அவன் தன் ஆசையை அறிவித்தான். அவளுக்குப் பகீரென்றது. இப்படியும் நடக்கும்மென அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கோபம் காட்டினாள். 'என்னடி பத்தினித் தனம்' பண்றே! மதுரையிலே நீ டிக்கெட்டுப் போட்டுக் கிட்டிருந்திருப்பே, தெரியாதாக்கும். உன்னை கூட்டி வந்து உதவி செய்தது எதற்கு ? பணம் வந்ததும் நீ தரப்போகிற கமிஷனுக்கு மட்டும்தான்னு நினைச்சியா? ஹ ஹ ஹ என்று 'வில்லன்' சிரிப்பும் பார்வையும் சிதறினான். அவள் என்ன செய்ய முடியும் ? அவன் ஆசை காட்டினான், தன்னால் பெரிய பெரிய சான்ஸ்கள் எல்லாம் பிடித்துத் தர முடியும் என்றான், அவளுக்கு ஆசை யிருந்தது சினிமா நட்சத்திரம் ஆக வேண்டு மென்று, ஆகவே அவனிடம் அவள் தன்னையே கொடுத்து விட வேண்டியதாயிறு.

முதலில், படத்தில் சும்மா தோழியாக வந்து போவது தான் என்றறிந்ததும் அவளுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. ஹீரோயின் பார்ட் அவள் எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் இவ்வளவு அநாமதேயமான ஒரு வேஷம் தானா என்று நினைக்கவும், கண்ணீர் வடித்தாள் அவள். அவனிடம் சொன்ன போது, அவன் தனது 'டிரேட் மார்க்' சிரிப்பையே உகுத்தான். பின்னே என்ன ஹீரோயினி ஆக்ட்டு கிடைக்கும்னு நினைச்சியா.? என்று கிண்டல் செய்தான். சினிமாவில் நடிப்பது மகிழ்வான, கலையான், கௌரவமான மதிப்பான வாலை என்று எண்ணி வந்த அவளுக்கு அதைப் போன்ற மோசமான அலுவல் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது அனுபவம். அவள் ஒரு எக்ஸ்ட்ரா. எக்ஸ்ட்ரா நடிகை என்றதுமே கேவலமாகக் கருதுகிறார்கள் பலரும் தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலோரே தான். அவள் பிழைப்பிற்காக பிறர் தயவை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. எப்படியாவது என்று கருப்புசாமி சொன்னதன் பொருள் அவளுக்குப் புரிந்தது. தயவை பெறுவதற்கு அவள் தன்னை தன் உடலை காணிக்கையாக்க வேண்டியிருந்தது. பட உலகச் சில்லறைத் தேவதைகள், பூசாரிகள் முதல் முதலாளி ஐயாவின் கார் டிரைவர் வரை, அவள் ஒரு எக்ஸ்ட்ரா என்பதனால் அவளிடம் தங்களுக்கு தாராள உரிமை உண்டு என்று நம்பினார்கள். அப்படியே நடந்து கொள்ளத் தவித்தார்கள். கலையின் பெயரால் காமம் ஆட்சி செலுத்துவதை அவள் உணர்ந்தாள். கௌரவம், அந்தஸ்து, பணம், படாடோபம், செல்வாக்கு முதலிய போர்வைகளில் மிருகத்தனமும், சின்னத்தனங்களும், செழிப்புற்று வாழ்வதை அவள் உணர முடிந்தது. அந்தப் படு பயங்கரமான சுழலிலே அவள் சிக்கிக் கொண்டாள். அவளாகவே ஆசையோடு வந்து விழுந்தாள். இனி மீள வழியில்லை என்றேத் தோன்றியது.

முதல் படத்திற்குப் பிறகு 'சான்ஸ்' கிடைப்பது சுலபமாக இருக்கவில்லை. பழைய கதையேதான். அலைந்து அலைந்து திரும்புவது. சிபாரிசுச் சீட்டாக சிலரிடம் தன்னை ஒப்புவிக்க வேண்டியிருந்தது. கலையின் பெயரால் கௌரவமான விபசாரம் அல்லாமல் வேறு என்ன இது எனற நினைப்பு எழும், ஆனால் அவள் பிழைக்க வேண்டுமே! எத்தனையோ தினங்கள் அவள் பட்டினி கிடந்தாள். கருப்புசாமியும் ' அம்மா' என்று அழைத்த ஸ்தீரீயும் போதனைகள் பல புரிந்து அவளை 'தொழிற்காரி' யாக மாற்றி விட்டார்கள். உயிர் வாழ்வதற்காக அவள் உடலை விற்றாள். பணத் தேவையும் இருந்ததே! படக் கம்பெனிகளுக்குப் போக நல்ல டிரெஸ் தேவை, பவுடர் முதலியன தேவை. பணம் சம்பாதிக்க வேறு வழியில்லை.

இப்படி அல்லலுற்ற அவளுக்கு அந்த உதவி டைரக்டரின் தயவு கிட்டியது. அவன் தாராளாமாகப் பண உதவி செய்தான். ஒன்றிரண்டு படங்களிலும் சான்ஸ் கிடைத்திருந்தது, இனியாவது: கெளரவமாக வாழ முயல வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக கருப்பசாமி வீட்டிலிருந்து வெளியேறினாள். தனியாக ஒரு சிறு வீடு பார்த்துக் குடிபுகுந்தாள். வீடா அது! பன்றிக் குச்சு மாதிரி. ஆனால், பட்டணத்தின் சுற்றுப்புறங்களிலே இத்தகைய குடிசைகள் தானே பெருத்துப் போயுள்ளன. இவற்றில் தானே கூனிக் குறுகி ஒண்டி ஒடுங்கிக் கிடக்கவேண்டியிருக்கிறது எண்ணறவர்களுக்கு? வேறு போக்கு ஏது? அவளும் அப்படித் துணிந்தாள். ஆனால் காலமும் அவளது புதிய அன்பனும் வஞ்சித்து விட்டதால் அவள் அதிகம் சீரழிய நேர்ந்தது. தனக்கு இனி விமோசனமே கிடையாது என்று நினைத்தாள். அவள் கருவுற்றதும் அவன் அவளை ஒதுக்கி விட்டான். அவனை அவள் பார்க்கவே முடியவில்லை எங்கிருக்கிறானோ தெரியாது.

அவள் மானத்தை விட்டுவிட்டு, கருப்பசாமியை போய் பார்த்தாளாம். 'வயிற்றில் வளர்ந்து வருவதை அழித்துவிடு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். பிறகு எங்காவது சான்ஸ் கிடைக்குமா பார்க்கலாம்' என்றானாம். அதைவிட தன்னையே அழித்துவிடுவது நல்லது என்று அண்ணினாள் அவள். 'இவ்விதம் தான் பலபேர் வாழ்கிறார்கள், வாழ்வதற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள். மனிதத்தன்மையையும்தான்!' என்றாள் புஷ்பா. பொங்கி வந்த துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். ஜன்னலில் முகம் சாய்ந்து அழுது கொண்டு கிடந்தாள் அவள்.அடங்காத விம்முதலின் அறிகுறியாக, ஜன்னலின் பக்கம் சாய்ந்திருந்த அவள் முதுகு உயர்ந்து தாழும் கணத்துக்குக் கணம். அவள் அழுகையில் தான் ஆறுதல் காணவேண்டும். அப்படியும் ஆறுதல் பெற முடியுமா?

. : எனக்கு அவளிடம் அனுதாபம் அதிகரித்தது. ஐயோ பாவம்; பெரிதாக வளர்ந்து வருகிற ஒரு கலை தொழிலில், அதே வேகத்தோடு வளர்ந்து அந்த தொழிலுக்காகவே தங்களையே காவுக்கொடுத்துக் கொள்ளும் இனத்தின் ஒரு சிறு புள்ளி அவள். அவளுக்கு உயர்வில்லை. உய்வு கிடையாது. அவள் ஒரு எக்ஸ்ட்ராதான்?.



நீங்கள் படித்தீர்களா?
காதல் பித்தன் எழுதிய
காதல் புரிவது எப்படி?
விலை அணா ஆறேதான்
கிடைக்குமிடம்:
கதம்ப மாளிகை
செயின்ட் ஜேவியர் தெரு -- சென்னை- 1
"https://ta.wikisource.org/w/index.php?title=அவள்_ஒரு_எக்ஸ்ட்ரா/3&oldid=1062451" இலிருந்து மீள்விக்கப்பட்டது