அவள் ஒரு மோகனம்/வந்தார் மாப்பிள்ளை!

13. வந்தார் மாப்பிள்ளை!


ரேவதிக்கு நெஞ்சுறுதி மட்டுமல்லாமல், உடல் உறுதியும் நிறையவே இருந்தது. அவள் கை எவ்வளவு வலுவாக அந்தத் துப்பாக்கியைப் பிடித்து இருக்கிறது!

அவளைப் பார்ப்பவர்கள் அவ்வளவு உறுதி படைத்தவளாக அவளைச் சொல்ல மாட்டார்கள். அவளுக்குக் கொடிபோன்ற உடல். பச்சை மூங்கில் போன்ற கைகள், வெண்டைக்காய் விரல்கள்.

வீணை மீட்ட வேண்டிய அந்த விரல்கள், எவ்வளவு வலுவாகத் துப்பாக்கியைப் பிடித்து இருக்கின்றன. இதைத்தான் குரங்குப் பிடி என்பதோ!

ஆனாலும், அவ்வளவு நெஞ்சு உரம் அதிகம்தான். இல்லாவிட்டால் இப்படித் துப்பாக்கியை எடுப்பாளா? அதை நெஞ்சுக்கு நேராக நீட்டிக் கொள்வாளா? அவளது செவ்விதழ்கள் "ஒன்று... இரண்டு..." என்று அர்ச்சனை பண்ணத்தான் செய்யுமா?

ஒன்றுதான் பாக்கி. "மூன்று...” என்று எண்ணி விட்டால் அவள் கதை முடிந்து விடும்!

தான் தான் அகம்பாவம் பிடிப்பவர்களின் இறுதிக் குரலே அதுதானே! அதிலும் ஆணவம் - அகங்காரம் பிடித்த பெண்களின் முடிவு இதுதான் என்று வரலாறு காட்டுகிறதே! அதிலும் அந்தக் காலத்து கிளியோபாட்ராவில் இருந்து, இந்தக் காலத்து மர்லின் மன்றோ வரை

அத்தனை ஆணவக்காரிகளும் கடைசியில் இப்படித்தானே செத்தார்கள்!

"மூ...”

உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின.

விரல்கள் துப்பாக்கியின் விசையை அழுத்தத் தயாராக...

இன்னும் கண் இமைக்கும் நேரங்கூட இல்லை!

"டுமீல்!?"

ஒரு குண்டு வெடித்தால் போதும்!

தனக்கு நிகரில்லை என்று தலைநிமிர்ந்து வாழ்ந்த ரேவதி, தரையிலே விழுந்து கிடப்பாள், வேர் அறுந்த மரம் போல!

அவளை மலர்ந்த ரோஜாவாக மணம் வீசச் செய்து கொண்டு இருந்த சிவந்த இரத்தம், சீறிப்பாய்ந்து வெளியில் சிதறும்!

பஞ்சு மெத்தையில் படுத்துப் பழக்கப்பட்டவன் செஞ்சாந்து போன்ற இரத்தத்தில் மிதந்து கொண்டு இருப்பாள்.

நாள் முழுக்க துடிதுடிப்பாகச் சுழன்று கொண்டு இருந்த அவள் துடிப்பு அடங்கி, துள்ளல் ஒடுங்கி, துடுக்கு ஒய்ந்து, துரும்பு போல விழுந்து கிடப்பாள்.

ஆனால்,

கண் இனமக்கும் அந்தச் சின்னஞ்சிறு நேரத்துக்குள்-

கதவுகள் தட்டப்பட்ட ஒசை வானத்தைப் பிளந்தது!

"யாராம்?" ஓங்காரக் குரலெடுத்து ஓலமிட்டாள், ரேவதி.

மறு இமைப்பில் நிலைப்படியிலே எதிரொலித்த அந்தக் குரலைக் கேட்டதும், ஆ நீங்களா’ என்று மெய்மறந்து மகிழ்ச்சிப் பெருக்கில் கூவினாள்.

துப்பாக்கியை எறிந்தபடி ஓடினாள் வேகமாகவே ஓடினாள்.

கதவுகள் திறக்கின்றன.

ரேவதியின் கண்களும் திறக்கின்றன.

ஞானசீலன் நின்றார்!

"வாங்க... வாங்க!”

"ஊம்... ம்...ம்!”

அசலான மாப்பிள்ளையாகவே நின்றார், ஞானசீலன்,

"உள்ளே வாங்க...”

"உம்... உ.ம்..."

"நல்லா இருக்கீங்களா?”

"உங்கள் புண்ணியத்தாலே நான் நல்லா இருக்கேன், நீங்களும் நல்லா இருக்கீங்க தானே?’’

"ஒ! உங்கள் புண்ணியத்திலே, நானும் நல்லாவே இருக்கேன்!"

"கருமாரிதான் உங்களை அனுப்பி வைச்சாளா?’’

"எங்கள் குழலி என்னை அனுப்பி வைச்சுது!’’

"அப்படிங்களா?’’

"அப்படித்தாங்க!”

"உட்காருங்க...”

"உட்காரலாமா?’’

“ஏன் இப்படிக் கேட்கிறீங்க?”

"கேட்டது தப்புங்களா, அம்மணி?"

"தப்பு இல்லீங்களா, அய்யா?”

"மன்னிக்க வேண்டும். தவறு என் பேரிலே இருந்தா, என்னை மன்னிச்சிடுங்க!"

மனிதர் மாறி விட்டாரே...

"பரவாயில்லை. நீங்கள் உட்காரு நீங்க!”

"மிகவும் நன்றி.”

ஞானசீலன் உண்மையின் பிரதிநிதியாகவும் ஒழுக் கத்தின் சாட்சியாகவும் கம்பீரமான மிடுக்கோடு சோபாவில் அமர்ந்தான். 'சபாரி' உடுப்புகள் அவனது அழகுக்கு அழகு சேர்த்தன. புதிதாக முளைத்திருந்த இளைய மீசை புதுக் கருக்கோடு பொலிந்தது.

மீனாட்சிக் குங்குமத்திலே, ஆச்சரியக்குறி வியந்தது.

"நீங்கள் வந்த விஷயத்தை இன்னும் சொல்லவே இல்லீங்களே.” ரேவதி ஒரக்கண்ணால் பேசினாள்.

“அதை இதுவரையிலும் நீங்கள் கேட்கவே இல்லீங்களே?"

ரேவதிக்கு இன்னம்கூட நெஞ்சழுத்தம் குறைந்த தாகத் தோன்றக் காணோமே!...

“சரி; சொல்லுங்க."

"நீங்கள் பத்திரிகையில் கொடுத்திருந்த 'மணமகன் தேவை' விளம்பரம் பார்த்தேன். அது தொடர்பாகத் தான் உங்களை நேரில் காண இப்ப நான் இங்கே வந்திருக்கேன், செல்வி ரேவதி.”

"ஒ! அப்படியா!" ரேவதிக்கு சின்ன ஏமாற்றம். சிறிது நேரத்தில் எவ்வளவு பெரிதாக ஏமாந்து விட்டோம் என்று முகத்தைச் சுழித்தாள்.

"ஆமாம் அம்மணி.’’

"அந்த விளம்பரம் உங்களையும் விட்டு வைக்கலே போலிருக்கு!’’

"என்னை விட்டுத்தான் வச்சிருந்துச்சு; ஆனால் கடைசி நேரத்திலே, என் நண்பர் சிதம்பரம் வழியா எனக்குத் தெரிஞ்சு போச்சு!"

"தெரிஞ்சவரையிலும் நல்லதாய் போச்சு. இல் லாட்டி, இந்தப் பிறவியிலே நான் உங்களைத் திரும்பவும் சந்திச்சிருக்க முடியாதுதான்!”

ரேவதியின் புனிதமான அந்தரங்க மனதில் ஒரு மனோலயமான பிரார்த்தனை சரணாகதி அடைந்திட, அவள் மெய்மறக்க நேர்கிறது. 'கருமாரி, இவரை நீயே தான் என்னிடம் அனுப்பி வச்சிருக்கிறே. நீ பேசாட்டியும், உன் நல்ல புத்தியின் புண்ணியத்தினாலே, நான் இத்தனை காலமும் அனுபவிச்ச சலனங்களையும், சஞ்சலங்களையும் மானம் மரியாதையோட கடந்து, நானும் நல்ல புத்தியைப் பெற்றுக்கிட்டேன். என் முன்னாள் கணவரான ஞானசீலனை நீ எனக்கு நிரந்தரக் கணவராக ஆக்கி வைப்பதன் மூலம்தான், எனக்கு உண்டான ஒரு நல்ல பாதையை உன்னாலே திறந்து விடவும் முடியும். அப்பத்தான், எந்த நிமிடத்திலே நான் செத்தாலும் என் உயிர் நிம்மதியாகப் பிரியவும் வழி பிறக்கும்!'

சுயதரிசனம் முடிந்து விழிப்படைகிறாள், அவள், எதிரே உயிரும் உடம்புமாகக் காட்சியளிப்பது ஞானசீலன் அல்லவா? ஒ!... ராஜராகம் அவளுக்கு, ரேவதிக்கு டாக்டர் ரேவதிக்குப் பிடிபட்டு விட்டதோ!...