அ. குமாரசாமிப் புலவர் பாடல்கள்
சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய சில கவிகள்:
ஆறுமுக நாவலர் மீது கூறிய சரமகவிகள்
தொகு- பின்முடுகு வெண்பா
- என் கவிதை என் கடிதம் யார்க்கும் இனிதென்று
- நன்குறவே பாராட்டும் நாவலனார் - எங்கேயோ
- கங்கைமுடிச் சங்கரன்பொற் கஞ்சமலர்ச் செஞ்சரண்விட்டு
- இங்குவர வுங்கருத்தோ என்.
- வினாவுத்தர வெண்பா
- ஐந்தின்பின் ஆவதென்ன? ஆனனத்தின் பேரென்ன?
- முந்து நடுவின் மொழியென்ன? - இந்திரற்கு
- மாறுகொண்டோன் பேரென்ன? வாக்கின் மிகவல்ல
- ஆறுமுக நாவலனே யாம்.
- கலித்துறை
- கல்விக் களஞ்சியம் கற்றவர்க் கேறு கருணைவள்ளல்
- சொல்வித்து வப்பிர சாரகன் பூதி துலங்குமெய்யன்
- நல்லைப் பதியினன் ஆறு முகப்பெரு நாவலனுத்
- தில்லைப் பதியினன் நடராசன் சேவடி சேர்ந்தனனே.
சீட்டுக் கவி
தொகுபுலவர் தனக்கு கம்பராமயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சீட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சீட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் கம்பராமயணக் கருப்பொருளுரை என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார். அச்சீட்டுக் கவி வருமாறு:
- செம்பதும மலரோடை தங்குயாழ்ப் பாணமாந்
- தேசத்தோர் பாக மாகி
- திகழ்கின்ற சுன்னாக நகரமயி லணியில்
- தென்கலை பயின்று வாழ்வோன்
- பம்புகவி பாடுறுங் குமாரசுவா மிப்பெயர்கொள்
- பண்டிதன் வரையு மோலை
- பாவலர்கள் நாவலர்கள் காவலர்கள் கொண்டாடு
- பாரதிபன் பிரபு திலகன்
- தும்பிபொது வேயழைத் திடவருள் புரிந்திடுந்
- தோன்றலுக் கன்பு மிக்கோன்
- துரைச்சாமி மூப்பனேன் றுரைபெறு நிருபன்கோன்
- தூயமகிழ் வோடு காண்க
- கம்பரா மாயணக் கருட் பொருட் பிரதியைக்
- காண்பதோர் வாஞ்சை யுள்ளேன்
- காவலா ஒருபிரதி ஆவலோ டுதவியெக்
- காலமும் வாழி நீயே.
மாவைப் பதிகம்
தொகுபுலவர் பாடிய மாவைப் பதிகத்தில் இருந்து ஒரு பாடல்:
- சீர்மேவு நவரத்ன கோலமிகு சிங்கார
- செம்பொனின் மகுட முடியும்
- திவ்விய குணங்களோ ராறுமாய் விறுற்ற
- செய்யமுக மூவி ரண்டும்
- ஏர்மேவு நீபமலர் மாலையொடு செச்சைமலர்
- இனமாலை புரளு மார்பும்
- எழின்மேவு மகமேரு கிரிபோல் நிலவுற்ற
- இணையிலாப் புயமீ ராறும்
- கார்மேவு கடலிலேழு மலரிபோல் மயிலில்வரு
- கனகமய மேனி யோடு
- கவின்மேவும் ஆண்டலைக் கொடியுவேற் படையுமாய்க்
- காட்சிதந் தருள்புரி குவாய்
- பார்மேவு பல்லுயிர்க் குயிராகி நிறைகின்ற
- பாரமேசுர வடிவமே!
- பாவலா! தேவர்தங் காவலா! மாவையம்
- பதியில்வதி கந்த வேளே!
கீரிமலை நகுலேசர் ஊஞ்சல்
தொகுகீரிமலை நகுலேசர் ஊஞ்சலில் (1896) இருந்து காப்புச் செய்யுள்:
- சீர்கொண்ட யாழ்பாண தேசந் தன்னிற்
- சிறப்பமருங் கீரிமலைச் சாரல் வாய்த்து
- நீர்கூண்டல் சாகரசங் கமமே யான
- நின்மலப்புண் ணியதீர்த்தக் கரையின் மேவும்
- பேர்கொண்ட நகுலேசப் பெருமான் மீது
- பெட்புறுசெந் தமிழ்கவிதை ஊஞ்சல் பாடக்
- கார்கொண்ட யானைமுகம் உடைய முன்னேன்
- கமலமலர் அடியிணைகள் காப்ப தாமே.
அத்தியடி விநாயகர் அட்டகம்
தொகுவழக்கமாக அட்டகங்களில் எட்டு ஒரேவகைச் செய்யுள்கள் காணப்படும். ஆனால் புலவரின் அத்தியடி விநாயகர் அட்டகத்தில் (1897) பத்துச் செய்யுள்களும் வெண்பா, விருத்தப்பா, கட்டளைக் கலித்துறை, அகவற்பா முதலிய பலவகை செய்யுள்களில் உள்ளன. இதில் ஒரு செய்யுள் கீழே தரப்பட்டுள்ளது:
- சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும்
- பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி
- அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப்
- படிமேல் வணங்கு பவர்க்கு
வதுளைக் கதிரேசன் சிந்து
தொகுஇலங்கை, மலையகம், வதுளையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு வதுளைக் கதிரேசன் சிந்து புலவரால் 1884 இல் இயற்றப்பட்டதாகும். இதிலிருந்து ஒரு பாடல் பின்வருமாறு.
- ஆறெழுத் துடநீரும் அக்கமணி யுந்தா
- அந்தநமன் எந்தன்முன் அணுகா வர ந்தா
- மாறுபுரி தீவினைகள் மாறுவர ந்தா
- வதுளையம் பதியினிதம் வாழ்குமர வேளே.
மாவையிரட்டை மணிமாலை
தொகுமாவிட்டபுர முருகன் மீது புலவர் 1896 இல் பாடிய மாவையிரட்டை மணிமாலையில் இருந்து ஒரு பாடல்:
- நல்குரவு நீங்கும் நலிபிணியுந் தானீங்கும்
- வெல்பகையும் நீங்கி விளிந்தோடும்- சொல்வளங்கொள்
- தண்டலைசேர் மாவைத் தலத்தமருஞ் சண்முகனைக்
- கண்டுதுதி செய்தக் கடை.
நகுலேசர் தசகம்
தொகுதசகம் என்பது முதலில் வெண்பாவினாலும் பின் பலவின பாக்களினாலும் பாடப்படும் பத்து பாக்களைக் கொண்ட செய்யுள் நூலாகும். புலவரவர்கள் கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் மீது 1896 இல் பாடிய நகுலேசர் தசகத்தில், முதலிலும் முடிவிலும் வெண்பாவினாலும், இடையில் கட்டளைக் கலித்துறை, கட்டளை கலிப்பா மற்றும் விருத்தம் முதலிய செய்யுள்களை பயன்படுத்தி இயற்றியுள்ளார். இதிலிருந்து பா ஒன்று:
- அன்று நகுலமுனி ஆதியர்க்குச் செய்கருணை
- இன்று மறப்பினருள் எங்ஙனோ - வந்ரோலின்
- வாசா வுமைநேசா வாரிமலை கீரிமலை
- வாசா நகுலேசா மற்று.
மிலேச்சமதவிகற்பகக் கும்மி
தொகுசுன்னாகம் சங்கர பண்டிதர் இயற்றிய மிலேச்சமதவிகற்பம் என்னும் நூலை மிலேச்சமதவிகற்பகக் கும்மி என்று கும்மி வடிவில் புலவரால் நூற்று இருபத்து இரண்டு செய்யுள்களில் 1888 ஆம் ஆண்டில் பாடப்பட்டது. இதில் யூதமதம், யேசுமதம், இசுலாம் மதம் ஆகிய மதங்களின் வரலாறைக் கூறி, அக்காலத்தில் இம்மதத்தவரின் பிறமத நிந்தனைகளையும் அடிப்படைவாத போக்கையும் கண்டித்து கூறுவதாக இக்கும்மி பாடபட்டுள்ளது. புலவரின் பாட்டனாராகிய முத்துகுமாரகவிராயர் இயற்றிய ஞானக் கும்மியும் ஒத்த கருத்தை வலியுறுத்தும் நூலாகும். மிலேச்சமதவிகற்பகக் கும்மி பாடல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது:
- ஆக்கிய பின்னர் மதங்க ளிருநூறு
- அவைகளு வொவ்வொன்று மற்றை மதத்தினர்
- மோக்சம் பெறார்நர கேழுஞ் சென்று
- முழங்குத் தனித்தனி ஞானப் பெண்ணே
மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்
தொகுஏகவிருத்த பாரத இராமாயண பாகவதம் (1896)
தொகுவடமொழியில் உள்ள பாரதம், இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களைப் புலவர், ஏகவிருத்த பாரத இராமாயண பாகவதம் என்ற பெயரில் மூன்று விருத்தப் பாக்களில் சுருக்கிப் பாடியுள்ளார். இதன் காப்புச் செய்யுள் வருமாறு:
- பாரதஞ்சீ ராமகதை பாகவதக் காதை
- ஆரியத் தொல்கவியோ ரன்றுரைத்தார் - நேரவல்
- மூன்று மொழிபெயர்த்து மூன்று கவி யாலுரைக்க
- யான் துதிப்பே னைங்கரனை யின்று.
வினோத சித்திர வினாவுத் தரக்கவிகள்
தொகுசில வடமொழிச் சுலோகங்களை தமிழில் மொழிபெயர்த்து, வெண்பா, கட்டளை கலிப்பா, விருத்தம் முதலிய செய்யுள் வகைகளில் புலவரவர்கள் முப்பத்தொரு பாக்களை வினோத சித்திர வினாவுத் தரக்கவிகள் என்ற பெயரின் கீழ் பாடியுள்ளார். இதில் வரும் செய்யுள் ஒன்று:
- நாரணனார் மார்புரையும் நாயகியார் வன்மைதனக் (கு)
- கோரெழுத்துப் பேரென்ன வோது தெய்வப்- பேரென்னை
- புள்ளுணர்த்து நாமமென்ன பொல்லாத ராவணனாற்
- கொள்ளப்பட்ட டாளெவளோ கூறு
உத்தரம் =சீதாதேவி
மேகதூதக் காரிகை (1896)
தொகுபோசமன்னனின் அவையில் வடமொழிப் புலவனாய் திகழ்ந்த காளிதாசன் இயற்றிய மேகசந்தேசம் (தமிழில் முகில் விடு தூது) என்னும் நூலின் நூற்றிருபதைந்து சுலோகங்களையும், தமிழில் புலவரவர்கள் நூற்றி நாற்பத்தைந்து கட்டளைக் கலித்துறைப்பாக்களாக மேகதூதகாரிகை என்ற பெயரில் பாடியுள்ளார். இதில் போசமன்னனதும் காளிதாசரினதும் வரலாற்றை கூறும் பொருட்டு போசப்பிரபந்தம் என்னும் நூலில் இருந்தும் சில சுலோகங்களை புலவர் மொழிபெயர்த்து செய்யுள்களாக மேகதூதகாரிகையின் முகவுரையில் சேர்த்துள்ளார். இவற்றுள் சில பின்வருமாறு.
மேகதூதகாரிகையின் காப்புச் செய்யுள் கீழ் வருமாறு.
- திருமேவு போசன் சபையிற் கவிஞர் சிகாமணியாய்
- வருமேக வீரன் கவிகாளி தாசன் வகுத்துரைத்த
- ஒருமேக தூதந் தமிழ்க்கவி யாக்க வுதவியெலாந்
- தருமேக தந்த விநாயகர் பாத சரோருகமே.
பாடல்கள் சில:
- பக்குவமாய் முற்றிப் பழுத்துளநா வற்கனிதான்
- அக்கொம்பர் மந்தி அசைத்திடப் - புக்கு
- மெழுகுக் குறைபோல விழுந் தொனிதான்
- குளுகுக் குளுகுக்குளு.
- சந்தாப வெந்தழல் உற்றார்க் கினிமை தருமுகிலே
- மந்தார மேவும் பொழிலள கேசன் மனக்கொதிப்பால்
- வந்தே னுரைக்கு முரையைப் பிரிந்த மனையவட்குச்
- சந்தாகிச் சென்றங் குரைத்துத் துயரந் தணிக்குவையே.
சாணக்கிய நீதிவெண்பா (1914)
தொகுவடநாட்டில் பேரரசனாக விளங்கிய சந்திரகுப்த மௌரியர் பேரரசு நிறுவ, வழிகாட்டியாகவும் முதல் அமைச்சராகவும் விளங்கிய சாணக்கியர், வடமொழியில் இயற்றிய சாணக்கிய சதகம் என்னும் அறநூலை தமிழில் நூறு வெண்பாக்களில் மொழிபெயர்த்து சாணக்கிய நீதிவெண்பா என்ற பெயரில் புலவர் வெளியிட்டார். அதில் இருந்து ஒரு செய்யுள்:
- தாங்குருவங் கெட்டார்க்குத் தக்ககல்வி யேயழகு
- மாங்குயிலுக் கின்னிசையே மற்றழகு - தீங்ககன்று
- ஞானமுனி வோர்க்கழகு நற்பொறையே நல்லுறுதி
- யானகற்பே பெண்டிர்க் கழகு
இராமோதந்தம் (1921)
தொகுஇராமோதந்தம் என்ற வடமொழி நூலை புலவரவர்கள் அதோ பெயரில் தமிழில் நூற்றியிருபதெட்டு விருத்தப்பாக்களில் மொழிபெயர்த்துள்ளார். இதுவே புலவரின் கடைசி நூலாகும். இதனை மதுரைத் தமிழ் சங்கம் 1922ஆம் ஆண்டு வெளியிட்டது. இச்செய்யுள் நூலில் முடிவில் வரும் வாழிவிருத்தத்தில் புலவரவர்கள் தமது குறிக்கோளை வாழி செந்தமிழ் இலக்கிய விலக்கண வரம்பு என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஒரு செய்யுள்:
- வெய்ய ராவணற் கொன்றிட விரைவினில் யாமும்
- வையங் காத்திடுந் தசரதன் மைந்தனாய் வருவேம்
- பொய்ய னாமவன் றன்னொடும் போர்புரி காலைத்
- துய்ய வானவ ரெமக்கருந் துனைசெயும் பொருட்டு