அ. மருதகாசி-பாடல்கள்/கவிஞர் வாழ கந்தன் அருள்க

550841அ. மருதகாசி-பாடல்கள் — கவிஞர் வாழ கந்தன் அருள்ககவிஞர் அ. மருதகாசி

கவிஞர் வாழ கந்தன் அருள்க!

மதிப்பிற்குரிய
    மருத காசியார்
மூதறிவாளர்;
    முத்தமிழ்க் கவிஞர்!
நதிப்புன லொழுக்காய்
    நற்றமிழ் நடையில்
நல்ல பனுவல்கள்
    நாளும் யாத்தவர்!

எளிய சந்தமும்
    எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல்
    இவரது பாடல்:
எளியேன் போன்றோர்
    இசைக்குப் பாடல்
எழுதுதற் கிவரே
    இலக்கண மானார்!

பணமும் புகழும்
    படைத்த நாட்களில்
பொறையைப் பேணும்
    நிறைகுட மானவர்;
குணத்தில் சிறிதும்
    கோதிலாச் செம்மல்;
குழந்தை மனத்தைக்
    கொண்ட இப் பெரியார்!

படத்துறை இவரால்
           பயன்கள் பெற்றது;
பழந்தமிழ் இவரால்
     புதுத்தமி ழானது!
அடக்கம் இவரது
     அணிகலம் என்பேன்;
அகந்தை யாதென
     அறியாப் பெம்மான்;

ஆக்கிய பாடல்கள்
     அச்சில் வருவதால்
அடுத்த தலைமுறைக்(கு)
     அவைகள் உதவும்;
பாக்களின் மேன்மை
     படித்தால் புரியும்;
பாமரன் என்னால்
    புகலத் தரமோ?
 
செய்யநற் றமிழின்
    கீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம்
    செப்பிய மேதை!
வையம் பயனுற
    வாழ்ந்திட என்றும்
வேலன் திருவடி
    வணங்குகின்றேனே!


வாலி

2-2-86