ஆகாயமும் பூமியுமாய்/அம்மாவைத் தேடி…
அம்மாவைத் தேடி…
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், மூன்று நோயாளிகள் மரண அவஸ்தை தாங்காமல் முனங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தார்கள். டாக்டர்களுக்கு அவர்களின் முடிவின் முடிவு தெரியும். அவர்களுக்கும், தங்கள் அந்திம காலத்தின் அடையாளம் புரியும்.
ஸ்பெஷல் வார்டில் படுத்துக் கிடந்த மாஜி டெப்டி கலெக்டர் மயில்நாதன், தான் ஏழு வயதுச் சிறுவனாக இருக்கும்போது ஏற்பட்ட அவஸ்தை, இப்போது மீண்டும் வந்திருப்பதை உணர்ந்தார். அப்போது அவர் அம்மா அவரருகே கண்ணிர் சிந்த அமர்ந்து, உடம்பைப் பிடித்துவிட, அவர் அந்தப் பையன், அவள் மடியிலே தலைவைத்து அரற்றினான். காலமான அந்த அன்னையிடம் இப்போது போகவேண்டும் என்று அவர் துடித்தார்.
நான்கைந்து கட்டில்களில் ஒரு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்த மிராசுதார் தங்கச் சாமிக்கும் அதே எண்ணம். "நான் சொன்னேனே. மழையிலே நனையாதன்னு. கேட்டியா” என்று சொல்லி, தன்னைத் தோளில் வைத்துக் கொண்டு வைத்தியரிடம் ஒடிய அந்த அம்மாவிடம் போக வேண்டும் என்று, முற்றிப்போன ஆஸ்துமாவில் வற்றிப்போன தங்கச்சாமி தவித்தார்.
இன்னொரு வார்டில் கீழே ஒரு பாயில் புரண்டு கொண்டிருந்தாள் சுந்தரி, அவளுக்குப் பால் வியாபாரம். என்ன நோய் என்று டாக்டர்கள் கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்கு ஆயத்தங்கள் செய்யும்போதே, ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்கள். மரண நெருக்கத்தை அவளும் புரிந்து கொண்டாள். கட்டிய புருஷன் எட்டிப் பார்க்கவில்லை. பெற்ற பிள்ளைகள், ஒப்புக்கு வந்தார்கள். அவள் அம்மா இருந்தால். அந்த அம்மா, அவள் ஆறு வயதுச் சிறுமியாக இருந்தபோது, எப்படியெல்லாம் முத்தம் கொடுப்பாள்! அந்த அம்மாவை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று அவளும் துடித்தாள்.
துடித்தவர்களின் இதயத் துடிப்பு அடங்கியது. ஆன்மாக்கள் பிரிந்தன. சுக்கில உடம்போடு, அந்த மூவரும் மேலே போனார்கள். இவர்களோடு, பூமியின் பல பகுதிகளில் ருந்து பல ஆன்மாக்கள் சேர்ந்து கொண்டன. அத்தனை ஆன்மாக்களும் அளவிட முடியாத பிரபஞ்சத்தை அளவெடுப்பதுபோல், பறந்தன. பூமிக்கு மேலே குறிப்பிட்ட வட்டத்திற்கு வந்ததும் பெரும்பாலான ஆன்மாக்கள் அங்கேயே முடங்கின. அதற்கு மேல் அவற்றால் செல்ல முடியவில்லை. ஆனால் தவ வலிமையும், புண்ணிய பலமும் கொண்ட ஆன்மாக்களும், பரம்பொருளை அனுதினமும் மறவாமல் வாழ்ந்தவர்களின் ஆன்மாக்களும், ஒழுக்கத்தை விழுப்பமாகக் கொண்டு, நெறியோடு வாழ்ந்து நேர்மையுடன் சிறந்த நாத்திகவாதிகளின் ஆன்மாக்களும், வைணவர்களால் பூரீ வைகுண்டம் என்றும், சைவர்களால் சிவலோகம், சமன பெளத்தர்களால் நிர்வாணம் என்றும் கூறப்படும் பிரபஞ்ச மையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.
பூமிக்கு மேலே ஒரு கட்டத்தில் தேங்கிப் போன ஆன்மாக்களில், ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் காலமான மூன்று ஆன்மாக்களும் இருந்தன. இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் இடைப்பட்ட அல்லது அவை இரண்டாகக் கலந்த பகுதி அது. அத்தனை ஆன்மாக்களும் ஆறேழு வயதுச் சிறுவர்களாக, சிறுமிகளாக அவதாரம் எடுத்திருந்தன. அத்தனையும் தத்தம் அன்னையரைத் தேடிக் கொண்டு, அம்மா. அம்மா என்று அழுதன. அவற்றிற்கு தூரத்தே, தத்தம் அன்னையினர் தெரிவதுபோல் ஒரு பிரமை அன்னையை அடையாளம் காண அத்தனை பேரும் முண்டியடித்தனர்; முடியவில்லை.
மாஜி டெப்டி கலெக்டர் மயில்நாதன், ஏழு வயதுப் பாலகனாய் உருமாறி, "என் அம்மா.. என் அம்மா. நீ ஒரு வில்லேஜ் உமன். நான் பார்க்கிற ஃபிகரில் நீ மிஸ்ஸா கிறியே... எங்கேயம்மா இருக்கிறே?" என்று புலம்பினார்.
மாஜி மிராசுதார் தங்கச்சாமி, "அம்மா, உன்னைக் காணுமே. நான் வந்துட்டேன், ஒடி வா. வந்து என்னை இடுப்பில் எடும்மா.. எடும்மா" என்று அரற்றினார்.
சுந்தரி, இப்போது ஆறு வயதுச் சிறுமியாக வடிவெடுத்து, தூரத்தே தெரிந்த உருவைப் பார்க்க முண்டியடித்தாள்.
அவள் முன்னால் நின்ற ஏழு வயதுச் சிறுமியின் தலை, அவளைப் பார்க்க முடியாமல் தடுத்தது. சுந்தரி, அம்மாவைப் பார்க்க முடியாத கோபத்தை அவள்மீது காட்டினாள். அவளின் தலையைத் தட்டிக் கொண்டே, "ஒத்தும்மே. என் அம்மாவப் பார்க்கணும். அய்ய" என்றாள்.
தலையில் தட்டப்பட்ட ஏழு வயதுச் சிறுமி, வார்த்தையால் பதிலடி கொடுத்தாள்.
"என்னாமே. என்னை பத்தி இன்னா நினைச்சிக்கீற. நான் வந்து எம்பட்டு காலமாறது. இன்னும் என்னோட ஆத்தாவ பார்க்கல. நீ தம்மாத்துண்டு நேரத்தில வந்துட்டு பார்த்துடலாமுன்னு நினைக்கிற. படா கில்லாடிதான்."
சுந்தரிக்கு, அம்மாவைப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அழுகையைக் கொடுத்தது. கேவிக் கேவி அழுதாள். அவளுக்கு 'டாவு' காட்டிய சிறுமிக்குக் கருணை பிறந்தது.
"அழாதேமே. உன் ஆத்தா பேரு என்ன. ஊரு என்ன, சொல்லு கண்ணு?" என்றாள்.
'என்னோட அம்மா பேரு பூவம்மா... கொத்தார ச்சாவடில மீன் வித்துக்கினு இருந்தா... பொட்டுன்னு பூட்டா..” என்றாள் சுந்தரி.
ஏழு வயதுச் சிறுமிக்கு வியப்புத் தாங்க முடியவில்லை.
'அடி. நான்தாண்டி ஒன் ஆத்தா. நானும் என் ஆத்தாவை தேடிக்கினு இருக்கேன்."
சுந்தரிக்கு, தன் அம்மாவை ஏழு வயதில் பார்த்தது, இனிப்பைத் தரவில்லை. அவள், பொய் சொல்வதாக - தன்னைத் தேற்றுவதற்கு அவள் கண்ட உபாயமாகக் கருதி, முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் அம்மா - ஏழு வயதுச் சிறுமி பூவம்மா, அவளைப் பற்றிச் சிந்திக்காமல், தன் அம்மாவையே தேடும் வேலையில் ஈடுபட்டாள்.
அத்தனை ஆன்மாக்களும், அன்னையை நினைத்ததால் குழந்தைகளாயின. ஆனால், குழந்தைகளாக நிற்கும் தத்தம் அன்னையரை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.
அத்தனை ஆன்மாக்களும், "அம்மா. அம்மா...' என்று அழுதன, “எங்கேம்மா இருக்கிறே, எங்கேம்மா" என்று புலம்பின; "வாம்மா. வாம்மா." என்று வாடின; “தாயே.. தாயே..." என்று கதறின.
திடீரென்று. அத்தனை ஆன்மாக்களையும் மேல் நோக்கி புவிஈர்ப்பு விசை போன்ற பிரபஞ்ச ஈர்ப்பு இழுத்துக் கொண்டே சென்றது. சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ என்று புரியாமல், ஆன்மாக்கள் புலம்பின. ஆனாலும் அந்த திசையற்ற பயணத்தில் சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ இருக்கமுடியாது என்று அனுமானித்தவை போல் சில பத்தாம் பசலியற்ற ஆன்மாக்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.
திடீரென்று, அவர்கள் முன்பு ஒரு ஜோதி. குடில்லாத நெருப்புப் பிரவாகம், குளிருக்கு இதமான ஜோதி. அடிமுடி தெரியாத ஒளிவடிவம். காலமற்ற காலஜோதி. அதில், கோடி கோடி அண்டங்களும், அந்த அண்டங்களில் கோடாதி கோடி சூரியன்களும், பேரண்டங்களும் மின்னின. அண்டங்கள் ஆடின. பேரண்டங்கள் குலுங்கின. அதன் பிரபஞ்சமார்பில் கருணை சமுத்திரங்கள் சுரந்தன. சூனியமும், சூட்சியமும் கொண்டது போன்ற பேரொளி. அண்டங்களை உருவாக்கியும், அவை அத்தனையையும் ஒரு அனுப்பிண்டத்தில் அடைத்து வைத்தும், பிரபஞ்ச நடனமாகவும் மெளடீகமாகவும், தோற்றம் காட்டும் ஜோதி. அருட்பெருஞ்ஜோதி, ஆதியோ ஆந்தமோ அற்ற ஜோதி.
இதன் அருமை புரியாது, அத்தனை ஆன்மாக்களும் "அம்மா வேண்டும். என் அம்மா வேண்டும்..” என்று தனித்தனியாய் கூக்குரலிட்டன. அவ்வளவுதான்.
அந்த ஒளிப்பிரவாகம், டெப்டி கலெக்டரும் ஏழு வயதுப் பையனுமான மாஜி மயில்நாதனுக்கு, கிராமத்துப் பெண்ணாக அவர் அம்மாவைப்போல் காட்சியளித்தது. மாஜி மிராசுதார் தங்கச்சாமிக்கு, தடயம் போட்ட தாயாகக் காட்டியது. பால்கார சுந்தரிக்கு, மீன்காரப் பூவம்மாவானது. அத்தனை ஆன்மாக்களுக்கும் அவரவர் தாய்போல் காட்சியளித்தது.
ஆன்மாக்கள் முண்டியடித்து, தத்தம் அன்னையரை நெருங்கின. ஒவ்வோர் ஆன்மாவும், தன் அன்னை ஒருத்திதான், அங்கே இருப்பதுபோல் நினைத்து நெருங்க நெருங்க, அந்த அகிலாண்ட ஜோதி, ஆணோ, பெண்ணோ, அலியேர், ஒளியோ வெளியோ, அதுவோ, இதுவோ என்பவைகளுக்கெல்லாம் மூலமாகவும், அப்பாற்பட்டும் தோற்றம் காட்டும் அந்த ஜோதி, ஆன்மாக்களுடைய அன்னையர் உருவங்களாகக் காட்சியளித்துக் கொண்டே இருந்தது. அந்த ஆன்மாக்கள் கண்கொள்ளும் வரை காட்சி காட்டியது. பின்னர் - ஒவ்வொரு ஆன்மாவிற்கும், ஒவ்வொரு தாயாக காட்சி அளித்த அதே தாய், மீண்டும் பேரண்டப் பேரொளி பிரளய சக்தியானது. ஆன்மாக்களுக்கு, அநேகமாக புரிந்திருக்கலாம்,
ஆனந்த விகடன், 7-3-1976