ஆகாயமும் பூமியுமாய்/பக்த கேடிகள்
பக்த கேடிகள்
கிராமத்து முண்டாக இளைஞர் போல் தோன்றிய-ஒளி வடிவமான ஐயப்பன், தான் அமர்ந்திருந்த புலியை அர்த்தத்துடன் பார்த்தான். அது சிலிர்த்தபோது கோபத்தோடு, முறைத்தான். அவ்வளவுதான் புலிபாய்ச்சல் என்பார்களே- அதை ஐயப்பனுக்கு உணர்த்த ஆசை பட்டதுபோல், அந்த தெய்வப்புலி, தனது ஐயனைச் சுமந்தபடி, சபரிமலையைத் தாண்டிக் குதித்து, காடுமலை தாண்டி, பள்ளத்தாக்குகளுக்கு மேலாப் பாய்ந்து, சமவெளிக்கு மேலாய் சஞ்சரித்து ஏவுகணை போல எகிறிக் கொண்டிருந்தது.
இ ந் த ஐ ய ப் ப ன் , எ ந் த ச் ச ம ய த் தி ல் புறப்பட்டாரோ-அந்தச் சமயத்தில், வள்ளிமலையில் குளிர் காய்ந்த முருகன், ஆறுமுகங்களை ஒருமுகமாக்கி மலை உச்சிக்கு ஓடினான். அந்த ஒட்டத்தைப் புரிந்து கொண்ட மயில், இறக்கைகளை ஒய்யாரமாக விரித்து ஹெலிகாப்டர் மாதிரி பாறையில் இறங்கி, அவனை ஒயிலாகப் பார்த்தது. உடனே பாம்பு, மயிலின் பாதத்திற்குள் நுழைந்தது. அச்சப்படக்குரல் எழுப்பும் தெய்வச் சேவல் கால்கள் கொடியாக, அதன் எஞ்சிய மேனி சின்னமாக, முருகன் பக்கம் ஒட்டிக் கொண்டது. வேல் விளங்க வினை தீர்த்தான், மயில்மேல் ஆசனம் கொள்ளப் போனபோது, வள்ளி, வழிமறிப்பதுபோல் குறுக்காய் நின்றாள். 'மூத்தாளை மனதுக்குள் திட்டியபடியே, சுடச் சுட கேட்டாள்.
‘பிரபு இதுக்குள்ளே உங்களுக்கு திருப்பரங்குன்றம் ஞாபகம் வந்துட்டுதா? பூலோகத்தில் இளையவள் மீதுதான் கணவனுக்குப் பிரியம். ஆனால் இங்கேயோ...!
முருகனுக்கு, லேசாய் கோபம் வந்தது. மனைவிகள் இல்லாத ஐயப்பன் மீது பொறாமைப் பட்ட படியே, மயிலில் ஏறினான். வள்ளி வையாக் குறையாய் பேசினாள்.
'எனக்குத் தெரியுமே. திருப்பரங்குன்றம் ஞாபகம் வந்துட்டால் போதுமே. நீங்கள் என்னைப் பார்த்து. மோகன புன்னகை இருக்கட்டும்....ஒரு சாதாரணப் புன்னகைக்கூட வராதே. ஒங்களைச் சொல்லி குற்றமில்லை குற்றவாளி நான்தான். என் பெயர் விளங்கும் இந்த மலையில். உங்களை அடைவதற்காக... கால்மாட்டில் முளைத்தமரம் தலைமாட்டில் படர. தலைமாட்டில் முளைத்த மரம் கால்மாட்டில் சாய. பல்லெல்லாம் பாசியாக தவமிருந்ததேன் பாருங்கள். அது தவறுதான். தவறேதான்."
முருகன், தன் விருப்பத்திற்கு மாறாக, வலிந்து ஒரு புன்னகையை வரவழைத்தபடியே பதிலளித்தான்.
தேவீ உன் மாமியார் மாதிரியே கோபக்காரியாய் இருக்கிறாயே. கோபத்தை விட்டுவிடு. மோனத்தில் நில். எந்தத் தவ வலிமையால் என்னை அடைந்தாயோ. அந்தத் தவத்தைப் பயன்படுத்தி தொலை நோக்காய் பார். நான் எங்கே போகிறேன் என்பது ஒனக்குச் சொல்லாமலே புரியும்.
வள்ளி, மனக் கண்ணை மூடி, ஞானக் கண்ணை திறந்தாள். அச்சத்தை முகத்தில் படர விட்டபடியே வேண்டாம். பிரபு. ஐயப்பன் முரடன். குடும்பப் பொறுப்பில்லாதவன். கேளுங்கள் பிரபு. கேளுங்கள் பிரபு...' என்று கணவனைப் பார்த்து கையெடுத்துக் கும் பிட்டபடியே, கெஞ்சினாள். மயிலைப் பார்த்து பறக்காதே என்று சமிக்ஞை கூட செய்தாள். ஆனால் முருகனோ, மீண்டும் ஒரு முறுவலிப்பை முகத்திற்கு கொடுத்தபடியே, அவளைப் பார்த்தான். பிறகு முகம் சுழித்தான். உடம்பை, ஒரு குலுக்கல் குலுக்கியபடியே உன் பேச்சைக் கேட்க. எனக்கு நேரமில்லை. இதோ ஐயப்பன் காட்பாடியைக் தாண்டிவிட்டான் என்று கத்தினான். வேல் முனையால் பாறையில் கோபமாய் குத்தினான். அதைப் புரிந்து கொண்ட புத்திசாலி மயில், வானுள் பாய்ந்தது. சேவல் கொக்கரித்தது. பாம்பு படமெடுத்தது. வள்ளி எந்த மூத்தாளை எதிரியாகப் பாவித்தாளோ, அந்த மூத்தாளிடம் ஆலோசனை கேட்பதற்காக திருப்பரங்குன்றம் பறந்தாள்.
சிறிது நேரத்தில், ஐயப்பனும், முருகனும், சென்னை நகரில் கடற்கரையோர காமராசர் சாலையில் கடல் நோக்கி நின்ற அந்த கட்டிடத்தைச் சுற்றி வலம் வந்தார்கள். இருவர் முகங்களிலும் ஏளனப் புன்னகை. இருவர் கண்களிலும் அக்கினித்தாண்டவம்,
ஒருவரை ஒருவர் ஆழப் பார்த்தபடியே, இருவரும், தத்தம் வாகனசகிதமாய், அந்தக் கட்டிடத்தின் மேல்பரப்பில் தரையிறங்கினார்கள். ஒருவரை ஒருவர் நோக்கி, ஒப்புக்குச் சிரித்தபோது, இருவரின் வாகனங்களும், அமைச்சர்கள் அல்லது அதிகாரியின் பி ஏக்கள் சாமானியர்களைப் பார்ப்பார்களே அந்த கர்வப் பார்வையை பறிமாறிக் கொண்டன. ஐயப்பனின் புலி முருகனின் மயிலைப் பார்ப்பதை விட்டுவிட்டு, யதேச்சையாய் கண்களை விலக்கியபோது, அவற்றுள் சேவல் தென்பட்டது. சைவ' ஐயப்பனிடம் மாட்டிக் கொண்ட அந்தப் புலி, இப்போது சேவலை ருசியோடு பார்த்தது. அந்த அசைவப் பார்வையை அறிந்துகொண்ட மயில், காடுகளில், துஷ்ட மிருகங்களைக் கண்டால், மரமேறி நின்று, மான்களுக்கு அபாயக் குரல் கொடுத்து எச்சரிக்கும் தனது பறவை சாதிக்கு ஏற்றாற்போல், கூக் குரலிட்டது. உடனே சேவல், ஒரே துள்ளாய்த் துள்ளி வேலின் மேல் ஏறி நின்றது. எதிர்பாராத சேவல் செயலால் வேல் முன்னும் பின்னும் ஆடியது. இதைப் பார்த்த புலிக்கு, வேடனின் ஆயுதம் நினைவுக்கு வந்தது. தெய்வப் புலியாக இருந்தாலும் இப்போது தெருப்புலிபோல் அதாவது சர்க்கஸ் புலிபோல் சைவப் பார்வை காட்டியது.
இந்த வில்லங்க விலங்குகளின் செயல்களை, ஒரக்கண்ணால் பார்த்தபடியே, முருகப்பனும், ஐயப்பனும், காண்டிராக்டரால் கட்டப்பட்ட அந்த மேல்தளத்தின் ஒட்டைகள் வழியாக உள்ளே பார்த்தார்கள். பார்க்கப் பார்க்க, அந்த தெய்வங்களின் கண்களில் பனித்துளிகள். கேட்கக் கேட்க, கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியம். கீழே நடப்தை, குனிந்து பார்த்தார்கள். குப்புறப்படுத்தும் பார்த்தார்கள். மகிழ்ச்சி தாங்க முடியாமல் மார்தட்டிக் கொண்டார்கள்.
கீழே தோன்றிய-
அந்த அரை செவ்வக அறைக்குள், சரிபாதியை மூன்று அறைகள் விழுங்கியிருந்தன. பிளைவுட்டால் தடுக்கப்பட்டு. கண்ணாடியால் அலங்காரம் செய்யப்பட்ட தனியறைகள். வடக்கு அறையின் இடக்குக் கதவில்-அதாவது கதவை நிலை கொள்ளவைக்கும் இரும்பு வளையம் இல்லாத கதவில், பெருமாள் என்ற பெயர்ப்பலகை. அவனை மாதிரியே பத்தாண்டுகாலமாக, அதே இடத்தில் ஆணி வைத்து அடிக்கப்பட்டிருந்தது. தெற்கு அறையில் பழனிச்சாமி என்ற பிளாஸ்டிக் எழுத்துக்கள். நடுவறையில் நாயகம் என்ற காகித ஒட்டல், இந்த சின்னக் கெஜட்டட் அதிகாரிகளான அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் எழுந்தருளும் அறைகளுக்குத் தெற்கே, விசாலமான பெரிய அறை. புஷ்டோரும், புல்டோரும் கொண்ட பூர்ண அறை, அந்த மூன்று அறைகளும், இன்றைய நாகரிகப் பெண்கள் போல் வெளிப்படையாய், தோன்றிய போது, சீனியர் கிளாஸ் ஒன் ஆபிசருக்கான இந்த அறையில் மட்டும், கண்ணாடிச் சுவர்களுக்கு முக்காடு-அதான் ஸ்கிரின் போடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த அறையின் கதவில் பெயர்ப் பலகை இல்லை. வேட்டி அல்லது சேலை மடிப்பில் முடிச்சுபோடும் இடுப்புபோல், அந்தப் பலகை பிய்த்தெறியப்பட்டிருந்த தடயங்கள் தெரிந்தன. இந்த அறைகளுக்கு வெளியே- இவை கொடுத்த 'டானா வளை விற்குள் கிளார்க்குகள். கிளார்க்கிகள். சரி வர்ணணை போதும். இங்கே நடக்கும் வம்புக்கு வருவோம்.
வடக்கு அறையில், பெருமாள் பெரும் போடு போட்டுக் கொண்டிருந்தார். நாற்பத்தைந்து வயதுக்காரார். பம்பைத்தலை. பளிச்சான சிவப்பர். இடுப்புக்குக் கீழே கறுப்பு வேட்டி. மோவாய்க்கு கீழே குறுந்தாடி. கழுத்துக்கு மேலே உத்திராட்ச மாலைகள். சந்தன நெற்றி. குங்கும புருவம்... ஐயப்பன் போட்டோவிற்கு முன்னால் ஊதுவத்தியைக் கொளுத்தினார். பிறகு ஒரு கற்பூரத்தை, சின்னஞ்சிறு குத்து விளக்குத் தீபத்தில் தொட்டார். சூடு பொறுக்க முடியாமல், அதைக் கீழே போட்டார். பின் தாம்பாளத்தட்டில் இன்னொரு கற்பூரத்தை வைத்து, வத்திப் பெட்டியின் உதவியுடன் நெருப்பிட்டார். கற்பூர ஜோதியை வட்ட வட்டமாக ஆட்டியபடியே.
"ஜெய ஜெய சுதனே ஐயப்பா ஹரஹர சுதனே ஐயப்பா-என்னை
நாடு கடத்தாதே ஐயப்பா-என்
நம்பிக்கைக் கெடுக்காதே ஐயப்பா"
என்று கத்தியபோது, இவரது கோஷ்டியைச் சேர்ந்தவர்களும், பழனிச்சாமிக்குக் கீழே வேலை பார்ப்பவர்களுமான ஊழியர்கள். அந்த அறைக்குள் ஒன்று திரண்டு வந்து, பெருமாளை, ஐயப்பனாக அனுமானித்தது போல், ஐயப்பன் போட்டோவைப் பார்க்காமல், அசல் பெருமானை நோக்கி 'சாமியே சரணம் ஐயப்பா கோரஸ் கொடுத்தார்கள்.
இதே இந்தச் சமயத்தில், தெற்கு அறையில் பழனிச்சாமி, முருகனின் பெயிண்டிங் போட்டோவிற்கு முன்னால், சப்பனம் போட்டபடியே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முன் முழக்கமிட, இவரது கோஷ்டியைச் சேர்ந்த பெருமாளின் சபார்டினேட்டுகள், பின் முழக்கமிட்டார்கள்.
இரண்டு அறைகளிலும் பக்திக் குரல்கள், காதுகளைப் பாதிக்கும் குரல்களாக மாறின. பெருமாளைப் போல் பெரிய குரல் வாய்ந்த பழனிச்சாமி மணியடித்தார். இவரும் நாற்பத்தைந்து வயதாகிய கறுப்புக் கம்பீரம். ஐயப்பன் ஒசை பெரிதாவதைக் காணச் சகிக்காத பழனிச்சாமி, மணியடித்த கை வலித்ததால் அலுவலக ஊழியர் சுப்பிரமணியத்திடம் அதை நீட்டினார். அவரும் 'மனி கிடைத்ததுபோல் மணியடித்தார். உடனே ஐயப்பன் அறைக்குள் உறுமிமேளம். பழனிச்சாமி, சக்தி முழுவதைம் வாயுள் திரட்டி நான் நம்புவது...' என்று சொல்லி மேற்கொண்டு முடிக்கும் முன்பே, அவன் ஆதரவாளர்கள் 'அரோகரா என்றார்கள். இதை அப சகுனமாக கருதி, பழனிச்சாமி ஐயப்பனைத் திட்டப் போனார். பெருமாள், முருகனைத் திட்டப் போனார். இருவரும் வெளியே வந்து, ஒருவரை ஒருவர் முறைத்தபடியே, ஆளில்லாத அந்த பெரிய அறையை பொதுப்படையாகவும் சும்மாக் கிடந்த சுழல் நாற்காலியை குறிப்பாகவும் பார்த்தார்கள்.
இதே சமயத்தில்-
கட்டிடத்தின் மேல்பரப்பில் ஒட்டைகள் வழியாய் ஒட்டுக் கேட்ட முருகனும், ஐயப்பனும், தத்தம் பக்தர்களைப் பெருமை பிடிபடாமல் பார்த்தார்கள். முருகன், பக்தன் பழனிச்சாமி கேட்டதை கொடுப்பதற்காக, வலதுகரத்தைத் தூக்கினால், உடனே, ஐயப்பன் தன் பக்தன் பெருமாளின் பெரிய எண்ணம் நிறைவேறுவதற்காக, தனது வலதுக் கையையும் தூக்கினான். உடனே, முருகன், இடக்கரத்தை தூக்கி, ஐயப்பன் வலக்கரம் வழங்கிய வரத்தைப் பறித்தான். ஐயப்பனும். அப்படியே செய்தான். பேலன்ஸ் ஆப் பவர். வெற்றி தோல்வி இல்லாத கெடுபிடிப்போர். இறுதியில் முருகன் முறுவலித்துச் சொன்னான்.
'ஐயப்பா சண்டையிட்டாலும் நாம் சகோதரர் அன்றோ? பேசாமல் அதோ அந்த ரிசப்ஷன் அறைக்குப் போய் சாவகாசமாய் பேசலாமே?
ஐயப்பனிடம் நயம்பட பதிலளித்தான்.
'நாம் சகோதரர்கள்தான். ஆனால் நம் வாகனங்கள் அப்படி அல்லவே. பூலோகத்தில் கார், லாரி டிரைவர்கள், அனைவரும் ஒரே பாட்டாளி வர்க்கம்தான். ஆனால் ரோட்டில் எதிரும் புதிருமாய் வரும்போது, நாயும் பூனையுமாய் மாறுவதை பார்த்திருக்கிறேன். இங்கேயோ. வாகன ஒட்டிகளான நாம் பொறுத்தாலும். நம் வாகனங்கள் பொறுக்காது. இங்கே ஒரு மகாயுத்தமே! நடக்கும் ஆகையால், ரிசப்ஷன் அறைக்குப் போகாமல் இங்கிருந்து பேசுவதே உசிதம்
‘புரியுது ஐயப்பா. கீழே ரிசப்ஷன் அறையில் உட்கார்ந்தால், அந்த வழியாக கோவிலுக்குப் போகப் போகும் என் பக்தன் பழனிச்சாமியால் ஆகர்ஷிக்கப் படுவோம் என்று பயப்படுகிறாய்'
'குழந்தையாய் இருக்கும் போதே புலிப்பால் கேட்டவனுக்கு.... புலியையை காட்டிய நானா பயப்படுவேன்? அதோடு உன் பக்தனிடம் ஆகர்ஷிக்கப்பட. என்ன இருக்கிறது? தோற்றத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது மாதிரியான இவன். போன வருடம். ஒரு பொய் பில்..... அதுதான் போகாத ஊருக்குள் போனதாய் எல்.டி.சி. போட்டவன். ஒவ்வொரு பைலுக்கும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி. அந்த லஞ்சத்தில் நூறு ரூபாய் ஒன்றை, உன் உண்டியில் லஞ்சமாய் போடுபவன். ஆபிஸ் காரையே. டாக்ஸியாய் கொள்ளை அடித்தவன்."
'நிறுத்து ஐயப்பா நிறுத்து. ஒன் பக்தன் மட்டும் என்னவாம்? இந்த வருடம். ஒரு அப்பாவிப் பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகச் சொல்வி. ஐயாயிரம் ரூபாய் வாங்கியவன். அவளையும் கெடுத்து. கிணற்றில் விழச் செய்தவன். டைரெக்டர் இவனை இழிவு செய்ததற்காக. கொதித்தெழுந்து, இவனுக்காக வாதாடிய கருணாந்தத்தின் மீதே டில்லியில் துஷ்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்ட கயவனாயிற்றே இவன். நண்பர்களின் உதவிகளையே, அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களாக்கும் அற்பனாயிற்றே இந்த பெருமாள்'
'ஐயப்பா இப்போது பிரச்சினை. நம் பக்தர்களில் எவன் அதிக அயோக்கியன் என்பதல்ல. அது தெரிந்த கதை. ஊரறிந்த விவகாரம். இது என்னுடைய பிரிஸ்டிஜ் பிரச்சனை.'
'எனக்கு மட்டும் பிரிஸ்டிஜ் இல்லையோ...'
முருகன் பதிலளித்தான். 'கறுப்புக் சட்டைக் காரர்களால்.... என் சுயமரியாதைக்குச் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
'அதற்கு வீரமணியைக் கேள். நான் என்ன செய்வேன்'
"நான் வீரமணியின் ஆட்களைச் சொல்லவில்லை. உன் கறுப்புச் சட்டைக்காரர்களைச் சொல்கிறேன். என்னுடைய கோவில் எக்ஸிகியூடிவ் ஆபீஸரே. என் சந்நிதியில். உனக்காக மும்முடி கட்டுகிறான். என் பக்தனே ஐயப்பா என்று சொன்னபடியே. கறுப்பு உடையோடு என்னை அர்ச்சிக்கிறான். ஐயப்பன் கொடுப்பதை. முருகனால் கொடுக்க முடியாது என்ற ஒரு எண்ணம் என் பக்தர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இது அப்பட்டமான டிபெக்ஷன். பாரதத்தில் பொலிடிக்கல் டிபெக்ஷனைத் தடுக்க சட்டம் வந்திருப்பது போல் இந்த தேவலோகத்திலும் ஒரு சட்டம் வரவேண்டும்."
'இங்கேதான் தப்பு செய்கிறாய் முருகா. சட்டசபை அல்லது பார்லிமெண்டில் ஒரு கட்சியில் மூன்றில் ஒரு பங்கு, பிரித்தால் அது டிபெக்ஷ ன் அல்ல பிளவு. கட்சிப்பிளவு. இங்கேயும் நாம் காண்பது டிபெக்ஷன் அல்ல. பிளவு. பக்திப் பிளவு. சவாலிடுகிறேன். சட்டம் கொண்டு வரலாமா...'
'ஐயப்பா. என் பொறுமையை பலவீனமாய் கருதாதே. நீ. திமுக அதிமுக... தெலுங்கு தேசம் மாதிரி ரீஜினல் பலசாலியாய் இருக்கலாம். நானோ தேசிய அந்தஸ்து பெற்றவன். வங்கத்தில் கார்த்திக். சமஸ்கிருதத்தில் கப்ரமண்யா...'
'நீ ஒரு சரண் சிங் என்று எனக்குத் தெரியும். சொல்வதை நன்றாகக் கேள். நான் வம்புக்கு போகமாட்டேன். வந்த போரை விடமாட்டேன்.
'இந்த முருகன் போருக்குப் போக வேண்டாம். போர் முகத்தைக் காட்டினாலே போதும். நீ பொடியாவ. ய்.
பொடியன் போல் பேசாதே. விஷ்ணுவின் புத்திசாலித் தனமும். சிவனின் போர்க்குணமும் கொண்டவன் நான்.
'என் பக்தன் கிருபானந்த வாரியார் பேச்சைக் கேட்டிருக்காயோ...'
'என்னைப் போற்றும் கேரள வாரியார்கள் மந்திரங்களைக் கேட்கவே எனக்கு நேரமில்லை. கிருபானந்த வாரியாரைக் கேட்க ஏது நேரம்.
அப்படியானால் இன்றே கேள். வாரியார் காலாட்சேபத்தை நன்றாய் கேள். முருகன் ஒருவனே ஆண்பிள்ளை. சிவன் என்ற ஆணின் நெற்றிக் கண்களில் தோன்றிய அவன் ஒருவனே ஆண்பிள்ளை. நாம் எல்லாம் பெண்பிள்ளைகள் என்று அவன் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பகர்வதைக் கேள். நாமெல்லாம் என்பதில் நீயும் அடங்குவாய். நான் ஒருத்தனே ஆண்பிள்ளை.'
பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்தில் மெள்ளப் பேசு முருகா. கேட்டால் புதுமைப் புரட்சிப் பெண்கள் உன்னையும் என்னையும் விடமாட்டார்கள். ஏற்கனவே மானுடன் விட்ட ஏவுகணைகளாலும் செயற்கைக் கோள்களாலும் நாம் பறக்க முடியாமல் அல்லாடி வந்திருக்கிறோம்.'
அதனால்தான் விட்டுக்கொடு. இல்லையானால். நம் இருவருக்கும் மதிப்புக் குறைவு என்கிறேன்.
"என் பக்தனை என்னால் கைவிட முடியாது முருகா. என் வரம் உன்னாலும். உன்வரம் என்னாலும் பறி போய்விட்டது. ஆகையால் என் பக்தனுக்கு. அந்த வேலை கிடைக்க ஒரு மானுட வழியை பின்பற்றியிருக்கிறேன்."
‘என்னவாம்.?
'என் பக்தன் டைரக்டர் ஆவதற்கான பைல் மினிஸ்டர். செக்கரட்டரி. வரைக்கும் போகவேண்டும் அல்லவா? இந்த இருவர் மனதிலும். பெருமாளுக்கே பெரிய பதவி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டேன்.ஹா. ஹா. ஹா...'
'ஆபீஸ் விவகாரம் புரியாத ஐயப்பா. நீ அமைச்சர் மனதில் புகுந்தாய். நானோ, அவரைவிட பலசாலியான அவனது நேர்முக உதவியாளர் மனதில் புகுந்துள்ளேன். நீ ஐ.ஏ.எல். செக்ரட்டரி மனதில் புகுந்துள்ளாய். நானோ அண்டர் செகரட்டாரி. செக்ஷன் ஆபீஸர் அஸிஸ்டெண்ட் மனதுகளில் புகுந்துள்ளேன். பாரதத்தை ஆள்பவர்கள் அமைச்சர்களல்ல. அஸிஸ்டெண்டுகளும். நேர்முக உதவியாளர்களுமே. புரியுமா உனக்கு: டைரக்டர் ஆவப்போது என் பக்தன் பழனிச்சாமியே.
முருகனுக்கும், ஐயப்பனுக்கும் வாயாடல் முடிந்து கையாடல் தோன்றப் போனது. ஆறுமுகம், சேவலின் கொக்கரிப்பில் வேலைத் துக்கினான். மயில் போர்விமானம் போல் பறக்கப்போனது. உடனே, ஐயப்பன், புலியின் உறுமல் பின்னணியில் சக்கிராயுதத்தை எடுத்தான் உடனே-
கீழே பழனிச்சாமியும், பெருமாளும் ஒருவரை ஒருவர் பாய்ந்து பிடித்தார்கள். அலுவலகர்கள் பிரிந்து, கோஷ்டி பிரிந்து போர் முழக்கம் செய்தார்கள். ஏதோ ஒரு மாஸ் ஹிஸ்டீரியா, எல்லோரையும் ஆக்கிரமித்தது.
நாரதமுனி, தேவலோகத்தில் இருந்து அலறிப் புடைத்து, அந்த தெய்வக்குமாரன்களின் முன்னால் தோன்றினார். அவசரத்தில் வீணையையோ அல்லது தம்புராவையோ எடுக்க மறந்து வந்தார். உச்சி முடியில் பூக் கட்டவும் மறந்து போனார். யாரைக் கும்பிடுவது என்று யோசித்தார். சீனியாரிட்டி பிரச்சினை வரும் என்று பயந்து போனார். எப்படியோ இருவருக்கும் பொதுப்படையாக ஜாக்கிரதையாக ஒரு கும்பிடு போடலாமே என்று யோசித்தார். அப்புறம் கும்பிடு போடலாமே உபதேசியானார்.
'பிரபுக்களே! நீங்கள் இருவரும் போரிட்டால் தேவலோகம் தாங்குமா? பூமி பிழைக்குமா?
'யார் பிழைத்தால் எனக்கென்ன? முருகா என்று மூன்று நேரமும் என்னைக் கூப்பிடும் பழனிச்சாமி டைரக்டர் ஆகாதவரை..?
'நாரதா! நீயே. சொல். என் பக்தன் பெருமாள், பிள்ளைக் குட்டிக்காரன். அவனுக்கு பிரமோஷன் வரப்போகுது... அதற்காக சென்ைைய விட்டு நகர முடியாது.
'நாரதா! நான் சொல்வதையும் நீ கேள்... என் பக்தனுக்கும் வரப்போகுது பதவி வுயர்வு. இவனும் சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்டவன்.ஆகையால் இவனே டைரக்டர்...!
'பிரபுக்களே! உங்கள் பக்தர்கள் சென்னையை விட்டு நகரக்கூடாது. அவ்வளவுதானே."
"ஆமாம்.ஆமாமாம்.'
'அப்படியானால் ஒரு அடிஷனல் டைரக்டர் போஸ்டை உருவாக்கிவிடலாம். இதனால். இரண்டு பேருமே. சென்னையை விட்டு நகர வேண்டியதில்லை.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், இப்போது காலி யாக இருக்கும் டைரக்டர் போஸ்ட் பழனிச்சாமிக்கும். அடிஷனல் போஸ்ட் ஐயப்ப பக்தனுக்கு பெருமாளுக்கும் கிடைக்கவேண்டும். அடிஷனல் போஸ்ட் என்பது உதவாக்கரை பதவி என்று அர்த்தம்
'நாரதா என் பக்தன் பெருமாள் தான் டைரக்டராக வேண்டும் என்பதைவிட. பழனிச்சாமிக்கு அந்த பதவி கிடைத்து. அவன் சென்னையில் இருக்கலாகாது என்பதே அவன் ஆசை. அதை என்னால நிராசையாக்க முடியாது.'
நாரதா என் பக்தனும். அவன் பக்தனைப் போலவே நினைக்கிறான். எனக்கு இரண்டு- கடமை கொடுத்திருக்கிறான். ஒன்று அவன் சென்னையில். இந்த டைரக்டர் வேலையில் அமரவேண்டும். இன்னொன்று பெருமாள் எந்தச் சாக்கிலும் சென்னையில் இருக்கக்கூடாது. இந்த இரண்டு லட்சியங்களும் அவனுக்கு இரண்டு கண்கள். அவற்றை நான் பறிக்க முடியாது.
நடமாடும் கலாட்டாவான நாரதர், குழம்பிப் போனார். மேல்தள ஓட்டை வழியாக கீழே பார்த்தார். பின்னர் துள்ளிக் குதித்தபடியே பேசினார்.
'பிரபுக்களே! பெருமாள் அறையையும். பழனிச்சாமி அறையையும் விட்டுவிட்டு, நடுவறையைப் பாருங்கள். இவர்கள் வயதை... ஒத்திருந்தாலும். முடிக்கு டை அடிக்காமலும், முகத்திற்கு ரோஸ் பவுடர் போடாமலும் தோன்றும் நாயத்தை பாருங்கள்! உங்கள் பக்தர்கள் இதோ அடிக்காத குறையாய் வாதாடுகிறார்கள். இவர்களைப் பார்க்க வந்த பொதுமக்கள். எப்படி சலிக்கிறார்கள் பாருங்கள்! ஆனால் இந்த நாயகம். தன்னிடம் வருபவர்களிடம், எப்படி இனிமையாய் பேசுகிறான்! பைல்களை தேடி எடுத்து எப்படி குறிப்பெடுக்கிறான்! சம்பந்தப்பட்ட ஊழியரை வரவழைத்து ஆணையிடுகிறான். அதோ தள்ளாடும் கிழவிக்கு எப்படி உதவுகிறான் பாருங்கள்!
நாரதர் இரு குமாரன்களையும் பார்த்து, அவர்களது மெளனச் சம்மதத்தால் உற்சாகப்பட்டு மேலும் தொடர்ந்தார்.
'உங்கள் பக்தர்கள் எவ்வளவு பெரிய போர்ஜரி பேர்வழிகள் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் நாயகம் என்பவனோ கை சுத்தமானவன். ஆகையால் உங்களைக் கும்பிட முடியவில்லை. நேர்மையானவன் இதயத்தில். ஆகையால் உங்களை அங்கே பூஜிக்கவில்லை. மனிதனையும் மரம் செடி கொடிகளையும் நிஜமென்று நம்புகிறான். இறக்கும்வரை. சேவையே, பக்தி எனக் கருதுகிறான்..... இதனால் பக்தியை சேவையாய் நினைக்கவில்லை."
ஆனாலும் அவன் நாத்திகன் ஆயிற்றே:
இப்போது முருகனும், ஐயப்பனும் ஒன்றுபட்டு நாரதர் கருத்தை ஆட்சேபித்தார்கள். ஆட்சேபத்திற்குரியவர் அன்போடு பதிலளித்தார்.
'இருக்கட்டுமே. மக்களிடம் ஈடுபாடு காட்டுகிறானே. அது பூஜையை விட பெரிய பூஜை அல்லவா? அதோ அந்தக் கிழ வீ... அவனை எப்படி கையெடுத்துக் கும்பிடுகிறாள் பாருங்கள் கும்பிடத் தகுதியாக அவன் இருப்பதால்.... அவன் உங்களைக் கும்பிடவில்லை. கண்ணுக்குத் தெரியாத உங்களை. சொந்த லாபத்திற்காக கும்பிடும் உங்கள் பக்தர்களைவிட அவன் மேலானவன் அல்லவா?
நீ சொல்வது ஒரு வகையில் சரிதான். ஆனால் என் பக்தன். பழனிக்கு மூன்றாண்டுகளுக்கு . நாக்கில் வேல் குத்தி வருவதாக நேர்த்திக் கடன் செய்திருக்கிறானே.
'என் பக்தனும். சாகும்வரை. சபரிமலைச.கு வருவதாய் வாக்களித்திருக்கானே.”
டைரக்டர் பதவி கிடைக்கவில்லையானால். எந்த நாக்கில் வேல் குத்துகிறேன் என்று சொன்னானோ பழனிச்சாமி அவன் தங்களை நாக்கில் நரம்பில்லாமல் திட்டுவான். எந்த சபரிமலைக்கு வருவதாக வாக்களித்திருக்கிறானோ பெருமாள் அவனுக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லையென்றால் ஐயப்பா! நீ பொய்யப்பா! என்று நீங்கள் செய்த பழைய அருட்பாலிப்புகளை மறந்து திட்டுவான். அதோடு இந்த இரண்டு ஆசாமிகளும் உங்களுக்கு வாக்களித்ததுபோல் நடப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? போனவருடம். சி.பி.ஐ. வழக்கில் சிக்கிய பழனிச்சாமி. வழக்கில் விடுபட்டால் தங்களை செந்துளில் வந்து சந்திப்பதாய் சொன்னான். வந்தானா? இதேபோல் இந்த பெருமாள் - போன பிரமோஷனுக்கு சபரிமலை வருவதாக சபதம் செய்தான். வந்தானா?
போதும் நாரதா, ரிஷிமூலம். நதி மூலம். பக்த மூலம் பார்க்கக்கூடாது.'
'நான் எதற்குச் சொல்கிறேன் என்றால், பிரபுக்களே! உங்கள் பக்தர்களில் ஒருவனுக்கு டைரக்டர் வேலை கிடைத்தால் உங்களை நினைக்கவே மாட்டான். மேலி டத்து ஆட்களுக்கு குட்டி புட்டி கொடுத்ததால் கிடைத்ததாக நினைப்பான். உங்களால் காட்டும் கற்பூர ஜோதியில் நம்பிக்கை வைப்பதாய் கூறும் இந்த பழனிச்சாமியும். பெருமாளும் இப்போதும் மேலிடத்திற்கு பாட்டில்களை கொடுத்து வருகிறார்கள். உங்களைப் போற்றும் பாடல்களைவிட அவர்களுக்கு பாட்டில்களில் நம்பிக்கை அதிகம்.'
கிடைத்தால் மறத்தல். கிடைக்காவிட்டால் திட்டல்' என்ற ஒரே சுயநலக்காரர்கள். இவர்களைவிட, உங்களை நினைக்காத திட்டாத நாயகம் எவ்வளவோ மேல் இல்லையா? தெய்வங்களாகிய உங்களிடம் போலித்தனம் செய்யும் இவர்களைவிட, மனிதர்களிடம் மெய்யான ஈடுபாடு காட்டும் இந்த நாயகம். நல்லவன் அல்லவா? ஊழியர்களை ஒன்று திரட்டி. சங்கம் அமைத்து, அவர்கள் கஷ்ட நஷ்டத்தில் பங்கு கொள்ளும் இந்த விநாயகத்திற்கு எவ்வளவோ வேலைகள். பொறுப்புக்கள். உங்களைப் பற்றிச் சிந்திக்க அவனுக்கு நேரம் இல்லை. இதை தாங்கள் தப்பாக கருதலாகாது. ஆனால் பக்த கேடிகளோ .
'நாரதா பக்தர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்கிறாய். எங்களுக்கு கெட்ட கோபம் வரும்.
'நான் அப்படிச் சொல்லவில்லை பிரபுக்களே! பக்தர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று சொல்லவில்லை. அயோக்கியர்களும் பக்தர்களாய் இருக்கிறார்கள் என்றே கூற வந்தேன், ஆகையால்.
போதும் நாரதா. நீ எங்களையும் நாத்திகர்களாக்கும் முன்னால், அல்லது மானுடன் நாயகத்தின் பக்தர்களாய் மாற்றும் முன்னால் நாங்கள் நட்போடு போகிறோம்.
அப்படியானால். இந்த டைரக்டர் பதவி.
"நீயே தீர்மானம் செய்துகொள்ளலாம். சரிதானே ஐயப்பா!'
"சரியேதான். அதோடு இந்த புராண உபன்யாசர்களும் இப்படிப்பட்ட பேர்வழிகளும்தான் நம்மைப் பற்றி கட்டுக்கதைகளை மக்களிடையே பரப்பி நம்மை கொச்சைப் படுத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள, இந்த மானுடன் நாயகத்தைப் போல் நமக்கென்று ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம்:
முருகன், சரி என்பதுபோல் தலையாட்டுகிறான். எ திரும் புதிருமாக நின்ற ஐயப்பனும், முருகனும் ஒன்றுபட்டுச் செல்கிறார்கள்.
எப்போதுமே கலகங்களை ஏற்படுத்தும் நாரதர் இப்போது ஒரு கலகத்தைத் தீர்த்து வைத்த திருப்தியோடு சிரிக்கிறார்.
தாமரை—செப்டம்பர், 1986.