ஆகாயமும் பூமியுமாய்/வாசிப்புக்கு முன்னே…

வாசிப்புக்கு முன்னே...

இது, எனது பதினேழாவது சிறுகதை தொகுப்பு மட்டுமல்ல... மற்ற தொகுப்புக்களிலிருந்து முழுமையாக மாறுபட்ட தொகுப்பு. என்னுள் இளம் வயதிலிருந்தே எழுந்த ஒரு ஆன்மிகத் தேடலை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. இந்தத் தொகுப்பு எனது வழக்கமான வாசகத் தோழர்களுக்கு சிறிது அதிர்ச்சியைக் கொடுக்குமோ என்றுகூட அஞ்சுகிறேன். காரணம், இதிலுள்ள கதைகள் அத்தனையிலும் என்னுள் இன்னொரு பக்கமான ஆன்மீக அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், நான் அடித்தள மக்களைப் பற்றி இனிமேல் எழுதப்போவதில்லை என்று பொருள் அல்ல. இந்தத் தேடல் முயற்சி அடித்தள மக்களைப் பற்றிய என் எழுத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

பிள்ளைப் பிராயம்

சிறுவயதிலிருந்தே, உங்களுக்கும் எழுந்திருப்பதைப் போல் எனக்கும் குழந்தைத்தனமான ஒரு ஆன்மீகத் தேடல் ஏற்பட்டது. எனது அய்யா வழித் தாத்தாவும், அம்மா வழித் தாத்தாவும் காளியம்மா சரமியாடிகள். இவர்கள், இப்போதைய "நைட்டி" மாதிரியான அங்கியை கழுத்து முதல் பாதம் வரை அணிந்து கொண்டும், கையில் வளையல்களை போட்டுக் கொண்டும், சிலரைப் பயமுறுத்தியும், பலரை பரவசப்படுத்தியும், மேளதாளங்களுக்கு ஏற்ப அல்லது வில்லுப்பாட்டாளியின் இசைக்கு ஏற்ப, தீப்பந்தங்களை பிடித்துக் கொண்டு ஆடுவதை பார்த்திருக்கிறேன். என் கரங்களில், இவர்களுக்கு காணிக்கையாக வந்த மிட்டாய்களையும், மொறுக்கு களையும், பயித்தம் பருப்பையும், காளிமார்க் சோடாவையும் என் கையில் திணித்ததும், மிட்டாய் வகையறாக்களை தின்றுவிட்டு அவர்கள் கொடுத்த பாதி சோடாவை குடித்ததும் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. ஆனாலும், இவர்கள் இருவரும் தலை வெட்டப்பட்ட “கிடாய்"யின் ரத்தத்தை தூக்கிக் குடித்தது என்னுள் ஒரு பயங்கரமான நினைவாகப் பதிந்துள்ளது. கோவில் கொடைகளுக்குப் பிறகு, நானும், இதரச் சிறுவர்களும், வாதமடக்கிக் கம்பை வளைத்து வில்லாக்கி, வில்லுப்பாட்டு  பாடியிருக்கிறோம். வில்லுப்பாட்டாளி வெற்றிக்குமார் அவர்கள் ராமபிரான் கதையையும், முத்துப்பட்டன் கதையையும் பாடும்போது சிலிர்த்து போயிருக்கிறேன். எங்கள் ஊருக்கு அருகேயுள்ள மலையனூரில் பாவைக் கூத்து நாடகம், மாதக் கணக்கில் நடந்ததை நான் தவறாது பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவை ராமாயணக் காட்சிகள். இன்னும் மனதில் பதிந்து நிற்பவை. வழியனுப்பு இந்த அனுபவங்களுக்குப் பிறகு, ஊர்க் கச்சேரியிலும், பெரிய விட்டுத் திண்ணைகளிலும், நல்லதங்காள் கதை, பஞ்சபாண்டவர் வனவாசம் போன்றவற்றை, ராகம் போட்டு பாடியிருக்கிறேன். என்னைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருக்கும். எல்லா கிராமங்களையும் போல, எங்கள் கிராமத்திலும் ஒரு பழக்கம். சில பெரியவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவர்களுக்கு உயிர் உடனடியாய் பிரியாது. அவரது சொக்காரர்கள் எனப்படும் பங்காளிகளுக்கோ, இவரது ஈமக்காரியத்தில் கலந்து கொள்ளாமல் வயல் வேலைக்குப் போக முடியாது. இந்த அன்றாடம் காய்ச்சிகளின் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவர, நோய்வாய்ப் பட்டிருக்கும் பெரியவரின் தலைமாட்டிலிருந்து, தர்மர் சொர்க்கத்திற்கு போன கதையை ராகம் போட்டு படிக்கவேண்டும். தயவுசெய்து நம்புங்கள். தர்மர் சொர்க்கத்திற்கு போய்விட்டார் என்ற உடனேயே இந்தப் பெரியவர்களின் மூச்சு அடங்கிப்போகும். நானும், பல பெரியவர்கள் தலைமாட்டில் உட்கார்ந்து இத்தகைய சொர்க்கப் பாடல்களை பாடி, பலரை வழியனுப்பி வைத்திருக்கிறேன். இந்த கோவில்களையும், பாடல்களையும் தாண்டி, எள்ளுப்பொடி, தோசையுடன் என் பாட்டியோடு குற்றாலம் போயிருக்கிறேன். அங்கே உள்ள குற்றால நாதரான சுயம்பு லிங்கத்தை ஒப்புக்கு கையெடுத்து கும்பிட்டதோடு சரி. அப்போது எனக்கு, என் குலதெய்வமான உதிரமாடனே இந்த கயம்பு லிங்கத்தை விடப் பெரியவன். கல்லூரிக் காலத்தில்... கல்லூரிப் படிப்பு கிராமத்துத் தேவதைகளையும், ஆறுகால பூஜைக்குரிய மேட்டுக்குடி தெய்வங்களையும் மறக்க வைத்தது. இன்னும் சொல்லப் போனால் ரத்தம் குடிக்கும் கிராமத்துத் தேவதைகளை, அறவே வெறுத்தேன். என்றாலும், கல்லூரியில் படிக்கும்போது ஒரு கட்டத்திலேயே தேங்கிப்போன சில சித்தர்களோடு, எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால், நம்மை மீறிய அதீத சக்திகள் பல்வேறு கூறுகளாக இருக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த அதீத சக்திகள்கூட எதிர்வரும் 21-ம் நூற்றாண்டில், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படலாம். இப்போதே, நமது உயிரணுவில் உள்ள 23 குரோமோசோம்களில் நான்கு கோடியே பத்து இலட்சத்திற்கும் அதிகமான கேரக்டர்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த குரோமோசோம்களை, அணுவை பிளப்பதுபோல், பிளக்க முடியும் என்று கருதப்படுகிறது. இந்த கேரக்டர்கள் எனப்படும் இயல்புகள் நமது முன்னோர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் பல்வேறு விதமான நடத்தைகள், உணர்வுகள், உளப்பாங்குகள் ஆகியவற்றின் பதிவுகளாகவும், இயற்கையின் வழங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சிப் பதிவுகளாகவும் இருக்கலாம். பிறப்பும் இறப்பும் பிறப்பு என்பது ஒரு மர்மம் இல்லை. இதேபோல் இறப்பும் ஒரு மர்மம் இல்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு மர்மம் உள்ளது. இதனால்தான், "ஒரு தாய், பால் குடிக்கும் தனது குழந்தையை ஒரு முலையிலிருந்து, இன்னொரு முலைக்கு மாற்றும் இண்டவெளியே மரணம்" என்றார் மகாகவி தாகூர். மரணத்திற்குப் பிறகு எதாவது நிகழுமா? அல்லது நிகழாதா? அப்படி நிகழ்ந்தால் அது எப்படி இருக்கும்? என்று நினைப்பதே ஒரு ஆன்மீகத் தேடல்தான். கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை என்பதால், ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படப்போகும் மரணத்திற்குப் பின்னான புதிரை கண்டறிய முயற்சிக்கின்றனர். சக்தியை மாற்ற முடியுமே, தவிர அழிக்க முடியாது என்பது விஞ்ஞான விதி. இது மனித உடலுக்கும், அதன் இயக்கத்திற்கும் பொருத்தமாகக்கூட இருக்கலாம். இந்தப் பின்னணியில் என்னுடைய கதைகளை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு எந்தக் கால கட்டத்தில் எழுதினேன் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகம் உண்மை. இங்குள்ள மக்கள் உண்மை. இவர்களின் தலைவிதியை சமூக அமைப்புதான் தீர்மானிக்கும்; தீர்மானிக்க வேண்டும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆகையால், இவை என் இயல்பான முற்போக்கு எழுத்திற்கு முரணனானது அல்ல என்று நம்புகிறேன். எனது ஆன்மீகத் தேடல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் போலித்தனமற்ற ஒரு முற்போக்கு முயற்சி என்றே கருதுகிறேன். பெரியவர் கே.எம். அவர்களின் பார்வையில்... இன்னும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. பத்து பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கூட்டம், என்னை செம்மலரில் வார்த்தெடுத்த பெரியவர் கே.எம். முத்தையா தலைமையில் நடைபெற்றது. நானும் பேச்சாளனாக அழைக்கப்பட்டேன். பேசுவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று, நெற்றியில் குங்குமத்துடன் வந்தேன். உடனே கேம்.எம். அவர்கள் சூதுவாது இல்லாமல், நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டார். நான் விளக்கினேன். அவர், உடனே "இது உங்கள் தனிநபர் உரிமை" என்றார் பெருந் தன்மையாக. இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், நான் நினைத்திருந்தால் முகம் கழுவி குங்குமத்தை அழித்துவிட்டு, கோயில் குளத்திற்குப் போகாத அந்த கூட்டத்திற்கு போயிருக்கலாம். அந்தப் போலித்தனம் எனக்கு அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. சிவபெருமான் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது. விஷ்ணு கருடனில் பறப்பது. முருகன்மயிலில் ஆடுவது. கன்னிமேரி மீது பரிசுத்த ஆவி படர்ந்தது போன்ற புராண நம்பிக்கைகளை நான் நம்பவில்லை. அதேசமயம் ஆலயங்களும், சர்ச்சுகளும், மசூதிகளும், குருதுவாராக்களும், தியானங்களும், யோகங்களும், ஒரு புதிர் கணக்கிற்கு விடையாக இருக்கலாம். "அல்ஜீப்ரா கணக்கில், ஒரு பொருளின் விலையை "எக்ஸ்" என்றும், அதோடு சேர்ந்து வாங்கப் பட்ட இன்னொரு பொருளின் விலையை "ஒய்" என்றும் வைத்துக் கொண்டு, அந்தப் பொருள்களின் தனித்தனி விலையை கண்டு பிடிப்பது போன்றது இந்த ஆலய வகையறாக்கள். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் ஒரு சாதாரண பெண்ணிற்கு தொலைக்காட்சியின் விஞ்ஞான சூட்சமம் தெரியாது. அதே சமயம் ரிமோட் கண்ட்ரோல் கருவியில், இந்த நம்பரை அழுத்தினால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் என்று தெரியும். அந்தத்தாய் எப்படி தாத்பரியங்கள் தடங்கல் ஆகாமல் காட் சிகளை பார்ப்பது போன்றதுதான், எனக்கு ஆன்மீகத் தேடலில் கிடைக்கும் இனிமையும், எளிமையும். இதை விளக்கித்தான் விட்டுக் கணக்கும் ஆகாயக் கணக்கும் என்ற சிறுகதையை எழுதினேன். நான் தேடுவது ஆன்மீகத் தேடலா அல்லது ஒரு விதமான மனோ மாயையா , எ ன்பது என க்கே இன்னும் பிடபடவில்லை . ஆகையால்தான் பனிப்போர் என்ற சிறுகதையை முதல் கதையாக பதிவ செய்திருக்கிறேன். க.பொ. அகத்தியலிங்கமும், திலீப்குமாரும். பெரும்பாலும் இந்தக் கதைகள் பல்வேறு காலக் கட்டங்களில் ஒரு மாறுதலுக்காக எழுதப்பட்டவை. இவற்றிற்கு அடிப்படை பெரும்பாலும் எனது ஆன்மீக அனுபவங்களே. சதங்கையில் வெளியான விட்டுக் கணக்கும் ஆகாயக் கணக்கும் என்ற சிறுகதையை படித்த சீரிய எழுத்தாளர் திலீப்குமார் அவர்கள், அந்த கதையை பாராட்டியதோடு, இதைப் போன்ற வித்தியாசமான கதைகளை ஒரு தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த பரிந்துரைப்பின் வெளிப்பாடே இந்த சிறுகதைத் தொகுப்பு. ஆன்மீகத் தளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்படலாம். ஏற்படாமலும் இருக்கலாம். இத்தகைய தனிப்பட்ட அனுபவங்களை, வாசகர்கள் மீது அப்படியே சுமத்துவது நியாயம் அல்ல. சிலசமயம் அனுபவங்கள் மூடநம்பிக்கைகள் போல் தோன்றும். ஒருவேளை அப்படி கூட இருக்கலாம். ஆகையால், இந்தத் தொகுப்பில் தள்ள வேண்டியவை, கொள்ள வேண்டியவை ஆகியவை பற்றி பரிந்துரைக்கும்படி எனது பல்லாண்டு கால இனிய தோழரும், தீக்கதிர் பொறுப்பாசிரியருமான தோழர் சு.போ. அகத்தியலிங்கம் அவர்களிடம் இந்தத் தொகுப்பை கொப்புக் குழைகளோடு கொடுத்தேன். அவர் எவற்றை எல்லாம் வெட்டும்படி கோடிட்டு காட்டினாரோ அவற்றில் சுமார் 90 சதவீத பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டேன். கண் முன்னாலேயே அதேசமயம் அவர் எடுக்கச் சொன்ன மூன்று கதைகளில் ஒன்றான ரசவாதம் என்கிற கதையை மட்டும் எடுக்கவில்லை. காரணம் ஒரு காலம்வரை, செம்பு உலோகத்தை தங்கமாக, மாற்றுவதை, சித்தர் பாணியில் ரசவாதம் என்பார்கள். எனக்குத் தெரிந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே சென்னையில் ஒருவர் செம்புக் கட்டியை, தங்கக் கட்டியாக மாற்றுவதற்கு சாமியார் சாமியாராக அலைந்து, இறுதியில் மனநோய்க்கு ஆளானார். பல சித்த நூல்களை ஒரளவு படித்த எனக்கு ரசவாதம் என்பது, ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் போன்றது. திரவப் பொருளான பாதரசத்தின் மீது ஒரு மூலிகைச் சாரை ஊற்றி அதை மணியாக்கி காட்டியதையும் கண்டிருக்கிறேன். "ஆடுகின்ற அரவுமீது ஒடு ரசம் வார்த்து" என்ற ஒரு வரியை ஒரு நவீன சித்தர் என்னிடம் பாடிக் காட்டினார். பொருள் கேட்டபோது, போடா "பொ” என்றார். அன்று காளியம்மா சாமியாடி ஆட்டுக்கடாய் ரத்தத்தை குடிப்பதை பக்திப் பரவசத்தோடு பார்த்த நான், இன்றோ எல்லாவற்றிற்கும் மூலமாக வள்ளலார் சொல்லும் அருட்பெருஞ்ஜோதி - அதாவது இந்த பிரபஞ்சத்தையே ஆராதிக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறேன். நாளை, எந்த கட்டத்திற்குப் போகப் போகிறேனோ? காரணம், ஆன்மீகத் தேடல்களும், விஞ்ஞான மெய்ப்பாடுகளை சார்ந்தே நிற்கின்றன. அதே சமயம் மக்களா? கடவுளா? என்ற கட்டாயம் ஏற்பட்டால் நான் மக்கள் பக்கம். என்றாலும் கடவுள் என்ற தத்துவத்திற்கும், வேர்வை சிந்தும் அப்பாவி பாட்டாளி வர்க்கத்திற்கும் எந்த மாறுபாடும் இல்லை என்றே கருதுகிறேன். இந்தத் தொகுப்பில் வராத ஒரு கருத்தையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறன். மேட்டுக்குடி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை ஆடு, கோழி பலியிடுதல், சாமியாடுதல், தீ மிதித்தல் போன்ற பாமரச் செயல்களில் வரலாற்று ரீதியாக ஒரு வித வஞ்சனையோடு ஈடுபடுத்தி இருக்கிறது. கோவில்களில் ஆடு, கோழி, பன்றி முதலியவற்றை வெட்டி கிராமத்துத் தேவதைகளுக்கு, ரத்தமும்-சோறுமாக படைக்கும் இந்த வகை மக்கள், சண்டை என்று வந்தாலும் தங்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் ஆடு, கோழி, பன்றியை வெட்டுவது போல வெட்டிக் கொள்கிறார்கள். இதனால்தான் முதல்வர் கலைஞர் அவர்கள் தீ மிதிப்பது காட்டுமிராண்டித் தனம் என்று குறிப்பிட்டார். உடனே, மதவாதிகள் வெகுண்டெழுந்ததை அறிவோம். இவர்களுக்கு இந்த மக்கள் ஆன்மீகத் தளத்தின் மேலெழாமல் அப்படியே அடிமண்டியாக கிடக்கவேண்டும் என்கிற ஆசை. இவர்களின் இந்த ஆசையை நிராசையாக்க வேண்டியது நமது கடமை. நமது மக்களை இத்தகைய பக்தி வெளிப்பாடுகளான பைத்தியக்காரத் தனங்களில் இருந்து விடுவித்தாக வேண்டும். இதற்காகத்தான் வள்ளலார் மக்கள் நேயப் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இது வளர்ந்து வளர்ந்து மக்கள் மத்தியில் செயல்படுவதற்கு வாசகர்கள் வாய்ச்சொல் அருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பு சிறப்பாக வந்திருந்தால் அதற்கு தோழர்கள் அகத்தியலிங்கமும், திலீப்குமாரும் பொறுப்பாவார்கள். தவறாக வந்திருந்தால் அதற்குப் பொறுப்பு நான்; நான் மட்டுமே. இந்தத் தொகுப்புக்கு சிறப்பான முகப்போவியம் வரைந்த ஒவியர் ஜமாலுக்கும், இதை செம்மையாக அச்சிட்டுக் கொடுத்த பதிப்புச் செம்மல் முனைவர் சா. மெய்யப்பன் அவர்களுக்கும், அவரது பதிப்பகத்தின் நிர்வாகிகளான திருவாளர்கள் சோமு, குருமூர்த்தி உள்ளிட்ட தோழர்களுக்கும், என்னை விடாமல் நிலைநிறுத்தும் வாசகப் பெருமக்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

தோழமையுடன்,
சு. சமுத்திரம்