ஆசாரக்கோவை
ஆசார வித்து
தொகு(பஃறொடை வெண்பா)
- நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோல்டு<br .
ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
தொகு(இன்னிசை வெண்பா)
- பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றும் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
தொகு(இன்னிசை சிந்தியல் வெண்பா)
- தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
முந்தையோர் கண்ட நெறி
தொகு(இன்னிசை வெண்பா)
- வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முன்தையோர் கண்ட முறை.
எச்சிலுடன் தீண்டத் தகாதவை
தொகு(இன்னிசை சிந்தியல் வெண்பா)
- எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
எச்சிலுடன் காணக் கூடாதவை
தொகு(இன்னிசை சிந்தியல் வெண்பா)
- எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.
எச்சில்கள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.
எச்சிலுடன் செய்யக் கூடாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.
காலையில் கடவுளை வணங்குக
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.
நீராட வேண்டிய சமயங்கள்
தொகு(பஃறொடை வெண்பா)
- தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.
பழைமையோர் கண்ட முறைமை
தொகு(இன்னிசை வெண்பா)
- உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.
செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.
செய்யத் தகாதவை
தொகு(இன்னிசை வெண்பா)
- நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.
நீராடும் முறை
தொகு( இன்னிசை வெண்பா)
- நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.
உடலைப்போல் போற்றத் தக்கவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.
யாவரும் கூறிய நெறி
தொகு(சவலை வெண்பா)
- அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
நல்லறிவாளர் செயல்
தொகு(இன்னிசை வெண்பா)
- குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு.
உணவு உண்ணும் முறைமை
தொகு(இன்னிசை வெண்பா)
- நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.
கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
உண்ணும் விதம்
தொகு(இன்னிசை வெண்பா)
- உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு.
ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
பிற திசையும் நல்ல
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு.
உண்ணக்கூடாத முறைகள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று.
பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.
கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்.
உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
தொகு(இன்னிசை வெண்பா)
- முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.
உண்டபின் செய்ய வேண்டியவை
தொகு(பஃறொடை வெண்பா)
- இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.
நீர் குடிக்கும் முறை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து.
மாலையில் செய்யக் கூடியவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி.
உறங்கும் முறை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.
இடையில் செல்லாமை முதலியன
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.
மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
தொகு(இன்னிசை வெண்பா)
- புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.
மலம் சிறுநீர் கழிக்கும் முறை
தொகு(குறள் வெண்பா)
- பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
மலம், சிறுநீர் கழிக்கும் திசை
தொகு(இன்னிசை வெண்பா)
- பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.
வாய் அலம்பாத இடங்கள்
தொகு(இன்னிசை வெண்பா)
- நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.
ஒழுக்க மற்றவை
தொகு(பஃறொடை வெண்பா)
- சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.
நரகத்துக்குச் செலுத்துவன
தொகு(நேரிசை வெண்பா)
- பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.
எண்ணக்கூடாதவை
தொகு(இன்னிசை வெண்பா)
- பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்.
தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.
சான்றோர் இயல்பு
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.
சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்.
மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
தொகு(இன்னிசை வெண்பா)
- உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.
நாழி முதலியவற்றை வைக்கும் முறை
தொகு(இன்னிசை வெண்பா)
- நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.
பந்தலில் வைக்கத் தகாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.
வீட்டைப் பேணும் முறைமை
தொகு(பஃறொடை வெண்பா)
- காட்டுக் களைந்து கலம்கழீ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்.
நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
தொகு(இன்னிசை வெண்பா)
- அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.
அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்.
நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.
கேள்வியுடையவர் செயல்
தொகு(இன்னிசை வெண்பா)
- பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.
தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று.
தளராத உள்ளத்தவர் செயல்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்.
ஒழுக்கமுடையவர் செய்யாதவை
தொகு(இன்னிசை வெண்பா)
- தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.
விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
அறிஞர் விரும்பாத இடங்கள்
தொகு(பஃறொடை வெண்பா)
- கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை.
தவிர்வன சில
தொகு(பஃறொடை வெண்பா)
- முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
தொகு(இன்னிசை வெண்பா)
- பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்.
ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
தொகு(இன்னிசை வெண்பா)
- எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்.
சில தீய ஒழுக்கங்கள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து.
சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓராறு செல்லுமிடத்து.
நூல்முறை உணர்ந்தவர் துணிவு
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.
சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று.
கற்றவர் கண்ட நெறி
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி.
வாழக்கடவர் எனப்படுவர்
தொகு(இன்னிசை வெண்பா)
- பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்.
தனித்திருக்கக் கூடாதவர்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.
மன்னருடன் பழகும் முறை
தொகு(இன்னிசை வெண்பா)
- கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.
குற்றம் ஆவன
தொகு(இன்னிசை வெண்பா)
- தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்.
நல்ல நெறி
தொகு(இன்னிசை வெண்பா)
- பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து.
மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
தொகு(இன்னிசை வெண்பா)
- முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்.
மன்னன் முன் செய்யத் தகாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து.
மன்னன் முன் சொல்லக் கூடாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று.
வணங்கக்கூடாத இடங்கள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து.
மன்னர் முன் செய்யத் தகாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி.
ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
தொகு(இன்னிசை வெண்பா)
- நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்.
சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து.
சொல்லும் முறைமை
தொகு(இன்னிசை வெண்பா)
- விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.
நல்ல குலப்பெண்டிர் இயல்பு
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற.
மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.
பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
தொகு(நேரிசை வெண்பா)
- துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.
சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
தொகு(நேரிசை வெண்பா)
- தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை.
ஆன்றோர் செய்யாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர் அல்லா தவர்.
மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
தொகு(இன்னிசை வெண்பா)
- வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்.
கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
தொகு(இன்னிசை வெண்பா)
- நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்.
பழகியவை என இகழத் தகாதவை
தொகு(இன்னிசை வெண்பா)
- அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்.
செல்வம் கெடும் வழி
தொகு(நேரிசை வெண்பா)
- அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வம் கெடும்.
பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
உண்டது கேளார் விடல்.
கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை.
பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும்என் பார்.
கிடைக்காதவற்றை விரும்பாமை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.
தலையில் சூடிய மோத்தல்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.
பழியாவன
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளஆக லான்.
அந்தணரின் சொல்லைக் கேட்க
தொகு(நேரிசை வெண்பா)
- தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப தில்லை.
சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்று உழியும் செல்லார் விடல்.
ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
தொகு(இன்னிசை வெண்பா)
- கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
ஐயமில் காட்சி யவர்.
பொன்னைப் போல் காக்கத் தக்கவை
தொகு(இன்னிசை வெண்பா)
- தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.
எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
தொகு(இன்னிசை வெண்பா)
- நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.
சான்றோர் முன் சொல்லும் முறை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை.
புகக் கூடாத இடங்கள்
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.
அறிவினர் செய்யாதவை
தொகு(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
- உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்.
ஒழுக்கத்தினின்று விலகியவர்
தொகு(பஃறொடை வெண்பா)
- அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.