ஆசிரியமாலை
என்னும் பெயர்கொண்ட நூல் ஒன்றைத்
தொல்காப்பிய உரையில்
இளம்பூரணர் குறிப்பிட்டுப்
பாடல் ஒன்றை மேற்கோளாகத் தந்துள்ளார்.
அந்தப் பாடல் இது. குடிப்பிறப்பு என்னும் தொடரில் தொடங்குகிறது.
- குறிப்புரை - செங்கைப் பொதுவன்
குடிப்பிறப்பு உடுத்துப் பனுவல் சூடி
விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற
வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின்
காதல் இன்பத்துள் தங்கித் தீதறு
நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்காறு இன்மை அவாஅ இன்மைமென
இருபெரு நிதியமும் ஒருதரம் ஈட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை
உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின்
பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத்
தோன்றுவழித் தோன்றுவழிப் பலவுப் பொதிந்து
நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
நிலையழி யாக்கை வாய்ப்பஇம்
மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே.
பாடல் இருப்பிடம்
தொகுதொல்காப்பியம் மாந்தரின் புற வாழ்க்கையை அகவாழ்க்கை, புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துக்கொண்டு அவற்றை அகப்பொருள், புறப்பொருள் என்னும் பெயரால் விளக்குகிறது. அகப்பொருள் ஏழு எனப் பாகுபடுத்திக்கொண்ட அது புறப்பொருளையும் ஏழு திணைகளாகப் பாகுபடுத்திக் கொள்கிறது. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன அந்த ஏழு திணைகள். (தொல்காப்பியம் புறத்திணையியல்)
இந்த ஏழு திணைகளில் வாகைத் திணையானது ஏழு வகையில் (நூற்பா 16) 13 துறைகளைக் (நூற்பா 17) கொண்டது எனக் குறிப்பிடுகிறது. இந்தப் 13 துறைகளில் ஒன்று எட்டு வகை நுதலிய அவையகம். இந்த எட்டுவகை அவையகம் இவை இவை என எடுத்துக் காட்டுவதற்கு இந்தப் பாடல் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரால் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.
பாடல் தரும் செய்தி
தொகுபாடலில் சொல்லப்படும் எட்டுவகை அவையகம் அதாவது பொதுவாழ்க்கைப் பண்புகள்
- குடிப்பிறப்பு - குடிப்பிறப்பு உடுத்தல்
- கல்வி - பனுவல் சூடல்
- ஒழுக்கம் - விழுப்பேர் ஒழுக்கம் பூணல்
- வாய்மை - காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தல்
- தூய்மை - தூய்மையின் காதல் இன்பத்துள் தங்கல்
- நடுவுநிலைமை - தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகல்
- அழுக்காறு இன்மை - வைகலும் அழுக்காறு இன்மை
- அவா இன்மை - அவாஅ இன்மைமென
- இருபெரு நிதியமும் ஒருதரம் ஈட்டும்
- தோலா நாவின் மேலோர் பேரவை
- உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின்
- பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத்
- தோன்றுவழித் தோன்றுவழிப் பலவுப் பொதிந்து
- நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
- நிலையழி யாக்கை வாய்ப்பஇம்
- மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே.
உலகில் பிறந்தால் எனக்கு இத்தகைய பொதுவாழ்க்கை நெறி அமைவதாகுக - என ஒருவன் வேண்டுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.