பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். இவை பலரும் அறிந்த செய்தி. அத்துடன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை செய்துள்ளதாக ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது (அது இவருடையதன்று என்றும் சிலர் கூறுவர்). இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் பிற்பட்டவர் இவரே. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன. காலிங்கர், பரிதியார் காலம் 13ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், இவரது காலம் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளலாம் என்பது பொதுக் கருத்து.
இவர் தமது உரையில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார்.
|