ஆடரங்கு/தூக்கம்

தூக்கம்

நான் போனபோது சுவாமிநாதன் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக்கொண்டு முன் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார். அங்கே வெளிச்சம் அதிகம் இல்லாததால் எனக்கு அவர் முகம் சரியாகத் தெரியவில்லை. அவர் முகத்தை நான் பார்த்திருந்தேனானால் நிச்சயமாக நான் போன விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்க மாட்டேன்.

சற்றுப் பதற்றமாகவே, "ஏன் ஸார்? போயிருந்தேளா? அவர் அகப்பட்டாரா? நான் சொன்ன காரியத்தைப்பற்றிக் கேட்டீர்களா?" என்று கேட்டேன்.

" யாரு ? துரையா ? துரை ஊரில் இல்லை. நேற்றும் போனேன். இன்று அல்லது நாளைக்குத்தான் வருவான் என்று சொன்னார்கள். இன்று பூராவும் எனக்கு வேறு வேலையாகப் போய்விட்டது. உங்கள் விஷயத்தைக் கவனிக்க ஒழியவில்லை. நாளைக்குப் பார்த்து ஏற்பாடு செய்கிறேன். தவிரவும் அன்று நீங்கள் சொன்ன மாதிரியிலிருந்து அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்று நினைத்தேன்" என்றார் சுவாமிநாதன்.

சாதாரணமாக எவ்வளவு சின்ன விஷயமானாலுங்கூட வெகு உத்ஸாகத்துடன் பேசும் சுவாமிநாதனா இன்று இப்படிப் பேசியவர் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கேட்ட விஷயத்தில் வேறு விஷயத்தைப் புகவிடாமல்கூட அவரால் பேச முடிகிறதே! ஆச்சரியந்தான் ! நேரடியாகப் பதில் சொல்லி, "போய் விட்டு வாருங்களேன்" என்கிற தோரணையில் அவர் பேசியதைக் கேட்டு நான் பிரமித்துப்போனேன்.

ஆனால், "போய்விட்டு வா" என்று சொன்னால் கூட, போய்விட்டு வரவா? போய்விட்டு வரவா?" என்று கேட்டுக்கொண்டு பேசுவதற்கு உட்காருகிற சுபாவம் படைத்த ஆசாமி அல்லவா நான் ?

""ஏன் ஸார்? இன்று உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியாக இல்லையா? என்னவோ போல இருக்கிறீர்களே !" என்றேன்.

"என் உடம்புக்கு ஒன்றுமில்லை. என் பயலுக்குத்தான் உடம்பு சரியாக இல்லை. வயிறு சரியாக இல்லை. கஞ்சி, மருந்து. எதுவுமே வயிற்றிலே தங்கமாட்டேன் என்கிறது. நேற்று ராத்திரி முதல் அவஸ்தைப் படுகிறான் " என்றார் சுவாமிநாதன்.

சுவாமிநாதனுடைய பழக்க வழக்கங்கள் ஒன்றிரண்டு எனக்குத் தெரியும். நான் சொன்னேன்: "இருந்தாலும் இரண்டு வயசு சரியாக நிரம்பாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் நீங்க ஹோட்டல்லே வடை வாங்கித் தரது பிசகுதான் ஸார். நம்மைப்போலப் பெரியவாளுக்குக்கூட, சில சமயம் ஹோட்டல் சாமான் ஒத்துக்க மாட்டேன் என்கிறது. குழந்தைக்கு எப்படி ஒத்துக்கும் ! ஒண்ணும் பிசகாயிராது; சாப்பிட்டது ஏதாவது ஜீரணமாகாமல் இருக்கும். அவ்வளவுதான். நாளைக்குத் தானே சரியாய்ப் போய்விடும்."

"ஆமாம், ஆமாம், நீங்க சொல்றது சரிதான். அழறானேன்னு நான் ஏதாவது வாங்கித்தரேன்; என் தம்பி வேறு ஏதாவது வாங்கித் தரான்; அவள் வேறே கொடுத்து விடுகிறாள்! எல்லாமாகச் சேர்ந்து குழந்தையைப் படுத்தறது!" என்றார் சுவாமிநாதன்.

இப்பொழுதுதான் சற்றே வெளிச்சமாக இருந்த இடத்துக்கு நகர்ந்து வந்தார் சுவாமிநாதன். முகத்தைக் கண்ட நான் திடுக்கிட்டுப் போனேன். அதில்தான் என்ன கவலையும் ஏக்கமும் படர்ந்திருந்தன ! ஏன் இப்படி !

என் மனசில் இருந்த கேள்வியை ஊகித்து அறிந்துகொண்டவர் போல அவர் பதில் அளித்தார்: "ஏற்கனவே ஒரு தரம். பட்டாச்சோ இல்லையோ ? இப்போ பயமா இருக்கு. தவிரவும் நேற்று ராத்திரி பூராவும் தூக்கமே இல்லை.

நான் தைரியம் சொன்னேன்: "என்ன ஸார் இப்படிப் பயப்படறேள்? தானே நாளைக்குச் சரியாகப் போயிடும். நீங்கள் பயப்படறபடி எல்லாம் ஒன்றும் நடந்து விடாது. கவலைப் படாதீர்கள். மனுஷன்னு பிறந்தவனைக் கடவுள் சோதிக்கத்தான் சோதிக்கிறார். ஆனால் எப்பவும் சோதித்துக்கொண்டே இருப்பாரா என்ன?" என்றேன்.

நான் கூறியதாலெல்லாம் தைரியம் வந்து விடவில்லை அவருக்கு. அவர் சிந்தனையை எங்கேயோ பறி கொடுத்துவிட்டு நான் சொன்ன வார்த்தைகளைக் காதில்கூட வாங்காமல் உட்கார்ந்திருந்தார்.

அவர் மூன்று நான்கு வருஷங்களுக்குமுன் இரண்டு வயசுப் பையன் ஒருவனைப் பறி கொடுத்தவர் என்று நான் கேள்விப் பட்டதுண்டு. அவர் அப்போது எவ்வளவு கஷ்டப்பட்டார் என்றும், அவருக்கு ஆறுதல் சொல்லி மனசை மாற்ற யாராலும் முடியவில்லை என்றும் பிறகு கேள்விப்பட்டேன்.

"சுத்தக் கோழையாக இருக்கிறேளே, ஸார் ! கொஞ்சம் தெம்பா இருக்க வேண்டாமோ? குழந்தைகளுக்குச் சதா சர்வதா உடம்பைப் படுத்திக்கொண்டுதான் இருக்கும் " என்று சொன்னேன் மேலும்.

அவர் வேறு எங்கேயோ ஞாபகமாக, "உம்" என்றார். பிறகு ஒரு விநாடி கழித்து, "தம்பி டாக்டரிடம் குழந்தையைக் காட்ட எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். போய் ஒரு மணி ஆச்சு. வந்துவிடுவான் இப்போ" என்றார்.

இந்தப் பனியிலேயா?" என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் தம்பி வெங்கிட்டு வந்துவிட்டான். அவன் தன்னுடன் குழந்தையைக் கொண்டு வரவில்லை.

அண்ணா பதற்றப்படுவாரே, விஷயத்தை உடனே சொல்ல வேண்டுமே என்று அவனுக்குக் கவலை வேண்டாமோ? கவலை இருந்தாலும் அண்ணாவைக் கொஞ்சம் அலக்ஷ்யம் செய்கிற மாதிரிதான் இருக்கட்டுமே என்று எண்ணினானோ?

"எப்ப ஸார் வந்தேள்?" என்று என்னைச் சாவகாசமாக விசாரிக்கத் தொடங்கினான்.

சுவாமிநாதன் குறுகிட்டார்: "அவர் இப்பத்தான் வந்தார். டாக்டர் என்ன சொன்னார்? குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாயா ?" என்று கேட்டார்.

அப்படியும் வெங்கிட்டு நேரடியாகப் பதில் சொல்லவில்லை; "ராத்திரி ஆஸ்பத்திரியிலேயே இருக்கட்டும் என்றார் டாக்டர், சாப்பிட்டுவிட்டு என்னை ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக்கொள்ளச் சொன்னார்" என்றான்.

'குழந்தை உடம்புக்கு என்னவாம்? டாக்டர் என்ன சொன்னார்?

"ஒன்றும் கவலைப்படவேண்டாம், காலையில் சரியாகப் போய்விடும். மருந்து கொடுக்கிறேன் என்று சொன்னார். அவ்வளவுதான்' என்றான் வெங்கிட்டு.

"சாப்பிட்டுவிட்டு நானும் வரேன், ஆஸ்பத்திரிக்கு என்றார் சுவாமிநாதன்.


நீ வர வேண்டாம்னு சொல்லச் சொன்னார் டாக்டர். நீயும் தூங்காமல் குழந்தையையும் தூங்கவிட மாட்டாய் என்று சொன்னார்" என்றான் தம்பி.

அவன் சொன்னது என்னவோ வாஸ்தவந்தான் என்று எனக்குப் பட்டது. ஆனால் அதற்காக இந்தக் குரலில், இத்தகைய பாவத்துடன் அவன் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன் நான்.

அண்ணாவும் தம்பியும் சாப்பிட எழுந்தார்கள். நானும் கிளம்பினேன், "என் விஷயம் ஒன்றும் அப்படி அவசரமானதல்ல. நாளைக்குக் காலையிலே வறேன். கவலைப்படாதீர்கள்! யயப்படறதுக்கு ஒண்ணுமில்லை என்றேன்.

"பயம் என்ன ஸார்? அதெல்லாம் ஒண்ணும் இல்லை! முதல் சம்பவத்துக்குப் பிறகு எல்லாம் பழக்கமாகிவிட்டது, ஸார். என் மனசே கல்லாயிடுத்தே !" என்றார் சுவாமிநாதன்.

நான் மாடிப்படி இறங்கிப் போகையில் சுவாமிநாதனின் மனைவி, "என்னவோ, வறவா போறவாகிட்டெல்லாம் அசட்டுப் பிசட்டுன்னு பேசிண்டிருக்கேளே! பொம்மனாட்டிகள், என்னைப் போன்றவா, பயப்படுவா — நீங்க சமாதானம் சொல்ல வேண்டியிருக்கும்! அதற்குப் பதில் நீங்க பயப்படறேள். நான் சமாதானம் சொல்ல வேண்டியிருக்கே!' என்று சொல்லிக்கொண் டிருப்பது என் காதில் விழுந்தது.

அதற்குள் படி இறங்கி வெளியேறிவிட்டேன். சுவாமிநாதன் என்ன பதில் சொன்னார் என்பது என் காதில் விழவில்லை.

வீடு போய்ச் சேர்ந்ததும் எனக்கு என்னவோபோல் இருந்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. சாப்பிட்டுவீட்டு, 'சுவாமிநாதனைப் போன்ற அறிவாளிகள்கூட இப்படி எல்லாம் காரணம் இல்லாமல் பயப்படுகிறார்களே, இதற்கு ஆதாரம் என்ன ?' என்று சிந்தித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பயத்துக்குக் காரணம் எதுவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுளின் சித்தம் என்று ஒன்று உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறவர்கள் அந்தச் சித்தம் எப்படி இருக்குமோ என்னவோ ஏதோ என்று பயப்படுவதிலே அர்த்தம் கொஞ்சம் உண்டு என்றுதான் எனக்குத் தோன்றிற்று. 'ஆசையால் பாசம் ஏற்படுகிறது; பாசத்தால் பயம் ஏற்படுகிறது என்று புத்த தேவன் சொல்லியிருப்பது எவ்வளவு பொருத்தமான விஷயம் என்று சிந்தித்தேன். ஒரு சிறு குழந்தையிடம் அளவற்ற பாசம் வைத்துவிடுகிறான் தகப்பன். அது வளர்ந்து பெரியவனானபின் இப்படி, அப்படி என்றெல்லாம் திட்டம் போடுகிறான். குழந்தை வளர்ந்து பெரியவனான பின்பு அநேகமாகத் தகப்பனின் திட்டங்களை எல்லாம் கவிழ்த்துவிடத்தான் போகிறது. அப்படி இருந்தும் திட்டம் போடுவதை நிறுத்துவதே இல்லை தகப்பன். குழந்தைக்கு உடம்பு சரியாக இல்லாத போதெல்லாம், 'இப்படி எல்லாம் நான் திட்டம் போட்டது தவறோ ! அது கடவுளுக்குச் சவால் கூறுகிற மாதிரி ஆகி விட்டதோ?' என்று எண்ணித் தகப்பனின் மனம் துணுக்குறுகிறது. 'சோதித்தா விடுவார் கடவுள்? சோதிக்கமாட்டார்' என்று மாறி மாறி மனசில் தோன்றிப் பயத்தையும் தெம்பையும் ஊட்டுகின்றது; அதே விநாடியில் முந்திய சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அவ்வளவுதான்; மனிதன் தெளிவாகச் சிந்தனை செய்யும் சக்தியை இழந்துவிடுகிறான்.

நான் நினைத்தேன்; வெங்கிட்டு சாப்பிட்டு விட்டு, அண்ணாவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய வார்த்தை ஒன்றுகூடச் சொல்லாமல் டாக்டருடைய நர்ஸிங் ஹோமுக்குக் கிளம்பிவிடுவான். சுவாமிநாதனும் அவனுடன் போய்க் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தாலும் வருவார் ; ஆனால் இரவு வீடு திரும்பி விடுவார். டாக்டர் போ என்று வற்புறுத்துவார். தவிரவும் வீட்டில் அவர் மனைவிக்கு யாரும் துணை ல. திரும் வந்து படுக்கையை விரிப்பார், படுப்பார். படுக்கை கொள்ளாது; தூக்கம் வராது; எழுந்து கைகளைப் பின் கட்டாகக் கட்டிக் கொண்டு முன் கூடத்தில் உலாத்துவார். ஈஸிசேரில் சிறிது நேரம் சாய்வார். படிக்கலாமா என்று தோன்றும். விளக்கைப் போட்டு ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரிப்பார்; ஆனால் படிப்பு ஓடாது. இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி விழித்துக்கொண்டு, " என்ன படிப்பு, அர்த்த ராத்திரிக்கு ? விளக்கு, கண்ணைக் குத்தறது! படுத்துக்கோங்கன்னா!" என்பாள். 'எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லையே! குழந்தையின் தாயாகிய அவளுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வருகிறது?' என்று ஆச்சரியத்துடன் சிந்தித்தபடியே விளக்கை அணைத்துவிட்டு, சுவாமிநாதன் மீண்டும் ஈஸிசேரில் அமர்வார். மீண்டும் மீண்டும் முதல் குழந்தையையும் இந்தக் குழந்தையையும் பற்றிச் சிந்தனைகள், உருத் தெரியாத சிந்தனைகள் பல எழுந்து அவர் உள்ளத்தில் குமுறும். முதல் நாள் தாம் அதை ஹோட்டலுக்கு அழைத்துப்போய் வடை வாங்கிக் கொடுத்தது தவறு என்று எண்ணுவார். ஆனால் அடுத்த விநாடியே கடவுள் சித்தம் அதுவானால் தாம் வேறு என்னதான் செய்திருக்க முடியும் என்றும் எண்ணுவார். கோழி கூவும்; கிழக்கு வெளுத்துவிடும் |

குழந்தையின் தாய் எப்படியோ நிம்மதியாகத் தூங்கிவிடுகிறாள். இந்த விஷயத்தில் பெண்களை அறிவாளிகள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்குக் கற்பனை குறைவு : நம்பிக்கை அதிகம். எந்தக் கஷ்டமும் வருவதற்கு முன் அவர்கள் மனசை அவ்வளவாகப் பாதிப்பதில்லை.

இப்படி எல்லாம் என்ன என்னவோ சிந்தித்துக்கொண்டே நான் பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்திருக்கும்போது மணி எட்டு. அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு காபி சாப்பிட்டுவிட்டு, சுவாமிநாதனின் வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.

சுவாமிநாதன் முன் கூடத்தில் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார்.

"ராத்திரி பூரா நீங்க தூங்கவே இல்லைபோல் இருக்கே!" என்று கேட்டுக்கொண்டே நான் அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

"ஆமாம் ஸார், மனசை எவ்வளவோ திடப்படுத்திப் பார்த்துக்கொண்டும் தூக்கம் வர மறுத்துவிட்டது. படுக்கிறதும், ஈஸிசேரில் சாயறதும், பித்துப்பிடித்தவன் மாதிரி உலாத்துவதுமாக இப்படியே இரவைக் கழித்துவிட்டேன். ஆச்சு, எட்டரை ஆகிறதே! வெங்கிட்டு வந்துவிடுவாள் " என்றார் சுவாமிநாதன்.

" நீங்க இருந்தாலும் இப்படிக் கோழை மனசாக இருக்கக்கூடாது, ஸார்! ஆச்சு ! இதோ வெங்கிட்டு வந்துவிடுவான், குழந்தையையும் எடுத்துண்டு " என்றேன்.

சுவாமிநாதன் பதில் சொல்லவில்லை. நான் மேலும் சொன்னேன்; "போனிலே வேணுமானால் கூப்பிட்டுக் கேட்கலாமே! உடம்பு சரியாகப் போயிருக்கும்! ஆனால் உங்க கவலையால் உங்களுக்குத்தான் உடம்புக்கு வந்து விடும்போல் இருக்கு!"

"போன்லே கேட்க வேண்டாம்னு பார்த்தேன். அவனா கச் சொல்லப்படாதோ? போன்லே சொல்லாதவன், கவலைப் படுவா ளேன்னு மணி ஒன்பதாச்சே, வரக்கூடாதோ? என்ன தம்பி, ஸார்!" என்று சுவாமிநாதன் சொல்லிக்கொண் டிருக் கும்போது தெருத் திருப்பம் திரும்பி வெங்கிட்டு வந்துகொண் டிருப்பது தெரிந்தது. அவன் மட்டுந்தான் வந்துகொண் டிருந் தான். அவன் கையில் குழந்தையைக் காணோம் என்று கவ னித்த நான் திடுக்கிட்டேன். சுவாமிநாதன் என்ன எண்ணி னாரோ என்று அறியவேண்டி நான் திரும்பிப் பார்த்தேன்.

அவர் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து தெருவில் ஓடித் தம் தம்பியை விசாரிக்கப் போவார் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். மூலையில் கிடந்த ஈஸிசேரை இழுத்து என் எதிரில் கொண்டு வந்து போட்டுக்கொண்டு அதில் சாய்ந்துகொண்டார் சுவாமிநாதன்.

இதற்குள் தெருவோடு போய்க்கொண்டிருந்த யாருடனோ வம்வளப்பதற்குத் தாமதித்துவிட்டான் வெங்கிட்டு. சுவாமி நாதன் தம் தம்பியை மனசுக்குள் திட்டினாரோ என்னவோ? ஆனால் அவர் வாய்விட்டு ஒன்றும் சொல்லவில்லை. எது வந்தா லும் வரட்டும், அநுபவிக்கத் தயார் என்று சொல்பவர்போல ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்; கண்களை மூடிக்கொண்டார்.

அரைப் பர்லாங்குக்கு அப்பால் தெருவில் யாருடனோ நின்று உத்ஸாகமாகப் பேசிக்கொண் டிருந்த வெங்கிட்டுவை யும், ஈஸிசேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண் டிருந்த சுவாமி நாதனையும் நான் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்தேன். என்ன சொல்வது, என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. திடீரென்று சுவாமிநாதனின் தலை ஒரு புறமாகச் சாய்ந் தது. அடுத்த விநாடி அவர் குறட்டை விடும் சப்தம் கேட்டது.

வெங்கிட்டு தடதடவென்று மாடிப் படியில் ஏறி வந்து கொண்டிருந்தான். சுவாமிநாதனின் மனைவி மாடிப்படி யண்டை போய், "சப்தம் செய்யாமல் வாயேண்டா ! தூங் கிண்டிருக்கிறார் அவர்” என்று குசுகுசுவென்று வெங்கிட் டுவை எச்சரித்தாள்.

குழந்தையைப் பற்றி அவள் ஒன்றும் விசாரிக்கவில்லை. ஆனால் அவள் விசாரிக்கு முன் வெங்கிட்டு, "மணி டாக்டர் ஆத்துக் குழந்தைகளோடே விளையாடிக்கொண் டிருக்கிறான். உடம்பெல்லாம் சரியாப் போச்சு. டாக்டர் தம் காரில் மத்தி யான்னம் அழைத்துக்கொண்டு வந்துவிடுவதாகச் சொன்னார்" என்று மெதுவாகச் சொன்னது என் காதிலும் விழுந்தது.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/தூக்கம்&oldid=1526964" இலிருந்து மீள்விக்கப்பட்டது