ஆண்மை/முன்னுரை
முன்னுரை
ஒரு சமயம், பெர்னார்டு ஷாவிடம் நீங்கள் எழுதிய ‘அந்த’ ஏன் ‘அப்படி’ இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் பின் வருமாறு பதில் சொன்னாராம்: பத்து வருஷத்துக்குள், ஒரு மனிதனுடைய உடம்பில் உள்ள ஜீவ அணுக்கள் யாவும் அடியோடு மறைந்து, புதியவை அந்த ஸ்தானத்தை வகிப்பதால், பத்து வருஷங்களுக்கு முன் இருந்த அதே மனிதன் இப்பொழுது இருப்பதாகக் கொள்ள முடியாது. அந்தப் புஸ்தகம் எழுதிய பெர்னார்டு ஷா பத்து வருஷங்களுக்கு முன்பே மறைந்து விட்டான். இப்பொழுது உங்கள் முன்பாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் ஆசான் வேறு. இவன், ‘அவன்’ எழுதியதற்கு ஜவாப்தாரி அல்ல.
—என்று தமது கருத்து வளர்ச்சியை, (மாறுதலை) குறிப்பிட்டுக் கேட்பவர் வாயை அடைத்தாராம். அதே மாதிரி ஷாவின் சமத்காரத்தைப் பின்பற்றி, இந்தக் கதைகளுக்கு வக்காலத்து வாங்கிச் சமாதானம் சொல்லும் நோக்கம் எனக்குக் கிடையாது. தவளைக் குஞ்சு ஆரம்பத்தில் மீனைப் போல் இருந்தாலும், தவளையின் தன்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே மாதிரி இக்கதைகளும், ‘இத்தவளையின்’ தன்மைகளை மறைமுகமாகக் கொண்டிருப்பதனால், இவற்றைப் பிரசுரத்திற்கு லாயக்கானவை என்று கருதி, வெளியிட்டிருக்கிறேன். இக்கதைகள் யாவும் நான் எழுத ஆரம்பித்துச் சுமார் ஆறு மாதங்களுக்குள் அமைந்த மனநிலையைக் காட்டுவனவாகும். இவற்றில் பெரும்பான்மையாக எனது மன நிலையே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வரும் கதா பாத்திரங்கள் போல, நான் எனது கருத்துகளுக்கு பொருந்தியவையாக பிடித்து வைத்த களிமண் பொம்மைகள். அவற்றிற்கு இருக்கும் உயிரும், வேகமும் என் ஆத்திரத்தின் அறிகுறி. அவை மனித ரூபம் பெற்றவையே ஒழிய, மனிதப் பண்பும், இயல்பும் உடைய சிருஷ்டிகள் அல்ல. பேரளவு துன்பத்தின் சாயை படியாது, வெறும் உயிர்ப் பிண்டமாக் வாழ்ந்த ஒரு வாலிபன், திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்து வரும் கொடுமைகளையும், அநீதிகளையும், சமூகத்தின் வக்கர விசித்திரங்களையும் கண்டு, ஆவேசமாக, கண்டதைத் தனது மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க் கனவுகளாகும். எனது கதைகளின், அதாவது, பூர்வ கதைகளின் கரு அதுதான். அவற்றில், கதைக்கு உரிய, கதைப் பின்னல் கிடையா. அவற்றிற்கு ஆரம்பம், முடிவு என்ற நிலைகளும், பெரும்பான்மையாகக் கிடையா. மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக் கொள்ளுவதானால், அவை கதைகள் ஆகும். இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து, மேல்நாட்டில் கதைகள் பிரசுரமாவது சகஜம். அந்த முறையை, முதல் முதலாகத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும்.
மணிக்கொடிப் பத்திரிகையானது வெளி வரும் முன்பு, எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடங் கொடுக்கும், உற்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ, பின்போ கிடையாது. அந்தப் பத்திரிகையை ஆரம்பித்த லக்ஷியவாதியான கே.ஸ்ரீனிவாசன், அவருடைய அந்தக் ‘குற்றத்திற்காக’ (?) பாஷைப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் போல, வேற்று மாகாணத்திலே, வேற்று பாஷையிலே பத்திரிகைத் தொழில் நடத்தும் பாக்கியம் கிடைக்கப் பெற்று, வாழ்ந்து வருகிறார், காலத்துக்கேற்றபடி உடுக்கடிக்கும் கோட்டான்களும், ஆவேசத்தோடு சீறுவது போல 'பம்மாத்து' செய்து கொண்டு இருக்கும் கிழட்டுப் புவிகளும், பாஷையையும், பாஷையின் வளர்ச்சியையும் பாழ்படுத்திக் கொண்டு இருக்கும்படி அனுமதித்து வரும் தமிழரின் பாஷா அபிமானத்தைக் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும். அன்று மறுமலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும், பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார்கள். பலர் கேலி செய்தார்கள் ; பெரும்பான்மையோர், அதைப் பற்றி அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு, அசிரத்தை என்ற முனிசிப்பல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை எடுத்து வந்து, ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக, நானும் பி. எஸ். ராமையா என்ற நண்பரும், எங்களைப் போலவே, உத்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில சக எழுத்தாளர்களும் சேர்ந்து, நடத்தி வந்தோம். அது, இரண்டு மூன்று வருஷங்களில், கன்னிப் பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில், அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம். அவர் அவளை ஒருவருக்கு விற்றார். விற்ற உடனே, அவளுக்கு ஜீவன் முக்தி, இந்தக் கலி காலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழிலே புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதையின் ஒரு அம்சம் எனது கதைகள்.
மணிக்கொடிப் பத்திரிகையில் எழுதியவர்களில், பெரும் கேலிக்கும், நூதனம் என்பதனால் ஏற்படும் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான். சரஸ்வதி பத்திரிகை ஆசிரியர் என்ற தலைப்பில், நையாண்டி செய்யப்பட்ட கௌரவம் எனக்கு ஒருவனுக்குத்தான் கிடைத்தது. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும், கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால், பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது, பொது ஜனங்களுக்குப் ‘புரியாது’ என்று சொல்லி, அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா, கருத்து ஓட்டத்திற்கு வசதி செய்வதா என்பதை, அதே முறையில் பலர் எழுதிய பின்புதான், முடிவு கட்ட முடியும். அந்த முறையை, நானும் சிறிது காலத்திற்குப் பிறகு, கை விட்டு விட்டேன். காரணம், அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால், அதைக் கை விட்டு, வேறு வழிகளைப் பின்பற்றினேன். இன்று திரும்பிப் பார்க்கும்போது, அவை உலக வளர்ச்சியில் பரிணாம வாதத்தினர் சொல்வது போல, இலக்கிய வளர்ச்சியின் தெரு வடச்சான் சந்துகளாக அங்கேயே வளர்ச்சித் தன்மை மாறி நின்று விட்டன. இன்று அவற்றை ஆற அமரப் படித்துப் பார்த்துத்தான் முடிவு கட்டவேண்டும். எனது முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். அதனால், முறை தப்பானது என்று முடிவு கட்டி விடக் கூடாது. நான் அறியாமல் வகுத்துக் கொண்ட எனது பாதையைப் பற்றி, இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில், இந்தத் தவளைப் பாச்சல் நடையை பின்பற்றினேனோ, அதே சமயத்தில், மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாகக் கருதப் பட்டது என்பதைச் சமீபத்தில் நான் ஒரு இலக்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, கேட்டு அறிந்தேன். இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள எனக்குத்தான் உரிமை என்று, கட்சி பேச நான் இந்தக் கருத்தைச் சொல்ல வரவில்லை. கருத்துக்கள் நமது தேசத்து மன உளைச்சல்களின் உருவகமாக இருந்தாலும், என் போக்கு, உலக இலக்கியத்தின் பொதுப் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதை எடுத்துக் காட்டவே இதைக் குறிப்பிட்டேன்.
இனி மேல், படித்துப் பாருங்கள்.
29-8-47
—புதுமைப்பித்தன்
கதைகள்
1. | 9 |
2. | 22 |
3. | 28 |
4. | 35 |
5. | 40 |
6. | 46 |
7. | 54 |
8. | 57 |
புதுமைப்பித்தன் கதைகள்
தெய்வம் கொடுத்த வரம்
முதலும் முடிவும்
பளிங்குச் சிலை
பிரேத மனிதன்
வாக்கும் வக்கும்
நமது இலக்கியம்
உலக அரங்கு