ஆண் சிங்கம்/அலைகள்

அலைகள்


கைலாசம் சிரித்தான்...

நடுத்தெருவிலே நடந்து போகிற போது, ஒருவன் தானாகவே சிரித்துக் கொண்டால் மற்றவர்கள் என்ன வேண்டுமானுலும் நினைக்கலாம் அல்லவா?

அவ்வீதியில் அலை அலையாய்ப் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அழகு நிறைந்தவர்களும், அழ கற்றவர்களும், வர்ணவிஸ்தாரங்கள் மிளிரும் ஆடை அணிந்தவர்களும், வெள்ளை வெளேரெனத் திகழும் உடையினரும்...எத்தனை எத்தனையோ ரகமான தோற் றங்கள்...விதம் விதமான உருவங்கள். பதினைந்து பதி னாறு வயசுக் குமரிகளிலிருந்து ஏழெட்டு வயசுச் சிறுமிகள் வரை தரம்தரமானவர்கள்...

பெண்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் அழகான காட்சியை நீர் பார்த்திருக்கிறீரா? இல்லையென்றால், இறைவன் சிருஷ்டித்துள்ள எத்தனையோ கோடி இன் பங்களில் ஒரு கோடி இன்பத்தை நீர் இழந்துவிட்டீர் என்று கணக்கெழுத வேண்டியதுதான்!.

கைலாசம் அந்த இன்பச் சூழ்நிலையை ரசித்தபடி நடந்தான். அப்பொழுது அவனுக்குத் திடீரென்று ஒர் எண்ணம் எழுந்தது. அதனுல் அவன் சிரித்தான். அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

‘மூஞ்சியைப் பாரு’ என்று தன் தோழியிடம் முனங் கினாள் ஒரு வராக மூஞ்சி.

‘பைத்தியம் போலிருக்குடி!’ என்று முணுமுணுத்து சென்றது ஒரு அசடு.

‘ஐயோ பாவம்!'என்று பேசி நடந்தது ஒரு பர்மாப் பிரதேசம்.' 'முளிக்கிறதைப் பாரேன்–வெட்கமில்லாமே’ என்று எரிந்து விழுந்தது ஒரு ‘ஜப்பான் பொம்மை.’

தன்னைப் பார்த்துச் சிரித்ததாக எண்ணிப் பதிலுக்குச் சிரித்தபடி ஸ்டைல் நடை நடந்தது ஒரு ‘குத்துலக்கை’,

சிரிப்பது போலவும் சிரியாதது போலவும் பாவம் பிடித்து அசைந்தனர் சிங்காரச் சிறுமிகள்...

அவர்களது பாவாடைகள் வட்டமிட்டுச்சுற்றி அலை யெனப் புரண்டன. அடிஅடியாக அவர்கள் முன்னே றும்போது, அலை எழுந்து தவழ்வது போல் ஆடைகள் அசைந்து துவண்டன. அவர்கள் கைகள் ஆடி அசைந் தன. பின்னல் சடைகள் எழிலுற ஆடின.

அவற்றைப் பார்க்கப் பார்க்க அவன் சிரிப்பு அதி கரித்தது. அதன் காரணம் அவன் உள்ளத்திலே எழுந்த ஒரு எண்ண அலை தான்...

பல நூறு பெண்களின் எழில் மயமான கூந்தலை–விதம் விதமான அலங்காரங்களை, அவற்றை அணி செய்யும் மலர் வகைகளை எல்லாம் கைலாசம் பார்த்தான். திடீரென்று அந்த எண்ணம் மின்னல்போல் கிறுக்கியது அவன் சித்த வெளியிலே.

–சீவிச் சிங்காரிக்கப்பட்ட கூந்தல் எல்லாம், ஒற் றைச்சடை – இரட்டைப் பின்னல் – அஜந்தரக் கொண்டை – ரிங் கொண்டை குறுகத் தரித்த குழல் எல்லாம், திடீர்னு மறைந்து போகிறது. மேஜிக் மாதிரி ...சூ மந்திரக்காளி! ...எல்லோர் தலையும் மொட்டை மயம் – வழுக்கு மொட்டை...அந்த நிலையிலே இந்தப் பெண்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?

அந்தக் காட்சியை அவன் கற்பனை செய்தபோது தான், சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்தது அவனுக்கு.

‘ஐயோ பாவம்...பைத்தியம்!’ என மற்றவர்கள் எண்ணினர்கள். அதற்கு அவனா பொறுப்பு?... கைலாசத்துக்கு இயல்பாக ஏற்பட்டு விட்ட மன நோயாக இருக்கலாம் அது. உளப்பரிசோதனை நிபுணர் எவரிடமாவது அவன் முறையிட்டிருந்தால், அவர் அவனுக்குப் புரியாத பெரும் பெயர் எதையாவது குறிப் பிட்டு அந்த நோயை கெளரவித்திருப்பார்.

ஆனல், கைலாசம் ஒரு விசித்திரப் பேர்வழி. தனது மனநிலையைப் போற்றி வளர்க்கவே ஆசைப்பட்டான். வறண்ட அன்றாட வாழ்விலே. குளுமையும் இனிமையும் புகுத்த உதவும் சக்தியைத் தன் மனம் பெற்றுவிட்டதாக அவன் மகிழ்வதுமுண்டு,

வேடிக்கையான மனம்தான் அது.

கைலாசம் நடந்து கொண்டிருக்கிறான். வேக நடை... அவன் மனம் தடம் புரண்ட பாதையிலே ஒடுகிறது.

–நடப்பது சுலபமாகத் தோன்றுகிறது. ஆனால், மனிதன் நடை எனும் பாக்கியத்தைச் சுலபமாகவா பெறுகிறான்? இல்லையே.சிறு குழந்தை எழுந்து நின்று நடத்து பழக எவ்வளவு கஷ்டப்படுகிறது! இப்படி நடை பயில ஒவ்வொருவரும் எவ்வளவு பிரயாசைப்படுகிறார்கள்... ஒவ்வொருவர் நடை ஒவ்வொரு ரகம்...நடப்பது–ஒரு காலுக்கு முன்னே இன்னொரு காலை எடுத்து வைப்பது...ஆமாம். திடீர்னு இப்படி வைக்கும் திற மையை மனித வர்க்கம் இழந்து விடுகிறது என்று வைத் துக்கொள்வோம்...அட, சும்மனாச்சியும் வைத்துக் கொள்வோமே!...ஏதோ வியாதி வருகிறது; சிலர் ஞாபகசக்தியை இழந்து விடுகிறார்கள். பேச்சுத் திறனை இழக்கிறார்கள் சிலர். அதுபோல் ஏற்படுகிறது என்று நினையுமே! சடார்னு எல்லோரும் நடக்கும் வித்தையை மறந்து விடுகிறார்கள். அப்போ எப்படி இருக்கும்?

கைலாசம் விதம் விதமான காட்சிகளைக் கற்பனை செய்கிறான். அவனுக்குச் சிரிப்பு பொங்குகிறது...

கைலாசம் ஒரு நாள் திடீரென்று எண்ணுகிறான்–மனித வர்க்கம் மூளையால் உயர்ந்து விட்டது. என்கிறார்கள். நாகரீக வளர்ச்சி, சமுதாய அபிவிருத்தி, கலைகள் எல்லாம் மூளையினால் தோன்றியவை. சரிதான், அசுரசக்தி ஒன்று ஏதோ மாயம் பண்ணி விடுகிறது. மனித இனம் மூளையை இழந்துவிடுகிறது. அதாவது ஆறாவது அறிவு அவுட்! அப்புறம், இந்த ஊர் எப்படி இருக்கும்? இந்த உலகம் என்ன ஆகும்? மனித ஜாதி எவ்வாறு நடந்து கொள்ளும்?

அவன் மனத்தறியிலே தாறுமாருன கற்பனைப் பின்னல்கள் நெசவாகின்றன. அவன் சிரிக்கிறான். குதித்தோடும் சிற்றோடையின் களங்கமற்ற கலகல ஒலி எற்றிச் சிரிக்கிறான் கைலாசம்.

விந்தை மனம் பெற்ற கைலாசத்துக்கு கடலோரம் நல்ல அரங்கமாக அமைகிறது. அவன் உள்ளத்திலே அதிசயக் கற்பனைகளைப் பிறப்பிக்கும் அற்புதமாக விளங்குகிறது கடல்.

–இயற்கையின் வீணத்தனத்தைச் சுட்டிக் காட்டுவது போல் விரிந்து கிடக்கிறது நெடுங்கடல், பயனற்ற தண்ணிர்க்காடு. பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீர மாகவும் இருக்கிறது இன்னும் அழகானதாக அமைய முடியும் இது. பொங்கிப் பாய்ந்து வருகின்ற ஒவ்வொரு அலையும் ஒருவித வர்ணம் பெற்று வந்தால்? மணல் மீது சாடி வெண்நுரைத் துகள்களாகச் சிதறும் அலைக் கூட்டமெல்லாம் வானவில்லின் வர்ணஜாலங்களோடு பளிச்சிட்டால்?

அப்படி ஒரு அற்புதம் இயற்கையிலேயே நிகழக் கூடுமானால் எவ்வளவு மனேகரமாக இருக்கும்! இதை எண்ணி எண்ணி மகிழ்வான் அவன்.

கடல் சிலசமயம் சலனமற்ற கரும் பரப்பாகக் காட்சி தருகிறது புதுமையான நிகழ்ச்சிகளுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள களம்போல் திகழும் அதன் மீது என்ன காட்சி மலர்ந்தால் மிக அழகாக இருக்கும்? கைலாசத்தின் மனம் கற்பனை அலைகளை ஒன்றின்பின் ஒன்றாக எற்றுகிறது.

–மினுமினுக்கும் ஆடை அலங்காரங்களோடு ஆடல்வல்லிகள் ப்லர் திடீரெனத் தோன்றுகிறர்கள் அந்த அரங்கிலே. கண்களுக்கு விருந்தாகும் நாட்டியம் பயில்கிறார்கள்.

–வானவளையம் நீர்க் கோட்டைத் தழுவுகிற நெடுந் தொலையிலிருந்து கரிய புள்ளிகள் போல் ஏதோ முன்னேறி வருகின்றன. அருகே நெருங்க நெருங்க, அவை பிரமாதமான குதிரைகள் மீது ஜம்மென்று அமர்ந்து வருகின்ற வீரர்கள். அந்த அணிவகுப்பு முன்னே முன்னே வந்து கொண்டிருக்கிறது.

இதை எண்ணும்போதுதான் கைலாசத்துக்கு அந்த நினைப்பு முகிழ்த்தது...

பாய்ந்து வரும் அலைகள் தாழ்ந்து சிதறி உருக் குலைந்து நீரிலேயே கலந்துவிடாமல், விம்மி விம்மி மேலெழுந்து முன்னேறி வந்தால்? மணல்பரப்பை மூழ்கடித்து, மேலும் முன்னேறினால்? ஊருக்குள்ளேயே வந்தால்?

ஊருக்குள்ளே பயங்கர நாடகம் மட்டும்தானா நிகழும்? சோகக் காட்சிகள் மாத்திரம்தானா தோன்றும்? அற்புதமாகவும் இருக்குமே!...

இந்த நினைவின்மீது கற்பனையை கட்டற்ற முறையிலே ஒடவிடுவது அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவன் அதைப்பற்றியே சிந்தித்தான். கடலோரத்தில் நின்று அலைகளைக் கவனிக்கும் போதெல்லாம், அதோ அந்த அலை பெரிதாக வருகிறது! அதைவிடப் பெரிதாக ஒன்று...எல்லாவற்றினும் பெரிது...இது மணலில் கொஞ்சம் முன்னேற முடியும் என்றே கணக்குப் பண்ணி ஆனந்தம் அடையலானான் அவன்.

ஆயினும் ஒவ்வொரு அலையும்–மகாப்பெரிய அலை கூட–மேலெழுந்து முடியை உலுக்கிக்கொண்டு, உட்புறம் பின்னுக்கு வளைய, தலை முன்னே நீள, எட்டிப் பார்த்து, ‘திடும்’ என்று பேரோசை எழுப்பி விழுந்து, நுரை நுரையாய்த் சிதறிச் செத்தது. அதை மூட–அல்லது தொட்டுப் பிடிக்க–மற்ருெரு பெரும் அலை வரும். தடால் என்றொரு சத்தம், ஒரு கணம் அமைதி: மீண்டும் சரசரப்பு...

இந்த விளையாட்டைக் கவனிப்பதில் கைலாசம் ஆர்வம் அதிகம் கொண்டான்.

அவன் பார்வையிலே கடல் இருந்தது. அவன் எண்ணத்தில் கடல் நிறைந்து, நினைவு முழுவதையும் பிடித்தது. அவன் கனவு பூராவும் அதுவே ஆயிற்று.

–அலைகள்...பொங்கி வரும் பேரலைகள்...ஆள் உயரத்துக்கு...வானத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து விடும் அலைகள்... அலைக்குப் பின் அலைகள்... வருகின்றன; பாய்கின்றன. கடலுக்குள்ளேயே திரும்பாமல் முன்னேறி வருகின்றன. வேகமாக, ஆவேசமாக, பயங்கர இரைச்சலோடு...

எல்லோரும் பதறி அடித்து, விழுந்து எழுந்து, ஓடுகிறார்கள். ஆனால் கைலாசம் சிரிக்கிறான். கைகொட்டிச் சிரிக்கிருன்!

கைலாசத்துக்கு அதுவே வியாதியாகி விட்டது. அவன் கண்கள் சதா வெற்றிடத்தையே வெறித்து வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. அவன் கற்பனையில் விந்தைக் கோலங்கள் பலப்பல தோன்றுவது மறைந்து, ஒரே ஒரு சித்திரம் தான் நித்தியமாய், நிரந்தரமாய் நிலைத்து நின்றது.

–அலைகள்... பொங்கி வரும் பேரலைகள் ... பேயலைகள்...

அவன் படித்துக் கொண்டிருக்கிருன். அதாவது, அவன் கையில் புத்தகம் இருக்கிறது. அவன் கருத்தில் அது பதியவில்லை. அவனுடைய செவிகள் ஒரு ஒசையைக் கிரகிக்கின்றன. மிகத் தெளிவாகக் கேட்கிறது அது. ‘தடால்’ என்று விழுந்து அழிந்து போகும் ஒலியல்ல. அலைகள் மேலே மேலே சாடிப் பாய்ந்து வருகின்றன. அவன் சாப்பிடுவதற்கு உட்கார்ந்திருக்கிறான்... தெருவிலே, அடுத்த தெருவுக்கும் அப்பால், கடற்கரை ரஸ்தாவின் எல்லையிலே அலைகள் வந்து எட்டிப் பார்த்து விட்டன. கடலும் கரைமணலும் ஒன்றேயாகி, ரஸ்தாவும் அதுவேயாகி, ஊரும் பிறவும் எல்லாமும் கடல் மயமாகப் போகிறது...அவன் கண்களில் தனி மினுமினுப்பு. உதடுகளில் சிரிப்பின் ரேகை, காதுகளில் இணையற்ற அந்த ஒசை...அவனுக்கு வேடிக்கை பார்க்கவேணும் என்ற ஆசை அடக்க முடியாதது ஆகிறது. அரைகுறைச் சாப்பாட்டிலேயே எழுந்து ஒடுகிறான் கைலாசம்.

அவனும் சிலரும் பேசிக்கொண்டிருக்கிருர்கள். சுவாரஸ்யமான உரையாடல். திடுமென அவன் கத்து கிறான் கொஞ்சம் நிறுத்துங்கள்!’...பேச்சு தடைப் படுகிறது. அவன் மகிழ்ச்சியோடு உற்றுக் கேட்கிறான். ‘உங்க்ளுக்குக் கேட்கவில்லை? அலேயோசை.அலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன...’ அவன் எழுந்து ஓடுகிறான்.

நண்பர்கள் பரஸ்பரம் அர்த்தம் நிறைந்த பார்வை பரிமாறிக் கொள்கிறார்கள். உதட்டைச் சுளிக்கிறார்கள்; தலையை ஆட்டுகிறார்கள். ‘ஐயோ பாவம்’

‘அறிவு முதிர்ச்சிக்கும் பைத்தியத்துக்கும் இடையிலே நுண்மையான கோடுதான் இருக்கிறது. ஒருவன் அறிவின் எல்லையைக் கடந்து எப்போது பைத்திய நிலையில் புகுவான் என்று சொல்ல முடியாது...’

‘பார்க்கப்போனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பைத்தியங்களாகத்தான் இருக்கிருர்கள்.’

நண்பர்கள் பேச்சுக்குப் பொருள் கிடைத்தது.

அவர்கள் பேச்சு அவன் காதிலும் எப்பவாவது விழுந்திருக்கலாம், எனினும் அவன் அதைப் பொருட் படுத்தியதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

அவனுக்குக் கடல்மீது அடங்காத மோகம் ஏற்பட் டிருந்தது. முன்னேறி வரும் அலைகளையே, கவனித்துக் கொண்டிருப்பதில் தணியாத ஆசை வளர்ந்து வந்தது.

திடீரென்று இயற்கைக்கு வெறிபிடித்துவிட்டது போல் தோன்றியது. மூன்று நாட்களாக ஒரே மழை. வானம் அழுக்குப் போர்வையால் போர்த்தப்பட்டது போல் காட்சி அளித்தது. குளிர் காற்று வீசியது. சில சமயங்களில் அதன் வேகம் வலுத்தது. எந்த நேரத்திலும் அது சூறாவளியாக மாறலாம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. விானத்திலே இவ்வளவு தண்ணீரும் எங்கே இருந்தது, எப்படித் தங்கியிருந்தது என்று அதிசயிக்கத் தூண்டும் வகையில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டியது.

மழையில் நனைவதில் கைலாசம் உற்சாகம் அடைந் தான். கொட்டும் மழையில், சுழலும் காற்றில் கடல் எப்படிக் காட்சி அளிக்கிறது என்று காண்பதில் அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்.

கடல் கோர தாண்டவம் புரிந்து கொண்டிருந்தது. இரவு நெருங்க நெருங்க அதன் கூத்தின் பேய்த்தனம் வலுத்துக்கொண்டிருந்தது.

கடலோரத்தில் சிறுசிறு குடிசைகளில் வசித்துவந்த மீனவர்கள் பயந்தார்கள். கடல் எந்த வேளையிலும் பொங்கி விடக்கூடும் என்று அஞ்சி, அவர்கள் தங்க ளுடைய வலைகளையும் இதர சாமான்களையும் மேட்டு நிலத்தில் கொண்டு சேர்த்தார்கள்; ஒடிஓடி, அவசரம் அவசரமாக உழைத்தார்கள். அவர்களைக் கவனித்த கைலாசம் பயப்படவில்லை. கவலை கொள்ளவில்லை. தனது கனவு பலிக்கக்கூடிய காலம் நெருங்கிவருகிறது போலும் என்று சந்தோஷமே கொண்டான்.

இருட்டிய பிறகுகூட அவன் வெகுநேரம் வரை கடற்கரையிலேயே நின்று, வெறித்தனமாகச் சாடுகின்ற அலைகளைக் கவனித்து மகிழ்ந்தான்.

– அலைகள் கட்டிடங்கள்மீது மோதுகின்றன. சந்து பொந்துகளில் எல்லாம் பிரவாகித்துப் பாய்கின்றன. பொருள்களைச் சூறையாடுகின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகளை எல்லாம் அள்ளி எடுத்து அம்மானை ஆடி அணைத்துச் சுழற்றி விழுங்கி வீசி அடித்துத் தள்ளி விட்டெறிந்து...

ஆகா! பயங்கர அற்புதம்! அற்புதமான பயங்கர அனுபவம்...

அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பும் பயங்கரமாகத்தான் ஒலித்தது அந்த இடத்திலே. அவ்வேளையிலே!

நள்ளிரவு. கன்னக் கனிந்த கருக்கிருட்டு. வேளையும் பொழுதும் தெரியாத நேரம்.

மழை பெய்துகொண்டே யிருக்கிறது. சோ... ஓயாத ஒற்றை ஒசை...

காற்று ‘உய்ய்–உய்ய்’ என்று சுழன்றடிக்கிறது...

துரங்கிக்கொண்டிருந்த கைலாசம் திடுக்கிட்டு விழித்தான். ஒரு ஒசை அவன் காதில் விழுந்தது. கனத்த அழுத்தமான ஒசை... ஆயிரம் யானைகள் திம்திம்மென்று அடிபெயர்த்து வைத்து வெறி வேகத் தோடு முன்னேறுவது போல... குதிரைப் படை காற்றினும் கடிதாய் முன் பாய்ந்து வருவது போல... நெருங்குகிறது. அடி அடியாக முன்னேறி வருகிறது.

அவன் உள்ளத்தில் ஒரு துடிப்பு: உணர்ச்சிப் பரபரப்பு... அவனுள் இனம் தெரியாத ஒரு குழப்பம். பீதியும்கூட.

அவன் படுக்கையிலிருந்து பதறி எழுந்தான். போர்வை கால்களில் சுற்றியது. உதறி அதை விலக்கி விட்டு அவன் வேகமாகப் பாய்ந்தான். அவன் நெற்றி சுவரில் மோதியது பலமாக ஆயினும், அந்த ஓசை – அலைகளின் அழுத்தமான ஒசை – காதுக்ளில் ஒப்பற்ற இசைபோல் ஒலித்தது.

ஆகா, வருகிறது. அதை நான் பார்க்க வேண்டும்’ என்று அவன் ஓடினான், வேகமாக முன்னோக்கி...

தடால்!... ஒரு அதிர்ச்சி...

அவனை அலைகள் அள்ளி எடுத்துத் தூக்கி விசித் தரையில் அடித்தது போல் இருந்தது. அவன் தலையில் குபுகுபுவென்று பெருக்கெடுத்தது. நெற்றியில் ஓடி கண்களை நனைத்தது, கன்னங்களில் வழிந்து, உதடுகளைத் தொட்டது... ‘அலைகள்... சூடாக இருக்குதே’ என்ற நினைப்பு இருந்தது அவனுக்கு. அப்புறம் பிரக்ஞையே இல்லை.

கைலாசம் மாடி அறையில் படுத்திருந்ததையும், மொட்டை மாடியில் ஒடினால் முடிவில் கீழே, கீழே, கீழே விழுந்து, தரையில் மோதி மடிய வேண்டியது தான் என்பதையும் நினைக்கவேயில்லை. நினைத்திருக்கவே முடியாதே அவனால். அவனுடைய விசித்திர மனமல்ல வா அவனை முன்னே முன்னே இழுத்துச் சென்றது. அதிகாலையில், மண்டை பிளந்து ரத்தத்தில் தோய்ந்து கிடந்த கைலாசத்தின் உடலைப் பார்த்தவர்கள் ஐயோ பாவம்! வாழ்வில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று முடிவு கட்டினர்கள்.

‘பைத்தியம்! எப்படியோ விழுந்து செத்திருக்கு!’ என்று முனங்கினார்கள் அவன் நண்பர்கள்.

அமைதியிழந்து அலைமோதிய கைலாசத்தின் மனம்...?

ஆமாம்; அற்புத நினைவுகளை - கனவுகளை ஆக்கி அழித்து மகிழ்கிற மனம் மரணத்தின் பின் என்ன வாகிறது? யாருக்குத் தெரியும்!

*
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்_சிங்கம்/அலைகள்&oldid=1071097" இலிருந்து மீள்விக்கப்பட்டது