ஆண் சிங்கம்/சிலந்தி



சிலந்தி

சிதம்பரத்தின் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது, உள்ளத்தின் பதை பதைப்பும் ஒடுங்கி விடவில்லை.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். பரபரவென்று போர்வையை உதறினான். அவனே அப்படி எழுந்திருக்கும்படி தூண்டியது...

அதுதான் அவனுக்குப் புரியவில்லை. அது வெறும் கனவா? நனவு தூண்டிய உணர்வா? அல்லது, உள் ளுணர்வு தந்த அபாய அறிவிப்பா?

கனவு என்றால் -

நிஜமாக முன் நின்றது அதை மறைக்கும்படி தூண்டியது.

நிஜம் - நனவின் விளைவு - என்றால், தூங்கிக் கொண்டிருந்தவன், கன்னக் கனிந்த இருட்டிலே அதை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது எவ்வாறு?

உள்ளுணர்வின் உந்துதல் என்றாலோ -

உள்ளுணர்வு உணர்வைத் தூண்டலாம். மூளையை விழிப்புறச் செய்யலாம். தூங்கும் போதுகூட, கண் னினால் காண்பது போல் பளிச்செனப் புலப்படுத்து வதற்கு அதற்கு ஏது சக்தி? உள்ளுணர்வு அதீதமான கண்களும் பெற்றிருக்குமோ?

சிதம்பரத்துக்கு எதுவுமே புரியவில்லை. அறிவைக் குழப்பும் விஷயமாகத்தான் அமைந்தது அது.

- இரண்டு கண்கள். அவனையே வெறித்து நோக்கும் ஒளிப்பொறிகள். சூரியனின் கதிர்களை ஏற்றுப் பளீரென ஒளி வீசும் மணிகள்போல் மினு மினுக்கும் கண்கள்... அவனை உற்று நோக்கியவாறி ருந்தன. அக் கண்கள் பொதிந்த தலை பெரிதாய், விகாரமாய், வெறுப்பு ஏற்படுத்துவதாய், ஒருவித பயமும் தருவதாய் இருந்தது. அதற்கேற்ற உடல்... அதில் முளைத்தெழுந்த எட்டுக் கால்கள் உடலைவிடப் பெரியனவாய் அதன் வேக இயக்கத்துக்குத் துணை புரிவனவாய்...

‘ஐயோ, சிலந்திப் பூச்சி!’ என்று அலறியது அவன் மனம். ஐயய்யோ நம்ம மேலே ஏறிவிடும்போல் தோணுதே’ என்று பதறியது.

அவன் விழித்து, அலறியடித்துக்கொண்டு எழுந்தான். அவன் உடல்மீது பூச்சி வேகமாக ஒடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கையினால் தடவித் தள்ளினான் துடித்து எழுந்து, ஸ்விச்சைத் தட்டனான்.

இரவின் ஆழத்தில் – கிணற்றில் விழும் கல் ‘டுபுக்’ கென ஒலி எழுப்புவதுபோல் – அது கனத்த ஓசை எழுப்பியது. ஒளியைக் கொட்டி எங்கும் பூசியது சிறு ‘பல்ப்’.

கண்களைக் கூச வைத்த அவ் ஒளி வெள்ளத்திலே அவன் அதைக் கண்டான். சுவரோடு தரை கூடும் இடத்தில் – சுவரோடு சுவராய், தரையோடு தரையாய் அது ஒண்டியிருந்தது. பெரிய சிலந்திப் பூச்சி. நன்கு வளர்ந்து தடித்தது. அழுக்கு முட்டிய ஏதோ ஒரு உருண்டை போல அருவருப்பு தரும் உடல். அதன் மீதுள்ள ரோமங்களும் புள்ளிகளும் அவன் பார்வையை உறுத்தின. அதன் கண்கள் விளக்கொளியில் மினுமினுத்தன.

அப்படியே அந்தப் பூச்சியை நசுக்கிக் கொல்ல வேண்டும் என்று துடித்தது அவன் உள்ளம். ஆனால், வெறும் பாதத்தினால் அதை மிதித்து நசுக்க அஞ்சினான் அவன். பழந்துணியையோ, செருப்பையோ தேடித் திரிந்தன அவன் விழிகள். அவன் செருப்பை எடுத்து வருவதற்குள் அந்த எட்டுக்கால் பூச்சி வேறு இடத்துக்கு ஒடியிருந்தது. அவன் கண்கள் அதைக் கண்டு பிடிக்கச் சிறிது சிரமப்பட்டன.

சில்ந்தி சுவர்களின் ஒரு மூலையில் தரை ஒரத்தில் பதுங்கியிருந்தது.

‘இங்கேயா இருக்கிறது?’ என்று முனங்கியபடி அவன் வேகமாக அறைந்தான். செருப்பு பூச்சியின் மீது பட்டது. ஆயினும் அதைச் சாகடிக்கும் விதத்தில் தாக்கவில்லை.

அது ஓடியது. அதன் கால் ஒன்று தரையில் தனியாகக் கிடந்தது.

பூச்சி வேறொரு இடம் சேர்ந்து அசையாமல் நின்றது. சிதம்பரம் தாமதிக்கவில்லை. இந்தத் தடவை தவறு செய்யவுமில்லை. சரியாக அதைத் தாக்கி நசுக்கித் துவைக்கும் விதத்தில் செருப்பை உபயோகித்தான.

சிதைந்து, உருக்குலைந்து, அசிங்கமான திரவமும் உடலும் கூழாகிவிட்ட நிலையில் காட்சி அளித்தது சிலந்தி.

அதைத் துடைப்பத்தால் எடுத்துத் தூர எறிந்து விட்டு அவன் படுக்கையில் படுத்தான். விளக்கு எரிந்து கொண்டுதானிருந்தது. அவன் மனம் ஒடுங்கவில்லையே! அவனுக்கு இனி தூக்கம் வருவதாவது!...

சிலந்திப் பூச்சி என்றாலே சிதம்பரத்துக்கு மன உளைச்சல்தான். அவனுக்கு அது ஒரு அப்ஸஷன்’.

* * *

சிலந்தி மிக மோசமான ஜந்து என்பது சிதம்பரத்துக்கு அவனது எட்டாவது வயசில் புரிந்தது.

அவன் உடலில் வட்டம் வட்டமாக ‘பற்று’ படர்ந்தது. அரிப்பெடுத்தது. சொறிந்தால், புள்ளி 

கள் போல் அடை அடையாய் தென்பட்டன. அவை கழுத்திலும், மார்பிலும், முதுகிலும் எங்கும் பரவின.

‘இது எட்டுக்கால் பூச்சி விஷத்தினால் ஏற்பட்டிருக்குது. நீ தூங்குகிறபோது சிலந்திப் பூச்சி கடித்திருக்கும், இதற்கு பார்வை பார்க்கணும் என்று பெரியம்மா ஒருத்தி உபதேசித்தாள். ‘பார்வை பார்ப்பதில்’ தேர்ந்த ஒரு பெரியவர் இருக்குமிடத்தையும் அவள் குறிப்பிட்டாள். ‘போகும்போது ஒரு பாட்டிலும் கொண்டு போ. பச்சை நிற பாட்டில் வேணுமின்னு அவர் சொல்லுவார். வெள்ளை பாட்டில் ஆகாதாம். அதனாலே பச்சை பாட்டிலே எடுத்துப் போ. அவரு மந்திரிச்சு தண்ணீர் தருவாரு. அதை என்ன செய்யணுமின்னும் சொல்லுவாரு’ என்றும் அறிவித்தாள்.

அவ்வாறே அவன் செய்தான். ‘சிவப்பழம்’ ஆகத் தோன்றிய பெரியவர் அவனைத் தன்முன் நிறுத்தி மந்திரித்தார். முனங்கி, தண்ணீரை அள்ளிச் சுற்றி, அவன் தலைமீது தெளித்தார். தம்ளரில் பாக்கியிருந்த நீரை, அவன் கொண்டு வந்திருந்த புட்டியில் ஊற்றி அவனிடம் கொடுத்தார்.

‘இந்த பாட்டிலை கீழே எங்கும் வைக்காமல் வீட்டுக்கு எடுத்துப் போ. வீட்டிலும் தரையிலே வைக்கப் படாது. மரப்பலகைமீதுதான் வைக்க வேண்டும். ஸ்டுல் அல்லது பெஞ்சு அல்லது அலமாரித் தட்டு – இது மாதிரி எதன் மேலாவது வை. இந்தத் தண்ணியை மூன்று வேளைகளில் குடித்துத் தீர்த்துவிடு. சரியாகப் போம் என்றார்.

அவனும் பயபக்தியோடு, அவர் அறிவித்தபடியே செய்து முடித்தான். அவன் தேகத்தில் படர்த்த பூச்சிக்கடி விளைவு மாயமாக மறைந்துவிட்டது. . .

அது எதனால் நேர்ந்தது?

அன்றும் அது அவனுக்கு விளங்கவில்லை. அதன் பின்னரும் தெளிவு ஏற்பட்டதில்லை.

–'சிலர் கண்களுக்கும் எண்ணத்துக்கும் விசேஷமான ஒரு சக்தி உண்டு. அவர்கள் கூர்ந்து பார்த்து, திடமனசோடு எண்ணினால், அந்த எண்ணத்தின்படி பலன் ஏற்படும்’ என்கிறார்களே. ‘பார்வை பார்த்த’ பெரியவரும் அத்தகைய ஆத்ம சக்தி பெற்றிருக்கலாம். மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக – ஒருவிதமான பயமும் பக்தியும் உண்டாக்குவதற்காக – தண்ணீர், பச்சை நிற பாட்டில், அதை மரப்பலகை மீதுதான் வைக்க வேண்டும் எனும் விதி என்றெல்லாம் அவர் ஒழுங்கு செய்திருக்கலாம்.

இவ்வாறு சிதம்பரம் பிற்காலத்தில் எண்ணியது உண்டு. எனினும் இதுதான் சரி என்று அவன் உள்ளம் துணிந்து சாதித்ததில்லை...

இந்த இரவில், தடித்த பூச்சியைக் கொன்று விட்டு, படுக்கையில் படுத்துக் கிடந்த போதும் அவன் அதைப் பற்றி எண்ணிஞன்.

முன்பு பார்வை பார்த்த பெரியவர் இறந்து எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு சிதம்பரம் பல தடவைகள் சிலந்திப் பூச்சிக் கடியினால் அவதிப்பட்டது உண்டு. அச் சந்தர்ப்ப்ங்களில் எல்லாம் அவன் பெரியவரைப்போல் ‘மந்திரிக்கக்கூடிய ஆள் எவரையும் காண முடிந்ததில்லை. மேலும், பூச்சிக் கடியின் விளைவு சில தினங்களில் தானாகவே மறைந்து விடும்.

எனினும், அவன் உள்ளத்தில் சிலந்தி தனியொரு இடம் பெற்று நின்றது. நினைவாக வள்ர்ந்து அரித்துக் கொண்டிருந்தது. கனவிலும், நுண்ணிய இழைகளை ஓடவிட்டு வலை பின்னி அவன் மூளையில் பதிய வைத்தது. பித்தாய், பேயாய், படுத்தி வந்தது. கோளாறாய், குணக் கேடாய், வளர்ந்து அவனை ஆட்டிப் படைத்தது.

சிறு சிறு பூச்சிகளிலிருந்து பென்னம் பெரிய சிலந்திகள்வரை, பலரகமான் பூச்சிகள் சதா அவன் நினைவில் ஊர்ந்து கொண்டிருந்தன. எப்பவாவது ஏதாவது பூச்சி கடித்தாலும் கூட, சிலந்தி தான் கடித் திருக்கும் என்று நம்பி அவன் கஷ்டப்படுவது வழக்கம். ‘காணாக்கடி'யாக ஏதாவது அவனை கடித்துக்கொண்டு தானிருந்தது. தேகத்தில் அங்குமிங்கும் அரிப்பும், கழுத்துப் பக்கத்திலும் மூக்கோரத்திலும் கண் இமை கள் மீதும் வட்டங்களாகவும் புள்ளிகளாகவும் பற்று வருவது போவதாகவும் இருந்தன.

அவனைக் கடிக்காத வேளைகளில்கூட. சிதம்பரத்தின் மனம் சிலந்திப் பூச்சிகளைத் தேடித் திரிந்தது. அவன் நினைவு அந்தப் பூச்சியைச் சுற்றியே வலை பரப்பியது. எங்கோ எப்போதோ படித்ததன் நினைவு அவன் தூக்கத்திலே கனவாய், பயங்கரமாய் நிழலாடுவது முண்டு.

–ஆப்பிரிக்காவிலோ, அல்லது வேறு எங்கோ, ஒருவகைச் சிலந்தி உண்டு. மனிதர் கீழே படுத்துத் தூங்கும்போது அந்தப் பூச்சி வந்து அவர்கள் தலைமீது ஊர்ந்து, மயிர் முழுவதையும் கத்திரித்துவிடும். அது ஆப்படிச் செய்வது, படுத்துத் தூங்குகிறவனுக்குத் தெரியாது. அவன் விழித்தெழுந்த பிறகு தான் தன்து தலை மொட்டையாகியிருப்பதை உணர முடியும்.

இதை_அவன் ஒரு பத்திரிகையில் படித்தது முதல் இச் செய்தியால் பித்துற்றான். அந்த ரகச் சிலந்தி மனிதர் தலைமுடியை மட்டும் தான் கத்திரிக்குமா; அல்லது. மயிர் அடர்ந்த உடல் பெற்ற பிராணிகள் மீதும் ஊர்ந்து தனது வேலையைக் காட்டுமா? அவன் அறிவு இவ்வாறு குரல் கொடுத்தாலும் கூட, இச் சந்தேகத்தை விட அவனது விசித்திர உணர்வே அதிக வலிமை பெற்று மேலோங்கியது.

தூக்கத்தில் அவன் கை தலையைத் தடவிப் பார்த்துக் கொள்ளும். இரவில் இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் – வேளைகெட்ட வேளைகளில் எல்லாம்–விந்தைச் சிலந்தி அவனது அடர்ந்த கரிய தலை முடியினூடே புகுந்து விளையாடுவது போன்ற உணர்வு பெற்று அவன் திடுக்கிட்டு எழுவான். மயிர் கொட்டி விடவும், மண்டையில் அங்கங்கே சொட்டை விழுந்து விகாரத் தோற்றம் பெற்றுவிட்டது போல் அவனுக்குப் படும். உடனே விளக்கை ஏற்றி, கண்ணாடி முன் நின்று ஆராய்ச்சி செய்வான் அவன். – ‘டாரன்ச்சலா’ என்ற இனத்துப் பூச்சி பற்றி அவன் அறிந்தது முதல், சிதம்பரத்தின் மனப்பித்து மோசமான நிலை எய்தியது...

டாரன்ச்சலா இனச் சிலந்தி பெரியது; மயிர் செறிந்தது. விகார உருவம் பெற்ற இது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் விஷம் உடையதல்ல. இத்தாலியிலும் ஐரோப்பாவின் வேறு சில நாடுகளிலும் காணப்படுகிற இந்தச் சிலந்தியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு நாட்டியம் ஆட வேண்டும் என்ற வெறி பிறக்குமாம். அவர்கள் அந்த உணர்வு தீருகிறவரை வெறியாட்டு ஆடவேண்டியதுதான். ..

சிதம்பரம் இந்த இனச் சிலந்தியை நேரில் காணும் வாய்ப்பு பெற்றவனல்ல. அதன் படத்தை மட்டுமே கண்டிருந்தான். ஆயினும் டாரன்ச்சலா அவன் மூளை யில் ஒரு பகுதியில் குடியேறிவிட்டது!

அந்தப் பெருஞ் சிலந்தி அவனைக் கடித்துவிட்டது போலவும், ‘ஆடு! எழுந்து குதித்து, கூத்தாடுடா பயலே!’ என்று உத்திரவிடுவது போலவும் உணர்வு எழும் அவனுக்கு.

ஒன்றிரண்டு தடவைகள் அவன் எழுந்து நின்று ‘திங்கு திங்கென்று’ குதித்துக் கூத்தாடவும் செய்திருக்கிறான். நல்லவேளே! அச்சந்தர்ப்பங்களில் அவன் தனியனாய் தனது அறையிலேயே இருந்தான். வேறு எங்காவது இருந்திருந்தால் அவனுக்குப் பைத்தியம் என்றே மற்றவர்கள் முடிவு கட்டியிருப்பார்கள்.

அவனுக்குப் பைத்தியம்தானா? அல்லது, பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? பைத்தியத்தின் வித்து விழுந்து, மனம் சிறிது சிறிதாகப் பேதலித்து வரும் தன்மையோ? அறிவு மயக்கமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலைமையாக இருக்குமோ?

திட்டமாகச் சொல்வதற்கில்லை. எதுவாகவும் இருக்கலாம். எதுவும் இல்லாது, வேறு குழப்பமாக இருந்தாலும் இருந்துவிடலாம். மனித உள்ளத்தின் சிக்கல்களை யார்தான் எளிதில் விடுவிக்க முடிகிறது?  சிதம்பரம் அன்றாட அலுவல்களை ஒழுங்காகத்தான் செய்துவந்தான். முக்கியமான வேலை என்று எதையும் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்குக் கிடையாது. வாழ்க்கை வசதிகள் பலவும் இருந்தன. ஆகவே, சோம்பியிருக்கவும், வீண் எண்ணங்களை வளர்க்கவும் நேரம் நிறையவே கிடைத்தது. அத்தகைய வேளைகளில் அவன் மனம் அடிக்கடி சிலந்தியைச் சுற்றியே நூல் ஒடவிட்டு, தான் பின்னிய வலையில் தானே சிக்கிச் சுழன்று, எண்ணச் சிக்கலை அதிகமாக்கிக் கொண்டு குழம்பித் தவிக்கும். –

இந்த உலகத்திலேயே தனது முதல் விரோதி சிலந்திப் பூச்சிதான் என்றும், கண்டபோதெல்லாம் அந்த இனப் பூச்சியை நசுக்கிக் கொல்ல வேண்டும் என்றும் தவித்தான் அவன். இந்த இனத்தை அவன் அடியோடு ஒழித்துக் கட்டிவிட முடியாது என்றும், அவனுக்கு அந்தப் பூச்சியினால்தான் மரணம் சம்பவிக்கும் என்றும் அவன் உள்ளம் அடிக்கடி அவனுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

சில சமயங்களில் அந்தப் பூச்சி – சிலந்தி இனப் பூச்சிகளில் எதுவாவது ஒன்று – அவன் கண்களைக் கவர்ந்து, மனசை வசீகரித்து, வியந்து நிற்கும்படி செய்துவிடும்.

ஒருதடவை சிதம்பரம் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந் தான். இருபுறமும் மரங்கள் ஓங்கி வளர்ந்த பாட்டை மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகளும், பழுப்புகளும், காய்களும் பூக்களும் எங்கும் சிதறிக் கிடந்தன. அவை இன்னும் உதிர்ந்து கொண்டிருந்தன... திடீரென்று அவன் முன்னே, காலுக்கு அருகிலேயே, ‘டப்’ என்று எதுவோ விழுந்தது. வேப்பம் பழமாக இருக்கும் என்று அவன் எண்ணினன்.

மேலே கவிந்து நின்ற வேப்ப மரத்திலிருந்துதான் அது விழுந்தது. ஆனல் அவன் ஏமாற்றமும் வியப்பும் ஒருங்கே அடைய நேர்ந்தது. வேப்பம் பழம்போல் உருண்டையாக இருந்தது அது. வெண்மையும் பசு மையும், சிறிது மஞ்சள் நிறமும் கலந்த உடலும், பசிய குச்சிகள் போன்ற கால்களும் பெற்ற சிலந்திப் பூச்சியாக இயங்கியது. நகர்ந்தது. அவன் காலை நோக்கி ஓடிவர முயன்றது.

அவன் பாதம் தானாகவே பின்னுக்கு நகர்ந்தது. இயற்கையின் அற்புதமான ஆற்றலை - சூழ்நிலைக்கு ஏற்ப ஜந்துக்களைப் படைத்து, அவற்றுக்கு இயல்பான பாதுகாப்பு அளிக்கும் தன்மையை - எண்ணி வியப் புற்றான் அவன். அதற்குள் அந்தப் பூச்சி அவன்மீது தாவி ஏறுவதற்காக நெருங்கி விட்டது.

செருப்புக் காலால் அதை நசுக்கிக் கொன்றிருக்கலாம். கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழாமலில்லை. எனினும் அதைக் கொல்ல அவன் கால் நகரவில்லை. மனம் தூண்டவுமில்லை. அந்த விஷப் பூச்சி, மலரும் நிலையிலுள்ள குண்டு மல்லி மொக்கு போல் புதுமையாக இருந்தது; பசுமையாயும் அழகாக் வும் இருந்தது. அத வசீகரிக்கப்பட்டு நின்ற அவனுடைய உள்ளுணர்வு வேகமாக உந்தியது. அவன் விலகி நகர்ந்தான்.

அந்தப் பூச்சியையே கண் வைத்துக் காத்திருந்த ஒரு காக்கை குபீரென்று பாய்ந்தது. தன் கூரிய மூக்கால் பூச்சியைக் கொத்தியது. கொன்றது. கவ்வி எடுத்துப் பறந்தது.

சிதம்பரம் அந்தப் பூச்சிக்காக அனுதாபப் படவில்லை. அவனுக்கு ஏதாவது ஒரு சிலந்திப் பூச்சியால் சாவு ஏற்படும். ‘ஜலமண்டலி’ கடித்தால் மரணம் நிச்சயம் என்றுதானே சொல்கிறார்கள்? - என்று அவன் உள்மனம் அப்பொழுது ஜாதகம் கணித்தது.

* * *


தூக்கம் பிடிக்காமல் கிடந்த சிதம்பரத்தின் கண்கள் ஒளிக் குமிழையே உற்றுநோக்கிக்கொண்டிருந்தன. வைரக் கம்பிகள்போல் அதிலிருந்து பாய்ந்த ஒளிக்கோடுகள் எல்லாம் சிலந்தியின் மெல்லிய நூல்கள் போலவும், ஒவ்வொன்றிலும் ஒரு பூச்சி தொங்கிப் பாய்வது போலவும் தோன்றியது.

ஒரு தடிப் பூச்சி வாயில் வெள்ளை வட்டம் ஒன்றைக் கவ்வியபடி வந்து விழுந்தது. உற்றுக் கவனித்தால், அது அவ் வட்டப் பொருளைத் தன் கால்களால் நன்கு பற்றியிருப்பது புரிந்தது.

சிதம்பரம் ஒரு குச்சியால் விரட்டவும், சிவந்தி அதை நழுவ விட்டுவிட்டது. அவன் அதைக் குத்தினான். அது கிழிந்து, அதனுள்ளிருந்து பலபல பூச்சிகள் - சின்னஞ் சிறு சிலந்திகள் - வெளிப்பட்டுச் சிதறின. குடுகுடு வென ஓடி ஊர்ந்தன. அவனைச் சுற்றி ஓடின. அவன் உடல் மீதும் ஏறின.

‘ஐயோ ஐயோ!’ என்று அலறிக்கொண்டு துள்ளி எழுந்தான் அவன். கைகளால் நெடுகிலும் தேய்க்க முயன்றான். எனினும் பூச்சிகள் வேகமாக ஊர்ந்து படர்ந்தன. பெரிய பூச்சிகூட - ‘இதுதான் ஜலமண் லியோ?’ - அவனைத் துரத்தி வந்தது.

செய்யும் வகை புரியாதவனாய் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு கைகளை ஆட்டி அசைத்து, ‘ஐயோ, ஐயோ!’ என்று கூச்சலிட்டபடி ஓடலானான் அப்பாவி சிதம்பரம்.

*
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்_சிங்கம்/சிலந்தி&oldid=1071110" இலிருந்து மீள்விக்கப்பட்டது