ஆர்க்டிக் பெருங்கடல்/ஆர்க்டிக் ஆராய்ச்சி
ஆராய்ச்சி தொடங்குதல்
புது வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சீனா விற்கும் இந்தியாவிற்கும் - வட முனையை அடைய வேண்டும், அங்குள்ள நிலப் பகுதிகளை ஆராய வேண்டும் என்னும் அடிப்படையில்தான் ஆர்க்டிக் ஆராய்ச்சி தொடங்கிற்று.
முதல் பயணிகள்
ஆர்க்டிக் பகுதிக்குச் சென்ற முதல் பயணிகள் நார்வே நாட்டுக்காரர்கள் ஆகும். அவர்கள் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குடியேறத் தகுந்த பகுதிகளாகச் செய்தனர்.
பெத்தியாஸ் என்பார் கிரேக்க ஆராய்ச்சி யாளர். இவர் கி.மு. 325 - இல் பயணத்தை மேற் கொண்டவர். முதன் முதலில் உலகத்தைச் சுற்றி யவர். இவர்தான் ஆர்க்டிக் வட்டத்தைத் தம் பயணத்தில் முதலில் தொட்டுச் சென்றவர். நார்வே நாட்டுக்காரர்களுக்கு முன்பு, இவரே ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் சென்றவர்.
புத்துயிர் பிறத்தல்
15- ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் டச்சுக்காரர்களும் கடற் பயணங்களைத் தொடங்கினர். மற்ற நாடுகளும் அவற்றைப் பின்பற்றின. ஆர்க்டிக் ஆராய்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. புது வழிகள் கண்டுபிடிக்க வேண்டுமென் பது தொடக்க கால ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாகும். பிற்கால ஆராய்ச்சியாளர்கள் வட முனையை அடைய வேண்டும், ஆராய வேண்டும் என்னும் நோக்கமுடையவர்கள்.
புரோபிஷர்
இவர் தம்முடைய முதல் பயணத்தின் பொழுது, முதன் முதலாக எஸ்கிமோக்களைக் கண்டார். 1577- இல் இவர் இரண்டாம் பயணத்தை மேற்கொண்ட பொழுது, ஆசியாவிற்கு வட மேற்கு வழியைக் கண்டுபிடிக்கும் சிக்கலை ஒருவாறு தீர்த்தார். நிலப் பகுதியின் உள்ளே சென்றார்; அங்கு லைக்கன் பூண்டுகளையும் பாசிகளையும் கண்டார்.
ஜான் டேவிஸ்
இவர் 1585-87-ஆம் ஆண்டுகளுக்கிடையே மூன்று பயணங்களை மேற்கொண்டார். கிழக்கு நாடுகளுக்கு வட மேற்கு வழியைக் காணும் முயற்சியை ஊக்குவித்தார். இவரது பயணங்களால் எஸ்கிமோக்களைப்பற்றி மேலும் நன்கறிய முடிந்தது. வட முனைக்கு நேராகச் செல்லும் வழியில் இவர் செல்ல முடிந்தது. ஆனால், பசிபிக் கடல் நோக்கிச் சென்றதால், அவ்வழியாக இவர் தொடர்ந்து செல்லவில்லை.
பேரண்ட்ஸ்
10 ஆண்டுகள் கழித்து டச்சுக்காரரான பேரண்ட்ஸ் என்பார் சீனாவுக்கு வட மேற்கு வழியைத் தேடும் முயற்சியில் தமது புகழ்மிக்க பயணத்தை மேற்கொண்டார். ஆனால், இப்பயணத் தில் எல்லோரும் தீவினைப் பயனாக இறக்க நேர்ந்தது. இப்பயணத்தில் இவர் தம் குழுவினருடன் அடைந்த துன்பங்கள் அளவிலடங்கா. இவை மனிதனின் நெஞ்சுரத்திற்கும் பொறுக்கும் தன் மைக்கும் சிறந்த சான்றுகள் ஆகும்.
300 ஆண்டுகள் வரை இவர் மடிந்த இடத்தை யாரும் சென்று பார்க்கவில்லை. 1871-இல் கேப் டன் கார்ல்சன் என்பார் அவ்விடத்தைப் பார்வையிட்டார்; கண்டார் பல நினைவுச் சின்னங்களை!
அவர்கள் கட்டிய மரவீடு அப்படியே இருந் தது. அடுப்பில் சாம்பல் அப்படியே கிடந்தது. பழைய கடிகாரம் ஒன்றும் இருந்தது. பேரண்ட் சின் புல்லாங்குழலும் அங்கிருந்தது. இவையும் மற்ற நினைவுச் சின்னங்களும் இன்றும் டச்சு அரசாங்கத்திடம் உள்ளன.
இதற்குப் பின் ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி நடைபெற்றது. புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டன. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புதியவை எவையும் கண்டுபிடிக்கப்பட வில்லை.
குக்
18- ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் ஆர்க்டிக் ஆராய்ச்சி கைவிடப்பட்டது என்றே சொல்லலாம். துருவப் பகுதிகளில் விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பயணங்களுக்குக்கூட அரசு ஆதரவு அளிப்பது அரிதாக இருந்தது.
இருப்பினும், 1778 - இல் கேப்டன் குக் என்பார் பசிபிக்கிலிருந்து அட்லாண்டிக் கடலுக்கு வட கிழக்கு அல்லது வட மேற்கு வழியைக் காணுவதில் முயன்றார். 1815 இல் வட மேற்கு வழியைத் தேடுவதில் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட் டது. புத்துயிர் அளிக்கும் இம்முயற்சியில் எட்வர்டு பேரி, ஜான் பிராங்கிளின் முதலியோர் ஈடுபட்டனர்.
பேரி
1827 இல் ஆர்க்டிக் ஆராய்ச்சியில் புதுத் திருப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டில் பேரி என் பார் வட முனையை அடைய முயன்றார். கப்பலை விட்டு வடக்கே படகுகளில் சென்றார். படகுகளை இவரது குழுவினர் பனிக்கட்டியில் இழுத்துச் சென்றார்கள். ஆனால், பருவநிலை குறுக்கிட்டதால், இவர் வட முனையை அடைய முடியவில்லை. இவருக்குப்பின் பலர் சென்று பல புதிய பகுதிகளைக் கண்டறிந்தனர்.
கெண்ட் கேனி
1852 இல் டாக்டர் எலிசா கெண்ட் கேனி என்பார் அமெரிக்க அரசாங்க ஆதரவில் தம் பயணத்தை மேற்கொண்டார். ஆர்க்டிக் ஆராய்ச்சியில் இவரது பயணம் சிறந்தது. ஆர்க்டிக்கின் பயிர், விலங்கு, காந்த நிலைமைகள், தட்ப வெப்ப நிலை பற்றி மதிப்பிடற்கரிய செய்திகள் கிடைத்தன . எஸ்கிமோக்களைப் பற்றியும் முறையாகச் செய்திகளைத் திரட்ட முடிந்தது.
கிரீன்லாந்திற்கு மேற்கே, ஆர்க்டிக் கடலுக்கும் ஸ்மித் சவுண்டு என்னுமிடத்திற்கும் இடையே சிறந்த நீர் வழிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக வடமுனையை எளிதாக அடையலாம் என்பதும் அறியப்பட்டது.
கிரீலி
1883 இல் அமெரிக்கப் போர்ப்படையைச் சார்ந்த லெப்டினண்ட் கிரீலி என்பார் ஆர்க்டிக் கில் லேடி பிராங்கிளின் விரிகுடாவைச் சுற்றி ஆராய்ந்தார். அப் பகுதியின் காந்த ஆற்றல், அலை எழுச்சிகள், தட்ப வெப்பநிலை, பயிர், விலங்கு ஆகியவை பற்றிப் பல அரிய உற்று நோக்கல்கள் செய்தார்.
பியரி
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்க்டிக் ஆராய்ச்சியில் அரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 இல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் பியரி என்பார் முதன் முதலாக வட முனையை அடைந்தார். இவர் தம் குழுவினருடன் 450 மைல்களை நடந்தே கடந்தார்; அடைந்தார் வட முனையை. டாக்டர் குக் என் பாரும் 1908 இல் வட முனையை அடைந்ததாக உரிமை கொண்டாடினார்.
வில் கிட்ஸ்கி
உருசிய நாட்டைச் சார்ந்த இவர் இரண்டு பனி தகர்க்கும் கப்பல்களைக் கொண்டு தம் பயணத்தை 1915 இல் மேற்கொண்டார். சைபீரியாவின் ஆர்க்டிக் கடற்கரை பற்றி அரிய செய்திகளை இப்பயணத்தின் மூலம் திரட்ட முடிந்தது. இன்றும் அப்பகுதியை அளவையிட உருசியா படகுகளை அனுப்பிய வண்ணம் உள்ளது.
ராஸ்முசன்
நார்வே நாட்டைச் சார்ந்த இவர் 1920 - 30 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பயணங்களை மேற்கொண்டு கிரீன்லாந்தைப்பற்றியும் எஸ்கிமோக்களைப் பற்றியும் அதிகம் அறிந்தார்.
பயர்டு
விமானங்களும் ஆர்க்டிக் பகுதிகளுக்குச் செல்ல இயலும்; ஆராய்ச்சி செய்ய இயலும்; என்னும் நிலை 1925 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்டது. இந்த ஆண்டில் அமுண்ட்சன் என்பார் விமான மூலம் வட முனையை அடைய முயன்றார்; முடியவில்லை; காரணம் போதிய பெட்ரோல் இல்லை.
1926 இல் பயர்டு என்பார் ஸ்பிட்ஸ்பர்கன் என்னுமிடத்திலிருந்து விமானம் மூலம் வட முனைக்குச் சென்று வெற்றியுடன் திரும்பினார்.
வில்கின்ஸ்
1928 இல் சர் ஹயூபர்ட் வில்கின்ஸ் என்பார் ஸ்பிட்ஸ்பர்கன் என்னுமிடத்திலுள்ள ‘டெட் மேன்’ தீவை அலாஸ்காவிலிருந்து விமான மூலம் அடைந்தார். செல்வதற்கான நேரம் 20½ மணி. அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து, வானிலை ஆகியவை பற்றி ஆராய்ந்தார்; உற்று நோக்கல்கள் செய்தார்.
உருசியர்
1930 ஆம் ஆண்டிலிருந்து உருசியர்கள் வட முனையை விரிவாக ஆராயத் தொடங்கினர். 1936 இல் நீர்நூல் தொடர்பாக ஒரு பயணம் மேற் கொள்ளப்பட்டது. 1937 இல் சோவியத்து அரசு வடமுனையில் நிலையம் ஒன்றை அமைத்தது. இதே ஆண்டில் உருசிய விமானிகள் இரு தடவைகள் வடமுனை வழியாக மாஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பறந்து சென்றனர்.
1937-38 ஆம் ஆண்டுகளுக்கிடையே சோவி யத்து நாட்டைச் சார்ந்த பேராசிரியர் ஆட்டோ ஸ்கிமிட் என்பார் தலைமையில் பயணம் ஒன்று நடைபெற்றது. இப் பயணத்தின் முடிவுக்கேற்ப, வடமுனையில் நிலவும் கோடையின் தட்ப வெப்ப நிலை முன்பு நினைத்ததைவிடச் சீரானது என்பது தெளிவாயிற்று. நீர் உறைநிலைக்கு மேலும் வெப்ப நிலைகள் பதிவாயின.
போருக்குப்பின்
இரண்டாம் உலகப் போரின் பொழுது பல நாடுகள் மறைவாக ஆர்க்டிக் ஆராய்ச்சியை மேற்கொண்டன. ஆர்க்டிக் பகுதி வளர்ச்சியில் உருசியா கவனம் அதிகம் செலுத்தியுள்ளது.
போருக்குப்பின் அமெரிக்காவின் வானிலை உற்று நோக்கு விமானங்கள் வடமுனை வழியாகச் செல்லத் தொடங்கின.
அமெரிக்காவும் கனடாவும் பல வானிலை நிலையங்களை அமைத்துள்ளன. இவை கனடா விற்கு வடக்கே உள்ள தீவுகளில் அமைந்துள்ளன. தென்மேற்குக் கிரீன்லாந்தில் தூல் என்னுமிடத்தில் அமெரிக்கா ஒரு பெரிய விமானத் தளத்தைக் கட்டியுள்ளது.
1957 இல் கனடாவைச் சார்ந்த ஆர்க்டிக் பகுதியில் ஒரு விரிவான ரேடார் நிலையத்தை அமெரிக்கா அமைத்தது. துருவ வழியாக நடைபெறும் விமானத் தாக்குதலை முன் கூட்டி அறிந்து, அதைத் தவிர்த்து, அமெரிக்காவைப் பாதுகாக்க இந்நிலையம் அமைக்கப்பட்டது. இன்று ஆர்க்டிக் பகுதியில் உரிமை கொண்டாடும் நாடுகள் அதில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.
நில இயல் நூல் ஆண்டின் பொழுது ஆர்க்டிக் ஆராய்ச்சியில் 12 நாடுகள் கலந்து கொண்டன.