ஆர்க்டிக் பெருங்கடல்/எஸ்கிமோக்கள்

5. எஸ்கிமோக்கள்

சொல்லின் பொருள்

எஸ்கிமோ என்னும் சொல் இந்தியச் சொல்லாகும். அதற்குப் பொருள், பச்சை இறைச்சியை உண்பவர்கள் என்பதாகும். இம் மக்கள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றனர்.

வாழும் இடங்கள்

இவர்கள் முதன் முதலில் சைபீரியாவில் வாழ்ந்தவர்கள். இன்றும், உருசியாவைச் சார்ந்த சைபீரியாவில், சிலர் வாழ்கின்றனர். இவர்களது தொகை கிட்டத்தட்ட 40,000 ஆகும். இவர்களில் 15,000 பேர்களுக்கு மேல் அலாஸ்காவில் (அமெரிக்கா) வாழ்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிங் கடலைக் கடந்து, இவர்களது முன்னோர் அலாஸ்காவை அடைந்தனர்.

இதைவிட அதிகமான பேர் கிரீன்லாந்தில் வாழ்கிறார்கள். 7,000 பேருக்கு மேல் கனடாவின் வட பகுதியிலும், மையப் பகுதியிலும் வாழ்கின்றனர். எஞ்சிய பேர் லேப்ரடாரில் (கனடா) வாழ்கின்றனர்.

இயல்புகள்

எஸ்கிமோக்கள் குட்டையாயும் பருத்தும் இருப்பார்கள். தட்டையான மூக்குகளும், அகன்ற முட்டை வடிவமுள்ள முகங்களும், உயரமான தாடை எலும்புகளும், நீண்ட, கறுத்த மயிரும் இவர்களது உடல் இயல்புகள் ஆகும்.

இவர்கள் மிகத் தூய்மையாக இருப்பவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள் ; நேர்மையும் நாணயமும் கொண்டவர்கள். இருப்பதைக் கொண்டு இனிய, எளிய வாழ்க்கை நடத்துபவர்கள்.

இவர்களில் பலர், இன்றும், தங்கள் முன்னோர் வாழ்ந்தது போலவே வாழ்கின்றனர். ஆனால், பலர் வெள்ளையர் நடை உடை பாவனைகளைப் பின் பற்றியுள்ளனர்.

அலாஸ்காவிலுள்ள அமெரிக்க அரசும், கிரீன்லாந்திலுள்ள டேனிஷ் அரசும், கனடிய அரசும் இவர்களுக்குக் கல்வி புகட்டும் நற்பணியிலும், பொது நலத்தை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளன.

தொழில்

முன்பு வேட்டையாடுதல் மீன் பிடித்தல் மட்டுமே இவர்களது தொழிலாக இருந்தன. பின்பு பலர் வாணிபம் செய்யத் தொடங்கினர். தங்களிடமுள்ள மென்மயிருள்ள தோல்கள், திமிங்கில எலும்பு முதலியவற்றை வெள்ளையரிடம் கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கலாயினர்.

துப்பாக்கி சுடுவதில் இவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. இதனால், விலங்குகளை அதிகமாகக் கொன்றதினால், இவர்களுக்கு வேண்டிய உணவும், மென்மயிர்த் தோல்களும் கிடைக்காமல் போயின. இதை ஒருவாறு ஈடு செய்ய அமெரிக்க அரசு கலைமான்களை வழங்கி, அவற்றை வளர்க்கக் கற்றுக் கொடுத்தது. அவற்றிலிருந்து தங்களுக்கு வேண்டிய இறைச்சியையும், தோல்களையும் பெறத் தொடங்கினர்.

இவர்களில் சிலர் உணவுப் பண்டங்கள் பதனிடும் அமெரிக்கத் தொழிற்சாலைகளிலும், கட்டடம் கட்டும் இடங்களிலும் வேலை செய்கின்றனர்.

உணவு

பச்சை இறைச்சி, மீன், எண்ணெய் முதலியவை இவர்களது முக்கியமான உணவுப் பண்டங்கள். கடல் நாய்கள், நீர் யானை, திமிங்கிலம் முதலியவை இவர்கள் உண்ணும் கடல் விலங்குகள். நிலப் பகுதியிலுள்ள எருது, கரடி, முயல் முதலியனவும் இவர்கள் உண்ணும் விலங்குகளே. ஈட்டி கொண்டு இவர்கள் விலங்குகளை வேட்டை யாடுவர்.

தாவரத்தின் தண்டுகளும் காய்களும் கோடையில் இவர்களுக்கு உணவாகப் பயன்படும்.

உடை

வழக்கப்படி ஆண்கள் கால்சட்டைகளையும், ஜாக்கெட்டுகளையும், பூட்ஸ்களையும் (boots) அணிந்து கொள்வர். இவற்றையே பெண்களும் அணிந்து கொள்வர். இவை விலங்குகளின் மயிர்களில் இருந்தும், தோல்களில் இருந்தும் செய்யப் பட்டவை. ஜாக்கெட்டுகளுக்கு மேல், மயிர்த் தோல்கள் கதகதப்பிற்காக இணைக்கப்பட்டிருக்கும். இவற்றிற்குப் பர்காஸ் என்று பெயர். பெண்கள் எலும்புகளை ஊசியாகவும், தசை நார்களை நூலாகவும் கொண்டு தோல்களைத் தைத்துத் தங்களுக்கு வேண்டிய உடைகளைத் தயாரித்துக் கொள்வர். ஆக, இவர்களது ஆடை அல்லது உடை நாம் அணிவது போன்று பருத்தியாலோ பட்டாலோ ஆனதல்ல.

இல்லங்கள்

இவர்கள் வீடுகள் கூண்டுகள் போல இருக்கும். கோடைக்கால வீடுகள், தோல்கள், மரம், திமிங்கல எலும்புகள் கொண்டு கட்டப்படும். மாரிக்கால வீடுகள் கற்களாலும், கட்டைகளாலும் கட்டப்படும். மேல் பகுதி மண் அல்லது பனிக் கட்டியினால் மூடப்படும். தோல்கள் திரைகளாக வீட்டின் நுழைவு வாயிலில் குளிரைத் தாங்கத் தொங்க விடப்படும். வீடு கட்டப் போதிய பொருள்கள் கிடைக்காவிட்டால், பனிக்கட்டியைக் கொண்டே வீடுகளைக் கட்டுவார்கள். இவை தற்பொழுது கட்டப்படுவதில்லை. நீண்ட கால வேட்டையாடுதலுக்குத் தற்பொழுது இவை பயன்படுகின்றன.

அகல் போன்ற ஒரு பாண்டத்தில் எண்ணெயை ஊற்றுவார்கள். அதில் காய்ந்த ஒரு பாசியைப் போட்டுத் திரியாகப் பயன்படுத்தி எரிப்பார்கள். இதுவே எஸ்கிமோக்களுடைய விளக்காகும்.

போக்கு வரத்து

நிலப் போக்குவரத்து சறுக்கு வண்டிகள், கலைமான்கள் ஆகியவற்றின் வாயிலாக நடை பெறுகிறது. சறுக்கு வண்டிகளைப் பனிக்கட்டியின் மீது நாய்கள் இழுக்கும். பொதிகளை, மூட்டை முடிச்சுகளைக் கலைமான்கள் சுமக்கும்.

நீர்ப் போக்கு வரத்துக்குப் படகுகள் அல்லது தோணிகள் பயன்படுகின்றன. இவை இரு வகைப்படும். அவற்றில் கயாக் என்பது ஒன்று. எலும்பு அல்லது மரத்தின் மீது தோலால் மூடப் பட்டது இது. ஒருவர் வேட்டையாடுவதற்கு மட்டும் ஏற்றது.

மற்றொன்று உமியாக் என்னும் குடும்பப் படகு. இதில் எஸ்கிமோக்களின் குடும்பங்கள் செல்லும்.

பழக்கவழக்கங்கள்

வேட்டையாடுவதில் ஆண் பெண் அனைவரும் ஈடுபடுவர். அவர்களுக்கிடையே சண்டைகள் எழுவதும், அவைகள் தீர்க்கப்படுவதும் மிக வேடிக்கையாக இருக்கும். சண்டை போட்டுக் கொண்டவர்கள் ஆடியும் பாடியும் ஒருவரை ஒரு வர் ஏளனம் செய்வர். மற்றவர்கள் இதைப் பார்த்துக் கைகொட்டி நகைப்பார்கள், சண்டை தீரும்.

இசையிலும், ஆட்டத்திலும், நடிப்பிலும் இவர்கள் ஈடுபாடு உடையவர்கள். பல விருந்து கள் நடத்துவார்கள்; பறைகளைக் கொட்டி ஆடுவார்கள், பாடுவார்கள், நடிப்பார்கள். அவ்வாறு ஆடுவதும், பாடுவதும், நடிப்பதும் அவர்களுடைய வேட்டையாடும் செயல்களைப்பற்றியதாக இருக்கும்.

உடற்பயிற்சியிலும் இவர்களுக்கு ஆர்வம் உண்டு. உடற்பயிற்சிப் போட்டிகள் நடத்துவார்கள். அவர்களது மருத்துவர்கள் கூறும், சடங்குகளோடு போட்டிகளை நடத்துவார்கள்.

எஸ்கிமோக்கள் நல்ல கலை உணர்வு படைத்தவர்களும் கூட. தந்தம், மரம், எலும்பு முதலியவற்றில் சித்திர வேலைப்பாடுகள் செய்வார்கள். கூடைகள் முடைவார்கள். அழகான ஆடைகள் தைப்பார்கள். இவை எல்லாம் அவர்களுடைய கலை உணர்வுக்குச் சான்றுகள் ஆகும்.

அரசு

முறையான அரசு இவர்களுக்கு இல்லை; தேவையும் இல்லை. தங்களுடைய சிக்கல்களை, சண்டை சச்சரவுகளை தாங்களே தீர்த்துக் கொள்ளக்கூடியவர்கள். ஒவ்வொரு குடும்பமும் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது. சில சமயங்களில் கிராமத்தில் அறிவாளியைத் தலைவனாக இவர்கள் தேர்ந்தெடுப்பது உண்டு. வேட்டையாடுதலில் நல்ல பயிற்சியும் பழக்கமும் உடையவன் அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வான். சுருங்கக் கூறின், முறையான அரசு இல்லாமல், இவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்கிறார்கள்.