ஆர்க்டிக் பெருங்கடல்/வியத்தகு நிகழ்ச்சிகள்

8. வியத்தகு நிகழ்ச்சிகள்

ஆர்க்டிக் பகுதியில் நிலவும் மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக அங்குப் பல விந்தை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறைந்த வெப்ப நிலை என்பது —30°F முதல் —60°F வரை ஆகும். அந்நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

உலோகமும் உயவுப் பொருளும்

காரீயம் எஃகு போலாகி வளையும். எஃகு, சீனப் பாண்டத்தைப்போல் நொறுங்கும். ரப்பர், பிளாஸ்டிக் ஆகியவை தங்கள் நெகிழ்ச்சியை இழந்து நொறுங்கும். டயர்கள் உறைந்து பிளக்கும். கிரீஸ் கெட்டியாகிப் பிஸ்டனின் இயக்கத்தைத் தடை செய்யும். உருளைத் தாங்கியிலுள்ள எண்ணெயும் கெட்டியாகும். பனிக்கட்டி கெட்டியாக இல்லாமல், பாகுபோல் ஓடும்.

உடற்பயிற்சியும் உறைபனியும்

இக்குறைந்த வெப்ப நிலையில் உடற்பயிற்சி செய்வது எளிது. இப்பொழுது உடைகள் வியர் வையை உறிஞ்சும். இவ்வியர்வை ஆவியாகிக் குளிர்ச்சியை உண்டாக்கும். இதனால் உறைபனி (frost) உடைக்குள்ளேயே உண்டாகும்.

மனிதனின் செயல் திறமை

0°F-க்குக் கீழ் மனிதனின் செயல் திறமை ஒவ்வொரு பாகைக்கும் 2% குறைகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வெப்ப நிலைகளில் வேலை செய்ய அதிக நேரமாகும்.

75 வாட் பல்பு வெளிவிடும் வெப்பத்தை ஓர் ஆராய்ச்சியாளர் இங்கு உட்கார்ந்திருக்கும் பொழுது வெளிவிடுவார். இதற்கு ஒரு மெட் (met) என்று பெயர். இது வளர்சிதை மாற்ற அலகு. கையில் 50 பவுண்டு எடையினைத் தூக்கிச் செல்லும் ஒருவர் 6 மெட்டு வெப்பத்தை வெளிவிடுவார். மிகக் கடுமையான நடுக்கத்தின்போது, 3 மெட்டு வெப்பம் வெளியாகிறது. இங்கு ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ. 534.

துணைக் கருவிகள்

உடல் முழுவதையும் வெப்பமாக வைக்கக் காலையும், கையையும் வெப்பமாக வைக்கவேண்டும். இதற்குப் பல பைகளைக் கொண்ட உடையினை அறிவியலார் உருவாக்கியுள்ளனர். இப்பைகளிலுள்ள சிறு மின்கலங்கள் உடலின் வெப்பநிலையைப் பாதுகாக்க உதவுகின்றன. வெப்பக் கையுறைகளும், காலணிகளும் அவ்வாறே உதவுகின்றன.

வெளியே எந்திரத்தைப் பழுது பார்ப்பது என்பது கடும் உறைபனிப் புண்ணை உண்டாக்கும். ஆகவே, பழுது பார்ப்பவர்களின் உறைகள் பிளாஸ்டிக் விரல் நகங்களைக் கொண்டிருக்கும். இதனால் திருப்புளி முதலிய கருவிகளைக் கையாள்வது எளிதாகும். மின்னாற்றலால் இயங்கக் கூடிய உறைகளும் செய்யப்பட்டுள்ளன.

காற்றும் ஒளியும்

பனிக்காற்று மணிக்கு 50 மைல் வேகத்தில் அடிக்கும். பகலவனிலிருந்து வெளியாகும் மின்னூட்டத் துகள்கள் புவிக்காற்று வெளியில் மோதுவதால், கண்ணையும் கருத்தையும் கவரும் ஒளிகள் இங்கு உண்டாகின்றன. இவை வடமுனை ஒளிகள் எனப் பெயர் பெறும்.

ஆர்க்டிக் கோடை

கோடையின்பொழுது பனி உருகி ஓடும். பூக்கள் தலைகாட்டும். மரங்கள் அவசர ஆடை உடுத்தும். மைய இரவுக் கதிரவன் (midnight sun) உண்டாவதும், நிலைத்த ஒளியுள்ள காலம் இருப்பதும் அரும்பெரும் நிகழ்ச்சியாகும். அதே போல மூன்று மாதங்களுக்கு தொடுவானத்திற்குக் கீழ்க் கதிரவன் மறையும் போது நீண்ட இருட்டு படரும். ஆனால், வனப்புமிக்க வடமுனை ஒளிகள் இரவு வானத்தை வெளிச்சமாக்கும் இந்த ஒளிகள் இருட்டுக்கு மாற்றாக அமைகின்றன.

எத்தபாஸ்கன் இந்தியர்கள்

எஸ்கிமோக்கள் வாழும் பகுதிக்குத் தெற்கே சில மைல் தொலைவிலுள்ள கனடா ஏத்தபாஸ்கன் இந்தியர்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இவர்களுக்குப் போதிய உடையோ, உறைவிடமோ இல்லை. பகலில் இயங்கிக் கொண்டே இருப்பர். இவர்கள் தூங்கும்பொழுது கூட உடல் நடுங்கும்.

சுருங்கக் கூறுமிடத்து, இங்குள்ள நிலையான குளிர்ச்சி , இருட்டு, உலர்ந்த காற்று ஆகியவை. ஆய்வுக் கூடங்களிலும் அவற்றிற்கு வெளியேயும் வேலை செய்யப் பெருந்தடையாக உள்ளன . அமெரிக்கா, உருசியா, கனடா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் இங்குப் பனி வீழ்ச்சி, பனிக்கட்டித் தோற்றம், பனியாறுகள் இயக்கம், வானிலை, ஓய்ந்தொழிந்த எரிமலைகள் முதலியவை பற்றிப் பயன் தரும் வகையில் ஆராய்ந்துள்ளனர்.