ஆறுநாட்டான் உலா
ஆறுநாட்டான் உலா
நூலாசிரியர் செங்கைப் பொதுவன்
அச்சிட்டோர் மூவேந்தர் அச்சகம், சென்னை 14
பதிப்பு 22 மே, 1979
நூலைப்பற்றிச் சிலம்பொலி செல்லப்பனார்
தொகுகவிஞர் செங்கைப் பொதுவன் ஆறுநாட்டான் மலையடிவாரத்தில் உள்ள புகழூரில் எட்டாண்டுகள் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர் . தான் புழங்கிய - மகிழ்ந்துலாவிய மண்ணில் மற்றவர்களும் உலா வரவேண்டுமென்ற தணியா ஆசையால் – ஆர்வத்தால் இந்த ஆறுநாட்டான் உலாவைப் படைத்திருக்கிறார்.
இவ்வுலாவைப் பாட்டிலே அவரெழுதிப் பத்தாண்டுகள் ஆயின எனினும் இன்று தான் ஏட்டிலே உலவ விடுகிறார்
பாட்டுடைத் தலைவன் உலா வருகையில் ஏழ்பருவ மகளிரும் அவனைக் கண்டு நிலையிழப்பதாகப் பாடுவதே உலா மரபு. உலாக்களில் உலா வருபவர் ஒருவராகவே இருப்பர். இந்த மரபினை மாற்றி வரவேற்கத் தக்க புதியதொரு மரபினை உருவாக்கி யிருக்கிறார் நம் கவிஞர்.
ஆறு நாட்டான் உலாவில் அம் மலையில் எழுந்தருளியுள்ள முருகன், வள்ளி தெய்வானையுடன் மூவராக உலா வருகின்றான்.
உலாவை மகளிர் மட்டுமன்று, மைந்தரும் காணுகின்றனர்.
ஏழ் பருவப் பெண்களும் வள்ளி தெய்வானையை கண்டு, மனங்களித்து, வணங்கித் தம் குறை தீர்க்குமாறு வேண்டுகின்றனர்.
மைந்தருக்கும் பருவம் அமைத்து அவர்களும் உலாக் காணும்படியாக அமைந்திருக்கும் முதல் உலா நூல் இதுவே எனக் கருதுகிறேன். உலாவில் பெண்கள் பெண்களாகிய வள்ளி தெய்வானையரையே காண்கின்றனர்.
ஆண்கள் ஆண்மகனாகிய முருகனையே காண்கின்றனர் எனப் பாடியிருப்பது புதியதோர் திருப்பமாகும்.
- மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம் மேதகவே
- பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று
- ஆண்டான் அருவரை ஆவி அன்னாரைக் கண்டேன் அயலே
- தூண்டா விளக்கு அணையாய் என்னையோ அன்னை சொல்லியதே
என்று திருக்கோவையார் பாட்டிலுள்ள பண்பாட்டு இலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாக இவ்வுலாவைக் கொள்ளலாம்.
ஆறு நாட்டான் உலா ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் உள்ளங்களில் உலாக்கொள்வதாகுக.
குறிப்பு
தொகுகருவூர் மாவட்டம் புகழூர் வேலாயுதம்பாளையம் குன்றில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. அந்த முருகன் பெயர் ஆறுநாட்டான். கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறு நாட்டு மக்களின் குலதெய்வம் இந்த ஆறுநாட்டான்.
சங்க காலச் சேர மன்னர்களைக் குறிப்பிடும் ‘தமிழி’ (பிராமி) கல்வட்டு இந்தமலையில்தான் உள்ளது.
நூல்
தொகுவிழாக் காலம்
தொகு- பாலோடு பண்டைப் பழக்கத்தால் பாத்துண்ணும்
- கோலத் தமிழ்ப் பண்பால் கொண்டாடி – ஓலமிடும் \ 1
- பொங்கலோஒ பொங்கல் எனும் பூரிப்பில் தான் தோன்றி
- எங்கும் திருக்குறளான் எண் ஆண்டு – தங்கி \ 2
- வளர மலர்ந்து மணக்க நடந்தே
- ஒளிருமொரு மாதம் உழவர் – களிகொள்ள \ 3
- நெல்லகம் சேர்ந்து நிறைய நிறைபாவைச்
- சொல்லகம் தொட்டுத் துலக்கமுற – இல்லகத்து \ 4
- எங்கும் குறிஞ்சி இனிக்கக் கழியும் தைத்
- திங்களில் பூசத் திருநாளில் – வெங்காந்த \ 5
ஆறுநாட்டான் நிலை
தொகு- கஞ்சனின் நெஞ்சம்போல் கற்பொதிந்த பாறையின்மேல்
- நெஞ்சம் கலங்காது நின்றசேய் – கிஞ்சித்தும் \ 6
- அன்பிலான் நெஞ்சொத்(து) அறை பிளந்து நிற்கையிலே
- இன்பமாய் ஊடே எழு குமரன் – இன்பத்தை \ 7
- விற்கவரும் மேனிபோல் மின்விளக்கில் மின்மலையில்
- நிற்கவரும் அன்பின் நெடுவேலன் – அற்கா \ 8
- வனப்பில்லாப் பெண்போல் மரமில் மலையில்
- நினைப்ப நிலைத்த நெடுவேள் – பனிப்பாலே \ 9
- தஞ்சம் புகுந்தான்போல் தாஅமணன் கீழிருக்க
- விஞ்ச முடிகின்ற வேல்முருகன் – நெஞ்சூறும் \ 10
திருமுழுக்கு
தொகு- பாலன் நீ ஆதலால் பாலுண்ணாய் என்றிசைத்துச்
- சால முழுக்காட்டத் தானனைந்தான் – மேலாம் \ 111
- பழநீயே ஆகப் பழமுண்ணாய் என்று
- வழியத் தடவ மணந்தான் – அழியாத \ 12
- தேனைத் தினைமாவில் சேர்த்தளிப்பாள் வள்ளியென்று
- கூனத்தேன் ஊற்றக் குளித்தெழுந்தான் – யானையாம் \ 13
- அண்ணன் கரும்பென்றால் ஆவியாய்த் தின்பானென்
- றெண்ணியதன் சாற்றில் இவன் குளித்தான் – மண்ணு நீர் \ 14
- பொன்னிநீர் ஆடிப் புகைசூடப் பத்திகளால்
- தன்னைப் புலர்த்தித் தனியிருந்தான் – இந்நிலையில் \ 15
உடன்முழுக்காடியவர்
தொகு- நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
- புல்லுக்கும் ஆங்கே பொசிவது போல் – மெல்லவினை \ 16
- வெற்றிலைக் கிட்ட உரம் மேவித் துணையாய
- மற்றை அகத்தியும் வாங்குதல் போல் – சற்றே \ 17
- குழம்பிலிட்ட உப்பினிமை கூடிவெறுஞ் சோற்றில
- விழுச்சுவை ஆகும் விதம்போல் – குழமுருகன் \ 18
- தன்னை நீ ராட்டத் தமையனும் பன்மனையும்
- பின்னைநீ ராடியவன் பின்தொடர – அன்னவனும் \ 19
- அண்ணனையும் அப்பனையும் ஆற்றுப் படுத்தியவர்
- எண்ணம்போல் தேரில் இனிதேறி – அண்ணலவன் \ 20
தமிழ் உலா
தொகு- கைபுனைந் தாக்காக் கவின்பேர் வனப்பிருக்க
- மெய்புனைந்த கம்மியன்செய் மேனியொடு – கைபுல்லா \ 21
- முன்னோர் உலாநூல் முறையைப் புறக்கணித்துத்
- தன்னோ டிருமருங்கும் தன்மனையார் – மன்னிவர \ 22
- இன்னுந்தில் காதலர் இன்றுலா போவதுபோல்
- மன்னிணை யாய்ப்புறா வான்வரல்போல் – மின்வேலான் \ 23
- தன்னழகைக் கண்டு தமிழ்ப்பெண்கள் வேகாமல்
- தன்னாளை ஆடவர்கண் தாக்காமல் – கன்னியரும் \ 24
- காளையரும் மேவத்தான் காதல் மனையாளும்
- ஆளுங் கற்+பின் மனையு மாக வந்தான் – வாளார்ந்த \ 25
- தோள்கண்டார் தோளே கண்டாரென்று சொல்தமிழை
- ஆள்கம்பன் கண்டாம் அதுபோல – வேள்முருகைக் \ 26
- கண்டவர் ஆடவரே கந்தனையே கண்டாரால்
- பெண்டிரவன் பக்கிருந்த பெண்ணினையே - கண்டாரால் \27
- முற்றிழை யாருள் முருகனைப் பார்த்தவர்க்கும்
- பெற்றிருக்கும் பெண்மை கனியவில்லை – கற்றவர் போல் \ 28
- பச்சைக் குழவிபோல் பாலுணர்வு தோன்றாமல்
- நச்சி அவன் மனையை நம்பியவர் – மெச்சினர் \ 29 :
- செம்புச் சிலையாகத் தேர்மீது வந்தாலும்
- நம்பியார் நங்கையார் மேல்சாய்ந்தான் – பம்பிவரும் \ 30
பேதை ( அகவை 5-8 )
தொகு- பொன்னி அடைகரையில் பூத்த நறுமணல் மேல்
- சின்ன மணல்வீடு செய்திருந்து – அன்னை \ 31
- அழைப்ப மதியாமல் அம்மணற் பாவைக்
- குழைப்பாவை யாகி ஒழியா – இழைப்பாவை \ 32
- பள்ளியிற் கற்றிட்ட பாடமெல்லாம் பாட்டாகச்
- சொல்லி விளையாடும் தூயமலர் – பிள்ளைகளோடு \ 33
- ஓடி விளையாடும் ஒய்யாரப் பொற்சிட்டு
- நாடும் பயிர்ப்பில்லா நன்மொட்டு – தேடும் \ 34
- குறுநகையில் காதல் குறும்பின்றி கண்கள்
- பிறழ்கின்ற பேதைப் பருவச் – சிறுமியவள் \ 35
- கூட்டிச் செலும் அன்னை கூடவே சென்றங்கு
- நாட்டத்தைத் தேருலவும் நங்கையர்பால் – கூட்டிவிட்டு \ 36
- மீள மன மின்றி விளையாடத் தோழியராய்
- நீள அழைத்தெனக்கு நேர் என்றாள் – தாளாதே \ 37
- உள்ளத்தை மாற்றுவராய் ஊது குழல்பலூன்
- கிள்ளை கிலுகிலுப்பை கேட்டவெலாம் – தள்ளாது \ 38
- வாங்கி அளித்தாலும் மாசில் மனத்தாலே
- நீங்கிச் சிணுங்கினாள் நீள்துயிலில் – நீங்காத \ 39
- வள்ளிதெய் வானை மருவி விளையாடும்
- கொள்ளைக் கனவுலகில் கூடினாள் – தெள்ளுநீர் \ 40
பெதும்பை (அகவை 9 – 10)
தொகு- ஊறி முளைக்க உருத்திரண்ட நென்முத்து
- நாறி விரியவரும் நன்மொட்டு – மாறி \ 41
- இனிய நற் கட்டியாய் எடுக்கவரும் பாகு
- கனியத் திரண்ட கருங்காய் – இனிய \ 42
- குலைதள்ளும் முன்னம் குருத்துவிடும் வாழை
- உலைதல் அறியாத உள்ளி – நிலை கொண்டு \ 43
- பேதாக்கு கின்ற பெதும்பைப் பருவத்தாள்
- தோதாக் கழங்காடும் தோகை மயில் – வாதாடும் \ 44
- அம்மனையும் ஆடி அகமகிழும் போழ்தினிலே
- தம்மனையும் தானும் தழையவரும் – கும்மாள \ 45
- மாந்தர் குழாத்தோடு வந்தாள் திருத்தேரில்
- ஏந்தல் முருகன் இருமருங்கும் – சேர்ந்திருந்த \ 46
- வள்ளி தெய் வானை மகளிர் இருவரையும்
- கிள்ளி விளையாடக் கேட்டழுதாள் – பள்ளிக்குக் \ 47
- கூட்டிச் செல எண்ணிக் கூப்பித் தொழுதழைத்தாள்
- பாட்டிமா ரோடு வந்த பக்கத்து – வீட்டாரும் \ 48
- ஆடும் செடலில் அமர்த்தி மறப்பித்தும்
- ஓடும் மனத்தை ஒருமித்து – நாடித்தன் \ 49
- பாடம் வினவிப் பயில விழைந்ததனால்
- ஓடாய் இளைத்து உருகினாள் – நாடாது \ 50
மங்கை (அகவை 11 – 14)
தொகு- பூத்து நடக்கும் புதுமலர் நன்மேனி
- கூத்து நடக்கும் கொடும்புருவம் – பார்த்தால் \ 51
- வெடுக்கென்று சாய்க்கின்ற வெண்ணிலவைக் காக்க
- அடுக்காய் நெளிமுகில் ஐம்பால் – படியின் \ 52
- அவரை முளைக்க அணர்ந்த நிலம்போல்
- துவரை திரண்டெழும் சோக்கால் – அவிர்மார்பைப் \53
- பிஞ்சின் இடைக்காகப் பேச்சே உருமாறி
- கெஞ்சும் கிளிமொழி கேட்டதனால் – கொஞ்சி \ 54
- நடமாடும் தாள்கள் நறுமணம் வீசப்
- படியே வெறியாம் பருவம் – உடையதொரு \ 55
- மங்கை பருவத்தாள் மாங்கிளையில் மாட்டிக் கீழ்த்
- தொங்குமோர் ஊஞ்சலிலே தோழிமார் – தங்கையால் \ 56
- ஆட்டத் தான் ஆடி அழைத்த மகளிரொடு
- வேட்டுத்தேர் காண விரைந்தடைந்தாள் – நாட்டத்தை \ 57
- வேலன் அயலிருந்த மெல்லியலார் மேல்பாய்ச்சிச்
- சோலையில் தூரியில் தூக்கிவைத்துக் – கோலமுடன் \ 58
- ஆட்டிடுவேன் வாவென்று அழைத்தாள் வா ராமையினால்
- வீட்டிற்கு மீண்டெண்ணி விம்மினாள் – கூட்டில் \ 59
- உயிரன்றி வேறில்லை ஊணுறக்கம் இல்லை
- அயர்ந்தாள் அதே நினை வானாள் – உயர்ந்தோங்கித் \ 60
மடந்தை (அகவை 15 – 18)
தொகு- தேனூட்டப் பூத்த செழுமலர் காதலெனும்
- வானூட்ட வந்ததொரு வண்ணநிலா – மானூட்டும் \ 61
- கண்ணென்னும் காந்தத்தால் காளையராம் தேனிரும்பைத்
- தண்ணென் றிழுக்கும் தளிரியல் – எண்ணமெலாம் \ 62
- தின்னும் திருநுதலில் சேர்வேங்கைப் பொட்டிட்டு
- மின்னும் இடைமூடும் மென்துகிலாள் – தின்னாத \ 63
- ஆப்பிள் பழம்போல் அழகான கன்னங்கள்
- சேப்பச் சிரிக்கின்ற செவ்விதழாள் – காப்புடைய \ 64
- வெட்டுசட்டை யில் பிதுங்கி மேலாடை யைத் திமிரும்
- கட்டுக் கடங்காக் கவின் மலையாள் – வெட்டால் \ 65
- மயக்கும் மடந்தைப் பருவத்தாள் வந்து
- வியக்கும் மழைக்கண்ணால் மெல்ல – நயத்தோடு \ 66
- வேலவன் பக்கம் விளங்கும் இருமகளைச்
- சால வன் போடு பல சாற்றியபின் – னாலவளும் \ 67
- பாடம் பயில்கையில் பைந்தமிழைத் தான்சொல்லிப்
- போடும் கணக்குகளும் போட்டுதவி – வாடாது \ 68
- கல்லூரிக் குன்னைக் கனிவோ டழைத்தேகி
- எல்லாம் அளிப்பேன் இனிதிருப்போம் – நல்லியலீர் \ 69
- என்னோடு வாரீரோ என்றாள் வா ராமையினால்
- மின்னோடு கண்முத்தில் மீண்டு வந்தாள் – இன்னமுதம் \ 70
அரிவை (அகவை 19 - 24)
தொகு- பொங்கும் இளமை பூரித்த பொன்னுடலில்
- தங்கும் அழகு தளதளக்க – அங்கங்கே \ 71
- விட்டெறியும் கண்ணால் வீழ்வாரைப் பாராத
- கொட்டிவைத்த மின்னல் கொழுந்தென்ன – வட்டமிடும் \ 72
- காளைகளை வெல்லும் கனலா அரிப்பிணவு
- வேளின் கரும்பில் விளைகண்டு – கேளாது \ 73
- பூத்துக் கிடக்கும் புரிமுல்லை சூடுதற்குக்
- காத்துக் கிடக்கும் களிமயில் – பார்த்தவரின் \ 74
- நெஞ்சில் குழிபறித்துக் நெய்வார்த்துக் காதலென்னும்
- பஞ்சில் விளக்கேற்றும் பாவையவள் – நஞ்சாய் \75
- அமிழ்தாய் விளங்குதன் அந்தீங் கிளவி
- தமைக்காட்டு யாழால் தழங்கி – இமிரிசையால் \ 76
- மீட்டி வெளிப்படுத்தி வேனிலின் மாந்தளிர்போல்
- காட்டுகின்ற சாயல் கனியரிவை – நாட்டமுடன் \ 77
- தேரோடு கின்ற தெருவில் மெதுவாக
- ஆரோடு கூட்டத்தோ டூர் தந்தாள் – தேரோடும் \ 78
- செவ்வேளின் பக்கிருக்கும் தெய்வானை வள்ளியரின்
- செவ்வாயில் கண்மலரைச் சேர்த்திருந்து – அவ்வையீர் \ 79
- நெஞ்சு வர நாணமேன் நீள்தேர் வருகின்றீர்
- வஞ்சியீர் வா வென்றாள் வந்திட்டாள் – கெஞ்சியே \ 80
தெரிவை (அகவை 25 – 29)
தொகு- ஏர்கண்ணம் பாடி இணைமேட்டூர் கல்லணையில்
- நீர்கண்ணம் பாடியிவ ணேர்தலால் – ஆர்கண்ணோ \ 81
- பூச்சூடி வந்து பொலியும் கயல் புரட்டி
- வீச்சாடி நின்று விளங்குதலால் – வாய்த்த \ 82
- குமுத மலரிலே குறுமுத்தம் பூத்துள்
- அமுத நறுந்தேன் அளிப்பால் – திமிறி \ 83
- அலையாடை யோடிளநீர் ஆடிவரப் போந்து
- குலைய மணக்கும் குறிப்பால் – இலையாம் \ 84
- இடைவெளியி லேயோர் இளங்காளை தோய்ந்து
- படிய வருகின்ற பண்பால் – மடையேறும் \ 85
- காவிரியைத் தானென்றோ கண்டெடுத்த நாத்தியென்றோ
- பூவை தெரிவை புரிந்தெண்ணித் – தாவி \ 86
- விளையாடி நீராடி வீடுவந்து கந்தன்
- களியாடித் தேர்வருதல் காண – உளமோட \ 87
- வந்தாள் மருங்கிருந்த வஞ்சியரைக் கண்டுள்ளம்
- நொந்தாள்தன் அண்ணன்தன் நோனகத்து – வந்தக்கால் \ 88
- அண்ணிமார் கூடவர வில்லையென அங்கலாய்த்
- தெண்ணினாள் வேண்டி இறைஞ்சுங்கால் – மண்ணினார் \ 89
- தேரை இழுத்தகலச் சேர்கூட்டம் தள்ளிவரக்
- கூரை மனைவந்தாள் கூடானாள் – நீரில்லாக் \ 90
பேரிளம் பெண் (அகவை 29 -56)
தொகு- காதல் கதிரவன்மேல் காமமோ வண்டினிடம்
- பூதான் புரிமுகம் போலாமோ – போதவே \ 91
- வீசில் முனைமழுங்கும் மின்னில் கறைபடியும்
- பேசுவதேன் வேலைப் பிணைநோக்காய் – கூசாது \ 92
- வாங்கல்போ லன்றி வழங்கல்போ லே வளைவு
- தாங்காப் பிறைநுதலாய்ச் சாற்றுவதோ – நீங்காத \ 93
- உப்பிலே அல்லாமல் ஊறல் அமிழ் தாகாத
- சிப்பிமுத்தோ செம்பவளம் சேர்முத்தம் – எப்போதும் \ 94
- வெட்டிக் குடிக்காமல் மெய்ம்மணந்தின் பூட்டாத
- நெட்டுமரம் தாழிளநீர் நேர்முலையோ – கொட்டிவைத்த \ 95
- சீரிளஞ் செந்தமிழில் சேர்த்துவைத்த இன்னஃபோல்
- பேரிளம் பெண்ணொருத்தி பிள்ளையுடன் – தேரோடும் \ 96
- செவ்வேளைக் காண வந்தாள் செவ்வாம்பல் பூக்கின்றாள்
- செவ்வேலன் என் அண்ணன் சேர்ந்திருக்கும் – செவ்விய \ 97
- அண்ணிமீர் என் செல்வன் அத்தைவர வேண்டுகின்றான்
- எண்ணுள் இருப்பதுபோல் எம் மணியின் – கண்ணுள் \ 98
- இருந்து விளையாட எம்மனைக்கு வாராய்
- விருந்து புரந்தரவே வேட்டேன் – அருந் தென்றாள் \ 99
- கீழிறங்க வொட்டாது கீழோரும் தேரிழுத்தார்
- ஏழை இனைந்தாள் இலமீண்டாள் – சாலப் \ 100
பாலன் (அகவை 1 – 7)
தொகு- பொருள் விளங்காக் குதலை பூத்து மொழியில்
- நிரம்பா மழலை நிலவி – உரம்பெற்று \ 101
- இன்னிசையைக் கூட்டி எதையும் மொழிந்தாடித்
- தன்னிசையால் அற்றம் தனைமறையான் – பொன்னசையே \ 102
- இல்லாமல் எல்லா இழிபொருளும் ஏர்பொருளும்
- நல்லவாக் கொள்ளுமுயர் நன்னினைவான் – பொல்லா \ 103
- அடம்பிடித் தாட்டி அடுத்தவரைப் போல்செய்து
- உடம்பை விரும்பா உளத்தான் – நடமாடும் \ 104
- அன்னையின் மின்னிடைக்கும் அப்பனின் திண்டோட்கும்
- மின்னலாய்ப் பாய்ந்து மிளிர்பாலன் – முன்னேறித் \ 105
- தேர்செல்ல மேற்செல்லும் செவ்வேளைக் கண்டழைத்தான்
- தேர்சென்றால் நாளிரண்டு செல்லுமன்றோ – பார்தந்தாய் \ 106
- என்னையொரு தோளேற்றி இன்னொருதோ ளில்முருகை
- இன்னே எடுத்தழைத் தில்லம்வா – என்னே \ 107
- அழகிவனுக் கென்றான் அரோகரா என்றே
- பழகிமகிழ்ந் தான் அடியார் பாட்டை – விழைகின்றான் \ 108
- பந்தோடு பீபீ பலவாங்கித் தின்பண்டம்
- தந்ததெலாம் பெற்றும் தனிமகிழ்வால் – வந்தில்லில் \ 109
- கல்லுக்குப் பூச்சூட்டிக் கந்தனெனத் தேர்செய்து
- இல்லுள் இழுத்ததே எண்ணானான் – நல்லவான் \ 110
மீளி (அகவை (8 – 10)
தொகு111
- பாலில் திராட்சைப் பழம் மிதக்கப் பக்கத்தே
- கோலக் கரும்பு வில்லாக் கொட்டிவைத்துக் கீழிறங்கும்
112
- கொம்பில் வெடித்த கொழு மாதுளை வைத்து
- வெம்பாத மாம்பழமும் மின்ன வைத்து – வம்பாக
113
- வெள்ளரியைப் பிட்டு அவற்றின் மேல்வைத்து அதன்மேலே
- முள்ளிருக்கும் ஓர் பலவை முன்வைத்துக் – கொள்ளைகொளும்
114
- கண்ணாய்ப் புருவ வாய் கன்னமாய்ப் பால்போல
- வெண்ணீற்றின் நெற்றியாய் வேட்டாங்கு – வண்ணமாய்க்
115
- கத்தரித்த சென்னியாய்க் காட்டி மகிழ்கின்ற
- சித்திரத்துப் பையன் சிறுமீளி – வித்தகனாய்
116
- ஆறுமுகம் தேரில் அமர்ந்ததேன் என்றார்க்குச்
- சீறுமுகம் தேரில் சிறிதுமிலா –ஆறுமுகம்
117
- தேரகத்துச் செப்பாக்கிச் சேர்த்ததுமே கட்டி வைததால்
- ஆரகத்தான் ஆவான் அவன் என்றார் – ஓராதான்
118
- செப்பேன மெல்லாம் திருமுருகன் என்றெண்ணி
- நப்பாலே வீட்டினிலே நாடோறும் – எப்போதும்
119
- உண்ணப் பருக ஒருமுருகன் நாவென்றே
- எண்ணம் முருகில் இசைவித்து – வண்ணமயில்
120
- கொண்டுவா தோழன் குனித்தேற என்பானாய்க்
- கண்டுவாய் விண்டு கண் கார்பொழிந்தான் – கண்டதொரு
மறவோன் (அகவை 11-14 )
தொகு121
இயற்கை நிகழ்ச்சியையும் ஏனென்று கேட்டு
மயக்கும் பருவ மறவோன் – வியப்புடனே
122
கோவணத்தா னுக்கு வி.ழாக் கோலமேன் என்றிடலும்
மாவணத்தே சில் வரித்த மாண்பென்றார் – காவணன்முன்
123
தாக்காமா வேலைத் தரித்ததேன் என்றிடலும்
காக்காமாக் கட்கும் கருத்தென்றார் – நோக்காமா
124
வண்ண மயில்மேல் வருவதேன் என்றிடலும்
உண்ணு நாகம் எழிலால் உண்ணென்றார் – எண்ணிலாச்
125
செம்மலையன் ஆகித் திரிவதேன் என்றிடலும்
செம்மலையன் ஆன திறமென்றார் – கம்மலையும்
126
வள்ளி தெய்வானை மணந்ததேன் என்றிடலும்
வள்ளி தெய்வானை மணந்தென்றார் – வள்ளலுடன்
127
கொம்பேறி நின்றிருக்கும் கோலமேன் என்றிடலும்
அம்மைமா டேறப்ப னாலென்றார் – கம்மெனவே
128
வெண்ணீற்றைப் பூசி விளங்கலேன் என்றிடலும்
கண்ணீர் மிகிலுண் கருத்தென்றார் – எண்ணமெலாம்
129
இவ்வாறு கேட்டான் இறைபெற் றுளங்கொண்டான்
செவ்வேள் திருவேல் திறமானான் – வெவ்வேறு
130
காணும் பொருளிலெலாம் கண்டான் முருகனையே
ஊணும் மறந்துண் டொளியானான் – வேணவாக்
திறலோன் (அகவை 15)
தொகு131
கொய்குஞ்சி காணேன் கொழுத்தமர்ந்த புல்மேடை
எய்கஞ்சக் காமன்தான் எண்ணிலையோ – வைகும்
132
மதியொளிர ஊடொளிரும் மாயவெயில் உண்டோ
மதியுடையான் சேயெண்ணி மாயாப் – புதுமையுடன்
133
வெண்ணிலவு பூக்க விரி தாமரை வியப்பே
எண்ணிலவாய் இந்திரன்மெய் ஈந்தானோ – எண்ணிலாப்
134
பூங்கொடிக ளூடே பொருகளிறு போந்தனகொல்
ஓங்கியெழு சாந்தகலை உண்டாங்கொல் – வீங்கி
135
மறலோன் வருங்கொல் மறுகென்று மாழ்கத்
திறலோன் பருவத்துச் செம்மல் – இறைவாயில்
136
தேருலவும் சேயோனைச் சேர்ந்திழுத்துக் காணுங்கால்
நீருலவும் கற்பாறை நெஞ்சானாய் – ஊருலவிக்
137
கண்டதென்ன கந்தா கனிதேங்காய் ஏதேனும்
உண்டதுண்டோ நீயே உரைபழநீ – பண்டிருந்து
138
சேயாய் இருந்தால் சிறுவனென ஏய்க்காரோ
நேயேனை உன்பால் நிறுத்திக்கொள் – வாயாக
139
உண்ணத் தருவேன் நீ உண்டபின் உண்டிடுவேன்
எண்ணத் திருத்தி இசைபாடிக் – கண்ணாகக்
140
காத்திடுவேன் என்றானக் கந்தன் கருத்தானான்
பூத்திடுவான் வீடு புகுந்திட்டான் – நேர்த்தி
காளை (அகவை 16)
தொகு- சுருண்டிருக்கும் குஞ்சி துடிதுடிக்கும் கன்னம்
- உருண்டிருக்கும் கண்கள் ஒயிலாய்ப் – புரண்டிருக்கும் 141
- கன்னப் பரிசு கறுத்து முளைமீசை
- தின்னும் அழகில் சிறிதுவரப் – பொன்னில் 142
- முருக்கம்பூ வைவிரித்து முல்லைமலர் கோத்துச்
- சிரிக்க இடைவைத்த செவ்வாய் – உருக்கியே 143
- கன்னி உயிர்குடிக்கக் கட்டழகு பெற்றவுடல்
- என்ன விரிந்தகன்ற ஏர்மார்பு – துன்னியவாய்ச் 144
- சான்றுயர்ந்த தோள்களுடன் தாடாள் தடக்கைகள்
- ஆன்று நடக்கும் அழகடிகள் – ஞான் றுகை 145
- ஆடியில் ஏறுபோல் அஞ்சாது செம்மாந்து
- பீடுநடை போடும் பெருங்காளை – பாடிவர 146
- ஏடெழுதும் கைகளிலே ஏரும் பிடித்ததனால்
- நாடெழுதிக் கொண்டிருக்கும் நம்பியவன் – வீடெழுதும் 147
- அண்ணல் முருகன் அணிதேரைக் கண்வாங்கி
- எண்ணத்தை விற்றதற்கு ஈடளித்துப் – பெண்ணிலவாம் 148
- எங்கையர்க்குக் கண்ணாளா என்றனுக்குக் கண்ணாளா
- தங்கிருத்தல் நன்றோ அடுக்குமோ – இங்குவா 149
- கில்லாடி நாமும் கிளத்திப் புளிக்கையிலே
- மல்லாடிப் பூரிப்போம் மன் என்றான் – இல்லடைந்தான் 150
விடலை (அகவை 17 – 30 )
தொகு- மாதர் உயிரரிய வந்தஅரி வாள்மீசை
- காதல் பயிர்போலக் கத்தரித்தும் – சாதனையாய்க் 151
- குத்தி மயிர்முளைக்கும் கோலத் திருமோவாய்
- முத்தைத் திருடி முறுவலித்து – விற்றுவரும் 152
- செந்தா மரை இதழ்கள் செங்கதிரைத் தின்னுமுகம்
- நந்தாக் கருஞ்சுடராம் நாட்டங்கள் – சொந்தமெனச் 153
- செஞ்சாந்து நீவச் சிலிர்த்தபொற் கம்பிகள்போல்
- நெஞ்சில் நிறைமயிர்கள் நீள்புயங்கள் – கொஞ்சுகின்ற 154
- ஆணழகி லேயோர் அடங்கா மதமதப்பு
- வேணழகு கொண்ட விடலையவன் – காணழகு 155
- மட்டுமுரு கென்றால் மனமுருகு சொல்முருகு
- கொட்டுமுரு கண்டாய் கொடுவந்து – சுட்டுமொரு 156
- தேரேறி வந்தானைச் சேர்த்திழுத்துப் போகுங்கால்
- நாரேறி நெஞ்சில் நடைபோட – வாராயோ 157
- மாமன் மகனே மைத்துனனே வாழ்வேங்கை
- தேமன் மருமகனாய்ச் சேராயோ – காமனாய் 158
- நீயிருக்கும் போதே நினைவாசை விட்டதடா
- நாயிருக்கேன் வாடா நலந்தரவே – சேயிருக்கும் 159
- என்னகத்தைக் கண்டாய் இனிதுவிளை யாடிடலாம்
- இன்ன மொழிந்தில்லம் ஏகினான் – தென்னனாய் 160
முதுமகன் (அகவை 30 – 48)
தொகு- வேட்டிமேல் துண்டுகட்டி வெண்ணீற்றுப் பட்டையிட்டுக்
- காட்டி மிளிர்மேனி காமமதை - வீட்டியதோர் 161
- நீற்றவத்தன் போல நனிவிளங்கத் தம்முடைய
- சுற்றம் புடைசூழத் தோழருடன் – மற்றவரும் 162
- மாசில் உடையசைய மண்ணிநன் நோன்புடனே
- மூசிவர வந்தான் முதுமகனும் – பாசமறக் 163
- கந்தாகும் கந்தனே காப்பாற்றும் வேலவனே
- நந்தா முருகாகும் நன்முருகே – வெந்தழலில் 164
- ஆறும் மகங்கொண்ட ஆறுமுகா வேளாண்மைப்
- பேறும் முகந்தளித்துப் பேண்வேளா – வீறார் 165
- குமரிப் பழந்தேயம் கொண்ட குமரா
- குமரிக் குகைவாழ் குகனே – அமரும் 166
- கடம்பூண்டு காக்கும் கடம்பா அருளின்
- மடம்பூண்டு சேயாம் மகனே – படுகின்ற 167
- கொட்டு முழக்கிக் கொளுத்தியுனை விட்டிடுவார்
- கட்டி விடாரிந்தக் காலத்தார் – விட்டுவிடாய் 168
- என்னோ டிசைந்தகத்து என்றும் இருந்திடுதி
- என்னா மொழிந்தமர்ந்தான் இவ்வாறு – மன்னுயிர்க்கு 169
- ஊறுநாட் டான்புகழி ஓங்கலினைச் சுற்றியிலா
- ஆறுநாட் டான்போந்தான் ஆண்டு 170
- நூல் முற்றும்