ஆறுமுகமான பொருள்/கலைபயில் புலவன்



8
கலை பயில் புலவன் கார்த்திகேயன்


சென்ற வருஷம் புண்ணிய நகரமாம் பூனாவிற்குச் சென்றிருந்தோம், நானும் சில நண்பர்களும். பூனா மராத்திய மக்கள் நிறைந்திருக்கின்ற பெரிய நகரம். தமிழ் மக்கள் ஆயிரத்து ஐந்நூறு குடும்பத்தினர் அங்கு தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பல உத்தியோகங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் தமிழ் வளர்க்கிறார்கள். இந்தக் கலைக் கழக அன்பர் சிலருடன் பூனாவில் பிரசித்தி பெற்ற பார்வதி மலையில் உள்ள கோயில்களைப் பார்க்கச் சென்றேன். மலை என்றால் அங்கு முருகன் இருக்க வேண்டுமே என்று எண்ணினேன். 'ஓ இருக்கிறானே என்றார்கள் உடன் வந்த அன்பர்கள். சரி, இந்தத் தொலை தூரத்தில் உள்ள ஊருக்கு வந்த போதும், நமது முருகன் நமக்கு முன்னே ஓடி வந்து மலை மீது ஏறிக் கொண்டு நிற்கின்றானே' என்று எண்ணிக் கொண்டே நிறைந்த மனத்தோடு மலைமேல் ஏறினேன். மலை பெரிய மலை இல்லை. திருத்தனி மலை உயரமே இருக்கும். ஆனால் அங்கு கட்டியிருப்பது போல அழகான படிக்கட்டுகளும் இல்லை, மண்டபங்களும் இல்லை. படிகள் விசாலமாக இருந்தன. பத்துப் படிக்கட்டுகளுக்கு ஒரு படிக்கட்டே அகலமாக இருந்தது. அந்தப் படிக்கட்டைக் கட்டிய மராத்திய மன்னர்கள் குதிரையின் மேல் ஏறிக்கொண்டே மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்வார்களாம்.

மலை ஏறியதும், நாங்கள் கண்ட முதற் கோயில் தேவ தேவன் கோயில்தான். ‘தேவர் கோன் அறியாத தேவதேவன்’ லிங்கத் திரு உருவிலே இருக்கிறான். யார் வேண்டுமானாலும் கோயிலுள் சென்று இறைவனைத் தொட்டு பூசை பண்ணலாம். கோயில், கோயில் கட்டுக்கோப்பு, கோயில் இருக்கின்ற நிலை, கோயிலில் இருக்கின்ற மூர்த்திகள் எல்லாம் உள்ளத்தைத் தொடவில்லை. அழகு அழகான கோயில்களையும் அற்புதம் அற்புதமான மூர்த்திகளையும் தமிழ்நாட்டில் பார்த்த கண்களுக்கு அங்குள்ளவை கோயில்களாகவும், மூர்த்திகளாகவும் தோன்றாதது வியப்பில்லை. தேவதேவன் கோயில் தவிர, பண்டரிபுரம் விட்டலுக்கு ஒரு சிறுகோயில் இருக்கிறது. பவானி அம்மனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. இந்த மூர்த்திகளை எல்லாம் தரிசித்த பின் தேவதேவன் கோயிலுக்கு வலப்புறம் உள்ள ஒரு சிறு கோயிலுக்கும் போனோம். அதைத் தான் முருகன் கோயில் என்றார்கள், உடன் வந்த நண்பர்கள். அந்தக் கோயில் வாசலில் ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் ஆங்கிலத்திலும் மராத்தியிலும் எழுதி இருந்தது, பெண்கள் இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று. இது என்ன? இந்தக் கோயிலுக்குள் மட்டும் பெண்கள் வருவதைத் தடை செய்வானேன் என்று உடன் வந்த நண்பர்களிடம் கேட்டேன். இங்குள்ள கார்த்திகேயன் பிரம்மச்சாரி, அவன் பெண்களையே பார்ப்பதில்லை என்று வைராக்கியமாக இருக்கிறான். அவன் உத்திரவுப்படியே தான் கோயில் நிர்வாகிகள் "பெண்களை உள்ளே அனுமதிக்காதீர்கள்" என்று உத்திரவு போட்டிருக்கிறார்கள்' என்றார்கள். எனக்கோ ஒரே ஆச்சர்யம். 'ஒன்றுக்கு இரண்டாக வள்ளியையும், தேவயானையையும் கட்டிக் கொண்ட நமது தமிழ்நாட்டு முருகனா இங்கு பிரம்மச்சாரி வேஷம் போடுகிறான்? அவன் வேஷத்தையும் தான் பார்ப்போமே என்று கோயிலுக்குள் போனோம். போனால் அங்கு முருகன் மயில் மீது ஆறுமுக மூர்த்தியாக ஆரோகணித்திருந்தான். பளிங்கில் அமைந்த திரு உருவம் தான். பெரிய உருவமும் அல்ல; நல்ல அழகோடு கூடிய உருவமும் அல்ல, அவனுக்குக் கார்த்திக் என்று பெயரிட்டிருக்கிறார்கள். கார்த்திகைப் பெண்கள் அறுவர் பயந்த ஆறமர் செல்வன் அல்லவா. ஆதலால் கார்த்திகேயன் என்று அழைப்பது பொருத்தம் தான். என்றாலும் இவன் ஏன் பெண்களையே பார்க்க மாட்டேன் என்று கடும் பிரம்மச்சாரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் அங்குள்ளவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் விடை கண்டுபிடித்தேன் நான். தமிழ்நாட்டுக் குறமகள், நம்பிராஜன் புத்திரி வள்ளியைக் கண்டு சொக்கி மரமாக நின்ற முருகன், வேறு எந்த நாட்டுப் பெண்களையும், அதிலும் மராத்தியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க விரும்புவானா என்ன? இதை அவ்வளவு அப்பட்டமாகச் சொல்ல முடியாமல்தான் சும்மா பிரம்மச்சாரி வேஷம் போட்டு அங்குள்ளவர்களை ஏமாற்றி வருகிறான். போகட்டும், இந்தக் கலைபயில் புலவன் கார்த்திகேயன் மங்கையரைக் காண மறுக்கும் மால் மருகன் எனற புகழோடு அங்கு வாழட்டும்.

இப்படிப் பெண்களையே பார்க்க மறுக்கும் கார்த்திகேயனைக் கண்டபின்தான், தமிழ்நாட்டில் கோலக்குமரன், மலைமீதும், கடல்கரையிலும் ஆற்றங்கரையிலும் அழகிய சோலைகளிலும் கொலு இருப்பதின் உண்மை தெரியும். அழகனாகப் பிறந்து, அழகனாக வளர்ந்து அழகிய மனைவியரைப் பெற்றவன் நல்ல அழகு நிறைந்த இடங்களைத் தானே தேடித் தனக்கு வீடு அமைத்துக் கொள்வான். அத்தனை அழகுணர்ச்சி உள்ளவனாக இருப்பதினால்தானே, அவனை முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்று கொண்டாடுகிறோம்.

மலைமேவு மாயக் குறமாதின்
  மணமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
  திரு ஆலவாயிற் பெருமாளே

தமிழ்க் கடவுளான குமரனை தமிழர்கள் எவ்வளவோ காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். முருகனை வழிபடுகின்ற அளவுக்கு வேறு தெய்வங்களை அவர்கள் வழிபடுவதில்லை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே, குறிஞ்சி நில மக்கள் தங்கள், தங்கள் சிற்றூர்களிலே செவ்வேளை, காட்டில், காவில், ஆற்றில், குளத்தில் நாற்சந்திகளில் எல்லாம் வைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். மரத்தடியிலும், அம்பலத்திலும், கடம்ப மரத்திலும் கூட வைத்து வணங்கியிருக்கிறார்கள். அங்கெல்லாம் நெய்யோடு வெண்கடுகை அப்பி, மணம் நிறைந்த மலர்களைத் தூவி வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள், வழிபடுவோர் இரண்டு உடைகளை உடுத்திக் கொண்டு, சிவப்பு நூலைக் கட்டிக் கொண்டு, வெண்பொரி துவி கொழுத்த கடாவின் இரத்தத்தோடு பிசைந்த வெள்ளிய அரிசியைப் பலியாக இட்டு, மஞ்சள் சந்தனம் எல்லாம் தெளித்து செவ்வரி மாலையைத் தொங்கவிட்டு, குறிஞ்சிப் பண்ணைப் பாடிக் கொண்டு வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள். நாட்டில் பசியும் பிணியும் இல்லாதிருக்கவும், மக்கள் வசியும் வளனும் பெற்று வாழவும் பிரார்த்தித்து, அன்றைய குறிஞ்சிக் குறவர்கள் வழிபாடு செய்திருக்கிறார்கள்.

இதே வழிபாடு, இன்று முருகனுக்கு மிகவும் உகந்த முறையில் நடைபெறுகிறது. பால், நெய், இளநீர், பழம் முதலிய பொருள்களால் நீராட்டி, பூமாலை புனைந்து ஏத்தி, பொங்கலை நிவேதித்து தீப ஆராதனை பண்ணி வணங்கும் முறையில் வழிபாடு வளர்ந்திருக்கிறது. முருகனும் பாலும் தேனும், பஞ்சாமிர்தமும் கொண்டு அபிஷேகம் செய்யப்படுதலை மிக்கவிருப்பத்தோடு ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான். இந்த அபிஷேகங்களுக்கு வேண்டிய பொருள்களை வழிபாடு செய்யச் செல்லும் அன்பர்களே, காவடிகளில் கட்டி எடுத்து தோளில் சுமந்து, மலை மீது ஏறி, பிரார்த்தனையை நிறைவேற்றுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது.

காவடி எடுப்பதைப் பற்றி ஒரு வார்த்தை, இந்த வழக்கம் எபபடி வந்தது? இதற்கு ஒரு கதை. சூரபதுமனைச் சேர்ந்த அசுரர்களில் ஒருவனான இடும்பன் போருக்கு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடி அகத்தியரைச் சரண் அடைகிறான். அகத்தியரும் தாம் சிவபெருமானிடம் பெற்று கேதாரத்தில் வைத்து விட்டு வந்திருந்த சிவகிரி, சக்தி கிரிகளை எடுத்து வருமாறு ஏவுகிறார். மலையை எடுப்பது, அதனைத் தூக்கிச் செல்வது என்பதெல்லாம் எளிதான காரியமா? அதற்காக ஒரு பெரிய கம்பை எடுத்து அதன் இரு நுனியிலும் கயிற்றைக் கட்டி அந்தக் கயிற்றால் மலைகளையும் பிணைத்து, அப்படிப் பிணைத்த காவுதடியை தோளில் வைத்து அநாயாசமாக வழி நடக்க ஆரம்பிக்கிறான். அப்படி நடக்கும் போது சிறிது இளைப்பாறும் பொருட்டு, பழநிமலைப் பக்கத்தில் அதனைக் கொஞ்சம் கீழே இறக்கி வைத்திருக்கிறான். பின்னர் சிறிது நேரம் கழித்து அக்காவுதடியை எடுக்க முயல்கிறான். அதனைத் துக்க முடியவில்லை. மலைத்து நின்று மலையைச் சுற்றிப் பார்த்தால் அங்கு குமரன் கௌபீனதாரியாய் நிற்பதைக் காண்கிறான். இந்தச் சிறுவனைத்தனக்கு ஒரு கை கொடுக்குமாறு அழைக்கிறான். அவனோ மலையை விட்டு இறங்குபவனாக இல்லை. உடனே கோபம் கொண்டு அவனோடு சண்டைக்கே போகிறான். அன்று எவனுக்குப் பயந்து ஓடி, அகத்தியரிடம் சென்று சேர்ந்தானோ அவனோடு இன்று போரே தொடுக்கிறான். போரின் முடிவு நமக்குத் தெரிந்ததுதான். சிறுவனாகிய பெருமான் அவனைக் கொன்று, மீண்டும் அவன் மேல் வைத்த கருணையால் அவனை உயிர்ப்பித்து தன் திருக்கோலம் காட்டுகிறான். அன்று முதல் இடும்பனைப் போல், தன்னிடம் காவடி துக்கி வரும் அன்பர்களுக்கு எல்லாம் அருள் புரிகிறான். இப்படி அன்று இடும்பன் சுமந்த காவுதடியே இன்று காவடியாக மாறியிருக்கிறது. காவடியில் இறைவன் திருமுருகனுக்கு வேண்டிய பொருள்களை கட்டி எடுத்துச் செல்லுவதே முறையானது, சரியானது. இந்தக் காவடியை அலங்காரப் பொருளாக்கி ஆட்ட பாட்டத்துடன் எடுத்துச் செல்லுதல் சரியன்று. முறையன்று.

காவடி மூலமாய் தனக்கு வேண்டிய அபிஷேகப் பொருள்களைப் பெறுபவன், தேனுக்கும், தினைமாவிற்கும் அதிக விருப்பம் காட்டுவது ஏன்? இரண்டும் மலையிலே கிடைக்கும் பொருள்கள். முதல் முதல் மலைமேல் வைத்து வணங்கிய மலைவாழ் மக்கள், மலையில் கிடைக்கும் பொருளகளைத தானே நிவேதித்து இருப்பார்கள். தினை உடலுக்கு உறுதி அளித்து, உடலை வளமாக்கும் தன்மை உடையது. தேனோ இதய நோய் போக்கி இரத்தத்தையே சுத்தம் செய்ய வல்லது. ஞாபக சக்தியைப் பெருக்கவும் தேன் உதவுதல் கூடும். இத்தகைய பொருள்களை நிவேதனப் பொருள்களாக நாம் கொடுப்பதிலும், அவன் ஏற்றுக் கொள்வதிலும் வியப்பில்லை தானே. தேனையும் தினை மாவையும் வள்ளி தெய்வானையுடன் சேர்ந்திருந்து அவன் உண்ணுகிறான் என்றால் நம்மை எல்லாம் உண்பிக்கத்தானே.

இப்படி வழிபாடு செய்யப்படும் முருகனை வழிபட்டு உய்ந்தவர்கள் வரலாறு எண்ணில் அடங்காது என்றாலும் ஒரு சிலரையாவது குறிப்பிடாமல் விடவும் முடியாது. இப்பெருமகனை தேவர் மூவருமே வழிபட்டதாகக் கூறுவதுண்டு. 'மூவர் பெருமான்’ என்று மட்டுமல்ல, ‘திரிமூர்த்திகள் தம்பிரானே’ என்றே அழைக்கவும் படுகிறான். தேவர் மூவர் இருக்கட்டும், மண்ணுலகிலே தமிழ் முனிவர் அகத்தியருக்குத் தமிழை சொல்லிக் கொடுத்தவன் முருகப் பெருமான் என்பது தானே வரலாறு. 'என்று முள தென் தமிழை,இயம்பி இசை கொள்ளச் செய்தவனை’ முனிவன் எப்படி எல்லாம் வழிபட்டிருக்க வேண்டும். இப்படித் தமிழ்க் கவிப் பெருமாளாக இருந்தவனையே சங்கப் புலவன் நக்கீரன் பின்னால் பாடி வழிபாடு செய்திருக்கிறான். சிவனோடேயே வாதிட்டு, குற்றம் குற்றமே என்று அறைகூவிய கவிஞன், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர் நூற்றுவருக்கும் துன்பம் வந்தபோது, கூவியழைக்க, குமரனைத் தான் நினைந்திருக்கிறான். இப்படிக் கூவியழைத்து பயன் பெற்றவன், மற்றவர்களும் பயன்பெறும் வண்ணம் அப்பெருமானிருக்கும் இடத்திற்குச் செல்லவும், அங்கெல்லாம் அவனை வழிபடவும் நல்ல வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறான்.

நக்கீரனுக்குப் பின் எத்தனையோ பேர் எப்படி எப்படி எல்லாமோ வழிகாட்டியிருந்தாலும் நாம் நினைவு கூற வேண்டிய பெருமான் குமரகுருபரனாகவே இருக்கிறார். தென்பாண்டிநாட்டிலே ஸ்ரீ வைகுண்டம் என்ற சிற்றூரிலே பிறந்து ஐந்து ஆண்டு அளவும் ஊமையாகவே இருந்தவர் திருச்செந்தூர் சென்று ஆண்டவனை வழிப்பட்ட உடனே வாய்திறந்து பாடும் பேறு பெறுகிறார். 'கருணைத் திரு உருவாய் காசினியில் தோன்றிய குருபரன்’ என்ற பெயர் நிலைக்கிறது அவருக்கு. பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சம் அகற்றும் அயில் வேலும் தாங்கிய வேலவனை, அவர் அழகொழுக வர்ணிக்கும் பாடலான கந்தர் கலிவெண்பா, பாடும் பக்தர்களை எல்லாம் பரவசம் அடையச் செய்கிறது.

போகமுறும் வள்ளிக்கும்
 புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும்
 முகமதியும் - தாகமுடன்
வந்து அடியில் சேர்ந்தோர்
 மகிழ வரம் பலவும்
தந்தருளும் தெய்வ முகத்
 தாமரையையும்

நினைந்து நினைந்து போற்றுகிறார்.

இவருக்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே காஞ்சிபுரத்து கச்சியப்பர், கந்தன் வரலாறு முழுவதையும் புராணமாகவே பாடிவைத்துவிட்டார். இவரை ஒட்டியே சிற்றம்பல நாடிகள், சுவாமிநாத தேசிகர் - கச்சியப்ப முனிவர் முதலியவர்களும், முருகனை நாவாரப் பாடி வழிபாடு செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சிகரமாக முருக பக்தியில் தாம் திளைத்ததோடு பிறரையும் திளைக்க வைத்த பெருமகன் தான் அருணகிரியார். பொங்கழல் உருவன் கோயில் கொண்டிருக்கும் திரு அண்ணாமலையிலே பிறந்து, வாலைப் பருவத்தில் இன்பத்துறையின் எல்லை கண்டு. அதனால் பொருள் இழந்து, பிணியுற்று நலிந்தவரை, ஆறுமுகன் வலிந்து வந்து ஆட்கொள்கிறான். அன்று முதல் அவன் இருக்கும் தலமெல்லாம் சென்று வணங்கி அவன் திருப்புகழையே பாடிப்பாடி வீடுபேறு பெற்றவர்.

அருணதள பாத பத்மம்
அனுதினமுமே துதிக்க
அரிய தமிழ்தானளித்த
மயில் வீரனை

ஆயிரக்கணக்கான சந்தப் பாடல்களால் போற்றி வணங்கியதோடு அவன்றன் அலங்காரத்தையும் அவனைப் பக்தி பண்ணியவர்கள் பெற்ற அனுபூதியினையும் அழகாக எடுத்து ஓதுகிறார்.

மொய்தார் அணிகுழல் வள்ளியை
வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்

என்று உறுதியும் கூறுகின்றார்.

நாள் என் செய்யும், வினைதான்
என் செயும், என்னை நாடி வந்த
கோள் என் செயும் கொடுங்கூற்று
என்செயும், குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும்
தண்டையும், சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே! என்று பாட உள்ளத்தில் வலிமை பெறுவது என்றால் அது எளிதில் சித்திக்கின்ற காரியமா என்ன? எத்தனையோ வருஷங்களாகப் ‘பாடும் பணியே பணி’ என வாழ்ந்து, அதனால் பெறற்கரிய அனுபூதி பெற்றதனால் உண்டான உரம் அல்லவா?

இப்படி எல்லாம் வழிபட்டோர் இன்னும் பலர் உண்டு. அவர் தம் அடிச்சுவட்டில் நடந்து சென்று முருகன் திருவடிகளில் விழுந்து வணங்கி, அருள் பெறும் அன்பர்கள் எல்லாம் பாக்கியசாலிகளே.