ஆறுமுகமான பொருள்/3குமரகுருபரர்
3. குமரகுருபரர் கண்ட குமரன்
ஒரு தந்தை, வயது முப்பது முப்பத்தைந்து இருக்கும். நல்ல கட்டான உடல், அடர்ந்து வளர்ந்த மீசை ஏதோ கண் பார்வை குறைந்ததினாலோ அல்லது தீராத தலைவலி என்னும் நோய்க்காகவோ, கண்ணாடி வேறே அணிந்திருக்கிறார். அவருக்கு ஒரு வயது நிரம்பிய ஒரு சிறு பாலகன். இரண்டு பெண்கள் பிறந்த பின் பிறந்த ஆண் மகன் ஆனதால், அந்தச் சிறு குழந்தையிடத்திலே அளவு கடந்த பாசம். நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும் பையனை மார்போடணைத்தே வளர்க்கிறார். ஆனால் பையனோ சிறு குறும்பு செய்வதில் படுசுட்டி, தந்தையின் மார்பில் ஏறியதுமே மீசையைப் பிடித்து அசைப்பான் கன்னத்தில் அறைவான். கண்ணாடியை இழுத்து எறிந்து உடைப்பான். இத்தனை குறும்பையும் அவன் இடைவிடாது செய்தாலும் அந்தப் பிள்ளையிடத்திலே அளவற்ற பாசம்தான் தந்தைக்கு திரும்பத் திரும்பக் கண்ணாடி உடைந்தாலும், மீசை மயிர் பிய்ந்தாலும், கன்னத்தில் அறை ஓங்கியே விழுந்தாலும் குழந்தையைக் கொஞ்சுவதைத் தந்தை நிறுத்தவில்லை. இது நாம் வாழ்வில், பல தடவை காணும் காட்சி. ஏன்? நாமே பெறும் அனுபவமும் தான், நமக்கு மீசை இல்லாவிட்டாலும் கூட.
இது சாதாரணத் தந்தை ஒருவரின் அனுபவம். இறைவனாம் தந்தைக்கும் இதே அனுபவம் உண்டு. அதிலும் பிள்ளைச் சிறு குறும்பு பண்ணுபவன் குமரன் என்னும் படுசுட்டியாக இருந்து விட்டால்? இந்த தந்தையோ சாதாரணத் தந்தையல்ல. இரு கைகளுக்குப் பதிலாய் நான்கு கைகள் உடையவராக இருக்கிறார். ஒரு கையிலோ துடி, ஒரு கையிலோ அனல், ஒரு கையிலோ மான், தலையில் இருக்கும் சடாமகுடத்திலோ கங்கை, அத்தோடு இளம்பிறையும், படமுடைப்பாம்பும். வேறே முடிப்பதற்கு பூ என்றும் ஒன்றும் கிடையாது போகவே அறுகம்புல்லை வேறே தன் தலையில் உள்ள சடையில் அணிந்திருக்கிறார். இந்தத் தந்தை தன்னிடம் தவழ்ந்து ஓடிவரும் அருமைக் குமரனை அன்போடு எடுக்கிறார். மார்போடு சேர்த்து அணைக்கிறார். பிள்ளையோ குறும்புக்காரப் பிள்ளை. தந்தையின் மார்பில் குரவையே ஆட ஆரம்பித்து விடுகிறது. அதனால் நீறு அணிந்த அவருடைய செம்மேனியோ அப்படியே புழுதிபடுகிறது. இத்தோடு விடுகிறதா குழந்தை? அவர் கரத்தில் உள்ள உடுக்கையை சிறு பறை எனத் தட்டி முழக்குகிறது. சடாமகுடத்தில் உள்ள கங்கையை அள்ளி மற்றொரு கையில் உள்ள தீயை அவிக்கறது. தலையில் உள்ள அறுகம்புல்லைப் பறித்து மானுக்கு உணவு ஊட்டுகிறது. பிறையையே பிடுங்கி பாம்பின் வாயிலே செருகுகிறது. இப்படி எல்லாம் தந்தையிடம் விளையாடி நிர்த்தூளி பண்ணுகிறது குழந்தை.
இப்படி எல்லாம் உண்மையில் நடந்ததா? என்று என்னிடம் கேட்காதீர்கள். சிவபெருமான் என்னும் இறைவனும் அவன் திருக்கோலமும், அவன் தேவியும், குமரரும் எல்லோரும் கட்புலனுக்கு எட்டாத கடவுளைக் காணத் துடிக்கும் கலைஞனின் கற்பனை வடிவங்கள் தானே. ஆகவே தந்தையையும் தாயையும் மக்களையும் கற்பனை பண்ணத் தெரிந்த கலைஞனுக்கு, இந்தக் கலை விளையாட்டையும் கற்பனை பண்ணத் தெரியாமலா போகும்? அப்படிக் கற்பனை பண்ணிக் கவிதை எழுதிய கலைஞர் தான் குமரகுருபரர். வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமரன் பேரில் பாடிய பிள்ளைத் தமிழில் ஒரு பாட்டில்தான் இப்படி ஒரு கற்பனை. பாட்டு இதுதான்.
மழவு முதிர் கனிவாய்ப் பசுந்தேறல்
வெண்துகில் மடித்தலம் நனைப்ப,
அம்மை
மணிவயிறு குளிர, தவழ்ந்து ஏறி
எம்பிரான் மார்பினில் குரவை ஆடி
முழவு முதிர் துடியினில் சிறுபறை
முழக்கி, அனல் மோலிநீர் பெய்து
அவித்து
முளைமதியை நெளி அரவின் வாய்மடுத்து,
இளமானின் முதுபசிக்கு அறுகு அருத்தி,
விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு
தூள் எழ மிகப் புழுதி யாட்டயர்ந்து
விரிசடைக் காட்டினில், இருவிழிகள்
சேப்ப, முழுவெள்ள நீர் துளைய ஆடி
குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வர,
சிறுகுறும்பு செய்தவன் வருகவே
கரவுகமழ் தருகந்த புரியில் அருள்
குடிகொண்ட குமரகுருபரன் வருகவே
குமரகுருபரர், முருகன் அருள் பெற்று உயர்ந்த கவிஞர். தண்பொருநைக் கரையிலே உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அவதரித்தவர். ஐந்து வயது நிரம்பும் வரை பேச்சின்றி ஊமையாக இருந்தவர். இது கண்டு வருந்திய பெற்றோர்கள் அவரை திருச்செந்துருக்கு எடுத்துச் சென்று செந்தில் ஆண்டவன் சந்நிதியிலே கிடத்தி அவனிடமே குறை இரந்து நின்றனர். செந்தில்மேய வள்ளி மணாளன் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்றார். பேச்சே கவி வடிவத்தில் வந்தது. கந்தர் கலி வெண்பாவை அந்தச் சிறுவயதிலேயே அறுமுகன் திருவருளால் பாடியவர். அதன்பின் முறையாக இலக்கிய இலக்கணங்களோடு ஞான சாத்திரங்களையும் கற்றார். பின்னர் மதுரை சென்று மீனாட்சியம்மை பேரில் ஒரு பிள்ளைத் தமிழ்பாடி அதை அப்போது மதுரையில் அரசாண்ட திருமலை நாயக்கர் முன்னிலையிலே அரங்கேற்றினார். அரங்கேற்றம் நடக்கும் போது, மீனாட்சி அம்மையே குழந்தையுருவில் வந்து, திருமலை நாயக்கர் மடிமீது அமர்ந்து கேட்டு மகிழ்ந்தனள் என்றும், 'தொடுக்கும் கடவுள் பழம் பாடல்' என்று தொடங்கும் திருப்பாட்டைக் கேட்டபோது தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையையே எடுத்து, குமரகுருபரருக்கு அணிந்து மறைந்தாள் என்பதும் வரலாறு. பின்னர் பல தலம் சென்று. தருமபரத்துக் குருமூர்த்தியான மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றிருக்கிறார். அதன் பின் காசி சென்று பாதுஷாவிடம் தன் அருள் திறத்தைக் காட்டி, கேதாரகட்டத்தில் இடம் பெற்று காசிமடம் நிறுவி இருக்கிறார். இடையிலே வைத்தீஸ்வரன் கோயிலிலே இருக்கும் முத்துக் குமரனிடத்தும் பக்தி செலுத்தி, அவன் பேரில் ஒரு நல்ல அழகிய பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் ஒன்றும் இயற்றி இருக்கிறார். அவர் பாடிய நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை எல்லாம் இலக்கிய உலகில் பிரசித்தமானவை என்றாலும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட முருகன் பேரில் பாடிய, கந்தர் கலிவெண்பாவும், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழும் அவருக்கு நிரந்தர புகழைத் தேடித் தந்திருக்கின்றன.
சிறு பிள்ளையாக இருக்கும்போதே முருகன் அருள் பெற்றவராய் அமைந்ததினாலேயே என்னவோ, முருகனை இளைஞனாக, சிறு குறும்பு செய்யும் பிள்ளையாக வழிபடுவதிலேயே ஆர்வங்காட்டி இருக்கிறார். முருகனது அழகில் ஈடுபட்டவர் அருணகிரியார் என்றால், அவனது இளமை நலத்திலே ஈடுபட்டவராக குமரகுருபரர் இருந்திருக்கிறார்.
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் - ஆதிநடு
அந்தங் கடந்த நித்தியானந்த போதமாய்
பந்தந் தனந்த பரஞ்சுடராய்
இருப்பவன் இறைவன் என்ற அரிய பெரிய தத்துவக் கருத்துக்களை எல்லாம் எல்லோரும் உணரும்படி சொன்னவர்தான் என்றாலும், அவர் ஈடுபாடு எல்லாம், முருகனது அவதாரத்தில், பிரமனுக்கு பிரணவத்தைக் குருமூர்த்தமாக நின்றுரைத்த நிலையில், அத்தோடு வள்ளியை மணக்க அவர் செய்த லீலா விநோதங்களிலேயே நிலைத்து நின்றிருக்கிறது. இளமையிலேயே கவிபாடும் திறம் பெற்றவர். இள முருகனின் விளையாட்டுகளிலேயே திளைத்து நின்றது அதிசயமில்லை தானே? ஐந்து முகத்தோடு அதோமுகமும் பெற்று அத்திருமுகங்கள் ஆறில் நின்று எழுந்த ஆறு சுடர்களும் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருப்பெற அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்தே அறுமுகவனை அன்னை உருவாக்கினாள் என்றும் கந்தன் திரு அவதாரத்தை அழகொழுகச் சொல்கிறார்.
அறுமீன் முலையுண்டு அழுது விளையாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறு முறுவல்
கன்னியோடு சென்று அவட்குக் காதல்
உருக்காட்டுதலும்.
அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும்
தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தன் எனப்பேர்
புனைந்து
மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்த
வரலாறு கந்தர் கலி வெண்பாவில் முதலிடம் பெறுகின்றது. இத்தோடு படைக்கும் கடவுளாம் பிரமன் அகந்தையை அடக்கி, பிரணவத்தின் பொருள் என்ன என்று அவனுக்கு விளக்கிய நிலையை
சிட்டித் தொழில் அதனைச் செய்வது எங்ங்ன்
என்று முனம்
குட்டிச் சிறை இருத்தும் கோமானே -
மட்டவிழும்
பொன்னங் கடுக்கை புரிசடையோன் போற்றி
இசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே
என்று வாயாரப் பாடி மகிழ்கிறார். இதை எல்லாம் விட வள்ளியை மணந்த கதையை அவர் கூறுவதில் தான் எத்தனை அழகு!
கானக்குறவர் களிகூரப் பூங்குயில் போல் ஏனற்
புனங்காத்து இனிது இருந்து - மேன்மை பெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே
என்று அந்த இள முருகனை விளிப்பதில்தான் எவ்வளவு உற்சாகம்! ஏதோ ஐந்து வயது பிள்ளையாயிருந்து பாடிய பாட்டாகவா தெரிகிறது. கலி வெண்பாவில் மாத்திரந்தானா இப்படிப் பாடுகிறார்? பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவத்தைப் பாடும்பொழுதும் கூட, இந்த வள்ளியை மணந்ததையே நினைக்கிறார். அந்த வள்ளியைப் பெற முருகன் போட்ட வேடங்களை யெல்லாம் நினைப்பூட்டுகிறார். இவைகளை எல்லாம் அழகு தமிழில் அன்பு ஒழுகப்படுகிறார்.
மருக்கோல நீலக் குழல்
தையலாட்கு அருமருந்தா
இருந்த தெய்வ
மகக்கோலமே, முதிர்
கிழக்கோலமாய்க் குற
மடந்தைமுன் நடந்து மன்றத்
திருக்கோலம் உடன்ஒரு
மணக்கோலம் ஆனவன்
என்று அறமுகப்படுததுவார் ஒரு தடவை. திரும்பவும்
கூனே மதிநுதல் தெய்வக்
குறப்பெண் குறிப்பு அறிந்து
அருகு அணைந்து உன்
குற்றேவல் செய்யக் கடைக்கண்
பணிக்கு எனக் குறை இரந்து
அவள் தொண்டைவாய்
தேன் ஊறு கிளவிக்கு
வாயூறி நின்றவன்
என்று. சுவைபடச் சொல்லுவார். இப்படி எல்லாம் தையல் நாயகி மருவு தெய்வ நாயகன் மதலையாம் முத்துக்குமரன், மையல் கொண்டு வள்ளியை மணம் புணர்ந்ததை எல்லாம் சொல்லுவதால் குமரகுருபரர் அவனது இளமை நலத்தில் எவ்வளவு ஈடுபட்டிருந்தார் என்பது விளங்கும்.
இறைமையிலும், இளமை நலத்திலும் ஈடுபட்டிருந்தவர். அவன்றன் நிறைந்த அழகிலும் ஈடுபட்டு நின்றது வியப்பில்லை. புன்முறுவல் பூத்தமலர்ந்த பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியையும், ஏன்? கும்பமுலைச் செவ்வாய் கொடி இடையார் வேட்டு அணைந்த அம்பொன் மணிப்பூண் அகன் மார்பையும், பாடிப் பரவுவதிலே திருப்தி அடையாதவராய், கடைசியில் இளம்பரிதி நூறு ஆயிரங்கோடி போல வளந்தரும் தெய்வீக வடிவுடையவன் என்றே கூறிப் பரவசம் அடைவார்.
இப்படி, அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனியாகவே, அந்த மறைமுடிவில் நின்ற நிறைசெல்வனாம் அழகனை, இளைஞனை காணுகின்றார். குமரகுருபரர், தெய்வமாகக் கண்ட நக்கீரர். அழகனாகக் கண்ட அருணகிரியார், இளைஞனாகக் கண்ட குமரகுருபரர் இம்மூவரும் கண்ட முருகனை, நாமும் அன்னவர் நிலையிலே நின்று கண்டு, வந்தித்து வணங்கத் தெரிந்து கொண்டோம் என்றால் அதைவிட நாம் பெறுகின்றபேறு வேறு என்னதான் இருத்தல் கூடும்.
- ஆறிரு தடந்தோள் வாழ்க, அறுமுகம் வாழ்க, வெற்பைக்
- கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க அன்னான்
- ஏறிய மஞ்ஞை வாழ்க, யானைதன் அணங்கு வாழ்க
- மாறிலா வள்ளி வாழ்க, வாழ்கசீர் அடியார் எல்லாம்.