ஆறு செல்வங்கள்/கல்விச் செல்வம்

1.கல்விச் செல்வம்


செல்வம் பலவகை. அவற்றுள் கல்வி ஒருவகை. இதனை "ஈடு இலாச் செல்வம்" என்றவர் திரு. வி. க. "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு. "கேடு இல்லாத சிறந்த செல்வம்" என்பது இதன் பொருள். பிற செல்வங்கள் கேட்டையும் விளைவிக்கும் என்பது கருத்து.

பிற செல்வங்கள் நீராலும் நெருப்பாலும் அழியக் கூடியன. ஆனால், கல்விச் செல்வமோ வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, கொள்ளையிட முடியாது, கொடுத்தாலும் குறையாது. இவ்வுலகிலுள்ள செல்வங்களில் பங்காளிகளால் பங்கிட்டுக் கொள்ள முடியாத ஒரே செல்வம் இக் கல்விச் செல்வமாகும்.

ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிற நாடுகளில் அவ்வளவு சிறப்பு இராது. ஆனால், கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. இதிலிருந்து தெரிவது என்னவெனில், “ஒரு மன்னனிடத்திலுள்ள செல்வங்களனைத்திலும் கற்றவனிடத்திலுள்ள கல்விச் செல்வம் ஒன்றே உயர்ந்து காணப்படும்' என்பதே.

பிற செல்வங்கள் ஒருவனிடம் சேர்ந்தால், அவனிடம் நிலைத்து நில்லாமல் அவனை விட்டு விலகி ஓடிப்போய் விடும். கல்விச் செல்வம் ஒருவனை அடைந்துவிட்டால் வாழ்விலும் தாழ்விலும் மட்டுமல்லாமல், சாவிலும் உடனிருந்தே அழியும். எப்படி இச் செல்வம்?

பொருட் செல்வம் அனைத்தையும் அதை உடையவனே வழி நடத்துவான் கல்விச் செல்வம் ஒன்று மட்டுமே தன்னை உடையவனை வழி நடத்தும். எப்படி இதன் வலிமை?

கல்விச் செல்வம் பெற்ற குடும்பத்திற் பிறந்த பிள்ளைகளுக்குச் சில தலைமுறை வரையிலாவது அந்த மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். பிற செல்வங்களைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அச் செல்வம் அடுத்த தலை முறை வரையிலாவது நிலைத்திருக்கும் என்பது பத்தில் ஒன்பது பங்குக்கும் உறுதியில்லை.

பிற செல்வங்களைத் தேடிப் பயன்பெற்று மகிழ்ச்சியுற வேண்டுமானால் அவன் கல்விச் செல்வத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல் எச்செல்வத்தைப் பெற்றிருப்பினும் அவன் அதனாற் பயன் பெறான் என்பது மட்டுமல்ல, சில பொமுது துன்பத்தையும் அடைய நேரிட்டு விடும்.

கல்லாத மக்களும் களர்நிலமும் வேறல்ல. இரண்டும் ஒன்றே. இவைகளைப் பேணுவார் எவருமில்லை. இவைகளால் பயனும் எவருக்கும் இல்லை. ஆதலால் இவை இருப்பதும், அழிவதும் ஒன்று போன்றதே.

செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது காணக் கூடிய காட்சியே. ஆனால் கற்றவர் முன்னே கல்லாதான் நிற்பது காணச் சகியாத காட்சியாகும்.

மாடுகளின் முன்னே மக்களை வைத்து ஒப்பு நோக்குதலும் உண்டு. எப்போது? உழைக்கும்போது. ஆனால் கல்லாதவன் முன்னே கற்றவரை வைத்து ஒப்பு நோக்குதல் எங்கும் எப்போதுமில்லை.

விதைக்காதபோது விளைவும், சமைக்காதபோது உணவும், உழைக்காதபோது பலனும் இல்லாததுபோல கல்லாதபோது சிறப்பும் இல்லை.

தோண்டாத மணலுக்குள் நீர் மறைந்திருப்பது போலக் கல்லாதார் உள்ளத்தில் அறிவும் மறைந்திருக்கிறது. தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல் கற்கக்கற்க அறிவும் சுரக்கிறது. எந்த அளவிற்குத் தோண்டினாலும் அந்த அளவிற்கு நீர் நிரம்பிக் காணப்படுவது போல, எந்த அளவிற்குக் கற்றாலும் அந்த அளவிற்கு அறிவும் நிரம்பிக் காணப்படும்.

அறிவு இல்லாதவர் என்று எவரும் எங்கும் இல்லை. ஆனால், அதை வளர்த்து ஒளிவீசச் செய்வது இரண்டு. ஒன்று, கல்வி; மற்றொன்று பட்டறிவு (அநுபவம்) பட்டுப் பட்டு அறிவை வளர்க்கப் பல ஆண்டுகள் வேண்டும். ஆனால் கல்வி கற்று அறிவை வளர்க்கச் சில நாட்கள் போதும்.

கல்விச் செல்வம் கடல் போன்று பரந்து விரிந்த தொரு பெருஞ்செல்வம். ஒருவன் வாழ்நாள் முழுதும் படிப்பினும் அதனை முழுதும் பெற்றுவிட முடியாது. இவ்வுலகிலுள்ள மக்களின் கல்விச் செல்வத்தை நூறில் ஒரு பங்கு பெற்றவர் ஆயிரத்தில் ஒருவர்கூட இல்லை எனலாம். "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" எனக் கலைமகள் கூறுவதாகத் தமிழ் மகள் கூறுகிறாள்.

பல துறையில் பல நூல்களைப் படிப்பதைவிட ஒரு துறையில் சில நூல்களைப் படிப்பது நல்லது. அவற்றையும் மேற்போக்காகப் படிப்பதைவிடக் கருத்துான்றிப் படிப்பது நல்லது. ஆம், அகலமாக உழுவதிலும் ஆழமாக உழுவதே நல்லது என்பது அறிஞர்களின் கருத்து.

கல்லாத மக்களிடத்தும் சில பொழுது அறிவு காணப்படும். எனினும் அது குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் கலங்கிய நீர் போன்றதே. கற்றவருடைய அறிவோ ஆறுகளில் ஊறிச் சிலுசிலுத்து ஒடுகின்ற தெளிந்த நீரைப் போன்றது. 'கல்வி வேறு அறிவு வேறு' என்பதை ஒப்புகிற ஒவ்வொருவரும் "கற்றவனுடைய அறிவு வேறு" என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கற்றவரும் கல்லாதவரும் மக்களே அன்றிக் கற்களே ஆயினும் முன்னது வைரக்கல், பின்னது கருங்கல் என்றாகும்.

"என் மகன் படிக்கவில்லை. எனக்கு இரண்டு எருமைகள் உள்ளன. அவற்றை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான் ஒருவன். அதைக்கேட்ட மதுரைப் பெரும்புலவர் கவிராச செகவீர பாண்டியனார் அவர்கள் கூறியது என்ன தெரியுமா? "இனி இரண்டு என்று எவரிடமும் கூறாதே, உனக்கு மூன்று எருமைகள் உள்ளன என்றே கூறு" என்பதே. பாவம் கல்லாத மக்கள் பொல்லாத விலங்குகள் என்பது அப்புலவர் பெருமகனது கருத்து போலும்.

கல்லாத மக்கள் விலங்குகள் என்பது மட்டுமல்ல, அவர்கள் நிறைந்து காணப்படும் நாடும், "நாடாகா; அது காடு" அந்நாட்டை ஆளும் மன்னனும், "நாடாளும் மன்னனாக" இல்லாமல், 'காடாளும் வேடனாகவே' காட்சியளிப்பான்.

கல்விச் செல்வம் இளமையிற் பெறவேண்டிய ஒன்று. முதுமையிற் பெறவேண்டிய செல்வங்களனைத்திற்கும் இது உற்ற துணையாக இருக்கும்; முதுமையிற் கல்வி முயன்றாலும் வாரா. வந்தாலும் தங்கா, முதுமையில் எதுவுமே வராது என்பதல்ல. வருவதும் ஒன்றுண்டு. அது "கல்லாமற் போனேனே" எனக் கதறியழுது வருந்துவதே. அத்தகையோர் பாடிய பாடலும் ஒன்றுண்டு. அது,

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும்
ஆடையும் ஆதரவாய்க்
கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக்
குறித்த தல்லால்
துள்ளித் திரிகின்ற காலத்திலே என்
துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய
பாதகனே.

என்பது.

"இளமையிற் கல்" என்பது ஒளவையின் வாக்கு. "இளமையிற் கல்லாமை குற்றம்" என்பது விளம்பி நாகனார் சட்டம். "இளமையிற் கல்வியை இழந்தவன், இழந்தவனே" என்பது நன்னெறியார் மொழி. கல்வியை இழந்தவன், கண்களையும் இழந்தவன். "கற்றவன் முகத்திலிருப்பதே கண்; மற்றது புண்" என்பது வள்ளுவன் கண்ட உண்மை. "கற்றவர் கருத்திலும் ஒரு கண் உண்டு" என்பது திருமூலர் கருத்து.

கல்வியிலும் மெய்க்கல்வி' என ஒன்றுண்டு எனவும் சமயங்கள் கூறும். இறைவனை, “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" எனவும், “கற்றவர் கருத்தினாற் காண்போன்" எனவும் அறிஞர்கள் கூறுவர். "இறைவனை வணங்காதவர் கற்றும் பயனடையாதவர்" என்பது திருக்குறள் நெறி.

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே"; "கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே; எக்குடிப் பிறப்பினும் யாவரேயாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்." என்பவை அதிவீரராம பாண்டியரது கருத்துக்கள்.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே. வேற்றுமை தெரிந்த நாற் பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே" என்பது புறநானூற்றுப் புதுமை.

நம் நாட்டில் 1911ஆம் ஆண்டு எடுத்த மக்கள் எண்ணிக்கைக் கணக்கின்படி படித்த ஆண்மக்களின் எண்ணிக்கை 100க்கு 9; படித்த பெண் மக்களின் எண்ணிக்கை 100க்கு முக்கால். 1921ஆம் ஆண்டு கணக்கின் படி 100க்கு இது 11ம் ஒன்றே காலுமாக உயர்ந்தது. பின் இது 1931இல் 15ம், 3மாக உயர்ந்து காணப்பட்டது. 1941இல் படித்த ஆண் 20, படித்த பெண் 8. 1951இல் இது 26ம் 8ம் ஆக இருந்தது. 1961இல் படித்த ஆண் 100க்கு 34 வீதமாகவும் படித்த பெண் 100க்கு 13 வீதமாகவும் இருக்கிறது. எனினும் மக்கள் கல்விச் செல்வத்தைப் போதிய அளவு பெற்றதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் பிற நாடுகளில் கற்றறிந்த மக்களின் எண்ணிக்கை இப்போது 100க்கு 72ம் 61 ம், 85ம் 72ம், 91 ம் 86ம் ஆகவும் இருந்து வருவதாகவும், சப்பானில் படித்தவர்களின் எண்ணிக்கை 100க்கு 100ஆக இருந்து வருவதாகவும் தெரியவருகிறது.

ஆகவே படி, நன்றாகப் படி; வாழ்வதற்காகவே படி, படிப்பதற்காகவே வாழ். எல்லாவற்றையும் படிக்காதே. படிக்க வேண்டியவைகளை மட்டும் படி, படித்து அறிந்தவைகளைச் சிந்தித்து உணர். நல்லதைக் கொள். பின் அப்படியே நட. ஏனெனில் கல்வியின் குறிக்கோள் அறிவை அடைவது மட்டுமல்ல: அன்பையும் அருளையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதும் ஆகும்.

வாழட்டும் தமிழகம்!