ஆறு செல்வங்கள்/மக்கட் செல்வம்

6. மக்கட் செல்வம்


"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள்' என்று நம் பெரியோர்கள் வாழ்த்துவது உண்டு. அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவதல்ல. வாழ்வு பெரு வாழ்வாக ஒளிவீசுவதற்குப் பெறவேண்டிய பேறுகள் பதினாறு என்பதே அதன் பொருள். இவை மனை, மனைவி, மக்கள், தாய், நீர், நிலம், கால்நடைகள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, ஏவல், பொன், மணி, புகழ் எனப் பதினாறாம். -

இவற்றுள் ஒவ்வொன்றும் சிறந்த செல்வமே. எனினும் மக்கட் செல்வமே தலைசிறந்த செல்வமாகும் என்பது ஒரு புலவர் பெருமகனது கருத்து. இதனை,

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும் மற் றென்னுடையரேனும் உடையரோ—இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்

என்ற கவிதை மெய்ப்பிக்கும்.

கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த அறிவுடைநம்பி இன்னும் ஒருபடி தாண்டி இக்கருத்தை வலியுறுத்துகிறார். அது

படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறு குறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ந்து
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லை தாம் வாழும் நாளே என்பதே.

"மக்கட்பேறு' என்பது திருக்குறளில் ஏழாவது அதிகா|ரமாகும். 'மக்கள்' என்பது ஆண், பெண் இரண்டையும் குறிக்கும். குறளுக்கு உரை கண்ட பரிமே லழகர், 'புதல்வரைப் பெறுதல்' என இதற்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். புதல்வர் என்பது பெண் மக்களைக் குறிக்காது நீங்கிவிடும். இது ஒரு மாறுபட்ட கொள்கை என்பது அறிஞர் பெருமக்களின் கருத்து. உண்மையில். வள்ளுவரது கொள்கை ஆண் பெண் ஆகிய இருவகைக் குழந்தைகளையும் ஒப்பாகக் கருதுவதேயாம். அதற்கு ஏற்றது "மக்கட் பேறு' என்பதே. இவ்வுண்மையை இத்தலைப்பில் வருகிற கு றள்களில், "மக்கள்' என எட்டுக் குறள்களில் காணப்படுவதாலும், "புதல்வர்' என எந்தக் குறளிலும் காணப்படாமையாலும் நன்கு அறியலாம்.

பிள்ளைத்தாய்ச்சியராயிருக்கும் பெண்கள் அன்பு உள்ளங்கொண்டு அமைதியான வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைப்பேறு எளிதாகவும் மகிழ்வாகவும் இருக்கும். வீரமுள்ள குழந்தைகளைப் பெறு வதற்காகப் பிள்ளைத்தாய்ச்சிகளுக்கு வீரர்களின் வரலாற்றைக் கூறுவதும் உண்டு. கருவுற்ற பெண்ணின் உடல்நலம் மனநலம் அனைத்தும் குழந்தையையும் சென்றடையும் என்பது முற்றிலும் உண்மை.

மேல் நாட்டு மருத்துவமுறை வளர்ச்சியும், புதிய நாகரிக வளர்ச்சியும், தாய் சேய் நல விடுதிகளின் வளர்ச்சி யும் அதிகமாக ஏற்பட்டுள்ள காலம் இக் காலம். எனினும், இக் காலத்திலேற்படுகின்ற பிள்ளை தாய் இழப்புகளின் எண்ணிக்கை எக்காலத்தும் இருந்ததில்லை. இதை எண்ணும்பொழுது பழங்காலத்திய தமிழக மருத்துவ முறை. பிள்ளைப் பேற்று மருந்து முறை ஆகியவைகளின் பெருமை ஒருவாறு நன்கு விளங்கும்.

குழந்தை வளர்ப்புக்கலை ஒரு தனிக் கலையாகும். இக் கலையைக் கல்லூரி மாணவிகள் அறியார்கள். அதை நன்கு அறிந்து அறிவிப்பவர்கள் நம் நாட்டு மூதாட்டிகளே. நாகரிகப் பெண்மணிகள் அவர்களைக் 'கிழடுகள்' என்பார் கள். நன்கறிந்த பெண்மணிகள் அவர்களைக் கிழட்டுச் செல்வங்கள்' என்பார்கள். 'குழந்தைகளின் அணைப்பை கொண்டிருக்கின்ற தாய்மார்கள், கணவரது அணைப்பி லிருந்து விலகி இருத்தல் வேண்டும். இன்றேல் பால் சுரக்கும் உறுப்பில் காம நீர் சுரந்துவிடும். அது கைப் பிள்ளைகளின் வயிற்றில் செரிக்காது. அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு. மாந்தம் முதலிய நோய்கள் குழந்தை களுக்கு வந்து துன்புறுத்தும்' என்பது இக் கிழட்டுச் செல்வங்களின் கருத்து. இச் செல்வங்கள் இல்லாத விடு...? ? ?

குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்க வைக்கின்ற தமிழகத்தின் தாலாட்டுப் பாடல்கள் சுவையுடையன அப்பாடல்களுக்கு உறங்கவைக்கும் வலிமை மட்டுமின்றி, இசையுணர்வு, சொல்லறிவு, சிறந்த பண்பு, விரிந்த மனம், வீர உணர்ச்சி ஆகியவைகளைக் குழந்தைகளுக்கு ஊட்டும் ஆற்றலும் உண்டு.

சைவ சமயத் தலைவர் ஒருவரை சமண சமயத் தலைவர்கள் நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) தள்ளிப் பூட்டியதாகவும், இந்நேரம் எரிந்து சாம்பலா யிருப்பார் என்று எண்ணித் திறந்து பார்த்தபொழுது, அவர் உயிருடன் மீண்டதாகவும் "நெருப்பு உள்ளே எப்படி இருந்தது?" என்று அவரை வினவியபோது, "ஈசன் திருவடியில் நான் இருந்தேன். அது எனக்கு மிகவும் குளிர்ச்சி யாக இருந்தது' என்று பாடியதாகவும் தேவாரம் கூறுகிறது. அப்பாடல் இது:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

கருத்து மட்டுமல்ல. இப்பாடலில். ஒரு நயமும் புதைந்து கிடக்கிறது. அது மெய், வாய், கண், மூக்குக்கு, செவி ஆகிய ஐம்புலனுக்கும் குளிர்ச்சியும். இனிமையும் தருகின்ற ஐந்து பொருள்களை இதில் காண்பதேயாம்.

மாசில் வீணை— காதுக்கு, மாலை மதியம்—கண் ணுக்கு, வீசும் தென்றல்— மூக்குக்கு, வீங்கு இளவேனில் —உடம்பிற்கு, தாமரைப் பொய்கையின் நீர் நாவிற்கு, இப்புதை பொருளைக் காணும்போது நமது உள்ளமும்கூட குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகின்றது.

நாவுக்கரசர் ஐம்புலன்களுக்கு ஐந்து பொருள்களைக் குறிப்பிட்டுக் காட்டினார் என்றாலும் ஐம்புலன்களுக்கும் இனிமைதரும் ஒரே பொருளைக் காட்ட நம்மால் முடியுமா? முயன்று தேடுவோம் வாருங்கள்.

1. வீணை-காதுக்கு இனிமை தரும்.
    கண்ணுக்கு? மூக்குக்கு? நாவுக்கு? உடம்புக்கு?

2. கற்கண்டு-நாவுக்கு இனிமை தரும்.
    காதுக்கு? மூக்குக்கு? கண்ணுக்கு? உடம்புக்கு?

3. மலர்-கண்ணுக்கும் மூக்குக்கும் இனிமை தரும்.
    உடம்புக்கு? நாவுக்கு? காதுக்கு?

4. பலாச்சுளை—நாவுக்கு, கண்ணுக்கு, மூக்குக்கு இனிமை தரும்.

    காதுக்கு? உடம்புக்கு?

5. கிளி—கண்ணுக்கு, காதுக்கு, உடம்புக்கு இனிமை தரும்.

    நாவுக்கு? மூக்குக்கு?

என்ன செய்வது? முயன்றோம் நம்மால் முடியவில்லை. மேலை நாட்டினரும்கூட, ஐம்புலன்களுக்கும் இனிமை தரும் ஒரு பொருளைக் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், அத்தகைய ஒரு பொருளை இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னேயே வள்ளுவர் கண்டுபிடித்துக் கூறியிருக் கிறார். அது,

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள என்பதே.

வள்ளுவர் ஆணாக இருந்ததால் இவ்வாறு கூறியுள்ளார். பெண்ணாக இருந்திருந்தால்,

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்ந்து உற்றறியும் ஐம்புலனும்
திண்டோளான் கண்ணே உள.

என்று கூறியிருப்பார். இதிலிருந்து மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் இனிமைதரும் பொருள் இவ்வுலகில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணுமே என்று தெரிகிறது.

வள்ளுவர் அத்தகைய ஆணையும் பெண்ணையும் சேர்ந்துவைத்து அவர்களுடைய ஐம்புலனுக்கும் இன்பம் பயக்க வேறொரு பொருளும் உண்டு என்று சுட்டிக்காட்டுவது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. அப்பொருள்தான் |மக்கட் செல்வம்!

உச்சி முகர்தல்—மூக்குக்கு இன்பம்
ஈன்ற ஞான்று—கண்ணுக்கு இன்பம்
அவர் சிறுகை அளாவியகூழ்—வாய்க்கு இன்பம்
மக்கள் மெய் திண்டல்—உடற்கின்பம்
மற்று அவர் சொற்கேட்டல்—இன்பம் செவிக்கு

எப்படி வள்ளுவர்? எப்படி அவர் காட்டிய மக்கட் செல்வம்?

தவறு செய்யும் குழந்தைகளை அடித்து வளர்ப்பது நல்லது என்பது சிலரது சருத்து. அதன் மனம் போன படியே போகவிட்டு வளர்ப்பது நல்லது என்பது சிலரது கருத்து, 'அச்சுறுத்தி மிரட்டி வளர்ப்பது நல்லது என்பது இன்னும் சிலரது கருத்து. நல்ல கட்டுப்பாட்டிலும், ஒழுங்கு முறையிலும் வளர்ப்பது நல்லது என்பது வேறு சிலரது கருத்து. நல்ல பிள்ளை, நல்ல பிள்ளை என ஊக்கி வளர்ப்பது நல்லது என்பது பலரது கருத்து எதற்கும் ஒர் அளவு இருக்கவேண்டும்' என்பது எனது கருத்து!

சிறு குழந்தைகளுடைய மனம், படம் எடுக்கப் பயன் படுத்தும் சாம்பல் வண்ணமுள்ள கண்ணாடியைப் போன்றது. எது தன் எதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னுள் பதித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது மோர்க் காரி மோர் விற்பதைக் கண்டால் தானும் தன் தலையில் ஒரு கொட்டங்கச்சியை வைத்துக்கொண்டு மோர், மோர் எனக் கூறி வரும். குதிரை ஏறிச் செல்வோரைக் கண்டால் தானும் ஒரு குட்டிச் சுவரின் மீது ஏறி ஆடி ஆடி குதிரையை ஒட்டுவ தாக மகிழும். உண்பதைக் கண்டால் உண்ணும், உடுத்துவதைக் கண்டால் உடுத்தும். ஆடுவதைக் கண்டு ஆடும், பாடுவதைக் கண்டு பாடும். வாழ்த்துவதைக் கண்டால் வாழ்த்தும், வைவதைக் கண்டால் வையும். ஏனெனில் அது ஆராய்ந்து கொண்டிருக்கும் தன் கண்களால் அகப்பட்டதைப் பதிப்பித்துக் கொள்ளும் உள்ளம் படைத்தது. அதன் உள்ளத்தைப் படப்பதிவுக் கண்ணாடி (Photo plate) என்றால், அதன் கண்களைப் படப்பிடிப்புக் கண்ணாடி (Phoeo lens) எனக் கூறலாம். ஆகவே மக்கட் செல்வத்தை வளர்ப்பதில் மிக்க விழிப்பாக இருத்தல் வேண்டும்.

தம்பித்துரை உபதேசியார் என்பவர் எனது கிறித்தவ நண்பர். அவர் உண்ணும்பேர்தும், உறங்கும் போதும், விழிக்கும் போதும், பள்ளிக்குச் செல்லும் போதும், ஊருக்குப் போகும் போதும் இறைவனை வணங்குவது உண்டு. அவ்வாறு வணங்கும்போது, தன் பிள்ளைகளையெல்லாம் அருகில் அழைத்து வைத்துக்கொண்டு "ஜபம் செய்வோமாக!' என்று கூறியே இறைவனை வேண்டத் தொடங்குவார். ஒருநாள் தன் ஐந்து வயதுக் குழந்தையைக்கூப்பிட்டு "பிரம்பை எடுத்துவா ? என்றார். கொண்டு வந்து கொடுத்தது. அவர் அக் குழந் தையை நோக்கி, "இருமுறை சொல்லியும் கேளாததால் இப்போது நான் உன்னை அடிக்கப் போகிறேன்' என்றார். அதற்கு அந்தக் குழந்தை, 'அப்படியானால் ஜபம் செய்வோ மாக!' என்றது. உடனே உபதேசியார் பிரம்பை நழுவவிட்டுக் குழந்தையை நெஞ்சில் அணைத்துக் கொண்டு கண்ணிர் உகுந்தார். அக்காட்சியைக் இன்றும் என்னால் மறக்க முடிய வில்லை.

அவர் பொடி போடுவது உண்டு. ஆனால் குழந்தைகள் அறியும்படி போடுவதில்லை. அவருக்கு மனைவியின் மீது சிறிது கோபம் வரும். அப்போது அவர் 'பிள்ளைகளே! நீங்கள் வெளியே போகலாம்' என்பார். போய்விடுவார்கள்! மனைவியை அருகில் அழைத்து, 'நீ மனுசியா' என்று வைவார். பிறகு, "பிள்ளைகளே உள்ளே வரலாம்" என்று அழைத்துக் கொள்ளுவார். முதலில் அவர் தவறு செய்வ தில்லை. தம்மையே திருத்திக்கொள்வார். திருத்திக் கொள்ள முடியாத பல பழக்கவழக்கங்ளைப் பிள்ளைகளின் எதிரே அவர்கள் அறியும்படி செய்யமாட்டார் அறிந்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பது அவரது முடிவு. தமிழகத்துப் பெற்றோர்களெல்லாம் தம்பித்துரை உபதேசி யாரானால், தமிழகம்...? ? ?

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்

என்பது வள்ளுவர் வாக்கு. எச்சம் என்பதற்கு எச்சில் உண்மை, குறை, செயல், மிச்சம் பறவை, மலர், பிள்ளை எனப் பல பொருள் உண்டு. பரிமேலழகர் எடுத்துக் கொண்ட பொருள் 'பிள்ளை' என்பது, அதுவே சரி. ஆனால் மேற் கொண்டு அவர் பொருள் விளக்கும் முறையே மாறானது.

"ஒருவர் தக்கவரா அல்லவரா என்பதை அவரவர் களுக்கு மக்கள் உண்மையாலும் இன்மையாலும் அறியப் படும். தக்கார்க்கு எச்சமுண்டாதலும். தகவிலர்க்கு இல்லை யாதலும் ஒரு தலை யெனவும் கூறியிருக்கிறார். இதை நம்மால் ஒப்புக்கொள்ள இயலாது, ஒப்புக் கொள்வதானால் தாயுமானவர், இராமலிங்க அடிகளைப் போன்றவர்களையும் தகவிலர் எனக் கூறும்படி நேர்ந்துவிடும். அவர்களைத் துறவிகள் என ஒதுக்கிவிட்டாலும், இராமகிருட்டின பரம அம்சர், ஏன்? திருவள்ளுவரையே மக்கள் இன்மையால் தகவிலர் எனக் கூறவேண்டி நேர்ந்துவிடும். இதை உலகம் ஏற்காது.

பெற்றோர்கள் எதையும் மறைத்துச் செய்யவும் மறைத்துப் பேசவும் ஆற்றல் பெற்றவர்கள். குழந்தை களுக்கு இத்தகைய ஆற்றல் இராது. அவர்கள் வெள்ளை மனம் படைத்து வெளிப்படையாக நடக்கவும், பேசவும் செய்வர். அவர்களிடத்துப் பழகி, அவர்களுடைய பேச்சு, நடத்தை பழக்க வழக்கங்கள், குணம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவைகளை அறிந்து, அவர்களது பெற்றோர்கள் தக்காரா? தகவிலரா? என்பதை நன்கு அறியலாம் என்ற வள்ளுவரது கருத்து எவ்வளவு அழகானது. சிறந்த உரை யாசிரியராகிய பரிமேலழகரே இதை மக்களுக்கு வழங்கி யிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

'இளமையில் கல்' என்பது தமிழ்ப் பாட்டியின் கட்டளை. பிள்ளைகளைப் படிக்க வைப்பது பெற்றோர் களின் கடமை. கல்வி பயின்று வரும்பொழுது குழந்தை களின் மனப் போக்கை அறியவேண்டும் அவற்றின் எதிர் காலத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்குரிய கல்வியையே கற்பிக்கவேண்டும். குறிக்கோள் இல்லாத கல்வி பயனற்றது. அது செல்ல வேண்டிய இடத்தைக் குறி யாமல் சாலையில் நடந்துகொண்டே இருப்பதைப் போன்றது.

கல்வியின் அருமை. பெருமைகளை இளமை நன்கு அறியாது அவர்களின் விளையாட்டுப் புத்தியும் கல்வியைக் கெடுத்துவிடும். சில துடுக்குத் தனத்தினால் துள்ளித் திரியும். அத்தகைய பிள்ளைகளின் மீது பெற்றோர் அதிக அக்கரை கொண்டு திருத்தியாக வேண்டும். அன்பும், ஆசையும் கொண்டு திருத்தாமல் விடுவது அவர்களுக்குப் பெருந் தீமை விளைவிப்பதாகும். பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காமல் எவ்வளவுதான் செல்வத்தைக் கொட்டிக் குவித்து வழங்கினாலும் அது அவர்களுக்குப் பயன் தராது.

பிள்ளைகளின் உடல் வளர்வதைப் போலவே அவர்களது அறிவும் வளர்ந்து வரும். நாளுக்கு நாள் இவர்களது சிந்தனையும் வலுப்பெற்று வரும். அதனால் அவர்கள் தங்கள் நோக்கங்களைப் பெருக்கிக்கொண்டே வருவார்கள். அவர் களது முதல் அறிவு கேள்வியாலேயே வளர்கின்றது. ஆகவே, நமக்கு எவ்வளவு தொல்லைகள் இருந்தாலும் அமைதியாக இருந்து அவற்றிற்கு எல்லாம் விடை கூறியாக வேண்டும். விளையாட்டிற்காகவும் பொய் சொல்லக் கூடாது. வேடிக்கைக் காகவும் ஏமாற்றக்கூடாது. எதையும் கூறி அச்சுறுத்தலாகாது. சிற்றோடையில் ஊறி ஒடும் தெளிந்த நீரென அவர்கள் உள்ளத்தில் அறிவு தானாகச் சுரந்து வழியும். அதனை வளர்க்கப் பெரிதும் முயலவேண்டும். அதைத் தடைப் படுத்தாமலாவது இருந்துவிட வேண்டும் பழமையைப் புகுத்தினாலும் பகுத்தறிவு கொண்டு புகுத்தவேண்டும். "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே; போனால் சாத்திரத்திற்காகாது” என்று கூறலாகாது. "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே. போனால் எந்தக் கழுதையாயினும் உதைக்கும்” என்று கூறுவது நலமாகும். இம்முறை குழந்தைகளின் அறிவை வளர்க்கப் பெருந்துணை செய்யும்.

பழங்காலத் தாய்மார்கள் குழந்தைகளின் உடலை, அறிவை மட்டும் வளர்த்து வரவில்லை. அவர்களின் வீரத் தையும் வளர்த்து வந்தார்கள். அக்காலத்தில் தமிழ் மகள் ஒருத்தி, -

மகனைப் பெற்றுக் கொடுப்பது எனது கடமை
அவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை
அவனை நல்வழி நடத்துதல் வேந்தனின் கடமை
அவனுக்கு வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடமை

போர்க்களம் புகுந்து யானைகளைக் குத்தி வீத்திக்
       களிப்புடன் திரும்புதல் காளையின் கடமை.

என்று கூறியிருப்பதால் இவ்வுண்மையை அறியலாம்.

பழந்தமிழர்கள் தம் மக்களின் உடல், அழகு, அறிவு, ஆற்றல், வீரம் ஆகியவற்றை வளர்ப்பதைவிட அவர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதையே முதற்கடமையாகக் கொண் டிருந்தார்கள், அதனை,

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
ஒழுக்கம் விழுப்பம் தரும்
இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்

என்பனவற்றால் நன்கு அறியலாம்.

தமிழகத்தில் தமிழாசிரியர்களால் நடத்தப்படும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில், தமிழ் இலக்கியங்களில், இருக்கும் தமிழ்ப் பண்பாடுகளைத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறுவ துண்டு. அவை,

(1) இந்திரர் அமிர்தம் கொடுப்பதாயினும், அது மிகச் சுவையாக இருக்கிறது என்று தமிழர் தனித்து உண்பதில்லை. பழியோடு இவ்வுலகமே வருவதானாலும் கொள்வதில்லை. புகழ் எனில் உயிரும் கொடுப்பர்.

(2) பெற்ற தாய் பசித்திருக்கப் பார்ப்பது, பிறந்த மகனுக்குப் பெரிய இழிவு. இருப்பினும் சான்றோர்களால் பழிக்கப்பட்ட செயல்களைச் செய்து தாயின் பசியைப் போக்க நினைப்பதில்லை

(3) உயிரை இழப்பதா? மானத்தை இழப்பதா? என்ற ஒரு நிலை வந்தால், உயிரை இழந்தேனும் மானத்தைக் காப்பாற்றுவர். ஏனெனில் அவர் உடல் நிலையாமையை யும் மானத்தின் நிலையுடைமையையும் அறிவர் என்பனவாம். ஒருவன் பெறவேண்டிய பேறுகளில், அறிவறிந்த நன் மக்களைப் பெறுவதே சிறந்த பேறு. பண்புடைய நன் மக்களைப் பெற்று ஒருவனது குடும்பத்தை, ஏழு தலைமுறை ஆயினும் துன்பம் சென்றடையாது. தம் புதல்வரைத் தமது பொருள் என்றும், தன் மக்களின் பொருள் அவரவர் செயலைப் பொறுத்தது என்றும் அறிஞர் கூறுவர். தம் மக்கள் சேறுபடிந்த சிறுகையால் குழப்பிய கூழ் அமுதத்தினும் மிக இனிமை பயப்பதாக இருக்கும். யாழின் ஒலியும், குழலின் ஓசையும் இனிமையாயிருக்கின்றன என்று கூறுபவர்கள், தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டவர்களல்லர். தன் மகனைச் சிறந்த அறிஞன் எனச் சான்றோர்களால் கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள். தான் பெற்றபிள்ளை தன்னைவிட அதிக அறிவைப் பெற்று விளங்குவது தனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகும். 'ஒரு நல்ல தந்தை தன் மகனுக்குச் செய்யும் பேருதவி அவனைக் கல்வி, அறிவு, ஒழுக்கம் உள்ளோரின் அவையிலே முதன்மை யாக இருக்கும்படி செய்தல். ஒரு நன்மகன் தன் தந்தைக்குச் செய்யும் பேருதவி இவன் தந்தை பெரும்பேறு பெற்றான் எனப் பிறர் கூறும்படி நடத்தல்' என்பன வள்ளுவரது கருத்துக்கள்.

தமிழும் தமிழரும் தமிழகமும் சிறந்து விளங்க வேண்டு

மெனில் நாட்டில் நன்மக்கள் பலர் பிற்ந்து வளர்ந்தாக வேண்டும் என்பது சான்றோர் கருத்து.

வாழ்க தமிழகம்