ஆலமரத்துப் பைங்கிளி/குழந்தைத் தெய்வம்

4
குழந்தைத் தெய்வம்

ங்கரன் குடியிருப்பிலே செக்குவைத்துச் செக்கு மாடாக உழைத்துப் பிழைத்த பழம்புள்ளி செ. மு. அண்ணாமலை. அக்கரைச் சீமைக்கு ஐந்து ‘கணக்கு’ப் போய்விட்டுத் திரும்பிய தகப்பன்காரர், அண்ணாமலைக்குச் சொத்துச் சுகம் தேடி வைக்கவில்லை என்றாலும், ‘கடன்கப்பி’யைச் சீதனமாக்கிச் செல்லவில்லை. ஆகவே தான், இவரால் மானமாகத் தப்ப முடிந்தது.

எழுபது அடி நீளமும் காற்பது அடி அகலமும் கொண்டிருந்த அந்தச் சிறிய இடைவெளியில்தான் செக்குப் போட்டிருந்தது. கடைவாயில் நாலு பல் போட்டிருந்த சந்தைப்பேட்டைச் செவலைக்காளை ஒன்று. குத்துக் கட்டையின் முகதலைவில் பாரத்தைச் சமன் செய்ய வைத்திருந்த செம்பூரான் கல்லின்மீது அட்டணைக் கால் போட்டுக்கொண்டு திருக்கை வால் தார்க்குச்சியும் கையுமாகக் குந்தி மாடு ஓட்ட ஓர் எடுபிடிப் பொடியன்.

கோழி கூப்பிடத் துயில் நீக்கும் அண்ணாமலை ஒரு பீங்கான் நீராகாரத்தை மடக் மடக்கென்று குடித்து, ஒரு வாய்க்கு வெற்றிலைச் சருகு போட்டுக்கொண்டு, விபூதி மடலிலிருந்து திருநீறு அள்ளிப் பூசிய சுருக்குடன் செக்கு மேட்டை அண்டி, மாட்டுக்குத் தண்ணீர் காட்டி, தீவனம் வைத்துப் பூட்டிவிட்டு, எடுபிடிப் பையனைக் காவல் வைத்து, பின்பு எண்ணெய் ஆட்ட வங்திருக்கும் எள் அல்லது நிலக்கடலையைச் செக்கில் போட்டு, கரை தள்ளிச் சேர்த்து, உலக்கையை ‘வாகு’ பார்த்து, ‘வசம்’ அமைத்து நிறுத்தி முடித்தாரென்றால், “டேலே, ஓட்டு டாலே பதனமா! ஊம்! அசந்து மறந்து துரங்கினீயோ, தண்டு மரக்கட்டைக்குள்ளாற நீ அகப்பட்டுக்கிட்டு, அப்பாலே காளையோட கால் குளம்புக்குள்ளவும் நீ மிதிபட்டுப் போவே! ஆமா! அந்திமழை அழுதாலும் விடாதுங்கிறது கணக்கிலே, அப்புறம் நீ என்னதான் காவடி எடுத்தாலும், நோக்காட்டிலேருந்து நீ தப்பவே ஏலாதாக்கும்!” என்று வளமையான புத்திமதிப் படலத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, அவரும் செக்கு மாடாகவே இயங்கி, செக்கு இழைத்த ராகத்தாளக்கட்டுடன் கூடிய லயசுத்தமான சங்கீதக் குழைவின் இழைகளுடன் ஒன்றி, இத்தகைய கால நிர்ணய நியதிக் கோலத்துக்குக் கொத்தடிமையாகிக் கிடக்கும் அவரைச் சுய உணர்வு பெறச் செய்யவல்ல புண்ணியம் இருள் தாய்க்கே கிடைத்து வந்தது. முசுமுசு என்று நாலாவது காணம் பிண்ணாக்கைச் சிறிய கடப்பாரை கொண்டு விலாக்குத்துக் குத்தி கிமிண்டி எடுத்து, அப்புறம் பந்தம் பிடித்து, மிச்சம் மீதி இருக்கும் எண்ணெயைக் கொட்டாங்கச்சியினல் வழித்து வழித்து எடுத்துக் கலயத்தின் ஊற்றி, கைப்பிடித் துணியைச் செக்கின் அடிக்குழியில் தோய்த்துப் பிழிந்து இரும் புப்படியில் இட்டு கிரப்பி, அதையும் கலயத்தில் சேர்த்து, கடைசியில் ‘ஈசுவரா!’ என்ற நாம உச்சரிப்புத்தொனியின் துணைவலியுடன் பெரிய குத்துக் கடப்பாரையை உலக்கையின் அடிவயிற்றில் முட்டுக்கொடுத்து உலக்கையை நீக்கி வீசிவிட்டு, பிண்ணாக்கைத் தோண்டிக் கூடையில் வீசி விட்டு, கடைசியில் உலக்கையைப் படுக்கை வசமாகக் கிழக்கு மேற்கில் வைத்து, அதன்மேல் தென்னங்கீற்றுச் சாம்பான் குடிசையை மூடி முடித்து விட்டுப் புறப்பட்டு விட்டால் அன்றையப் பணியும் கடனும் முடிந்த கதை தான்.

வேப்பமரப் போத்துக்கு அடியில் நார்க் கட்டிலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு குந்தி வெற்றிலை குட்டானைப் பிரித்து ஒரு ‘வாட்டி’க்கு வெற்றிலைச் சருகு போட்டுக் கொண்டதுந்தான் அண்ணாமலைக்கு நல்ல மூச்சு வரும். நிலவுக்கும் இருட்டுக்கும் ஊடே, இடதுகை விரல்களினூடே, எச்சிலைப் பிழிந்து பிழிந்து துப்புவார். அரை வட்டக் குடுமியை உதறி எடுத்துப் பிசிர்தட்டி மீண்டும் முடிந்துகொண்ட கையுடன், இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப் பையைத் துழாவி, அன்றைய வரும்படியை கணக்கிடுவார். ‘சபாசு! ரெண்டு ரூபாவுக்கு ஒருபணம் குறைச்சல்! பரவாயில்லே! செவ்வாச் சந்தையிலே ஒரு கட்டு வைக்கக் கூளம் வாங்கனும்; கச்சப்பொடி,கருவாடு வாங்கவேனும்; பொடிசுக்குப் பொட்டுக்கடலை ஒரு மூணு காசுக்கு வாங்கியாகனும்; வள்ளியம்மைக்குச் சோள முறுக்கு வேணும். சரி, எண்ணிப் பாத்தாக்க, சுருக்குப்பைப் புழுதிதான் மிஞ்சும்!’

“ஓங்களைத்தானுங்களே!...”

அண்ணாமலைக்குக் குரலை இனம் காணவா தெரியாது? தெரியும், தெரியும்!

அமுத்தலாக, கன்னத்தில் ஏந்திய கையுடன் உட்கார்ந்திருப்பார்.

மறுபடியும் குரல் குடையும், “ம். வள்ளியம்மை வூட்டுக்காரங்களே!” என்றபடி வந்து நிற்பர்ள் வள்ளியம்மை. அள்ளிச் செருகிய கொண்டை; அதில் ஓர் இணுக்கு மருக்கொழுந்து, நெற்றியில் குங்குமம், முகத்தில் கன்னியாக்குறிச்சி மஞ்சள் பூச்சு. கம்மல் சுழ்ன்றாட, புல்லாக்குப் பூரித்துச் சிரிக்க, கடைக்கண் விலக்கி, இதழ முதக் குறுமுறுவலே ஏந்தி நிற்பாள் ஏந்திழை, கன்னம் தாங்கிய கை, கள்ளம் நீங்கிய மனம் இரண்டும் ஒருருவாகக் கொண்டது போல. அண்ணாமலை எழுந்து, அவள் கன்னத்தை நெருடி மகிழ்ந்து, கையுடன் கை பிணைத்து, இதயத்துடன் இதயம் இணைத்து நடப்பார்.

அது அவர்கள் குடில். எட்டடிக் குச்சுவீடு. கஷ்டம் உணர்ந்து, காலம் கணித்து வாழ்வு நடத்தினார்கள். சிற்றப்பன் பெரியப்பன் வீட்டுச் செல்வங்கள் ‘மகாமேரு’வாக அண்டைத் திடலில் கொட்டிக் கொழித்த விவகாரங்களைப் பற்றி அவர்கள் எண்ணுவதோ ஏங்குவதோ இல்லை. “அவங்க அவங்க பொசுப்பு!” என்பார் அவர்.

வெந்நீர் விளாவி வைப்பாள். அருகில் நிற்பது தெரிந்துங்கூட “ஏலே, அண்ணாமலை வூட்டுக்காரியோ!” என்று சன்னக்குரலில் ஓர் அழுத்தம் பிடித்துக் கூப்பிட்டுச் சிரிப்பார். குளியல் முடியும். பூவையின் கரம் அவரது மேனி அனுப்புச் சலிப்பை நீக்கிவிடும். ஒரு வெட்டு வெட்டுவார் சாப்பாட்டை. ‘கவுச்சி’ என்றால் மனிதருக்கு மிகவும் விருப்பம். உண்டு முடிந்துவிட்டால், சிரிப்பும் கும்மாள முந்தான்! அப்பால்......

எல்லாம் போன சோபகிருது வருஷ நடப்பு.

கதையா இது?

ஊஹூம்!

கனவல்லவே?

அல்ல; கனவல்ல!

‘அணில் கொம்பில்; ஆமை கிணற்றில்’ என்பார்கள். அதைப்போலத்தான் இப்பொழுது அண்ணாமலையின் கதையும். சகா பாயும் படுக்கையுந்தான். நொடிக்கு நூறு மூச்சு நூறு மூச்சுக்கு முந்நூறு இருமல். சிணுங் கல் இருமல். கோழிக்கோடுச் சீமைஓட்டு வீடு. மச்சு மனை. குச்சு, திசை திரும்பிய கதை. ஓடுகளின் ‘காங்கை’யும் ‘கிருது’ம் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை; ஆனாலும் விதியின் நமட்டுச் சிரிப்பு அவரை அழ வைத்ததே!

மனிதர் இப்படியா நாரும் தோலும் ஆவார்?

‘ஏலே வள்ளியம்மை!’

கூப்பிட்ட குரல் கூடிப் பரவுமுன்பே, முன்றானை விரித்து வாழ்க்கைப்பட்டவள் இளமைச் சிரிப்பும் முதுமைக் கோலமும் தாங்கிவந்து அமர்ந்தாள். பட்டு மெத்தையில் கால்கள் உரசின.

“வரக்காபி கொஞ்சம் வச்சுத் தாங்கிறேன்!”

“ஆகட்டுமுங்க, அத்தான்!” என்று அவள் சொல்லி அடுப்படிக்குத் திரும்பி மீளும் நேரத்தில் வரக் காபி வந்து நிற்கும். சுக்கு மணம் கமழ.

ஒரு மடக்குக் குடிப்பார். மூச்சுப் போய் மூச்சு வரும்.

“இன்னிக்கு வெள்ளிக்கெளமை ஆச்சே; சாமிக்கு நம்ம ரெண்டுபேரு நட்சத்திரத்துக்கும் ஒரு அர்ச்சனை செஞ்சுக்கிட்டு வாயேன்!”

“ஆகட்டுமுங்க!” என்றாள் வள்ளியம்மை, அந்திச் சுடர்க்கதிர்களைத் தடவிக் கொடுத்த வண்ணம்.

நரைமுடிகளில் கதிரொளியின் மஞ்சள் கோலம், கோலம் பரப்பியது. அங்குல அளவுக்கு இருந்த பச்சைக் கல் மோதிரத்தை லாவகமாகத் திருப்பிப் பார்த்தபோது, அவருள் பெருமிதம் பூரித்துப் புடைத்தது. காலத்தின் ஏடுகளை புரட்டினாரோ? ஞாலத்தின் ஏடுகளைப் புரட்டினாரோ?

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கிய விதரணே புரிந்த புள்ளி இந்த அண்ணுமலை. குடியிருப்பு வட்டா ரத்தில் நெடுகிலும் இப்படி ஒரு கருத்து.

"வள்வி!"

‘இருக்கேனே!”

“என் நட்சத்திரம் தெரியுமல்ல’

“ஓ! பூசங்தானுங்களே!’

“ம்! உன்னது?”

“பூராடம்!"

'பலே பலே!” என்று செப்பி, வள்ளியின் கழுத் தோரத்தே விரல் பதித்து, கிசுகிசு’ மூட்டினர். சிரித்தாள் பார்க்க வேண்டுமே!

மிச்ச சொச்சம் மிகுந்திருந்த பத்துப் பற்களிலும் பதவிசான, பரபரப்பு முடங்கிய நகைப்பு இருந்தது. போங்க நீங்க! புள்ளே இல்லாத ஆட்டிலே என்னமோ கெளவன் துள்ளித் துள்ளிக் குதிச்சகதை கணக்குத்தான். போங்கங்கிறேன்!” என்று வள்ளியம்மை விடுத்த சொற் பெருக்கின் ஒலி அவரை ஏன் அப்படி முகம் சுண்ட வைத்தது?

"எல்லாம் எனேயாளும் ஈசன் செயல்"

நெஞ்சு கெக்குஞ்கிய கிலையிலும் கினேவிலும் சொற் கள் வெடித்து ஒலி சிதறின. விழிகள் மூடின. இதழ்கள் இடைவெளி காட்டவில்லை; கைகளில் நடுக்கம். நெடு. மூச்சில் துடிப்பு. காடி ஒடுங்கியதுபோல ஒரு கைப் புணர்ச்சி வேறு.

“அத்தான்!"

சுடுநீர் மணிகள்தாம் அவள் கண்ணிரில் தரிசனம் காட்டின.

“இன்னிக்கு வெள்ளிக் கிளமையாச்சே!”

“அதான் தெரிஞ்ச சங்கதியாச்சே!”

“அது சரி; இன்னொரு தாக்கல், அதான், ஒங்க தம்பி ஆட்டுச் சேதி!”―விழுங்கினாள்; மிடறு இறக்கினாள்.முகதலைவைக் கொய்து அழகுபார்த்து,அழகு காட்டினாள். முகச்சுருக்கங்களின் சருக்கம் விரிந்தது.

“ஓ, அதுவா?”― திண்டை ஒரு நிலைப்படுத்திச் சாய்த்து வைத்துக்கொண்டார். சுவரை ஒட்டித் தலையணையை இழுத்து நகர்த்தியபடி, சாய்ந்து கெர்ண்டார். கோடை இப்படியா ஈரக்கசிவை மேனியில் ஊறச் செய்யும்? சே! “ஆமா, தம்பி ஒன் இஷ்டப்படியே ஒப்புக் கிட்டானா? அவன் சம்சாரம் ― அந்தப் புள்ளேயும் மனசு இசைஞ்சுருச்சுதா? எல்லாமே ஈசன் செயல்தானாக்கும்!”

“ஆமாங்க. எல்லாரும் சம்மதிச்சாச்சு!”

மறுபடி, அண்ணாமலை இமைகளை மூடினார். கொண்டல்மணிவண்ணனின் உருவில் நின்ற இராமமூர்த்தியின் சேதுபக்தன தரிசனக் காட்சிகளும் சேதுஸ்கான முக்குளிப்பு நிகழ்வுகளும் சலனப்படங்களாயின. மனச் சலனமும் படம் காட்டிற்று. எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்! ஓர் அரசமரத்தை பாக்கி வைத்தாளா அவள்?

கன்றின் குரல் கனிந்து வந்தது. வள்ளியம்மை ஓடினாள். இரட்டை நாடிச் சரீரம் துயருற்றது. கொட்டடியில் கன்றைக் கட்டி, புல் தழைகளை உதறிப் போட்டுவிட்டுத் திரும்பினாள்.

“எங்கே அந்த மூக்கன் இன்னமா மேய்ச்சலை விட்டுத் திரும்பலே?” என்று வினவினார்.

“வார சமயந்தான்! அது சரி. நல்ல நாளு ஒண்ணு பார்க்க வேணும்னாங்க கொழுந்தன்காரக. சிதம்பர விடுதி

அய்யருசாமி தெவசம் சொல்லப் பறிஞ்சு வந்தாக்க, நெனப்பூட்டி குறிச்சுக்கிடுங்க!”

“ஆகட்டும்!”

வள்ளியம்மை தேங்காயும் கையுமாகக் கோயிலுக்குப் புறப்பட்டாள்.

தெய்வத்தின் அறக்கருணையே குழந்தை உருக் கொண்ட பாவனை துலங்குகிற குழந்தை அவன். ஆழி மழைக் கண்ணனா? இல்லை, அருள்மிகு கார்த்திகை மைந்தனா உதட்டுக் கரைதனில் மெல்லிளம் புன்னகை;இமைக் கரைதனில் ஆர்வத்துடிப்புக் காட்டும் துள்ளல். மெட்டு ஒலிக்க, கைக்கொலுசுகள் குலுங்க, கழுத்துச் சங்கிலி குலுங்கத் திகழ்ந்த அவன் இன்று எப்படி உருமாறிவிட்டான் அரைக் கைச்சட்டை என்ன, அரைக்கால் சட்டை என்ன, கோணல்வகிடுக் கிராப்பு என்ன, அரிச்சுவடி படிக்கப் பள்ளிக்கூடம் செல்லப் போகிறானாம்! கேட்டீர்களா?

அண்ணமலை நயன்ச் சிமிழ்களை மூடித் திறந்து அழகு பார்த்த வேளையில்தான், அழகு காட்டி ஓடின, மேற்படி சிந்தனை நயங்கள். தானும் பிறருமாக, தானும் தன் இல்லக் கிழத்தியுமாக ரசித்த சிறுவனைப் பற்றிய சிந்தனை இதழ்களின் நெடி அவரைக் கிறங்கச் செய்திருக்க வேண்டும்.

ஆலய மணி ஒலித்தது. கன்னத்தில் போட்டுக் கொண்டார்; ‘சிவ சிவ’ என்று முனகினார். அவர் எழுந்து குந்தினார்.

ஏர்மாட்டை அடித்து நொறுக்கினான் பண்ணைக்காரன். ‘பாவிப் பயமவன்!’ உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆணயை ஏவினார். ஏலே, அடிக்காதேடா! வாயத்த செம்மமுடாலே போன சென்மத்லே செஞ்ச பாவந்தான் இன்னும் சுத்துதேடா! நீ வேறே ஏதுக்குடா அதைப்போட்டு மொத்துற?”

நினைவுகளின் புலம்பலில் இறந்த காலம் எள்ளி நகையாடிக் குலுங்கிற்று. ஆடம்பரமான அமுத்தல் சிரிப்பு. விதி சிரித்திருக்குமோ?

“செந்தில்!”

அழைத்திட்ட வாய் மணத்தது; நினைத்த நெஞ்சு இனித்தது. செந்தில்குமரன் நிழலாடமாட்டானா?

செந்தில் இருக்கிறானே செந்தில், அவன் தான் அண்ணாமலையின் தம்பி மகன். தம்பிக்காரர் தங்கப்பன் கொடுத்து வைத்த பேர்வழி. ஆண்களில் மூன்றும் பெண்களில் நாலும் மொத்தம் ஏழு பிள்ளை குட்டிகள்.

முப்பதாயிர ரூபாய் கைரொக்கமாக வைத்திருந்தவர் அண்ணாமலை. ஆனாலும் அவருக்குத் துளிகூட மகிழ்ச்சியே இல்லை. ‘எல்லாம் இருந்து என்ன? வள்ளி வயித்திலே ஒரு பூச்சி புழு உண்டாகலையே!’ என்று ஏங்கிக் காலத்தை ஓட்டியதுதான் கண்ட பலன். மற்றப்படி, பலன் எதையும் காணவில்லை அவர்.

ஒரு நாள் திடுதிப்பென்று அவருக்கு ‘நெஞ்சடைப்பு’ வந்தது. நல்ல வேளை, பிழைத்தார்! “ஓங்களுக்கோ வயசு தள்ளலை. சொத்து சுகத்தைக் கட்டி ஆள்றத்துக்கும் நாளைப் பின்னைக்கு ஒங்களுக்குக் கொள்ளி வச்சு வாய்க்கரிசி போடவும் ஒரு வாரிசு வேணாமா? யோசிச்சு, சொந்தத்திலேயே ஒரு சுவீகாரம் எடுத்துக்கிடுறதுதான் சிலாக்கியமுங்க. வூட்டிலவும் கலந்துகிடுங்க!” என்றார் கி. மு. சன்னம் சன்னமான பேச்சு, எடுப்பான பல்லவியாகக் களைகட்டிவிட்டது.

சுவீகாரத்துக்கு உரிய, உகந்த புள்ளிக்காகச் சல்லடை போட்டார்கள் தம்பதி இருவரும். எடுத்த எடுப்பிலேயே ‘செந்தில்’ பெயரை ஓதினாள் வீட்டுக்காரி. அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும் ‘சொந்தம் விட்டு’ ஒதுங்கியும் விலகியும் வாழ்ந்தாலும், செந்தில் மட்டும் வள்ளியம்மையிடம் ஒட்டிக்கொண்டான். ஒட்டிய பாசம் தழைத்தது. வள்ளியம்மைக்கு கண்ணுக்கு கண் ஆனான் செந்தில். “”இறங்கின கை நாம்ப. ஆனாலும் அதுக்காக, மண்டைக் கொண்டு திரியாம, என்னமோ ஒங்க அண்ணன் சம்சாரம் நம்ம செந்தில் பயகிட்ட இம்மாந் தொலைவு ஒட்டுதலா இருக்கிறதே, ஒரு அதிசயக் கூத்துத்தான்! மேலவட்டை செல்லத்தாச்சி மகனை அவுக அண்ணன் பெண்சாதி கரிச்சுக் கொட்டின மாதிரி இங்கே ஒண்னும் நடக்கவே நடக்காதுங்கிறதுவும் நம்ப மனசுக்கு எம்பிட்டோ சிவாவத்தான சேதி தானுங்க!” என்று கொண்டவனிடம் பரிந்துரைத்த வாசகங்களை வள்ளியம்மை அறியமாட்டாள்.

இரவு வேளைகள் தவிர, எஞ்சிய பொழுதெல்லாம் செந்தில் இந்தச் சீமை ஓட்டு வீட்டில்தான் அடைந்து கிடந்தான். “பெரிய ஆத்தா, பெரியாத்தா!” என்று ஓயாமல் அலட்டிக்கொண்டு, வள்ளியம்மையின் கொசுவத்தைத்தான் சுற்றுவான். வெற்றிலைப் பாக்கைக் கல்லுரலில் வைத்துப் பொடித்துக் கொண்டிருக்கையில் சிறுவனின் கைவிரல் அகப்பட்டு லேசாக ரத்தம் கட்டி நசுங்கியதைக் கண்டதும் அவள் பட்ட பாடு அல்பமா, சொல்பமா? ‘பெறாத வயிறு’ அடைந்த இன்னல் கொஞ்சமா நஞ்சமா?

செந்தில் ஒரு முறை பனங்குளத்துக்கு விருந்துண்ணச் சென்றுவிட்டான். ஒரு வாரம் குழந்தையைக் காணாத ஏக்கம் விசுவரூபம் எடுத்தது; வள்ளியம்மையைப் பாயும் படுக்கையுமாக்கிவிட்டது. செந்திலுக்கு ஆள் அனுப்பும் அளவுக்குச் ‘சிக்கு’ மிஞ்சியது. குழந்தையின் முகம் கண்டு, அவள் அகம் குளிர்ந்தது போலும். மறு பிறவி எடுத்தாள். அவள் கண்மலர்களைத் திறப்பதற்குள், செந்தில், “பெரியத்தா பெரிய ஆத்தா!” என்று புரண்டு குதித்து ஓலமிட்டுக் கதறிய நிகழ்ச்சியை யார் தாம் மறப்பார்கள்?

செந்திலின்பேரில் அண்ணாமலைக்குக் கொள்ளைப் பாசந்தான். ஆனாலும் செந்திலைப்பற்றி அவருக்கு உள்ளூற ஒரு குறை உறுத்திக்கொண்டே இருந்தது. இதை மனைவியிடம் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை.

‘செந்தில் என்னோட பெண்சாதிகிட்டப் பாசமாயிருக்கிறதாட்டம் எங்கிட்டவும் பிரியம் காட்டுவானா? என்னவோ எனக்கு நம்புறத்துக்கு வாய்க்கலே! ஒரு கடுத்தம் நானும் என் தம்பியும் ― அதான் செந்திலோட தகப்பனும் ― வாய்ப்பேச்சு முத்திக் காட்டமாப் பேசிக்கிட்டிருந்தோம். அப்போ நான் என் தம்பியைக் கோபமாத் திட்டினதைக் கண்டு, இந்தப் பொடிசு வந்து லபக்கின்னு ஒரு சுக்கான் கல்லை லாவி எடுத்து என்னோட நெத்திப் பொட்டிலே வீசிப்புட்டு ஓடியிட்டானே! அதை நான் எப்பிடி மறப்பேனாம் செந்திலாண்டவனே, என் தம்பி மகன் செந்தில் மனசு எங்கிட்டவும் ஒட்டிப்பழகிறதுக்கு அநுக்கிரகம் செய்யமாட்டீயா அப்பனே?’ என்று நெஞ்சின் குகைக்குள் இந்த எண்ணங்களைச் சிறை வைத்து, அந்த மனக் குமுறலில் மனம் குமைந்து சீரழிந்து கொண்டிருந்த உண்மையின் நடப்பை அவரால் எங்ஙனம் துணைவியினிடம் சொல்லித் திரியக் கூடும்?

“என் புண்ணியம் இம்மட்டுத்தான்போலே!” என்று நொந்த நிலையில், மனையாட்டியின் இஷ்டப்படியே, செந்திலைச் சுவீகாரம் எடுப்பதற்கான பேச்சு வார்த்தைகளை கடத்தி, சுவீகாரச் சடங்கு நடைபெறுவதற்கான சுப தினத்தையும் நிர்ணயம் செய்த அண்ணாமலைக்கு இருக்
திருந்தாற்போல உடம்பு கொதித்துக் காய்ச்சல் வந்து விட்டது. இரவு வள்ளியம்மைக்குச் சிவராத்திரி. விருந்து உண்ட செந்தில் அயர்ந்த கித்திரை வசப்பட்டான்.

நிலம் தெளியும் நேரம். கோடைமழை சொல்லிக் கொண்டு வருவதில்லை அல்லவா? வள்ளியம்மை திடுமென்று குய்யோ முறையோ என்று கதறி அழுது, தன் பிராணநாதரின் மேனியில் தலைபதித்துக் கூக்குரலிட்டாள்.

அண்ணாமலை மூச்சுப் பேச்சின்றிச் சவம் போலக் கிடந்தார்.

வள்ளியம்மை, “ஐயையோ!” என்று ஓலமிட்டாள். ஒலம் கேட்டதும், செந்தில் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான்; கண்களைப் புறங் கையினால் தேய்த்துக் கொண்டு சுற்றிச் சூழ நோக்கினான். ‘அரிக்கன் விளக்கு’ ஒளி சூழலைப் படம் பிடித்தது. பெரிய தாயாரின் அழுகையையும் விழிநீரையும் கண்டதும் அவனுக்கும் அழுகை முட்டியது. பெரியப்பனைப் பார்த்தான்; “பெரியப்பா! பெரியப்பா!” என்று கூப்பிட்டான்.

“பெரியப்பா செத்துப் போயிட்டாங்கடா கண்ணே!” என்று அழுதாள் அவள்.

“பெரியப்பா செத்துப் பூட்டாங்கணாக்க, இனிமே எங்க டப் பேசமாட்டாங்களா, பெரியத்தா?”

“ஊஹூம்.” செரும்ல் வெடித்தது.

“ஐயையோ! பெரியப்பாவே!” என்று பிஞ்சு மனம் வெடிக்கக் கத்திற்று. அருகில் இருந்த தூணில் தலையை மோதிக்கொண்டு கதறினான். நெற்றிப் பொட்டில் ரத்தம் கசிந்தது.

“பெரியப்பா தங்கமான அப்பாவாச்சே! நேத்து ரொட்டி தந்தாங்க. நெய்ச் சோறு ஊட்டினாங்களே! நான்தான் ஒரு தரம் அவங்க நெத்தியிலே கல்லாலே அடிக்சுப்புட்டேன். பெரியப்பா! பெரியப்பா!” என்று பெருங் குரலெடுத்து அழுத அவன் அண்ணாமலையின் நெற்றிப் பொட்டு வடுவை விரலால் தொட்டுத் தொட்டு மீண்டும் அழுகையைத் தொடர்ந்து, அந்தத் தூணில் தலையைத் திரும்பவும் பலமாக மோதிக்கொண்டான். வள்ளியம்மையின் கரங்கள் துடித்த துடிப்பை அவன் எங்கே அறிந்திருப்பான்? “தம்பி!” என்று விம்மினாள் அவள்.

“பெரியப்பா!”

பெரியப்பாவின் காலடியில் விழுந்து கத்தின செந்தில் மறுமுறையும் தூணை நாடி ஓடிய நேரத்தில் அவனைத் தேடி ஓடிவந்த கைகளைக் கண்டு தலைநிமிர்ந்தான்.

பெரியப்பா, “கண்ணே, இப்பத்தாண்டா என் மனசு குளிர்ந்தது. ஐயையோ! இவ்வளவு ரத்தமா? என்று எழுந்து செருமினார்; செந்திலை அணைத்துக்கொண்டு தேம்பினார். வள்ளியம்மையின் இதழ்க் கரையில் முறுவல் இருந்தது. செந்திலை மார்புறத் தழுவினார். குருதியைத் துடைத்தார். வீக்கம் கண்ட இடத்தைத் தடவினார்.

“அப்படீன்னா நீங்க சாகலேயா, பெரியப்பா?” என்று வினவினான் சிறுவன். கண்ணீரைச் சட்டைத் தலைப்பினால் துடைத்துக்கொண்டான். அழகுக் கண்களில் ஆர்வம் இருந்தது.

பெரியப்பா சிரித்தபடி, “ஊஹூம், இல்லை! உன்னைச் சோதிக்கிறத்துக்காக நானும் உங்க பெரியாத்தாவும் நடிச்சோம்!” என்று அமைதி கனிய மொழிந்தார்.

செந்திலின் சந்திர முகம் ஏன் இப்படிக் கறுத்துச் சிறுக்கிறது?

“என்னை ஏமாத்தறத்துக்காகவா நீங்க பொய்சொன்னீங்க பெரியப்பா? இனிமே நான் உங்ககிட்டே இருக்க மாட்டேன். ஆமா!” என்று சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு ஓடலானான்.

அண்ணாமலைக்குத் தலை சுற்றியது. எழுத்தார். நடக்கவும் தெம்பில்லை. மூச்சு இறைத்தது.

வள்ளியம்மைக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கின. “தம்பி! கண்ணே!” என்று அழைத்தவளாக, சிறுவனைப் பின்தொடர்ந்தாள்.

செந்தில் திரும்பினால்தானே?

வைகறை நிலவு மங்கியது. சுற்று மதிலின் கீழ்க்கரையில் கிணறு ஒன்று இருந்தது. அதை அண்டினாள். “தம்பி, இப்ப நீ திரும்பப் போறியா? இல்லே, நான் இந்தக் கேணிக்குள்ளாற் குதிச்சுச் சாகட்டுமா?” என்று கேட்டாள்.

அவ்வளவுதான்!

செந்தில், “பெரியாத்தா! நான் இந்தா வந்திடுறேன். நீங்க சாகாதீங்க, நீங்க செத்தா நானும் செத்துப்பிடுவேன்!” என்று சத்தமிட்டுத் திரும்பினான்.

குழந்தைத் தெய்வமா அவன்?

“செந்தில், நீ எங்களே ஆளவந்த சாமியப்பா! கண்ணே! ராஜா!”

இரட்டைக் குரல்கள் மாறி மாறி ― மாற்றி மாற்றி ― ஆனந்தக் கண்ணீர் சொரிந்த்ன.

விடிந்தது!