ஆலமரத்துப் பைங்கிளி/பாட்டுப் புத்தகம் பத்துக் காசு

1

“பாட்டுப் புத்தகம் பத்துக் காசு!”


திருவாளர் மெய்கண்ட பிள்ளைவாளுக்கு ஜாகை திருக்காட்டுப்பள்ளியில்தான் என்றாலும், அவரது சொத்து-பத்து மட்டும் தஞ்சாவூரில்தான் ஏகமாகச் செழித்துத் தழைத்து வந்தன. இதுதான் உண்மை. ஆனல், இதைக் காட்டிலும் இன்னொரு பெரிய உண்மையும் அவரது பிறந்த மண்ணில் வாசம் இருந்தது. அது, மண் வளம் கொழித்திடும் திருக்காட்டுப்பள்ளி வயல்களிலேதான்; நெல் மணிகளோடு அதிர்ஷ்டச் சுடர்களும் விளையலாயின. விளைந்தது ஓரிடம், விதைத்தது மற்றோர் இடம். இருக்கட்டுமே!

திருவாளர் மெய்கண்ட பிள்ளை மெய்யை வாழ்த்தி வணங்குபவர். இந்த விஷயம் துல்யமான நிஜம் என்பது புலனாக, வழிகள் பல திறந்து வைக்கப்பட்டிருக்கும். 'வழிகள் என்றால், எந்த வழிகள்’ என்றுதானே திகைக்கிறீர்கள்? பேஷ்!

போகும் வழிக்குப் புண்ணியம் சம்பாதிக்க வேண்டியதே தமது லட்சியம் என்பது பிள்ளைவாளின் அழுத்தமான கருத்து. அதன் நிமித்தமே அவர், உண்மை வழிபாட்டு வழிகளிலே தீவிரமான கவனம் செலுத்தி வந்தார். அதற்கான செயல்களில் இறங்கி நிற்கையில்தான், அவருக்கு அவரது தந்தையின் 'டாகீஸ்' கட்டடம் ஒன்று கை கொடுத்தது. அதற்கு அவர் தோள் கொடுத்தார். 'மெய் கண்டான் தியேட்டர்' உருவாயிற்று.

மார்க்கெட்டுக்குக் காய்கறியிலிருந்து 'இறைச்சி' வரை வாங்கும் பொது ஜனங்கள் சகலத்தனை பேர்களும், அந்தச் சினிமாக் கொட்டகையை ஒரு தரம் நின்று முறைத்துப் பார்த்து விட்டுப் போகாமல் இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள். இதற்குக் காரணம் என்ன வென்று தெரியுமா?

அது....

அந்தத் தியேட்டரின் வெளி முகப்பில், “உண்மையே தெய்வம்; வாய்மையே வாழ்வு!" என்ற வாசகங்கள், பிரகதீசுவரர் கோயில் கலசம்போல் துலாம்பரமாகப் பளிச்சிட்டன. இம்மாதிரியான உபதேசங்களை வாழ வைத்து, அதன் மூலம் தாமும் வாழ எண்ணியவர் பிள்ளைவாள்.

உண்மையைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்குத் துணிச்சல் பெற்றவர் பிள்ளை. பொய்களுடனே புழங்கி வந்த சகடயோகத்தை அழைத்துக் காப்பி வாங்கிக் கொடுத்து, அவரையே மானேஜராக்கி, அதன் பிறகு தாம் எழுதிய மணிவாசகங்களின் மணியோசையைக் கேட்கச் செய்த துணிச்சல் பேர்வழி ஆயிற்றே அவர்! வாரம் ஒரு முறை வந்து தஞ்சையில் தங்கி, சகடயோகத்தையும், சகடயோகத்தின்பால் தொடர்பு பூண்ட 'உண்மை--- பொய்ப் படலத்தின்' நிகழ்ச்சிகளையும் பரிசோதனை செய்து திரும்புவது முதலாளியின் வழக்கம்.

சகடயோகம் இருக்கிறாரே, அவருக்குக் காசுதான் குறி, காகதான் கடவுள்! அதற்காக அவர் சட்டத்தின் பேரில் கைவைக்க முடியவில்லை. தமாஷ் வரி ஓடிய டிக்கெட்டுப் புத்தகங்களில் 'தமாஷ்' பண்ண முடியவில்லை. அவர் பொறுப்பில் நடந்த பெட்டிக் கடையிலும், 'கான்டீ'னிலும் கை வைத்தார். 'காம்ப்ளிமெண்டரி டிக்கெட்' வழங்கி பெரிய மனிதர்களின் அன்புக்குப் பாத்திரமானார். அதன் பலனாக, ரகசிய உதவிகள் கிடைக்கப் பெற்றார். சட்டம் நாற்புறமும் காவல் புரிந்து கொண்டிருக்க, ஆண்டவன் ஒருருவாக உண்மையின் வடிவாகச் சிரித்து நிற்க, ஆஜானுபாகுவாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தத் தியேட்டரின் ஒரு ரகசிய அறையில் அன்பர் சகடயோகம் சட்டத்தை உடைக்கும் வகையில் மதுப் புட்டிகளை உடைத்து வந்த சம்பவங்கள், அவருக்கு வேண்டப்படாதவர்களால் தூது அனுப்பப்பட்டு, அவை பிள்ளைவாளின் தன்மானம் மிக்க உணர்வுகளைச் சுண்டியிழுத்தன.......!

மெய்கண்ட பிள்ளை முகப்பில் தொங்கிய உண்மை விளக்கப் படங்களை எடுத்துக்கொண்டு வந்து, உள்ளே மானேஜர் அறையில் தொங்கவிட்டார். சகடயோகத்தைக் கூப்பிட்டனுப்பினார். அவர் வந்தார். அவருடன் கூட, அந்தச் சிறுவனும் வந்தான். அவன் அவருக்கு எடுபிடி ஆள்.

தியேட்டருக்குச் சொந்தக்காரர் அந்தப் பொடியனைப் பார்த்தார். ஆழமான பார்வை அது!

"பய யாரு?"

“தெக்குச் சீமைப் பயலுங்க. பேரு சங்கிலி. கை சுத்தம் ஜாஸ்தியுங்க, முதலாளி....!"

முதலாளியின் அந்தரங்க மேடையில் அமைந்திட்ட குற்றவாளிக் கூண்டில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பு அல்லது ரகசியம்; அல்லது உண்மையை அறிந்து கொள்ள சகடயோகத்துக்கு, வயசு போதாது!

"டேலே...!"

காவற்காரன் வந்தான்; பவ்யமாகக் கைகட்டி: நின்றான்.

"எங்கேடா நம்ப பயல்...?"

"யாரைச் சொல்றீங்க?"

"அதாண்டா சங்கிலி!"

சங்கிலி ஓட்டமாக ஓடி வந்தான். பத்து வயதுதான். வறுமைக் காலத்தையொரு பொருட்டாகக் கருதியிருக்கவில்லை அவன் என்பதை, அவனது முகத் தெளிவு சுட்டியது. அழுக்கு நிஜார்; புதுச் சொக்காய். பறட்டைத் தலையை எண்ணெய் எழிலுறக் காட்டிற்று.

பத்து மணிச் சங்கு ஊதியது.

வெய்யில் சுள்ளாப்புப் பெற்றது.

பனி வாடை கலைந்தது.

வாசற்புறத்தே சீன எதிர்ப்புக் கண்டனத் தொனி விண்ணைச் சாடியது.

சங்கிலி கை கட்டி நின்றவன், கோஷங்களைக் கேட்டு வாசலுக்கு விரைந்து வந்து, "சீனாக்காரன் ஒழிக!" என்று கூவிவிட்டு, அதன் உணர்வில் தன் கடமையை ஓரளவேனும் நிறைவேற்றிக் கொண்டவன் மாதிரி திருப்தி அடைந்தவனாக, மறுபடியும் உள்ளே சென்று, பழைய இடத்தில் நின்ற போது, அவன் பார்வையில் அருவருக்கும் கொடூரமான பார்வையுடன் சுவரில் காட்சி தந்த வில்லன் ஒருவனின் படம்தான் தென்பட்டது. பையனுக்குச் சிரிப்பு புறப்பட்டது, அடக்கிக் கொண்டான். முதலாளியின் கோபம் தேங்கிய முகத்தை இந்த ஒரு மாதத்தில் அவன் ஒருவாரம் கூட கண்டதில்லையே?...

"என்னா சமாச்சாரம் .. ஐயா கோபாமாயிருக்காங்களே?'

“ஐயாவுக்குக் காப்பி வாங்கியாரட்டுமுங்களா?” என்று மானேஜரின் காதைக் கடித்தான் சங்கிலி.

சகடயோகம் மூச்சுக்காட்டினால்தானே?

“ஏம்பா, இப்ப நீ என்னா சொல்றே?”

“சத்தியமான பேச்சுங்க. நான் தப்புதண்டா ஏதும் செஞ்சதில்லிங்க! யாரோ வேண்டாதவங்க உங்ககிட்டே கோள் மூட்டியிருக்கிறானுக...!”

எட்டு முழச் சுவரைத் தாண்டியிருந்த வெளியில் ஒரு பரிவாரம் நின்றது.

பிள்ளை, நீறு பூசிய நெற்றியைப் பிடித்துக் கொண்டே ஒரு சில கணங்கள் வீற்றிருந்தார். ஆசனம் சுட்டது. நெஞ்சுச் சூடு சும்மா விடுமா? மறுபடியும் மறுபடியும் சகடயோகத்தை ஓரக் கண்கொண்டு பார்த்தார். ‘ஆளு நடிக்கறாரன்!...ம்...நடிக்கட்டும், நடிக்கட்டும்...!’

“ஒய்!......உள்ளே வாரும் ஒய்!” என்று சகடயோகத்தை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தார் மெய்கண்ட பிள்ளை. பட்டுச் சட்டை, அந்தக் கறுப்பு மேனிக்குக் கன பொருத்தம். அதாவது, கன சரீரத்துக்குக் கன பொருத்தம்!...

இருட்டறைகள் சிலவற்றை வெளிச்சத்தைப்போட்டு தேடினார் அவர். ஒரு தடயமும் கிட்டவில்லை!

மானேஜரின் முகத்தில் அப்பொழுதுதான் புதுக்களை வந்தது.

“ஐயாவுக்கு ஓவல்...”

ஓடி வந்த குரலுக்கு முன்னே ஓடி வந்தான் சங்கிலி.

“டேய்!”

“ஏங்க...!”

“நீ எத்தினி நாளா இங்கே இருக்கிறே?” “ஒரு மாசம் கிட்டத்தட்ட ஆகியிருக்குங்க...!”

“வேலை?”

“பாட்டுப் புத்தகம் விப்பேன்...சாயா விப்பேன்... அப்புறம் பீடி சிகரெட்டு விப்பேனுங்க!”

“ஊம்”

“ஆமாங்க...!”

“ஒனக்குச் சம்பளம்?”

“இருபது ரூபாயுங்க!”

“இது கட்டுதாடா?”

“என்னமோங்க...சின்னப் பயலுக்குச் சின்னூண்டு வயிறுதானுங்களே!” தலையைச் சொறிந்து கொண்டான் சங்கிலி. பிள்ளைக்கோ தலை ‘விண்’ என்று தெரித்தது.

“சம்பளம் யாரு தாரது?”

“மானேசரு தருவாருங்க...அதாகப்பட்டது ஓங்க பணமுங்க!”

“பலேடா!”

பையனின் இளஞ்சிரிப்பு, பெரியவரின் இதழ்க்கடையில் வளர்ந்திருந்தது.

“உனக்கு நெசம் பேசிப் பழக்கமிருக்குதா?”

நெரம்ப இருக்குங்க...அதாலே தாங்க, முகப்பிலே தொங்கவிட்டிருக்கிற பொன் மொழிங்களைக் கண்டு எனக்குப் பயமே உண்டாகலேங்க. நானும் இங்கேயே தங்கவும் முடியுதுங்க!...

“பலேடா” என்று மெய்ம் மறந்து, மெய் நினைந்துருகிச் சிரித்தார், தியேட்டருக்குடையவர்.

“இங்கிட்டு வாடா!”

சங்கிலியின் காதுடன் காதாக ஏதோ ஓதினார் பிள்ளை. மறுகணம் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். "ஓய் சகடயோகம்! உம் யோகம் இன்னிக்கு இந்த மினீட்டோட சரி. உம் கணக்கை செட்டில் செய்துகிட்டுப்போம்! சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையிங்கிற நல்லெண்ணம் உண்டாகாத வரையிலே, சமுதாயம் உமக்கு ஒரு நாளும் பரிவு காட்டவே காட்டாதுங்காணும்! என்னோட மானத்தைப் பணயம் வச்சு, உம்மோட பணத்தைப் பெருக்கிக்கிற ரகசிய நாடகம் இனியும் நடக்காதுங்காணும்! போம்!" என்று ஆத்திரம் சுழிக்ககூச்சலிட்டார். "இப்பவே உம்மைக் கம்பி எண்ண வச்சிருப்பேன். பாவம், பிள்ளைக்குட்டிக்காரராச்சேன்னு மன்னிச்சேன்!"

"சங்கிலிப் பயல் பொய் சொல்றானுங்க எசமான்!" - எண் சாண் உடம்பு ஒரு சாண் ஆனது!

சங்கிலி ஏராளமான நகையை உதிர்த்துவிட்டபடி, மானேஜர் சகடயோகத்தின் தலையைக் சகடக்காலை உருட்டுவதுபோல உருட்டி விட்டவனாக ஒரு முறைப்பு. முறைத்துவிட்டுப் பேசினான். "நானா பொய் சொல்லுறேன்? அநாதைப் பிள்ளையான நான் உங்க சொல்படி உங்க சோத்தை வந்து தின்னுருந்தேன்னா, நான் பொய் சொல்லித்தான் இருந்திருப்பேன். ஆனா, நான் இது வரைக்கும் சாப்பிட்டது எம் பணம் - நான் ரரக்கண் பகல் கண் முழிச்சுச் சம்பாரிச்ச பணம். ஒரு வேளைச் சோறுன்னு சாப்பிட்டுக்கிட்டும், சாயாவும் சுடு தண்ணியுமின்னு குடிச்சுக்கிட்டும் நாளை நாணயமா ஓட்டுற ஏழைப்புள்ளை நான். நீங்க போலிப் பணக்காரங்களோட சேர்ந்துக்கிட்டு, ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சதும், என்னெ வெளியே காவலுக்கு வச்சுப்புட்டு, நீங்க எல்லோரும் உள்ளே குடிச்சீங்கங்கற விசயமே எனக்கு இப்பத்தான் பட்டுச்சு. நான் சின்னப்புள்ளே. இதெல்லாம் இது வரை எனக்கு விளங்கல்லே!" என்று சொல்லி உள்ளே ஓடிவிட்டுத் திரும்பினான். அவன் கைகளில் சாக்கடை நாற்றம் வீசியது. ஐந்தாறு அழகிய பிராந்திப் புட்டிகள் வெறும் சீசாக்கள் இருந்தன அவனது கரங்களில். "இதெல்லாம் நீங்க கொல்லையிலே ரகசியமாய்ப் புதைச்சது தானுங்களே?" என்று கம்பீரமாக முகம் நிமிர்த்தி, சுருட்டை முடிகளை ஒதுக்கிவிட்டுக் கேட்டான் சங்கிலி.

சகடயோகத்தின் பொய்களை மன்னித்தார் பிள்ளை.

இப்போது தியேட்டருக்கு மானேஜர் சிவசங்கரன்.

சங்கிலிப் பயலுக்கு சம்பளம் நாற்பது ரூபாய்.

"ஏ.. எம். ஜியும், சிவாஜியும் ஒண்ணா நடிச்ச பழைய படம் டோய்!" என்று அந்த 'மாட்டினி ஷோ' வில் குரல்கள் நெரிந்தன, ஜனங்களும் தெரிந்தனர்.

தைப் பொங்கல்.

சங்கிலிக்குக் காலை முதல் வேலை நெட்டி வாங்கியது. புதுச் சட்டையும் புது டிரௌசரும் அவனுடைய அழகின் அணிகலன்களாயின. அந்த வெள்ளைச் சிரிப்புத்தான் அவனுக்குச் சேமநிதி.-'பாங்க் பாலன்ஸ்!'

மெய்கண்ட பிள்ளை அன்று தினம் தியேட்டருக்கு வருகை தந்து, சிப்பந்திகளுக்குப் 'பொங்கல் இனாம்' தந்தார்.

சங்கிலிக்குக் கிடைத்த இனாம் பத்து ரூபாய். வானத்துக்கும் புவிக்கும் குதித்தான் பயல். வாயெல்லாம் பல்.

ஜெமினி நடித்த புதுப்படம் கூட்டம் தாங்கவில்லை.'நிதி' வளர்ந்தது.

மனி பன்னிரண்டு.

புது மானேஜர்: தியேட்டரின் முகப்பில் வாழைக் குருத்துகள் கட்டப்பட்டப் பணியை மேற்பார்வையிட்டார். பிறகு, "சங்கிலி," என்று அழைத்தார்.

நாகரிகமாக வந்து நின்றான் சிறுவன்.

"ஸார்...!"

"டேய் ஒரு கால் பிளேட் பிரியாணியும், ஒரு ஆம்லெட்டும் வாங்கியாடா... பசி தாங்கலே... டிக்கட் புக்கிங் முடிஞ்சுதான் வீட்டுக்குப் போக முடியும் போல!..." என்று காரணம் சொல்லி, பத்து ரூபாய்த்தாள் ஒன்றினைச் சுண்டி எடுத்து அவனிடம் நீட்டினார்.

சங்கிலி வெளியேறி, அந்தக் கிளப்பினுள் நுழைந்து, 'ஆர்டர்' கொடுத்தான். தூங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. சாப்பிட்டவர்களும் சாப்பிடப் போனவர்களும், அடங்கிய பசியையும் அடங்காப் பசியையும் மோதவிட்டார்கள். சங்கிலி, அந்தக் கல்லாவை - மேஜையை நெருங்கினான். பிறகு, "எனக்கு கால் பிளேட் பிரியாணி... ஒரு ஆம் லெட்...!" என்று சொல்லிக் கையிலிருந்த பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். நோட்டு மேஜை இழுப்பினுள் நுழையவே, "பாக்கிச் சில்லறை குடுங்க...!" என்று கேட்டான் அவன்.

"இருப்பா...!" என்ற பதில் 'கல்லாக்கார'ரிடமிருந்து வந்தது.

"பிரியாணி கால் ..ஆம்லெட் ஒண்ணு ... எம்பத் தைஞ்சு காசு பில்!" என்று 'குரல்' கன கச்சிதமாக வந்தது.

பையன் பிரியாணி ஆம்லெட் பொட்டலங்களைக் கையில் வாங்கிக்கொண்டு, "ஐயா! பத்து ரூவா குடுத்தேன் ..எண்பத்தஞ்சு காசு போக மிச்சம் தாங்க சார்!" என்று கேட்டான், வலது கையை மேஜையின் தலைப்பு வரை நீட்டியவாறு.

நீட்டி நின்ற கையைத் தள்ளிவிட்டு "எங்கிட்டவா நீ பத்து ரூபா குடுத்தே? டேய்!...என்னாடா 'டாவு' விடறே?" என்று கோபாவேசமான குரல் ஒன்று அவனைத் தாக்கவே, திக்பிரமை கொண்ட சங்கிலி, நீர் சுரந்த நேத்திரங்களால், நாணயங்களை ஆண்ட அந்த 'மகானு பாவனை' ஏறிட்டுப் பார்த்தான்.

'ஆ...நீரா?'...

"ஏம்பா, ராம்... இந்தப் பய காசு இல்லாம வந்து பொய் சொல்லி, பிரியாணி, ஆம்லெட்டுகளை களவாடிக்கிட்டுப்போக வந்திருக்கான். கேட்டா, பெரிய அரிச்சந்திரன் போல் கதை அடிக்கிறான். எல்லாத்தையும் பறிச்சுக்க. இவனை வீரட்டியடி! ஊம். சல்தி!"...

ஏழையழுத கண்ணீர் அம்பலம் ஏறுமா?

"ஏய்யா! ஓம்மளுக்கு இதயமே இல்லையா?...எம் மாதிரி பிள்ளை உமக்கும் இருக்குதே ஐயா?.. பின்னே , ஏனய்யா என்னைச் சோதிக்கிறீங்க இப்படி?" என்று 'நியாயம்' கேட்கப்போக, அவனது பிஞ்சுக் கன்னங்கள் இரண்டிலும் கைத் தழும்புகள் பதிந்தது தான் மிச்சம்! சகடயோகத்தின், அகங்காரச் சிரிப்பில் சங்கிலியின் சட்டைப் பையிலிருந்த பொங்கல் இனாம் கரைந்தது!

விநாடிகள் ஓடின.

புது மானேஜர் நாசூக்காக ஏப்பம் பறித்தார். ஏப்பத்தின் விலை, ரூபாய்: பத்து, காசு: எண்பத்தைந்து....!

மூன்றாவது ஆட்டம் தொடங்க சில நிமிஷங்களே இருந்தன.

சங்கிலி தெம்பை வரவழைத்துக்கொண்டு கடமை புரிந்தான். சாயா கிளாஸ்கள் கைமாறின; சில்லறைக் காசுகள் சட்டைப் பையில் புரண்டன; அடிவயிற்றில் பசி புரண்டது. கண்கள் இருண்டுவந்தன. "பாட்டுப் புத்தகம் பத்துக் காசு!...பாட்டுப் புத்தகம் பத்துப் பைசா!..."

தரை மகா ஜனங்களிடமிருந்து விடை வாங்கிக் கொண்டு, பெஞ்சுகளுக்கு மத்தியில் 'டார்வின் தியரி' படித்துக் கடைசியாக நாற்காலிகளை நாடின வேளையில், பாட்டுப் புத்தகங்களுக்குக் கிராக்கி தட்டவே, உன்னிப்பான பார்வையை நெடுகிலும் ஓடவிட்டவாறு, நடந்தான். காசுகளை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுவிட்டு, புத்தகங்களை நீட்டிச் சென்றான்.

அடுத்த வரிசைக்குத் திரும்பின் தருணம் சங்கிலியின் பார்வையில் பட்டு விலகினர் இருவர்; ஒருவர்-திருவாளர் சகடயோகம்; அடுத்தது, அவரது 'தர்மபத்தினி!'

ஒரு கணம் கொதிப்பு பொங்கியது.

மீண்டும் குரல்கள் மீட்டின. "ஏ...பாட்டு புத்தகம்...வா...வா!"

சில்லறைகள் மொத்தமாக விழுந்தன்.

"இந்தாப்பா... இங்கே ஒண்ணு கொடு!" என்று கேட்டுக்கொண்டே பத்துக்காசை நீட்டினார் சகடயோகம்; தூரத்தே கும்பிட்டவனைக் சிரிப்பால் வாழ்த்தினார்.

சங்கிலியின் கைகள் அந்தப் பத்துக் காசை ஏந்திக் கொண்டு, சட்டைப் பைக்குள் திணித்தன. ஆனால், அவன் பாட்டுப் புத்தகத்தை நீட்டவில்லை!

தர்ம பத்தினியின் நச்சரிப்பைத் தாங்காத சகடயோகம், அங்கவஸ்திரத்தை நகர்த்திப் போட்டபடி, "எங்கேப்பா பாட்டுப் புத்தகம்?..." என்று வினா கொடுத்தார்.

சங்கிலி அட்டகாசமாகச் சிரிக்கலானான், "காசு குடுய்யா!"...பாட்டு புக் தன்னாலே உம்மகிட்டே ஓடியாரும்!" என்றான் .

"காசு தான் சிக்தமூந்தி குடுத்தேனப்பா!"

"நீரா காசு குடுத்தீர்?... பொய் பேசறீங்களே ஐயா, போயும் போயும் இந்தப் பத்துப் பைசாவுக்கு!..."

பையன் இரைச்சல் போட்டான்.

பாட்டுப் புத்ததத்தில் இருந்த காதல் பாடல்களில் லயித்திருந்த ஆண்-பெண் ஜோடிகள் திரும்பினர்! 'ஒண்டிக்கட்டை'களும் தங்கள் கவனத்தை நிமிர்த்தினர். ஆக, சகடயோகத்தை ஆண்களும், அவர் தர்ம பத்தினியைப் பெண்களும் 'ஒரு மாதிரியாக'ப் பார்க்கத் தொடங்கினர். இந்தப் பார்வையைச் சகடயோகம் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்தும் கூட, அவரது தர்மபத்தினி அவ்வளவிற்குத் துணிவு பெற்றாளில்லை!

"பத்துப் பைசா பிச்சைக்காசு... இன்னொரு வாட்டி தான் குடுத்துடுங்களேன்!... இந்தப் பத்துப்பைசாவுக்குப் போயி, கேவலம் வாண்டுப் பயலோட வம்பு பண்றது எனக்கு வெட்கமா யிருக்குதுங்க!..." என்று 'நைஸாக'ச் சொன்னாள்.

"சட்... இரையாதே!" என்று சன்னக்குரல் அழுது வழிந்தது.

பட்டுத் தெறித்த பற்களுக்கு மத்தியில், ஆத்திரத்தைப் போட்டு மென்றுகொண்டு மறு பத்துப்பைசாவாகத் தடவி எடுத்து நீட்டினார் சகடயோகம். தெரிந்தவர்கள் முகங்கள் தெரிந்தன. பாவம், அவருக்கு வியர்வை கொட்டியது!

சங்கிலியின் கைப்பிடிப்பில் இருந்த ஒரு புத்தகத்தின் கனம் குறைந்தது. அட்டகாசமாகச் சிரிக்கும் பொறுப்பினை இப்பொறுப்பினை இப்பொழுது ஏற்றுக்கொண்டவன் சங்கிலி.

இருட்டு அரசோச்ச, காதலர்களின் கண்கள் 'மௌன நாடகம்' ஆடத் தொடங்கின!-திரையிலே!

ஆட்டம் முடிந்தது. கும்பல் கலையத் தொடங்கியது.

சகடயோகம் தன் தர்மபத்தினியின் மென்கரம் பற்றி வெளியே வந்து கொண்டிருந்தார். பழைய வேலைக்காரன் 'சலாம்' வைத்தான். 'கேட்'டை நெருங்கிக் கொண்டிருக்கையில், பையன் சங்கிலி குறுக்கே மறித்து நின்றான். 'ஐயா, இந்தாங்க ஒங்க பத்துப் பைசா! இது எனக்கு வேணாம்...! எம்பிட்டு பத்து ரூபாய்க்கு ஈடு கட்ட, இந்தப் பத்துப் பைசாவாலே முடியுமா? ஆனா எம்மாதிரி ஏழை பாழைங்களுக்கும் கஷ்ட நஷ்டத்துக்கும் ரொம்பச் சொந்தமுண்டுங்க!....ஆனா, ஒங்களுக்கு இன்னிக்கு-அதான்ஸார்-இப்ப படம்பார்த்தப்ப... உண்டாச்சே ஒருநஷ்டம்... அதை உங்களாலே தாங்க முடியாதா ஸார்?...நீங்க படே ஆளு ஸார்! உங்களுக்குத்தான் இதெல்லாம் சர்வ சகஜமாச்சே! நான் சொல்றது பொய்யா ஸார்?" என்று 'டயலாக்' பேசிவிட்டு, கையில் தயாராக வைத்திருந்த பத்துக்காசுப் பணத்தை அலட்சியத்துடன், நீட்டினான் அவன்.

செயலற்று நின்றுவிட்ட சகடயோகத்தின் முகத்தில் 'தெரிந்த முகங்கள்' தெரிந்தன. வியர்வை வழிய, கால்கள் நடுங்க கோபம் கனல் தெறிக்க அந்த அலட்சியச் சிரிப்பை எதிர்க்க முடியாத தோல்வியுடன் முகத்தைத் தாழ்த்தி, நடுக்கிய கையை நடுக்கத்துடன் உயர்த்தி நீட்டி, அதில் விழுந்த அந்தப் பத்துக்காக நாணயத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டே, ஓர் அரைக்கணம் செயலிழந்து, செய்வகை அறியாது நின்றார் சகடயோகம்.

சங்கிலி, ஜெயஸ்தம்பமென உயர்ந்து, வெற்றிக் கொடியின் காம்பீர்யத்துடன் நிலைநாட்டப்பட்ட உண்மையைப் போன்று அந்தரங்கசுத்தியுடன் நின்று, அந்த மனிதரையே இமை பாவாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதே அலட்சிய பாவனையுடன்!

"ம்...வாங்க... போவோம்!"

'தர்ம பத்தினியின் தோள்களில் அவர் அணையப் பெற்றவராக, வழி கடந்தார்.

எவனோ, "தூ ...!"என்று சத்தமிட்டுக் காறித் துப்பி மறைந்த உண்மை நடப்பைத் திருப்பிப் பார்க்கவும் மனத் துணிவு அற்று, தன் போக்கில் தன்னுடைய-தடத்தில் நடந்துகொண்டே இருந்தார் சகடயோகம்! *