ஆலமரத்துப் பைங்கிளி/புடம்

7

புடம்

'தாயோ.... அம்பிகை!.....'

சொல் ஒவ்வொன்றிலும் இதயத்தை இருத்திக் கூப்பிட்டாள். இருத்திய இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தெய்வ நம்பிக்கை கமழ்ந்தது. கமழ்ந்த நம்பிக்கையின் உயிர்ப்பாக, மெல்லிய சிரிப்பின் இதழ் படர்ந்தது. ஒற்றை நூலிழை, பாளம் வெடித்த உதட்டோரங்களிலே விளையாட, அவ்விளையாட்டிலே தன் உயிரை விளையாடச் செய்தாள். அவள் - அகிலாண்டம். அகிலாண்டேஸ்வரி யல்லள்!-'அவள்' தெய்வமன்றே ?

நைலான் பட்டில் பிசிறு பாய்ந்த வெள்ளைக் கம்பிகள் சிதறுண்டு காற்றில் அல்லாடுவதைப்போன்று, தும்பைப்பூ முடிக்கற்றைகள் - காற்றில் பறப்பதைப்பற்றி கவலை கொள்ளாமல், விறைப்பாக ஊன்றிக்கொண்ட இடது கையில் மேனியின் அழுத்தம் பூராவையும் அழுத்தியவளாக-- அழுத்திக் கொண்டவளாக உட்கார்ந்திருந்தாள். முடிவை நெருங்குகின்ற தொடக்கமாக, பின் பனி வாடை வீசியதால், ஜமக்காளத்தைவிட்டு நீட்டப்பட்டிருந்த கால் பாதங்களில் குளிர்ச்சி அவ்வளவாகத் தேங்கவில்லை! என்றாலும், அந்த அளவுக்குக்கூட, சீதளத்தின் சக்தியைத் தாங்கமுடியவில்லை அவளால், பாதங்கள் ஜில்லிட்டிருக் தன , உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்த மண்டையின் பளு, தாங்க வுலுவிழந்த வரம்புக்குக் கனத்து வருவதாகவே அவளுக்குப்பட்டது. நிமிஷத்துக்கு நி.மிஷம், வினாடிக்கு வினாடி, கணத்துக்குக் கணம் அவள் தன்னைத் தானே குனிந்து பார்த்துக் கொண்டாள். அவ்வாறு பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆசையின் நெஞ்சு மகிழ்வின் கண்ணீராகக் கரைந்து மேனியில் வழிந்தது. அந்த உணர்வில், நன்னம்பிக்கையின் துடிப்பைக் கண்டாள் அவள்; அவளால் காது பொருத்திக் கேட்கவும் முடிந்தது. புயல், தென்றல் அவதாரம் எடுக்க எந்நேர மாகும்?

சுயப் பிரக்ஞையை தூண்டில் போட்டு இழுத்தது. பெண்மனம், இமை நுனிகளில் சந்திப்பு உண்டாகி, 'உண்டாக்கிக் கலைந்தது. இருட் குகையில் இதுவரை அகப்பட்டுத் திணறிக்கொண்டிருந்ததாக - உள்ளொலி: பேசியது. பாழ்வெளியின் வெறுமை அவளைப் பற்றியது. தீப்பற்றியது நினைவில். நெஞ்சை வசமாக்குபவளாக நாலா பக்கமும் விழிகளைச் சுழலவிட்டாள் அகிலாண்டம். ஊராளும் மாதாவும், உளமாளும் பிதாவும் தனிப்பட்ட போக்கில்- தனித்தன்மை பூண்ட பாவனையில் - அருள் நெறி முறைகளை முத்திரைகளாக 'ஏந்தித் திகழ்ந்த தனிமைப் பண்புடன் கூடிய மகிமையில் திகழ்ந்தனர். ஒன்றிய உள்ளத்தோடு, ஒரு முறைக்கு இருமுறையாகப் பார்த்தாள் அவள். விரிக்கப்பட்டிருந்த மாயத்திரை விலக்கப் பட்டதாக எண்ணமிடலானாள். "தாயே" - அம்பிகை! என்ற ஒலியலைகள் உந்திக் கமலத்தைத் தொட்டுப் புறப்பட்டன.

“அ...கி... லா!"

வார்த்தைகள் இடைவெளி கொண்டு கேட்டன்.

அகிலாண்டம் திசை திரும்பினாள். ஸ்ரீமான் ராமலிங்கம் அடித்துப் போட்ட கோலத்தில் காட்சியளித்தார். மேல் தோல் வெடித்துச் சிதறிக் கோடுகள் கிறுக்கியிருந்த இதழ்க் கங்கினின்றும் வார்த்தைகள் கிளம்பின. இருந்த இடத்திலிருந்து நகர்ந்து, இன்னும் நெருக்கம் - அமைத்துக் குந்தினாள் அவள், மெலிந்து வெளுத்துக் கிடந்த கைகளை ஆதரவுடன் அன்பு சேர்த்துக் தடவிக்கொடுத்தாள். துளி கக்கிய சுடுநீர் மணிகளையும் நாசுக்காகத் தடவி விட்டாள். சுட்ட இடம் குறிப்புச் சொல்லியிருக்க வேண்டும். அவர் உடம்மை அப்படியும் இப்படியும் அசைத்துக் கொண்டார். ஆற்றாமையில் நெடுமூச்சு விளைந்தது. அரும்பாடுபட்டு விழிகளை அசைக்க முயன்றார் அவர்.. அரைப்பார்வை நிலை தான். அதுவும் சிறுபொழுது தான் மூடிய நயன வட்டங்களில் கண்ணீர் வளைந்தது.

அவளுக்கு நெஞ்சு ஏறி இறங்கியது. மார்பில் படர்ந்திருந்த எலும்பு வரிசையில் ஓர் அழுத்தம் தெரிந்தது. குனிந்தவண்ணம், வலது கை துனி விரலை வைத்துத் தடவினாள். மின்னலுணர்வொன்று தேகமெங்கணும் ஊடுருவியது. மயிர்க்கூச்சம் கிளர்ந்தது. "தெய்வமே' என்று மெய்மறந்த நினைவில் பேசிய அவள், அந்த அருமைப் பொருளை' எடுத்துக் கண்களிடைப் பதித்தாள். கொட்டு மேளம் முழங்க, தன் கழுத்தில் மங்கலநாண் ஏறிய அந்தப் பொற்புடைத் தவநாளை அவள் எங்ஙனம் மறப்பாள்?

சுவர்க் கடிகாரம் இருமுறை ஓசை பரப்பிற்று.

அகிலாண்டம் எழுந்து 'அவுன்ஸ் கிளாசை' எடுத்துக் கழுவினாள்... மருந்துக் கலவையை அளவு பார்த்து ஊற்றி எடுத்துச் சென்று, கணவரின் உதடுகளை நீக்கி ஊற்றினாள், செம்பாதி உள்ளுக்குள் சென்றது, வழிந்ததைத் தன்னுடைய பட்டுச் சேலைத் தலைப்பால் துடைத்தாள். திருநீறு மடலினின்றும் துளி விபூதியை எடுத்து, அவர் நெற்றியில் இட்டு, மீதத்தைப் பக்தி கனிந்த பக்குவத் தோடு தன் நெற்றில் பூசிக்கொண்டாள். அச்சம் கடந்த ஆறுதல் பூத்தது.

அவள் கைகள உதறி நெட்டி முறித்தாள், தூக்கம் நேத்திரங்களில் ஊஞ்சலாடியது. அதைக் கருதாதவள் அவள். அமர்ந்திருந்தவள், எழுந்து ஊஞ்சலில் அமர்ந்தாள், 'அந்த நாளிலே நானும் இவரும் இந்த ஊஞ்சலிலே நலுங்கின்போது அமர்ந்து மஞ்சள் நீராடின நிகழ்ச்சி நேற்று நடந்தது மாதிரி அல்லவா தோன்றுகிறது?' சுற்று மதிலைத் தாண்டிக்கொண்டு வந்தது தெருநாயொன்றீன் அழுகைச் சத்தம், அவளது மேனி அதிர்ந்தது. அவளையும் அறியாமல், கரங்கள் தொழுதன. வாடைக் காற்றுப் பலத்தது. ஆகவே ஜன்னலில் நெளிந்த இள நீலத் திரையை இழுத்து மூடினாள். பிறகு, அங்கு மிங்குமாக - நடை பயின்றாள். கடைக்குட்டிப் பயல் ஆழ்ந்த உறக்கத்திற்குக் 'கப்பம்' செலுத்தியவண்ணம் இருந்தான். கலந்துகிடந்த போர்வையைச் சரிசெய்தாள்.

ஸ்டூலில் வைக்கப்பட்டிருந்த பூஞ்செடிப் பாத்திரம் அவளை இடறிவிட்டது. நகக்கண் வலித்தது. குனிந்து நிமிர்ந்தாள். அந்தப் புகைப்படத்தையே ஓர் அரைக் கணம் இமைக்காமல் நோக்கினாள். 'கமலாட்சி- கார்த்தி கேயன் இணை நீடு வாழ்க!' என்ற வரிகள் பளிச்சிட்டன. "ஆஹா!" என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள் அகிலாண்டம். - தன்னுடைய பத்து நாளைய வேதனைக் குமைச்சலை நொடிப் போதில் மறந்துபோனாள். தனக்கு இனி குறைவேதும் கிடையாது என்ற தைரியம் எழுந்தது. தன்னை மறந்து சிரித்தாள், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - கண் விழித்தது. வைகறையின் துயில் நீக்கம், அந்தச் சாலையின் அமைதி போர்த்த பாதை நெடுகிலும் பிரதிபலித்தது.

கீழே மணிச்சத்தம் கேட்டது, அதற்கு வாய்த்த பின்னணி இசையென இராஜபாளையமும் குரல் கொடுத்தது. இரு குரல்களும் பங்களாவின் கீழ்த் தளத்தைக் கடந்து மாடிப்படி ஏறிவந்தன.

அகிலாண்டம் மாடி வராந்தாக் கைபிடிச் சுவரில் சாய்ந்து நின்றவாறு, கீழே பார்த்தாள். விளக்குகள்' எரிந்தன. வேலைக்காரி சுறுசுறுப்புடன் எழுந்து, பால் பாத்திரத்தை எடுத்துக் கழுவி, தரையில் தொப்பென்று கை தவறிப் போட்டு, பின்னர் எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளிவாசலுக்குச் சென்றதைக் கண்ணோட்டமிட்டாள். மீண்டும் மணிச்சத்தம் தொடந்தது. பால்காரன் சைக்கிலில் பறந்திருக்கவேண்டும்!

இந்த மணி நாதம் காலப்பனி மூட்டத்தில் உருத் தெரியாமல் - உருக்காட்டாமல் தோய்ந்து பதிந்து அழுந்திவிட்ட எத்தனையோ நிகழ்ச்சிகளின் ஓலம் கபால ஓடுகளிலே 'டும், டும்' என்று மோதி எதிரொலி கிளப்பிய விந்தையை- உண்மையை. அவள் எங்ஙனம் மறக்கக் கூடும்? ஏன் மறக்கவேண்டும்?

எடுத்த எடுப்பிலேயே சுவை சொட்ட ஆரம்பமாகும் சிறு கதையை யொப்ப, சிலரது விட்ட குறை-தொட்ட குறையின் பரிணாம பலனுக்கு ஏற்ப, அவரவர்களுக்கு வாழ்க்கை சுவையுடன் அமைந்து விடுகின்றது. அத்தகைய தொரு புண்ணியத்துக்கு, அல்லது பாக்கியத்துக்கு இலக்குப் புள்ளியானவள் தான் அகிலாண்டம். அந்தஸ்த்தில் உயர்ந்தில்லாமற் போனாலும், அழகில் உயர்ந்து நின்றாள். அவள். பேச்சிலும் பார்வையிலும் செய்கையிலும் நேரிய முறை இழைந்தது. உயர் நிலை ஆரம்பப்பள்ளிக் கூடத்தின் உபாத்தியாயர் அவள் தந்தை. தில்லை விளாகத்தில் வேலை. சைவமும் வைணவமும் ஒரே சந்நிதானத்தில் இணைப்புப் பெற்றுத் திகழும் பெருமையைக் கண் குளிரக் கண்டு பேறுபெற வந்த பெரியவர், தம் குறிக்கோளுக்கு வெற்றி காட்டிவிட்டு, அன்றைய இரவுப் பொழுதைக் கழிக்கும் சந்தர்ப்பத்தை அந்த ஆசிரியர் வீட்டில் அடைந்தார். சுற்றி. வளைந்து ஒதுங்கிக் கிடந்த சொந்தபந்தப் பாசம் பெரியவர்களின் பேச்சில் தலைகாட்டியது. யதேச்சையாகத் தலைகாட்டினாள் அகிலாண்டம். பாவாடையும் தாவணியுமாக ஓடி மறைந்தாள் அவள். ஆனால் அவளது கண்களில் தெரிந்த தெளிந்த பார்வையும், இதழ்களில் மடல விழ்ந்த தூய முறுவலும் ஓடி மறைந்திடவில்லை. பெரியவர் தம் ஒரே செல்வக் குமரன். ராமலிங்கத்துக்கு . அகிலாண்டத்தைப் பெண் கொள்ளப் பேச்சைத் துவக்கினார். 'பெரிய லட்சாதிபதியான நீங்க எங்கே? பரம ஏழையான நான் எங்கே?' என்ற வாத்தியாரின் பேச்சை மூட்டை கட்டி விட்டு, ஜாதக ஏட்டின் மூட்டையை அவிழ்த்தார். ஜாத கங்கள் பொருத்தம் தாங்கின. “எல்லாம் அம்மையப்பன் காட்டும் மெய்யன்புதான்! என் செல்வ மகள் பூர்வஜன்மத்தில் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! என்று ஆனந்தக் கண்ணீர் மல்கினார் அவர்.

பெரியவர் பட்டணத்துக்கு விடை பெற்றுப் போன நான்காம் நாள் வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு, ஓட்டமாக ஓடி வந்தாள் அகிலாண்டம். தந்திச் சேவகன் நின்றான். கனவுகளை விளையாட விட்ட கயல் விழிகள் கலவர மடைந்தன; சிந்தூரம் தூவிய கன்னங்களில் கறுமையின் நிழல் படர்ந்தது. பயந்து போனாள் பாவை. கடைசியில் தந்தியைக் கையொப்பம் செய்து வாங்கினாள்; உறை கழன்றது. வாசித்தாள். ஒரே கணத்தில் ஆனந்தச் சிரிப்பு கும்மாளமிட்டது. “என் மகன் சம்மதம் அடுத்த மாசம் ஐந்தாம் தேதி கல்யாணம். பிற நேரில்” என்றது

“அம்மா! அம்மா!”— அகிலாண்டம் காலத்தின் நடந்த கதையைத் துண்டுபட நிறுத்திவிட்டு விரைந்தாள். படுக்கையில் உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தான் குமார்... “அப்பா ராத்திரி பேசினாங்களா அம்மா?” என்று ஆதுரத்துடன் கேட்டான். அவள் மறுமொழி புகலவில்லை. ‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தாள். பத்து நாட்களுக்கு முந்தி, ராமலிங்கம் எவ்வளவு ஆரோக்கியத்துடன் உலவினார்? முகத்தில் தெளிவும், கண்களில் களிப்பும், மேனியில் மினுமினுப்பும் கொண்டு விளங்கினாரே அவர்? மயிலாப்பூரிலே அவருக்குத் தொழில். பெரிய ஜவுளிக் கடை. ‘அகிலாண் படம் ஸில்க் எம்போரியம்’ என்றால், லஸ் முனையில் வெகு பிரமாதம். கடை மூடியானதும் சாவிக் கொத்துடன் வந்து காரை ‘போர்டிகோ’வில் நிறுத்தி விட்டு, “அகிலா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே மாடிப்படிகளைக் கடந்தவர், இருந்திருந்தாற் போல மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார். எஞ்சியிருந்த படிகளில் அவரது மேனி ரத்தத் துளிகளைப் பதித்தது. தொலைபேசி. இயங்கியது; மாறுபட்ட எண்கள் மாறி மாறித் திருப்பப்பட்டன. நாடிக் குழல்கள் சோதித்தன. வகை வகையான மருந்துகளும் புதுக் கண்டுபிடிப்பில் வந்த ஊசிகளும் ஒத்துழைத்தன. மூச்சு இழை பிரிந்தது. இந்தப் பத்து நாட்களாகப் பேச்சில்லை! என்றாலும் படிப்படியாகத் தெளிவு காணப்பட்டது. அகிலாண்டத்திற்கு உயிர் வந்தது. ‘விள்ளற் கறியவளின்’ கழலடிகளில் தலை பதித்துக் கிடந்தாள்.

ஒரு தவணை, ராமலிங்கம் தொழில் விஷயமாகக் கோயம்புத்தூர் ஜில்லாவுக்குப் பயணமானார். புறப்பட்டுப் போன ஆறாவது நாள், பங்களா வாசலில் தந்திச் சேவகன் மணியடித்து நின்றான், அகிலாண்டத்திற்குக் கால்கள் பூமியில் பாவவில்லை. தெய்வம் ஈந்த தெம்புடன், சேதியைப் பிரித்தாள். இங்கே மகளும் மாப்பிள்ளையும் சுகம். நான் நாளை இரவு புறப்பட உத்தேசம்' என்று கண்டிருந்தது.

மகனுக்கு முகம் கழுவினாள் அவள். புது வென்னீரில் ஹார்லிக்ஸ் கலந்து கோப்பையில் இட்டு நீட்டினாள். பையன் தந்தையின் கட்டிலையே கசிந்த கண்களால் நோக் கிய வண்ணம், ஹார்லிக்ஸ் கலவையைக் குடித்தான். “நான் பெரியவனானதும் ரொம்பப் புத்திசாலியாயிருப் பேன்னு' அப்பா அடிக்கடி சொல்லுவாங்க இல்லையா அம்மா?... நான் பெரியவன் ஆகிறதைப் பார்க்குமட்டும் அப்பா நல்லபடியா இருப்பாங்க... ஏம்மா, இருப்பாங் களில்லியா?" என்றான் அவன்.

தாலியைக் கண்களில் ஒற்றிக் கொண்ட அகிலாண்டம், "நிச்சயம் நல்லபடியா இருப்பாங்கடா, கண்ணு !" என்றாள், நம்பிக்கையில் பிறக்கக் கூடிய சொற்களுக்குத் தான் எத்துணை அழுத்தம்!

குமாருக்கு ஏக மகிழ்வு. கழுத்துச் சங்கிலியைச் சட்டைக்கு வெளியே அழகாகப் போட்டான். அப்பாவின் படுக்கைக்குச் சென்றான். கன்னத்தைத் தடவினான். 'அப்பா!' என்றான். ராமலிங்கம் பையப் பைய விழிகளைத் திறக்க எத்தனம் செய்தார். தவமிருந்து பெற்ற குலக்கொழுந்தின் நெற்றியைத் தடவ கையை உயர்த்தினார். அது நழுவி விழுந்தது. அவரது கண்கள் கலங்கின. குமார் தந்தையின் கண்ணீரைத் துடைத்தான். “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க அப்பா! அடுத்த மாசம் நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு அறுபதுக்கு அறுபது விசேஷம் தடபுடலா நடக்கும் அப்பா!... டாக்டர் தைரியம் சொல்லியிருக்காராக்கும். ஆமா, அப்பா!... வேணும்னா, அம்மாவுக்கு உதவியா நம்ம அக்காவை வரவழைச்சிக்கிடலாமா?” —கேள்வியை பவ்யமாகக் கேட்டான் குமார்.

ராமலிங்கம் தம் மனையாட்டியை நோக்கி விரலை அசைத்தார். பிறகு, விரலசைவில் எழுதுவது போன்ற ஒரு பாவனையைக் காண்பித்தார். அவளுக்குப் புரிந்து விட்டது. மகள் கமலாட்சி எல்லோரது நலம் கோரி எழுதியிருந்த தபாலுக்குப் பதில் அனுப்பிய விவரத்தை அவர் அறிய ஆவல் காட்டினார். அகிலாண்டம் நெருங்கி உட்கார்ந்தாள். “உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கிறதைப்பத்தி கமலாட்சிக்கு எழுதலை. பாவம், அது பொறுக்காது. நாளைக்கு எழுதுறேன். ஒருதரம் இங்கே வந்திட்டுப் போகச் சொல்லலாம்னு இருக்கேனுங்க!” என்று தெரிவித்தாள்.

கைகளை உயர்த்தி ‘சரி’ சொன்னார் ராமலிங்கம். உதயத்தின் மலர்ச்சியில் தெறித்த கதிர்கள் அவரது முகத்தில் அணைந்தன.

உள்ளே சென்று மீண்டாள் அகிலாண்டம். மஞ்சளும் திலகமும் பூத்துணுக்கும் பொலிவூட்டின.

டாக்டர் வந்தார்!

பொங்கி வந்த இருமலை முன்றானையால் கட்டுப்படுத்தியவாறு, அகிலாண்டம் கடிதத்தை மீண்டும் படித்தாள்.

“செல்வமகள் சௌபாக்கியவதி கமலாட்சிக்கு ஆசீர்வாதம்.

உன் தகப்பனார் அவர்களுக்குப் போன வாரம் தொட்டு உடம்புக்குச் சுகமில்லை. இப்போதுதான் கொஞ்சம் பேசக் கொள்ள இருக்கிறார்கள், கஞ்சிதான் ஆகாரம். சதா உன் நினைப்பாகவும் மாப்பிள் ளையின் நினைப்பாகவும் இருக்கிறார்கள். ஒரு முறை குடும்பத்தோடு - இங்கு வந்து செல்வது வே உசிதம். எல்லோருக்கும் அது ஆறுதலாக இருக்கக் கூடும். நீ, குழந்தை, மாப்பிள்ளை அவர்கள் ஆகியவர்களின் க்ஷேம லாபத்துக்குப் பதில் போடவும். தம்பி குமாருக்குப் பாப்பாவின் முகம் அடிக்கடி கனவில் வருகிறதாம். உன் அப்பா விரைவாகவே நல்ல சுகம் அடைந்து விடுவார்கள். ஆண்டவன் அனுக்கிரகம் நமக்கு எப்போதும் சித்திக்கும்....

இப்படிக்கு, உன் தாயார், அகிலாண்டம் அம்மாள்."


எழுதிய கடிதத்தை கொண்டவரிடம் நீட்டினாள், அவள்.

படித்துப் பார்த்தார் ராமலிங்கம். “ஆல்ரைட்", என்றார்.

ஸ்கூலுக்குப் போன குமாரிடம் கொடுத்து. அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னாள் அகிலாண்டம், சலனம் மறைந்து, சாந்தி பிறந்தது.

காலம் எனும் கனவின் நிழல் நிச்சலனமாய் நீண்டது!.

"லெட்டரைப் பெட்டியிலே போட்டுப்பிட்டேன். அம்மா !"

மதிய உணவுக்கு வந்த குமார். இப்படிச் சொல்லிவாய் மூடவில்லை.

வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் இடித்தது. தந்திச் சேவகன்!

இடியால் தாக்குண்டவள் ஆனாள் அகிலாண்டம்.

“அத்தானுக்கு உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது! —கமலாட்சி.”

“தெய்வமே! இது என்ன சோதனை?” என்று விம்மினாள் அவள். நாடி நரம்புகள் அனைத்தும் இற்றுச் செயல் தப்பிப் போய் விட்டதென அவளுக்குத் தோன்றியது. “என்னம்மா அது?” என்று துளைத்தான் குமார். அவள் என்ன சொல்வாள், பாவம்! பதி இருக்கும் உடற் கேட்டில், இந்தத் துயர்ச் செய்தியை வெளியிடலாகாது என்பதாக முடிவு கட்டினாள். பூஜை அறைக்குச் சென்று திரும்பினாள் அவள். வழி கேட்ட விழி வெள்ளத்துக்கு வழி சொன்னாள்.

அப்போது வாசலில் காரொன்று வந்து நின்றது.

பிரக்ஞை இழந்த நிலையில் காணப்பட்டான் கார்த்திகேயன்!

“அம்மா, தெய்வம் என்னோட குங்குமத்தைப் பறிச்சுக்கிட்டு, நிரந்தரமா நரகத்திலே தள்ளிப்பிடுமா, அம்மா? என்னமோ, எனக்கு ஒரே பயமாயிருக்குதே அம்மா?... அத்தான் எனக்குக் கிடைக்காமப் போனா, அப்புறம் நானும் குழந்தையும் என்னம்மா செய்வோம்?... ஐயையோ! கடவுளே...!”

எரிமலையின் வெடிப்பு வாயில் கால் பதித்து நின்றாள் அகிலாண்டம். அன்பு மகளின் அழுகை அவளுடைய பெற்ற மணி வயிற்றில் இடியாக இடித்தது. அவள் பேசியப் பேச்சுக்கள் அவளது கண்களைத் தோண்டியெடுத்தன. “கமலாட்சி, அப்படியெல்லாம் கெட்ட பேச்சை மனசாலே கூட நினைக்காதே, அம்மா! நம்பினவங்களைத் தெய்வம் சோதிச்சாலும், கடைசி முடிவு. நமக்குச்

சாதகமாகவே இருக்கும், கமலாட்சி!...உன் அப்பாவுடைய மிதமிஞ்சின சீக்கைப்பத்தி உனக்குத் தெரிவிச்சா, நீ புழுவாத் துடி துடிச்சுப் போவியேன்னு, இதுநாள் பரியந்தம் மறைச்சேன். கடைசிலே இன்னிக்கு காலம்பறத் தான் கடுதாசி போட்டேன். இடிக்குமேல் இடியா வரச் செஞ்சு இப்படி நம்மளை பகவான் சோதிக்கிறாரு. நாம அற்பங்க!...தேவியோட விளையாட்டுக்கு ஈடுகொடுத்து நிற்க நம்மாலே முடியுமா? எல்லாம் தாயோட கிருபை தான்!...நீ வாம்மா, சாப்பிட!...டாக்டர் சொன்னதை கேட்கலையா? எல்லாம் சரியாகிப் போயிடும். சமயம் புரிஞ்சு மாப்பிள்ளையை நீ கொண்டாந்ததே பெரிய சமர்த்துத்தான்!...நீ வாம்மா!"

தொண்டைக் குழியில் நிரம்பி வழிந்த பாசத்தின் சுழிப்பில் தோய்ந்தெழுந்த ஆறுதல் மொழிகள் மகளுக்கு மட்டுமே கேட்கும் அளவுக்குச் சன்னமாக ஒலித்தன. புதல்வியின் கண்களைத் துடைத்தாள். இரண்டொரு நீர்மணிகள் சிதறி, பாலமுதம் உண்ட குழவியின் நெற்றி மேட்டில் விழுந்தன. அகிலாண்டம் மகளின் கரம் பற்றிக் கூப்பிட்டபோது, கமலாட்சியின் நோக்கல் தன் ஆருயிர்க்கணவரின் கட்டிலில் குறிபாய்ந்திருக்க கண்டாள். ‘அம்மா, இவர் ரொம்ப ரொம்பத் தங்கமானவர். இவர் கையினாலே எனக்குத் தாலிப்பாக்கியம் கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்க வேணும் அம்மா! மெய்தான் அம்மா!' என்று கமலாட்சி திருமணமான புதிதில் மனம் நிறைந்து சொன்ன நடப்புக்கள் சிலையோடின. 'ஈஸ்வரா! மாப்பிள்ளையைக் காப்பாற்று. என் ஒரே ம்களின் தாலியைக் காத்துக்கொடு, அம்பிகே!' அங்க அசைவு துளியும் இன்றி, கட்டைபோல கிடந்த மாப்பிள்ளையைக் கண்ட அவளுக்கு, உலகம் பாழ்வெளியாய் விட்டதைப் போன்று. ஓர் எண்ணம் தோன்றியது. வினாடிக்கு வினாடி பூஜைக்

கூடமே சதமென்று தவம் கிடந்தது அவள் தாய் மனம். 'ஒரு பக்கம் என் புருஷன் சாகப் பிழைக்கக் கிடக்கிறார். குணமடைந்து வந்த நோய் திரும்பியிருச்சிதே!... இன்னொரு பக்கம் எங்க மாப்பிள்ளை உயிருக்கு மன்றாடிக் கிட்டுக் கிடக்கிறாங்க, என் தாலியும் என் மகள் தாலியும் சோதனைக் கூடத்திலே ஊசலாடிக்கிட்டு இருக்கு!.. இந்த வேத விதியை யார்க்கிட்டே போய் நான் அழுவேன்? எனையாளும் மஹேஸ்வரியே!..அம்மா "அகிலாண்டேஸ்வரியே!...எங்க ரெண்டுப் பேர் தாலி பாக்யக்தையும் கட்டிக் காத்து தா அம்மா!..."

ஊதுவத்தியின் சுகந்தம் புகைச்சுருள் வடிவமாக வெளியேறிக் கொண்டிருந்தது. ஊதுவர்த்திக் குழலின் பாதத்தடியில் சாம்பல் துகள்கள் பரவியிருந்தன.

அகிலாண்டம் திரும்பினாள். கமலாட்சி கை தொழுத வண்ணம் கிடந்தாள். வாய்விட்டுச் செருமினாள். மாப்பிள்ளையைத் தாக்கி வந்து கிடத்திய நேரத்தில் கண் மலர்ந்த ராமலிங்கம், "ஐயையோ, மாப்பிள்ளை” என்று கூச்சல்போட்டு மயக்கமுற்ற சம்பவம் அவளுள் கண் கட்டுவித்தை காட்டியதோ?

அந்தப் படத்தில் அவள் பார்வை ஒன்றியது. 'எம் பிரானின் தாள்களில் அடைக்கலம் புகுந்த காரணத்தால் வந்த காலன் தன் ஆருயிரை 'வவ்விய ' கோலம் இருந்தது. இனம் புரியாத-ஆனால் மகத்தானதொரு சாந்தம் கெஞ்சில் குடிகொண்டிருப்பதை மட்டும் அவளால் அனுமானம் செய்துகொள்ள முடிந்தது.

தூளியில் தூங்கியது குழந்தை .

குமார் தூளியின் தாம்புக் கயிற்றைப் பிடித்து ஆட்டிக்கொண்டேயிருந்தான். அந்தி மகளின் செம்பஞ்சுக் குழம்பிட்ட பாதங்கள் லயசுத்தத்துடன், தாள அமைப்புத் தவறாத பாங்கில் மண்புழுதியில் பதிந்து நடை பயின்றன.

இரணிய வேளை.

பெற்றவளின் அன்புப்பிடி மகளது வைராக்கியத்தைத் தளர்த்தியது. வட்டிச் சோற்றில் கால்வாசி காலியானது. “நாங்க வந்த வேளை, நல்லபடியா குணமாகிக்கிட்டு வந்த அப்பாவையும் மறுபடி படுக்கையிலே விழச் செஞ் சிருக்குது" என்று கேவினாள்.

“அதெல்லாம் ஒண்னுமில்லேம்மா? நீ கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு. சவலைப் பிள்ளைக்காரி!...”

திடுதிப்பென்று, பயங்கரக் கூச்சல், கேட்டது.

அகிலாண்டமும் கமலாட்சியும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

கார்த்திகேயன் கையையும் காலையும் உதறிக்கொண்டு கத்தினார்; கதறினார்!

தொலைபேசியும் காரும் சுறுசுறுப்பும் பெற்றன.


கமலாட்சி கண்ணோடு கண் பொருத்தவில்லை. உட்குழிந்திருந்த கண்கள் செஞ்சாந்தின் நிறம் காட்டின. அவிழ்ந்து விழுந்திருந்தக் கூந்தல் கற்றைகள் காற்றில் கழிந்தன. கதம்பச் சரத்தில் மிஞ்சியிருந்தது ஒரே ஒரு கனகாம்பரம் மட்டுமே. நெற்றிப்பொட்டு பளிச்சென்றிருந்தது. அழுத குழந்தையைத் தட்டிக்கொடுத்துத் தூங்கப் பண்ணினாள். கணவரையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள், மார்பகம் எம்பி எம்பித் தணிந்தது. புருஷனின் மேனி போர்வையைச் செம்மை செய்யக் குனிந்தாள். போர்வையினுள் பதுங்கிக்

கிடந்த இதயத்தைத் தொட்டது அவளது தங்கத் தாலிக் குண்டு. கண்களில் வைத்துத் தொழுதாள். அவளது விழிகளிலே தானே கார்த்திகேயன் வீற்றிருந்தான்! அச்சம் தரும்படியாக, மூச்சு முட்டித் திணறும் சத்தம் கேட்டது. அவள் உடம்பு புல்லரித்தது.

ஆந்தைக் குரல் தாவி வந்தது.

கமலாட்சிக்கு மனத்தை என்னவோ செய்தது. சிறு குழந்தை போல அழுதாள். தாயைப் பரிவுடன் நோக்கினாள். அகிலாண்டம் புகைச்சல் இருமலைக் கக்கிக் கொண்டிருந்தாள். சத்தம் வெளிவராமல், துணியைத் திணித்தாள் நேத்திரங்கள் பொங்கின.

நட்ட நடுநிசி.

"நீ தூங்கு கமலாட்சி...!"

"ஊஹூம்! நீ தூங்கு!”

“எனக்கென்ன கண்ணு! நீ சின்னஞ்சிறுசு. தூங்கம்மா. சொன்னக் கேட்டாத்தானே?”

‘முடியாது, அம்மா!’

ஹாலில் இருந்த மேஜைகள் இரண்டிலும் மருந்துக் கோப்பைகள் தயாராக இருந்தன. மூலைக்கொன்றாகப் போடப்பட்டிருந்த இரண்டு கட்டில்களுக்கும் ஊடாக இருந்த பஞ்சுமெத்தைச் சோபாவில் டாக்டர் சாய்ந்திருந்தார். எதிரே இருந்த பெஞ்சியில் நர்ஸ் குந்தியிருந்தாள்.

காலக் குழந்தை நடைவண்டி ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

தாயும் மகளும் ஒருவர்க்கொருவர் ஆதரவாக அமர்ந்து, ஒருத்தியின் முகத்தை இன்னொருத்தி பரிதாபமாகப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது, புதிய கூக்குரல் ஒன்று முழங்கியது.

"ஆண்டவனே!...என் உயிரை நீ எடுத்துக்கொள். என் மாப்பிள்ளையைக் கொண்டு சென்றுவிடாதே. அவரைக் காப்பாற்று! என் ஒரே அருமை மகளின் மாங்கல்யத்தைக் காத்துத்தா அப்பனே!"

மனம் போட்ட புடத்தினின்றும் கனன்று எழுந்த சொக்கத் தங்க சிதறல்களா அவ்வார்த்தைகள்...?

ஆராதனைக் கூடத்தில் மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் ராமலிங்கம். -

ஒடினாள் அகிலாண்டம். 'அகிலா! நிஜமாவே நான் அதிர்ஷ்டம் செஞ்சவன்தான். உன்னை மாதிரி மேனி அழகும் உள்ளத்தழகும் கொண்டவ எனக்குப் பெண் சாதியாக வாய்க்கிறதென்பது லேசுப்பட்டக் காரியமா, என்ன? ஆயுள் முச்சூடுமே உன் பக்கத்திலேயே இருக்க வேணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேனாக்கும்’ என்று முதல் இரவில் மொழிந்த சொற்கள் அவளுள் பண் பாடின. ஊதுவத்தி சாம்பல் மிதித்தவள், குனிந்து திரும்பினாள். அந்தச் சாம்பல் காட்டிய வாழ்வின் தத்துவத்தை ஜீரனிக்க முயன்றவளாக, ஒடிச்சென்று தன் கணவரைத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டாள். தாலியைக் கையில் எடுத்தாள் அவள். குனிந்த வேளையில், தாலியில் தன்னையோ, தன் கணவரையோ காணவில்லை. அவள்காண முடியவில்லை அவளால் தன் மகளையே தரிசித்தாள்! "அப்பா!...அப்பா!" என்று விம்மிப் பொருமினாள் கமலாட்சி. ராமலிங்கம் கண்ணீரைப் பெருக்கியவாறு, நகைபூத்த வதனத்தோடு காணப்பட்டார். உயிர்த்துணையின் விழிகளைத் துடைத்தார். ஊதுவத்தியின் உயிர்ப் புள்ள வாசனை மிதந்து வந்தது!

மறுமுறையும் கார்த்திகேயன் அச்சுறுத்தும் ஒலியைக் கூட்டினார். அகிலாண்டத்தை முக்திக்கொண்டு ஓடிப் .

பாய்ந்தாள் அவள் புத்திரி. அகிலாண்டம் தன் கணவவரைப் படுக்கையில் கிடத்திவிட்டு விரைந்தாள்.

டாக்டர் நாடி பார்த்தார். ஊசி போட்டார். மருந்து கொடுத்தார்.

அடுத்த ஐந்தாவது நிமிஷம், மாடிப்படிகளில் யாரோ உருண்டுவிழும் அரவம் கேட்டது.

“ஐயையோ!...அத்தான்!”

அலறிக் கதறினாள் அகிலாண்டம்.

‘அப்பா!...அப்பா!’

கமலாட்சி துடித்தாள்; குமார் புரண்டான்!

அகிலாண்டம் வைத்த கண் வாங்காமல் டாக்டரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஆண்டவனே!...என்தாலியைக் காப்பாற்றித்தா!...' என்று அகிலாண்டத்தின் உள்மனம் வேண்டியது.

ரத்தத் திவலைகளுக்கு மத்தியில் கிடந்த ராமலிங்கம் கண்களை மூடிமூடித் திறந்தார். அவரது உதடுகள் ‘மாப்பிள்ளே ...மாப்பிள்ளே!...’ என்று முணுமுணுத்தன.

‘என் புருஷன் பிழைச்சிட்டாங்க!...

அகிலாண்டம் தன் கணவரை அண்டினாள்.

அப்போது;

“ஐயோ அப்பா!...அம்மா!...என்னே ஏமாத்திட்டாங்களே என் அத்தான்!...” என்று கூக்குரல் எழுப்பினாள் கமலாட்சி,

சித்தம் பேதலித்தவளைப் போன்று விழித்தாள் அகிலாண்டம்: 'நான் பாவி!...' என்றுக் கதறிக் கதறி, தன் மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டாள் அவள்!

நித்திய நிருத்தியக்கூத்தின் நியதிக் கோட்டுக்குள்ளே அகப்பட்டு ஆனால், சுயநலம்-பாசம் ஆகிய தளைகட்கு அகப்படாமல், தன் போக்கில்-தன் இஷ்டத்தில்-தன் லயிப்பில் இயங்கிக்கொண்டே இருந்தது அந்தப் 'புண்ணிய பூமி'.