ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஒளிமின் விளைவு எனும்



ஒளிமின் விளைவு எனும்
PHOTO ELECTRIC EFFECT

இந்த ஒளிமின்விளைவு என்ற ஆராய்ச்சிக்காகவும், இந்த மின்விளைவு உலகுக்கு வழங்கி வரும் நன்மைகளுக்காகவும்தான், விஞ்ஞான உலகம் நோபல் பரிசை ஐன்ஸ்டைனுக்கு கொடுத்து பாராட்டியது.

ஒளியிலிருந்து உருவான விளைவுகள் ஏராளம் ஏராளமாகும். ஒளியானது, உலோகத்தகடு ஒன்றின் மீது மோதும்போது. எலக்ட்ரான்கள் என்று சொல்லப்படுகின்ற மின் அணுக்கள் வெளி வருகின்றன. இதற்குப் பெயர் தான் ஒளியின் விளைவு; Photo Electric effect என்பதாகும்.

இந்த ஒளிமின் விளைவுக்குரிய அறிவியல் சூத்திரம், விதி என்ன?

என்பது தான் அந்த விதி. இதை உருவாக்கியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனாவார். இந்த விதி தான் 1905ம் ஆண்டின்போது ஒளிமின் விளைவை எவ்வாறு உருவாக்குகின்றது என்ற விவரத்தை அறிவியலுக்கு அறிவித்தது.

ஒளிக்கிரணம் உலோகத் தகடுகளின்மீது மோதும் போது மின்னணுக்கள் வெளி வருகின்றன என்பதுதான் ஒளிமின் விளைவு என்று பார்த்தோம். இந்த ஆராய்ச்சியை, ஒளியின் அலைக் கொள்கையை, அதாவது wave theory of light என்ற கொள்கையைக் கொண்டு விளக்க முடியாது என்பது ஐன்ஸ்டைனுடைய வாதமாகும். ‘போடான்’ Photon என்று கூறப்படும் சக்தி வாய்ந்த ஒளித்துகள்களின் கற்றையே ஒளி என்று ஐன்ஸ்டைன் விளக்கம் தந்துள்ளார்.

எனவே, சக்தி வாய்ந்த துகள்கள், உலோகத் தகடுகளின் மேல் மோதுவதால், மின்னணுக்கள் தோற்றுவிக்கப் படுகின்றன. இந்த செயல், பில்லியர்டு பந்துகளின் மோதலைப் போன்றது.

இத்தகைய அறிவியல் விதிகளின் விளக்கங்களால், ஐன்ஸ்டைன் ஒளி மின் விளைவுகளைக் கண்டுபிடித்தார். இந்த புதுமையான ஆராய்ச்சியை, விஞ்ஞானிகள் வரவேற்றார்கள். பாராட்டினார்கள். இந்த கண்டுபிடிப்புக்குத் தான் நோபல் பரிசும் ஐன்ஸ்டைனுக்குக் கிடைத்தது.

இந்த ‘ஒளிமின் விளைவு’ என்ற கண்டுபிடிப்பினால், உலகம் பெற்ற உயர்வு என்ன? இந்த ஆராய்ச்சியின் பலனால்தான், பேசும் படம் என்ற சினிமா இன்று உலகம் எல்லாம் சினிமா படங்களாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது சரி, இந்த விளைவால் சினிமா பெற்ற புதுமை என்ன? பலன் என்ன?

ஒளி மின் விளைவு என்றால் என்ன என்பதை இதற்கு முன்பு இதே பகுதியில் விளக்கியுள்ளோம். அந்த ஒளிமின் விளைவை அடிப்படையாகக் கொண்டு ஒளி மின்கலம் என்ற Photo electric cell ஒன்றை உருவாக்கினார்கள். இந்த மின்கலத்தால்தான், நாம் திரையரங்குகளிலே படம் பார்க்க உட்கார்ந்த உடனே, பாட்டுக்களையும் பேச்சுக்களையும் கேட்டு மகிழ்கின்றோம்.

இந்த ஒளிமின்கலம், ஒளிச் சக்தியை மின் சக்தியாக மாற்றுகின்றது. ஒளி மின்கலம், ஃபிலிமில் பதிவான ஒளியை, ஃபிலிமில் ஒளிந்திருக்கும் சுவையான பாடல்களையும், இசைகளையும், வசனங்களையும் வெளிக் கொண்டு வந்து நம்மை ரசிக்க வைக்கின்றது.

ஒரு விளக்கில் இருந்து வெளிவரும் ஒளி குவிக்கப்பட்டு அது ஃபிலிமில் ஒலி பதிக்கப்பட்டுள்ள பகுதி மீது விழுகின்றது. பிறகு, இங்கிருந்து வெளிவரும் ஒளி, ஒளியின் கலத்தில் எதிர்மின் வாயில் என்ற Cathodeல் மோதி மாற்றமடைகின்றது. இதனால் தோன்றும் ஒளி மின்னூட்டம் மின் அதிர்ச்சிகளை எதிரொலிக்கின்றது. இந்த மின் அதிர்ச்சி மேலும் வலுவுள்ளதாகி ஒலி பெருக்கிக்கு செல்கிறது. ஒலி பெருக்கியில் மின் அதிர்ச்சியானது ஒலியாக உருவமடைகின்றது. அதன் பலன்தான், சினிமாவில் எதிரொலிக்கும் பாட்டும் வசனமும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால்தான், ஐன்ஸ்டைனுடைய அரிய அறிவியல் புதையல் அறிவின் பெருமையை நம்மால் உணரமுடியும்.

ஒளிமின் விளைவால், சினிமா மட்டுமல்ல, வானியல் நிலை ஆய்வுகள், ஆட்டமேட்டிக் சிக்னல்கள், தடுப்பு முறைகள், தொலைக்காட்சிகள் முதலானவற்றிலும் ஒளி மின்கள் இயங்குகின்றன, பயன் தருகின்றன!

ஒன்றிய புலக் கொள்கை


ஒன்றிய புலக் கொள்கையை ஆங்கிலத்தில் unified field theory என்று அழைக்கின்றார்கள். இந்த கொள்கையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1929-ம் ஆண்டில் கண்டுபிடித்து வெளியிட்டார்.

ஒன்றிய புலக் கொள்கை என்றால் என்ன? அதை ஐன்ஸ்டைன் எவ்வாறு விளக்குகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்த சார்பு நிலைக் கொள்கைக்கும், க்வாண்டம் கொள்கைக்கும் இடையே தொடர்பு ஒன்றை உருவாக்கவே, ஐன்ஸ்டைன் இக்கொள்கையைக் கண்டு பிடித்தார்.

பொருள், சக்தி ஆகிய இரண்டினுடைய, ஒவ்வொன்றையும் அறிவியல் விதிகளை உருவாக்கியே விளக்குகிறார்.

புவி ஈர்ப்பு விசையும், மின்காந்த விசையும் தனித்தனியானவையாக இருப்பது இயற்கைக்கு மாறானது. இவை இரண்டும், ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்று எண்ணியே ஐன்ஸ்டைன் இக்கொள்கையை ஆராய்ந்தார்.

இந்தக் கொள்கைகளை விளக்கி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், கட்டுரை வடிவமாக எழுதினார். ஒரு கணக்குச் சூத்திரத்தைக் கொண்டு, புவிஈர்ப்பு, மின்காந்தக் கொள்கைத் தொடர்பான சமன்பாடுகளை விளக்கி, அவற்றின் வாயிலாக அறிவியல் முயற்சிகளை விதிகளாக வகுத்துக் காட்டமுடியும் என்று ஐன்ஸ்டைன் நம்பினார்! அதை இக்கட்டுரை மூலமாகச் செய்து காட்டினார்.

உண்மைகளும்-பொருள்களும் எவ்வாறு இயங்குகின்றன என்ற விவரத்தை இந்த கட்டுரை விளக்கவில்லை என்றாலும், பொருள்களுக்கும் உண்மைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளிகள் என்ன என்பதன் விளக்கமே இக் கட்டுரை நோக்கம்.

இணை பிரிக்க முடியாத புவிஈர்ப்பு விசையையும், மின் காந்த விசையையும் விளக்கும் விதிகளையே, இக்கொள்கையில் ஐன்ஸ்டைன் விளக்கி இருக்கிறார்.

‘ஒன்றிய புலக் கொள்கை’ எனப்படும் இந்தக் கொள்கையைப் பற்றி, அவர் மூச்சுள்ளவரை சிந்தித்தார். அதன் எல்லா விவரங்களையும் அக் கட்டுரையிலே அழகாக எழுதி வைத்த பின்பே அவர் காலத்தோடு ஒன்றி விட்டார். இன்றும் அக்கட்டுரையைப் படிக்கும் விஞ்ஞானிகள் புருவத்தை மேலேற்றி வியந்தவாறே உள்ளார்கள்.