ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பெளதிகத்தின் பரிணாம வளர்ச்சி



பெளதிகத்தின்
பரிணாம வளர்ச்சி
EVOLUTION OF PHYSICS
(இரண்டாவது கட்டுரைச் சுருக்கம்)

பெளதிக வரலாறு :

(இந்த கட்டுரை பெளதிகத்தின் வரலாற்றினைச் சுருக்கமாகக் கொண்டது. அறிவு மேம்பாட்டினாலும், ஆராய்ச்சி அறிவித்த உண்மைகளாலும், பழைய உண்மைகள் மறுக்கப்பட்ட முறை முதலானவை, இப்பகுதியில் விளக்கியுள் னார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இந்த கட்டுரையில் வேறு ஒரு விஞ்ஞானியின் கருத்துப் பரிமாற்றத்தையும் ஏற்று சுருக்கமாக கூறுகிறார்.)

தத்துவங்கள் அடிப்படை!

ஒரு பொருளைப் பற்றிய தத்துவ உண்மைகளும், ஆராய்ச்சி ரீதியாகக் கண்டறியப்படும் உண்மைகளும் ஒத்திருப்பது கடினம்! ஆராய்ச்சி விளைவாகக் கண்டறியப்படும் விஞ்ஞான உண்மைகள் காரணமாக, தத்துவரீதியில் அமைந்த அறிவியல் உண்மைகள் முறியடிக்கப் படுகின்றன. ஆராய்ச்சி உண்மைகள் அறிவியல் வளர்ச்சியின் முதுகெலும்பு போன்றவை.

பெளதிகமும் உண்மையும்!

அறிவியல் என்பது குறிப்பிட்ட விதிகளின் தொகுப்பு அல்ல. அதற்காக அவற்றை ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற உண்மைகளின் தொடர்பும் அன்று என்று கூறமுடியாது விஞ்ஞானத்தின் கணக்கியல் விதிகளை.

அறிவியல் என்றால் என்ன? மனித மனத்தின் ஊற்றுகளிலே வெளிப்படும் ஓர் அருஞ்சுவை தண்ணீர் போன்ற சக்தி பெற்றதே அறிவியல் எனப்படும். எடுத்துக்கொண்ட விஞ்ஞானத் துறைகளுக்கேற்ற சிந்தனையின் பயனாக, அத்துறையிலே எவ்வளவு தூரம் ஆய்வாளன் மனம் பக்குவப்பட்டதோ, அந்த அளவில் தோன்றிக் கொண்டே இருக்கும் கருத்துக்களின் ஊற்றல்ல; ஊற்றுக் கண்களே அறிவியல்.

பெளதிகம் எப்போது உலகில் பிறந்தது? ஒரு பொருளின் பொருண்மைகள், வேகம் அல்லது விசை போன்றவற்றின் உண்மைகள் எப்போது ஆய்வாளன் ஒருவனால் கண்டறியப்பட்டதோ, அப்போதே பெளதிகம் என்ற ஒரு விஞ்ஞானம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

நாம் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து இறக்கப்போகின்ற உலகில், நமது தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடையில், இந்த மேதினியின் மேன்மைகளை, அண்டத்தினுள் அடங்கிக்கிடக்கும் அறிவியல் கூறுபாட்டு உண்மைகளை தெரிந்துகொள்ள வகுக்கப்பட்ட கொள்கைகளின் வரம்புகளே இன்றும் நமக்கு துணைபுரிகின்றன எனலாம்.

எடுத்துக்காட்டாக, ஒளி என்ற வெளிச்சத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வரம்புக்கு அடிப்படை அமைத்தவர் கலிலியோ Galilio என்ற மேதை. அவர் என்ன பாடுபட்டார் இந்த மக்களின் மடமையிடையே மாட்டிக் கொண்டு என்பதை தனி ஒரு நூலாகத்தான் எழுத வேண்டும்-பாவம்!

கலிலியோ என்ற அந்த வானியல் ஞானியின் பிரச்னைக்கான முடிவை ஆய்ந்தறிந்து அறிவித்ததை விட, அந்த பிரச்னையை, சிக்கலை, தோற்றுவித்ததே மிகச் சிரமம் அல்லவா? என்ன பாடுபட்டு போடப்பட்டுள்ள ஒரு முடிச்சைக் கண்டறிந்திருப்பார்; அதுவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக் கருவிகள் இன்று போலவா அன்று இருந்தன? எனவே, தனது ஆய்வுக்குரிய ஒரு களத்தை, பிரச்னையை, தோற்றுவிப்பது கஷ்டமானது மட்டுமல்ல; கூர் அறிவுடைய பணியாகும்.

கலிலியோ என்ன தோற்றுவித்தாரோ அந்தப் பிரச்னை, அதன் முடிவை, அவருக்குப் பின்னாலே தோன்றிய பெரும் மேதைகள் எல்லாம், எதிர்ப்பும் மறுப்பும் கண்டறித்து அவரவர்கள் புதிது புதிதான விஞ்ஞான மர்ம விளக்கங்களை விளம்பியதை இந்த நாடே கண்டு வியந்த காட்சிகளாகும்; அறிவின் அற்புதங்களாகும்.

எனவே, ஒளியின் வேகத்தைக் கணக்கிட்ட ஒரு பிரச்னையைத் தோற்றுவித்து ஆய்ந்தவன் மனிதன் மட்டுமல்ல; மனிதனிலே ஓர் விஞ்ஞானி ஆனான்!

சூரியன் தோற்றம்
பற்றிய ஆய்வு!

கிழக்கே அதிகாலையில் எழும் ஞாயிற்றின் அழகுக் கோலமும், மாலையிலே அது மேற்கே மறையும்போது ஞாயிறுக் கோலமும் பல வண்ணங்களாக நமது விழிகளுக்குப் புலப்படுகிறது.

ஆனால், சூரிய ஒளி வெண்மையாகவே காணப்படுகின்றது. இந்த வெண்மையான ஒளி, ஏழு வண்ணங்களால் மட்டுமே உருவாகும் ஓர் உண்மையாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்பு இருந்த சர். ஐசக் நியூட்டன் , Sir Issac Newton என்ற விஞ்ஞானி, கி.பி. 1642 முதல் கி. பி. 1727 வரை வாழ்ந்த ஓர் அறிவியல் மேதையாவர்

அந்த நியூட்டனின் ‘வட்ட’ப் பரிசோதனையால் விளக்கப்பட்டது. ஒரு முப்பட்டைக் கண்ணாடி Spectrum என்ற உள் விழி நிழலுருவம் வழியாக, சூரிய ஒளியைச் செலுத்துங்கள். மறுபக்கமுள்ள திரையில் நீங்கள் காண்பது என்ன?

இந்த உலகத்தில் யார்யார் என்னென்ன நிறங்களைக் காண்பார்களோ, அந்த நிறங்களை எல்லாம் அங்கே பார்க்கிறீர்கள். கண்ணுக்கும், விழிகளுக்கும் இனிய, வண்ண வண்ணக் கோலம் அனைத்தையும் நாம் நோக்கும்போது, நமக்கே விந்தையாக விளங்கும்.

விசை ஒரு
விநோத சக்தி!

விசை என்பது ஒரு வினோதமான சக்தி. ஆரம்பத்தில் நிலையாக உள்ள, இரண்டு பொருட்கள் மீது, ஒரே விசையைப் பயன்படுத்தினால், இருவித பொருட்களும் இயங்கத் தொடங்குவதை நாம் காணலாம். இந்த இரு பொருள்களும் ஒன்றுக்கு ஒன்று நகரும் வேகம் வேறு வேறு விதமாகவே அமையும், ஒரு பொருளின் விசை அல்லது வேகம் பெரிதும் அதன் பொருண்மையை Massப்பொறுத்துள்ளது. எந்தப் பொருளின் பொருண்மை அதிகமாக உள்ளதோ அந்தப் பொருளின் வேகம் குறைவானதாகத்தானே இருக்கும்? இது இயற்கையான விதிதானே!

வெப்பம்
கணக்கு!

நமது புலன்களின் உணர்வுகளின் அடிப்படையில் பொருள்களின் வெப்ப அல்லது சூட்டை கணக்கிடுவது கடினமானது. இதனால்தான், வெப்பத்தைக் கணக்கிடும் வெப்ப அளவை அறிய, அதற்கான கண்டுபிடிப்புக் கருவிகளை விஞ்ஞானிகள் கண்டறியும் நிலை ஏற்பட்டது.

வெப்பத்தின்
குணாதிசயம்

வெப்பத்தின் குணாதிசயம் அல்லது சுபாவம் என்ன? தண்ணீருக்கு எப்படி மேடான பகுதியிலே இருந்து தாழ்வான அல்லது பள்ளமான பகுதிக்குப் பாய்ந்துவரும் ஆற்றல் உள்ளதோ, அதனைப் போல, உயர்ந்த மிக அதிகமான சூடு அல்லது வெப்ப நிலையிலே இருந்து, தாழ்ந்த வெப்பநிலைக்கு வெப்பம் பாய்ந்து வருவதுதான் அதனுடைய இயற்கையான சுபாவமாகும்.

நீர் = வெப்பம்
உயர்ந்த நிலை = அதிக வெப்பநிலை
தாழ்ந்த நிலை = குறைந்த வெப்ப நிலை

என்பதை, சிறிது ஆய்வு செய்தால், இந்த தத்துவத்தின் உண்மை நமக்குப் புலப்படும்.

பூமி இயக்கம்
எடுத்துக்காட்டு!


சூரியனைப் பூமி சுற்றி வருவதை இயக்கத்தின் சிறந்த எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம். பூமி, நீள் வட்டப் Elliptical பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.

ஏற்கனவே இருந்த பழைய உண்மைகள், இயக்கத்தை விளக்கும் பொதுவான தகுதிகளை இன்று பெற்றிருக்கவில்லை. எனவே, பொருட்களின் பொதுவான இயக்கத்தை அதாவது Motion ஐ, விளக்குவதற்காக, பல புதிய புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், அப்போதுதான் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற உண்மையின் உருவமுறையை உலகுக்கு உணர்த்த முடியும்.