இங்கிலாந்தில் சில மாதங்கள்/எப்படி இந்த வளர்ச்சி ?

எப்படி இந்த வளர்ச்சி ?

இப்படி, ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி நம் செல்வம் எல்லாம் கொள்ளை கொண்டு போனார்கள் என்பது வரலாற்று உண்மை, அதைப் பற்றி இப்பொழுது விமரிசித்துப் பயன் இல்லை, நம் நாட்டுக் ‘கோகினூர் வைரம்', இன்னும் அவர்கள் விலை யுயர்ந்த மணிகளையும் பொன் முடிகளையும் இன்னும் அரிய பொருள்களையும் வைத்துக் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்த வைரக்கற்கள் மிகுதி. இன்று அவற்றை அரசியின் உடைமைகளாக ஆக்கிக்கொள்ளாமல் காட்சிப் பொருளாக நாட்டு உடைமையாகப் பாதுகாப்பது பாராட்டத் தக்கதாகும்.

உலக நாடுகள் பலவற்றைத் தம் ஆட்சியின் கீழ் வைத்து ஆண்டதும் அந்தக் காலத்திலேயே அவர்கள் வாணிபத் தொழிலில் வளர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் தொடர்பால்தான் நம் நாட்டில் ரயில் அமைப்புகள், விமானம் இன்னும் பல வசதிகள் ஏற்பட்டதை மறுக்க முடியாது; ஒரு நாடு அதன் இயற்கை வளத்தால் முன்னேறுகிறது என்று மட்டும் இன்று கூறமுடியாது. அவர்கள் அறிவு வளர்ச்சி, ஆற்றல், கல்வி, எடுத்து நடத்தும் திட்டங்கள் இவற்றையும் பொறுத்து உள்ளது. அண்டை அயல் நாடுகளால் போர்த் தாக்குதல்கள் நிகழும் என்ற அச்சம் இருப்பதால் நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி, செல்வம் போர்க் கருவிகளுக்கும் படை வன்மைக்கும் பயன் படுத்தப்படுகின்றன, வளரும் நாடுகள் வேகமாக வளர முடியாததற்கு இந்தப் போர் அச்சம் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தப் போர் அச்சம் அந்த நாடுகளிலும் உள்ளன. நேர்த் தாக்குதல் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜெர்மனி யுத்தம் அவர்கள் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது. மறுபடியும் ஒரு ‘ஹிரோஷிமா’ நிகழக்கூடாது என்ற உணர்வு ஐரோப்பா முழுவதும் உள்ளது. அணுகுண்டால் உண்டாகும் அழிவுகளை ஒரு திரைப்படம் சித்திரித்துக் காட்டுகிறது. அதை ஒரு வீடியோவில் பார்க்க முடிந்தது. நல்ல வளமான வாழ்க்கை எப்படித் தீய்ந்து போகிறது என்பதைக் காட்டுகிறது அந்தப் படம்; வாழும் மண்; அதில் உள்ள மக்கள் கொடுமையான நோய்களுக்கு இரையாகி உருத்திரிந்து அழிகிறார்கள். ஜீவன்கள் உற்பத்தி ஆகமுடியாத ஒரு பேரழிவு; குழந்தைகள் குறைபாடு உடையனவாகப் பிறக்கின்றன. இப்படி ஒரு படத்தைப் பார்க்கும்போது அவர்கள் அங்கு நிம்மதியாக இல்லை என்பதை உணர முடிகிறது. எல்லா வளனும் இருந்தும், வாழ்க்கையில் உறுதிப்பாடு இருந்தும், இயற்கை வளம் நிறைந்தும், தொழில் பெருக்கம் இருந்தும் நம்பிக்கையான ஆட்சியியல்கள் செயல்பட்டும் மொத்தமாக இந்த மனித இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அந்த நாடுகளில் இருக்கிறது. அவ்வப் பொழுது அணுகுண்டு எதிர்ப்பு இயக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றிக் குரல் கொடுக்கின்றனர். அமெரிக்காவிலும் இந்த இயக்கம் எழுந்து குரல் கொடுக்கப்படுகிறது. பாரத நாட்டில் நமக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் இதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கிறோம். என்றாலும் பாரதப் பிரதமர் அண்மையில் இதை எடுத்துச் சொல்ல அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் பயணம் செய்ததை நம்மால் மறக்க முடியாது. உலக அரசியல் கண்ணோட்டம் உடைய ஒவ்வொருவருக்கும் உலகம் அழியாமல் இருக்கவேண்டும்; அணு ஆயுதம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்; அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதற்கு இலக்காக மானிடம் செயல்பட வேண்டும் என்ற விழிப்பு உலகு எங்கணும் நிலவுகிறது; நிபந்தனைகள், பேச்சுகள், திட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், ஆக்கபூர்வ முயற்சிகள் உலகப் பேரரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

நாம் அந்த தேசங்களின் போக்குகளையும் சிந்தனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் வாழ்வியல் முறைகளையும் நோக்கங்களையும் அறியும் போது குறைவு நிறைவுகள் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன, கல்வி முறையில் நாம் கருதத்தக்க சில நல்ல அமைப்புகள் அங்கே உள்ளன; நம் பிள்ளைகளுக்குப் பயன் உள்ள கல்வி என்று படுமானால் அங்குப் பெரும் போட்டி ஏற்படுகிறது. போட்டிகள் அதிகமாகும் போது ஊழல்களும் உடன் விளைகின்றன. அதைப்பற்றி அதிகம் எழுதுவது தேவையற்ற ஒன்று; தெரியாததைச் சொல்லியது ஆகாது. நூலின் தரம் குறைந்துவிடுகிறது . நம் குறைகளை எடுத்துச் சொன்னால் தவறு இல்லை. அவற்றை எப்படி மாற்ற முடியும்? வழி கூற முடியவில்லை. அதனால் பேசிப் பயன் இல்லை .

ஒரு சில படிப்புகள் பயன் உள்ளவை என்று மதிப்பிடப்படுகின்றன. அதனால் மற்ற துறைகளில் மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது. மற்றொரு கேடு இப்பொழுது கல்வியைச் சுற்றி வட்டமிடுகிறது. திரைப்படங்கள் நம் மாணவர்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டு அவர்கள் ஒழுங்கற்றவர்கள் என்பது போலக் காட்டுகின்றன, ‘ஒரு தலை ராகம்’ முதலில் இதற்கு வழி காட்டியது; பாலியல் பின்னணியில் மாணவர்களைச் சித்திரித்துக் காட்டுகிறது. நம் கல்வி நிறுவனங்களையே சாடுவதாகிறது. கதையில் கரு வேண்டும் என்பதற்காக மாணவர்களின் ஒருதலைப்பட்ட வாழ்க்கை முறைகளை மிகைப்படுத்திக் காட்டுகிறது, இந்தப் படங்களை எடுக்கக் கல்லூரி நிறுவனங்களே இடம் அளிக்கின்றன. இவை சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள். காதல் படு தோல்விகளுக்குக் கல்லூரிகள் நிலைக்களம் என்பது போன்ற திரைச் சித்திரங்கள் பெருகிவிட்டன.

முன்பெல்லாம் ஆசிரியர்களை முக்கியமாகத் தமிழாசிரியர்களைக் கிண்டல் செய்து நாடகம் எழுதினார்கள். அவர்கள் நாடகத்திற்குக் கோமாளித்தனத்துக்குப் பயன் பட்டார்கள். இன்று மாணவர்கள் காதல் கீழ்மைகளுக்கு உரியவராகக் காட்டப்படுகின்றனர். இது தேவைதானா? கல்வியின் தரத்தில் இந்த நிறுவனங்களில் நம்பிக்கை இன்மையே இதற்குக் காரணமாகிறது. அவர்கள் படிக்கச் செல்லவில்லை; இந்தக் கேளிக்கைகளுக்குத்தான் போகிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க முடியாது . ஏதோ நாம் கல்வித் துறையைப் பொருத்தவரை செயலிழந்து நிற்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. படித்தால் அவனுக்கு அதை ஒட்டி எதிர்காலம் இல்லை என்பது தெளிவான உண்மை. லாட்டரி சீட்டு வாங்குவதும் பல்கலைக் கழகப் பட்டச் சீட்டு வாங்குவதும் சில சமயங்களில் சமமாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. வேலையில்லாமல் ‘லாட்டரி’ அடிக்கிறான் என்ற பழமொழி இதற்குச் சான்று தரும் என்று நினைக்கிறேன்.

டாக்டர் மு. வ. ‘கி.பி. இரண்டாயிரம்’ என்ற நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். உயர்ந்த சமூகக் கோட்பாடுகள்; உழைப்புக் குறைவு; சிக்கலற்ற தெளிவான வாழ்க்கை இப்படி அமையவேண்டும் என்ற காட்டினார்கள். கி.பி. இரண்டாயிரத்தை நெருங்கிவிட்டோம் எந்தத் தெளிவும் ஏற்படவில்லை. அதனால் சமுதாயத்தில் வளர்ச்சியே இல்லை என்று கூறமுடியாது. வளர்ந்த நாடுகளில் சில நல்ல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை கற்பனை இல்லை; மனித சாதனை. அவற்றை நாமும் அடைய முடியும்; முதலில் அவை என்ன என்பதைத் தெளிவாக அறிய வேண்டும். அறிய முயல்வது தேவைப்படுகிறது.