இங்கிலாந்தில் சில மாதங்கள்/சில வேறுபாடுகள்
சில வேறுபாடுகள்
நகர வாழ்க்கைக்கும் கிராமம வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்று பேசிக் கொள்கிறோம். நாம் உண்டு நம் வேலை உண்டு! என்ற போக்கு நகரப் போக்கு. அடுத்த வீட்டுக்காரன் என்ன செய்கிறான் என்று அறிந்து, அதைப் பற்றிப் பேசி விமரிசிப்பது கிராமியப் பழக்கம். பக்கத்து வீட்டுக்காரர் யார் என்று கேட்டால் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். அவரையேதான் கேட்டு அறியவேண்டும். இப்படிப் பல குறைபாடுகள் பேசப்படுகின்றன, நாமே சில சமயம் அண்டை வீட்டில் பேசித் தொடர்பு கொள்ளத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறோம். ஏன் அவர் வீட்டுக்குச் சென்று கூப்பிட்டுப் பேசுவதில் சிரமம் இருக்கிறது. அந்த சிரமம் தொலை பேசியில் இல்லை. நான் சில முறை அப்படிப் பேசி இருக்கிறேன்.
இந்த நிலையை அங்கு உணர்கிறேன், அங்கே அடுத்த வீட்டுக்காரர் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார், குழந்தைகள் எத்தனை? மணவாழ்க்கை எப்படி? காதல் கலியாணமா? எப்படி இவர்கள் அறிமுகமானார்கள்! பிள்ளைகள் என்ன பண்ணுகிறார்கள். ‘யூ கே ஜி’ ‘எல் கேஜி’ இப்படி எந்த ‘கேஜில்’ அவர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள் எனறு கேட்டு அறிவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அந்த சுவாரசியம் அங்குக் காண முடியாது.
அடுத்தவரைப் பற்றி என்னதான் தெரியும் என்று கேட்டேன்.
“தெரிந்து கொள்ளாமலே இங்கு வாழ முடியும்” என்ற பதில் வந்தது.
ஒரு வீட்டுச் செய்தி மற்றொரு வீட்டுக்கு எட்டுவதில்லை. அதனால் ஒரு நன்மை, நாம் பெரும்பாலும் அக்கம் பக்கத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று அஞ்சித்தான் வாழ்கிறோம். அங்கே யாரும் எதையும் சொல்லமாட்டார்கள் என்று தெரிந்த பிறகு அவரவர் அவர்களுக்காக வாழ முடிகிறது. இது ஒரு சவுகரியம்தான்.
அங்கே ஒரு செய்திப் பஞ்சம் ஏற்பட்டது. நம் நாட்டு அரசியல் பத்திரிகைச் செய்திகள் அல்ல; பொதுவாக இங்கே அன்றாடம் கேட்டு ரசிக்கும் அக்கம்பக்கத்தவரைப் பற்றிய தகவல்கள். குழாய்ச் சண்டைகளில் ரசிப்பது உண்டு: அடுத்தவள் எப்படி. வாழ்கிறாள் என்பதை அறிந்துகொள்வது வியப்பாக இருக்கும். இதற்காகவாவது தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவது நல்லது என்று தெரிகிறது. சுவாரசியமான விமர்சனங்களைக் கேட்க முடிகிறது. அடுத்தவர்களைப் பற்றி வெளிப்படையாக விமரிசிக்கும் துணிவும் தெளிவும் இங்கே தான் பார்க்க முடிகிறது.
பிறர் சொந்த வாழ்க்கையை மற்றவர்கள் விமரிசிக்கும் பழக்கம் அங்கு இல்லை என்று தெரிகிறது. ஏதோ சாயங்காலம் கடைக்குப் போகிறோம் என்றால் வழியில் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். முக்கியமாக பஸ் பயணம் புதிய புதிய அனுபவங்களை இங்குத் தருகிறது.
பெண்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் ஒரு சீட், காலியாக இருந்தது. துணிந்து அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அந்த அம்மையார் சட்டென்று எழுந்து கொண்டாள், எனக்கு அவர் தரும் மரியாதை அல்ல அது; அவள் பக்கத்தில் உட்கார்ந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.
நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று தைரியம் சொன்னேன், “அது எனக்குப் புரிகிறது” என்றாள்; சிரித்துவிட்டேன். "என் கணவன் என்னை நம்பவேண்டுமே” என்றாள்.
எனக்குப் புரியத் தொடங்கியது. அவள் எப்படி என் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியும்?
இப்படி எத்தனையோ அனுபவங்கள் நமக்கு சுவாரசியத்தைத் தருகிறது. இதைப் போன்ற விபரீதங்களை அங்கு நாம் அனுபவிக்க முடியாது. எல்லாம் ஒழுங்காக நடைபெறும்போது அது புறவளர்ச்சிக்கு நல்லது தான். மாற்றங்கள் இருந்தால்தானே சுவையே இருக்கும். அந்த ஒழுங்கு முறைகள் நமக்குப் பல சமயங்களில் சலிப்பையே தருகின்றன.
நம் கார் டிரைவர்கள், பஸ் ஓட்டிகள் முன்னால் (செல்லும் குறுக்குவாசியைப் பார்த்துக் கேட்பான்.
“ஏன்’ பா சொல்லிவிட்டு வந்தியா?” என்பான். இது போன்ற பழக்கமான அறிவுரைகளை எல்லாம் அங்கே காணமுடியவில்லை.
போலீசு ரொம்பவும் கண்டிப்பாக இருப்பது நமக்குப் பழக்கம் இல்லை; தவறு செய்தால், கார்களைத் தவறான இடத்தில் பார்க் செய்துவிட்டால் உடனே வந்து பெயர் எழுதிக்கொண்டு ‘கேசு’ பதிவு செய்துவிடுகிறார்கள், ஈவு இரக்கமற்ற நிலையில் நடந்து கொள்கிறார்கள். காசு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க முடியாது. கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள். எனினும் இங்கு உள்ள சூழ்நிலைவைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது. கடமையைச் செம்மையாகச் செய்கிறார்கள் என்று கொல்வதுதான் பொருந்தும். அப்படி அவர்கள் பழகிவிட்டார்கள்; இவர்கள் இப்படிப் பழகிவிட்டார்கள்; அவ்வளவுதான் வேறுபாடு. அங்கே கார் ஓட்ட லைசென்சு வாங்குவது எளிதல்ல; நிறைய பயிற்சி பெறவேண்டும்; விதி முறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பயிற்சி பெறவே நிறைய செலவு செய்ய வேண்டும். மிகவும் கண்டிப்பான பேர்வழிகள், இங்கே நம்மீது நம்பிக்கை அதிகம் லைசென்சு கொடுத்துவிட்டால் பின் தானாகப் பயிற்சி கொள்வார்கள் என்ற நம்பிக்கை. எது சரி என்று எப்படி நாம் சொல்லமுடியும். இரண்டு பேரும்தான் பின்னால் கார்களைச் சரியாக ஓட்டுகிறார்கள். அங்கே ஒரு தொல்லை கார்கள் வேகமாக ஓட்டவேண்டும்; நாம் நகரங்களிலேயே முப்பது மைலுக்கு மேல் போகக்கூடாது என்பது விதி; வேகம் தவிர்ப்பது இங்குத் தேவைப்படுகிறது. ஏனென்றால் கார்கள் மட்டும் நடு ரோட்டில் போவது இல்லை; மனிதர்களும் நடக்கிறார்கள். மாடுகளும் தைரியமாக அசையாமல் நிற்கின்றன. மனிதர்களும் பயப்படுவது இல்லை. மாடுகள் பழகிவிட்டன. இந்தச் சிக்கல்கள் அங்கு இல்லை.