இங்கிலாந்தில் சில மாதங்கள்/பாரிசில் ஒரு நடனம்
பாரிசில் ஒரு நடனம்
பாரிஸ் நகரத்தில் பார்த்த ஒன்று; அதையும் சொல்லி விடுகிறேன்; டூரிஸ்டுப் பேருந்தினர் விருப்பம் உள்ளவர் ‘காபரே நடனம்’ சென்று பார்க்கலாம் என்று அறிவித்தனர். அதைப் பார்க்கப் பன்னிரண்டு பவுண்டு கட்டணம் என்று நினைக்கிறேன். அதாவது இருநூறு ரூபாய் அளவு என்று கணக்கிடுகிறேன். இவ்வளவு தூரம் போய் அதைப் பார்க்காமல் வருவது எப்படி, பணம் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம்; அதை எப்படி மறுபடியும் பார்க்க முடியும். இப்படிச் சொல்லி நம்மை நாம் சில சமயங்களில் சமாதானம் செய்துகொள்கிருேம்.
‘காபரே நடனம்’ பாரிஸ் நகரத்துப் பாரம்பரியக் கலை. அதில் பாரிஸ் நகரத்து அழகிகள் மட்டும் அல்ல; உலகத்தின் பல பாகங்களில் இருந்து நடனப் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அதில் பையன்களும் சேர்ந்து ஆடுகின்றனர். அவர்களும் அழகில் அவர்களை வென்றவர்களாகவே காணப்படுகின்றனர். வான மகளிர் இந்த மானுடத்தை எப்படி மகிழ்விக்க முடியும். இவர்கள் அதை விரும்புகிறார்கள் மூடி மறைப்பதில் பயனில்லை. சிலைகள் உயிர் பெற்று இங்கே நம் முன் ‘நாங்கள் மனிதர்களின் பிரதிநிதி உருவங்கள் தான்’ என்று சொல்வது போலத் துணிந்து நிற்பதுபோல அவர்கள் காட்சி தருகிறார்கள். மேலை நாட்டுப் பெண்கள் அணியும் உடையால் வேறுபடுகின்றனர்; அவர்கள் சேலை உடுத்துவது இல்லை; பலவகை சட்டைகளையும் கால் சட்டைகளையும் அணிந்து தமக்கென ஒரு பாணி அமைத்து உடுக்கின்றனர். நம் நாட்டு மகளிர் சேலை கட்டிய மாதர்; அந்தப் பெயர் வாங்கியவர்கள். இரண்டும் இல்லாமல் பெண் பெண்ணாகக் காட்சி அளிக்க முடியும் என்பதை அந்த நடனத்தில் காட்டி மகிழ்வித்தனர். நான் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர்கள் சில இடங்களை மட்டும் நமக்காக மூடியே வைத்தனர். எந்தவித விரசமுமின்றி மேலாடை நீங்கிய வனப்பினைக் கண்டு அதை ஒரு கலைப்பொருளாக ரசிக்க முடிந்தது. வண்ண முகைகள் இதழ்கள் விரிந்த பூக்களாக மலர்கின்றன; அன்னப் பெடைகள் தாமரை மலரை விட்டுத் தண்ணீரில் தாவி நடக்கின்றன. காட்டு மயில்கள் மேகம் கண்டு மனம் குளிர்ந்து தோகை விரித்து ஆடுகின்றன. சிறகைப் பெற்ற தெய்வ மகளிர், மின்னும் நட்சத்திரங்கள். குழந்தையின் மலர்ந்த சிரிப்பு இவற்றையெல்லாம் அந்த நடனக் காட்சிகளில் காண முடிகிறது. அந்த இளம் வாலிபர்கள் அவர்களோடு சேர்ந்து இணைந்து ஆடினர். அது ஒரு கலை; அதை ரசிக்கும்போது நாம் ஞானிகள் அல்ல என்ற உணர்வோடு இருந்தால்தான் அது நமக்கு விருந்தாக அமைகிறது. கையில் கோப்பையில் ‘சாம்பயின்’ என்ற மதுவகை ஒரு அளவு ஊற்றித் தந்தார்கள். அதைப் பருகிக்கொண்டே அந்தக் கலை விருந்தைக் கண்டு ஈடுபடுகிறார்கள். ‘மதுவும் மங்கையும்’ இரட்டைப் பிள்ளைகள் என்ற கோட்பாட்டை அந்த நிலை நினைவூட்டுகிறது.
அதைவிட மற்றொரு சிறிய காட்சி மறக்கமுடியாமல் நிற்கிறது. நாங்கள் அந்த நடன அரங்கை விட்டுப் பேருந்து நோக்கி நடக்கிறோம். நள்ளிரவு நேரம்; விளக்குகள் அதைப் பகலாக்குகின்றன. கூட்டம் கூட்டமாகவே நகர்ந்து செல்கிறோம்.
பாரி முனை ‘செல்லாராம்’ கடைப்பக்கம் போகிறோமா என்ற நினைவு எழுகிறது; உள்ளே சேலை விற்கிறார்கள்; அதற்காக வெளியே செல்லுலாய்ட் பொம்மை; அந்த பொம்மை ஒரு விளம்பரப் பொருள். அதற்கு விதவிதமாக உடை உடுத்துகிறார்கள்; கவர்ச்சிப் பொருளாகவே இருக்கிறது.
இங்கே உடையே உடுத்தாமல் இப்படி ஒரு பொம்மையை உட்காரவைத்தால் அது கவர்ச்சியாகத்தானே இருக்கும். ‘கன்னிப் பெண்’ - இது பருவத்தைக் குறிக்க வந்த சொல்லி அவள் மணமானவளா இல்லையா என்பது அல்ல கேள்வி; கவர்ச்சி மிக்க இளநங்கை; அதைச் சொல்லைத்தான் கன்னிப்பெண் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அவள் ஆடையில்லாமல் ஷோகேஸ் பொம்மையைப் போல் அந்தக் கட்டிடத்துப் படிக்கட்டு ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறாள். நடந்துகொண்டே இருக்கிறோம். அந்த உருவம் மின்னல்போல் காட்சி அளிக்கிறது: அது மறையவில்லை. அங்கேதான் உட்கார்ந்து இருக்கிறது. நாங்கள் மறைகிறோம். அந்த உருவம் ஒரு விளம்பரப் பொருள் உள்ளே அது சிவப்பு விளக்கு வீடு என்பதற்கு அடையாளம். கடைப் பொருள் வெளியே விளம்பரத்துக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை மேலும் விமரிசிக்க விரும்பவில்லை. அது பாரிஸ் நகரத்து இரவு; அவ்வளவுதான் விளக்கம். அவள் ஒரு அடையாளம்; வகைகள் உள்ளே விலைப்பொருளாக உள்ளன.
மறந்துவிட்டேன்; அந்த நடனத்தில் இடையிடையே நகைச்சுவை நிகழ்ச்சிகள் புகுத்தப்பட்டன. நகைச்சுவை என்று கூறும்போது நம் தமிழ் நடிகை மனோரமாவின் நடிப்பு நினைவுக்கு வருகிறது. சோவின் நடிப்பிலும் மாற்றத்தைக் காணமுடிகிறது. தொலைக்காட்சியில் அவர்கள் நடித்த நாடகங்கள் தனித்தனியே பட்டு மாமியாக குழந்தைக்காக ஏங்கும் தாயாக மனோரமா நடிக்கிறார். கொஞ்சங்கூட நகைச்சுவை இல்லாமல் தத்ரூபமாக மனத்தைத் தொடக்கூடிய வகையில் சோகக் குமுறல்கள் ததும்ப நடித்துக்காட்டுகிறார். அதேபோல சோ ‘பெருமாள் பக்தராக’ நடிக்கிறார்; சாதிக் கட்டுப்பாடு தேவையற்றது என்ற கருத்தைப் புகுத்தும் நாடகம் அது; அவர் நகைச்சுவைக்கு இடமே தராமல் நடிப்பு எல்லையைத் தொட்டுக் காட்டுகிறார். நகைச்சுவை நடிகர்கள் சீரியஸ் ரோல் எடுத்து நடித்துக் காட்ட முடியும் என்பதை அவர்கள் தொலைக் காட்சி நாடகங்களில் காட்டிவிட்டார்கள்.
அந்த நடனத்தில் சிறிது மாற்றம் விளைவிக்கக் கோமாளிக் கிண்டல் நாடகம் ஒன்று நடிக்கப்பட்டது. அந்த அரங்கு அதில் முன்னால் உட்கார்ந்திருக்கும் பார்வையாளர்கள் பல தேசத்துப் பயணிகள். அந்தத் தமாஷ் பல தேசத்து ரசிகர்களைக் கவரத்தக்கதாக இருந்தது.
ஒருவன் வழி தவறிப் பத்து பவுண்டு நோட்டுக் கீழே போட்டுவிடுகிறான். அதை யாரும் கவனிக்கவில்லை; ஆங்கிலேயன் ஒருவன் அதை எடுக்கிறான்; எடுப்பதற்கு முன்னால் பல முறை யோசித்துப் பின் எடுக்கிறான். என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. ருஷிய நாட்டவன் ஒருவன் எடுக்கிறான்; எடுப்பதற்கு முன் தன் தலைமைப் பீடம் என்ன சொல்லுமோ என்று அஞ்சி அஞ்சிப் பின் மேலிடத்துக் கட்டளை வந்த பிறகு எடுக்கிறான்; சீனாக்காரன் முதலில் அதை காமிராவில் போட்டோ எடுக்கிறான்; அதாவது சீனப் பயணிகள் எதற்கெடுத்தாலும் எதைக் கண்டாலும் உடனே போட்டோ எடுக்கிறார்கள் என்பது அந்தச் சித்திரத்தின் கேலித் தன்மை. அமெரிக்கன் ஒருவன் வருகிறான். அந்தப் பத்துப் பவுண்டை எடுப்பதற்கு முன் அதே இடத்தில் தன்னுடைய பத்து பவுண்டைக் கீழே போட்டுப் பின் இரண்டையும் சேர எடுத்துச் செல்கிறான். அமெரிக்கர்கள் பணம் போட்டுப் பணம் எடுக்கும் மனப்பான்மை உடையவர்கள்; தைரியமாக முதலீடு செய்து பின் தக்க வருவாய் ஈட்டுவார்கள் என்பது அதன் கருத்து. அது உண்மைதான். மிகப் பெரிய நகரங்களில் அடுக்குக் கட்டிடங்கள், வசதி மிக்க உணவு அகங்களைக் கட்டியிருக்கிறார்கள், மற்ற இடங்களை நோக்கக் கட்டணம் குறைவு; வசதி மிகுதி; எப்பொழுதும் பயணிகள் நிறைவு; நல்ல வருவாய்!
பிரெஞ்சுக்காரன் வருகிறான் யோசனையே செய்யவில்லை; பணத்தை எடுத்துக் கொள்கிறான்; அதைக் கொண்டு ஒரு புட்டியையும் துணைக்கு ஒரு குட்டியையும் கைப்பிடித்துக் கொண்டு போகிறான். பணம் கிடைத்தால் அனுபவிக்கத் தெரிந்தவன் என்பது அந்தக் கேலிச் சித்திரத்தின் கருத்து.
‘இந்தியா’ என்ற குரல் கீழே எங்களிடமிருந்து எழுப் பப்பட்டது. அதைப் பற்றி அவர்கள் அந்த நாடகத்தில் சிந்திக்கவில்லை. நாமே அதைப்பற்றிச் சிந்தித்துக்கொள்ள வேண்டியது. என்னைக் கேட்டால் அவன் அதைப் பத்திரப்படுத்திச் சேர்த்து வைப்பான். காரணம் அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மிகுதி என்றுதான் சொல்லத் தெரிகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “அவன் மனச்சான்று உடையவன். உடையவனிடம் தேடிக் கொடுப்பான்” என்பீர்கள். நன்றி.
மற்றைய நகரங்களைவிட பிரான்சு தேசத்து நகரங்கள் பார்க்கத்தக்கவை; அரசர்கள் வாழ்ந்த வரலாறு. வீழ்ந்த நிகழ்ச்சிகள், அவற்றைக் காட்டும் ஓவியங்கள் அந்நகரங்களில் சித்திரித்துக் காட்டப்படுகின்றன. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு தீட்டப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் அந்தக் கதைகளை விளக்கிக்கொண்டே செல்கிறார்கள், அந்தப் பிரெஞ்சு கைடுகளையே ஆங்கிலம் தெரிந்தவர்களை விளக்கிச் சொல்ல அமர்த்தி இருக்கிறார்கள். மன்னர்கள் ஆண்ட தேசம் அது. அவர்கள் LI)ணிமுடி.கள் பறிக்கப்பட்ட தேசமும் அது.
ஜெர்மனியில் சிறப்பாக ‘இட்லரின்’ கொடுங்கோன்மை; யூதர்களை ஒறுத்த நிகழ்ச்சிகள் இவற்றைச் சித்திரித்துக் காட்டுகிறார்கள். இரண்டாம் உலகப்போரின் விளைவு நமக்கு அதிகம் தெரியவில்லை. அங்கே அதுதான் எங்கும் பேசப்படுகிறது. ஹிட்லர் முறியடிக்கப்படாவிட்டால் உலகத்தின் சரித்திரமே மாறிவிட்டு இருக்கும்; இன்று உலகம் சுதந்திரம் ஜனநாயகம் சோஷியலிசம் என்ற இந்த மூன்று லட்சியங்களைப் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது. ஜெர்மானியர்கள் அவர்கள்தான் உலகாளப் பிறந்தவர்கள் என்ற கோட்பாடு வெற்றிபெற்றிருக்கும். ஜெர்மனி யுத்தத்தில் காலிழந்தவர்கள் ஒரு சிலர் நகரத்துக் கடை வீதிகளில் தள்ளுவண்டியில் அவர் உறவினர்கள் பல் தள்ளப்பட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.
ஜெர்மனி போர் முயற்சியில் ஈடுபட்டதால் எந்திர உற்பத்திகள் வேகமாகச் செயல்பட்டன. தொழில் வளம் பெருகியது. அதன் தொடர்ச்சி இன்று ஜெர்மனி எந்திர வளர்ச்சி மிக்க நாடாக வளர்ந்து இருக்கிறது, மதிப்பு உயர்ந்த கார்கள் உற்பத்தி மிகுதியாக உள்ளது. நிலக்கரி யும் இரும்பும் இயற்கை வளமும் மிக்க நாடு அதனால் அது தொழில் வளம் மிக்க நாடாக விளங்குகிறது.
போரில் தோற்றுவிட்ட தேசங்கள் ஜப்பானும் ஜெர்மனியும் தம்மைப் போர்த்தளவாடங்கள் கொண்டு வளப்படுத்திக்கொள்ள முடியாது. அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டு இருக்கிறார்கள். அதனால் அந்த தேசங்களுக்குப் பெரு நன்மை; அவர்கள் ஆக்கப் பொருள் படைப்புகளுக்குத் தம் ஆற்றலையும் சக்தியையும் கனிமப் பொருள்களையும் பயன் படுத்துகின்றனர். தரம் மிக்க எந்திர மின்சாரப் படைப்புகளைத் தந்து வருகின்றனர்.
எந்த ஒரு நகரத்திற்குச் சென்றாலும் பார்க்கத் தகுந்த காட்சிகளாக உயரமான சர்ச்சுகளும் கடைவீதிகளும்தான் இருக்கின்றன. கடைகளில் சென்று பொருள்களை வாங்க நாம் வெளியே போகிறோம். அங்கே அந்த நாட்டு மக்கள் கடைவீதிகளில் குழுமிச் செல்லும் காட்சியைக் காண முடிகிறது. கலகலப்பான வாழ்க்கை; பல தேசப்பயணிகளைக் காண முடிகிறது. அவர்கள் அனைவரையும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறமுடியாது; கடைக்காரர்களைத்தான் அந்த நாட்டுவாசிகள் ‘ என்று உறுதியாகக் கூறமுடியும், ஐரோப்பிய நாடுகள் பல இடத்திலிருந்து ‘டூரிஸ்டுகள்’ வந்து போய்க்கொண்டு இருக்கின்றனர். அதேபோல் இங்கிலாந்திலும் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த நகரம் மற்றும் பல்கலைக் கழகங்கள் உள்ள நகரங்கள் இந்த இடங்களில் பல தேசத்துப் பயணிகளைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாடும் பாரதத்தை விட மிகச் சிறியவையே. அவர்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்வதும், மாற்றம் கண்டு மகிழ்வதும், சுற்றுலாச் செல்வதும் வாழ்க்கை நடைமுறைகள் ஆகின்றன. ஜெர்மனியில் முக்கியமாக நாம் செல்லும் பகுதிகள் எல்லாம் ‘ரைன்’ நதி நம்மைத் தொடர்கிறது; வழியெல்யெல்லாம் திராட்சைக் கொடிகள்; எங்கும் பசுமை: இப்படியே ஏறக்குறைய பெல்ஜியம் ஹாலந்துப் பகுதிகள் காட்சி அளித்தன. நல்ல மழை. இயற்கை அவர்களுக்கு வளத்தை வாரித் தருகிறது, மண் இரும்பையும் கரியையும் தோண்டும் அளவிற்குத் தந்துகொண்டிருக்கிறது. தொழில் நீண்டகாலமாக வளர்க்கப்பட்டு இருக்கிறது. நாம் ஒரு பொருளை உற்பத்தி செய்வது என்றால் அதற்கு அடிப்படை அச்சுகள் நிறுவவேண்டும். கார் உற்பத்தி என்றால் அதற்கு வேண்டிய அச்சுகள் (plants} தேவைப்படுகின்றன. இவ்வாறே ஒவ்வொரு தொழிலுக்கும் அடிப்படை அச்சுகள் வேண்டும். அவர்கள் ஏற்கனவே இத்துறைகளில் முன்னோடிகளாக இருப்பதால் நிறைய எந்திரங்களைக் கார்களை உற்பத்தி செய்யும் வசதி வாய்ப்புகள் பெற்றிருக்கின்றனர்.
நாம் ஒரே ஒரு துறையில் மேல்நாட்டை ஒட்டி மிக வேகமாக முன்னேறி வருகிறோம். திரைப்படத் துறையில், அவர்கள் விமானங்கள் ஹெலிகாப்டர்களில் சண்டை போடுகிறார்கள். நாம் துப்பாக்கி வெடிகுண்டு வரை வந்துவிட்டோம். இந்தப் படங்கள் இப்பொழுது வன்முறை கொள்ளைகள் செய்யத் தூண்டுதலாக இருக்கின்றன என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. ‘நூறாவது நாள்’ படம் பார்த்துவிட்டு எப்படிக் கொலை செய்வது என்று கற்றுக்கொண்டு அதே வகையான வெறித்தனத்தோடு குடும்பத்தையே அழித்தான் ஓர் இளைஞன். அது அவன் தந்த வாக்குமூலம். மேல் நாட்டுத் திரைப்படங்களை ஒட்டி இங்கும் சண்டைக் காட்சிகள் மிகுதிப்படுத்தப்படுகின்றன. விளைவு: இன்றைய இளைஞர்களின் மனோ நிலை; காந்தியுகம் மாறிச் சட்ட மீறல்கள் வளர்கின்றன.
நாம் மற்ற துறைகளில் அவர்களை ஒட்டி வளரவேண்டும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடவேண்டி யிருக்கிறது. நாம் அந்த நாடுகளைப் போலத் தொழில் வளத்தால் முன்னேற வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது; முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
திராட்சைக் கொடிகளை வழி எங்கும் காணமுடிகிறது , அதனால் அங்கு ‘வைன்’ உற்பத்தி அதிகம் நடைபெறு கிறது. பிரான்சில் பாரிசுக்கு அருகே ‘சாம்பெயின்’ என்ற வைன் வகை பதப்படுத்தப்படுகிறது. பூமிக்கு அடியில் சுமார் இருபது மைல் தொலைவிற்குச் சுரங்கவழி கீழே தோண்டப்பட்டு சுமார் இருபது முப்பது அடி அகலப் பாதையில் இரண்டு பக்கம் புட்டிகள் அடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் அவை தேக்கி வைக்கப்பட்டுப் பழமைப்படுத்தப்படுகின்றன. நாறு ஆண்டுகளாக அங்கு அந்தத் தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அது புளித்துப் பழமை பெறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதற்கு விலை மிகுதி என்று தெரிவிக்கப் பட்டது.
அங்கு ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற அறிவுரையைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். திராட்சைப் பழச் சாறுகளைப் பதப்படுத்தி மதுவகை செய்வது முக்கியமான தொழில்; அதனால் பல குடும்பங்கள் பிழைக்கின்றன. குடி குடும்பங்களை வாழவைக்கின்றன என்பதுதான் பொருந்தும்.