இங்கிலாந்தில் சில மாதங்கள்/புறந்தூய்மை

புறந்தூய்மை

வள்ளுவர் இரண்டு தூய்மைகளைப் பற்றிக் கூறுகின்றார்; அகந்தூய்மை; புறந்தூய்மை என்பர்; அகந்தூய்மை என்பதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம்; புறந்தூய்மை என்பதைப் பற்றி அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். வீட்டுக் குப்பை தெருவில் கொட்டிவைக்க முடியாது; அவற்றை ஒரு பையில் (நம் ஊர்த் தபால் நிலையத்துக் கோணிப் பைப் போல்) போட்டு வைக்க வேண்டும், வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வெளியே கொண்டுவந்து வைக்க வேண்டும். லாரிகளில் வந்து அவற்றை எடுத்துக் கொட்டிக்கொண்டு அந்தப் பைகளை அங்கு வைத்துவிடுகின்றனர். அல்லது வேறு பைகளை வைத்துச் செல்கின்றனர்.

வீட்டிலேயும் கண்ட இடத்தில் குப்பை போடுவது இல்லை. உடனுக்குடன் குப்பைக் கூடைகளில் சேர்த்து விடுகின்றனர். அங்கே பொருள்கள் அழுகுவது இல்லை . இறால் மீன் இறைச்சி எலும்புகள் கூட நாற்றம் எடுப்பது இல்லை. ஏன்? அந்தக் குளிர் நிலை அழுகலைத் தடுக்கிறது. தெருக்களில் ஒரு சிகிரெட்டுத் துண்டுகூட போடமுடியாது; ஓரங்களில் எங்கோ சில இடங்களில் தபால் பெட்டிகள் போலக் குப்பைப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன, அங்குச் சென்று கிழிச்சல் கடிதங்கள்; குடித்துப் போட்ட டப்பாக்கள் சீசாக்கள் எந்தப் பொருளும் போட்டுவிட வேண்டும்.

காரில் மைல் கணக்கில் பயணம் செய்யும்போதும் குப்பைகளை வீசி எறிந்துவிட வாய்ப்பு உண்டு; யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றலாம். அவர்கள் அந்த நிலையிலும் வெளியே தூக்கி எறிவது இல்லை. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வழிப் பாதைகளைக் கெடுக்கக் கூடாது என்ற உணர்வு தோன்றிவிடுகிறது.

கார்களில் நீண்ட பயணங்கள் செய்யும்போதும் அவசரமாக ‘வெளியே’ போகமுடியாது; அடக்கம் மிக மிக அவசியம். அங்கங்கே சில மணித்துளிகள் தங்கிக் கழித்தலும் கூட்டலும் செய்துகொள்ள அமைப்புகள் உள்ளன. பஸ்களும் அங்கு நிற்கின்றன. ஹோட்டல்கள், கடைகள், கழிப்பிடங்கள் கூடிய அந்த வளாகம் ஓய்வு அகங்களாக விளங்குகின்றன.

கட்டணக் கழிப்பு அறைகள் இங்குப் புகுத்தப்பட்டு வருகின்றன; அங்கே ஆங்காங்கே நடைமுறையில் உள்ளன. காசு கொடுத்தே கடன் கழிக்க முடியும். இலவச இடங்களும் உள்ளன. ‘கட்டணக் கழிப்பு முறை’ பொறுப்பு மிக்க இடமாக மாறுகிறது. அதைக் கண்காணிக்க எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆட்கள் பணி செய்கின்றனர். உணவு அகங்கள் வழிப் பயணிகளுக்கு எவ்வளவு தேவையோ அதைப்போலக் கழிப்பிடங்களும் ஒழுங்காக அமைக்கப்படுதலும் அவசியம் ஆகிறது.

அந்த வளாகத்தில் காசு போட்டு விளையாடும் விளையாட்டுக் கருவிகளும் உள்ளன. அதில் சிறிது நேரம் காசு வைத்துச் சூதாடி அவரவர் அதிருஷ்டத்தையும் கண்டு மகிழ முடிகிறது.

இந்தப் புறத்தூய்மை பற்றி வெளிநாட்டுப் பயணிகள் ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர், கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் பாராட்டிப் பேசுகின்றனர். நம் நாட்டில் இந்தச் சூழ்நிலையை உண்டாக்க முடியுமா? இதற்கெல்லாம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது.

எந்தச் சட்டம் போட்டாலும் அதிகாரிகள் மக்கள் மீது பாய்கிறார்கள். நம் நாட்டில் தொழிலாளர்க்கு நன்மை செய்ய அங்காடி விதி முறைகள் (Shop Act) போட்டு இருக்கிறார்கள். நன்மைக்கு மாறாகத் தொல்லைகள்தாம் மிகுதி. கோர்ட்டில் நிறைய வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. நிறுவனங்கள் அலைக்கழிக்கப் படுகின்றன. தொழிலாளரும் இந்தத் தொழில் அரசாங்க அதிகாரிகளும் இந்தச் சட்டங்களின் விதிகளைக் காட்டி நிறுவன உரிமையாளர்களுக்குத் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் தொழில் நடத்துவதையும் நிறுத்திவிடுகின்றனர்.

அதே போல இந்தக் குப்பை ஒதுக்கீடு சட்டம் போட்டால் என்ன ஆகும்? நம் கோர்ட்டுகளில் இட நெருக்கடி அதிகமாகிவிடும். நாமே நாம் மெல்ல மெல்லப் புறத்தூய்மை வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு உதவுவதல் நலம் பயக்கும். நடவடிக்கைகள் எடுக்க மற்றவை எல்லாம் சீர்பட்ட பிறகே இதையும் சீர்படுத்த முடியும்.

முதலில் சாலைகளே இங்கு இன்னும் ஒழுங்காக அமைக்கப்படாமல் இருக்கும்போது அவற்றின் புறத்தூய்மை பற்றி எப்படிப் பேசமுடியும்; நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்; முழுமையும் ஓரளவு நிறைவு பெற்றே இப்புறத்தூய்மையை நாமும் காணமுடியும். புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். வைத்துக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை அந்த நாடுகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

பசுமை தூய்மை இந்த இரண்டும் அந்த நாட்டில் காணப்படும் பெருமை. எங்கும் பசுமையாக வளரும் செடிகள், புல் தரைகள், பெரிய மரங்கள், பூங்காக்கள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. லண்டன் மாநகரில் ஆங்காங்கே பூங்காக்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைச் சுற்றி மாடவீதிகள் {Square) என்ற பெயரில் வழங்குகின்றன. நம் நாட்டில் கோயில்களைச் சுற்றி மாட வீதிகள் அமைவது போலப் பூங்காக்களைச் சுற்றி வீதிகள் அமைகின்றன.