இங்கிலாந்தில் சில மாதங்கள்/பேசிவிட்டால் ஆறிவிடுகிறது
பேசிவிட்டால் ஆறிவிடுகிறது
இங்கிலாந்து ஒரு ஜனநாயக நாடு; பேசும் உரிமை இருக்கிறது; நமக்கும்தான் பேசும் உரிமை இருக்கிறது; நாம் பேசுவதற்கு ஓர் இடம் வேண்டும்; கேட்பதற்குச் சிலராவது வேண்டும். இங்கே மூர்மார்க்கெட்டில் முன்பெல்லாம் மருந்து விற்கிறவன் மொழிபெயர்ப்பாளன் துணை கொண்டு பேசுவது கேட்கச் சுவையாக இருக்கும், வேடிக்கை காட்டுகிறவர்கள்; விகடம் செய்கிறவர்கள்; சும்மா கூட்டம் கூட்டிக் காலட்சேபம் செய்கிறவர்கள்; இவர்களிடையே பிக்பாக்கெட்டுகள்; பழைய புத்தகங்கள் நாமே சென்று விற்கும் சூழ்நிலைகள் இவை எல்லாம் இருந்தன.
நான் ஐந்து ஆறு வகுப்புப் படித்த காலத்தில் மூர்மார்க்கெட்டில் அந்தப் பூங்குளத்துக்குக் கிழக்கே பள்ளிக்கூடத்து மாணவர்கள் கடை போட்டுப் பழைய புத்தகங் களை விற்பார்கள்; தமக்கு வேண்டிய புத்தகங்களை அரை விலையில் மற்றவர்களிடம் வாங்குவார்கள். கிழிச்சல் அதிகம் இருந்தால் கால் விலைக்கும் வாங்க முடியும். இப்பொழுது குழந்தைகள் சிறுவர்கள் புதுப்புத்தகங்களையே முழுவதும் வாங்குகின்றனர். அரசாங்கம் குறைந்த விலையில் புத்தகம் விற்பனை செய்கின்றது. மேற்படிப்புக்குப் புத்தக நிலையங்கள் பெரிதும் உதவுகின்றன.
ஹைட் பார்க்கில் ஞாயிறு மாலைப் பொழுதுகளில் ஓர் மூலையில் மேடைப் பேச்சுக்கு என்று இடம் ஒதுக்கியுள்ளார்கள்; யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் விமரிசிக்கலாம்; தடை இல்லை; நாட்டு அரசியாரைப்பற்றி மட்டும் விமரிசிக்கக்கூடாது என்பது விதி; வரையறை; சட்டம்.
நமக்கு இப்பொழுது ஹைட் பார்க்கு தேவையில்லை மைக் போட்டு வீதி மூலை முடுக்குகள் எல்லாம் யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். தேர்தல் களங்களாக நம் தெரு முனைகள் சந்திகள் மாறிவிடுகின்றன. அங்கு இதைப்போன்ற கூட்டங்கள் போடுவது இல்லை; எல்லாம் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி இவை தேர்தல் பிரச்சார சாதனங்கள்,