இங்கிலாந்தில் சில மாதங்கள்/மொழிப் பிரச்சனை

மொழிப் பிரச்சனை

இங்கிலாந்து முழுவதும் ஆங்கிலம் பேசப்படுகிறது, கவிஞர்கள் வளர்த்துத் தந்த மொழி இன்று கல்விக்கும் வாழ்வுக்கும் முழுவதும் பயன்படுகின்றது. அது இன்றைய உலக மொழியாக மாறிவிட்டது. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மொழி ஒரு சிக்கலாக அமையவில்லை. பேசுவதும் படிப்பதும் அறிவதும் அனைத்தும் ஆங்கிலமே. இது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு தேசமும் தனித்தனி மொழிகளை ஆள்கின்றன. ஜெர்மனி யில் அவர்கள் மொழியும் பிரான்சில் அவர்கள் மொழியும் இயங்குகின்றது. எனினும் ஆங்கிலம் ஐரோப்பா முழுவதும் அறியப்படும் மொழி.

பாரத தேசத்தில் மொழி ஒரு பிரச்சனையாக அமைந்து விட்டது. நம்மை ஒன்றுபடுத்தி அறிவிற்கும் ஆக்கத்திற்கும் முன்னேறச் செய்த அரிய சாதனை ஆங்கில மொழியைச் சார்ந்தது. அதன் இடத்தை இந்தி மொழி பிடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு ஆங்கிலத்தை இழுத்துப்பிடிக்க முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்தைக் கைவிட முடியாது; பாரத நாடும் ஆங்கிலத்தைக் கைவிட்டால் நம் வளர்ச்சி குன்றுவது உறுதி. இருநூறு ஆண்டுகளாக நம் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் வளர்த்த ஆங்கிலத்தை விட்டுவிட்டால் நாம் ஒதுக்கப்பட்டவர்கள் ஆவது உறுதி. பிரதேச மொழிகளில் அந்தக் கருத்துக்களைச் சொல்ல முயல்வது வளர்ச்சியின் அறிகுறிதான், அதே சமயத்தில் ஒரு சிறந்த சாதனையை இழப்பதும் ஒரு பெரிய இழப்பாகும். மேல் மட்டக் குடும்பங்கள் இன்று ஆங்கிலத்தில் கல்வியறிவும் பேச்சு அறிவும் வளர்த்துக்கொண்டு வருகின்றன, அதே போக்கில் ஏனைய குடும்பங்களும் போட்டியிட்டு இயங்கிவருவதால் இன்று ஆங்கில போதனா மொழிகள் உடைய தனியார் கல்வி நிறுவனங்கள் இங்குப் பெருகிவருகின்றன.

இன்று இங்கு மொழிப் பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனையாகிவிட்டது. பெரும்பான்மை பேச்சு மொழியாகிய இந்தி இன்று இந்தியப் பொதுமொழியாக்கும் திட்டம் செயல்பட்டு வருகின்றது. அதை நாம் தடுக்க முடியாது. வட நாடு முழுவதும் இதனை அங்கீகரித்துவிட்டார்கள். ஏனைய தென்னிந்திய மொழிகள் இந்தி மொழிக் கல்வி பெற்று வருகிறார்கள். நாமும் அந்த அளவில் மொழிக் கல்வி பெற்றுவிட்டால் நாம் ஒரு பெரிய சாதனையை அடைந்துவிட்டோம் என்று கூறமுடியாது. எந்த மொழியாவது வளரட்டும்; பரவட்டும். ஆங்கிலத்தை எடுத்து எறியச் செய்யப்படும் முயற்சி நம்மை நாம் பின் தள்ளிக் கொண்டு செல்வதாக முடியும்.

நாம் அறிவு வேகத்தோடு போட்டியிட வேண்டியுள்ளது; கருத்துப் புதுமைகளைக் காணவேண்டியுள்ளது; அதற்கு ஆங்கிலம் அடிப்படை; நாட்டு வட்டார மொழிகள் பொது மக்களோடு அரசியல் வணிகம் அரசாங்க நடவடிக்கைகள் நடைபெற முனையும் முயற்சி வெற்றி பெற்று வருகிறது, இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முற்போக்கு, வளர்ச்சி, வட்டார மொழியில் அனைத்தும் இயங்குவது போற்றத்தக்க வளர்ச்சிதான். மேல் நிலையில் நுட்ப அறிவுக் கலை விஞ்ஞான நுணுக்கங்களை வெளிப்படுத்தும் மொழி ஆங்கிலம். அது ஆங்கிலேயர் நமக்கு விட்டுச் சென்ற அரிய செல்வம் என்பதை உணர முடிகிறது. ஆங்கில அறிவே இல்லாவிட்டால் நாம் அங்கு எதையும் அறிய முடியாது; பேச்சுத் தொடாபே இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேற்கும் கிழக்கும் இணைக்கும் பாலமாக இந்த ஆங்கில மொழி அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.