இதன் விலை - ரூபாய் மூவாயிரம்/அறிமுகம்

அறிமுகம்


திராவிட சமுதாயத்தின் சீரழிவுக்குக் காரணம் பார்ப்பனியம். பிறவியினாலேயே உயர்வு தாழ்வு கூறும் கொடுமை இந்தியத் துணைக் கண்டத்துக்கே ஒரு தனிச்சிறப்பு. உலகில் வேறு எங்கும் காணமுடியாத பெரும் புதிர் பார்ப்பனியம் !

பார்ப்பனியம் ஓர் வாழ்க்கை முறை. அந்த ஏற்பாடு உருவாக்கப்பட்ட கால முதல், உருக்குலையாமல், இன்றும் இளமையோடு நாட்டு மக்களின் நெஞ்சிலும், நாவிலும், நடத்தையிலும் நர்த்தனமாடிக் கொண்டு இருக்கிறது.

பொருள் இயல் கோட்பாடுகளும், அவைகளையொட்டி எழுந்த சமுதாய அமைப்புகளும் முதலுக்கும் முடிவிற்கும் உட்பட்டு, வேறு சில புதுப்புது பிறவிகள் எடுத்து உலகில் உலாவுகின்றன. ஆனால் பார்ப்பனியம் மட்டும் காலந் தரும் கிழத்தன்மைக்கு பலியாகாமல் பாரில் பகட்டாக, குகை வாழ்வு முதல் கோட்டையில் குடியேறிய காலம் வரையில் எப்படி வாழ முடிகிறது ? இன்றும் பார்ப்பனியத்தின் தன்மை இதுதான்.

இது சிந்தனைக்குரியது. சிந்திக்க அறிவு -- ஆற்றல் இரண்டும் தேவை. அறிந்ததை அனைவருக்கும் அறிவிக்க அஞ்சா நெஞ்சம் தேவை.

பார்ப்பனியம் சாகாமல், பிறந்த மேனியோடு இன்றும் சரசமாடிக்கொண்டு இருப்பதற்கு, கடவுள், கர்மம், மோட்சம், நரகம் என்ற கற்பனைச் சொற்களே மூல அரண்களாகும். இந்த அரண்கள் இடித்து நொறுக்கப்பட்டு, மக்கள் மனத்தில் படிந்துள்ள மாசு துடைக்கப்பட்டு, சமத்துவ விதை தூவப்பட்டாலன்றி திராவிடரின் நலிந்த வாழ்வு நீங்குவது முடியாததாகும்.

அந்தக்காலத்தில் பார்ப்பனிய அக்கிரமத்தை அழித்தொழிக்க, உக்கிரமாகக் காலத்திற்கேற்ற முறைகளைக் கையாண்டு, களத்திலே கடும்போர் புரிந்தவர்கள் பழிக்கப் பட்டனர்; இரக்கமற்ற நெஞ்சினர் என்று ஏசப்பட்டனர்; அரக்கர் என்று தூற்றப்பட்டனர்.

பார்ப்பனிய வாழ்க்கை முறையை உள்ளம் விரும்பி ஏற்றுக்கொண்டு, கட்டிக்காக்கக் கோலெடுத்த கோணல் மதியினரை, நாட்டு மக்களின் நல்வாழ்வு கெட ஏடெழுதிய ஏமாளிகளை, முறையே சனாதனப் பாதுகாவலர், மன்னர், மண்டலாதிபதி என்றும், நாயன்மார், ஆழ்வார், சன்மார்க்க சத்புருஷர் என்றும், புகழ்ந்தனர் எத்தர்கள். இவர்கள் எந்தக்காலத்திலும் பார்ப்பனிய இயந்திரத்தின் விசை முடிக்கிகள்.

நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை நிர்மூலமாக்க மனிதாபிமானம் கொண்டோரும், பாதிக்கப்பட்டோரும், போரிட படை திரட்டினால், அதனை அடக்கவேண்டும், என்ற நினைப்பும், நெஞ்சத்துடிப்பும் எவருக்கு உண்டாகும் ? உழைக்காமல் உல்லாச புரியிலே ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் நிலப்பிரபுக்களுக்குத்தானே நெஞ்செரிச்சல் தோன்றும்.

இது போலவே முதலாளித்துவ முறையை மாற்ற முற்போக்காளர்கள் மேற்கொள்ளும் முயற்சியைக் கெடுக்க ஆலை அரசுகள் தானே சல்லடம் கட்டி சண்டைக்குக் கிளம்புவர்?

இந்த நியாயப்படிதான் பார்ப்பனீய முறையை மாற்ற இறந்த காலத்திலும் சரி, எடுத்துக் கொண்ட, எடுத்துக்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிர்ப்பு குறிப்பிட்ட ஒரு வகுப்பினரிடமிருந்தே கிளம்பின--கிளம்புகின்றன.

பார்ப்பனீய ஏற்பாடு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கும்--பொதுவாகச் சில பல உயர் ஜாதிக்காரர்களுக்கும் பளபளப்பான வாழ்க்கையை, பாடுபடாமலும், பாடுபட்டாலும் சோர்வு தட்டாதபாடினாலும், கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, இந்தப் பார்ப்பனிய நச்சரவை நசுக்க, நல்லறிவாளர்கள் நாவசைத்தாலும், நான்கு எழுத்து எழுதினாலும், தங்கள் செவிகளில் நாராசம் காய்ச்சி ஊற்றுவது போல் தெரிகிறது பார்ப்பனத் தோழர்களுக்கு ! காலஞ்சென்ற சூரியநாராயண சாஸ்திரி போல் மேலும் பலர் தோன்றினாலன்றி, பார்ப்பனர் மீது காணும் குறைய வழி பிறக்காது.

அன்று எதிர்ப்புச் செய்தவர்கள் மதியற்ற மண்டலாதிபதிகளால், கழு ஏற்றப்பட்டனர்; கடுந்தண்டனைக்குள்ளாக்கப் பட்டனர். கால மாறுதலால் இன்றைய எதிர்ப்பாளர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும் சிறைவாசம், பண நாசம் என்ற தண்டனைகள் தரப்படுகின்றன, அதிகாரத்தின் துணையைக் கொண்டு.

திராவிடப் பெருங்குடி மக்கள், எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் எவ்வளவு சிறந்த திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களைப் பாராட்ட--அவர்களைக் குறித்து இரண்டொரு நல்லவார்த்தை கூற பார்ப்பனத் தோழர்கள் முந்துவது அறவே கிடையாது. சுற்றுச் சார்புகளுக்குக் கட்டுப்பட்டு ஓர் திராவிடரின் திறமையை எடுத்துப் பேசவேண்டிய நெருக்கடி ஏற்படும் பொழுதுங்கூட, "அவன் நல்லா நடிக்கத்தாஞ் செய்யிறான்--இருந்தாலும் நம்ம கொத்தமங்கலம் சுப்புகிட்ட அவன் என்ன செய்யிறது?" என்றுதான் பாராட்டுவர். இது திராவிடரின் திறமைக்கு ஒரு பார்ப்பனத் தோழர் மறைமுகமாகத் தரும் வசையாகும். நாட்டு நடப்பை ஆய்ந்து அறிந்தவர்களாலேயே இந்தப் பேருண்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். நிற்க,

'திராவிட நாடு' இதழில் அறிஞர் அண்ணா அவர்கள் இரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். ஓமந்தூர் இராமசாமியாரைக் கவிழ்க்க காங்கிரஸ் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்ததையும் அவர் தப்பிப் பிழைத்ததையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, அந்த இரு கட்டுரைகளும் வரையப்பட்டன. 4-4-1948, 18-4-1948 ஆகிய இரண்டு தேதிகளிலும் அக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கட்டுரைகள் வெளியான ஓராண்டு ஒரு திங்கள் கழித்து 25-5-1949ல் சென்னை காங்கிரஸ் ஆட்சி ரூபாய் 3000 ஜாமீன் தொகையாகக் கட்டவேண்டுமென்று, 'திராவிடநாடு' ஆசிரியர் அறிஞர் அண்ணாவுக்குக் கட்டளை பிறப்பித்தது. இந்த அநீதியைத் துடைக்க அண்ணா அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது வழக்குத் தொடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரதம நீதிபதி ராஜமன்னார், பஞ்சாபகேச சாஸ்திரி, சந்திரா ரெட்டி ஆகியவர்கள் 4-11-1949-ல் தீர்ப்பளித்துள்ளனர். அறிஞர் அண்ணாதுரை கட்டுரைகளில் குற்றமில்லை என்றும், ரூபாய் 3000 ஜாமீன் தொகையாகச் சென்னை காங்கிரஸ் ஆட்சி கேட்டது முறையல்ல என்றும் தீர்ப்பளித்தன.

விசாரணையின் போது, ஆட்சியாளர் சார்பில் வாதித்த அட்வகேட் ஜெனரலை நோக்கி, நீதிபதி பஞ்சாப் கேச சாஸ்திரி 'அந்த நாள் பார்ப்பனீயத்தை புகுத்தியவர்களைக் கண்டித்தால் இந்தநாள் பார்ப்பனர்களுக்குக் கோபம் வருவானேன்? என்று ஆணித்தரமாகக் கூட கேட்டுள்ளார். இதற்கு - மௌனம் தான் சர்க்கார் வக்கீலின் பதில்.

எந்தக் கட்டுரைகளுக்காக ரூபாய் 3000 ஜாமீன் கட்ட வேண்டு மென்று காங்கிரஸ் ஆட்சி கேட்டதோ, அந்த இரு கட்டுரைகளையும், 'குற்றமில்லை -- ஜாமீன் கேட்டது தவறு" - 'என்று கூறப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்பின் சுருக்கமும் சிறுநூல் வடிவாகத் தரப்படுகிறது.

கட்டுரைகளில் ஆட்சேபகரமானவை இவை இவை என்று காங்கிரஸ் ஆட்சி சுட்டிக்காட்டி இருந்த பகுதிகளுக்கெல்லாம் நட்சத்திரக் குறியிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் தொகை ரூ. 3000மாக- இருக்கவே, அதே தொகையை இச்சிறு நாலுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

இது ஓர் வரலாற்று ஏடு

பார்ப்பனீய வாழ்க்கை முறையைக் கண்டித்ததற்கே, காங்கிரஸ் ஆட்சி 'திராவிடநாடு' இதழுக்கு ரூபாய் 3000 ஜாமீன் கேட்டிருக்கிறது. பார்ப்பனர்களை நேரடியாக பல காலமாகவே பலபுலவர்கள் கண்டித்து வந்திருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் யாகம் செய்கிறார்கள். அதில் கடவுள் பெயரால் பசு சித்திரவதை செய்து கொல்லப்படுகிறது. இது கண்டு, பார்ப்பனர்களாலேயே வளர்க்கப்பட்டதாகக் கூறப்படும் ஆபுத்திரன், பார்ப்பனர்களைப் பார்த்து,

'நோவன செய்யன்மின்'

எனக் கடிந்துரைக்கிறான். இது மணிமேகலை.

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்கும் பொல்லாத வியாதியாம்
பார்கொண்ட வேந்தர்க்கும் பஞ்சமுமா மென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

இவ்வாறு கூறினவர் திருமூலர். திருமந்திரத்தில் உள்ளது இது.

'பாப்போடு பழகேல்'

இது பிற்காலத்து ஒளவையின் வாக்கு. இதுபற்றி விளக்கம் தந்திருப்பவர் காலஞ் சென்ற கப்பலோட்டிய தமிழா வ. உ. சிதம்பரம் பிள்ளை.

"பாப்புப் பெருத்தல்லவோ சோழ மண்டலம் பாழ்த்ததுவே”

இப்படி ஒரு புலவன், பார்ப்பனர்களின் செயல் கண்டு மனம் நொந்து, வாய்விட்டு, அலறி இருக்கின்றான்.

கம்பனோ ஆரியதாசன். அவன்கூடபார்ப்பனர் வாழ்க்கை முறை கண்டு வருந்தியுள்ளான்.

'முட்டிப்புகும் பார்ப்பாரகத்தை எட்டிப் பாராமோ' என்று ஏளனக் குரல் எழுப்பி உள்ளான் கம்பன்.

ஜாதி முறையின் கேடுகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் கபிலர் கதறி இருக்கிறார். அகவற்பாவாக அவர் சுட்டிக்காட்டுகிறார். திட்டவட்டமாக சிறிதும் ஒளிவு மறைவு இல்லாமல், ஜாதி முறையைப் புகுத்திய நல்லவர்களை,

"பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
நால்வகை சாதியை நாட்டினில் நாட்டினீர் நீர்”

காலஞ் சென்ற கவிபாரதியார் ஒரு பார்ப்பனர். வாழ் நாட்களில் எப்படி எப்படியோ வாழ்ந்தார். அவரும் பார்ப்பனர் எத்தகையப் போக்கினர் என்பதை வெட்ட வெளிச்சமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

"பேராசை கொண்டவனடா பார்ப்பான். அவன்
பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான்"

'ஆசை—அச்சம்' இந்த இரு பண்புகளிலும் பார்ப்பனர் உச்சத்தில் இருப்பவர்கள் என்று பாரதியார் சொல்லி இருக்கிறார்.

பார்ப்பனரின் பண்புகளை எடுத்துக்கூறும் இந்தப் பாட்டுகளையும், கூறிய புலவர்களையும் என்ன செய்வது? புலவர்கள் தான் மறைந்து விட்டார்கள் என்றாலும், ஏடுகள் இன்னமும் நாட்டு மக்களிடை நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?

"பார்ப்பனர் வீட்டுப் பசுமாடு போல" என்று எடுத்துக் கூறி, பார்ப்பனர்களின் கல் நெஞ்சை படம் பிடித்துக் காட்டுகிறார் நாடாளும் முக்கியஸ்தர் ஒருவர். அவர் பழங்குடி மக்களைச் சேர்ந்தவரும் அல்ல பரங்கித் துரையும் அல்ல, ஒரு முதல் தரமான பார்ப்பனர், பார்ப்பன இனத்தின் பாதுகாவலர். கண்ணன் காட்டிய வழியில் விழி வைத்து வாழ்க்கையை நடத்திச் செல்லுபவர். இம்மாகாண முதலமைச்சராக உள்ள சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரே, மேல்குறித்துள்ளபடி பார்ப்பனரைக் குறித்துக் குறை கூறியுள்ளார். பாம்பின் கால் பாம்பிற்குத் தானே தெரியும்? தன் இனத்தின் அருமை பெருமைகள் தனக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?

சில திங்களுக்கு முன் சென்னை பச்சையப்பன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேச வந்த ஆச்சாரியார், அந்த நேரத்தில் தனக்குள்ள நிலையை விளக்க மேற்குறித்துள்ள உவமையைக் கூறினார். அதற்கு நல்லதோர் விளக்கமும் தந்தார். அதாவது, வேளாண் மக்கள் தங்களுக்கு வேண்டிய பாலை மட்டும் கறந்து கொண்டு, மிச்சத்தைக் கன்றுக்குட்டிக்கு விட்டுவிடுவார்கள். கோமுட்டி மக்கள் பசுவின் இரண்டு காம்புகளை கன்றுக்குட்டிக்கே ஒதுக்கி விடுவார்கள். ஆனால் பார்ப்பனர்களோ கன்றுக்குட்டிக்கு ஒரு சொட்டும் விடாமல் பசுவை ஒட்டக் கறந்துவிடுவார்கள்--என்று பார்ப்பன மக்களின் உள்ளக்கிடக்கையை ஐயத்திற்கிடமில்லாமல் எடுத்துக் கூறியுள்ளார் ஆச்சாரியார்.

பார்ப்பார் வீட்டுப் பசுங்கன்று ஒன்று மற்றொரு கன்றைப் பார்த்து. 'பால் சாப்பிட்டிருக்கிறாயா; அது எப்படி இருக்கும்?' என்று கேட்குமாம்!

பார்ப்பனரின் இரக்கத் தன்மைக்கு ஆச்சாரியாரைக் காட்டிலும், இந்த முறையில் வேறு எவராலும் நற்சாட்சிப் பத்திரம் தரமுடியாது. ஆச்சாரியார் கூறிய இதே வாசகத்தை வேறு எந்தத் திராவிடராவது கூறி இருந்தால், இதற்குள் நில நடுக்கமே ஏற்பட்டு இருந்தாலும் ஏற்பட்டு இருக்கக்கூடும்!

சுவாமி விவேகாநந்தர் பார்ப்பனர்களைக் கண்டித்துப்பேசி இருப்பதைப்போல் இதுவரையில், நமது கட்சித் தோழர்களில் எவரும் பேசினது கிடையாது.

இப்படி ஒரு சமூகம் ஏன் ஒவ்வொரு காலத்திலும் நேரடியாகப் பழிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நல்ல முறையில் இப்போக்கினை மாற்றிக்கொள்ள, மாற்றி அமைக்கப் பார்ப்பன இளைஞர்கள் முன் வரவேண்டும்; அத்தகுநிலை இப்பொழுதே ஏற்பட்டு இருக்கிறது. தினம் தினம் வளர்ந்துகொண்டும் வருகிறது, மேலும் மேலும் வளர வேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பனிய வாழ்க்கை முறை தொலைந்து நாட்டில் ஜனநாயக வாழ்க்கை ஏற்பாடு மலர வழி பிறக்கும்.

அறிஞர் அண்ணாவின் இச்சிறு நூல் திராவிடர்களிடை புது மலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கத்தோடு வெளியிடப்படுகிறது. அன்பர்கள் ஆதரிப்பார்களாக.

இச்சிறு நூலை வெளியிடும் உரிமையை மனமுவந்து எனக்களித்த அண்ணா அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

வழக்கை திறமையாக வாதித்து வெற்றியைத் தேடித்தந்த பெருமைக்குரிய இரு வழக்கறிஞர்களான எப். ஜி. ஜகனாதன், துரைராஜ் ஆகிய இருவர்களையும் திராவிடர் என்றும் மறவார்.

வணக்கம் !!

அன்பன்
காஞ்சி. கல்யாணசுந்தரன்

சென்னை சர்க்கார்

பப்ளிக் (ஜெனரல்-எ) இலாகா

1931-வது ஆண்டு இந்திய பத்திரிகை (அவசரச்) சட்டத்தின் 7-வது பிரிவைச் சேர்ந்த (3)-வது உட் பிரிவின் படிக்கான நோட்டீஸ்.

செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வெளிவரும் "திராவிட நாடு" என்ற பத்திரிகையின் 1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4, 18-ந்தேதிய இதழ்களில் 1931-ம் ஆண்டு இந்திய பத்திரிகை அவசரச் சட்டத்தின் (1981-ம் வருடத்திய 23-வது மத்திய சட்டம்) நிபந்தனைகளின் படிக்கு பத்திரிகை ஜாமீன் கோரப்பெற்றிராதவை—மேற்படி சட்டத்தின் 4 (1) (யெச்) பிரிவின் கீழ் விவரிக்கப்படும் தன்மை வாய்ந்த விஷயங்கள் அடங்கியிருந்ததாக சென்னை சர்க்கார் கருதுவதால்,

மேற்படி சட்டத்தின் 7 (3)-வது பிரிவு தரும் அதிகாரத்தைக் கொண்டு மேற்படி பத்திரிகையின் வெளியீட்டாளராகிய ஸ்ரீ. சி. என். அண்ணாதுரை செங்கற்பட்டு மாவட்ட நீதிபதியிடம் 1949-வது ஆண்டு ஜூன் 25-ந்தேதி அன்றோ அதற்கு முன்போ ரூ.3,000 தொகையாகவோ அல்லது அதற்கு சமமான மத்திய சர்க்கார் பத்திரங்களாகவோ ஜாமீன் கட்டியாக வேண்டுமென்று மேன்மை தங்கிய கவர்னர் இதன் மூலம் உத்தரவிடுகிறார்.

(மே.த.கவர்னர் உத்தரவுப்படி)
(சி. கே. விஜயராகவன்.)
சர்க்கார் பிரதம காரியதரிசி.

ஒரு துளி !


"எவ்வளவு இன்சொல்லால்,
அன்பையும், சத்தியத்தையும் உத்
தமர் காந்தியார். போதித்தார்!
கோட்சே இதற்கே அவரை
கொல்லத் துணிந்தான் அல்லவா !
உத்தமர் உண்மைக்காக உயிரைத்
தந்தபோது, நாம் சாதாரண புகழை,
பதவியை, இழந்தால்தான் என்ன !
நஷ்டமல்ல நாட்டுக்கு.....விமோ
சனம் கிடைக்கும்."

அறிஞர் அண்ணா