இதழியல் கலை அன்றும் இன்றும்/இராஜாராம் மோகன்ராய் பத்திரிகைச்

422191இதழியல் கலை அன்றும் இன்றும் — இராஜாராம் மோகன்ராய் பத்திரிகைச்என். வி. கலைமணி

36

இராஜாராம் மோகன்ராய்
பத்திரிகைச் சுதந்திரப் போராட்டம்

(கொள்கைப் போராட்டக் கட்டுரை)


ராஜா ராம் மோகன் ராய் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று அரும்பாடு பட்ட முதல் இந்திய மேதை.

கணவன் இறந்தால், துணைவன் உடல் எரியும் சிதை நெருப்பிலேயே பெண்கள் துடிதுடிக்க எரிந்துச் சாம்பலாக வேண்டும் என்ற ‘சதி’ எனும் கொடுமையான மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்து இராஜா ராம் மோகன் ராய் போராடினார். (1829-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இராஜப் பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு வில்லியம் பெண்டிங் உதவியால் ‘சதி’ திட்டத்தைச் சட்ட விரோதமாக்கி வெற்றி பெற்றார்! சதி திட்டத்தை வீழ்த்திப் பெண்களுக்குரிய நீதியை நிலை நாட்டிய சீர்திருத்த மா வீரராக இராஜராம் மோகன்ராய் திகழ்ந்தார்!)

கணவன் இறந்த பிறகு பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் திட்டத்திற்காக அவர் போராடினார்.

பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று இராஜாராம் போராட்டம் செய்தார்.

பலமனைவிகள் திருமணத்தைச் சட்ட விரோதமாக்கிட ராம்மோகன் ராய் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவுறித்தினார்.

பெண்களை விலைக்கு விற்கும் மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்தும், ‘பெண் விடுதலை’ என்ற இயக்கப் போராட்டத்தை நடத்தியும், இராஜராம் மோகன்ராய் வெற்றி கண்டார்.

இந்து மதத்திலுள்ள உருவ வணக்க ஆராதனையைச் செய்து வந்த கல்கத்தா பிராமணர்களின் மூடப் பழக்கு வழக்கத்தை எதிர்த்துப் போராடினார்.

அதற்காக சமஸ்கிருத மொழியிலிருந்த கோனோப நிடதத்தையும், ஈசோட நிடதத்தையும் வங்காள மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்து அச்சிட்டு, மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்.

கல்கத்தா தெருக்கள்தோறும் பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டி, வேதங்களில் உருவ வணக்கம் உண்டா? நிரூபிக்கத் தயாரா? என்று பிராமணர்களுக்கு சவால் விட்டுக் கூட்டம் நடத்தினார். ‘வேதாந்த சாரம்’ என்ற நூலை ஆங்கிலத்தில் அச்சிட்டு இந்து மதத்தின் பெருமைகளை உலகறியச் செய்திடப் போராடினார்.

‘இயேசு நாதர் இறைவனல்லர் நம்மைப் போலவே அவரும் ஒரு மனிதர்; அவர் உபதேசங்கள் உயர்ந்தவை; அவற்றை ஏற்கலாம்; ஆனால், அவரைக் கடவுளாக வழிபடுவது தவறு’ என்று கூறி, கிறித்தவர்களை எதிர்த்துப் போராடினார்.

எனவே, இராஜாாராம் மோகன் ராய் வாழ்க்கையே ஒரு போராட்ட வாழ்க்கையாக அமைந்தது.குடும்பப் போராட்டம்; உறவின் முறையாரோடு போராட்டம்; பிராமணர்களோடு போராட்டம், கிறித்தவப் பாதிரிமார்களோடு போராட்டம்; இந்து மதப் புலவர்களோடு கொள்கை ஆய்வுப் போராட்டம்; இறுதியாக ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்துப் பத்திரிகைச் சுதந்திரத்திற்காக நடத்தியப் போராட்ட வெற்றி. இவ்வளவு போராட்டங்களையும் அவர் அறிவு ஒன்றை நம்பியே போராடி வெற்றி கண்டார்.

இறுதியாக, இராஜா ராம்மோகன் ராய் நடத்திய பத்திரிகைச் சுதந்திரத்தின் விவரத்தையும் இதோ பாருங்கள்; படியுங்கள்.

பத்திரிகைகளுக்குச்
சுதந்திரம் வேண்டும்

இருபது ஆண்டுகள் வரை மோகன் ராய் ஓயாமல் பத்திரிகைகளில் எழுதினார். அவர் எழுதிய நூல்களையும், ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும் கணக்கிட்டால் ஒரு தனி மனிதர் செய்த காரியங்களா இவை? என்ற மலைப்பு உண்டாகும்.

வங்காள மொழியில் அவர் ‘ஒருவனே தேவன்’ கொள்கைக்கான பிரார்த்தனைப் பாடல்களை இயற்றினார். அவருடைய உரை நடை மிகவும் எளிமையானது. ஆனால், வலிமை மிக்கது. நவீன வங்காள உரைநடைக்கு அவரே வழிகாட்டி; அடிமைப்பட்டுக் கிடந்த இந்நாட்டில் தேசிய உணர்ச்சி ஊட்டி பத்திரிகைகளைத் தோற்றுவித்த முதல்வர் அவரே. “இந்திய தேசியப் பத்திரிகைகளின் தந்தை” என்றே அவர் இன்றும் போற்றப்படுகிறார்.

முதல் பார்ஸீ வாரப் பத்திரிகையான ‘மிராத்-உல்-அக்பார்’ (அறிவுக் கண்ணாடி) அவரால் தொடங்கப்பட்டது. அதில் அரசியல் செய்திகளோடு விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு பற்றியக் கட்டுரைகளும் வெளி வந்தன.

கல்வித் துறை பற்றிய அவர் கருத்துக்களையும் அப்பத்திரிகை ஏந்தி வந்தது. அந்தப் பார்ஸீ பத்திரிகைக்கு முன்னால் அவர் வங்காளியில் ‘சம்வாத கௌமுதி’ என்று வாரப் பத்திரிகையை நடத்தினார்.

மக்களுடைய மனோ பாவத்தை வெளியிடுவதும், பிரதிபலிப்பதும், உருவாக்குவதும் பத்திரிகைகளின் பொறுப்பு. இப்பணியை மோகனர் செவ்வையாகச் செய்து வந்தார். அப்போது, இது அடிமை நாடுதானே?

ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் வழங்க விரும்பவில்லை. தேசியக் கருத்துகளுடன் வெளியாகும் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்பினார்கள்.

1823-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் நாள் ‘பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை’ இயற்றி ஆங்கிலேயர் அமலுக்குக் கொண்டு வந்தனர்.

தம்முடைய பார்ஸீ வாரப் பத்திரிகையில் மோகனர் அச்சட்டத்தை கண்டித்துப் பல கட்டுரைகள் எழுதினார். அதன் பயனாக ஆட்சியாளர்களின் வெறுப்பை அவர் சம்பாதித்துக் கொண்டார். அவர் தனது பார்ஸீ பத்திரிகையை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், இராஜாராம் மோகன் ராய் அவர்களின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, 1835-ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் ஓரளவு தளர்த்தினார்கள்.