இதழியல் கலை அன்றும் இன்றும்/சொற்பொருள் உச்சரிப்பைத் தவறின்றி எழுதலாமே?



29

சொற்பொருள் உச்சரிப்பை
தவறின்றி எழுதலாமே?

முதல் அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில், அரசு திட்டங்கள் அறிவிப்புக் கூட்டங்களில் பத்திரிகையாளர்களை ஏன் புறக்கணிக்கின்றார் செல்வி ஜெயலலிதா என்பதற்கு, அவர் என்ன காரணம் கூறினார் என்பதைச் சிந்திக்கும்போது, நமக்கெல்லாம் மனவேதனை சுனாமி அலைகளைப் போலச் சுழன்றடிக்கின்றது? அப்படி என்ன அறிவித்து விட்டார் என்கிறீர்களா?

செல்வி. ஜெயலலிதா
கூறிய காரணம்!

‘செய்தி சேகரிக்க வருவோர்களுக்கு இங்லீஷ் தெரிந்தால் தமிழ் எழுத வரவில்லை; தமிழ் தெரிந்தால் ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை. இதனால் ஒன்றுகிடக்க ஒன்று செய்தியாக வெளிவந்து குழப்பம்தான் உண்டாகின்றது’ என்றார்.

எவ்வளவு பெரிய இழுக்கு இது பத்திரிகைச் செய்தியாளர்களுக்கு என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சுனாமி அலைகளது ஆபத்து புரியும். இது மட்டுமன்று.

செய்தியாளர்களில் பலருக்கு ‘ழ’ கர உச்சரிப்பே சரியாக சொல்லத் தெரியவில்லை. வாழை என்பதற்கு வாளை என்றும் பழம் என்பதற்கு பலம் என்றும், மதுரையை மருதை எனவும், குதிரையைக் குருதை எனவும் உச்சரிப்பவர்களும்: ‘ண’கர, ‘ன’கர, ‘ள’ கர, ‘ல’கர, ‘ழ’கர பேத உணர்வுகைள உச்சரிக்கத் தெரியாதவர்களும் இன்றும் பத்திரிகைத் துறையில் இருக்கிறார்கள்.

அவர்கள் தென் மாநில சாதாரணமான மனிதர்களாக இருந்தால் பரவாயில்லை; பத்திரிகையாளர்களாக, செய்தியாளர்களாகப் பணி புரிகிறார்களே! அதனால்தான் அக்கறைப்பட வேண்டிய அவசியமுள்ளது. அவர்களைக் கூறித் தவறில்லை. இளமைக் காலக் கல்வியைக் கற்றுக் கொடுத்த ஆசான்களும், அத்தகையவர்களே காரணம், மண்மொழி மாண்பு அது!

செய்தியாளர்களாக வந்து விட்டதற்காக அவர்கள் Linguist பன்மொழி அறிஞராகவோ Lingulate என்ற ‘நா’ பல் ஒலி அறிந்தவராகவோ, Phonetics ஒலியியல் தெரிந்தவராகவோ, Phonetician ஒலியியல் வல்லுநராகவோ Lingual, ‘ட’கர, ‘ண’கர போன்று ‘நா’ விடைப் பிறக்கும் ஒலி நூலுணர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை; எதிர் பார்க்கவுமில்லை.

செய்தியாளர், ஆசிரியர் பணிகளுக்கு வந்த பிறகாவது, தமிழ் வல்லாரிடையே எழுத்தொலிப் பிறப்புகளைப் பற்றி, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? காரணம், பத்திரிகைத் துறை பணிகளாயிற்றே என்பது தான் நமது ஆசை! அதனால்தான் கூறுகின்றோம்.

எனவே, இப்படிப்பட்டவர்கள் செய்தியாளராகச் சென்று தவலை போயிற்று என்ற சொற்றொடர்களின் முதல் சொல்லில் ‘வ’ கரத்தை மறந்து விட்டால் என்ன குழப்ப வேதனைகள் சூழுமோ, அந்த நிலைச் செய்தியிலும் தன்னை மறந்து ஏற்பட்டு விடக்கூடாதே என்பதாலும், தமிழ்நாட்டில் ‘ழ’கர, ‘ண’கர ‘ல’கர, ‘ள’கர வித்தியாசங்கள் விநாச விளைவுகளை விளை வித்திடக் கூடாது என்பதாலும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புகார் தமிழ்ச் செய்தியாளர்கட்கும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற தொழில் அபிமானத்தாலும்தான், இந்தப் பகுதியை இங்கே அவர்கள் கவனத்துக்கு நிலை நாட்ட விரும்புகிறோம்! காரணம், நாமும் ஒரு மூத்த செய்தியாளன், பத்திரிகை ஆசிரியன், 55 ஆண்டுக் கால அனுபவம் உள்ளவன் என்பதால் இங்கே எழுதுகின்றோம். நிறுத்தக் குறிகள்

தற்காலச் செய்தியாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் எழுதும் வேகத்தில் எங்கெங்கே என்னென்ன நிறுத்தற் குறிகளை வைக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுகிறார்கள். அந்தக் குறிகள் இல்லாமையால், சுக்கு, மிளகு, திப்பிலி என்று படிக்க வேண்டிய வாசகங்கள் ‘சுக்குமி, ளகுதி, ப்பிலி’ என்று அனர்த்தமாகப் படித்துக் குழப்பம் அடையும் நிலை உண்டாகின்றது. அதனால், நிறுத்தக் குறிகளை எழுதுவதற்கு இது ஒரு பயிற்சியாகவும் இருக்குமல்லவா?

நாம் பேசும்போது கருத்து முடிகிற இடத்தில் பேசுவதைக் கொஞ்சம் நிறுத்துகிறோம். கருத்து முடிந்தாலும் சரி, முடியாமல் போனாலும் சரி, சில இடங்களில் நிறுத்தம் செய்கிறோம். கேள்வி எழுப்பும் போதும், ஆச்சரியப்படும் போதும் பேசும் பேச்சைக் கொஞ்சம் இழுத்து அல்லது எடுத்து நிறுத்துகிறோம்.

பேசும்போது உண்டாகும் இந்த நிறுத்தக் காலத்தை, எழுத்தில் சில குறிகள் போட்டுக் காட்டுகிறோம். இவைதான் நிறுத்தற் குறிகள் ஆகும்.

முற்றுப் புள்ளி (.)

எழுதும் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்காக, முற்றுப் புள்ளி (.) வைக்கின்றோம். இந்த முற்றுப் புள்ளி வைத்த இடத்தில் நான்கு மாத்திரை நிறுத்த வேண்டும் என்பது பொருளாகும். இது முற்றுப் புள்ளிக்குரிய கால அளவு.

மாத்திரை என்றால் என்ன? இதைச் செய்தியாளர்கள் பள்ளிக் கல்வியில் கற்ற ஒன்றுதான். ஆனால் அது, மனதை விட்டு மறைந்திருக்கக் கூடும்.

எனவே, மாத்திரை நேரம் என்றால், விரலை சொடுக்கும் அல்லது நெட்டை ஒடிக்கும் ஒசை வரும் நேரம். அல்லது கண் இமை, இமைக்கும் நேரம். இந்த நேரம் தான் மாத்திரை எனும் நேரத்தின் கால அளவு. எனவே, முற்றுப் புள்ளி உள்ள இடத்தில் நான்கு முறை கண் இமைகளை மூடி மூடி திறக்கும் நேரம் நிறுத்த வேண்டும். அதுதான் மாத்திரை எனும் கால அளவு.

மற்ற நிறுத்தற் குறிகளுக்கு அளவு, முற்றுப் புள்ளிதான் மூல அளவை நேரம். அந்த மாத்திரை அளவைக் கொண்டுதான்

முக்காற் புள்ளி :

அரைப்புள்ளி ;

காற்புள்ளி,

ஆகிய நிறுத்தற் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன.

இந்த முற்றுப் புள்ளியை வாக்கியம் முடிந்தவுடன் வைக்க வேண்டும். ஒருவர் முகவரி முடிக்கப்படும் இடத்தில் இடவேண்டும். சொற் குறுக்கங்களின் முடிவு. (திரு. இது திருவாளர் என்ற சொல்லின் குறுக்கம். இந்தக் குறுக்கம் முடிவில் (.) புள்ளியிட வேண்டும்.

ஒரு பெயரை எழுதும்போது, பெயர்களுக்குரிய முன்னெழுத்துக்களின் பின், எடுத்துக்காட்டாக கி.மா.கோ. ராஜன், நா.வா. கலைமணி என்று எழுதும் போது முற்றுப் புள்ளி மேலே வைத்திருப்பதைப் போல இடவேண்டும்.

முக்காற்ப் புள்ளி (:)

உட்பிரிவுகள், வகைகள், சிறு விளக்கங்கள், மேற்கோள்கள் போன்றவற்றிற்குரிய துணைத் தலைப்புகளுக்குப் பின் முக்காற்புள்ளி : இடப்பட வேண்டும். இதற்கு நிறுத்தும் கால அளவு மூன்று மாத்திரைகள். அதாவது மூன்று முறை கண் இமைக்கும் நேரம் கால அளவு. எடுத்துக்காட்டு :-

சமுதாயச் சீரழிவுக்குக் காரணங்கள் :
கலைஞரின் உரைச்சுருக்கம் :
தோல்விக்குரிய காரணங்கள் வருமாறு :

அரைப்புள்ளி (;)

பல பயனிலைகள் ஒரு வாக்கியத்தில் வரும்போது முடிவாக வருகின்ற பயனிலையைத் தவிர, வாக்கியத்தினுள் வருகின்ற மற்ற பயனிலைகளுக்குப் பின் அரைப்புள்ளி இடப்படுகின்றது.

எடுத்துக்காட்டுகளும், குறிப்புரைகளும், குறிப்பெண்களும், எழுதப்படும்போது, கருத்தளவில் ஓர் உட்பகுதி முடிகின்ற இடத்திலும் அரைப்புள்ளி ஒரு வாக்கியத்தின் முடிவை அல்லது குறிப்புக்களின் முடிவைக் காட்டுவதன்று; தொடர்ந்து செல்லுகின்ற ஒரு கருத்தின் உட்பிரிவின் முடிவைக் காட்டுவது. இதற்குரிய கால அளவு இரண்டு மாத்திரைகள்.

எடுத்துக்காட்டு :-

1. சிவகவி முருகனை நோக்கிச் சென்றார்; அவரைப் பாடினார் : அருள் பெற்றார்; மற்றவர்கட்கும் வழிகாட்டினார்.

2. பலா வேர் விறகிற்கு ஆம்; மரப்பகுதி பலகைக்கும் ஆம்; கிளைகள் விட்டத்திற்கு ஆம்; பழம் உண்பதற்கு ஆம்.

காற்புள்ளி (,)

ஓரினத்தை அடுத்த பலவற்றை அடுத்தடுத்து எழுதும் போதும், எண், பெயர், முற்று, எச்சம் ஆகிய இடங்களில் பொருள் புரிவதற்காக நிறுத்தம் நிகழ வேண்டும் போதும், ஆனால், ஆதலால், ஆயின், மற்ற, என்பன போன்ற இடைச்சொற்களின்பின் நிறுத்தல் நிகழ வேண்டும் போதும், காற்புள்ளி வைக்க வேண்டும். காற்புள்ளி கால அளவு ஒரு மாத்திரை

எடுத்துக்காட்டு :-

1. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய இவைகள் ஐந்தும் ஐம்பெருங்காப்பிய நூல்களாம்.

2. திருக்குறளில் ‘133’ அதிகாரங்களும், திருவள்ளுவர் பெருமானால் எழுதப்பட்டவை.

3. அன்பும் அருளும், பண்பும் அன்பும், சுத்தமும் அசுத்தமும், விண்ணும் மண்ணும், திருக்குறள் நூலில் பின்னிக் கிடக்கின்றன. ஆனால், வீடுபேறு இல்லையே, என்று ஆன்மீகிகளில் பலர் கூறுகின்றார்கள்.

கேள்விக் குறி?

கேள்வியைச் சுட்டிக் காட்டும் வாக்கியத்தின் கடைசியில் வினாக்குறி போடப்படுகின்றது. இதற்குரிய கால அளவும் முற்றுப் புள்ளியைப் போலவே நான்கு மாத்திரைதான். ஆனால், கேள்வி கேட்பவன் தான்பேசும்போது, அந்தக் கேள்விக்குப் பதில் எதனையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்காமல் பேசுகின்ற நிலையில்தான் - இந்தக் குறிக்கு இவ்வளவு மாத்திரை நேரம் உரியது. விடை எதிர்ப்பார்க்கப்பட்டதாயின், இதற்கு மாத்திரை அளவு இல்லை.

எடுத்துக்காட்டு :-

1. யானோ அரசன்? யானே கள்வன்?

2. எட்டுத் தொகை நூல்கள் எவை?

ஆச்சரியக் குறி!

இகழ்வின் கண்ணும், உயர்வின் கண்ணும், விளியின் கண்ணும் வியப்புத் தோன்ற வருகின்ற சொல்லின் அல்லது சொற்றொடரின் இறுதியிலும் இந்தக் குறி வைக்கப் படுகின்றது. இதற்கும் நான்கு மாத்திரையே அளவு என்றாலும், முற்றுப் புள்ளியைப் போலவே நான்கே மாத்திரைதான் என்ற அளவு இல்லை.

எடுத்துக்காட்டு :-

தேரா மன்னா! செப்புவ துடையேன்!
யானே கள்வன்!
கண்டேன் கற்பினுக் கணியைக் கண்களால்!
தீ! தீ! தீ!

மேற்கோள் குறி “–”, ‘–’

ஒருவர் கூறிய சொல்லை மேற்கோளாகக் காட்ட வேண்டுமென்றால், மேற்கோள் குறிகள் இடப்படுகின்றன. கட்டுரையின் இடையில் தனியாகச் சிறப்பித்துத் காட்டப்பட வேண்டிய எழுத்து, சொல், சொற்றொடர் ஆகியனவும், மேற் கோள் குறிகளைப் பெறுகின்றன. முன்னதற்குப் பெரும்பாலும் இரட்டைக் குறிகளும், பின்னவற்றிற்குப் பெரும்பாலும் ஒற்றைக் குறிகளும் இடப்படும்.

மேற்கோளுக்குள் மேற்கோள் வரவேண்டுமென்றாலும் ஒற்றைக் குறிகள் இடப்படுகின்றன. இந்த முறைக்கு மாறாக மேற்கோள் குறி இடுவதும் உண்டு.

எடுத்துக்காட்டு :-

1. “யானோ அரசன்? யானே கள்வன்!” என்று அமைந்தான் பாண்டியன்.

2. வடமொழி நூலார் உவமையை ‘உபமானம்’ என்பர்.

3. “இலண்டனுக்குச் சென்றேன். ‘நீர் இந்தியரோ?’ என்று கேட்டார். ஓர் செவ்விந்திய நண்பர்”, என்று அவர் கூறினார்.

4. ‘டில்லிக்குச் சென்றேன். “நீர் சென்னை வாசியோ?” என்று கேட்டார் ஒரு ஆக்ரா நண்பர்’ என்று அவர் கூறினார்.

பிறைக் குறிகள் ( ), [ ]

வாக்கியங்களின் இடையிடையே சிறு விளக்கங்கள் கூறப்படும்போதும், உட்பிரிவுகளுக்கான எண் வரிசைகளுக்கும், மேலும் பிறவற்றிற்கும் பிறைக் குறிகள் போடப்படுகின்றன. பெரிய உட்பிரிவுகளுக்கு []இத்தகைய குறிகளும், சிறிய உட்பிரிவுகளுக்கு ( ) இத்தகைய குறிகளும் இடப்படுகின்றன. இவற்றை ‘அடைப்புக் குறிகள்’ எனவும் கூறலாம்.

எடுத்துக்காட்டு :

(1) தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலத்தில் (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) தமிழில் அரிய காப்பியங்கள் தோன்றலாயின.

(2) அவை யாவன :


(1) ..........
(2) ..........
(3) ..........

(3) தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலத்தில் [கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் (கம்பர்) 12-ஆம் நூற்றாண்டு வரை] தமிழில் அரிய காப்பியங்கள் தோன்றலாயின.

பத்தியமைத்தல்
(Paragraph)

கட்டுரை முழுவதும் ஒரே துண்டாக எழுதப்பட்டிருக்காது. தொடர்ச்சியாகச் செல்லும் வரிகள். ஆங்காங்கு உடைக்கப்பட்டுக் கட்டுரை பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

பல வாக்கியங்கள் சேர்ந்த சிறுசிறு பிரிவுகளாகக் கட்டுரை அமைந்திருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது ஒரே தன்மை வாய்ந்த கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் பத்தி (Paragraph) என்று பெயர்.

புதிதாக பாரகிராப் துவங்குவதாக இருந்தால், புதுக் கருத்துத் தொடங்க வேண்டுமானால், அதற்கான இந்தக் குறியீட்டை
போட வேண்டும.

பத்திகள் இல்லாத கட்டுரையில் ஒழுங்காகக் கோவை செய்யப்பட்ட கருத்துக்கள் அமைந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. பத்திகள் கட்டுரையைப் பார்வைக்கு அழகு செய்கின்றன. படிக்கின்றவருடைய மனத்திற்கும், கண்ணிற்கும் தளர்ச்சி ஏற்படாமல் காக்கின்றன. அதனால் பத்தி பத்தியாகக் கட்டுரையை பிரித்து எழுத வேண்டும்.

எனவே, எழுதும்போது நிறுத்தற் குறிகளை மறந்து விடாமல் இட்டு, பத்திப் பத்தியாக, அழகாக, படிப்பதற்குத் தளர்ச்சி உண்டகாமல் செய்தியாளர்களும், ஆசிரியர்களும் எழுதப் பழகப் பயிற்சி பெறுவது நல்லதல்லவா?