இதழியல் கலை அன்றும் இன்றும்/நூல்முகம்
நூல் முகம் | ||
நிமிடத் துளிகள் தோறும் உலகில் எண்ணற்ற நிகழ்வுகள் நிகழ்கின்றன. இவற்றில் சிக்கிய மனிதர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு, இவை நல்லன, தீயன என்று குறிப்பிடப் பெறுகின்றன.
சிலர் இவற்றைக் ‘காலத்தின் கோலம்’ என்ற திறனாய்வுப் பெயரைச் சூட்டுகிறார்கள்.
சிந்தனையாளர்கள், கவிஞர்கள் - இதனைக் ‘காலச் சக்கரம்’ என்பர்! இந்தக் கால வெள்ளத்தில் நான் தோன்றிய பத்திரிகைத் துறையில் ஏறக்குறைய 55 ஆண்டு காலமாகச் சுழன்று வருகின்றேன். அந்தச் சுழற்சியில் ஒரு சுற்றுதான் “இதழியல் கலை, அன்றும் - இன்றும்” என்ற இந்த நூல்.
இந்த நூலில் எனது முழு அனுபவங்களையும் எழுதவில்லை. எழுதினால் அது வாழ்க்கை வரலாறு என்ற பெயரைப் பெற்றுவிடும்.
ஆங்காங்கே வருகின்ற சம்பவங்களுக்கேற்ப சில குறிப்புக்களை மட்டுமே வழங்கியுள்ளேன். அனுபவம் தேவை என்போர் பயன்படுத்திக் கொள்ளலாம் - இல்லையா?
இளம் தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி நூலாக - இந்த நூல் பயன்பட வேண்டும் என்பது எனது ஆசை!
ஒரு பத்திரிகையாளருக்கு என்னென்ன அநுபவங்கள் தேவையோ, அவற்றை ஓரளவுக்கு நான் வழங்கியுள்ளேன். பக்கங்களைப் புரட்டி, தலைப்புகளை மட்டுமே மேலோட்டமாகப் பார்ப்போருக்கு நான் கூறுவதன் உண்மை புரியும்.
என்னதான் எழுதினாலும், உண்மையை ஒப்பிப் பாராட்டுவோர் அத்திப் பூ போன்றவர்களே! இல்லையானால், “ஆனந்த விகடன்” பத்திரிகையில் “பாரதி உலகக் கவியல்ல; அவர் பாடலில் வெறுக்கத் தக்கவை உள்ளன” என்று “கல்கி” எழுதுவாரா?
இவ்வாறு எழுதிய அந்த நேரத்து மூத்தப் பத்திரிகையாளரான கல்கிதான், எட்டயபுரம் பாரதி மண்டபத்தை எழுப்பி விழா எடுத்திடக் காரணராகவும் இருந்தார். காலச் சக்கரம் எப்படி மாறி மாறிச் சுழல்கிறது பார்த்தீர்களா?
‘கல்கி’ எழுதியதைக் கண்ட பாரதிக்குத் தாசன் சும்மா இருப்பாரா? ஏந்தினார் எழுது கோலை! பாரதியைத் தாழ்வாக மதித்தவரைப் பார்த்து, “பாரதி உலக கவி, அவர் ஒட்டைச் சாண் நினைப்புடையாரல்லர், ஐயர் கவிதைக்கு இழுக்கும் கற்பிக்கின்றார். அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டா? பாரதி சிந்துக்குத் தந்தை; குவிக்கும் கவிதைக் குயில்; செந்தமிழ்த் தேனீ; இந்நாட்டினைக் கவிக்கும் பகையைக் கவிழ்க்கும் முரசு; நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ; திறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன்; தமிழால் பாரதி தகுதி பெற்றார்; தமிழ், பாரதியால் தகுதிபெற்றது” என்றார்!
ஒருவன் எழுத்தைப் பாராட்டவும் “வல்வில் ஓரி அறிவு வேண்டும்”. கவிஞன் இனம் தானே கவிஞன் அருமையைப் பெருமையாகப் பேச முடியும்? இல்லையா?
அதனைப் போல, இந்த நூலையும் நாளை ஒருவர் குறை கூற முன்வரலாம். அவர் யார் தெரியுமா? ‘இதழியல் கலையை அன்றும் - இன்றும்’ முழுமையாக அறிய முயற்சி செய்யாதவரே!
எந்தத் துறையில் ஒரு பத்திரிகையாளன் திறமை பெற்று சகலகலா வல்லவனாக வேண்டுமோ, அந்தத் துறைக்கான கட்டுரைகளைத் தேடிக் கொடுத்துள்ளேன். ஆழ்ந்துப் படித்தால் ஓரளவாவது பயன் கிடைக்கும்.
பத்திரிகை நடத்துவது எப்படி? என்பதற்கான வரலாற்றையும் வழிகாட்டியாக வழங்கி இருக்கிறேன். அதற்கேற்ப அனுபவம், பெற்றால், நிச்சயமாக ஒவ்வொரு தமிழன்பரும் பத்திரிகை ஆசிரியராகலாம்; புகழ் பெறலாம்; ஏன் நாளை இந்த நாட்டைக் கூட ஆட்சி செய்யலாம் அல்லவா? அதற்கு சான்றுகளா இல்லை? நூலைப் படியுங்கள் பலர் இருப்பார்கள்!
இவ்வளவு ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் பத்திரிகை ஆசிரியர்கள் தானே!
நாட்டை ஆளாவிட்டாலும் பரவாயில்லை; உலக அறிஞர்கள் ஒவ்வொருவரும் பத்திரிகை வரலாற்றில் எவ்வாறு புகழ்பெற்றச் சாதனையாளர்களாக இன்றும் வரலாற்றில் காட்சி தருகின்றார்கள் என்பதற்காகவாவது, ‘இதழியல் கலை, அன்றும் - இன்றும்’ என்ற இந்த நூலைப் படித்துப் பாருங்கள்!
வாசகர் பெருமக்கள் தங்களது நிறைவுக் கருத்துக்களை எனக்கு எழுதியனுப்பினால், நான் எனது குறைவை நீக்கி, அடுத்த பதிப்பில் திருத்தி, சேர்த்துக் கொள்கின்றேன். நன்றி,
அன்பன்
என்.வி. கலைமணி