இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகைகள் தோன்றும் முன்பு

422037இதழியல் கலை அன்றும் இன்றும் — பத்திரிகைகள் தோன்றும் முன்புஎன். வி. கலைமணி


2

பத்திரிகைகள் தோன்றும் முன்பு
செய்திகள் எப்படிப் பரவின!


லக மக்கள் ஆங்காங்கே பல் குழுக்களாகக் கூடி வாழ்ந்த காலத்தில் இருந்தே, ஓரிடத்திலுள்ள வாழ்வியல் சிறப்புச் செய்திகளை மற்றோரிடத்திற்குப் பரவிட, பரப்பிட, பரிமாறிக் கொண்டாடிடும் திட்டங்கள் பல இயற்கையாகவே நடந்திருக்கின்றன.

ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை, வேறோர் நாட்டிலே உள்ள மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அதற்கான ஓர் ஆர்வம் இருக்காதா என்ன?

அவரவர் பேச்சு மொழிகள், அதாவது இலக்கிய, இலக்கணமுடையத் தாய் மொழிகள் உருவாவதற்கு முன்பே, மேற்கண்ட ஆர்வம் எழத்தானே செய்யும்? ஏன்? எழுந்துள்ளதே!

அந்த விருப்பத்தை ஊமைச் செய்திகள் மூலமாக, ஒலிகளின் வாயிலாக மக்கள் குழுக்கள் வாழும் இடங்களில் கொட்டும் பறையோசை சார்பாக அவர்கள் அடையாளம் காட்டிக் கொண்டு பழக்கப்பட்டிருந்தார்கள்.

வேறு சில நாடுகளில் - கல்வெட்டுகள், கற்றூண்கள், கற்பாறை எழுத்துச் செதுக்கல்கள், கற்கோயில் சிற்ப ஓவியங்களில் - தங்களது மொழியில் கருத்துக்களை எழுதிச் சுற்றுச் சூழல்களில் வாழும் பாமர மக்களைக் கண் காட்சிகள் மூலமாகக் காணச் செய்து; தங்களது எண்ணங்களை அரியதோர் செய்திகளாக ஆங்காங்கே பரப்பி வந்தார்கள்.

சீனா போன்ற நாடுகளில் அங்குள்ள மக்கள் மரப்பலகைகளிலே தங்களது எண்ணங்களை எழுத்தாக்கினார்கள். பட்டுத் துணிகளில் பாதரச சல்பேட் Mercury Sulphate என்ற கலவை மையால் சீன மொழி எழுத்துக்களை எழுதி மக்களிடம் அவரவர் எண்ணங்களைச் செய்திகளாக நடமாட விட்டதாகக் கூறுகிறது சீன வரலாறு.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் அறிவின் மிக்க சான்றோர்களால், அறிஞர்களால், ஓவியர்களால், சிற்பிகளால், புலவர்களால்; அரசு சார்பாகவும், தனிப்பட்டோர் தலைமையிலும் எழுதப்பட்ட எண்ணங்கள் ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் வலம் வந்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கி.மு. ஆறாம் நூற்றாண்டு மத எழுச்சி உருவான காலம். சீனாவின் கன்ஃபூசியம், ஈரானில் ஜொராஸ்டிரம், கிரீசில் பெர்மைசும், கிரேக்க அயோனிய தீவில் ஹொரிக்ளிடசும், ஏதென்சில் சாக்ரட்டீசும் புதிய புதிய தத்துவக் கருத்துக்களை அவரவர் தொண்டர்களோடு ஊரூராகத் தெருதெருவாகப் பரப்பட்ட நேரத்தில், அந்த சமயத் தொண்டர்கள் இந்தியாவிற்குள்ளும் வந்து, இங்குள்ள அறிஞர்களிடம் அவரவர் மதச் செய்திகளைப் பரப்பினார்கள்.

இந்து மதம் என்று ஒன்று அப்போது கிடையாது என்றாலும், அதற்குச் சநாதனிகள், வைதீக மதம் என்று பெயரிட்டிருந்தார்கள். ஆனால்: 1799-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் இங்குள்ள நீதி நெறிகளைத் திரட்டி, அதற்கு ‘இந்து லா’ Hindu Law என்று ஆங்கிலத்தில் பெயரிட்டார். அதற்குப் பிறகுதான் இந்து மதம் விளம்பர மானது. (இந்தியாவில் - உலகியல் உணர்ச்சிகளில் போதிய அக்கறை காட்டாமல், ஆன்மீக சாதனைகளில் மட்டுமே வெற்றியை நிலை நாட்ட அரும்பாடுபட்டது. இமயம் முதல் குமரியின் முக்கடல் எல்லை வரை வைதீக மதம் பரவி வாழ்ந்து ஆன்மீகச் செல்வாக்கு மேம்பெற்றிருந்தது.

இந்து மதத்தில் உள்ள சமய, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்ததோடு இராமல், அவற்றை அகற்றிடப் புத்த சமயமும், சமண சமயமும் போராடும் சீர்திருத்த இயக்கங்களாகவே தோன்றி, பிறகு மதங்களாகவும் அவை மாறி விட்டன.

இவ்வளவையும் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், எந்த ஒரு பத்திரிகையும் தோன்றாத அந்தக் காலத்தில் - அதாவது ஆதி காலத்தில், இதழியல் என்ற கருவே எந்த அறிஞர் குழுக்களின் மூளைகளிலும் சூலாகாத மலட்டு அறிவு படர்ந்திருந்த நேரத்தில், இந்த மத எழுச்சிக் கருத்துக்கள், இந்தியாவில் அவரவர் அடியவர்களால் மதநெறி பரப்பல் என்ற செய்திகளாக பரவிக் கொண்டிருந்ததை எவராலும் மறுக்க முடியாது; மறக்க முடியாது.

வெளிநாடுகளிலே உருவாகி வளர்ந்து வந்த சமையங்களும், அவரவர் மத ஊழியர்களை இந்தியா மண்ணுக்கு அனுப்பி தத்தம் நெறிகளை அச்சமின்றிப் பிரச்சாரம் செய்து வந்த செய்திகளையும், உலக வரலாறு நமக்கு உரைத்துக் கொண்டுதான் உலா வருகின்றது.

அந்த உலகச் சமய உருவாக்கப் பண்பாடுகளின் வளர்ச்சிகளில் அவ்வப்போதைய காலச் சூழல்களுக்கேற்ப பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. குறிப்பாக : தனி மனிதனுடைய உணர்வுகளும், செயல்களும், பழக்க வழக்கங்களும், பண்பாட்டு வளர்நிலைகளாவது ஒருமுறை!

தனி மனிதர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உருவாகும் சமூகங்களின் பண்பட்ட முன்னேற்ற்ம் அடுத்த நிலை.

சமூகங்கள் பல சேர்ந்து ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இயங்கும் பொழுது உருவாகும் வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலை உணர்வு, சிந்தனை முதிர்ச்சி, ஆன்மீகம், எல்லாமே இணைந்து, ஒருவகைச் சமுதாயச் சிந்தனையாக வெளிப்படுத்துதலே ‘பண்பாடு’ எனும் மூன்றாம் நிலை ஆகும்.

எனவே, முரசு கொட்டியும், ஆராய்ச்சி மணி அடித்தும், கொம்பூதியும், கல்வெட்டு, கற்சிற்பங்கள், கற்கோயில்கள், ஃபேபரஸ் நாணற் இலைகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள், மரப் பலகை எழுத்துக்கள், பட்டுத் துணிகளில் வரையப்பட்ட செய்திகள், அறிஞர்களது கூட்டத்துப் பேச்சுகள், திருக்கோவில் கதை உரையாடல்கள், திருவிழாக்கள் மூலமாகச் செய்திகளைப் பரப்புதல், அரண்மனை மடல் செய்திகள் போன்றவைகளால் செய்திகளைப் பரப்பும் முறைகளும் பழங்காலத்தில் இருந்தன.

ஓரிடத்தில் நடக்கும் நன்மை-தீமைச் செய்திகளைச் சுற்று வட்டாரத்து மக்களுக்கு அல்லது நாடு விட்டு நாடு தாண்டி அறிவிக்கும் பழக்கம் இன்று நேற்றல்ல வரலாறு தோன்றும் போதே உடன்பிறந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

இதற்குரிய எடுத்துக்காட்டுகளாக: கற்காலச் செய்திகளை ஆராய்ந்த இங்கிலாந்து அறிவியல் அறிஞர் சர் ஜான் லூ பெக் Sir John Lub Back, 1839ல்ஜ‌ேக்கன் பவுச் சர் டி ப‌ெர்த்ஸ் Jaques Boucher de Perths, சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பைக் கண்ட அபிவில்லிப் Abbeville, என்ற ஃபிரான்ஸ் மேதை, 1929-ம் ஆண்டில் சீன நாட்டில் சௌ-னோவ்-டீன், Chow Knowtien 1911ல் இங்கிலாந்து நாட்டு சுசக்ஸ், ஃபிரான்சில் செல்லஸ், செயிண்ட் அச்சுல் Susses, St. Acheul, என்ற இடங்களின் தொல் பொருட் சின்னங்களை ஆய்வு செய்தோரின் செய்திகளைக் கூறலாம.

எரிமலை கக்கிய தீப்பிழம்புகளிலிருந்து தீ பற்றியதைப் பழங் கற்கால மனிதன் அறிந்து கொண்டான் என்று அறிவியல் மேதை டார்வின் Darwin கூறிய புதுமை கருத்து; அப்போதைய மக்களுக்குரிய அறிவியல் செய்தியாகப் பரவியது.

புதிய கற்கால மனிதன் இந்தியாவில் கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே, அதாவது வட கர்நாடகப் பகுதியிலும், தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் வாழ்ந்ததற்கான கற்கருவிகள் கிடைத்துள்ளன. அவற்றுள் கோடாரி முக்கிய ஆய்வுப் பொருளான செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கற்காலத்திற்குப் பிறகு, கி.மு. 40-ம் ஆண்டில் உலோக காலம் தொடங்கி, செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் வரை வாழ்ந்த மனித வாழ்க்கையில்; மாறுதல்கள் பல மாறிமாறி ஏற்பட்டதால், மக்கள் எழுதும் கலையிலும், ஓரளவு வளர்ச்சி அடைந்தார்கள். இக்கால மக்கள் எழுதும் எழுத்துக்குப் பட எழுத்து Hieroglyphics என்று சுமேரிய நாகரிகச் செய்தி கூறுகின்றது.

அகர முதலி வரிசைப்படி எழுதும் முறை; உலகத்தில் முதன்முதலாக கி.மு. 3000 ஆண்டில் எகிப்து நாட்டில் வளர்ச்சிப் பெற்றதாகவும், பழங்கால எழுத்து முறை ஆரம்பமான காலமே வரலாற்றின் துவக்கக் காலம் என்றும் எகிப்து நாகரிகச் செய்தி உலகுக்கு உணர்த்துகின்றது.

எகிப்து : வரலாற்றுத்
தந்தை ஹெரடோட்டஸ் :

பூமியில் தோன்றிய பழம் பெரும் நாகரிகங்களில் ஒன்று எகிப்திய நாகரிகம். இதைவிட மூத்த நாகரிகம் சுமேரிய நாகரிகம். மற்ற நாகரிகங்கள் எல்லாமே எகிப்து நாகரிகத்திற்குப் பிற்பட்ட நாகரிகமாகும். இதை நாம் கூறவில்லை. வரலாற்றின் தந்தை என்று உலகம் இன்றும் போற்றும் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டஸ்; தனது ‘வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்தான் முதன் முதலாக உலகம் சுற்றிச் சுற்றி வரலாறு எழுதிய முதல் சரித்திர ஆசிரியர். அவர் எகிப்தின் நைல் நதி வளத்தைக் கண்டப் பிறகு, ‘எகிப்து நைல் நதியின் நன்கொடை’ என்று கூறியவர் அவரே! இவை எல்லாம் உலகச் செய்திகளா? இல்லையா? சிந்திக்க வேண்டுகிறோம்.

நெப்போலியன் கல்வெட்டு

மாவீரன் நெப்போலியன் 1798-ஆம் ஆண்டில் எகிப்து மீது படையெடுத்தபோது, அவனுடன் பொறியாளர்கள், உலகப் படம் எழுதுவோர், தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், செய்திகளைச் சேகரிப்போர் ஆகியோரை அழைத்துச் சென்றான்.

நைல் நதி கடலில் கலக்கும் இடத்தில் ‘ரோசெட்டா’ (Rossetta) என்ற ஒரு கல்வெட்டை மாவீரன் நெப்போலியன் கண்டுபிடித்தான். அவன் அன்று அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை உலகுக்கு அறிவித்ததால்தான், எகிப்திய நாகரிகம் உலகத்தில் பெருமை பெறக் காரணமாக இருந்தது.

இந்த அரிய பணியை நெப்போலியனுடன் சென்ற வரலாற்றுச் செய்திச் சேகரிப்போரால் உலகுக்குக் கிடைத்ததில்லையா?

போர்க்கலை ஞானியான நெப்போலியனுடன் சென்ற வரலாற்றுச் செய்தியாளர்கள் லக்சார், Luxor, கர்நாக் Karnak என்ற இடங்களில் உள்ள பழம் பெரு கோவில்களின் செய்திகளைச் சேகரித்து Description De L Egypte என்ற நூலைத் தயாரித்து ஃபிரெஞ்சு அக்கடமிக்குக் கொடுத்தான்.

அந்த அரிய நூலிலிருந்து எடுத்த செய்திகளால்தான் எகிப்தில் மறைந்து போயிருந்த நாகரிகச் சின்னங்களை உலகம் அறியும் வாய்ப்பே உருவானது.

அஞ்சாநெஞ்சன் நெப்போலியனுடன் சென்ற வரலாற்றுச் செய்தி திரட்டுவோர், ரோசெட்டா கல்வெட்டில் இருந்த கிரீக், Greek, டிமோடிக் Demotic ஆகிய மொழிகளின் எழுத்துக்களை அப்படியே எழுதிப் படித்தறிந்தார்கள்.

ஃபேப்பரஸ் (Papyrus) என்ற காகித இலை வடிவங்களில் எழுதப்பட்ட கதை, கவிதை, நாடகச் செய்திகளையும் அந்தச் செய்தி சேகரிப்போர் திரட்டி, நூல் எழுதுவோருக்குக் கொடையாக வழங்கினார்கள் என்பது இதழியல் துறைக்குரிய ஒரு முன்னோடியான சம்பவம் அல்லவா?

பாரோக்கள் காலத்து
பிரமிடுகளின் செய்தி

பிரமிடுகளைக் கட்டிய பாரோக்கள் என்ற மன்னர்கள் ஆட்சியில் எழுத்தர்கள், எழுத்துக்களை நகல் எடுப்போர், மக்கட்தொகை கணக்கெடுப்போர், வருமான வரி கணக்கர்கள், வரலாறு திரட்டுவோர் என்ற பல வகையினர் இருந்திருக்கிறார்கள் என்றால், அந்தக் காலத்திலேயே எகிப்திய மொழியில் எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

எகிப்து நாட்டில் பெண் எழுத்தாளர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்கள்தான் ஆண்களுக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். ‘ஓ, எனது அருமைக் காதலரே! நான் உனது மனைவி யாவதற்கு ஆசைப்படுகிறேன்’ என்று எழுதுவார்களாம். இந்த பெண்கள் ஃபேப்பிரஸ் என்ற தாளில், புகைக் கரி, தாவரக் கோந்து கொண்டு எழுதுவார்கள் என்பதும் செய்திதாளே?

சிறுகதை எழுத்தாளர்கள், கவிதை எழுதுவோர், வீர சாகசக் கதை எழுதுவோர், பேய் கதைகள் எழுதுவோர், அற்புதச் செயல்களை எழுதுவோர், துப்பறியும் கதை எழுதுவோர், காதல் லீலை கதைகள் எழுதுவோர், நீதிநெறிகளை விளக்கும் உவமைக் கதைகள் எழுதுவோர் எகிப்து நாட்டில் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள் என்றால். எழுத்தாளர்கள் பெருமை சொல்லப் போமோ!

ஹீப்ரு : தாவீது மன்னன்
சிறந்த எழுத்தாளர்!

பாலஸ்தீனத்தில் எகிப்தியர் ஆதிக்கம் வீழ்ச்சியுற்ற பின்பு, யூத இனத்தவர் கானான் தேசத்தில் குடியேறி, அவர்கள் பேசிய மொழிதான் ஹீப்ரு. அந்த ஹீப்ருக்கள் உருவாக்கியதே ஹீப்ரு நாகரிகம்.

இஸ்ரவேல் மன்னர்களில் ஒருவரான தாவீது அரசன் கி.மு. 1004-லிருந்து 965 வரை அரசராக இருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.

கிறித்துவர்களின் பைபிள் என்ற நூலில் ‘சங்கீதம்: Psalms என்ற பகுதியை எழுதியவர். இதில் துன்பத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல்கள் ஏராளமாக  இருப்பதால்; தாவீது மிகச் சிறந்த எழுத்தாளர் என்று இன்றும் கிறித்தவக் கல்விமான்களால் போற்றப்படுகின்றார்.

நாகரிகத்தின் தாய்
சிந்து சமவெளி

உலகத்தில் எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம், பாபிலோனிய, அசிரிய நாகரிகங்கள் தோன்றியன போல, இந்தியாவிலும் சிந்து நதிக் கரையில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னுமிடங்களில் கி.மு. 3000 ஆண்டுகட்கு முன்பு திராவிட நாகரிகம் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கே கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளில் ஒரு வரி இடப்புறம் இருந்து வலப்புறமாகப் போவதும், அடுத்த வரி வலப்புறம் இருந்து இடப்புறம் போவதுமாக இருந்தன. இந்த ஒலிக்குறிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதால்; இந்த எழுத்துக்கள் சித்திர முறையும் ஒலி முறையும் இணைந்ததாக இருந்தன.

சிந்துவெளிப் பண்பாடுகள், எகிப்திய, சுமேரிய மெசபட்டோமிய பண்பாடுகளுக்கு ஒத்திருந்தாலும், மேற்கண்ட ஒவ்வொரு நாகரிகமும் தனித்தனி எழுத்து முறைகளோடு சிறந்திருந்தன. என்றாலும், வேதகால நாகரிகத்திற்கு மாறுபட்டது; முற்பட்டது; மேம்பட்டதுமாகும். ஹீப்ரு நாகரிகத்தில் தோன்றிய எழுத்தாளர்களைப் போல சிந்து நாகரிகத்தில் எவரும் இருந்ததாக எந்தவிதக் குறிப்புகளும்

கிரேக்கம் - ரோமானியம்
செய்தி நிலைகள் வளர்ச்சி

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நாகரிகத் தொட்டில்களாக விளங்கிய எகிப்து, மெசபடோமிய, ஹரப்பா - மொகஞ்சதாரோ, சீன நாகரிகங்கள் கி.மு. 4000 ஆண்டுகட்கு முன்பு தோன்றி வளர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய அரும்பெரும் நாகரிகங்களிலிருந்து கி.மு. 60ம் ஆண்டுக்குப் பிறகு, மேல் நாட்டு நாகரிகங்கள் கிழக்கு நாடுகளில் இருந்து விலகி, ஐரோப்பாவின் கிரீஸ், இத்தாலி நாடுகளில் உருவாகித் தனிமையாக் வளர்ந்தன.

இந்தத் தனிமை வளர்ச்சி, தனிமனித நலம், மனித உரிமை போன்ற சிந்தனைகள்: வல்லாட்சி முறை, குழு ஆட்சி முறைகளை ஒடுக்கின. அதனால் கிரேக்க, ரோமானிய நாகரிகங்களின் செல்வாக்குகள் நிலைநின்றன.

தற்கால நாகரிகத்தை உருவாக்கிய முன்னோடிகளாக - கிரேக்க நாகரிகமும் ரோமானிய நாகரிகமும் உள்ளன. இத்தகைய நாகரிக வளர்ச்சியில் ஒன்றான கிரேக்க நாகரிகத்தில் புதிய மேலை நாட்டு இலக்கியங்களான பெருங்காப்பியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், நாடகம், முல்லைப் பாடல், இலக்கியத் தகுதியுடைய வரலாறுகள், பேச்சுத் திறன் படைத்த சொற்பொழிவுகள், புலப்பாட்டியல் (Rhetoric) ஆகியன உலகத்திலேயே முதன் முறையர்க, முதல் தரமாகக் கிரேக்க நாட்டில் வளர்ந்தன.

எழுத்தாளர்
ஹோமர் :

உலகப் புகழ் பெற்ற காவியங்களான இலியட், ஒடிசி என்ற நூல்களை ஹோமர் என்ற எழுத்தாளர் எழுதினார். இதைப் பற்றிய ஆய்வுச் சர்ச்சைகள் பல இருந்தாலும், இசைப் பாடல்களாக எழுதப்பட்ட இந்தக் காவியங்களில்; வருணனைச் சிறப்புகள் சிறப்புப் பெற்றுள்ளன. அதனால் அந்தக் காலத்தில் ஹோமர் காவியங்கள் மக்கள் இடையே வாய்மொழிச் செய்திகளாக இடத்துக்கு இடம் மாறிப் பரவின.

கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ, மேல் நாட்டின் அரசியலில் முதல் சிந்தனையாளர் என்று புகழ் பெற்றார். கி.மு. 427ல் பிறந்து 347ல் மறைந்தவர். இடைக் காலத்தில் அவர் 36 தத்துவ, அறிவியல், மெய் விளக்க நூற்களை எழுதினார். அவரது கருத்துக்கள், அக்காலத்திலுள்ள நாட்டு மக்கள் இடையே முற்போக்குச் சிந்தனைச் செய்திகளாகப் பரவி மக்களைச் சிந்திக்க வைத்தன.

கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் பிளேட்டோவின் மாணவராக விளங்கியவர். தலைசிறந்த தத்துவஞானி, விஞ்ஞானி, அரசியல் சிந்தனையாளர், ஆய்வு மேதை, அவரது எண்ணங்கள் நூல்களானதால், அந்தக் கருத்துக்கள் மக்கள் இடையே செய்திகளாகப் பரவின. புது உணர்ச்சியை உருவாக்கின.

பேரறிஞர் ஹீசியாத் (Hesiod) என்பவர் எழுதிய நீதி நெறிகள் மக்கள் ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் செய்திகளாயின. கடவுள்கள் வரலாறுகளை தியாகனி(Theogony) என்பவர் எழுதியதால் அவருடைய ஆன்மீகக் கருத்துக்கள் மக்களின் பக்திச் செய்திகளாக உருவெடுத்து தெய்வ வழிபாடுகளாயின.

அசைலஸ் (Aesehylus) என்பவர் கி.மு. 525 முதல் 456 வரை எழுதிய நாடக நூற்கள், கடவுளுக்கும் மனிதனுக்குமுரிய தொடர்புகளை உருவாக்கும் செய்திகளாகப் பல இடங்களில் மக்கள் இடையே நாடகங்களாக நடத்தப்பட்டன.

தனி மனித போராட்டங்களை முதன் முதலாக எழுதியவர் சோபக்லீஸ் (Sophocies) என்பவர். இவர் கி.மு. 496 முதல் 406 வரை வாழ்ந்த காலத்தில் அரசு அதிகாரத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே உண்டான போராட்டங்களைச் செய்திகளாக்கினார். அதனால், மக்கள் புதுவித அரசியல் எழுச்சிகளைப் பெற்றுப் போராளிகளாக மாறினார்கள்.

அரிஸ்டோபான்ஸ் Aristophanes, யூரிபிடீஸ் Euripides என்ற நாடகாசிரியர்கள் எழுதிய நாடகங்களை மக்களே பொழுதுபோக்கு நாடகங்களாக நகர்தோறும் நடத்தி மனித உரிமைகளைச் சிந்திக்க வைக்கும் செய்தியாளர்களாக விளங்கினார்கள்.

வரலாற்றின் தந்தை என்று இன்று உலகத்தால் போற்றப்படும் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டஸ், Herodotus கி.மு. 484 முதல் 420 வரை வாழ்ந்த; காலத்தில் அவர் Histories என்ற ‘வரலாறுகள்’ நூலை உலகத்தைச் சுற்றி வந்து எழுதினார். அந்த வரலாறு அந்தந்த நாட்டு மக்கள் வாழ்ந்த நாகரிகம், பண்பாடுகள், பழக்க வழக்க ஒழுக்கங்களைக் கூறியதால், அக்கால மக்களுக்கு அவை அங்கங்கே உள்ள செய்திகளை அறிவிக்கும் வரலாற்று முரசாக அமைந்தது.

அறிவியல் வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் துசிடிைடஸ் (Thucydides) கி.மு. 471 முதல் 420-வது ஆண்டு வரை வாழ்ந்தார். இவர்தான் பிலப்பனேசியப் போர்கள் என்ற போர் முறை வரலாற்று நூலை முதன் முதலாக எழுதி உலகுக்கு வழங்கினார். இந்த நூல் அக்காலப்போர் முறைச் சம்பவங்களைச் செய்திகளாக அறிவித்ததால், மன்னர்களுக்குப் பெரும் உதவி புரியும் நூலாகவும், மக்கள் போர்க் காலத்தில் எவ்வாறு எச்சரிக்கையோடு இயங்க வேண்டும் என்ற அறிவுரைகளைக் கூறும் செய்திகளாகவும் இருந்தன.

நச்சுக் கோப்பை
சாக்ரட்டீஸ்

சாக்ரட்டீஸ் என்ற அறிவுலக மேதை எந்த ஒரு நூலையும் எழுதவில்லை. என்றாலும், அவருடைய ஒவ்வொரு பேச்சுக்களும், காரணம் காட்டி அவர் வாதிக்கும் முறைகளும் மக்கள் இடையே அறிவுரை ஆற்றும் செய்திகளாக விளங்கின. அவரது கேள்வி-பதில் பேச்சு முறை பாணிக்கு ‘சாக்ரட்டீஸ் முறை’ Socratic என்ற பெயரும் - புகழும் ஏற்பட்டு, அவருக்கென மாணவர்கள் அந்தந்த சிறுசிறு நகர நாடுகளிலே தோன்றினார்கள். சாக்ரட்டீஸ் கருத்துக்களை மக்களிடம் வாத, விவாதங்களாக்கிய அச்செய்திகள் அக்காலத்து மக்களைச் சீர்திருத்தின எனலாம்.

டெமஸ்தனிஸ் என்ற சொற்பொழிவு மேதையின் சொல்லாற்றல் உணர்ச்சிகள், சாக்ரட்டீசுக்குப் பிறகு ஒரு பேச்சு அணியையே உருவாக்கி மக்களை அறிவுக் கடலிலே மிதக்க வைக்கும் பல்சுவைச் செய்திகளைக் கூறுவதாக விளங்கின.

தேலிஸ் Thales என்ற கிரேக்க வானியல் அறிஞர், தனது சூரிய கிரகணக் கண்டுபிடிப்புச் செய்திகளை எகிப்து, பாபிலோன் நாடுகளிலுள்ள நகரங்களுக்கு அவரே நேரில் சென்று, வானியல் புதுமைச் செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும் பயணச் செய்தியாளராக அவர் நடமாடினார். எகிப்து நாட்டில் அவர் தங்கியிருந்தபோது உலகப் புகழ்பெற்ற பிரமிடுகளின் நிழலை அளந்து அதன் மூலம் அதன் உயரத்தை கணக்கிட்டு, முதன் முதலாக உலகுக்குக் கூறிய செய்தியாளராகவும் இருந்தார்.

அண்டத்தின் Universal இயக்கத்தை ஆராய்ந்து, பூமி நீள்வட்ட வடிவானது என்று கூறி, உலகப் படத்தை முதன் முதலாக வரைந்தவர் அனாக்சிமாண்டர் Anaximander என்பவர். இவர் கி.மு. 611 முதல் 547 வரை வாழ்ந்த வானியல் மேதை. சூரியக் கடிகாரம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து நேரத்தைக் கணக்கிட்டுக் கூறியதால் உலக நாடுகளுக்குகெல்லாம் அவர் அதிசய செய்தியாளராக அப்போது திகழ்ந்தார்.

கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் Pythagorus என்பவர் கி.மு. 582 முதல் 500 வரை வாழ்ந்தவர். ‘பித்தகோரஸ் கல்வி மையம் என்ற ஒன்றை அவர் ஊருருக்கு மன்றங்களாக அமைத்து, மாணவர்களைச் சேர்த்து அந்தந்த ஊர்களில், தான் கண்டுபிடித்த கணித வரலாறான ஒற்றை எண், இரட்டை எண், பகா எண் Odd numbers, Even numbers, Composite Numbers, Prime numbers பகு எண் ஆகியவற்றைக் கணித முறைச் செய்திகளாக்கிப் பிரச்சாரம் செய்த முதல் வித்தகர் ஆவார். இவரது கணித முறைதான் வடிவ கணிதத்தில் (Geometry) பித்தகோரஸ் தேற்றம், (Theorem) துணைத்தேற்றம் (Rider) ஆகியவற்றைத் தன் மாணவர் மன்றங்கள் மூலமாகச் செய்தியாக வெளியிட்டு நாடோடியாகப் பேசி கொண்டே ஊரூர் சுற்றி வாழ்ந்தார்.

சூரியன் உலகத்தின் நடுநிலையாக உள்ளது. கோள்கள் சூரியனைச் சுற்றி ஓடி வரும் பாதைகள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியதற்காக, அப்போது கிரீஸ் மன்னனாக இருந்த பாலிக்கிரட்டீஸ் என்பவன் கடவுள் வகுத்த சூத்திரத்தை எதிர்த்து வாதிடும் இந்த பித்தாகரஸ் யார்? இவ்வாறு கூற இவனுக்கு என்ன உரிமை? என்று ஆணவமாடி அவரைக் கைது செய்து நாடு கடத்தினான். நாடோடியாய், ஊரூராய் அலைந்து தனது கருத்தை மக்கள் இடையே செய்திகளாக அறிவித்தார் பித்தகோரஸ்.

இந்த பித்தகோரஸ் கூறிய வானியல் கருத்தைத்தான் அவருக்குப் பின் 1540 - ஆண்டுகள் கழித்து வந்த நின்னலேயஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர் பித்தகோரஸ் கூறியதை உண்மை என்று உலகுக்கு மெய்ப்பித்தச் செய்திகள் உலகையே வியக்க வைத்தன.

ஈக்லிட் என்ற வேறொரு கணித வித்தகர், வடிவ கணிதத்தின் மூலங்கள் Elementary, Geometry அட்சர கணிதம் Algebra கணக்கீடு கணிதம் Arithmatic போன்ற கணித நூற்களை எழுதி கணித உலகுக்குரிய செய்திகளாக்கினார். அந்துச் செய்திகள் மாணவ, ஆசிரியர் கல்விப் பணிகளாக இன்றும் வாழ்கின்றன.

கி.மு. 287 முதல் 212 வரை வாழ்ந்த ஆர்க்கிமிடிஸ் Archimedes என்ற கிரேக்க அறிவியல் வித்தகர். ஆர்க்கிமிடிஸ் கோட்பாட்டையும், தண்ணீரில் மிதத்தல் விதியையும் கண்டுபிடித்து அப்போதைய உலக நாடுகளில் எல்லாம் புகழ் பெற்றிருந்தார்.

ஆர்க்கிமிடீஸ் நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘எனக்கு நிற்க ஓர் இடம் கொடுங்கள். நான் பூமியை நகர்த்திக் காட்டுகிறேன்’ என்று நெம்புகோல் தத்துவத்தைக் கேலி பேசியவர்கள் இடையே ஆவேசமாகப் பேசினார். அதைச் சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டினார் ஆர்க்கிமிடீஸ்.

ஜியோமதி கணிதத்தில் விந்தைகள் பல செய்து காட்டிய அவர், கோளங்கள், கூம்புகள் ஆகியவற்றின் வெட்டு முகங்களின் தன்மைகளை விளக்கிச் செய்துகாட்டியும் கால்குலசை (Calculus) கண்டுபிடித்து, நுண்கணித இயலுக்குப் பெருமை தேடிய அவரது அறிவுத் திறன்கள் கணித உலகுக்குரிய அன்றைய - இன்றைய செய்திகளாக உலகெங்கும் பரவின.

‘ஆர்க்கிமிடீஸ் சுருள்’ என்ற சுருள் வடிவத்தையும் நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளை வீசும் கருவிகளையும் கண்டுபிடித்த ஆர்க்கிமிடீஸை; ஒரு போர் வெறியன் தனது கைவாளால் அவரது கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் துடிதுடிக்கச் சாகடித்த விவரம்: அன்றைய அறிவுலகப் பரபரப்புச் செய்தியாக மாறிப் பரவியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பிற கணித மேதைகளும், மக்களும் ஆற்றொணா வேதனைப்பட்டார்கள்! அந்தச் செய்தி உலகையே உலுக்கி விட்டது.

ஆர்க்கிமிடீஸ் தலை வெட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட அப்பலோனியஸ் Appollonius என்ற கணித மேதை, அந்த உயிர் கொலையைச் சவாலாக ஏற்று கி.மு. 240ல் நீள் வளைவு, பர வளைவு, மிகு பரவளைவு (Elipse, Perebola, Hyperbola) என்ற கணிதப் புதுமைகளைக் கண்டுபிடித்து ஆர்க்கிமிடீஸ் வெட்டுண்ட செயலுக்குப் புகழேற்றி நடமாடினார்.

இந்தக் கண்டுபிடிப்புக்களை அறிந்த ஊர் மக்கள், ‘சைரக்ஸ், மன்னன் அப்பலோனியஸ் இப்போது அறிஞர்கள் தலைகளை வெட்டுவானா?’ என்று சவால் விட்டு அந்நகரையே ஊர்வலமாகச் சுற்றி வந்த செய்தி கலவரமாக மாறி; நகரையும், அடுத்தடுத்துள்ள ஊர்களையும் அன்று திணறடித்த செய்தியாக நிலவியது.

பண்டைய கிரேக்க மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு இறந்தவர்கள் ஆவியே காரணம் என்று நம்பி வந்த மூட நம்பிக்கைச் செய்திகளை முறியடித்தவர் ஹிப்பாகிரடஸ் Hyppocratus என்ற மருத்துவ மேதை.

அவர் மனித உடலில் உள்ள ரத்தம், கபம், கரும் பித்தநீர், மஞ்சள் பித்த நீர் Blood, Phlegm, Black bile, Yellow bile ஆகியவை இருக்க வேண்டிய அளவுக்கு இருந்தால், நோய்கள் மக்களை அண்டாது என்ற புரட்சிக் கருத்தைக் கூறினார்.

இந்தச் செய்தி மருத்துவத்தில் ஒரு புதிய திருப்பு முனையை உண்டாக்கியதால், மக்கள் அதைப் பெரிதும் வரவேற்று, ஊர் ஊராக இந்தச் செய்தியை அக்கால மக்கள் மூட நம்பிக்கையை வீழ்த்திப் புகழ் பெற்றன்ர். மருத்துவத் துறையில் அறிவியல் பூர்வமான இந்தச் செய்தி, அந்த நேரத்தில் மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் ஒரு புது சிந்தனை வித்தை ஊன்றியது.

இரத்தம் உடலின் பல பாகங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் மாற்றங்களைக் கண்டுபிடித்தவர் கேலன் Galen என்ற கிரேக்க மேதை. இவர் கி.பி. 130 முதல் 199 வரை வாழ்ந்தவர்.

சிரை ரத்த நாளங்கள் உணவை ரத்தத்துடன் கலக்கச் செய்கின்றன. இரத்தம் கல்லீரலை அடையும்போது இயற்கை குணத்தையும், இதயத்தில் செல்லும்போது ஜீவாதார குணத்தையும், மூளைக்குள் போகும்போது மிருக குணத்தையும் பெற்று உடல் இயக்கத்திற்கு வழி செய்கிறது என்று கேலன் கூறிய அற்புத ஆராய்ச்சிச் செய்தி; மருத்துவ உலகுக்கு பெரும் உதவியாக; திருப்புமுனையாக அமைந்தது. தசைகள் சுருங்கி நீள்வதால் உடல் அசைவு உண்டாகிறது. அதற்கு நரம்புகளே காரணம் என்ற செய்தியைக் கூறி மருத்துவ உலகில் பெரும் புகழ் பெற்றவர். இவையெல்லாம் அன்றைய மக்கள் தெரிந்து கொண்ட செய்திகள் அல்லவா?

கிரேக்க நாகரிகம், கிரேக்க மேதைகள் பலரை உலகுக்குக் கொடைகளாக வழங்கியச் செய்திகளை இன்றும் - உலக வரலாறும் - கிரேக்க வரலாறும் வாழ்த்திக் கொண்டிருப்பதை நாம் படித்து கொண்டே வாழ்கிறோம்.

ரோமானிய நாகரிகம்

கிரேக்க நாட்டில் உலகம் வியக்கத்தக்க சிந்தனையாளர்கள் ஒவ்வொரு துறையிலும் தோன்றி சாதனைகள் பல படைத்துள்ளதைப் போல, ரோமாபுரி நாட்டிலும் சில அரிய சாதனையாளர்கள் குறைவாகவே தோன்றினார்கள். அதனால், ரோமானியப் பேரரசு பழமை மிக்க உலகப் பேரரசுகளுள் ஒன்றாகவே இருந்தது.

ரோமானியர்கள் இத்தாலி நாட்டின் வளத்தைப் பெருக்கியவர்கள். பண்டைய எகிப்தியர், கிரேக்கர் நாகரிகங்களின் பயனை அவர்கள் அனுபவித்தவர்களாவர்.

ரோமானிய தத்துவம், சிசிரோ, உலுக்கிரிட்டிய்ஸ், மார்க்ஸ் அரேலியஸ், செனக்கா போன்றவர்களது கருத்துகளால் உருவாயிற்று. 

ரோமாபுரி மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர்; நாவன்மை படைத்த பேச்சாளரான சிசிரோ என்பவர்தான் என்ற செய்தி மற்ற நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிடிவாதக் கொள்கை என்ற Dogmatism தத்துவம்; உலகப் புகழ் பெற்ற ஒரு செய்தியாகவே மதிக்கப்பட்டது. இன்பம் - துன்பம் என்ற இரண்டையும் சமநோக்கில் காண வேண்டும் என்பதையும்; தனி மனிதன் ஒழுக்கம், திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட கருத்து, Notion அறிவுணர்வு, முடிவின்மை infinity போன்ற செய்திகளை அவரால் உலகுக்கு வழங்கப்பட்டன.

சிசிரோவின் சொல்லாற்றல் மிக்கப் பேச்சுக்கள் இன்றும் உலகப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. இவரது கடித இலக்கியங்கள் வரலாற்று உண்மைகள் கொண்டவை ஆகும்.

புளூடார்க் Plutarch என்ற வரலாற்றுப் பேராசிரியர் எழுதிய நூல்களில் கிரேக்க, ரோமானிய அரசியல் மேதைகளின் செய்திகள் ஏராளமாகக் குவிந்துக் கிடக்கின்றன.

ரோமானியப் பேரரசிற்குட்பட்ட நாடுகளில் அமைதி நிலை நாட்டப்பட்ட செய்தியை உணர்ந்த பிரிட்டிஷ் பேரரசு 19-ம் நூற்றாண்டில் ரோமானிய அமைதியைப் பின்பற்றி தங்களது குடியேற்ற நாடுகளிலும் அமைதியை நிலை நாட்டியது.

இன்றும் கூட பத்திரிகைகளில் குறிப்பிடப்படும் ‘எல்லா சாலைகளும் ரோமுக்குச் செல்கின்றன (All Roads Lead to Rome) என்பதற்கேற்ப, ரோம் நாட்டின் ஒவ்வொரு மாநில எல்லா நகரங்களும் ரோம் நகரத்துடன் சாலைகளால் இணைக்கப்பட்டன என்ற ஆட்சிச் சீரமைப்புச் செய்திகள் அன்றும் இன்றும் உலகப் பிரசித்தப் பெற்றதாகும்.

கி.மு. 6-ம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆட்சி செய்த எட்ரூசியன் Etrusean என்பவன் கட்டட கலைக்கு ஆதரவு அளித்ததால், ஜூபிடர் கடவுளின் கோவிலான கேபிட்டல் திருக்கோவிலை (Capital) பிற்காலத்தில் கட்டி முடித்தார்கள் - ரோமானிய அரசர்கள். ரோமர்களின் இந்தக் கட்டிடக் கலை அற்புதமான செயலென்று மற்ற நாட்டவரால் மதித்துப் போற்றப்படும் கட்டிடக் கலைச் செய்திகளானது.

புராணக் கருத்துக்களை
சீனா எதிர்த்தது?

சீன நாட்டு மக்கள் உண்மையான வரலாற்றுச் சம்பவங்களுக்குத்தான் முதன்மையான இடம் வழங்கினார்கள். புராணக் கருத்துக்களுக்கு சிறப்பிடம் அளிக்கவில்லை.

சீனர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உலோகத்தின் பயனைக் கண்டறிந்து பயன்படுத்தி வாழ்ந்தார்கள். பட்டுத் துணி, கண்ணாடி, வெடி மருந்து, பீரங்கிகள், திசைகாட்டும் கருவிகள், துருவத்தின் காந்த சக்தி, காகிதம் செய்யும் முறைகள் போன்ற புதுமைச் சக்திகளை உலகத்தில் முதன் முதலாக கண்டுபிடித்த நாடே சீனாதான்.

சீன மொழி எழுத்துக்கள் கி.மு. 16ம் நூற்றாண்டிலேயே எழுத்து வடிவம் பெற்றது. கி.மு. 3ம் நூற்றாண்டிலே உலக அதிசயங்களுள் ஒன்றாக இன்றும் குறிப்பிடப்படும் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இது உலகத்திலேயே மிக நீளமான சுவர். இது 8 மீட்டர் உயரம் உடையது; ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியில் 1 முதல் 11 மீட்டர் உயரமுடைய சிறு கோபுரங்கள் அந்தப் பெருஞ்சுவர் மீது கட்டப்பட்டிருக்கின்றன. சுவர் அடிப் பகுதி 8 மீட்டர் அகலமும், மேற்பகுதி 5 மீட்டர் அகலமும் உடைய இந்தச் சுவர்மீது இருப்புப் பாதை போடப்பட்டு குதிரை வீரர்கள் சவாரி செல்லும் அமைப்பில் உருவாக்கப்பட்டதாகும்.

கி.மு. 460 - முதல் 377 வரை, அந்தக் காலக் கட்டத்தில், மக்கள் காட்சிகளை நேரில் கண்டு அனுபவித்த இந்தகையச் செய்திகளைப் பரப்பினார்கள். கிரேக்க மருத்துவர் ஹிப்பாகிரட்டஸ் காலத்துக்கு முன்பேயே, ஹுவோடா Huato என்பவர் அறுவை சிகிச்சை மருத்துவம் செய்த மேதை என்று சீன மருத்துவம் கூறுகின்றது. அப்போதே அக்குபஞ்சர் என்ற மருத்துவம் இருந்தது. 

உடலில் அதிகமாக இருக்கும் திரவங்களின் வெளியேற்றமும், அந்தத் திரவங்களினால் உண்டாகும் நோய்களைக் குணப்படுத்த; தோலில் துளையிடும் முறைக்கு சீனர்கள் அக்குபஞ்சர் மருத்துவம் என்று பெயரிட்டு, அதை மனித உடலில் 22 இடங்களில் அக்குபஞ்சர் முறையைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துவதுதான் அக்குபஞ்சர் - என்ற விளக்கச் செய்தியை சீன மக்களிடம் வாங்ஷிடோ என்ற நாடித் துடிப்பு மருத்துவர் விளம்பரப்படுத்தினார்.

சீனர்களின் பேரரசு செங்வாங் Cheng Wang என்பவர் கி.மு. 1115 ஆம் ஆண்டு முதல் 1075 வரை வாழ்ந்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த சௌ Chow என்பவர்தான் காந்த சக்தி கொண்ட திசை காட்டும் கருவியை முதன் முதல் கண்டுபிடித்த செய்தியை உலகுக்கு கூறினார் என்ற சங்ஷு Sung - Shu என்ற நூல் அறிவித்துள்ளது.

கி.மு. 752ம் ஆண்டில் சங்-சாங் என்ற கணித வல்லுநர், அல்ஜீப்ரா, ஜாமெட்ரி என்ற நூல்களை எழுதி, அதே நூற்களில் நெகட்டிவ் குவாண்டிட்டியை பற்றி போதித்த செய்தி, சீன மக்களிடையே கணக்கியல் புதுமைகளைப் பரவ வழி வகுத்தது.

அதே காலத்தில் சூசங்வி Chung Chih என்ற கணித நிபுணர்; ‘பை’யின்‘ரி’ என்ற சரியான மதிப்பீட்டை ஆறு தசம பின்னத்தில் வரையறை செய்து காட்டிய செய்தி; சீனக் கல்வி மையங்களிடையே பெரிதும் பாராட்டுப் பெற்றது.

சீன நாட்டில் கி.மு. 551 - முதல் 479 - வரை வாழ்ந்த கன்ஃபியூசியஸ் Confucius, கன்ஃபியூசியனிசம் Six Decimals என்ற தனது தத்துவத்தை மக்களிடையே ஊரூராகச் சென்று போதித்து, அன்பு என்றால் என்ன என்பதை விளக்கி உரைத்தச் செய்தி உலகம் முழுவதும் பரவியது. காலந்தவறாமை என்ற அவரது கொள்கையை மக்களிடையே அவர் செய்தியாக உபதேசித்தார். அவரது மாணவர்கள் கன்ஃபியூசியஸ் தத்துவத்தைச் செய்திகளாக்கி அதை நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.

மக்களிடம் நாள்தோறும் உபதேசிப்பதையே வழக்கமாகக் கொண்ட கன்ஃபியூசியஸ்; ‘மற்றவர்கள் உனக்கு எதைச் செய்யக் கூடாது என்ற நினைக்கிறாயோ: அதனை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே “What you do like, .When done to yourself do not do other” என்ற அவரது செய்தி மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றதாம். இந்தக் கருத்தை அவரது The Book of History என்ற நூலிலிருந்து எடுத்து மற்ற நாடுகளும் செய்தியாகப் பிரச்சாரம் செய்தன.

கி.மு. 372 முதல் 289 வரை வாழ்ந்த தத்துவஞானி Laotza லா ஓட்சா என்பவர், ‘டாவோயிசம்’ Tao என்ற தத்துவத்தை மக்களிடம் நேரிடையாக விளக்கிப் பேசும்போது, ‘இயற்கைக் கொள்கை வல்லமை வாய்ந்தது. அந்தக் கொள்கை இயற்கை அழகு வாய்ந்தது. மக்களுக்கு அது நன்மை தரக்கூடியது ஆகையால், இயற்கை வாழ்வை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியை லா ஓட்சா பரப்பினார். எனவே சீன தத்துவம் ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்தது.

பழங்காலத்தில் இருந்தே இந்தியரின் சநாதன சமயம் இமயம் முதல் குமரி வரை இயங்கி வந்ததை, இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த தத்துவஞானி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் ‘இந்து சமயம் தொடர்ந்து நீடிக்கும் ஓர் இயக்கம். தேங்கிவிட்ட நிலை அன்று, என்றும் இயங்கும் ஒரு முயற்சி. முடிந்து விட்ட முறை அன்று, வளர்ந்து வரும் ஒரு பண்பு. நின்றுவிட்ட தேற்றம் அன்று, என்பதை வலியுறுத்தும் செய்தியாக அவர் உலகுக்கு வெளியிட்டார்.

‘ஆரியர்கள் பேசிய முதல் வார்த்தை ரிக் வேதமாகும்’ என்ற செய்தியை ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.

மன்னர்களுக்கு ஆலோசனை கூறும் சபாக்கள் இரண்டு இருந்தன. ஒன்று சபா, மற்றொன்று சமிதி. சபா பிற்காலத்தில் நீதிமன்றமாகச் செயல்பட்டது என்றும், சபாவை விட சமிதி முக்கியமானதென்றும், அது மக்கள் சார்பாளர்களையும், அல்லது மக்கள் அனைவரையும் கொண்ட ஓர் அமைப்பு என்ற செய்தியை டாக்டர் ஜெயஸ்வாஸ் என்ற மொழி அறிஞர் அறிவித்துள்ளார்.

‘ரிக் வேத காலத்தில் அரசியல், சமுதாய வாழ்க்கையின் அடிப்படையாகக் குடும்பம் விளங்கியது. ஆரியர்கள் கூட்டுக் குடும்ப முறையை அமைத்துக் கொண்டார்கள் என்று வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஸ்மித் ஆராய்ந்து கூறுகிறார்.

கௌதம சித்தார்த்தர் போதி மரத்தடியில் மெய்யறிவு பெற்ற பிறகு, காசி நகர் அருகே உள்ள சாரநாத் என்ற இடத்தில் உள்ள மான் வனம் Deer Parkல் அவர் முதன் முதலாகத் தனது சமய உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் நான்கு சிறந்த ஞானநெறிகளை மக்களுக்குக்கு எடுத்துக் கூறினார்.

1. துன்பம், வருத்தம், நோய், மூப்பு, சாவு ஆகியவை நிறைந்த மக்கள் வாழ்க்கை எளிதில் விவரிக்க முடியாத துன்பம் நிறைந்தது என்ற செய்தியை அறிவித்தார். 2. இந்த துன்பங்களுக்குக் காரணம் சிற்றின்பம். 3. இந்த துன்பங்களை ஒழிக்க ஆசையை ஒழிக்க வேண்டும். 4. ஆசை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அட்ட சீலம் என்ற எட்டு நன்னெறிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்திகளை உபதேசித்தார்.

அட்ட சீலம் என்பதற்குப் புத்தர் விளக்கம் அளித்த போது, மேற்கண்ட நான்கு உண்மைகளில் மக்கள் முழு நன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற செய்தியை அவர் பரப்பினார்.

சிற்றின்பத்தை அகற்றிடவும், கோபத்தைத் தடுக்கவும், மற்றவர்களுக்குத் தீமை செய்யாதிருக்கவும் வேண்டும்.

பயனற்றதும், கடுமையானதும்; பொய்யானதுமான கடுமை நிறைந்த சொற்களைப் பேசாதிருக்க வேண்டும். எப்போதும் இன்சொற்களையே பேச வேண்டும்.

மற்றவர்களைத் துன்புறுத்தாமலும், திருட்டுக் குற்றத்தைச் செய்யாமலும், நல்ல நெறிகளுடன் நடக்க வேண்டும். 

சிறந்த இலக்குக்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தீமைகளை அகற்றி, நல்ல குணங்களை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிற்றின்ப ஆசையும், துன்பமும் வந்து தன்னைத் தாக்கா வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தன்னுடைய நோக்கங்களை, அடைந்திட மனத்தை ஒருவழிப்படுத்தும் தியானத்தைச் செய்ய வேண்டும் என்ற எட்டு நன்னெறிகளை ஒழுக வேண்டும் என்ற ஞான அறிவுரைக் கருத்துக்களை மக்களுக்கு ஊரூராகச் சென்று விளக்கிக் கூறினார். இது செய்தி அல்லவா?

மக்கள் ஆசையை வென்று மகிழ்ச்சியான நிலையை அடைவதற்குரிய பத்துக் கட்டளைகளைச் செய்தியாக புத்தர் உபதேசம் செய்தார்.

கொல்லாமை, களவு செய்யாமை, பிறன்மனை நோக்காமை, பொய் கூறாமை, புறம் பேசாமை, குற்றம் கூறாமை, மது அருந்தாமை, முதியோரைப் போற்றல், பெற்றோர்க்குக் கீழ்படிதல், அறம் செய்தல் போன்ற நெறிகளைப் பின்பற்றல் வேண்டும் என்று அவர் தனது சமயச் செய்திகளாகக் கட்டளையிட்டார்.

கௌதமர், தமது நெறிகளைப் பரப்பவும், பிறரைத் தனது மதத்திற்கு மாற்றவும்; தனது மாணவர்களைக் கொண்ட ஒரு சங்கத்தை உருவாக்கினார். ஆண்-பெண் துறவிகள் அந்த சங்கத்தில் சேர்ந்தார்கள். பிக்குகள், பிக்குணிகள் அனைவரும் எளிய வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தார். இவர்கள் தலையை முழுமையாக மழுக்கிக் கொண்டு, மஞ்சள் ஆடைகளை அணிந்து, புத்தம், சங்கம், தர்மம் என்ற மூன்று நிறுவனங்களுக்கு உண்மையாக நடக்க வேண்டும் என்றார். இவை போதி ஞானியின் அறநெறிகளாகத் திகழ்ந்தன. இந்தச் செய்திகளை சர் எட்வின் ஆர்னால்டும், நிஸ்டேவிட்சும் செய்திகளாகக் கூறுகிறார்கள். புத்தர் கி.மு. 487ம் ஆண்டில் மறைந்தார்.

புத்தருக்குப் பிறகு கி.மு. 539-ம் ஆண்டில் தோன்றிய மகா வீரர் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை என்ற மூன்று கொள்கைகளை ‘மும்மணிகள்’ என்ற செய்திகளாக மக்களுக்குப் போதித்தார். மகா வீரர் கொள்கைகளை அவருடைய பதினோரு சீடர்களும் சமண சமய கோட்பாடுகள் என்ற பெயரில் பதினான்கு இயல்களாகப் பிரித்துச் செய்திகளாக வெளியிட்டார்கள்.

சமணர்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளைக் கசடறக் கற்று, எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மக்களிடையே அவரவர் மொழிகளிலே சமண கொள்கைச் செய்திகளை பரப்பினார்கள். இவர்களது சமயத் தொண்டுகளால் தமிழ் மொழியில், சிலப்பதிகாரம், நன்னூல், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற நூல்களில் சமணத்தைச் செய்திகளாக எழுதித் தொண்டாற்றினார்கள்.

எந்தெந்த மொழிகளைக் கற்றுச் சமணர்கள் வல்லுநர் ஆனார்களோ, அந்தந்த மொழிகளில் சமணக் கொள்கைகளைச் செய்திகளாக்கி, இலக்கண்ம், உரை நடை, காப்பியம், அகராதி, தத்துவக் கருத்துக்கள், குறியீட்டு முறைகள், கணிதம் போன்ற நூற்களை எழுதும் பெரும் புலவர்களாகி சமண சமயத் தொண்டாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கச் செய்திகள் ஆகும்.

கற்றூண்கள், கல்லால் செதுக்கப்பட்ட குடை போன்ற அமைப்புகள், வளைவுகள் நிறைந்த கோவில்கள், பாறைக் குகைக் கோயில்கள், சரவண பெலகோலா கோமதீஸ்வரர் கோவில், மைசூர் கார்கால்பதி ஆலயம், மத்தியப்பிரதேச காஜூராகோ திருக்கோவில், பாவபுரி கோயில்,இராஜஸ்தான் அபுகுன்று சலவைக் கோயில், சிற்பங்கள், கிழக்கு வங்க ரிஷபநாதர் சிலை, மராட்டிய எல்லோர குகைக் கோவில், ஒரிசா ஹதிகும்பா குகைக்கோயில், மத்தியப் பிரதேச உதயபுரி மலைக் குகைக் கோயில், அங்குள்ள சிற்பங்கள், ஜூனார், ஆஸ்மானாபாத் குகைகளைக் குடைந்து அமைந்துள்ள சிற்பங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், தர்மசாலைகள் அமைத்திருத்தல், சித்தூர் சமணக் கோபுரம் போன்ற மேலும் எண்ணற்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள புனிதத் தலங்கள் போன்ற கொடைச் செயல்கள் எல்லாம் சமணர்களின் கலைத்திறன்களுக்கான செய்திகளாக இன்றும் காட்சி தருகின்றன.

இந்திய வரலாற்றில் சமண தத்துவங்கள் இன்றும் அழியாமல் : அதன் ஒவ்வொரு வேலைப்பாடுகளும் சமணர்களின் சிறப்பான, அற்புதமான செய்திகளாகத் திகழ்ந்து புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் இல்லாத காலத்தில் தோன்றிய அற்புதச் செய்திகள் அல்லவா இவை? வரலாறு மறக்க முடியாத, மறுக்க முடியாத அழியாச் செய்திகள் தானே இவை எப்படி மறக்க முடியும்?

புத்த சமயத்தில் சங்கங்கள் இருந்தன - சித்தார்த்தர் சித்துக்களை உலகெங்கும் பரப்பிட! ஆனால், சமணத்தில் அத்தகைய சங்கங்கள் ஏதும் இல்லை என்றாலும், கல்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களைப் போல கற்கோயில்கள், கற்சிற்பங்கள், கல் ஒவியங்கள், கற்றூண்கள், கற்குகைக் கல்வெட்டுகள் இருக்கின்றன. சமணத்தின் செய்திகளை உலகெங்கும் பரப்பிட, உணர்த்திட, உரைத்திட இவை அல்லவா பத்திரிகைச் செய்திகளைவிட அழியா செய்திகள்?

எனவே, உலகத்தில் பத்திரிகைகள் தோன்றுவதற்கு முன்பு ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த மக்கள் வாழ்க்கையில் ஏராளமான செய்திகள் தோன்றிக் கொண்டுதான் இருந்தன.

அவற்றை வெளியிடப் பத்திரிகைகள் இல்லையே தவிர, மக்கள் போக்குவரத்துகள் மூலமாக: அந்தச் செய்திகள் வாய்மொழி வழிகளாலும், கல்வெட்டு, கற்சிற்பங்கள், கற்பாறைச் செதுக்கல்களைக் காட்சிகளாக மக்கள் பார்த்தவைகளாலும்; அறிஞர்கள் தொகுத்து எழுதிய சிந்தனைகளை நூல்களில் படித்துணர்ந்தவர்களாலும், நூல்களை எழுதிய அறிஞர்களே நடைப் பயணமாக ஊரூருக்குச் சென்று மக்களுக்கு எடுத்துக் கூறிய முறைகளாலும் அந்தச் செய்திகள் அக்காலத்தில் உலகப் பகுதிகள், சிலவற்றுக்குப் பரவிக் கொண்டுதான் இருந்தன.

அத்தகையச் செய்தி பரப்பும் தொண்டுகளை யார் யார் செய்தார்கள்? எப்படியெப்படி பிரச்சாரம் புரிந்தார்கள், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? என்பதையும் இதுவரை மேற்கண்ட சம்பவங்களால் படித்தீர்கள் அல்லவா?

உலகத்தின் மேல் நாடுகளில் பத்திரிகைகள் எங்கெங்கே தோன்றின, அவை எப்படியெல்லாம் செய்தித் தொண்டாற்றின என்ற விவரங்களை அடுத்து வரும் பகுதிகளில் சுருக்கமாகக் காண்போம்.