இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகை ஆசிரியராகத் தகுதிகள்; திறமைகள்!



26

பத்திரிகை ஆசிரியராக
தகுதிகள்; திறமைகள்!


த்திரிகை ஒவ்வொன்றிலும், அது நாளேடானாலும் சரி. வார மாத ஏடுகளானாலும் சரி எல்லா வகை இதழ்களின் கடைசிப் பக்கத்தின் இறுதியில், வெளியீட்டாளர் பெயர், முகவரி, அச்சிடுபவர் பெயர், முகவரி, ஆசிரியர் பெயரையும் அச்சிட வேண்டும். இது பத்திரிகைப் பதிவுச் சட்ட விதியாகும்.

‘ஒரு பத்திரிகைக்கு அதன் ஆசிரியர்தான் அச்சாணியாக இயங்குபவர். சட்டப்படியும், நடைமுறைக்கேற்பவும், பத்திரிகையில் வெளிவந்த கருத்துகளுக்கும் வாராதவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர் அதன் ஆசிரியரே!

தவறான கருத்துக்கள் வெளி வந்தால், அதற்கும் ஆசிரியர் மீது தான் சம்பந்தப்பட்டவர்கள் வழக்குத் தொடர்வார்கள்.

அவமதிப்புச் செய்திகள் பத்திரிகையில் வெளிவருமானால், நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்டப் பேரவைகள் முன்பு நிற்கக் கூடியவரும் பத்திரிகை ஆசிரியரே!

பத்திரிகையில் செய்திகளை வெளியிட்டதற்காக, அல்லது வெளியிடாமைக்காக வாசகர்கள் கோபமுற்றால், ஆசிரியர் அமர்ந்துள்ள அறையைத்தான் முதலில் தாக்குவார்கள்; வசைப் பாடுவார்கள்’ என்று Rangaswami, Partha sarathy, Basic Journalism, Macmillan India Ltd., Delhi 1984’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து.

ஒருவர் பத்திரிகை ஆசிரியராவதற்கு; அதற்கென தனி சட்டத் திட்டமோ, ஒழுங்குமுறைகளோ, அதற்கான மனுபோடும் பணிகளோ, தேர்வு சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளோ ஒன்றுமில்லை.

பணம் இருந்தால், ஆசிரியராகும் ஆசை இருந்தால், சம்பந்தப்பட்ட பத்திரிகைத் துறையின் நீதி மன்றத்துக்கு விண்ணப்பம் செய்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று விட்டால் எவரும் ஆசிரியராகலாம்.

ஒருவர் பத்திரிகை ஆசிரியராக வேண்டுமானால், அவ்வளவு சுலபமாக ஆக முடியாது. அதற்கு பல்வேறு திறமைகள், அனுபவங்கள், தொழில் நுட்பங்கள், நூலறிவு பெற்றத் தனித் தன்மைச் சாதனைகள் எல்லாம் ஒருங்கிணைந்து இருந்தால்தான்; ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராக முடியும். ஏனென்றால், அந்த பத்திரிகையின் எழுச்சியும், வளர்ச்சியும், உணர்ச்சியும், புரட்சியும் வீழ்ச்சியும் அந்த ஆசிரியரையே சார்ந்திருக்கின்றது.

திருவள்ளுவர் பெருமான் கூறுவதைப் போல “தொட்டனைத் தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக் கற்றணைத் தூறும் அறிவு” என்பதற்கேற்ப, எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகின்றோமோ, அவ்வளவுக் கவ்வளவு மணற் கேணியில் நீர் சுரப்பதைப் போல, எவ்வளவுக்கெவ்வளவு கல்வி கற்கின்றோமோ, நூலறிவு பெறுகின்றோமோ, அவ்வளவுக் கவ்வளவு அறிவு சுரந்து பெருகும். அந்த அறிவுதான் பத்திரிகை நடத்துவதற்கு அச்சாணியாகும்; முதலீடாகும்; திறமையும் பெருகும்.

இதைத்தான் ஔவை பெருமாட்டி, “உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்” என்றாள். அதாவது கல்விக்குரிய தெய்வமே இன்றும் படித்துக் கொண்டே இருக்கின்றாள் என்கிறாள். அதனால், “யாதானும் நாடாமால், ஊராமல் என்னொருவன்; சார்ந்துணையுங் கல்லாதவாறு” என்று தமிழ் வேதத்தை நமக்குத் தந்த திருவள்ளுவரும், ‘சாகும்வரை நீ படித்துக் கொண்டே இருந்தால்தான் என்ன? அப்போதுதானே எந்த நாடும், எந்த ஊரும் உனக்குச் சொந்த ஊராகும்? அதனால் பல நாட்டு மொழிகளையும் படி’ என்று அறிவுரை கூறுகிறார்.

மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட கோவை. ஜி.டி. நாயுடு, 37 ஆயிரம் நூல்களைப் படித்ததால்தான், அவர் தொழிலியல் விஞ்ஞானியாக மாறி, பல புதிய விஞ்ஞானப் புரட்சிகளைச் செய்தார்.

மராட்டிய மண்ணில்; மாவீரன் சிவாஜி தோன்றிய பூமியில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே என்பவர் ‘இந்து பிரகாஷ்’ என்ற மராட்டிய மொழிப் பத்திரிகையையும், இங்லீஷ் மொழி பத்திரிகையையும் துவக்கினார். அந்தக் கல்வி மேதை, 34 ஆயிரம் சட்டப் புத்தகப் பக்கங்களைப் படித்தவர் என்று ஆங்கிலேயர் அரசு அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி அவரை மராட்டிய மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமித்தது.

எனவே, “Genious is one percent inspirations and ninety nine percent perspiration’’ என்றார் மேதை எடிசன் என்ற விஞ்ஞானி. அதாவது பேரறிவுடைமை என்பது அகத்தூண்டுதல். அது ஒரு சதவிகிதம்தான்; வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரவர் இலட்சியத்திலே ஒருவரால் வெற்றி பெற முடியும் என்றார்.

பத்திரிகை ஆசிரியனுக்கும் மேற்கண்ட தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். பல்பொருள் கூட்டுக் குவியல்தான் பத்திரிகை. பல்பொருள் குழப்பத்தாட்களாக அது இருக்கக் கூடாது. தாறுமாறாக, அலங்கோலமாக நடந்தால் அது சமுதாயத்தைக் குழப்பக் களமாக்கி விடும்.

பத்திரிகை ஆசிரியனுக்குத் தேவை - சிந்தனையில் நேர்மை, நடுநிலை வழுவாத, நியாயமான, ஒரு சார்பற்ற பண்புகளாகும்.

ஓர் ஆசிரியனுடைய எழுத்துக்கள் விரிந்து செல்லும் ஒளிக் கதிர்களை வீசுவதாக விளங்க வேண்டும். அவனுடைய எழுத்துக்களில் சமுதாயத்தை மேம்படுத்தும் கொள்கை உணர்ச்சி வேகம், சீறி எழும் செயல் துடிப்பு, எழுதும் எழுத்துக்களில் மெய்மை நடமாட்டங்கள், கற்பனைக் கலவாமைகள்; என்ன எழுத வந்தாரோ அதன் மூலக் கூறுகள்; பண்புகள் உயிர்த் தோற்றம்; வெளித்தோற்றமற்ற உள்ளார்ந்த தன்மை; எந்த சந்தேகமும், எவருக்கும், எப்போதும், தோன்றாமலிருக்குமாறு எழுத வேண்டும்.

அப்போது தான் அந்தப் பத்திரிகையை மக்கள் வாங்கிப் படிக்கும் ஆர்வம், வேட்கை, வெறியுணர்வு தோன்றும்.

பத்திரிகையில் வெளிவரும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சொன்னதை எழுதுவதாக, எழுதும் வண்ணம் செல்வாக்குப் பெறுவதாக அமைந்தால்தான், அந்த ஏட்டுக்கு மக்களிடையே சொல்வாக்கும், செல்வாக்கும் அலைமோதி சிறந்த விற்பனையை அது அறுவடை செய்யும்.

ஆசிரியரால் எழுதப்படும் எந்தக் கருத்தும், சம்பவமும், நிகழ்ச்சிகளும், காரணமுடையதாக, வாதங்களை உருவாக்கும் காரணமாக, வாதச் சான்றுடையதாக, நம்பிக்கை நாணயச் சான்றுடைய செயல் விளக்க நோக்கமுடையதாக, அறிவாராய்ச்சிச் செறிவுக்கு முரணற்றதாக, யூக, வியூகங்களுக்கு வாதமிடும் இணக்கம் உடையதாக, உணர்ச்சிக் குன்றாமல் தொடர்ந்து படிக்கின்ற சொல்லாட்சி இன்பத்தை வழங்குவதாக, எழுதும் எழுத்துக்களில் இருத்தல் அவசியம்.

இத்தகைய எழுத்தாற்றலை நிறுவிடும் எழுதுகோலுக்கு நினைவாற்றல் - சுரபியாக, சிந்தனையும் கூர்மை மனமும் அமைய வேண்டும். பழைய சம்பவங்களில் உள்ள சங்கிலித் தொடர்புச் சிந்தனைகள், கருத்து அமைதி, கருத்து நிலைப்பாடு, எந்தப் பிரச்னையானாலும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் ஓர் ஆசிரியனுக்கு இருந்தால்தான் பத்திரிகை முன்னேறும்.

ஆசிரியனாகப் பொறுப்பேற்பவனுக்கு குறைந்தது 50 ஆண்டுக் கால இலக்கிய, கலை, அரசியல், சமுதாய மறுமலர்ச்சி இயல் ஆகியவற்றில் போதிய பயிற்சியும், நினைத்த நேரத்தில் அதை எதிரொலிக்கும் சிந்தனை வளமும் இருக்க வேண்டும்.

ஒருவர் எழுதுகோல் ஏந்தும் முன்பே, மேற்கண்ட சாதனைகளை உடையவராக ஆசிரியர் இருப்பது பத்திரிகைப் பெயருக்கு நல்லது. ஏனென்றால், அவை ஆதாரமாகவும் (Reference) அல்லது ஆசிரியருக்குப் புறவரணாகவும், களக்காப்பரணாகவும் திகழலாமில்லையா?

இந்த மேற்கோள் சான்று ஆதாரங்களில் பல வகை உண்டு. பார்வைக்குரிய புத்தகம் (Book of Reference) தேவை நோக்குக்கு ஏற்பக் குறிப்பும் (Cross Reference), மாட்டேற்றக் குறிப்பு (in Reference to) தொடர்பாகவும், சட்டமன்றம் சம்பந்தம் பற்றிய ஆதார உணர்வுகளும் (Legislation by Reference), நூலக மேற்கோள்களைக் குறிக்கும் திறமுடையவராகவும் (Library Reference), எழுதும் கட்டுரைகளில் (Reference Marks) உடுகுறி முதலிய ٭׆‡ §lL , சுட்டுக் குறியீடுகள் உணர்வாளராகவும் (Terms of Reference) ஆய்வுரிமை எல்லை பற்றிய வாசகங்கள் உடைய வராகவும் (With reference to) எது எப்படி இருந்தாலும், எவ்வாறாக இருந்தாலும் என்ற வகையில் பல மேற்கோள்களை நிறுவும் சான்றாதாரங்கள் இருக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியன் மேற்கண்டவற்றை, பாடமாகப் பெற்றிருத்தல் மிகவும் சிறந்ததாகும்.

இந்த ஆதாரங்களை எங்கெங்கு தேவையோ, அங்கங்கே எல்லாம், கருத்துக்கள் முடியும்போது ஆசிரியரோ, செய்தி ஆசிரியரோ, துணை ஆசிரியரோ, எழுத்தாளர்களோ சுட்டிக் காட்டுவது அவசியம். ஏன் தெரியுமா? வாசகர்களது நினைவுக் குறிப்பை இவை வலிமைப்படுத்தும்; வளர்க்கும்; அவர்களது அறிவை வளமாக்கும்.

பத்திரிகையில் இதுவரை நாம் என்ன படித்தோம் என்ற கருத்துக்களைக் கண்ணாடியில் காட்டும் முகம் போல், படித்தக் கருத்துருவங்களை அக்குறிகள் எதிரொலித்துக் காட்டும். படிப்போர் அதனால் பயன் பெறுவர். படித்ததை மறுமுறையும் நினைத்துப் பார்ப்பர். ஆசிரியர்களிடம் அல்லது எழுத்தாளர்களிடம் படித்த பழைய எண்ணங்கள் பளிச்சென்று நிழலாடும்; நினைவுகளாக நிற்கும்.

ஆசிரியர் எழுதும் ஆதாரச் சான்றுகள், கண்டனம், ஏளனம், வசை, வரலாறு, இலக்கியம், அறிவியல், அரசியல், இழிபெயர் தருவது, புகழைக் குன்ற வைப்பது அல்லது புகழை மலைச் சிகர ஒளியாக்குவது, உள் நினைவை உந்தி ஏழ வைப்பது, தனக்குள் நிகழ்ந்ததை தானே எண்ணியெண்ணி மகிழ்வது போன்ற குறிப்புக்களாகவும் அவை அமையலாம். அதனால் ஆசிரியர் அந்தந்த குறியீடுகளுக்குள் அவற்றை அடக்கிக் காட்டினால்தான், வாசகர்கள் அதைப் படித்து உணர்வும் உற்சாகமும் பெற்று உவகையுலா வருவார்கள். அந்த உலாவின் எதிரொலி, பத்திரிகை விற்பனைக்குப் பவனி வரும் பறை போல ஒலிக்கும்.

ஆசிரியரின் அந்த வீர உலா, ஈர உலா, உவகை உலா எழுத்துக்கள், அரசியல் குறைகளை நீக்கலாம்; ஊழல்களைப் போக்கும் சீராக்கமாகவும் இருக்கலாம். ஆன்மிகத் துறையில் புதுமைகள் புகலாம்; நாடாளுமன்ற, சட்டமன்ற காரசார நிகழ்வுகளுக்கு அமைதியூட்டும் நிழற்குடைகளாகலாம். எனவே, பத்திரிகை ஆசிரியரின் மேற்கண்ட பணிகள் நாட்டைச் சீர்திருத்தலாம்; வாசகர்கள் இடையே மனமாற்றங்கள்கூட நிகழாலாமில்லையா?

பத்திரிகை ஆசிரியரின் இத்தகையக் கருத்துக்களை, எண்ண ஓட்டங்களை, சொல்லாட்சிகளைக் கவனமாகப் படிக்கும் வாசகர்கள், பத்திரிகையைத் தொடர்ந்து வாங்குவோராகவும் மாறலாம். அவர்கள் நிலையான சந்தாதாரர்களாகலாம்; அதனால், பத்திரிகை விற்பனையாளர்களுக்குப் பணமும் ஒழுங்காக வசூலாகும். வசூலானால் பத்திரிகை வளரும்; முன்னேறும்; தொழிலாளர்களுக்கு உற்சாகத்தோடு பணியாற்றிடும் புதுத்தெம்பும் பிறக்கும். அதனால் பத்திரிகைப் பெயரும் ஆசிரயரது எழுதுகோலின் தகுதியும், திறமையும், கட்சி சார்பற்ற புகழ் மெருகும் ஏறுமல்லவா?

“எந்த அளவைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்ததே அல்லாமல், தனி நிலை இயல்புகள் உடையன அல்ல” என்ற அறிவியல் ஞானி ஐன்ஸ்டினுடைய ஆய்வுக் கொள்கை, எழுதுகோல் ஆற்றலுக்கும், அதன் சீர்த்திருத்த மக்கட் தொண்டுகளுக்கும், வாசகர் வட்டங்களுக்கும், ஒன்றுடன் ஒன்று சார்ந்து பொருந்துகிறதல்லவா?

எனவே, தனி நிலை இயல்புகள் உடையன அல்ல ஒரு பத்திரிகை வளர்ச்சிகள்! அலுவலக வேலைப் பையன் முதல் - நிர்வாகப் பொறுப்பாளர் உட்பட்டவர்கள் வரை ஒன்றை ஒன்று சார்ந்தக் கூட்டுறவு நோக்கத்தின் ஊக்கப் பணிகளின் ஆக்க வடிவம் தானே பத்திரிகை வளர்ச்சி?

சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்பவர், அவருடன் பணியாற்றுபவர்களிடம் அன்பும், பண்பும் காட்டி; ஆர்வத்தோடு பணிபுரியும் உணர்ச்சியை ஊட்டும் (Nurse) தாயாகத் திகழ வேண்டும். குழந்தைகளைக் காப்பாற்றவும், கல்வி புகட்டவும், நியமிக்கப்பட்ட Nursing governess போல அலுவலகப் பணியாளர்களைப் பாதுகாத்தால், பத்திரிகை மனமாச்சர்யங்கள் அலுவலகம் உள்ளே முளைவிடாது.

ஆசிரியர் எனப்படுபவர் எந்த நேரத்தில் எந்த சிக்கல் வந்தாலும் அவற்றை ஏற்கும் வைர நெஞ்சினராய் திகழ வேண்டும்.

தனக்குச் சரி என்று உணரப்பட்டதை, தலையே துண்டித்து விழும் நிலை வந்தாலும், பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலிஸ் (Hercules) அல்லது இரும்பு இதயமுடைய மாவீரன் நெப்போலியனைப் (Naopoleon) போல நெஞ்சுரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

பத்திரிகை ஆசிரியன் பொது மக்கள் தோழனாக நட மாட வேண்டும். அவர்கள் தேவைகளை உணர்ந்து, நிலைகளுக்கு ஏற்றவாறு அவரது எழுதுகோல் திறமைகள் அற்புதமாட வேண்டும்.

அரசியல் தலைவர்கள், சமுதாயச் சான்றோர்கள், கல்விமான்கள் தொடர்புகளோடு ஆசிரியர் ஒன்ற வேண்டும். அவர்களது மக்கட் தொண்டுக் கருத்துக்களை அலசி ஆய்ந்து நல்லனவற்றைப் பின்பற்றுவது அனுபவ மூட்டும் நலமாகச் சிறக்கும்.

அண்ணல் காந்தியடிகள் நடத்திய ‘ஹரிஜன்’ பத்திரிகை ஆங்கிலேயர்களைத் திணர வைத்தது அரசியல் செல்வாக்கோடு! அதனைப் போல, பத்திரிகை ஆசிரியர் தன்மானியாக நடமாடி, தலைநிமிர்ந்து நின்று எழுதினால், எந்த எதிரியும் பகையாகா இரான்! பத்திரிகை நலம் நாடும் நல்லவர்கள் யாரும் கேடுபாடுடையவராக ஆகார்! அத்தகையவர்கள் நட்புகளை ஆசிரியர் சிதற விடக்கூடாது; எந்த ஆபத்து வந்தாலும் அவர்கள் உடுக்கை இழந்த கைகள் போல் உதவ முன் வரலாம் அல்லவா?

எனவே, செல்வாக்குப் பெற்றுவிட்ட பத்திரிகை ஆசிரியரிடம் பொறுப்புணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப் பற்று, பணியுமாம் என்றும் பெருமை என்ற உணர்வு, அனைவரையும் மதிக்கும் மாண்புடைமை இருந்து விட்டால், அந்தப் பத்திரிகை அழியாது; ஆசிரியரையும் மக்கள் மறவார் என்பது உறுதி.