இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகை மன்றம்



13


பத்திரிகை மன்றம்
ஏன்? எதற்காக? எப்படி?
(Press Council)


நாட்டில் இன்று நடந்துவரும் பத்திரிகைகளில் சில தரத்தோடும், பல பத்திரிகைகள் வியாபார அறிவோடும், விற்பனையை அதிகப்படுத்தும் அவரவர் சுயநல நோக்கத்தோடும், தரக் குறைவாகவும், பண்பற்ற முறையில் - மனம் போன போக்கில், தனி மனிதர்களது தகுதிகளைக் கூட மதிக்காமல், தாக்கி எழுதும் பணக் கண்ணோட்டத்தோடும், மஞ்சள் பத்திரிகை மகத்துவத்தோடும் நடைபெற்று வருகின்றன.

மேலே சுட்டிக் காட்டப்பட்ட எல்லாக் குறைகளும் நாம் கூறுவதல்ல: நமது நாட்டில் அமைக்கப்பட்ட முதல் “பத்திரிகைக் குழு”; Press Commission - இந்திய நாட்டிலே நடைபெற்றுவரும் பத்திரிகைகள் அனைத்தையும் ஆராய்ந்து கூறிய கருத்தாகும். .

மஞ்சள் தரத்தோடு சில பத்திரிகைகள் தாக்கும், போக்கும் - நோக்கும் கண்டு தாளமுடியா வருத்தத்தோடு, பத்திரிகை மன்றம் மேலும் கூறுவது என்ன தெரியுமா?

“பத்திரிகைகள்
தரத்தோடும்
பொறுப்போடும்
நடந்து கொள்ளல் வேண்டும்”

என்று கூறியுள்ளது; இது, உண்மையான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்தான் என்பதிலே, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. பத்திரிகைக்குத் தங்களது, வாழ்க்கையைத் தியாகம் செய்து வறுமையோடு வாடியவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

பத்திரிகைக் குழு:

பத்திரிகைகளுக்குரிய மரியாதை மதிப்பும்; ஒழுக்கம் ஓம்பும். பண்புடனும் அதன் சுதந்திரத்தைக் காட்டிக் காக்க வேண்டும்.

இதழியல் தொழிலில் ஈடுபட்ட அனைவரிடமும் பொறுப்புணர்ச்சி அமைய வேண்டும். அமைந்ததும், தொண்டு மனப் பான்மையை வளர்க்க வேண்டும்.

இந்த நிலை வளர வேண்டுமானால், ஒரு பத்திரிகை மன்றத்தை Press Councilலை அமைத்தாக வேண்டும் என்று நியமிக்கப்பட்டிருந்த Press Commission குழு கூறியிருந்தது.

உலகத்தில் முதல்முறையாக 1916-ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் தான் பத்திரிகை மன்றம் தோன்றியது. பிறகு, உலக நாடுகளில் 40 பத்திரிகைக் கிளை மன்றங்கள் அமைந்தன.

சட்டத்தின் பயன் :

பத்திரிகைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப, நாடாளுமன்ற மக்களவையில் பத்திரிகை மன்ற மசோதா அப்போது கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. அதனால், நாடாளுமன்றம் கலைந்தது: மசோதாவும் சட்டமாகாமல் நின்றது.

எட்டாண்டு கழிந்தது. தேசிய ஒற்றுமை மன்றம், National integration council பத்திரிகைகளுக்கென ஒரு மன்றம் அமைக்க வேண்டிய சூழ்நிலையை தேசிய ஒற்றுமை மன்றத்திற்கு வற்புறுத்தியது. அதனால், 1965-ஆம் ஆண்டில் பத்திரிகை மன்ற சட்டம் Press Council Act நிறைவேறிற்று; இந்தியப் பத்திரிகை மன்றம் 4.7.1966ல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ஜேர்.ஆர். மல்ஹோத்ரா என்பவர் ஆவார்.

இந்திய நாட்டில் நெருக்கடி நிலையை 1975-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் அமலாக்கியபோது, 8.12.1975 அன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். 10.1.1976 முதல் பத்திரிகை மன்றம் கலைக்கப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு The Press Council Ropeal Act - 1976 என்று பெயர்.

ஏன் பத்திரிகை மன்றத்தைக் குடியரசுத் தலைவர் கலைத்தார்? அந்த மன்றம் திறமையாகச் செயல்பட வில்லை’ என்ற காரணத்துக்காக அதைக் கலைத்தார் ஜனாதிபதி!

இந்திய நெருக்கடி நிலை நீங்கியது. 1978-ஆம் ஆண்டில் பத்திரிகை மன்றம் சட்டத்தை மறுபடியும் குடியரசுத் தலைவர் கொண்டு வந்தார். இந்தச் சட்டம் 3.1.1979 முதல் மீண்டும் நாட்டில் அமலுக்கு வந்தது. நீதிபதி ஏ.என்.சென் Justice A.N. Sen மன்றத்துக்குத் தலைவரானார்.

மன்றம்
அமைப்பு :

தலைவர் ஒருவர்; உறுப்பினர்கள் 28 பேர்; இந்த இருபத்தெட்டு மன்ற உறுப்பினர்களில் 20 பேர் பத்திரிகைக்காரர்கள் : 5 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; கல்வி; அறிவியல்; சட்டம்; இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் யார் சிறப்பானவர்களோ, அவர்களில் 3 பேர் இருப்பார்கள். இதுதான் பத்திரிகை மன்றம் அமைப்பு வடிவம்.

பத்திரிகை மன்றத்தின் தலைவரை நாடாளுமன்ற மேலவைத் தலைவர் மக்களவைத் தலைவர் பத்திரிகை மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட ஓர் உறுப்பினர் ஆகியவர்களைக் கொண்ட குழுதான் முடிவு செய்யும்.

பத்திரிகை மன்றம் நீதிமன்றப் பணிகளையும் மேற்பார்வையிட வேண்டிய நிலையிருப்பதால், உச்ச நீதிமன்ற Supreme Court நீதிபதிகளையே பொதுவாகப் பத்திரிகை மன்றத்துக்குத் தலைவராக நியமிக்கப்படுகிறார்கள்.

மன்றம் எப்படி
செயல்படுவது?

பத்திரிகைகள் சுதந்திரத்தைக் காப்பாற்றக் கடுமையாக உழைப்பதும்; செய்தித் தாட்கள், செய்தி நிறுவனங்கள் தரத்தைக் காப்பதும் - வளர்ப்பதுமான பணிகளே அதன் அடிப்படை நோக்கங்களாகும்.

செய்தித் தாட்களும், செய்தி நிறுவனங்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில், அதற்கான நெறிமுறை வழிகளை வகுப்பது; மன்றத்தின் பணிகளாகும்.

பத்திரிகைகளும், பத்திரிகைக்குச் செய்தி சேகரிக்கும் நிறுவனங்களும் சுதந்திரமாகச் செயல்பட பத்திரிகை மன்றம் உதவிட வேண்டும்.

செய்தித் தாட்களும், செய்தி நிறுவனங்களும், இதழியலாளர்களும்; பொது நல நாட்டத்தோடும், பொறுப்போடும், உரிமை உணர்வுகள் உந்துதலோடும் பணிபுரியத் துணையாக இருக்க வேண்டும்.

பத்திரிகைகளை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரிடமும் தொழில் உறவை வளர்த்துக் கொண்டும், வேண்டிய உதவிகளை அவற்றுக்குச் செய்யும் சூழ்நிலையினையும் பத்திரிகை மன்றம் உருவாக்க உழைக்கின்றது.

மன்றம், பத்திரிகைகளின் அமைப்பு முறை செய்தித்தாள், செய்தி நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொத்துக் குவிந்தால்; அவற்றை ஆராய்ந்து, பத்திரிகைகள் சுதந்தரமாகச் செயல்படுவதற்கான பரிந்துரைகளை மன்றம் செய்ய வேண்டும்.

அயல் நாட்டார் உதவிகளைப் பெறும் செய்தித்தாட்களை மதிப்பிட்டுக் கூறுவதும் இந்த பத்திரிகை மன்றத்தின் வேலையாகும்.

செயல்பாடுகள் :

பத்திரிகை மன்றத்திடம் வரும் குற்றச் சாட்டுகளை விசாரித்து முடிவு கூறுவது. வரையறுத்த அதிகாரத்திற்குள் 1966-ஆம் ஆண்டு முதல் 1981 - வரையில் இந்த மன்றம் 880 குற்றச் சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த 880 விசாரணைகளில், 214 குற்றங்கள் பத்திரிகைச் சுதந்திரம் பற்றியதாகும். அவற்றில் மத்திய - மாநில அரசுகள் மீது பத்திரிகைகள் சாட்டிய குற்றங்களும் சம்பந்தப் பட்டிருக்கின்றன.

தனி மனிதர்களும், நிறுவனங்களும், மத்திய மாநில அரசுகளும் பத்திரிகைகள் மீது 566 குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளன. இவற்றின் மீது பத்திரிகை மன்றம் எடுக்கும். முடிவுகளைச் செய்தித் தாட்கள் வெளியிடுகின்றன.

பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள், பணி நோக்கங்கள் எதையும் பத்திரிகையாளர் மன்றம் வரையறுத்துக் கூறவில்லை.

காலப் போக்குகளில் வரும் வழக்குகளை விசாரித்துக் கூறுகின்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறைகளை உருவாக்க முடியும் என்று பத்திரிகை மன்றம் எண்ணுகிறது. அதற்குரிய வகையில் அந்த மன்றம் பொது மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாகப் பணியாற்றி வருகின்றது.

மதிப்பீடு :

பத்திரிகையாளர்களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க, போதுமான அதிகாரம் பத்திரிகை மன்றத்துக்கு வழங்கப்படவில்லை. அதனால்தான் பத்திரிகைகள் திறமையாகப் பணியாற்றிட முடியவில்லை என்று விவரம் புரிந்தோர் நினைக்கின்றார்கள்.

பத்திரிகையாளர் மன்றம் கால விழிப்புக்கு ஏற்றவாறு இப்போது செம்மையான பலத்தோடு இயங்கி வருகிறது.

எனவே, பத்திரிகைச் சுதந்திரத்தை, தரத்தை, திறத்தை மேலும் நன்றாக வளர்த்திட, காத்திட பத்திரிகை மன்றத்தின் பலம் பயன்பட்டு வருவதால், அதற்கு மேலும் உரமூட்டினால் திறமையோடு அது செயல்படத் தக்க வாய்ப்பை உருவாக்கித் தந்தால், இந்தியப் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சிகளுக்கு அந்தப் பணி சிறந்த தொண்டாக அமையும் என்பது உறுதி.