இதழியல் கலை அன்றும் இன்றும்/பாரதியார் தமிழ்ப்பற்று பத்திரிகையாளரிடம்

422130இதழியல் கலை அன்றும் இன்றும் — பாரதியார் தமிழ்ப்பற்று பத்திரிகையாளரிடம்என். வி. கலைமணி

34

பாரதியார் தமிழ்ப் பற்று
பத்திரிகையாளரிடம் மணக்க வேண்டும்

(தமிழ்மொழிப் பற்றுக் கட்டுரை)


றைமலை அடிகளாரின் கல்லூரி மாணவர்களிலே ஒருவர் நாவலர் சோமசுந்தர பாரதியார், எம்.ஏ.பி.எல். அவர்கள். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் தலைவராய் இலங்கியவர்.

இவர்தம் ஆரூயிர்த் தோழர் தேசீய கவி சுப்பிரமணிய பாரதியார். அடிகளின் அருமை பெருமைகளையும், தமிழ்த் தொண்டினையும் அறிந்த பாவலர் பெருமான் பாரதியார், தம் பாடல்கட்கு மறைமலை அடிகளாரிடம் மதிப்புரை பெற ஆவல் கொண்டார்.

அவ்வாவலை நிறைவேற்றிக் கொள்ள நாவலர் சோம சுந்தரப் பாரதியாரைத் துணை கொண்டார். அடிகள் அப்போது தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் விழாவுக்குத் தலைமை தாங்கி இருந்தார்.

இடை நேரத்தில் இருவரும் அடிகளைக் கண்டனர். நாவலர் பாவலரை அடிகட்கு அறிமுகப்படுத்தினார். அவர் விருப்பத்தையும் அறிவித்தார். மூவரும் சிறிது நேரம் அளவளாவினார்கள்.

அடிகள் அன்று பாவலரின் பாடல்களுக்கு மதிப்புரை வழங்கும் வாய்ப்பைப் பெறவில்லை. பிறகும்கூட அடிகட்கு அவ்வாய்ப்பு நேரவில்லை.

பாவலர் எழுதியிருந்த பாடல்களை நாவலர் அடிகட்கு சுட்டிக் காட்டியுள்ள பாடல்கள் இவை :

      “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
            இனிதாவ தெங்குங் காணோம்”,
      “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
            வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
      “பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
            பாரெங்கும் வீசும் தமிழ்நாடு”
      “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே”
      “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே”
      “சாதி மதங்களையும் பாரோம் உயர்சன்மம்
            இத்தேசத்தி லெய்தின ராயின்
      “வேதிய ராயினும் ஒன்றே அன்றி வேறு
            குலத்தவராயினும் ஒன்றே”
      “நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த
            ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்”
      “எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓர் இனம்
            எல்லாரும் ஓர்நிறை”
      “ஏழையென்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்
      இழிவு கொண்ட மாந்தர் என்போர் இந்தியாவிலில்லையே”

எனும் பாடல்களின் வரிகளால் பாவலர் பாடல் அமைந்திருந்ததை அடிகள் கேட்டார்.

       “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட
           மானிடரை நினைந்து விட்டால்”

தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் இகழ்வாரை நோக்கிப் பாரதியார் தனது பாடலை அடிகட்குப் பாடிக் காட்டினாா.



          “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
               இனிதாவதெங்குங் காணோம்
           பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
               இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
           நாமமது தமிழர்எனக் கொண்டிங்கு வாழ்தல்
               நன்றோ சொல்வீர்
           தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
               பரவும் வகை செய்தல் வேண்டும்”
           யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல்
               இளங்கோவைப் போல்
           பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை
               வெறும் புகழ்ச்சி யில்லை
           ஊமையராய்ச் செவிடர்களாய் குருடர்களாய்
               வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர்
           சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
               தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர்”

“தமிழ் எதற்கு? தமிழில் அறிவு நூல்களை ஆக்க முடியாது. அவற்றிற்குரிய தமிழ் சொற்களில்லை. தமிழால் அச்சொற்களைக் கூறவும் முடியாது. விரைவில் தமிழ் சாகும்; சாகவும் வேண்டும்” என்று வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உள்ளத்தில் தமிழை அழிக்க வகை தேடித் திரியும் தீயோரை என்னென்பேன்! என்று அடிகளாரிடம் பேசி, தமிழுணர்ச்சி வீறு கொண்டார் பாவலர்.

தமிழ்த் தாய் தன் மக்களை நோக்கிப் புலம்புவதாகப் பாடினேன். இது ‘தமிழ்த் தாய் புலம்பல்’ என்ற பாடலைப் பாரதியார் படித்துக் காட்டியது. இது.

               “இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
                     ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
               கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குக்
                     கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்

      “புத்தம்’புதிய கலைகள் - பஞ்ச
           பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
      மெத்த வளருது மேற்கே - அந்த
           மேன்மைக் கலைகள் தமிழினில்லை
      சொல்லவுங் கூடுவதில்லை அதைச்
           சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
      மெல்லத் தமிழினிச் சாகும் -
           அந்த மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும்”
      என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
           இந்த வசை எனக்கெய்திட லாமோ
      சென்றிடுவீர் எட்டுத் திக்குங் - கலைச்
           செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!”

- என்ற பாடலைச் சுப்பிரமணிய பாரதியார் பாடிக் காட்டியதைக் கண்டு - நாவலரும், அடிகளும் மெய் மறந்தார்கள். இந்தத் தமிழ் உணர்ச்சி என்று தமிழிரிடம் எழுச்சி பெறுமோ! என்று, மறைமலை அடிகள் கவிஞர் பாரதியாரை உணர்ச்சி உந்தப் பாராட்டினார்!