இதழியல் கலை அன்றும் இன்றும்/மத்திய - மாநில அரசுகளிடம் எவ்வாறு செய்திகளைத் திரட்டலாம்?
21
மத்திய - மாநில அரசுகளிடம்
எவ்வாறு செய்திகளைத் திரட்டலாம்
குறிப்பு :- செய்தி திரட்டும் பணியாளர் தமது பத்திரிகைக்கு எவ்வாறு செய்திகளைச் சேகரிக்கலாம்; திரட்டிய செய்திகளை எப்படியெப்படி அதன் முக்கியத்திற்குரியவாறு எழுதலாம் என்பதைப் இப்பகுதியில் புரிந்து கொள்ளலாம்.
மாநில அரசுச்
செய்தி வகைகள்
நமது நாடு மக்களாட்சி நாடு. அதற்கேற்ற வகையில், அரசுத் துறைகள், மாநகராட்சி அலுவல்கள், பேரூராட்சி பணிகள், ஊராட்சி ஒன்றிய அமைப்புப் பிரிவுகள், சிற்றூராட்சி அதாவது ஊராட்சி மன்ற வேலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தந்த ஆட்சித் துறைகளுக்கு ஏற்றவாறு இயங்குகிறார்கள்.
இந்த மன்றங்களின் கொள்கைகள் - நடவடிக்கைகள், செயல் திட்டங்கள், பொது மக்களது வாழ்க்கை முறைகளை மேம்படுத்தவே பணியாற்றுகின்றன.
அரசு அதிகாரிகளும் அந்த ஆட்சி மன்றங்களின் பணிகளை இயக்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த ஆட்சி மன்ற நடவடிக்கைகளைப் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மன்ற உறுப்பினர்களது சட்டச் சிந்தைகளுக்குகந்தவாறு செயல்படுகின்றார்கள். அதனால், அந்த மன்றங்களின் செயற்பாடுகளைத் திரட்டிப் பத்திரிகைகளில் வெளியிட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு செய்தியாளர்களுக்கு உண்டு! அது இதழ்களின் கடமை!
மாநில அரசுச் செய்தியாளர்களுக்கு - அரசின் மைய இடம் அலுவலகத்தில் ஒரு தனி அறை, தொலைபேசி வசதிகளுடன் அமைந்துள்ளது. அங்கு எல்லாப் பத்திரிகைச் செய்தியாளர்களும் கூடுவார்கள். அரசுப் பிரிவைச் சார்ந்த செய்திகளை நிருபர்கள் அங்கே பெறலாம். அறிவிக்கை மூலமும், தொலைபேசிகள் வாயிலாகவும் செய்திகளை அங்குத் திரட்டலாம்.
அதன் பின்னர் செய்தியாளர்கள், அமைச்சர்களது அறைக்குச் செல்வார்கள். அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் தொடர்பு கொண்டு செய்திகளைத் திரட்டுவார்கள்.
மக்கள் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் அறைக்குச் சென்றால், அங்கே அரசு சம்பந்தப்பட்ட முக்கியச் செய்திகளை வழங்குவார்கள். அமைச்சகங்களின் செய்திக் கூட்டங்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் வழங்கும் பேட்டிகள், அரசு நடத்தும் இதழ்கள், அரசுக்குச் செல்லும் தூதுக் குழுக்களின் செய்திக் கசிவுகள் (Leakage) ஆகியவற்றின் மூலமும் மாநில அரசுச் செய்திகளை திரட்டலாம்.
மத்திய அரசு
செய்திகள்
மாநில அரசுத் துறைகளைப் போலல்லாமல், மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சர் அறைக்கும் தனித்தனியாகச் செய்தியாளர்கள் சென்று செய்திகளைச் சேகரிக்கும் முறையும் உள்ளது. அரசின் மக்கள் தொடர்புத் துறை அரசுக்குரிய செய்திகளை வழங்குகின்றது.
அமைச்சகங்கள் பத்திரிகைகளுக்குச் செய்திகளை அளிக்கும் நிலை ஏற்பட்டால், செய்தியாளர்களைத் தங்களது அறைக்குள் அழைத்து, அமைச்சர் முன்னிலையில் செய்திகளை வழங்கும் வழக்கம் உள்ளது.
அதுபோலவே, பிரதமர் அலுவலகமும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகங்களும் அடிக்கடிச் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்திச் செய்திகளை அறிவிப்பார்கள்.
அந்தச் செய்திகளைப் பெற்றுக் கொண்ட அல்லது தொலைபேசி மூலம் அறிந்து கொண்ட செய்தியாளர்கள், நேராகத் தங்களுக்கென உள்ள செய்தியாளர்கள் அறைக்கு வந்து தொலைபேசி மூலம் அவரவர் பத்திரிகை அலுவலகங்களுக்கு அன்றையப் புதிய செய்திகளை அறிவிப்பார்கள்.
அரசு செய்திகளைப்
பெற்றிட மூன்று வழிகள்
தங்கள் ஆட்சி சம்பந்தப்பட்ட செய்திகளை அரசு மூன்று வழிகளில் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கின்றன.
1. பத்திரிகை கடிதம் (Press Communique) : மூலமாகச் செய்தியை அறிவிப்பது ஒரு முறை. இது மிகவும் பொறுப்பான அறிவிப்பு முறை. அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான கொள்கைத் தீர்மானங்களை மட்டுமே இந்த முறை மூலம் அறிவிக்கப்படும்.
2. இரண்டாவது முறை : பத்திரிகைக் குறிப்பு முறை. அதாவது Press Note, அரசுத் தீர்மானங்கள், அரசு குறித்து சில விவகாரங்கள் பற்றிய அரசின் நிலைகளை இந்த முறை மூலம் அரசு விளக்குகின்றது.
3. பத்திரிகை வெளியீடு : அதாவது Press Release மூலமாக தினந்தோறும் நடக்கும் நிர்வாகச் செயல்களையும், நடவடிக்கைகளையும் அரசு அறிவிப்பது மூன்றாவது முறை. நாள்தோறும் பத்திரிகைகளுக்குரிய வெளியீடுகளைச் செய்தி தாள்களுக்கு அரசு வழங்குகின்றது.
மேற்கண்ட மூன்று முறைகளால், பத்திரிகைகட்குரிய செய்திகளை, செய்தியாளர்கள் மூலமாகக் கொடுப்பது அரசியல் சம்பந்தப்பட்ட வழக்கமாக இருந்து வருகின்றது.