இதழியல் கலை அன்றும் இன்றும்/வள்ளலார் இலக்கண நுட்பம்
38
ஆசிரியர் குழுவுக்கும் தேவை!
(தமிழ் எண் இலக்கணப் பயிற்சிக் கட்டுரை)
வள்ளலார் இயற்றியுள்ள பாடல்களிலும், உரை நடைப் பகுதியிலும் உள்ள சிற்சிலக் கருத்துக்கள் எளிதில் புரியத் தக்கவையாக இல்லை. இக்காரணமாகச் சிலர் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். இதற்கு முடிவு காண்பது நன்று. பார்க்குமிடத்து அத்தகையக் கருத்துகளில் சில உண்மை புலப்படும். ஒவ்வொருவரும் தமிழ் எண் இலக்கண அறிவு பெற இதுபோன்ற கட்டுரையைப் படிப்பது சிறந்த அனுபவமாகத் திகழும்.
எடுத்துக்காட்டு :
‘உபதேசம்’ என்ற தலைப்பிலுள்ள வள்ளலாருடைய கருத்துக்கள் பலவற்றில் ஒன்று தொல்காப்பியத்தில் “தொண்ணுறு”, “தொள்ளாயிரம்” என்ற இரு தொடர்கள். இந்த இரண்டுக்கும் அவரால் கூறப்பட்ட இலக்கணம் இது.
இந்த இரு தொடர்களுக்கும் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்ட இலக்கணம் “முழுவதும் குற்றமே” என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியம் இயற்றப்பட்ட கால்த்தில் நடைமுறையில் இருந்த வடமொழி இலக்கண நூல் ‘ஐந்திரம்’ என்பதாகும் எனவும், ‘பாணினியம்’ என்ற இலக்கண நூல் தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
தொல்காப்பியம் மிகப் பழந்தமிழ் இலக்கண நூல். தமிழ்மொழிக்கு இலக்கணத்தை கூறுவதோடு மட்டும் இராமல், தமிழ் மக்கள் வாழ்க்கைக்குத் தொடர்புள்ள எல்லாவற்றிற்கும் அது இலக்கணம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஒரு நூல் உலக எந்த மொழியிலும் இல்லை என்பது மொழியாய்வு நூலார் முடிவு.
இத்தகைய ஒரு சிறந்த நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ள இரண்டு சொற்றொடர்களின் இலக்கண முறைக்கு வள்ளல் பெருமானைப் போன்ற தத்துவஞானி குறை கூறும்போது, மக்களுக்கு வியப்புண்டாகின்றது.
தொல்காப்பியத்திலுள்ள பல சூத்திரங்களைப் பல இடங்களில் வள்ளல் பெருமான் தாம் எழுதிய நூற்களில் மேற்கோளாக ஆட்சி செய்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, “ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்திச் சிறப்புப் பாயிரத்தில்” தொல்காப்பியச் செய்யுளிலிருந்து,
“பத்தெழுத் தென்ப நேரடிக் களவே
யொத்த நாலெழுத் தோற்ற லங்கடைவே”
- தொல்காப்பியம் செய்யுளியல் - 38.
என்ற ஒரு சூத்திரத்தை வள்ளலார் மேற்கோளாக ஆண்டுள்ளார்.
தொண்டை மண்டலச் சதகம் பற்றித் தாம் எழுதியுள்ள உரை நடைப் பகுதியில்,
“பனையு மறையு மாவிரைக் கிளவியு
நினையும் காலை ய்ம்மொடு சிவனு
மையினிறுதி யரைவந்து கெடுமே
மெய்யவ னொழிய வெண்மனார் புலவர்”
- தொல்காப்பியம் எழுத்திகாரம் :
உயிர் மயங்கியல் - 81.
இத்தகைய ஒரு மதிப்பைத் தொல்காப்பியம் இலக்கண நூல்மீது கொண்டிருந்த வள்ளல் பெருமான், ‘தொண்ணூறு, ‘தொள்ளாயிரம்’ என்ற சொற்றொடர்களுக்கு தொல்காப்பியத்தில் உள்ள இலக்கணத்துள் எப்படித் தவறு கண்டார் என்பதைப் பார்ப்போம்.
ஒன்பது என்னும் சொல்லும், பஃது (பத்து) என்னும் சொல்லும் சேர்ந்து வரும் முறையில் (9x10) தொண்ணூறு என்று மாறுவதைத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகிறது.
“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை யொற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்த பகரங் கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகர மாகும்”
- தொல் : எழுத். 45
ஒன்பது, பஃது என்னும் சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, ‘த்’ என்னும் மெய்யெழுத்துத் தோன்ற, அதன்மீது ‘ஒ’ என்னும் உயிரெழுத்து அமைகிறது.
‘ஒ’ என்னும் எழுத்து இருந்த இடத்தில், அவ்வகையில் ‘தொ’ என்னும் உயிர்மெய் எழுத்து ஏற்படுகின்றது.
பின்னர், ‘ன்’ என்னும் மெய் எழுத்து ‘ண்’ என ஆவதுடன், அது இரட்டிக்கிறது.
எனவே, ‘ண்’ண், என்னும் இரண்டு எழுத்துக்கள் தோன்றுகின்றன. இப்போது, ‘தொண்ண்’ என்ற மூன்று எழுத்துக்கள் கிடைக்கின்றன.
இதன் பிறகு, ‘ஊ’ என்னும் உயிர் எழுத்து தோன்றுகிறது. இதனால், ‘தொண்ணூ’ என்பது ஏற்படுகிறது. அதே சமயத்தில் வேறு மாறுபாடுகளும் ஏற்படுகின்றன.
நிலைமொழியிலுள்ள ப,ஃ எழுத்துக்கள் மறைய, எஞ்சிய எழுத்து ‘து’ என்பதாகும். இதிலுள்ள ‘உ’ என்னும் உயிர் எழுத்து மட்டும் நின்று, ‘த்’ என்னும் மெய் எழுத்து ‘ற்’ என்னும் மெய்யெழுத்தாய் மாறிய பின்னர், அதற்கேற்ப ‘ற்’ என்பதன் மீது ‘உ’ எழுத்து அமைந்து ‘று’ என ஆகிறது. இவ்வகையில் தொண்ணூறு என்னும் சொற்றொடர் ஏற்படுகிறது.
இனி, ‘தொள்ளாயிரம்’ என்பதற்குத் தொல்காப்பியம் சூத்திரம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.
‘ஒன்பான் முதனிலை முந்து கிளர்ந்தற்றே
முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகாரம் மெய்கெட
ஊ ஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும்’
- தொல் : சொல் : 463
‘ஒன்பது, ‘நூறு’ என்னும் இந்த இரு சொற்களும் சேர்ந்து எவ்வாறு தொள்ளாயிரம் என மாறுகின்றன என்ற விவரத்தை இந்தச் சூத்திரம் கூறுகிறது.
முன் சூத்திரத்தில் 445-வது எழுத்ததிகார சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி ‘த்’ என்னும் மெய் எழுத்து ‘ஒ’ என்னும் உயிர் எழுத்துடன் சேர்ந்து ‘தொ’ என அமைகிறது.
பின்னர் அடுத்துள்ள, ‘ன்’ என்னும் எழுத்து ‘ள்’ என மாறுவதுடன் இரட்டிக்கிறது. இப்போது ‘தொள்ள்’ என்ற அமைப்பு ஏற்படுகிறது. பின்னர் வருமொழி ‘நூறு’ என்பதிலுள்ள முதலெழுத்து ‘நூ’ என்பது.
இதில் ‘ந்’, ‘ஊ’ என்னும் இரண்டெழுத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் ‘ந்’ என்னும் மெய் எழுத்து மறைந்து விடுகிறது. எஞ்சியுள்ளது ‘ஊ’ என்னும் உயிர் எழுத்தாகும். இது ‘ஆ’ என மாறுகிறது.
பின்னர் ‘இ’, ‘ர’ என்னும் இரண்டு எழுத்துகள் தோன்றுகின்றன. ஈற்றில் உள்ள எழுத்தும் கெடுகிறது.
எனவே, நிலைமொழியும் வருமொழியும் ‘தொள்ள’ xஆ இ, ர, ம் என மாறுகின்றன. வருமொழியில் அடுத்தடுத்து வரும் ஆ இ என்னும் எழுத்துகள் இடையே ‘ய்’ என்னும் உடம்படு மெய் வருகிறது. இந்த வகையில் ‘தொள்ளாயிரம்’ என்னும் சொற்றொடர் அமைகின்றது.
ஆனால், நச்சினார்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு அடிக்குறிப்பு எழுதியுள்ள புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள், தொல்காப்பியத்திலுள்ள இந்த இரண்டு நூற்பாக்களின் முடிவு, ‘எவ்வகையிலும் பொருந்தாது’ என்கிறார்.
திரு. பாவாணரது கொள்கை வள்ளல் பெருமான் எடுத்துக் காட்டிய கருத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒன்பது என இப்போது நாம் கூறி வரும் எண், பண்டைக் காலத்தில் ‘தொண்டு’ என வழங்கி வந்ததாகவும், ஆனால், அது தொல்காப்பியர் காலத்தே வழக்காறற்று விட்டதாகவும், அவர் காலத்திற்கு முன் ‘9’ என்பது தொண்டு எனவும், 90 என்பது தொண்பது எனவும், 900 என்பது தொண்ணூறு எனவும், 9000 என்பது தொள்ளாயிரம்’ எனவும் வழங்கி வந்ததாகவும், தொண்டு என்ற சொல் மறைந்து விடவே, அதற்கு தொண்பது என்பதையும், 90 என்னும் எண்ணுக்குத் தொண்ணூறு என்பதையும், 900 என்பதற்குத் தொள்ளாயிரம் என்பதையும், மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர் எனவும் பாவாணர் கூறுகின்றார்.
ஆனால், பத்திலிருந்து ஒன்று குறைந்த காரணமாக, ஒன்பது என்னும் சொல் அமைந்ததாகச் சொல்லப்படும் கருத்தை பாவாணர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு அவர் கூறும் காரணமும் உள்ளது.
பத்தில் ஒன்று குறைந்தது ஒன்பது என்றால், அதே முறை தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் சொற்றொடர்களுக்கும் பொருந்த வேண்டும். ஆனால், இந்த முறை இந்த சொற்றொடர்களுக்குப் பொருந்துவதில்லை. ஆதலால் அவர்
- தொண்டு + பத்து தொண்பது எனவும்,
- தொண்டு + நூறு தொண்ணுறு எனவும்
- தொண்டு + ஆயிரம் தொள்ளாயிரம்
எனவும் கொள்வது முறை எனக் கூறுகிறார்.
இது வள்ளலார் ஆய்வு
“தொண்ணூறு”, “தொள்ளாயிரம்” என்னும் சொற்றொடர்களில், ‘தொல்’ என்பது அமைந்துள்ளதாக வள்ளல் பெருமான் எண்ணுகிறார்.
“தொல் நூறு = தொண்ணூறு, தொல் + ஆயிரம் = தொள்ளாயிரம்” எனவும், ‘தொல்’ என்பது ஒன்று குறையத் தொக்கியது எனவும், ‘தொண்மை, தொல் எனப் பிரிந்தது.
வழக்கத்தில் தொள்ளாயிரம், தொண்ணூறு என மருவியது எனவும், ‘பத்திடத்திற்கு குறைந்த முன் ஆயிரம் என்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க’ என்று வள்ளலார் கூறுகின்றார்.
இப்போது வள்ளலார் எண்ணத்தைச் சிந்திப்போம். ஒன்று குறைந்த பத்து ஒன்பது ஆகிறது. இங்கும் தொல் என்பதை வரவழைத்துக் கொள்ளலாம். தொல் + பத்து = தொன்பது என மாறிய பின், ஒன்பது என மாறலாம். தெலுங்கு மொழியில் ஒன்பது என்பதைத் ‘தொம்மிதி’ என இன்றும் கூறுகிறார்கள்.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுவது போல, தொண்டு + நூறு என்னும் சொற்கள் இணையும்போது, தொண்டு என்னும் சொல்லிலுள்ள டுகரம் கெடுகிறது. அப்போது தொண்+நூறு, தொண்ணூறு என மாறலாம். ஆனால், இதே விதி, ‘தொள்ளாயிரம்’ எனும் தொடருக்குப் பொருந்துவதில்லை.
தொண்டு + ஆயிரம் என்னும் சொற்கள் இணையுமிடத்து, டு என்னும் எழுத்து கெடுமிடத்து, தொண்+ஆயிரம் = தொண்ணாயிரம் என ஆக வேண்டும். இப்போதும் எட்டு+ஆயிரம் என்னும் சொற்கள் புணர்ந்தவிடத்து எண்ணாயிரம் எனக் கொள்கிறோம். இது போன்றே தொண்ணாயிரம் எனவும் கூறி வந்திருக்கலாம். ஆனால், இவ்வாறு கூறுதல் வழக்கமில்லை. இந்த நிலையில், வள்ளலார் கூறுவதில் உண்மை என்ன என்று சிந்திப்போம்.
வள்ளலார் கூறும் முறை கழித்தல் திட்டத்தில் அமைந்துள்ளது. தொல் என்பது அந்த அந்த எண்ணுக்கேற்ப, ஓரெண் குறைந்துள்ளது என்பதைக் குறிக்கும் சொல்.
பத்து என்பதன் முன், அதில் அமைந்துள்ள ஒரு பாகம் குறைந்துள்ள எண்ணைக் காட்ட, அதன் முன் தொல் என்றும் அமைக்கப்பட்டது எனக் காட்டுகிறார்.
தொல் + பத்து = தொன்பது. இதுவே, பின் ஒன்பது என மாறிற்று எனலாம். தொல் + நூறு என்பதில் நூறு என்னும் எண்ணிலிருந்து அதன் பத்தில் ஒரு பாகம் குறைந்தது தொண்ணூறு ஆகும். இது போன்றே தொல்+ஆயிரம் என்பதில் ஆயிரம் என்னும் எண்ணிலிருந்து அதன் பத்தில் ஒரு பாகம் குறைந்தது தொள்ளாயிரம் எனவும் வள்ளல் பெருமான் எண்ணினார்.
இவர் கூறுவதில், தற்போது புதிததாக வந்துள்ள தசமப் புள்ளி முறையும் (Decimal System) ஒரு வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.
தொல் + நூறு என்னும் சொற்கள் நன்னூல் 1-237-ல் கூறுவதற்கேற்ற இலக்கண முறைப்படி, தொண்ணூறு என ஆக வேண்டும். இதே போலவே தொல் + ஆயிரம் நன்னூல் 1-205 இலக்கண முறைப்படி தொல்லாயிரம் என ஆக வேண்டும். ஆனால், ‘ல’ கரத்திற்குப் பதிலாக ‘ள’ கரம் மேற்கொள்ளப்படுவது எளிது. வடிவத்தில் வேறுபாடு இருந்தாலும், இந்த இரண்டின் ஒலி வேறுபாட்டைக் கற்றோர் அன்றி-மற்றோர் சுலபமாகப் புரிந்துக் கொள்ள இயலாது.
எனவே, தொல் என்பது தொள் என மாறி, தொள் + நூறு தொண்ணூறு எனவும், தொள் + ஆயிரம் = .தொள்ளாயிரம் எனவும் மாறி இருக்கலாம். இந்தக் கருத்து சுலபமாக இருக்கிறது. ஆதலால், பள்ளிச் சிறுவர்கள் இந்த எளிய முறையைப் புரிந்துக் கொள்ள சிரமம் இராது என்பது வள்ளல் பெருமான் முடிவு ஆகும்.
தொல் என்பது, ஒன்று அல்லது பத்தில் ஒரு பாகம் குறைந்தது என்ற கொள்கைக்கு, வேறு சான்று ஏதாவது இருக்கிறதா என்று காண்போம்.
“ஒன்றூனமான பத்து ஒன்பது : அஃது அக்காலத்துச் சொல் என்கிறார் மயிலை நாதர் என்ற நன்னூல் உரையாளர்.
திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் பாடியத் ‘தனிக்குறுந்தொகை’, என்பதின் ஒன்பதாவது பாடலில் :
‘ஒன்ப தொன்பது யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்களஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமோ’
என்ற பாடலில், நான்காவது அடியிலுள்ள ‘ஒன்பதொத்து நின்றென்னுளொடுங்குமே’ என்னும் வாக்கியம், “என்னுடைய உரைகள் எவ்வளவு விரிந்து அமைந்தாலும், முடிவில் என் ஆணவ நிலையில் என் உள்ளத்தே ஒடுங்கும்” என்னும் பொருளைக் கொண்டது என்று திருத்தொண்டர் புராண உரையாசிரியர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் பின்வருமாறு கூறுகிறார்.
என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும், முடிவில் ‘நான்’ என்ற அகங்கார நிலையினவாய், என்னையே சுற்றி என்னகத்தே அடங்கும். அது ஒன்பது என்னும் எண்ணினைப் போலவே
இது எப்படி என்றால், ஒன்பதை எதனால், எத்தனை முறை பெருக்கினாலும், பெருக்கி வந்த எண்ணில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒன்பதே வரும் என்பதைப் போல.
- 9 x 2 = 18 = 8 + 1 = 9 9 x 3 = 27 = 2 + 7 = 9
- 9 x 4 = 36 = 6 + 3 = 9 9 x 5 = 45 = 4 +5 = 9
- 9 x 6 = 54 = 5 + 4 = 9 9 x 7 = 63 = 6 + 3 = 9
- 9 x 8 = 72 = 7 + 2 = 9 9 x 9 = 81 = 8 + 1 = 9
- 9 x 144 = 1926 = 1 + 2 + 9 + 6 = 18 = 1 + 8 = 9
ஒன்பது என்ற எண் ஒன்று, இரண்டு போன்ற மற்ற எண்களைப் போலத் தனக்கென்று ஒரு தனிப் பெயர் இல்லாமல், பின்வரும் பத்து என்பதில் ஒன்று குறைந்தால் எதுவோ, அது என்று தெரிந்து கொள்ளுமாறு பெயர் கொண்டிருத்தல், பின்வரும் பாசமாகிய உலகமும், முன்நிற்கும் பதியும் அல்லாதது என்றறியப்பட்டும் தனித்து நிற்காமல், பதியினையோ அன்றிப் பாசத்தையோ சார்ந்து நிற்பதும் ஆன நிலையின் உள்ள உயிரை ஒத்திருக்கின்றது என்பதும், கடிகாரயந்திரங்களிலும், ஒன்பதைக் குறிக்க IX எண், (X-ல்குறைக்க என்றது பொருள்பட) குறியீடு கொள்வதும், பிறவும் இங்கு சிந்திக்கத் தக்கதாகச் சிறக்கின்றதல்லவா?
இங்கே சிவக்கவிமணி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள IX என்னும் எண்முறை ரோமன் எண் முறை வகையைச் சார்ந்தது.
எனவே, வள்ளல் பெருமான் இங்கே தொல்காப்பிய சொற்றொடர்கள் இரண்டுக்கு எடுத்துக் கூறிய கருத்துகளுக்கு மயிலை நாதர், சிவக்கவிமணி என்ற இரண்டு பேரறிஞர்கள் ஆய்ந்த உண்மை அரணாக உள்ளது. இந்த இலக்கண ஆய்வு நுட்பம் எழுத்தாளர்களுக்கும் வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி அருமையை உணர முடியும்.
இனி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்ற எண்களில் தமிழ்ப் பெயர்கள் ஏன் ‘உ’கரத்தில் முடிந்திருக்கிறது என்று வள்ளல் பெருமானே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குக் காரணம் உண்டு என பெருமானே குறிப்பாகத் தெரிவித்துள்ளாரேயன்றி, இதைப்பற்றி அவர் இவ்விடத்தில் கூறவில்லை.
ஆனால், ‘ஓம்’ என்னும் பிரணவத்தில் அகரமாகிய நாதமும், மகரமாகிய பரவிந்தும் அடங்கியுள்ளன என்று வள்ளலார் கூறியுள்ளார்.
‘ஓ’ என்னும் எழுத்திலுள்ள அகரத்தைப் பற்றி வள்ளலார் வேறோரிடத்தில் விளக்கியுள்ளார். உகரம் காத்தல் தொழிலைக் காட்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
உகரம் இனிய வகையில் உயிரை இறைவனிடம் அழைத்துச் சென்றவிடத்து தன் நிலையிலிருந்து ஒருபடி தாழ்ந்தாலும், அது தாழ்த்தப்படும் என்பதை உலகுக்கு உணர்த்த ஒன்பது என்னும் சொல் அமைந்துள்ளது எனவும் கொள்ளலாம்.
எனவே, பத்திரிகை ஆசிரியர் குழுவில் திறம் வாய்ந்த ஓர் இலக்கண வித்தகரை நியமித்துக் கொள்வது பத்திரிகைக்கும் நற்பெயரை நடமாட விடும்.
ஏனென்றால், இலக்கியம், இலக்கணம், கலை வித்தகம், சிறந்த கவிதை ஆற்றல், திறனாய்வாண்மை திறம், அறிவியல் அற்புதங்கள் அறிந்த தெளிவு, புறநானூற்று வீர விளையாடல்களை விளக்கி எழுதும் விந்தை ஆய்வு, அனைத்தும் ஒரு பத்திரிகை நடத்தும் குழுவில் இருந்தால் அது சகலகலா வல்லமை பலம் பெற்ற இதழ் என்றும் ‘இந்து, தினமணி’போல புகழ்க் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டே இருக்குமல்லவா?வாழ்க்கைச் சுருக்கம்
இயற்பெயர்: அ.நா.வாசுதேவன்
புனைப்பெயர்:என்.வி. கலைமணி
சொந்த ஊர்:வடார்க்காடு மாவட்டம்,
வந்தவாசி வட்டம், அமுடுர் சிற்றூர்.
பிறப்பு: 30 திசம்பர் 1932ஆம் ஆண்டு
தந்தை பெயர்: அ.கு.நாராயணசாமி, காவல்துறை (ஓய்வு)
வாழ்க்கை துணைநலம் புலவர்.T. உமாதேவி பிலிட்,
ஆதம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, பெண்பாற் புலவர்
மக்கட்பேறுகள்: வா. மலர்விழி, வா. அறிஞர் அண்ணா,
வா.பொற்கொடி, வா. திருக்குறளார்
பெயரர்கள்: க. கணேஷ் கார்த்திக், க. அனிதா
வே.மகேஷ்,வே.ஜனனி
பணி:1950ஆம் ஆண்டு முதல்
2005 ஆம் ஆண்டு இன்றுவரை பத்திரிகையாளர்
கல்வி புலவர்,எம்.ஏ (வரலாறு)
சாதனைகள்: அரசியல், வரலாறு, அறிவியல், இலக்கியம்,தமிழாய்வு,
நாடகம் சம்பந்தப்பட்ட 127 நூல்கள் எழுதியவை “சாம்ராட் அசோகன்”
வரலாற்று நாடகம் 30 நகர்களில் நடிகர் ஹெரான் இராமசாமி நடித்திட கதை
வசனம் எழுதியது: “இலட்சியராணி” என்ற நாடகம் கலைவாணர் NSK
தலைமையில் சென்னை, ஒற்றைவாடை கலையரங்கில் 6.4.1952 அன்றும்,
விழுப்புரம் நகரில் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில்
திருக்குறளார் வீ. முனிசாமி எம்.பி., அவர்கள் 1952, சனவரி மாதம் 29,30
ஆகிய இரு நாட்கள் நடத்தியது. 1952ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் துறை,
அஞ்சல் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் சென்னை வந்தபோது ஐ.என்.ஏ திடல்
என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய காங்கிரஸ் தலைமை அலுவலகத்
திடலுக்குள் தன்னந்தனியாக நின்று கருப்புக்கொடியை அவரிடம் கொடுத்து
கைதாகி 2 வாரம் சிறை சென்றது. மற்றும் பல சாதனைகள் உண்டு.
விரிவஞ்சி நிறுத்துகிறோம்.
அன்பன்
புலவர். என். வி. கலைமணி.எம்.ஏ.,