இதழியல் கலை அன்றும் இன்றும்/விடுதலைப் போரில்



5

விடுதலைப் போரில்
தமிழ்ப் பத்திரிகைகள்

திக்கவெறி எனும் ஆணவ சிகரத்திலே வீற்றிருக்கும் ஆங்கிலேயர்களின் அகம்பாவ ஆணிவேரை அறுத்தெறியவும், இந்தியத் திரு நாட்டுக்குரிய விடுதலை ஜோதியை நாடு முழுவதும் ஒளிபடரச் செய்யவும், பம்பாய் நகரிலுள்ள கோகுல் தாஸ், தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில், 1885 - ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 28 - ஆம் நாள் நண்பகல் 12:15 மணிக்கு, டபிள்யூ.சி. பானர்ஜி சுதந்தர விளக்கை ஏற்றி வைத்து ஒளி பரப்பினார்! தாதாபாய் நவ்ரொஜி அந்தக் காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

தமிழ் நாட்டின் தலை நகரமான சென்னை மாநகரிலே வசித்து வந்த முக்கிய தலைவர்களும்,‘சுதேச மித்திரன்’, ‘இந்து’ ஆங்கில பத்திரிகை ஆசிரியர்களும் ‘தேசிய இயக்கப் பிரதிநிதிகளும்’ இந்த அகில இந்தியத் தேசியப் பேரவைக் காங்கிரஸ் கூட்டத்திற்குச் சென்று கலந்து கொண்டார்கள்.

வங்கக் கிறித்துவரும், பாரிஸ்டருமான பானர்ஜியின் பெயரை, வங்க மாநிலத்தில் ஐ.சி.எஸ். அதிகாரியாகப் பணிபுரிந்த ஆலன் அக்டேவியன் ஹியூம் என்பவர் தனது பதவியை விட்டு விலகி, காங்கிரஸ் பேரவைத் தலைவரை அந்தக் கூட்டத்தில் முன் மொழிந்தார். 

சென்னை நகரிலிருந்து பம்பாய் சென்று தேசியக் காங்கிரஸ் துவக்க விழா கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் பத்திரிகையாளர்களாக இருந்ததால், அவர்களும், அவர்களது பத்திரிக்கைகளும் அன்று முதல் அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரவை இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பெரிதும் துணை நின்று பணியாற்றினார்கள்.

அவர்களில் ‘சுதேச மித்திரன்’ நாளேட்டை நடத்திய தி.ஜி.சுப்பிரமணிய ஐயரும், ‘தமிழ்நாடு’ என்ற தினசரியை நடத்திய டாக்டர் வரதராஜலு நாயுடுவும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைச் சந்தித்தவர்கள்” எண்கிறார் அ.மா.சாமி தனது “தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி என்ற புத்தக அணிந்துரையில்.

இந்திய மக்களிடம் இருந்த சுதந்தர எழுச்சியுணர்வுகளை ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தத் தூண்டுதல்களாக விளங்கியவை தமிழ்ப் பத்திரிகைகளே என்றால் அது மிகையன்று.

தமிழ் நாட்டில் முதன் முதலாகத் “தமிழ்ப் பத்திரிகை” என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. அந்த ஏடு முழுக்க முழுக்க இயேசு கொள்கைக்காகவே பணியாற்றியது என்று மு.இ.முகம்மது மரைக்காயர் எமுதிய ‘தமிழ் இலக்கியக் கொள்கை’ என்ற நூல் கூறுகின்றது.

ஆனால், அ.மா.சாமி என்பவர், தமிழின் முதல் பத்திரிகை 1812 - ஆம் ஆண்டில் வெளிவந்தது என்றும், அதன் பெயர் “மாசத் தினச் சரிதை” என்றும் கூறுகின்றார்.

கி.பி.1812 - ஆம் ஆண்டுக்கும் - 1882 - ஆம் ஆண்டில் ‘சுதேச மித்திரன்’ தமிழ் வார இதழ் வெளிவந்ததற்கும் இடைபட்ட 70 ஆண்டுகளில் எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் வரவில்லையா என்று ஆய்ந்தால், 1831 ஆம் ஆண்டில் கிறித்துவ சங்கத்தினர் ‘தமிழ் மேகசி’ன் (Tamil Magazine) என்ற ஒரு பத்திரிகையை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

பெர்சிவல் பாதிரியார் என்ற ஓர் ஆங்கிலேயர். சென்னை நகரில், 1856 ஆம் ஆண்டில் “தினவர்த்தமானி” என்ற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையை நடத்தி இருக்கின்றார். இந்த வார ஏடு செய்திகளுக்கு மட்டுமே முதலிடம் தராமல், அறிவியல் வளர்ச்சிகள் பற்றிய புதிய கண்டு பிடிப்புக்களுக்கும், இலக்கிய ஆய்வுகட்கும், கலை உணர்வுகளுக்கும், பிற கட்டுரைகளுக்கும் இடமளித்து அவர் பத்திரிகையை நடத்தியுள்ளார். அதனால், ‘தினவர்த்தமானி’ என்ற இந்த தமிழ் வார ஏடு; தமிழப் பத்திரிகை உலகில் முக்கியமான ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடும் நிலை பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்று வந்த கல்வித் துறை; ஒரு பத்திரிகையை நடத்திட ஆதரவளித்து வந்தது. அந்த பத்திரிகையின் பெயர் ‘ஜநவிநோதினி’. இந்த இதழ் 1870-ஆம் ஆண்டில் வெளி வந்தது. இந்தப் பத்திரிகை பிரிட்டிஷார் உதவியோடு வெளியிடப்பட்டதால் இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இருக்கும் கல்வி சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து இந்த திங்கள் ஏடு வெளியிட்டது.

தமிழ் நாட்டுப் பத்திரிகை உலக வரலாற்றில் முன்னோடியாக விளங்கியவர்களில் மற்றொருவரும் இருந்துள்ளார். அவர் பெயர் சே.ப. நரசிம்மலு நாயுடு என்பதாகும். சே.ப. நரசிம்மலு நாயுடு என்பதன் முழு பெயர், சேலம் பகடால நரசிம்ம நாயுடு என்ற விவரத்தை திரு. பெ.சு. மணி அவர்கள் தனது ‘காரல் மார்க்சின் இலக்கிய இதயம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேலம் பகாடல நரசிம்மலு நாயுடு, 1878-ஆம் ஆண்டில் சேலம் நகரிலிருந்து ‘தேசாபிமானி’ என்ற பத்திரிகையைத் தமிழில் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கச் சம்பவமாகும்.

கோயம்புத்துர் நகரிலிருந்து ‘கலாநிதி’ என்ற வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிகையை 1881-ஆம் ஆண்டில் வெளி வந்தது. இந்த இதழ்தான் முதன்முதல் வாரம் இரண்டு முறை வெளிவந்த முதல் பத்திரிகை என்பதும் மறக்க முடியாத பத்திரிகைக் குறிப்பாகும். 

தற்சிந்தனையாளர் சங்கத்தினர் Free Thinkers Association என்ற சங்கமைப்பாளர்கள்; ‘ஃபிரி திங்கர்’ (Free Thinker) என்ற இங்லீஷ் பத்திரிகையை 1870-ஆம் ஆண்டில் நடத்தினார்கள். இதே கால வட்டத்தில் 1860ல் ‘மெட்ராஸ் டைம்ஸ்’, 1868ல் ‘மெட்ராஸ் மெயில்’ 1886-ஆம் ‘தஸ் பெக்டேட்டர்’ என்ற பத்திரிகைகளும் வெளிவந்தன.

சென்னையில் லட்சுமி நரசு செட்டியார் நடத்திய ‘கிரசண்ட்’, ராஜா சர் மாதவராவ் வெளியிட்ட ‘நேட்டிவ் பப்ளிக் ஒப்பீனியன்’, இராமச்சந்திர ஐயரின் ‘மெட்ராசி’, பரமேஸ்வரம் பிள்ளையின் ‘மெட்ராஸ் ஸ்டான்டர்ட்’ என்ற பத்திரிகைகள் வெளி வந்து தேசத் தொண்டாற்றியதை நாம் மறக்க முடியாது.

இந்தப் பத்திரிகைகள் எல்லாம் வெளிவந்த பிறகுதான், 1882-ஆம் ஆண்டில் ஜி. சுப்பிரமணிய ஐயரால் ‘சுதேச மித்திரன்’ என்ற தமிழ் வார இதழ் வெளி வந்துள்ளது.

அதுவரை, தமிழில் நாளேடாக எதுவும் வெளி வந்ததாக்க் குறிப்பேதும் இல்லை. 1887-ஆம் ஆண்டில் ‘லலிதப்ரஸ் நோதயா’ அதாவது ‘லலிதபிரசனோதயா’ என்ற பெயரில் ஒரு தமிழ் தினசரி ஏடு வெளிவந்துள்ளது. இதுதான் தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நாளேடு ஆகும். இந்தப் பத்திரிகை நீண்ட நாள் நடத்தப்படவில்லை.

இதற்குப் பிறகுதான், 1892-ஆம் ஆண்டில் ஜி. சுப்பிரமணிய ஐயரால் வார ஏடாக நடத்தப்பட்ட ‘சுதேச மித்திரன்’ தமிழ் நாளேடாக வெளிவந்து நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு அரசியலுக்குத் தொண்டாற்றியதை நாம் நன்கு அறிவோம்.

இதன் ஆசிரியரான ஜி. சுப்பிரம்ணிய ஐயர்தான், 1885-ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் துவக்கப்பட்ட அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்களிலே ஒருவராவார்.

‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் சிறந்த தேசியவாதி, அவர் தனது 4.5.1887-ஆம் நாளிதழில் எழுதியதாவது :

“நம் தேசக் கடைகளில் அரிசி, பருப்பு, காய்கறி தவிர மற்றவை எல்லாம் ஆங்கிலேயர் சாமான்களேயன்றி நமது சாமான்கள் அல்லவே! அப்படிப்பட்ட சாமான்களை சிருஷ்டிக்க நமது தேச மக்களுக்கு திறமை இல்லையே! ஐக்கியம் இல்லையே! தைரியம் இல்லையே! ரோஷம் இல்லையே!” என்று ஐயர் எழுதியதாக, அ.மா. சாமி தனது ‘தமிழ் இதழ்கள் - தோற்றம் - வளர்ச்சி’ என்ற புத்தகத்தின் குறிப்பிடுகிறார்.

இதே ஜி. சுப்பிரமணிய ஐயர்தான், ‘தி இந்து’ (The Hindu; என்ற இங்லீஷ் நாளேடு பத்திரிகைக்கும் உரிமையாளராக இருந்தார். எனவே, இந்த வீர தீரமான பத்திரிகையாளரே விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்ட முதல் பத்திரிகையாளர் என்று உறுதியிட்டு அறுதியை இறுதியாகவே கூறலாம் இல்லையா?

இந்த ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு Hindu நாளேட்டை - நடத்திட சேலம் வழக்கறிஞர் விசயராகவாசாரியர் பெரும் உதவியாக உழைத்தார். ‘இந்து’ பத்திரிகை முதன் முதலாக வார ஏடாக 20.9.1878-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளி வந்தது. அதன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயருடன் அவருக்குப் பின்பலமாக சி. கருணாகரமேனன், கே. சுப்பாராவ், கே. நடராஜ ஐயர் ஆகியோர் பேருதவி புரிந்தார்கள்.

அதே ‘இந்து’ வார இதழ், 1883-ஆம் ஆண்டில் வாரம் மும்முறை பத்திரிகையாக வெளிவந்தது. பத்திரிகை வரலாற்றில் வார ஏடாகவும், வாரம் மும்முறை இதழாகவும் வெளிவந்த ஒரே பத்திரிகை ‘தி ஹிந்து’தான். அதற்குப் பிறகே ‘இந்து’ நாளேடாக வெளிவந்து தேசப் பணி புரிந்தது.

‘இந்து’ பத்திரிகையின் சட்ட ஆலோசகராக இருந்த எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்து’ இதழை 1905-ஆம் ஆண்டில் வாங்கி நடத்தினார். அன்று முதல் இன்று வரை இந்து நாளேடு, உலக நாளேடுகளில் ஒன்றாக, உலக நாடுகளால் கருதப்பட்டு விற்பனையாகி, பெயரும் புகழும் பெற்று நிலைத்து நின்று மக்கட் தொண்டாற்றி வருகின்றது. 

இதே கால கட்டத்தில் 1906-ஆம் ஆண்டில் திருநெல்வேலி நகரிலிருந்து வேதமூர்த்தி முதலியார் என்பவர் ‘சர்வஜன. மித்திரன்’ என்ற இதழை நடத்தி வந்தார்.

20-ஆம் நூற்றாண்டில்

வந்த பத்திரிகைகள்

இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதிக் காலத்தை விடுதலைப் போரின் உச்சக்கட்டக் காலமாகக் கூறலாம். இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பொங்குமாங் கடலலைகளைப் போன்ற தேசிய உணர்ச்சிகள் மக்களிடையே பொங்கிக் கொண்டிருந்த உத்வேகத்தை; அண்ணல் காந்தியடிகளின் அறப்போர்கள் நடத்திக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறைகள், போர்க் கள வீரர்கள் மாறிமாறி எய்து கொண்டிருக்கும் அம்புகளைப் போல பறந்தோடி வந்து மக்களது விடுதலை உணர்வுகளைக் காயப்படுத்திப் புண்ணாக்கி, குருதியைக் கொப்பளிக்க வைத்துக் கொண்டிருந்தன.

இக் காலக் கட்டத்தில் இந்தியா முழுவதுமுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஆட்சிக்கு எதிராக அதனதன் கண்டனக் கருத்துக்களை வெளியிட்டுப் போராடிக் கொண்டிருந்தன. குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் தத்தம் கடமைகளை உணர்ந்து திறம்படச் செயலாற்றிய அருமை பெருமைகளை இப்போது காண்போம். -

‘இந்து’

நாளேடு

இந்து பத்திரிகை, தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகில் ஒரு விடிவெள்ளி ஏடாகும். ஜி. சுப்பிரமணிய ஐயர், சேலம் வழக்கறிஞ மேதை விசயராகவாச்சாரியார் போன்ற திறமைமிக்கவர்களின் செயலாற்றலால், நிர்வாக நிபுணத்துவத்தால், இன்று ‘இந்து’ உலக அளவில் உயர்ந்து ஒளிசிந்தும் விடிவெள்ளியாகத் திகழ்கின்றதையும்; நம் கண்ணெதிரிலேயே காட்சியாகக் காண்கின்றோம். 

அதன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர்; இந்தியத் தேசியக் காங்கிரஸ், இயக்கத்தின் நிறுவனத் தூண்களுள் ஒருவராகவும், சேலம் விசயராகவாச்சாரியாரின் தேச உணர்ச்சித் தியாகங்களின் செயற்புகழாலும் ‘இந்து’ நாளேட்டு அந்தக் காலக் கட்டத்தில் வானோங்கி வளர்ந்தது. அதற்காக அரும்பாடு பட்டவர்களும் அந்த இருவரே ஆவர். அதே நேரத்தில் அதன் செய்திகள் வெளியிடும் போக்குகளாலும், மக்கள் அந்தப் பத்திரிகை மீது வைத்திருக்கும் நாட்டுப் பணி சேவைகளாலும், ‘இந்து’ இன்றும் மக்களது மனவானிலே கொடிக் கட்டி பறந்தாடி வருகிறது.

‘சுதேசமித்திரன்’

நாளேடு தொண்டு

‘சுதேசமித்திரன்’ இதழ் 1882-ஆம் ஆண்டில் வாரப்பத்திரிகையாக தவழ்ந்து, வாரம் மும்முறை பத்திரிகையாக 1887-முதல் நடந்து, 1889-முதல் நாளிதழ் என்ற வாலிபமாகி, பிறகு வீழ்ந்துபட்டது. அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரவை என்ற இன்றைய பேரழகுக் கோட்டையை எழுப்பிய கலைஞர்களுள் ஒருவராகத் திகழந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் என்பவரே, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆசிரியராகவும் விளங்கியவர் ஆவார். எந்தத் தேசிய எழுச்சியோடு அவர் அதைத் துவக்கினாரோ அதே புரட்சியோடு சுதேசமித்திரனையும் அவர் நடத்தினார் என்பது மறக்கத் தக்க சம்பவமன்று.

மக்கள் கவி

பாரதியார்

விடுதலைக் கவிஞர், மக்கள் கவிஞர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார், அதே சுதேசமித்திரன் நாளேட்டில் 1904-ஆம் ஆண்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய தேசி உணர்ச்சிக் கருத்துக்களாலும், செழுமையான தமிழ் உரை நடையாலும், நாட்டுப் பற்றுக் கொந்தளிக்கும் தேசியக் கீதங்களாலும், சுதேசமித்திரன் ஏடு மக்களிடையே பரபரப்பான  விற்பனையையும், தேசிய சொரணையையும் உருவாக்கியது. மக்கள் அவரது எழுத்துக்களால் உணர்ச்சி பெற்று விடுதலை வீரர்களானார்கள் என்பது உண்மையுள் உண்மை ஆகும். ஏறக்குறைய நான்கு ஆண்டு காலம் ‘இந்தியா’ என்ற திங்கள் இதழை நடத்தினார். இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்த வங்காளத்தைப் பிரிட்டிஷார் பிரித்தபோது, இந்தியாவே கொந்தளித்து எழுந்தது. பாரதியார் தீவிரவாத உணர்வுடைய பாலகங்காதர திலகருடன் சேர்ந்துக் கொண்டு, அவரது கருத்தை ஏற்று, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வேரறுக்கும் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். அதனால் மக்கள் இடையே பாரதி ஒரு தேசிய கவி என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தியா மாத ஏட்டில் 10.4.1909-ஆம் ஆண்டன்று ‘தேச பக்தி’ என்ற தலைப்பிட்டுக் எழுதியக் கட்டுரையில், ‘பாரத் தேசத்து முப்பது கோடி ஜனங்களுக்குத் தொண்டு செய்வதைவிடச் சிறந்த மதம் வேறு கிடையாது’ என்ற விவேகானந்தர் அடிகளின் தேசப் பற்றுக் கருத்தை எதிரொலித்து, துருவன், பிரகலாதன் முதலியோர் விஷ்ணுவிடத்தில் செலுத்திய பக்தியை நாம் நம் ஸ்வதேசத்தினிடத்திலே செலுத்த வேண்டும்’ என்று பாரதியார் எழுதினார்.

மக்கள் கவி பாரதி, வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து தமிழில் கவிதைகள் எழுதியிருந்தாலும், ‘பாலபாரதி’ என்றதோர் வாரப் பத்திரிகையை அவர் இங்லீஷ் மொழியில் நடத்தினார்.

விடுதலைக் கவிஞர் பாரதியாரின் வெள்ளையர் ஆட்சி எதிர்ப்பு விமர்சனக் கட்டுரைகள், மக்களது விழிப்புணர்வுகளைத் தட்டி எழுப்பி விரைவுபடுத்தும் அக்னிக் கோள்களாக அமைந்தன.

காங்கிரஸ் ஓர் ஆலயத்தைப் போன்றது. என்ன வரினும் நாம் அதைப் பாதுக்காக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய இயக்கத்தில் தீவிரமாக இருந்த கிருஷ்ணசாமி ஐயர், 1909ல் பிரிட்டிஷ் அரசின் கீழ் நீதிபதி பதவியை லஞ்சம் போல் ஏற்றதைப் பாரதியார் மிக வன்மையாகக் கண்டித்தார்.

‘அந்நிய ஆட்சிமீது ஆத்திரத்தை வளர்த்து விட்டால் மட்டும் தேசிய உணர்வு உறுதி பெற்று விடாது என்றார். ஆக்கவேலைகளைச் செய்து அதைக் காத்து வளர்க்க வேண்டும் என்பதைப் பாரதியார் தெளிவாக மக்கட்கு எழுதி விளக்கினார். கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி, நாட்டத்தில் கொள்ளாதவர்களைத் தனது பாடல் அடிகளாலேயே கேலி செய்தார். அவர்களைப் பற்றிப் பரிதாபப் பட்டார் பாரதியார்’ என்று திரவியம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூலில் பாரதியார் நாட்டுப் பற்றைப் பற்றி பெருமையோடு எழுதுகிறார்.

இத்தகைய ஓர் உணர்ச்சியின் அக்கினிக் குண்டமாக இருந்த பாரதியார், ஏன் ‘சுதேசமித்திரன்’ தின ஏட்டை விட்டு விலகினார்? இதுவும் ஒரு வினா தானே!

இந்தியத் தேசியக் காங்கிரஸ் இயக்கம் 1885-ஆம் ஆண்டு துவங்கியது முதல்; அண்ணல் காந்தியடிகள் அந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய 1920- ஆம் ஆண்டு வரையில் ஆண்டாண்டுதோறும் இந்திய முக்கிய நகரங்களில் கூடிக் கலந்துரையாடி, இந்தியர்கள் வேண்டுதல் மனுக்களை ஆட்சியாளர்களுக்கு அனுப்பிடத் திரட்டி, விருந்துண்டு, மிதவாத பேச்சுக்களை அவரவர் நேரத்துக்குள் மேடை ஏறிப்பேசி, இறுதியாக இங்கிலாந்து மன்னருக்கு வாழ்த்துக் கூறும் வகையில் God Save the King என்ற பாடலைச் சேர்ந்திசைப் பாடிப் பேரவையை முடித்துவிட்டு அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போய் விடுவதைப் போல, சென்னையிலும், அதே தேசிய இயக்கம் சில வழக்குரைஞர்களின் வாசல் காவலாளியாக இருந்தது. காரணம், அவர்கள் வழக்குச் சொல்லிகள் அல்லவா? அதனால், சட்டப்படி நடந்து கொள்வார்கள்; White Scholarகளைப் போல, Easy Chair Politiciansகளைப் போல, மேனாமினுக்கிகளாக, ஆடைகளில் அழுக்குப்படாமல், மிதவாதிகளாக, அரசியல் செய்தார்கள். சென்னையிலும் காங்கிரஸ் இயக்கத்தின் நிலை இதுதான்.

1907-ஆம் ஆண்டில் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் பேரவையின் கூட்டத்தில் மிதவாதியான கோபாலகிருஷ்ண கோகலே அணிக்கும், தீவிரவாதியான பாலகங்காதர திலகர் அணிக்கும் இடையே மூண்ட கொள்கைப் போராட்ட மோதல்களிலே, பேசும் மேடையில் பாதுகைகள், நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றுக்கு இறக்கைகள் முளைத்து மேடை நோக்கி பறந்த பின்பு, அதே காங்கிரஸ் பேரவைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிதவாதமும் இல்லாமல், தீவிரவாதமும் அல்லாமல் நடுநிலைவாதம் பேசும் இயக்கமாக மாறியதைப் போல, சென்னையிலும், 1905-ஆம் ஆண்டு முதல், காங்கிரஸ் இயக்கத் தேசியக் கொள்கை நிலைகள் சற்று மாறின!

சுதேசி இயக்கத்திற்கு ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் தாரக மந்திரமானது. God Save the King ஒழிந்தது. தீவிரவாத தேசீயத் தலைவரான மராட்டிய அரிமா பாலகங்காதர திலகர் அணியின் பலம் ஓங்கவே, தமிழ்நாட்டிலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தேசிய கவி பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கொள்கைச் சிங்கம் சுப்பிரமணிய சிவாவை ஒத்தவர்கள் சென்னைக் காங்கிரஸ் இயக்கத்தில் திலகரைப் பின்பற்றி தீவிரவாதிகளாகி, அவர்களது பத்திரிகை எழுத்துக்களும், பேச்சுக்களும், தீவிர விடுதலை உணர்ச்சியை உந்த விட்டது.

ஆனால், அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தை நிறுவிய சென்னைத் தூண் போன்றவர்களில் ஒருவராக விளங்கிய சுதேசமித்திரன் பத்திரிகை ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர், திலகரது தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாமல், கோபால கிருஷ்ணகோகலேயின் மிதவாதிகள் அணியிலேயே இருந்து விட்டதால், தேசிய கவி பாரதியார் 1906-ஆம் ஆண்டின்போது, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் துணை ஆசிரியர் பணியிலே இருந்து விலகினார் பிறகு தான் ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

ஆங்கில அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகமாவதைக் கண்டு ஃபிரெஞ்சு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட புதுவை எனப்படும் பாண்டிச்சேரி நகருக்கு கவி பாரதி சென்றார். அங்கிருந்து ‘விஜயா’, ‘கர்மயோகி’ என்ற தமிழ்ப் பதிப்புப் பத்திரிகைகளை நடத்தி, முன்பைவிட காங்கிரஸ் இயக்கத்தின் விடுதலை உணர்வுக்குத் தீவிரமாகப் பணி புரிந்தார்.

பணப் பற்றாக்குறை காரணமாக, நெருக்கடிகள் அதிகமாக அவரை நெருக்கவே 1910-ஆம் ஆண்டில் அவர் திரும்பவும் சென்னை நகர் திரும்பி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றினார். பாவம், தனது 39-வது வயதில் யானை அவருக்கு எமனானாதல் மாண்டார். ஆனால், மகாகவி பாரதியார் பத்திரிகைக்கு ஆற்றியுள்ள பணிகளின் அருமைகளை, அஞ்சாமையை, அவரால் உருவான பெருமைகளை நம்மால் மறக்க முடியாதவை ஆகும்.

“ஞானபானு” ஆசிரியர்

சுப்பிரமணிய சிவா!

இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் செருமுனைச் செங்களத்தில் வெங்களம் கண்ட கொள்கைப் போர்வீரன் சுப்பிரமணிய சிவா. கப்பலோட்டிய தமிழ்ர் வ.உ.சி.யின் கெழுதகைக் கொள்கை நண்பர். திடகாத்திரமான வாலிப செம்மேனி பளபளக்க சிறை சென்ற விடுதலைக் களச்செம்மல் சிவா; குட்ட நோயோடும் கை, கால்களில் பெரும் புண்களோடும், ரத்தம், சீழ்வடியும் ரணகள வடுக்களோடும். தடியூன்றிய வயோதிகத் தோற்றத்தோடும், பாப்பாரப் பட்டி எனும் கிராம வீதிகளிலே அலைந்து வேதனைப்பட்ட தியாகி அவர்.

காசியிலே இருந்து இராமேஸ்வரத்திற்கும்; இராமேஸ்வரத்திலிருந்து கைலாச நாதர் பெருமான் வீற்றிருக்கும் கைலாயத்திற்கும் புனித ஆன்மிகப் பயணம் போகும் பக்தகோடி யாத்ரிகர்களைப் போல, இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய காங்கிரஸ் இயக்கவாதிகள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டிக் கிராமத்திற்கு புனிதப் பயணம் வந்து, அங்கு தன்னால் எழுப்பப்படும் பாரத மாதா கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்று அவாவுற்று, பாரத மாதா திருக் கோவிலைக் கட்டி முடித்திட பாப்பாரப்பட்டி எனும் ஊரில் ஐந்தாறு ஏக்கர் நிலத்தை மக்களிடம் இலவசமாகப் பெற்று, அதை அப்படியே கரம்பாகப் போட்டு விட்டே செத்துப்போன உண்மையான ஒரு காங்கிரஸ் தியாகி. திலகர் அரசியலின் தீவிர வாதத் தொண்டர்! மிகச் சிறந்த கோடை இடி பேச்சாளரும் ஆவார். 

அத்தகைய ஒரு தேசியக் கொள்கைக் குலத் திலகமான சுப்பிரமணிய சிவா, 1913-ஆம் ஆண்டில், ‘ஞானபானு’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து ஆங்கிலேயே ஆதிக்க மலையைத் தவிடுபொடியாகச் சிதற வைக்கும் சிற்றுளியாக விளங்கி நடத்தினார் பத்திரிகையை!

‘ஞானபானு’ பத்திரிகை ஓர் இலக்கிய ஏடாகவும், அதே நேரத்தில் தமிழ்ப் பற்றுடைய கூர் அம்பாகவும், ஆங்கிலேயர்களது ஆணவ ஆட்சியை எதிர்க்கும் கள வாளாகவும் காட்சி தந்தது.

அடிமை தூக்கத்தில் ஆழ்ந்து உறங்கும் கும்பகர்ண தமிழ்ச் சாதியின் பலரைத் தனது வீரமிக்க எழுத்துக்களது அறிவுணர்ச்சிகளால் தட்டி எழுப்பி, அவர்களது ஊக்கத்திற்கும், நோக்கத்திற்கும் ஆக்கமூட்டும் பத்திரிகையாகவும் ஞானபானு தமிழ்நாட்டை வலம் வந்தது.

திரு.வி.க. ‘நவசக்தி’

‘தேசபக்தன்’ இதழ்கள்

தமிழ் , இங்லீஷ் மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தவரான தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், 1917-ஆம் ஆண்டில் ‘தேச பக்தன்’ என்ற காங்கிரஸ் இயக்க நாளேட்டின் ஆசிரியுர் பொறுப்பில் இருந்து விலகி, ‘நவசக்தி’ என்ற தின இதழை 1920-ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.

திரு.வி.க. அவர்கள் ‘தேச பக்தன்’ என்ற நாளேட்டை விட்டு விலகியதும், பாரிஸ்டர் வ.வே.சு. ஐயர், தேசபக்தன் தினசரி பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கினார்.

தென்றல் நடைத்தமிழ் எழுத்தாளரான திரு.வி.க. அவர்கள் ‘நவசக்தி’ வார இதழை ஏறக்குறைய இருபதாண்டுகள் திறம்பட கடத்தித் தேசியக் காங்கிரஸ் கட்சிக் கொள்கைளுக்கு ஒரு பிதாமகன் பீஷ்மராக விளங்கினார்.

திரு.வி.க. நவசக்தி பத்திரிகையில் துணை ஆசிரியராக அப்போது பணியாற்றியவர். தற்போதைய ‘கல்கி’ என்ற  பத்திரிகையின் நிறுவனரும் ஆசிரியருமான ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும், ‘கலைமகள்’ என்ற இலக்கிய மாத இதழின் ஆசிரியராக இருந்து மறைந்தவருமான கி.வா. ஜகநாதனும் மாவர் - அவர்கள் காலமானார்கள்.

‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையின் நோக்கத்தைப் பற்றி திரு.வி.க. எழுதுகையில் : ‘தேசபக்தன்’ சுதந்திரத்தை விரும்புகிறான். சுய ஆட்சி கேட்கின்றான். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் சகோதரத்துவத்தை உண்டு பண்ணுகின்றான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சுப்பிரமணிய ஐயர்; வெள்ளையர் ஆட்சி அவருக்குக் கொடுத்த ‘சர்’ பட்டத்தைத் தூக்கி எறிந்த நேரத்தில், ‘மயிலை முனீந்திரர்’ என்று தலைப்பிட்டு 21.6.1918ல் அவர் ஒரு கட்டுரை வரைந்தார். அதைப் படித்த ஐயர், திரு.வி.க-வை மிகவும் புகழ்ந்தார்.

அவரது பாராட்டுதலைப் படித்த திரு.வி.க. அதற்குப் பதிலளித்தபோது, நானா எழுதினேன்? தங்களது வீரத்தில் தோய்ந்த பக்தி அதை எழுதியது. தாங்கள் மூலம் - யான் கருவி என்றார்.

பிண வெறியன் டயர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு முன்பு வரையில், அண்ணல் காந்தி உட்பட்ட எல்லா காங்கிரஸ் இயக்கத் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சி மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால், அந்த நேரத்துப் பத்திரிகைகளில் தேச பக்தியுடன் ராஜ பக்தி விசுவாசமும் இணைந்திருந்தது. திரு.வி.க.வின் பத்திரிகையும் அந்த அன்பையே எதிரொலித்தது.

ஜெனரல் டயர் நடத்திய துப்பாக்கி வேட்டையைப் பார்த்த காந்தியடிகள், பிரிட்டிஷ் ஆட்சியை ‘சைத்தான் ஆட்சி’ என்று அறிவித்தார். அவரது கருத்து நாடெங்கும் பிரதிபலித்தது.

அடிகளின் கருத்தறிவிப்பிற்குப் பிறகு, அப்போதையத் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமல்ல, இந்திய இதழ்கள் அனைத்திலும் ராஜ பக்தி மறைந்து, தேச பக்தியே காட்சி தந்தது. ‘திராவிடன்’ பத்திரிகை

நீதிக்கட்சி ஏடானது

ஆதி திராவிடர்கள் தேசிய நலனை நாடும் பத்திரிகையாக, முதன் முதல் ‘திராவிடன்’ என்ற இதழ் ஜே.எஸ். கண்ணப்பர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, 1917-ஆம் ஆண்டில் வெளி வந்தது. போகப் போக அந்த ஏடு பிராமணர் அல்லாதார் அனைவருக்கும் பாடுபடும் பத்திரிகையானது. இறுதியில் அந்த இதழ் நீதிக் கட்சிப் பத்திரிகை ஆனது.

டாக்டர் வரதராசுலு

‘தமிழ்நாடு’ பத்திரிகை

டாக்டர் வரதராசுலு நாயுடு, பத்திரிகையாளர்களுள் சிறந்த பத்திரிகையாளராக விளங்கியவர். அவர் 1926-ஆம் ஆண்டில் திருப்பூர் என்ற நகரில் ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வாரப் பத்திரிகையை நடத்தினார். ‘காற்றையும் தண்ணீரையும் போல தமிழ் நாட்டுக்கு இன்றியமையாதனவாய் இருந்த தேச பக்தியையும் மொழிப் பக்தியையும் வளர்த்தது டாக்டர் வரதராசுலுவின் ‘பிரபஞ்சமித்திரன்’ இதழ். தமிழ் நாட்டுக்கு அது செய்த இரண்டு பெரிய நன்மைகள் ஆகும்’ என்கிறார். டாக்டர் வரதராசுலுவிடம் பத்திரிகைப் பணி பயிற்சி பெற்ற டி.எஸ். சொக்கலிங்கம் என்ற பிற்கால தினமணி, தினசரி நாளேடுகளின் ஆசிரியர்.

சேலம் நகரிலிருந்து டாக்டர் வரதராசுலு நாயுடு, 1927-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு’ வார பத்திரிகையை ஆரம்பித்தார். பிறகு அதே இதழை ‘தமிழ்நாடு’ நாளேடாக நடத்தினார். டாக்டரின் பத்திரிகை எழுத்துக்கள், மக்களிடையே நாட்டுப் பற்றெனும் உணர்ச்சிகளை உருவாக்கியது. ஆங்கிலேயர்களின் அன்றைய அரசியல் சம்பவங்களை டாக்டர் கடுமையாகவும், சூடாகவும் விமர்சித்த முறைகளை மக்கள் பெரிதும் விரும்பிப் பாராட்டினார்கள்.

டாக்டர் வரதராசலு நாயுடுவின் எழுத்துக்களைப் பின்பற்றி, பண்பட்ட எழுத்தாளர்கள் சிலர் தோன்றினார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் டி.எஸ். சொக்கலிங்கம் என்பவர்.

காந்தியடிகளால் நடத்தப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தடுத்திட, ஆங்கிலேயே ஆட்சி மகாகனம் சீனிவாச சாஸ்திரியாரை ஓர் அணையாகப் பயன்படுத்தியது. அதைக் கண்ட டாக்டர் நாயுடு ‘ஜிண்டான் சாஸ்திரி’ என்று தலைப்பிட்டு, ஒரு கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையில் ஆட்சியை எதிர்க்கும் குத்தலும் குடைச்சலும், கொள்கை உணர்வும் எப்படி இருந்தது என்பதை இதோ படித்துப் பாருங்கள் :-

‘வயிற்றில் ஏற்பட்ட கோளாறு வாயில் நாற்றத்தை உண்டாக்குவதை மாற்ற, ‘ஜிண்டான்’ என்ற மாத்திரையை உட்கொள்வதைப் போல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது வயிற்றுக் கோளாற்றை மறைத்து, வெளிப் பகட்டைக் காத்துக் கொள்வதற்கு, சாஸ்திரியைப் பயன்படுத்துகிறது என்று இடித்துக் கூறினார்’ என்று தேசியம் வளர்த்த தமிழ் என்ற நூலுள் கா. திரவியம், ஐ.ஏ.எஸ். என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பத்திரிகையின் தமிழ்நடை வேகமாகவும், படிப்போர்க்கு விறுவிறுப்பாகவும் அமைந்த பத்திரிகையாகப் பணிபுரிந்தது. டாக்டர் வரதராசுலு நாயுடுவின் எழுத்து, கருத்து எழுத்தாளர்கட்கே ஒரு பயிற்சிக் கூடமாக விளங்கியது.

பதட்டமில்லாத, ஆனால் பார்வையைக் கவரும் தலைப்புகள், அத்துமீறாத, அழுத்தமாகக் கருத்த வெளியிடும் குறிப்புகள், நிதானம் இழக்காத, நேர்மையான எண்ணங்களை எடுத்துரைத்த கட்டுரைகள், பண்பு தவறாமல், பலமாகக் கொள்கைப் பரப்பிய தலையங்கங்கள் ஆகியவை டாக்டர் வரதராசுலு நடத்திய ‘தமிழ்நாடு’ நாளேட்டின் சிறப்பான முத்திரைகள்’ என்று கா. திரவியம், ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மரபோடு ஒட்டிய சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென்பது அவரது தமிழ் ஆர்வமாகும். எடுத்துக் காட்டாக Water - Falls என்ற இங்லீஷ் மொழிச் சொல்லை டாக்டர் மொழி பெயர்த்தபோது, ‘நீர்வீழ்ச்சி’ என்று எழுதவில்லை. இன்றும் பலர் மேற்கண்ட சொல்லையே பயன் படுத்தி மொழி பெயர்க்கின்றார்கள்.

ஆனால், டாக்டர் வரதராசுலு அக்காலத்திலேயே, அதாவது 77 ஆண்டுகளுக்கு முன்பேயே, ‘அருவி’ என்ற அருமையான தமிழ்ச் சொல்லை water-Falls என்ற இங்லீஷ் சொல்லுக்காக மொழி பெயர்த்தார் என்றால், அந்த தமிழ்ப் பெருமகனுடைய தமிழ்வேட்கையை எவ்வாறு பாராட்டி மகிழ்வது என்று இன்றைய பத்திரிகையாளர் தலைமுறைகள் சிந்திக்க வேண்டிய ஒன்றல்லவா?

தான் பயன்படுத்தும் கருத்துக்களை டாக்டர் வரதராசலு சுருக்கமாகவே கூறுவாராம். சொல்லில் சிக்கனம் காண்பவராம். அவர் தமிழ்நடையில் கோணல், வளைவுகள் இராதாம். குறிப்பான சொற்களையே பயன்படுத்துவாராம். ஆனால் தமிழ்நடை மட்டும் எடுப்பாகவும், கருத்துத் தெறிப்புக்களாகவும், தெளிவான புரிதல்களாகவும் இருக்குமாம். இவைதான் டாக்டர் நாயுடுவின் தமிழ்ப் பத்திரிகைப் பணி! இந்த அரிய முயற்சியை, பத்திரிகையாளர்களான நாமும் பயன்படுத்தலாம் அல்லவா?

டாக்டர் நாயுடு எழுதும்போது, இன்றைய சில பத்திரிகைகளைப் போல சட்டப் பயந்தாங்கொல்லித்தனமில்லாமல், அதாவது தெரிகிறது, புரிகிறது - கூறுகிறார்கள். பேச்சு அடிபடுகிறது என்று சுற்றி வளைத்து எழுதாமல்; முனைப்பாகவும் தைரிய உணர்ச்சியோடும், நேருக்கு நேராகவும் எழுத வேண்டும் என்று அவர் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை கூறுவாராம்.

‘படும்’, ‘பட்ட’ என்பவற்றைப் பாடுபட்டுப் பயன் படுத்துவதை ‘விடும்’ என்று அவர் கூறிய நல்லுரை, ஏற்றமிகு எழுத்துக்கு ஏற்ற இலக்கண விதியாக அமைந்ததோடு, செயப்படு பொருளாகச் சிறைப்பட்டுக் கிடக்காமல், செய் பொருளாக விழிப்புற்று எழச் செயல்வீரர்களைத் தூண்டும்’ என்று ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூல் கூறுகின்றதை இன்றைய இளம் பத்திரிகையாளர்கள் தலைமுறை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

டாக்டர் நாயுடு அவர்களின் பத்திரிகைத் தொண்டில் மிகச் சிறப்பானது எது தெரியுமா? அவரது ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் அவரால் எழுதப்பட்ட தலையங்கங்களை, ‘இந்து’ இதழும், ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையும் வாரந்தோறும் அவரவர் ஏடுகளிலே அவற்றை வெளியிடும் என்றால்; டாக்டரது எழுத்துக்களை எவ்வாறு போற்றலாம் கூறுங்கள்?

டாக்டர் கருத்துக்கள் மக்களிடம் எந்த அளவுக்குச் செல்வாக்குப் பெற்றதோ அந்த அளவுக்கும் மேலாக ஆள்வோரிடமும் ஆத்திரத்தை, எரிச்சலை, கோபத்தை, வஞ்சகத்தை மூட்டினவாம்.

டாக்டர் நடத்திய பிரபஞ்ச மித்திரன் பத்திரிகைக்கு ஆயிரம் ரூபாய் முன் ஜாமீன் கட்ட வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சி ஆணையிட்டது. அக்காலத்தில் 1000 ரூபாய் என்றால் சாமான்யமா என்ன?

அதற்குக் காரணம், டாக்டர் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை ராஜத்துரோகமாக இருந்ததாம். அதனால் 1000 ரூபாய் ஈடுகாணம் தொகையாகக் கட்ட வேண்டும் என்றது அரசு

இந்த ராஜத்துரோகக் கருத்துக்காக 1921-ஆம் ஆண்டில் அரசு டாக்டர் மீது வழக்குத் தொடுத்தது. காந்தி அடிகளின் கொள்கைக்கேற்ப டாக்டர் அந்த வழக்கை எதிர்த்து எதிர் வழக்காட மறுத்து விட்டார். அதனால், டாக்டர் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை பெற்றார்:

அரசியலில் மட்டுமா டாக்டர் இத்தகையப் புரட்சிகளைப் பத்திரிகை மூலமாகச் செய்தார்? சமுதாயத் துறையிலும்தான் செய்தார்!

கோவிலில் பொட்டு கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்பைக் காங்கிரஸ்காரர்களே எதிர்த்தார்கள். ஆனால், டாக்டர் நாயுடு, தனது தமிழ்நாடு பத்திரிகையின் முழு மக்கள் பலத்தைக் கொண்டு அந்த முறையை எதிர்த்தார்.

இந்து அறநிலையக் குழுவும், சில தேசியப் பத்திரிகைகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்று சேர்ந்து மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் ஊழல் போக்குகளைத் தமிழ்நாடு பத்திரிகை வாயிலாக எதிர்த்து நாயுடு எழுதினார். 

அரும்பெரும் தியாகியான வ.வே.சு. ஐயர் நடத்திய சேரமாதேவி குருகுலத்தில் பார்ப்பன மாணவர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்கள் இடையே உணவு பரிமாறும் சாதிபேதப் பாகுபாடுகள் வழக்கத்தை எதிர்த்து, சமபந்தி உணவு முறை பழக்கத்துக்கு வரவேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு பத்திரிகை மூலமாகச் சேவை செய்தார் டாக்டர் வரதராசலு நாயுடு!

தனது தமிழ்நாடு பத்திரிகையின் எழுத்து மூலமாய் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைப் பலமாக, வளமாக உருவாக்கி, இந்திய நாட்டின் விடுதலைப் போருக்குரிய படைத் தளபதியாகப் பத்திரிகையைப் பயன்படுத்தினார். அதனால் பத்திரிகையாளர்களால் டாக்டர் வரதராசுலு நாயுடுவின் பத்திரிகைத் தொண்டை மறக்க முடியாமல், விடுதலைப் போருக்கு வீரம் மணந்த ஒரு பத்திரிகையாளராய் பத்திரிகை வரலாற்றில் இடம் பெற்றவராக இன்றும் வாழ்கின்றார்.

டி.எஸ். சொக்கலிங்கத்தின்

‘தினமணி, தினசரி, காந்தி!’

டாக்டர் வரதராசுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிகைப் பாசறையில் 1923-ஆம் ஆண்டு முதல் பயிற்சிப் பெற்றவர் திரு. டி.எஸ். சொக்கலிங்கம். அவர் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிகை உலகுக்கு உழைத்து, நாட்டுப் பற்றை மக்களுக்குள் உருவாக்கியவர். 1927-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு’ நாளேட்டிற்கு ஆசிரியராக அமர்ந்தார். 1931-ஆம் ஆண்டில் ‘காந்தி’ என்ற பத்திரிகையைத் துவக்கி அப்போதைய காலணா என்ற நாணய மதிப்பு விலைக்கு விற்பனை செய்தார். பிறகு வார இதழாக இருந்த அதை நாளேடாகப் பெரிய அளவில் மாற்றி வெளியிட்டார். அந்த ஏடு மக்கள் இடையே பெரிய வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றுப் பரபரப்பாக விற்பனையானது.

பீகார் மாநிலத்தில் 1934-ஆம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டபோது, பிரிட்டிஷ் அரசு மெத்தனமாக இருந்ததால், ‘சர்க்கார் எங்கே?’ என்று எழுதிய கட்டுரைக்காக அரசு அவர்மீது ராஜத்துரோக வழக்கைத் தொடுத்தது. அதனால் பத்திரிகைக்கு அவர் கட்டியிருந்த முன் ஜாமீன் பணம் பறிபோயிற்று.

அதுவரை பத்திரிகை வரலாற்றில் முன் ஜாமீன் பணத்தைப் பறிகொடுத்த பத்திரிகை அன்னி பெசண்ட் அம்மையாரின் ‘நியூ இந்தியா’ என்ற இதழும், டி.எஸ். சொக்கலிங்கத்தின் ‘காந்தி’ என்ற ஏடும்தான். இந்த ஈடுகாணம் பறிமுதலை எதிர்த்து சொக்கலிங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதனால் நீதிமன்றம் அரசு உத்தரவைத் தள்ளுபடிச் செய்து விட்டது. இதற்குக் காரணம் ஆசிரியர் சொக்கலிங்கம் எழுதிய கட்டுரையின் இரண்டொரு சொற்கள் அவருக்குச் சாதமாக அமைந்ததுதான்.

எனவே, கட்டுரை எழுதுவோர் கட்டுரைக்காகப் பயன்படுத்தும் சொற்களைச் சற்று கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டும் என்று அப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘தாருல் இஸ்லாம்’ என்ற பத்திரிகை, இதழாசிரியர்களுக்கு அறிவுரை கூறியதை நாமும் இன்று நினைவில் நிறுத்த வேண்டிய கருத்தாக இருக்கிறது.

1934-ஆம் ஆண்டில் சொக்கலிங்கம் ‘தினமணி’ என்ற நாளேட்டில் ஆசிரியராகப் பணியாற்றி நேரத்தில், அவர் எழுதிய அரசியல் விமர்சனங்கள், ஆணித்தரமானக் கட்டுரைகள், வேகமான தலையங்கங்கள், விளக்கமான குறிப்புகள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற தமிழ் நடை ஆகியவை; அவருடைய பத்திரிகை ஆசிரியர் திறமைக்குச் சான்றுகளாக அமைந்து, மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுத் தந்தன.

மணலைக் கயிறாகவும் திரிக்கலாம்; வானத்தையும் வில்லாக வளைக்கலாம்;. ஆனால் எழுத்தாளர்களை ஒன்று சேர்ப்பதென்பது அவற்றைவிடக் கடினமான காரியம் என்று 1944-ல் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் அன்றே அவர் குறிப்பிட்ட உணர்ச்சிகள் இன்றைக்கும் ஓர் அறிவுரையாக நமக்கு அமைந்துள்ளது.

ஒன்றுபட மறுக்கும் எழுத்தாளர்கள்கூட ஒருமுகமாகப் பாராட்டும் ஒரு பத்திரிகையாளராக, எழுதுகோல் வீரராக தென்காசி நகர் சொக்கலிங்கம் அன்றே விளங்கினார் என்பதுதான் அவருடைய சிறப்பு.

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி

பத்திரிகைத் தொண்டு

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி என்ற பத்திரிகை ஆசிரியர் திரு.வி.க. நடத்திய ‘நவசக்தி’ என்ற நாளேட்டில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

மக்கள் பேராதரவைப் பெற்ற எழுத்தாளராகப் புகழ் பெற்றவர். வாழ்வோடு ஒட்டிய வளமான தமிழ்நடையை எழுதுவார். தமிழ்ப் பற்றையும், தேசிய உணர்வையும் குழைத்து, அடிமைத்தனத்துக்கு மருந்தாக அளித்து, ஆர்வத்துக்கு விருந்தாகப் படைத்து, படித்தவர்க்கும், பாமரர்களுக்கும் இடையே பலமான பாலமாகத் தனது பத்திரிகையை அமைத்துக் கொண்ட ஒரு சாதனை எழுத்தாளராவார் கல்கி.

‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் கல்கி 1933-ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரைகளில், அவர் எழுதாத பொருள் இல்லை; தழுவாத துறை இல்லை; மீட்டாத உணர்வு இல்லை; இசையா? இங்கிதமாக எழுதுவார்; நாடகமா? அனைவரையும் மெய்மறக்கச் செய்வார்; சரித்திரம் கலந்த நாவல்களா? அவற்றைத் தமிழ் மக்களைத் தேனில் சுவை காண்பதுபோல படித்துச் சுவைக்க வைப்பார்? அன்றாட மனிதனின் கோணங்களையும், அவரது குறும்பான எழுத்துக் குத்தல்களால் மக்களை அறிவு மலர்ச்சியில் மிதக்க வைத்தவர் ‘கல்கி’ எனப்பட்ட கிருஷ்ணமூர்த்தி!

கவிதைத் துறையிலே பாரதியார் உருவாக்கிய பண்புகளை, திருப்பங்களை, உரைநடையில் உருவாக்கிய திறமையான பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர் கல்கி. செழிப்பான அவரது தமிழ்நடைப் பத்திரிகை, உலகுக்கு ஓர் இலக்கிய நாவல்களாகத் திகழ்ந்ததை இந்தச் செந்தமிழ் நாடறியும்.

‘ஆனந்த விகட’னின்

அற்புதத் தேசப்பற்று

மக்களைச் சிரிக்க வைக்கும்; அதே நேரத்தில் அவர்களைச் சிந்திக்க வைக்கும். விகடத் துணுக்குகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் படித்தோர் அனைவரும் நாட்டுப் பற்றின் உரிமை வேட்கைகளை அனுபவித்தக் காலம் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை வெளிவந்த நேரம்.

இந்தப் பத்திரிகை 1926-ஆம் ஆண்டில் இட்டா பார்த்தசாரதி நாயுடு பெற்ற மக்களால் நிறுவப்பட்டு, பூதூர் வைத்திய நாத ஐயரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்தது.

இந்த விகடனில் கவிமணி தேசியக விநாயகம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, தம்பையா, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பி.ஸ்ரீ., தேவன், துமிலன் ஆகியோரது எழுத்துக்கள் மக்களின் உள்ளங்களில் தேசிய உணர்வுகளை ஊட்டின.

மக்களின் அடிமைத்தன வேதனைகள் ஒருபுறம், வேடிக்கை நிகழச்சிகள் ஒருபுறம், கேவி அழும் ஏழைகள் ஓலம் ஒருபுறம், கேலிச் சிரிப்பு ஒரு புறம். பரிகாசம் ஒரு புறம். பாட்டாலும், படத்தாலும் உருவாகும் கட்டுரைகள் ஒருபுறம் ஆகியவற்றை ஏற்று, ‘ஆனந்த விகடன்’ ஏடு மக்களை விழிப்புறச் செய்து வந்த பத்திரிகையாக அன்று வெளிவந்தது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் நாட்டின் சுதந்தரப் போருக்குரிய வித்துக்களாக விளங்கின. இந்தப் பணிகளை விகடன் அன்றும் செய்து புகழ் பெற்றது. ஆனால், இன்றும் அதே ஆனந்த விகடன் பல குட்டி விகடன்களை ஈன்றுள்ளது. “ஜூனியர் விகடன்” ‘சுட்டி விகடன்’ ‘அவள் விகடன்’ ‘சக்தி விகடன்’ என்ற குட்டிகளாகப் பல்கிப் பெருகி, பத்திரிகைக் சந்தையிலே, பணமணத்தை நுகர்ந்து வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது இன்றைய ‘விகடன்’ நிலை. துடிப்புடன் துணிவுடன் செய்து வருவதை நாம் பார்க்கின்றோம்.

சங்கு சுப்பிரமணியன்

‘சுதந்திரச் சங்கு’ ஏடு!

சங்கு சுப்பிரமணியம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு 1932-33-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பத்திரிகை ‘சுதந்திரச் சங்கு!’ இந்தப் பத்திரிகை விலை என்ன தெரியுமா? மூன்று தம்படிகள்! அதாவது அன்றைய நாணய மதிப்பில் காலணா விலையில் விற்பனையான பத்திரிகை.

இந்த ‘சங்கு’, படித்தவர்களைவிடப் பாமரர்கள் இடையே தான் அதிக செல்வாக்குப் பெற்று விற்பனையானது. ஏன் தெரியுமா? விலை காலனா என்பதால். முதல் பக்க முகப்பு கேலிச் சித்திரமும், பிற பக்கங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் எதிர்ப்பையும் ஏற்று வெளிவந்த இதழாகும்.

அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழி நின்று, இந்தியாவை அடக்கு முறைக்கு ஆளாக்கிய ஏகாதிபத்திய தாக்குதலுக்குச் சவால் விட்டு எழுதி வெளிவந்த பத்திரிகை இது.

செயலுக்கு அஞ்சி, சொல்லில் தஞ்சம் புகுந்து, உரையாடல்களிலே ஊசலாடி, உணர்ச்சிகளைப் பறிகொடுத்து, பாமரரிடம் ஒதுங்கி, பதவிகளில் பதுங்கி, மிதவாதிகள் என்ற பெயரில் இதமான சுகவாழ்வு நடத்தி, அரசியலில் மிதந்து வந்தவர்கள்மீது பொது மக்களுக்கு ஆத்திரம் இருந்ததை ‘சுதந்திரச் சங்கு’ பத்திரிகை ‘சாஸ்திரிகள் பேச்சு’ என்று தலைப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்தது.

செத்தல் வாடுவின் காய்ந்த வத்தல், துரைச் சித்தம், க்ஷணப் பித்தம், குரங்காட்டி மந்திரி, ஷோக்குப் பிள்ளைப் போக்கு, மீசைக்குப் பூசை போடல், அவலும் உமியும் ஊதித்தின்போம் போன்ற சங்கு பத்திரிகைகளின் தலைப்புகள் அக்கால மக்கள் இடையே பிரசித்திப் பெற்றக் கவர்ச்சித் தலைப்புகளாக இருந்தன.

தேசிய உணர்வைத் துணிவுடன் பரப்பத் தொண்டாற்றிய பத்திரிகைகளில் ‘சங்கு’ பத்திரிகை ஒன்றாக விளங்கியது.

‘பாரத தேவி’ என்ற ஒரு தினசரி பத்திரிகையைச் சதானந்தம் என்பவர் 1938-ஆம் ஆண்டில் துவக்கிப் பல ஆண்டுகள் நடத்தினார். தேசிய உணர்வுகளுக்காக அது பரபரப்புடன் உழைத்தது. ‘இளந்தமிழன்’

மாத இதழ்

விடுதலைப் போராட்ட வீரர் நா. சோமயாஜூலு ‘இளந்தமிழன்’ என்ற திங்கள் இதழைத் தூத்துக்குடி நகரிலே துவக்கி விடுதலைப் போர் பணிக்காக நடத்தினார்.

சிங்காரவேலரின்

‘தொழிலாளன்’

பொதுவுடைமைச் சிற்பி என்று மக்களால் மதிக்கப்பட்ட ம. சிங்காரவேலர், ‘தொழிலாளன்’ என்ற பத்திரிகையைத் தொழிலாளர் நலனுக்காக உழைத்திட நடத்தினார்.

ப. ஜீவானந்தம்

‘ஜனசக்தி தாமரை’!

தமிழகப் பொதுவுடைமை தலைவர்களிலே ஒருவராகப் போற்றப்பட்ட கவிஞர், உரைநடை வீரர், ஆவேசப் பேச்சாளர், பாரதியார் பாடலின் வீர எதிரொலி, சீர்திருத்த நோக்காளரான இலக்கிய வித்தகர் ப. ஜீவானந்தம், ‘ஜனசக்தி’ என்ற பொதுவுடைமைக் கட்சி நாளேட்டைத் துவக்கி நடத்தியவர் ஆவார். அவர் விடுதலைப் போராட்ட தேசபக்தராக விளங்கித் தியாகம் புரிந்த கொள்கை வீரராகவும் வாழ்ந்தவர்.

அண்ணல் மகாத்மா அவர்கள் 1927-ஆம் ஆண்டில் தென்னாட்டிற்குச் சுற்றுப் பயணம் வந்தபோது தேசியக் காங்கிரசின் தீவிரத் தொண்டராகப் பணியாற்றி வந்த ப.ஜீவானந்தம் காந்தியடிகளுடன் சென்றார். அப்போது, சிறுவயல் என்ற கிராமத்தில் காந்தியடிகள் ஜீவாவிடம், ‘உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது என்று கேட்க, அதற்கு ஜீவா, ‘இந்தியாதான் என் சொத்து’ என்றார்.

உடனே மகாத்மா, ‘இல்லையில்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என்றாராம்’ என்று அ.மா. சாமி தான் எழுதிய ‘தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜீவாவுக்கு காந்தியடிகளிடம் எத்தகைய ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது பார்த்தீர்களா? இந்த ஜீவாதான் பிற்காலத்தில் ‘தாமரை’ என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்த பொதுவுடைமைச் சிற்பி ஆவார்.

இராஜாஜியின்

‘விமோசனம்’

இந்திய விடுதலைப் போரில் அண்ணல் காந்தியடிகளின் சிந்தனைகளுக்குத் திறவுகோலாக விளங்கிய சக்கரவர்த்தி இராசகோபலாசாரியார் திருச்செங்கோடு ஆசிரமத்தில் தங்கியிருந்த 1927-ஆம் ஆண்டில், ‘விமோசனம்’ என்ற பத்திரிகையை மதுவிலக்குக் கொள்கைக்காக நடத்தினார்.

சது.க. யோகி

‘பாலபாரதி’

விடுதலைப் போர் வித்தகளுானியருள் ஒருவரான ச.து.சு. யோகி என்பவர், சிறுவர் சிறுமிகளுக்கு தேசிய உணர்வையூட்டிட ‘பாலபாரதி’ என்ற பத்திரிகையில் இளைஞர்களின் தேசியக் கடமைகளை வலியுறுத்தி நடத்தினார்.

பாவலர் நடத்திய

‘தேசபந்து’ இதழ்

சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரான தே.பொ. கிருஷ்ணசாமி பாவலர் என்பார், ‘தேசபந்து’ என்ற பத்திரிகையைத் துவக்கித் தேசத் தொண்டாற்றினார்.

‘இந்துநேசன்’, ‘பாரதி’, ‘சுதந்திர வீரன்’, ‘பாரதமித்திரன்’, ‘காங்கிரஸ் பேரிகை’, ‘பாரதமணி’, ‘வீரசக்தி’, ‘சுதந்திரம்’ , ‘பொதுஜனம்’, ‘இந்துஸ்தான்’, ‘தமிழர் போதினி’, ‘இந்திய ஒளி’, பரலி சு. நெல்லையப்பரின் ‘லோகோபகாரி’, இராய. சொக்கலிங்கத்தின் ‘ஊழியன்’ எழுத்தாளர் வ.ரா.வின் வர்த்தகமித்திரன் ‘சத்திய வர்த்தமானி’ ‘சுதேசபூஷணி’, ‘வெற்றிக் கொடியோன்’ போன்ற பத்திரிகைகள் விடுதலைப் போர் காலத்தில் தோன்றி, வளர்ந்து, ஒளியுதறி இறுதியிலே மறைந்தன. அதனால், இவற்றின் ஒட்டு மொத்த உழைப்புகள், தேசத் தொண்டுகள், நாட்டுணர்ச்சி பணிகள், தியாக வரலாறுகள் அனைத்தும் தேசிய முரசுக் கொட்டுவனவாகவே இருந்தன. 

6

சுதந்திர இயக்கத்தில்
இருபதாம் நூற்றாண்டு இதழ்கள்

ந்திய விடுதலை இயக்கம் மக்களிடையே பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இந்தியா முழுவதுமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சரியாகப் பரவாமல் இருந்ததற்குக் காரணம், பத்திரிகை பலம் பெருகாததின் விளைவே ஆகும்.

கங்காதர் பட்டாச்சாரியார், இராஜராம் மோகன்ராய், ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி போன்ற ஒரு சிலரின் பத்திரிகைகள் மட்டுமே அப்போது தோன்றின.

அவற்றில் கூட பிரிட்டிஷ் ஆட்சியரின் ஒழுக்கக் கேடுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளே அதிகமாக வெளிவந்தன. அதனால், அகில இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குக் கொள்கைகள் மக்கள் இடையே நன்றாக வேறூன்றாமல் இருந்தன.

இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் 1885-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதன் தலைவர்கள் நகர்தோறும் பேரவை மாநாடுகளைப் போன்ற அகில இந்தியக் கூட்டங்களை நடத்தி, பிரிட்டிஷ் ஆட்சியிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் பணிகளே அவர்களுக்குச் சரியாக இருந்தது.