இந்தியக் கலைச்செல்வம்/கலை உறவு - சிற்பம்

7
கலை உறவு -
சிற்பம்

மீபத்தில் நான் ஒரு பெண்கள் கல்லூரியின் ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். அங்கே பல இசை நிகழ்ச்சிகள், நல்ல நடனம் நாட்டியத்துடன் நடைபெற்றன. பாரதமாதாவின் திருவோலக்கம் ஒரு நல்ல காட்சியாக இருந்தது. இந்திய தேசப் படம் பின்னணியாக விளங்க, அதன் முன் ஒரு பெண் ரத்னமயமான கிரீடம் அணிந்து; கையில் சூலம் ஏந்தி ஒரு பெரிய பீடத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு வலது பக்கத்திலே இரண்டு பெண்கள்; இடது பக்கத்திலே இரண்டு பெண்கள்; உடையைப் பார்த்து வலப்புறம் நின்றவர்கள் பஞ்சாபி, மராத்தி என்றும், இடப்புறம் நின்றவர்கள் வங்காளி, தமிழ்ப் பெண் என்றும் தெரிந்து கொள்ளலாம். திரை விலகியதும் பாட்டு ஆரம்பமாகியது.

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

என்ற பாரதியார் பாடலின் பல்லவியை மட்டும் நான்கு பெண்களும் சேர்ந்து பாடினார்கள். அதன் பின் பஞ்சாபி 'கொஞ்சம் முன் வந்து ஆடிக் கொண்டே,

வீரத்திலே சிந்து தீரத்திலே - போரில்
வீறிட்டு எழுந்திடும் நாட்டினர் யாம்
பாரத்திலே புகழ் ஏறிச் சிறந்திடும்
பாஞ்சால நாட்டினுக் கீடுமுண்டோ ?

என்று கேட்டாள். அவள் பின் வாங்கு முன், இடது புறம் நின்ற வங்காளி துள்ளி வந்து,

பொங்கு திரைகளும் தொங்கு நுரைகளும்
பூக்களினங்களும் தாங்கி வரும்
கங்கை மகள் நடம் ஆடிவரும் எங்கள்
வங்கத்துத் தாய்க்கொரு ஈடு முண்டோ ?

என்று எதிர்க் கேள்வி போட்டாள் பாடிக் கொண்டே. “ஏதடா? இது என்ன பாரதி பாட்டிற்கே ஒரு புது மெருகா?” என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் மராத்திப் பெண்ணும்,

மேலை நிலத்தினர் மெச்சிப் புகழ்ந்திடும்
மேன்மை படைத்த துறைமுகமும்
மாலைப் பருதிக் குழம்பில் குளித்திடும்
மாமலை மராட்டம் என் நாடாம்

என்று அடக்கமாகவே அவள் பெருமையைச் சொல்ல முன் வந்தாள். தமிழ்ப் பெண்ணும் இத்தனைக்கும் சளைத்தவளாகக் காணப்படவில்லை. அவளும் ஒய்யாரமாகவே ஒரு நடை நடந்து,

கன்னித் தமிழ் இன்பப் பாய்ச்சலொடு
வையை காவிரி எல்லாம் புரண்டு வரும்
எண்ணத் திதிக்கும் தமிழ்நாடே புகழ்
ஏறிச் சிறந்திடும் என் நாடாம்

என்று வெகு அழகாகத் தன் கட்சியை வலியுறுத்தினாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நான் “ஏதடா? இந்திய நாடு முழுவதும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும், பகுதிப் பிரிவினைகள், பாகப் பிரிவினைகள் எல்லாம் கூடாது என்று பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் படித்துப் படித்துச் சொல்லுகிறபோது இப்படி இவர்கள் தங்கள் தங்கள் நாட்டுப் பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொண்டால் - அதிலும் - பெண்களுக்குள் இப்படிச் சண்டை வர ஆரம்பித்துவிட்டால் - இது எங்கு போய் முடியுமோ” என்றெல்லாம் சிந்தித்தேன். என் சிந்தனையைக் கலைத்துக் கொண்டு மறுபடியும் நான்கு பெண்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்து முசல்மான் கிறிஸ்தவரும் இன்னும்
எண்ணற்ற சாதி இருந்தாலும்
சொந்த சகோதரர் போல நாற்பது கோடி
ஜனங்களும் கூடிடுவோம்.

என்று பாடிக் கொண்டே, நான்கு பெண்களும் கை கோத்து பாரத மாதாவை வலம் வந்து வணங்கினார்கள். இந்தக் கடைசிக் காட்சியைக் கண்டதும் அதற்கு ஒரு ‘சபாஷ்’ போடத் தோன்றிற்று எனக்கு. உண்மைதானே. நம் நாட்டிலோ சாதி மத பேதங்களுக்குக் குறைவில்லை. இருந்தாலும், எல்லோரும் இந்தியர்கள் தானே. இந்த ஒற்றுமை உணர்ச்சி மட்டும் எல்லா மக்களுடைய உள்ளத்திலும் உதித்துவிட்டால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சியை உருவாக்கத்தானே நமது அருங்கலைகள் பெரிதும் உதவியிருக்கின்றன. கவிதை, இசை, சித்திரம், சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளில் எல்லாம் ஊடுருவி நிற்கும் இந்த ஒற்றுமை, உறவு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்றெல்லாம் எண்ணினேன். அன்று அந்தப் பெண்கள் கல்லூரியில் அந்தப் பெண்கள் நடித்த காட்சியைப் பார்த்த போது.

நமது இந்திய நாட்டின் தென் பகுதியான தக்ஷிணத்திற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் குறுக்கே கிடக்கிறது விந்திய மலையும் நர்மதை நதியும். என்றாலும் இந்த ஆற்றலையும், மலையை யும் தாண்டித்தான் வட இந்தியர் தென்னாட்டோடும், தென்னிந்தியர் வட நாட்டோடும் உறவு கொண்டாடி வருகிறார்கள். கைலையில் வாழும் அந்தச் சிவபெருமானே அகத்தியரைத் தென்னாட்டிற்கு அனுப்பி இந்த உறவுக்கு அடிகோலி இருக்கிறான். பழந்தமிழ் நாட்டுப் பெருவேந்தர்களும் இந்த உறவை வளர்த்து வந்திருக்கிறார்கள். சோழன் கரிகாலன் இமயத்தில் புலிக் கொடியைப் பொறித்தான் என்றால், சேரன் செங்குட்டுவன் அங்கிருந்தே கல் கொண்டு வந்து பத்தினித் தெய்வம் கண்ணகியைப் பிரதிஷ்டை செய்திருக்கிறான்.

சிற்பத்திற்குப் பெயர் பெற்ற நாடு நம் நாடு. சித்திரத்தில் மிக உயர்ந்த சிற்பநூலின் அற்புதத்தை சின்னச் சின்ன ஊரில் கூட இன்று எங்குங்காணலாம். இந்தச் சிற்பக் கலை மூலமாக நாட்டின் கலையுறவு எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம். நம் நாட்டுச் சிற்பக் கலையின் சரித்திரம் கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 வருஷங்களுக்கு முன்பே சிந்து வெளிப் பிரதேசத்தில் ஆரம்பித்திருக்கிறது. மொகஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் அன்று வளர்ந்த நாகரிகம் திராவிட நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதில் இன்று எவருக்குமே சந்தேகம் இல்லை. முத்திரைகளும் (Seals) மண்ணாலும், மணலாலும் அமைத்த மக்கள், மாக்கள் உருவங்களும், வெண்கலத்தால் ஆக்கப்பட்ட பல்வேறு சிலைகளும் அங்கு இருந்திருக்கின்றன. முத்திரைகளில் காணுகின்ற காளையின் சுவடுகளை பிந்திய சிற்பங்களில் எல்லாம் நாம் காண்கிறோம். இங்கு வெண்கலத்தில் வார்த்துள்ள ஒரு பெண்ணின் சிலைக்கும், இதற்கு 3000 வருஷங்களுக்குப் பின்பு அமராவதி ஸ்டூபாவின் சட்டத்தில் தோன்றும் ஒரு பெண்ணின் சிலைக்கும் உருவ ஒற்றுமை இருக்கிற தென்றால் அதிசயந்தானே.

வேதகாலம், இதிகாச காலத்தில் எல்லாம் இந்தியச் சிற்பம் அவ்வளவு வளர்ச்சியடைந்ததாக இல்லை. மறுபடியும் சிற்ப உருவங்கள் உருவானதெல்லாம் பௌத்தமும் சமணமும் நாட்டில் பரவிய காலத்தில்தான். மகாவீரரையும், புத்த பகவானையும் பற்பல உருவங்களாக ஆக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். கலை வளர்த்த வள்ளலான மௌரியச் சக்கரவர்த்தி அசோகர், எல்லா இடத்திலும் புத்த விகாரங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். தர்மச் சக்கரம் பொறித்த பிரம்மாண்டமான ஸ்தம்பங்களை நிறுவியிருக்கிறார். காளையும், குதிரையும், யானையும், சிங்கமும் சிற்பத்தில் உருவாகி, மொஹஞ்சதாரோச் சிற்பங்களோடு போட்டியிட ஆரம்பித்திருக்கின்றன. மௌரியர்கள் காலத்திற்குப் பின் பர்ஹுத் சாந்சி ஸ்தூபங்களிலும் நல்ல சிலை உருவங்கள் உருவாகியிருக்கின்றன. காந்தாரத்திலும் மதுராவிலும் பல புத்த விக்கிரஹங்கள் தோன்றியிருக்கின்றன. புத்தரையும்; போதி சத்துவரையும் எவ்வளவு அழகாக உருவாக்கினார்களோ அத்தனை அழகுடனேயேதான் யக்ஷர்களையும் யக்ஷிணிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள் அந்தக் காலத்துச் சிற்பிகள்.

சிற்பக் கலையின் பூரண வளர்ச்சியை நாம் மகத நாட்டரசர் குப்தர்களின் காலத்தில்தான் பார்க்கிறோம். அப்போதுதான் கடவுளை வெறும் மனிதனர்களாகக் காட்டும் முறை அடியோடு மாறியிருக்கிறது. அழகுருவாய் அமைந்த புத்தரின் முகத்திலே ஒரு சாந்தி நிலவ வைத்திருக்கிறான் சிற்பி. சாரநாத்திலும், மதுராவிலும் உள்ள பெரிய புத்த விக்கிரகங்கள் இன்றும் ஒரு தெய்வீக உணர்ச்சியை நமக்கு ஊட்டுகின்றன. அஜந்தா, அவுரங்காபாத், பாக், காங்கேரி முதலிய இடங்களில் காணும சிறபங்கள், சிற்பக் கலை தனித்து நிற்கத் தோன்றிய ஒரு கலையல்ல, மனிதனின் வாழ்க்கையோடு ஒட்டி வளர்ந்த ஒரு நல்ல கலை என்பதைக் காட்டுகின்றன. எல்லாம் உயர்ந்த லக்ஷியத்தை விளக்கும் உன்னதச் சிற்பங்கள்.

பௌத்தமும், சமணமும் இந்தப் புத்தர், பார்ஸ்வநாதர், நேமிநாதர் சிலைகளைச் சுற்றி வளர்ந்தது போல சைவமும், வைஷ்ணவமும் எண்ணற்ற தெய்வ வடிவங்களைச் சுற்றியே வளர ஆரம்பித்திருக்கின் றன. ஆக்கிக் காத்து அழிக்கும் திரிமூர்த்தித் தத்துவம் எல்லாம் அற்புதமான சிலை உருவத்தில் உயிர் பெற் றிருக்கின்றது.

இந்தக் காலத்தை ஒட்டித்தான் எல்லோராவிலும், எலிபெண்டாவிலும் அழியா அழகுடைய சிற்பங்கள் பல உருவாகியிருக்கின்றன. பௌத்தம், சமணம், சைவம், வைஷ்ணவம் எல்லாம் ஒன்று கூடுமிடம் எல்லோரா. மொத்தம் இருக்கும் 34 குகைகளில் 14 குகைகளில் பெரிய பெரிய புத்த விக்கிரகங்கள். வாயில்களிலோ துவாரபாலகர்கள். புத்தரைச் சுற்றிக் கந்தர்வர்கள். புத்தரின் தாயான மாயையும், மனைவி யசோதையும் கூட அங்கு உண்டு. 17 குகைகளில் சைவ வைஷ்ணவ மூர்த்திகள் இடம் பெற்றிருக்கின்றனர். எல்லா வகையிலும் சிறப்புடையது கைலாசநாதர் குகை என்னும் ரங்கமகாலே. இதைக் குகை என்று சொல்வதைவிட ஒரு பெரிய கோயில் என்று சொல்வதுதான் பொருந்தும். இந்தக் கோயிலின் முன் மண்டபமே 276 அடி நீளம். 154 அடி அகலம். மண்டபத்தின் இரு பக்கத்துச் சுவர்களிலும் ராமாயணத்திலிருந்தும், பாரதத்திலிருந்தும் பல காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குகைக் கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஷ்டிரக்கூட அரசன் முதலாம் கிருஷ்ணன் காலத்தில் கட்டப் பட்டதாகச் சரித்திரம் கூறுகின்றது. இத்துடன் அங்குள்ள ராவணக் குகையும் சிறப்பு வாய்ந்தது. அங்கும் சிற்ப உருவங்கள் பல காட்சி கொடுக்கின்றன. மகிஷாசுரமர்த்தனம், சிவதாண்டவம், சிவபார்வதி திருமணம் முதலிய காட்சிகளும், கஜலக்ஷிமி, பூவராக மூர்த்தி, திரிவிக்கிரமன், கோவர்த்தனதாரி, உக்கிரநர சிம்மன் முதலியவர்களும் காட்சி கொடுக்கிறார்கள். சைவமும், வைஷ்ணமும் பின்னிப் பிணைந்து உறவ கொண்டாடுகிறது இங்கே. இன்னும் கொஞ்சம் திரும்பினால் ஜைனர்கள் குகை, இந்திரசபை ஜகந்நாத சபைகளுடன் பார்ஸவநாதர் நிர்வாண உருவத்தில் காட்சி கொடுப்பார். புத்தரையே ஒத்திருக்கும் மகாவீரர் உருவமும் இங்கு உண்டு. எல்லோராக் குகையில் நுழைந்து பார்த்துவிட்டு வெளியே வந்தால் சமய உணர்வு வளரும். ஆனால், சமய வெறி நீங்கும். சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம் எல்லாம் எப்படி இணைந்து உறவு கொண்டாடுகிறது என்பதைக் கண்ட பிறகும் ‘அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன்’ என்றுரைக்கும் அறிவின்மை ஒருவரிடம் நிற்கவா செய்யும்?

இப்போது நமது தமிழன்பர்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. ஏது, இந்தியச் சிற்பத்தை எழுத முனையும் சில ஆராய்ச்சியாளர்கள்தான் விந் திய மலைக்குத் தெற்கேயும் நாடு இருக்கிறது என்பதை மறந்திருக்கிறார்கள். இவருக்கென்ன? பொருநைத் தண்ணீர் குடித்து வளர்ந்த இவருமா தமிழ் நாட்டை மறந்துவிட வேண்டும்? என்று அவர்கள் கேட்பது நியாயந்தானே.

தமிழ்நாட்டில் சிற்பக் கலையை வளர்த்த பெருமையில் பெரும் பகுதியை எங்கள் முன்னவர், பல்லவர்களே தட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள்.ஏதோ சோழ மன்னர்களுக்கும் நாயக்க மன்னர்களுக்கும் அந்தப் பெருமையைக் கொஞ்சம் கொடுக்கவும் செய்கிறார்கள். எல்லோராவையும், எலிபெண்டா வையும் பார்த்த கலைவல்லார் மாமல்லபுரத்திற்கு வந்ததும் ‘ஆ’ என்று வாயைத் திறந்து அப்படியே அதிசயித்து நின்று விடுகிறார்கள். மலைகளைச் செதுக்கி உருவாக்கிய பஞ்சபாண்டவ ரதங்களையும், குகைச் சிற்பங்களையும் கண்டு தமிழ்நாட்டிலே ஒரு எல்லோராவை - ஆம், எல்லோராவில் உள்ள பல குகைகள் வெட்டிச் செதுக்குவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே மாமல்லபுரத்தில் நிறுவிய மாமல்லனை வாயாரப் புகழ்கிறார்கள். எல்லோராவிலும், எலிபெண்டாவிலும் காணும் சிற்ப உருவங்களைவிட எவ்வளவோ சிறந்த சிற்ப ஓவியங்கள் அல்லவா இந்தத் தமிழ்நாட்டுச் சிற்பிகளின் சிற்றுளிகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன, பகீரதன் தவக் காட்சி ஒன்றையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் பல மணி நேரம். மகிஷாசுரமர்த்தினி, அனந்தசயனன், வராகமூர்த்தி, திருவிக்கிரமன் முதலிய சிலை உருவங்களில் காணும் கற்பனை வளம் எல்லோராவைத் தூக்கியடிக்கிறது. சிற்ப உருவங்களை வேறிடத்தில் செதுக்கி அவைகளை எடுத்து வந்து மற்றோரிடத்தில்:ஒட்ட வைத்தது போல எல்லோராவிலும், எலிபெண்டாவிலும் இருக்கும். ஆனால், மாமல்லபுரத்திலோ உருவங்கள் கல் சுவர்களின் உள்ளிருந்து துடித்துக் கொண்டு வெளியே குதிப்பது போல் இருக்கும். இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை, சிற்பக்கலை ஆராய்ச்சியில் வல்லுநரான கார்ல் கந்தீலாலே சொல்கிறார். பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வந்த சிற்பக் கலை மாமல்லபுரத்தில்தான் பூரணப் பொலிவுடன் உச்சநிலையை எய்துகிறது என்றும் அவரே கூறுகிறார். ஆயிரக்கணக்கான மைல்கள் இடையே இருந்தும் கலை உறவு காரணமாக எல்லோராச் சிற்பத்திற்கும்,மாமல்லபுரச் சிற்பத்திற்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.

கலை வளர்த்த பல்லவர்கள் அடிச்சுவடு பற்றி சோழர்களும் நாயக்க மன்னர்களும் சிற்பக் கலைக்குத் தக்கத் துணையாக இருந்திருக்கிறார்கள். சித்திரக் காரப் புலி மகேந்திரவர்மப் பல்லவனை அவன் மகன் சிற்பப்புலி மாமல்லன் விஞ்சியது போல, தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய ராஜராஜன் புகழை அவன் மகன் ராஜேந்திரன், கங்கை கொண்ட சோழன் மங்கச் செய்திருக்கிறான். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு அழகிய கோயிலைக் கட்டி அங்கு நல்ல சிலைகளையும் நிர்மாணித்து கும்பகோணம், தாராசுரம் முதலிய இடங்களில் எல்லாம் வடநாட்டுப் பெண்களையெல்லாம் - தூக்கியடிக்கக் கூடிய வகையில் பல பெண்ணுருவங்கள் தோன்றி இருக்கின்றன. கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள அரசிளங்குமரி, அர்த்தநாரி, பிக்ஷாடனர் சிலைகளைப் பார்த்தால் ஏதோ அஜந்தாவில் உள்ள சித்திரங்களே உயிர்பெற்று அடிபெயர்ந்து நடந்து விட்டனவோ என்று தோன்றும்.

இன்றும் மதுரை, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் காணும் உயிரோவியங்களைப் பார்த்தால் அவைகளுக்கும் மவுண்ட் அபூவில் உள்ள டில்வார் கோயிலின் சிலைகளுக்கும் ஒரு ஒற்றுமை. தோன்றும். இரண்டிடத்திலும் வெகு நுணுக்கமான வேலைப்பாடுகள் இருக்கக் காண்போம். மதுரையில் உள்ள சிலைகளோ ஆந்திர நாட்டு லெபாக்ஷியின் சிலைகளோடும், கன்னட நாட்டு பேலூர், ஹலபேட், சோமநாத்பூர் சிலைகளோடும் ஒப்புவமை உடையதாக இருக்கின்றன. இவ்விதமே இன்னும் என்ன முறைகளில் எல்லாமோ தமிழ்நாட்டுச் சிற்ப உருவங்கள் மற்றைய நாட்டுச் சிற்பங்களோடு போட்டி போடுகின்றன. உலகில் கிழக்கு மேற்கு என வாதமிடும் மக்கள் மிகுந்த இந்தக் காலத்தில் சிற்பக் கலையில் இத்தகைய ஒற்றுமையும் உறவும் இருப்பது போற்றத்தகுந்ததே அல்லவா?

இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டுச் சிற்பங்கள் எல்லாம் சமயச் சார்புடையவைகளாய் இருத்தல் தான். சமயத்தையும் சமயத் தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டே நமது கலைகள் வளர்ந்திருக்கின்றன. அஸ்திவாரம் பலமானது. அதனால்தான் அருங்கலைகளாகிய மேல்கட்டுக்கோப்பு உறுதியுடன் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இப்படிக் கலை வளர்த்த பெருமக்களுக்கு, அற்புதச் சிற்பிகளுக்கு, தெய்வத் தச்சர்களுக்கு நாம் தலை தாழ்த்துகிறோம் என்றால் வியப்பில்லைதானே!