இந்தியக் கலைச்செல்வம்/தமிழர் பண்பாடு சிற்பத்தில் - ஓவியத்தில்

15
தமிழர் பண்பாடு
சிற்பத்தில் - ஓவியத்தில்

சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு நாள் மாலை சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ராஜ ராஜன் தஞ்சை நகர்ப் புறத்தில் உலாவப் புறப்படுகிறான். உடன் புறப்படுகிறாள் அவனது தமக்கை குந்தவை தேவியார். அப்போதுதான் அவன் திக்விஜயம் செய்து வெற்றியோடு திரும்பியிருக்கிறான், சேரர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் எல்லோரையும் வென்று அவரவர் நாடுகளையும் சோழ மண்டல ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கிறான். காந்தளூரில் கலம் அறுத்து பாண்டியன் அமரபுஜங்கனை முறியடித்து, வெங்கி நாட்டையும, கங்கபாடியையும் அடிமை கொண்டு, நுளம்பப்பாடியைக் கைப்பற்றி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கத்தின் மேலும் படைகொண்டு சென்று வெற்றியைத் தனதாக்கிய தோடு அவன் நிற்கவில்லை. கடல் கடந்து ஈழ நாட்டையும் மும்முடிச் சோழ மண்டலமாக்கி, இன்னும் அலைகடல் நடுவில் பல கலஞ்செலுத்தி முந்நீர்ப் பவழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக் கொண்டு ஜெயங்கொண்ட சோழனாகத் திரும்பியிருக்கிறான். இப்படி அகண்ட தமிழகம் ஒன்றையே உருவாக்கிய வெற்றிப் பெருமிதத்தோடு நடக்கிறான் ராஜராஜன். தம்பியின் வெற்றியைப் பாராட்டிப் பேசிக் கொண்டே துணை வருகிறாள் தமைக்கையார். இப்படிப் பேசிக் கொண்டே வழி நடந்து இருவரும் வந்து சேர்கிறார்கள் ஒரு சோலைக்கு. அங்கே தனித்து இருந்த தளிக் குளத்தையும் அதில் இறைவன் லிங்கத் திருவுருவில் கோயில் கொண்டிருப்பதையும் காணுகிறார்கள். ‘விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானாய்ப் பரந்து நிற்கும் இறைவனுக்கா இத்தனை சிறிய கோயில் - இந்த பெரிய சோழ சாம்ராஜ்யத்தில்?’ என்று நினைக்கிறான் ராஜராஜன். அப்படியே நினைக்கிறாள் தமக்கையும், “தம்பி இப்படி ஒரு சிறு கோயில் தஞ்சைத் தலைநகரிலே இருப்பது உனது புகழுக்கு ஏற்றதாகுமோ?” என்று கேட்கிறாள் அவள். “அக்கா! அப்படியேதான் நினைக்கிறேன் நானும். ஆதலால் இந்தத் தளிக் குளத்து இறைவனையே தஞ்சை பெரு உடையராக அமைத்து அப்பெரிய உருவிற்கு ஏற்ற வகையில் பெரிய கோயில் ஒன்றையும் கட்டிவிட வேண்டியதுதான்” என்று கூறுகிறான். அன்றே கோயில் கட்டும் பணி துவங்குகிறது. 800 அடி நீளமும், 400 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த வெளியிலே ஏழு வாயில்கள், மகா மண்டபம், அர்த்த மண்டபம், நர்த்தன மண்டபம், தாபன மண்டபங்கள் எல்லாம் அமைத்து, நல்ல விசாலமான கருவறை ஒன்றையும் கட்டி, அதன் மேல் 216 அடி உயரத்தில் தக்ஷிணமேரு என்னும் விமானத்தையும் உயர்த்தி அந்த விமானத்தின் பேரில் 80 டன் நிறையுள்ள பிரமரந்திர தளக் கல்லையும் பரப்பி அதன் பேரில் பொன் போர்த்த ஸ்தூபியையும் நிறுவி கோயில் கட்டி முடித்திருக்கிறான் ராஜ ராஜன், அக்கோயிலிலே 84 அடி சுற்றளவுடைய ஆவுடையாரில் 17 அடி உயரமுள்ள லிங்கத் திரு உருவையும் பிரதிஷ்டை செய்கிறான். பெரு உடையார் எனப் பெயரிட்டு வணங்குகிறான். இப்படித்தான் சிறியன சிந்தியாத ராஜராஜன் பெருஉடையாருக்கு கோயில் கட்டிய தன் மூலம் அகண்ட தமிழகத்தைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமையைவிட உயர்ந்த தமிழ்கத்தை உருவாக்கியவன் என்ற புகழுக்கு உரியவன் ஆகிறான். தமக்கையும் “தம்பி! அன்று வள்ளுவன் சொன்னான்; ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ என்று, அதற்கேற்ப உயர்ந்த எண்ணமே உன் உள்ளத்தில் நிறைந்து உயர்ந்ததொரு கோயிலையே உருவாக்கி இருக்கிறது” என்கிறாள் பெருமிதத்தோடு. ஆம், தமிழன் எண்ணமெல்லாம் உயர்ந்தவை. அவன் எடுத்து முடித்த காரியங்கள் எல்லாம் உயர்ந்தவை. அவன் வளர்த்த பண்பாடு உயர்ந்தது. அந்தப் பண்பாட்டை உருவாக்கும் கவிதை, காவியம், இசை, நடனம், சித்திரம், சிற்பம் எல்லாம் உயர்ந்தவைதான்.

தமிழ்நாட்டில், வளர்ந்த சித்திரங்கள் தமிழனது பண்பாட்டை எவ்வகையில் எடுத்துக் காட்டுகின்றது என்பதை முதலில் பார்க்கலாம். சித்திரக் கலையை ஏதோ ஒரு தொழில் என்று மட்டும் கருதாது நல்ல யோக சாதனமாகவே கருதியவர்கள் தமிழர்கள். மேலை நாட்டில் புகழ்பெற்ற சித்ரீகர்கள் எல்லாம் புறக்கண் பார்த்ததையே வண்ண வண்ணச் சித்திரங்களாக எழுதிக் காட்டினர். ஆனால், தமிழனோ ஒவ்வொரு காட்சியையும், அகக் கண்ணால் கண்டு அதை இதய வெளியிலே எழுதிய பின்னர் தானே சுவரிலோ துணியிலோ தீட்ட முனைந்திருக்கிறான். ‘உயிராவணம் இருந்து உற்று நோக்கி. உள்ளக் கிழியில் உரு’ எழுதிய ஓவியர்களை நாவுக்கரசர் பாராட்டத் தவறவில்லை. எல்லா அருங்கலைகளையும் போல, சித்திரக்கலையும் தமிழ்நாட்டில் சமயச் சார்புடையதாகவே வளர்ந்திருக்கிறது. தெய்வத் திருவுருவங்களைத் தீட்டுவதிலேயே சித்ரீகர்கள் அக்கறை காட்டி வந்திருக்கின்றனர். இப்படி அருங்கலை வளர்ப்பதில் முன்னிற்கும் பெருமையை, அந்தப் பல்லவ மன்னர்களே தட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். இந்திய நாட்டின் சித்திரக் கலைக்கு சிறந்த நிலையமாக அஜந்தா ஓவியங்கள் அந்தப் பழைய சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டதை ஒட்டி தமிழ்நாட்டிலும் ஒரு அஜந்தாவை உருவாக்கியிருக்கிறான் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், சமணனாக இருந்தவன் சைவனாக மாறுமுன் அமைத்த குடைவரையே தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த சித்தன்னவாசல். அக்குடைவரைக் கோயிலின் உள் மண்டபச் சுவர்களிலே உள்ள சித்திரங்கள் அழகானவை; விதானத்திலே சித்திரித்திருக்கும் சாமவ சரவணப் பொய்கை, சமணர்களது மோக்ஷ சாம்ராஜ்யம் என்றே கூறுகின்றனர். அங்குள்ள மகேந்திரவர்மனது வடிவிலோ ஒரு கம்பீரம். நடன மாதரது கோலங்களிலோ அழகு பொங்கும். இந்த மகேந்திர வர்மன் காலத்தியதே பனைமலைக் கோயிலும் அங்குள்ள கந்தர்வர்களின் சித்திரங்கள் பிரசித்தமானவை. இவனது அடி ஒட்டியே காஞ்சி கைலாசநாதர் கோயிலின் திரு உண்ணாழிப் பிரகாரத்தில் சில சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கிறான் ராஜசிம்ம பல்லவன். அங்குள்ளவற்றில் இன்று காணக் கிடைப்பது ஒன்று மகாபுருஷரின் நின்ற கோலம், மற்றொன்று சிவனுடைய சோமாஸ்கந்த வடிவம். இரண்டுமே சிதைந்து இருந்தாலும் பண்டைத் தமிழரின் சித்திரக் கலைக்கு அவை சிறந்த சான்று பகர்கின்றன, அழியா வண்ணத்தில் தீட்டிய அமர ஓவியங்கள் என்று மட்டும் இவற்றிற்குப் பெருமை இல்லை. நல்ல கம்பீரமும், வண்ணக் கோலமும், உயர்ந்த எண்ணங்களையுமே பிரதிபலிக்கும் சித்திரங்கள் அவை.

பல்லவர் காலத்துக்குப்பின் தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னர்களது ஆதரவில் சித்திரக் கலை சிறப்பாகவே வளர்ந்திருக்கிறது. அக்காலத்தே நுண்ணிதில் உயர்ந்து நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞராம் ஓவியர் பலர் இருந்தனர் என்று இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். கலை வளர்த்த காவலனான ராஜராஜன் காலத்தில் இச்சித்திரக் கலை சிறப்புற்றதில் வியப்பில்லை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கருவறையைச் சுற்றிய பிரகாரத்திலே அழகிய சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் திரிபுராந்தகன் கோலம் அற்புதச் சித்திரம். பூமியாகிய தேரில் பிரமன் தேர்ப்பாகனாக இருந்து ஓட்ட கணேசன், கார்த்திகேயன், துர்க்கை முதலியவர்கள் துணை வர, இறைவன் போருக்குப் புறப்படும் காட்சி சித்திர உலகத்திலேயே ஒரு அரிய சாதனை. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று வள்ளுவன் வகுத்த தமிழ்ப் பண்பாட்டின் இலக்கணத்திற்கு நல்லதொரு கலைப் படைப்பு அது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தச் சித்திரங்களின் பேரில் நல்ல சுண்ணாம்பைப் பூசி பின் வந்த நாயக்கர் காலத்துச் சித்ரீகர்கள் அவர்கள் கைத்திறனைக் காட்டியிருக்கிறார்கள். ஏதோ தமிழன் செய்த பூர்வ புண்ணிய வசத்தால் அந்தக் காறை எல்லாம் பெயர்ந்து விழுந்து பழைய சோழச் சித்திரங்களே. நமக்குப் பார்க்கக் கிடைக்கின்றன.

ராஜராஜனது மகன் கங்கை கொண்ட சோழனோ அல்லது அவன் பெயரன் ராஜாதித்யனோ இச்சித்திரக் கலை வளர்ச்சியில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. திருநெல்வேலி மாவட்டத்திலே திருமலைபுரத்திலே பாண்டியர் காலத்திய சித்திரங்கள் சில கிடைத்திருக்கின்றன. இன்னும் விஜய நகர நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களை விரிவாக்கி கோபுரங்களை உயர்த்தி கலை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இவர்கள் காலத்திய உருவங்கள், சித்திரங்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்தன என்று சொல்ல முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள சுவர்ச் சித்திரங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. உருவங்கள் எண்ணற்றவை என்பதைத் தவிர அழகானவை என்று சொல்வதற்கில்லை. சித்திரக் கலையில் நிரந்தரமான புகழைத் தமிழனுக்குத் தேடித் தந்தவர்கள் அந்தப் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனும், சோழ சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி ராஜராஜனுமே.

மிகச்சிறந்த முறையில் தமிழ்நாட்டில் சித்திரக் கலை வளரவில்லை என்று குறை சொல்பவரும் கூட சிற்பக் கலையைப் பற்றிப் பேசும்போது தமிழன் வளர்த்த சிற்பக் கலையின் உன்னதத்தை வேறு எந்த நாடுமே எட்டிப் பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுவர். சிற்ப உலகிலேயே சிறந்த புகழ்பெற்றவர்கள் கிரேக்கர்கள். அவர்கள் உருவாக்கிய சிற்பங்கள் அளவில் பெரியவை. அங்க நிர்மாணத்தில் ஒரு சிறிதும் தவறாதவை. இன்னும் முறுக்கிய நிலைகளை, நெளிவு சுளிவுகளை எல்லாம் கவர்ச்சியாகக் காட்டுபவை என்றாலும், உள்ள உணர்ச்சிகளை உருவாக்கிக் காட்டுவதில் வெற்றி பெற்றவை அல்ல. ஆனால், தமிழகத்துச் சிற்பியோ வண்ணத்தைத் தீட்டுவதிலும் சுண்ணத்தைச் சேர்ப்பதிலும் மாத்திரம் தன் திறமையைக் காட்டியவன் அல்ல. அவைகளுக்கு எல்லாம் மேலான எண்ணத்தையே உருவாக்கிக் காட்டுவதில் கைதேர்ந்தவன். ‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாது’ என்று சமயக் குரவர்கள் எல்லாம் கையை விரித்த காலத்திலும் தம்தம் கற்பனையினால் உருவமில்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்து கல்லிலும் செம்பிலும் கண்ணுதலையே உருவாக்கி நிறுத்தியவர்கள் அவர்கள். ‘மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வம் காட்டுநராக’ சிற்பிகள் அந்தச் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பதை மணிமேகலை கூறும். மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கியவன் மகேந்திர பல்லவன் என்றால், மலைகளைக் குடைவதோடு மட்டும் விட்டுவிடாமல் மேல் பகுதியையுமே வெட்டிச் செதுக்கி கல் ரதங்களையும் சிறந்த சிற்ப வடிவங்களையும் உருவாக்கியிருக்கிறான் மகேந்திரன் மகனான மாமல்லன். அவன் கலை உலகில் கண்ட கனவெல்லாம் நனவான இடம் அந்த மாமல்லபுரம். அங்குதான் எத்தனை எத்தனை சிற்பச் செல்வங்கள். கற்களையே கனிய வைத்து கோவர்த்தனதாரி, கங்காதரன், மஹிஷ மர்த்தனி, அனந்தசயனன், திரிவிக்கிரமன், அர்த்தநாரி, கஜலக்ஷ்மி, துர்க்கை என்றெல்லாம் எண்ணற்ற திருவுருவங்களை அர்த்த சித்திரங்களாக (Base relief) அமைத்திருக்கிறான் அவன். இப்படி ஏதோ தெய்வத் திருவுருவங்களை மட்டுமே அன்றைய சிற்பிகள் வடித்தார்கள் என்பது இல்லை. சிங்கமும் புலியும், யானையும் ரிஷபமும், மானும், குரங்குமே அச்சிற்பிகள் கலையில் உயிர் பெற்றிருக்கின்றன. இன்னும் சோமாஸ்கந்தரையும் விஷ்ணுவையும் பற்பல கோலங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாம் காத்திரமான வடிவங்கள். உணர்ச்சிகளை உருவாக்கும் சிற்பங்கள்.

பல்லவ மன்னர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் இச்சிற்பக்கலை வளர்ச்சியில் எடுத்துக்கொண்ட அக்கறை இவ்வளவு அவ்வளவு என்று வரையறுத்துக் கூற முடியாது, எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது கட்டியதோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. கட்டிய கோயில்களில் எல்லாம் அற்புதம் அற்புதமான மூர்த்திகளையும் உருவாக்கி நிறுத்த அவர்கள் தவறவே இல்லை. கங்காதரர், கங்காளர், கஜசம்ஹாரர், திரிபுராந்தகர். ரிஷபவாகனர், சுகாசனர், இன்னும் நீலமேனி நெடியோன், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன், நான்முகக் கடவுள் பிரமன், நர்த்தன விநாயகன், மயிலேறும் பெருமாள், முருகன் முதலிய தெய்வத் திருவுருவங்களை எல்லாம் முதலில் கல்லில் செதுக்கினார்கள். இவைகளையெல்லாம் தூக்கி அடிக்கும் வகையிலே செப்புச் சிலைகள் பலவற்றையும் வடித்தார்கள். நடராஜனை, பிக்ஷாடனனை, கஜசம்ஹாரனை, அம்பிகையை எல்லாம் நல்ல நல்ல செப்புச் சிலைகளாக வடித்தது இச்சோழர்கள் காலத்தில்தான். நாயக்கர்கள், பாண்டியர்கள் எல்லாம் அவரவர்களால் இயன்ற அளவிற்கு இக்கலை வளர்ப்பதில் தக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

இச்சிற்பக் கலையில் உள்ள சிறப்பு. என்னவென்றால் அந்த அந்த வடிவங்களை உருவாக்குவதில் தமிழகத்துச் சிற்பிகள் காட்டியுள்ள கற்பனைத் திறன்தான் எங்கும் நிறைந்தவன் இறைவன், நான்கு அல்லது எட்டுத் திசைகளிலும் பரவி நிற்கிறான் அவன் என்பதை உருவகித்துக் காட்டவே அவனுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைப் படைத்திருக்கிறார்கள். அண்ட சராசரங்களை எல்லாம் ஆட்டி வைக்கிறவன் இறைவன். அப்படி ஆட்டி வைக்கிறவன் தானும் ஆடிக் கொண்டே ஆட்டினால்தான் அண்டங்கள் ஆடும் என்று சிந்தித்திருக்கிறான் ஒரு கலைஞன். அவன் கற்பனையில் உதித்திருக்கிறான் நடன ராஜன். எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது ஆண், பெண் என்ற தத்துவம். ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் தனித்து வாழவோ உலக வளர்ச்சிக்குத் துணை புரியவோ இயலாது. இரண்டும் ஒன்றிய நிலையில்தான் உலகம் உய்யும் என்று உணர்ந்திருக்கிறான் ஒரு கலைஞன். அவன் தன் சிந்தனையில் உருவாகியிருக்கிறான் மாதிருக்கும் பாதியன். தன்னைப் படைத்த தலைவனை அறியாது உயிர்கள் எல்லாம் அவனை விட்டு விலகி ஓடும் போது அந்த உயிர்களை வழிமறித்து அவர் தம் அன்பையும் ஆணவத்தையுமே பிச்சை கேட்கிறான் இறைவன் என்று எண்ணியிருக்கிறான் ஒரு கலைஞன், அவன் எண்ணத்தில் உருவாகியிருக்கிறான் பிக்ஷாடனன். உலகெலாம். காத்தளிக்கிற பரம்பொருள் ஒன்று உண்டு. அது கண்ணைத் திறந்து சுற்றுச் சார்பிலே உள்ளத்தைப் பரவவிட்டு விடாமல் கண்ணை மூடினாலும் கருத்தை மூடாமல், உயிர்களை எல்லாம் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாய்க் காக்கிறான் என்று நினைத்திருக்கிறான் ஒரு அறிஞன். அந்த அறிஞன் நினைப்பிலே தோன்றியிருக்கிறான். அறிதுயி கொள்ளும் பரந்தாமன். இப்படித்தான் கலைஞர்கள் சிந்தனையில் கடவுளர் தோன்றியிருக்கின்றனர். இந்தச் சிந்தனைச் சிற்பிகளே அக்கடவுளர்களுக்கு நல்ல நல்ல வடிவங்களையும் சமைத்திருக்கிறார்கள். தமிழனது சிற்பக் கலை ஏன் சிறந்திருக்கிறது. என்று இப்போது தெரிகிறதல்லவா? ஆம், தமிழனது எண்ணம் எல்லாம் உயர்ந்தவை. அந்த எண்ணத்தில் உருவான உருவங்கள் எல்லாம் உயர்ந்தவை. அக்கலை வளர்த்த பண்பாடெல்லாம் மிகமிக உயர்ந் தவை என்பதற்கு இன்னும் பல கூற வேண்டுமா என்ன?