இந்தியப் பெருங்கடல்/கடல் ஆராய்ச்சித் திட்டம்

3. கடல் ஆராய்ச்சித் திட்டம்

பெயர்

இந்தியக் கடலின் இயற்கை வளங்களை ஆராயத் திட்டம் ஒன்று உலக அளவில் வகுக்கப்பட்டது. இதற்கு அனைத்துலக இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம் என்று பெயர்.

தோற்றம்

இத்திட்டம் கரு நிலையில் 1957ஆம் ஆண்டிலேயே உருவாயிற்று. ஆனல் முழு நிலையில் உருப்பெற்றது 1959ஆம் ஆண்டில்தான். அனைத்துலக அறிவியல் கூட்டுக் கழக மன்றம், யுனெஸ்கோ, அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் நன் முயற்சியினால், அனைத்துலகக் கடல் நூல் பேரவை 1959இல் செப்டம்பர்த் திங்களில் நியூயார்க்கில் கூடியது: கடல் நூலை அறிவியலாக-விஞ்ஞானமாக-மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது.

அவைக் கூட்டத்தில் 45 நாடுகளிலிருந்து 1,100 அறிவியலார் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்துலக இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பல பணிகளைச் செயற்படுத்தும் அலுவலகம் நியூயார்க்கில் உள்ளது. இத்திட்டத்தைப் பல அறிவியலார் கொண்ட ஒரு தனிக் குழு வகுத்தது.

காலவரை

1957இல் உருவானாலும் இத்திட்டத்திற்குரிய காலம் ஐந்து ஆண்டுகளாகும். அதாவது இத்திட்டம் 1960ஆம் ஆண்டிலிருந்து 1964ஆம் ஆண்டு வரை செயற்படும். காலம் தேவைப்படுமானால், மேலும் நீட்டிக்கப்படும். முழு அளவில் 1962ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் செயற்படத் தொடங்கிற்று.

சிறப்பு

உலக அளவில் பல நாடுகளின் கூட்டு முயற்சியினால் நடைபெறும் மாபெரும் திட்டமாகும் இது. அனைத்துலக நில இயல் நூல் ஆண்டுத் திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு செயற்படுத்தப்படுவது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கடல் ஆராய்ச்சிகளில் மிகப் பெரியது இது.

நில இயல் நூல் ஆண்டுத் திட்டமும் உலக அளவில் 1957-58ஆம் ஆண்டுகளுக்கிடையே சிறப்புடன் இனிது நிறைவேறிய திட்டமாகும். இதனால் நில இயல் நூல் நன்கு வளர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அறிவியலின் மற்றத் துறைகளும் வளரலாயின. வான்வெளி ஆராய்ச்சி கருவுற்று உருப்பெற்றது.

முதன் முதலாக இந்தியக் கடல் நிறைவாக அறிவியல் அடிப்படையில் ஆராயப்படுகிறது. இத்திட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட துறையை, சிக்கலை ஆராயும்; அதற்கேற்ற முடிவுகளைக் காணும். சிறப்பாக, வானிலைபற்றியும் ஆராயப்படும்.

இத்திட்டத்திற்கு ஆகும் செலவு 6 கோடி ரூபாய் ஆகும். இச்செலவை ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற அளவுக்குப் பகிர்ந்து கொள்ளும்.

திட்டகாலத்தில் 1,88,000 மைல் தொலைவிற்கு 60 கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்படும். 20 நாடுகளிலிருந்து 40 கப்பல்கள் இப்பயணங்களை மேற்கொள்ளும்; இந்தியக் கடலை ஆராயும். பல நாடுகளிலுள்ள 350 அறிவியலார், இத்திட்டத்தில் கலந்து கொண்டு இந்தியக் கடலை ஆராய்வார்கள்.

இதில் கலந்து கொள்ளும் நாடுகளில் சில : ஆஸ்திரேலியா, பிரிட்டன், இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், டென்மார்க், பார்மோசா, பிரான்சு, இந்தோனேஷியா, இஸ்ரேல், ஜப்பான், ஹாலந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா, உருசியா.

நிறைவேற்றும் முறைகள்

உற்று நோக்கல், ஒலித்தல், அளவுகள் எடுத்தல், படம் பிடித்தல், மாதிரிப் பொருள்கள் திரட்டுதல் முதலிய பல முறைகள் மேற்கொள்ளப்படும். இவற்றிற்கு எல்லாம் அடிப்படையாகக் கப்பற் பயணங்களே மேற்கொள்ளப்படும். சிறந்தஆராய்ச்சிக் கருவிகளாகப் பல வகைக் கருவிகளையும் உள்ளடக்கிய கப்பல்கள் பயன்படும். இறுதியாகச் செய்யப்பட்ட பல வகை ஆராய்ச்சிகளின் முடிவுகள் தொகுக்கப்படும்; வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும்.

அமெரிக்கா முதலிய நாடுகள் கப்பல்களையும் கடல் நூல் அறிஞர்களையும் வழங்கும். அமெரிக்கா, திட்டத்தில் பாதி செலவையும் ஏற்கும். சில நாடுகள் ஆராய்ச்சி செய்வதற்குரிய வசதிகளை அளிக்கும்.

இந்தியக் கடலுக்கு அருகிலுள்ள நாடுகள் கடல் அலைகளின் எழுச்சி வீழ்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களையும், காற்று மேல் வெளியில் உருவாகும் வானிலை மாற்றங்களையும் உற்று நோக்கி இந்தியக் கடலை ஆராய உதவும்.

ஆராயப்படும் துறைகள்

இந்தியக் கடல் ஆராய்ச்சி பரந்த ஓர் ஆராய்ச்சி ஆகும். ஆகவே, அதில் ஆய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் துறைகளும் பல வகைப்பட்டனவாகவே உள்ளன. அத்துறைகளில் சிறப்பானவை பின்வருமாறு :

நில அமைப்பு நூல்

இது ஒரு விரிந்த துறையாகும். இது பல துறைகளை மேலும் தன்னுள் அடக்கியது.

நில இயல் நூல்

இது மிக விரிந்த துறையாகும். இதிலும் மேலும் பல துறைகள் அடங்குகின்றன.

கடல் நூல்

இதுவும் பல துறைகளைத் தன்னுள் அடக்கியதே. இயற்கைக் கடல் நூல், இயைபுக் கடல் நூல், உயிர் கடல் நூல் எனப் பல வகைப்படும்.

வானிலை நூல்

இது மேற்கூறிய துறைகளோடு நெருங்கிய தொடர்புடையது.

நீரியல்

இது கடல் நூலின் ஒரு பிரிவு.

உயிரியல்

இதுவும் ஒரு விரிந்த துறையே. சிறப்பாக, பயிர் நூலையும், விலங்கு நூலையும் தன்னுள் அடக்கியது.

மற்றும், இத்திட்டத்தில் மழைப் பொழிவு, கதிர் வீச்சு, ஈர்ப்பு, நில நடுக்கம், வெப்ப ஒட்டம், காற்று (மேல்) வெளி, படிவுகள், காந்த மாற்றம், கனி வளம் முதலியவை பற்றியும் விரிவாக ஆராயப்படும்.


.