இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/ஆதித்தாய்

1. ஆதித் தாய்

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மனித சமுதாயம் எப்போது, சமுதாயம் என்ற நாகரிகம் காண மலர்ந்தது? ஆணும் பெண்ணும் எப்படி வாழ்ந்தார்கள்?

இறைவன் முதலில் ஆணையே படைத்தான். பின்னர் அவனுக்கு அடங்கிய துணையாக, அவனிலிருந்து ஒரு பகுதியை வைத்தே பெண்ணைப் படைத்தான், என்ற வகையில், சமயங்கள் சார்ந்து பல கருத்துக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. என்றாலும், ஆதிமனிதர் வரலாறு, பெண்ணை அப்படி ஒரு துணைப் பிறவியாக இனம் காட்ட வில்லை என்பதே சரியாகும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், மனிதர் விலங்குகளைப் போன்றே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தில் கொடிய விலங்குகளுக்கு அஞ்சி, குரங்குகளைப் போல் மரக் கிளைகளில் தங்கியும், கூடி இனம் பெருக்கியும் வாழ்ந்தார்கள். தரைக்கு இறங்கி, நிமிர்ந்து, இரண்டு கைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதும், பின்னர் நெருப்பின் பயன்களைக் கண்டு கொண்டதும் மனித வாழ்க்கையின் அற்புதமான திருப்பங்களாகும்.

வாழ்வில் அச்சம் நீங்கியது; நடுக்கும் குளிரில் இருந்து மீட்டு வெம்மையாகிய இன்பம் இசைந்தது. சமைத்த ஊன் சுவையாக இருந்தது. எளிதில் சீரணமாயிற்று.

தீயின் ஆற்றலை உணர்ந்த ஆதிமனிதரின் அறிவுக் கண்கள் புத்தொளியுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாயிற்று.

அறிவும் சிந்தனையும் கைத்திறனும் சொல்லாற்றலை மலரச் செய்தன. வெறும் இயல்பூக்க உணர்வினால் மரக் கிளைகளில் கூடி இனம் பெருக்கிய மக்கள், அந்த ஆற்றலை, மனித வாழ்வின் தலையாய பேறாக இனம் கண்டனர். கூடலுக்கான விழைவும், கடலும், அதன் பயனான மகப்பேறும் புதிய பரிமாணங்களைப் பெற்றன.

ருக்வேதம் முதல் மண்டலத்தில் அதிதியைப் போற்றிப் புகழும் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. வானும், வளிமண்டலமும் உலகங்களும், உயிர்களும் இவளிலிருந்தே தோன்றின என்று படைப்புக்களுக்கெல்லாம் மூலதாரமாகத் தாய்ச்சக்தி போற்றப்பட்டிருக்கிறாள்.

அதிதி வான்; அதிதி வளிமண்டலம்; அதிதி தாய்; தந்தை; மகன்; அதிதியே கடவுளர் (விச்வே தேவா:) அதிதியே ஐந்தொழில் புரிவோர் (பஞ்ச ஜனா:) அதிதியே பிறந்த, பிறக்கப்போகும் உயிர்கள்... (ருக்1-14-5)

இறைவனே பெண்ணாகவும் ஆகி, இருகூறுகளிலிருந்தும் முதல் பிரஜையைப் பிறப்பித்தான் என்றும், திருமாலின் உந்திக்கமலத்திலிருந்து படைப்புக்கடவுள்-(ஆண்) பிறந்தார் என்றும் முக்கண்ணனின் நெற்றிக்கண்ணில் தெறிந்த பொறிகளில் இருந்து குமரக்கடவுள் தோன்றினார் என்றும் பெண்ணின் கருப்பைச் செயல்பாட்டையும் தாய்த் தன்மையையும் மறுக்கும் கற்பிதங்கள் இந்நாட்களில் தெய்வம் சார்ந்து நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் ருக்வேதம் காட்டும் இப்பாடல், தாயாண்மையின் முழுப்பிரதிபலிப்பாகவே திகழ்கிறது.

பெண் ‘தாய்’ என்று அறியப்பெற்றாள். ‘ஜனி’ உயிரைப் பிறப்பிப்பவள் என்ற மாண்புடையவளானாள். இவள் பிறப்பித்த உயிர்கள் ‘ஜனம்’ என்று அறியப்படலாயினர். ‘ஜனம்’ என்ற குழுவின் தலைவியாக தாய் விளங்கினாள். இவள் பேராற்றல் மிகுந்தவள். இவள் தலைமையில் மக்கள் வேட்டைக்குச் சென்றனர். காட்டுத் தீயைக் குகைக்குள் பாதுகாக்கக் கற்றுக் கொண்டார்கள். இறைச்சியை உணவாகக் கொண்டபின் விலங்குத் தோலைப் பதமாக்கித் தைத்து ஆடையாக்கினார்கள். மண்பாண்டம் செய்து பய்ன் படுத்தத்தெரிந்து கொண்டார்கள். மக்களுக்கு நோயினால் துன்பம் வருந்துற்றபோது, பச்சிலை மூலிகைத்திறன் கண்டார்கள். குழுவில் இவளே மக்களைப் பெறும் ஆற்றலைப் பெற்றிருந்த காரணத்தினால், ஆண் தலைமைத் தகுதிக்கு உரியவனாக வரவில்லை. குழுக்கள் பெண்களால் தாய்த்தலைவிகளாலேயே அறியப்பட்டனர். தாய்-மக்கள் இந்த உறவுகளைத் தவிர வேறு உறவுகள் இந்தக் குழுக் காலத்தில் தோன்றியிருக்கவில்லை எனலாம்.

இந்தக் குழுக்களே, தாயாண்மைச் சமுதாயமாக வளர்ச்சி கண்டன.

வலிமையினால் தன் நாயகத் தன்மையை நிலைநிறுத்திக் கொண்ட, ஆண் தலைமைக்குழுக்களும் இதே போல் இதே காலத்தில் உருவாயின. கானகங்களில் குரங்குகள் தன் வலிமையினால் பல பெண்களைச் சேர்ந்து இனம் பெருக்கி, நாயகப்பதவிக்கு வருவதைக் கண்ட மனிதன் அதே வழியைப் பின்பற்றினான். எவன் தன் வலிமையினால் பல பெண்களைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறானோ அவனே தலைவன் என்று குழுத் தலைமைக்கு உரியவனானான். இந்தக் குழுவில், ஆண், விலங்குகளை உயிருடன் பிடித்துப் பழக்கு வதனால் ஏற்படும் பயன்களையும் கண்டான். உணவுக்கு அன்றாடம் அலையவேண்டாம். பால், தயிர், வெண்ணெய் என்ற உணவுப் பொருட்கள் கிடைத்தன. குதிரைகள் ஏறிச் சவாரி செய்யப் பயன்பட்டன. காடுகளில் வளர்ந்த யவம் போன்ற தானியங்கள்-செழித்து வளர்ந்த புற்கள் ஆகியவை கால்நடைகளுக்குத் தீனியாகப் பயன்பட்டன.

காலம் சொல்லச் செல்ல, தானியங்களை விளைத்துப் பயன் பெறலாம் என்று கண்டனர். குகைகளில் தங்கியவர்கள், நெருப்பை எப்போது வேண்டுமானாலும் பெற முடியும் என்ற வழி கண்டதும், பல்வேறு பகுதிகளில் நாடோடிகளாகக் குழுக்களாக உலகைக்காண திரிந்தார்கள்; பிறகு நீர்க்கரை ஓரங்களில், தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டார்கள்.

வாழும் வழி சிறந்தது; உலகின் பல பகுதிகளிலும் ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் மக்கள் பல்கிப் பெருகினர். அவர்கள் வானிலை, மாறும் பருவங்கள் அறிந்தார்கள். தம் அறிவுக்கு எட்டாத இயற்கை நிகழ்வுகளை, தெய்வ ஆற்றல் என்று கருதி, இயற்கையை வழிபட்டார்கள்.மனித உடலின் இன்றியமையாத ஆற்றல் குருதி என்று கருதி, அந்த இரத்தத்தை தெய்வம் என்று நம்பியவற்றுக்குப் பலியாக்கும் சடங்குகளைச் செய்தார்கள். மனித சமுதாயம் நிலைப்படுமுன், இத்தகைய பெண்தலைமை-ஆண்நாயகக் குழுக்கள், அந்தந்த இடத்துக்குரிய சூழலுக்கேற்ப, உருவாயின. குழுவுக்குள்ளேயே ஆணும் பெண்ணும் இன்னார் இனியவர், தக்கார், தகவிலர் என்ற வேற்றுமையின்றிக் கலந்து இனம் பெருக்கிய முறை மாறி வெவ்வேறு குழுவினருடன் சம்பந்தம் செய்து கொள்வதென்றாயிற்று.

இப்போதும் தாயை வைத்தே மக்கள் அறியப் பெற்றனர்.

இதிகாசங்கள் காட்டும் உண்மைகளிலிருந்து, இந்த நிலையை அறியலாம். மகாபாரதத்து ஆதித்தாய் சத்தியவதி, பராசரரைக் கூடியபோது, திருமணம் என்ற நெறி வழக்கில் வந்திருக்கவில்லை. ஆண்-பெண் கூடுவதற்குரிய நேரம், இடம் என்ற வரம்புகள்கூட நிர்ணயிக்கப்பட்டிராத காலம் என்று கூடக் கொள்ளலாம். ஒரு மேகத்திரைக்குப் பின் இந்நிகழ்ச்சி நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது. அடுத்து, இதே சத்தியவதியை, தந்தை நாயகக்குழுவில் வந்த சந்தனு விரும்புகிறான். சத்தியவதியின் தந்தை, சந்தனுவிடம் தன் மகள் வயிற்றில் பிறக்கும் மகவுக்கே முடிசூட்டப்பெற வேண்டும் என்று கோருகிறான். நீ விட்டுக் கொடுத்தாலும் உன் மகன் விட்டுக்கொடுப்பான் என்பது என்ன நிச்சயம்? அப்படி அவன் விட்டுக் கொடுத்தாலும் அவன் சந்ததியினர் உரிமை கோரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என்றெல்லாம் கேட்கிறான். வீட்டுமன், வாழ்நாள் முழு வதும் பிரும்மசாரியாகவே இருப்பதாகச் சபதம் செய்கிறான். ஆனால், சத்தியவதியினால் தந்தை நாயகச் சந்ததியை நிலை நிறுத்த முடியவில்லை. அவள் சந்தனுவின் தொடர்பால் பெற்ற மைந்தர்கள், ஆண்மையற்றவர்களாக இருந்ததால், சத்தியவதியின் மைந்தன், வியாசர் தாம் சந்ததியைத் தோற்றுவிக்கிறார். பெண்களைத் தம் புல் வலிமையினால் கொண்டு வரும், ஆண்நாயக வழக்கம், வீட்டுமன் அம்பை, அம்பாலிகை, அம்பிகை என்ற கன்னியரை, தன் சிற்றன்னை மக்களுக்காகக் கொண்டுவந்த நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கிறது.

ஒருவகையில் மகாபாரத இதிகாசம், மானுட சமுதாய வரலாற்றைச் சொல்வதாகவே கொள்ளலாம். மகளிர் நிலையை இந்த வரலாற்றில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது.

காந்தாரி ஏன் கண்களைக் கட்டிக் கொண்டாள்? தனக்கு வாய்த்த குருடனான கணவனைக் காணவேண்டாம் என்றா? அல்லது, கணவனால் பார்க்கமுடியாதவற்றைத் தானும் பார்க்கவேண்டாம் என்ற பதிவிரதநெறி காக்கவா?

ஆண்நாயக வலிமைக்குமுன் ஒடுங்கவேண்டி வந்த நிலையை இப்படி ஓர் எதிர்ப்பாக-வெறுப்பாகக் காட்டிக் கொண்டிருக்கலாம் அல்லவா? காதலனுடன் வாழநினைத்த அம்பையின் வரலாறு சோகமானது. தன்னைப் பல வந்தமாகப் பிடித்து வந்து, வாழ்வே இல்லாமல் துன்பமிழைத்த பீஷ்மனைக் கொன்று பழிதீர்த்துக்கொள்ள அவள் சூளுரைத்தார். இந்த எழுச்சி இன்றைய பெண்ணின இயக்கச் சோதரிகளின் எழுச்சிக்கு வித்தென்று கொள்ளலாம்.

தான் விரும்பிய ஆணை நாயகனாக ஏற்றுச் சேரும் உரிமை அம்பைக்குப் பிடுங்கப்பட்டது. அம்பாலிகா, அம்பிகா - சோதரிகள், புகுந்த இடத்துக்குச் சந்ததிவேண்டும் என்று, திருமண வரம்புக்கு அப்பால், விரும்பாத ஒர் ஆணைச் சேரவேண்டும் என்ற கட்டாயத்துக்குட்படுத்தப் பட்டனர். இதற்கும் அடுத்த தலைமுறையில் ப்ருதா - குந்தி  கன்னியாகவே, அவள் விருப்பம் முகிர்த்து வராத அரும்பு நிலையில் தாயாக்கப்படுகிறாள். சத்தியவதிக்கு இருந்திராத சமூக அச்சம் குந்திக்கு வந்து விடுகிறது. பெண்ணின் தாய்மை, ஓர் ஆணுக்கு அவள் உரியவளாகாத நிலையில், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று என்ற நீதி அறிவுறுத்தப்படுகிறது.

பெண்ணின் கருப்பை இயக்கம்-தாய்மைக்கூறு, அவருடைய உரிமையில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் முதல் அடி இது. தான் தன் உடலின் ஒரு பகுதியாக வயிற்றில் வைத்து உருவாக்கிய சேயை, மார்போடு அனைத்துப் பாலூட்டிச் சீராட்டும் உரிமை, பச்சை இரணமாகப் பிரித்து எறியப்படும் இந்தக் கொடுமை, இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குந்தியே முதல் அடி பெற்ற ஆதித்தாய்.

இன்னமும் பாண்டுவின் மைந்தர்கள் - பாண்டவர்கள் என்று பொதுவாகக் குறிக்கப் பெற்றாலும் பார்த்தன் என்றும் கௌந்தேயன் என்றும் அருச்சுனன் மட்டும் தாயின் மகனாகவே சிறப்பிக்கப் பெறுகிறான். கர்ணன் - ராதை வளர்த்த பிள்ளை, ராதேயன் என்று அவள் மகனாகவே வழங்கப்படுகிறான்.

அதிதி - ஆதித்யர்கள்-கிருத்திகா-கார்த்திகேயன்-என்ற பெயர்களெல்லாம் தாயின் பெயரைக் கொண்டே வழங்கப் பெற்றிருக்கின்றன. எனவே, தந்தைநாயகம் இந்தச் சமுதாயத் துவக்க காலங்களில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வில்லை எனலாம். இது ஒரு வகையில் கலப்படமான காலத்தையே அறிவுறுத்துகிறது.

திருமணம் என்ற நிகழ்ச்சியை, கைபிடித்தல் என்று இன்றும் வழங்குகிறோம். ‘பாணிக்கிரஹணம்’ என்ற ‘கை பிடித்தல்’ திருமணச்சடங்கின் முதல் குறிப்பாக இன்றளவும் வழக்கில் இருக்கிறது. ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பத்தை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ள, கைப்பற்றிக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆச்வலாயன தர்ம சூத்திரம், திருமண விதிமுறைகள் பற்றிக் குறிப்பிடுகையில், தனக்கு ஆண் மகவு வேண்டுமென்றால், மணமகன் மணமகளின் கட்டை விரலைப்பற்ற வேண்டும்; மகள் வேண்டும் என்று விரும்பும் போது, வெறும் விரல்களை மட்டும் பற்ற வேண்டும்; ஆண், பெண் என்று இருபால் சந்ததியும் வேண்டுமென்று விரும்புபவன், கட்டை விரலுடன் ஏனைய விரல்களையும் சேர்த்துப் பிடிக்கட்டும் என்று அறிவிக்கிறது.

இந்த விதிமுறையை இன்றும் திருமணம் நடத்தி வைக்கும் மேதகு புரோகிதர் நினைவுபடுத்தும் வண்ணம், மணமகனிடம், பெண்ணின் கட்டை விரலைப் பிடித்துக் கொண்டு வரவும் என்று கூறுகிறார். இல்லாவிட்டால் பெண் பெண்ணாகப் பிறக்கும் என்று கூட்டத்தில் எல்லாம் தெரிந்த பண்டிதக்கிழவர் முண முணப்பதும் காதில் விழுகிறது.

வனங்களில் குழுக்காளாக மனிதர் வாழ்ந்த காலத்தில், தாய்த்தலைமைக் குழுக்களில், அவள் விருப்பமின்றி எந்த ஆடவனும் அவளை அணுக முடியாது. தன் விருப்பத்தை அவள் விரல்களைக் குவித்து ஓர் ஆடவனுக்குத் தெரிவிப்பதன் வாயிலாக அவன் அவ்விரல்களைப்பற்றி உடன் படுவான். தந்தை நாயகக் குழுக்களிலோ, ஆண் பெண்ணின் கட்டை விரலைப்பற்றித் தன் இச்சைக்கு உடன் பட அழைப்பான். எனவே, தாயாண்மைக் குழுவிலிருந்து பெண் கொள்ளும் போது, அவளை அவன் கட்டை விரலைப் பற்றித் தன் ஆளுகைக்குக் கொண்டு வந்தான் என்றும், தாயாண் குழுவுக்கு வருபவன் அவள் விரல்களைப்பற்றிக் கொண்டான் என்றும், ஊகிக்கலாம். நாளடைவில், தந்தை நாயகமே மேல் நிலையாதிக்கமாக, சமுதாயம் முன்னேறி வந்தபோது, பெண்ணைக் கட்டை விரலைப் பற்றி ஆதிக்கத்துக்குட் படுத்துவதே பரவலாக வழக்கில் வந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையைப் பின்பற்றி திருமண விதிகள் ஆண்சந்ததி; பெண் சந்ததி என்று முறைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று கொள்ளலாம். இது ஒருவகை அச்சுறுத்தல் போலவும் அறிவுத்தப்படுகிறது இல்லையா?